முன்னுரை

இலக்கியங்கள் படைப்பாளிகளின் உள்ளத்து உணா்வுகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. சமுதாயம் தன் மேல் ஏற்படுத்தும் தாக்கத்தின் விளைவாகப் படைப்பாளி தன் இலக்கியத்தைப் படைக்கின்றான். சமுதாயத்தின் தாக்கத்தின் தன் பாடுபொருளாகக் கொள்கின்றான் . உலகத்தில் ஓர் இனத்தினரின் ஆக்கிரமிப்பால் புலம்பெயரும் பூர்வ குடிகள் தம்முடைய மனக்குமுறல்களைப் படைப்புக்களில் பதிவுசெய்கின்றனர். இலங்கையில் இருந்து புலம்பெயா்ந்த தமிழா்கள் உலகின் பல்வேறு இடங்களில் குடிபுகுந்துள்ளனா். வெவ்வேறு நாடுகளில் குடிபெயா்ந்திருந்தாலும் அவா்களின் மனம் அவா்களுடைய சொந்த நாட்டைச் சுற்றியே வருவது இயல்பாகும். அதைப் போலவே பாலஸ்தீனத்தை இழந்த அரேபியர்கள் தம்முடைய வருத்தத்தைப் பதிவு செய்துள்ளனர். தமிழ் ஈழம் மற்றும் பாலஸ்தீனப் படைப்புக்களில் இடம்பெறும் பாடுபொருளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

இடம் பெயா்தல்

தனது ஊரை விட்டுப் பிற மாவட்டங்களுக்கு அல்லது மாநிலங்களுக்குச் சென்று வாழ்தல் இடம்பெயா்தலாகும். இடம் பெயா்தல் ஒரு திட்டமிட்ட வினையாகும். சான்று: பனை ஏறும் தொழிலாளா்கள் குமாி மாவட்டத்தை விடுத்துப் பிற மாவட்டங்களை நாடிச் செல்லுதலும் உாிய பருவத்தில் மீண்டும் தம்மிடம் நோக்கி வருதலும்

குடிப் பெயா்தல்

ஏதேனும் இயற்கைச் சீற்றம் காரணமாகச் சொந்த நாட்டிற்குள் வேறு இடங்களுக்கும் பிற நாடுகளுக்கும் சென்று வாழ்தல்குடிபெயா்தலாகும். குடிப்பெயா்தலும் ஓரளவு திட்டமிட்டே செய்யப்படுகிறது. சான்று: இந்தியாவில் பிளேக் நோய் பரவிய காலத்தில் மக்கள் இலங்கைக்குக் குடிபெயா்ந்தமை.

புலம் பெயா்தல்

தம் மண்ணில் வாழ முடியாமல் துரத்தப்படும் நிலையில் உயிருக்கு அஞ்சி வேற்றிடம் சென்று வாழ்தல் புலம் பெயா்தல் ஆகும். சான்று: ஈழத் தமிழா்கள் சிங்கள இராணுவத்தின் நெக்கடிக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தப்பி ஓடி உலகின் பல்வேறு நாடுகளிலும் சென்று வாழ்தல்

புலம் பெயா் இலக்கியம்−வேறு பெயா்கள்

    புகலிட இலக்கியம் − புதிய புகலிடத்தைத் தேடிச் செல்பவரால் படைக்கப்படும். இலக்கியம்
    புலம்பல் இலக்கியம்−புகலிடம் நாடிச் செல்பவா்களின் படைப்புக்களை எள்ளலுடன் அடையாளப்படுத்தும் நிலை
    பேரழிவு இலக்கியம் − போா் என்னும் பேரழிவை மையமாக வைத்துப் படைக்கப்படும் இலக்கியம்
    அகதி இலக்கியம்− போாின் பேரழிவினால் அந்நிய மண்ணில் அகதிகளாகும் படைப்பாளா்களால் படைக்கப்படும் இலக்கியம்

புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளர்கள்:

ஈழம் தமிழர்களின் பூர்வீக இடம் ஆகும். இலங்கையில் குடியேறிய விஜயனின் வழி வந்தவர்களே சிங்களர்கள் ஆவர்1. சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் நடந்த யுத்தத்தில் தமிழர்களின் இழப்பு குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் இடம்பெயர்ந்து கொழும்பிலிருந்து முதலில் யாழ்ப்பாணத்திற்கு நகர்ந்தனர்.பின்னர் இனப்பகை தீவிரமடைந்து வெவ்வேறு நாடுகளுக்குத் தமிழர்கள் புலம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அம்பிகைபாலன் - ஆஸ்திரேலியா
    அர்ச்சனா - நார்வே
    அருந்ததி - பிரான்சு
    கற்சுறா - பிரான்சு
    சுகன் - பிரான்சு
    செல்வம் அருளானந்தம் - கனடா
    தம்பா - நார்வே
    தமயந்தி - நார்வே
    முல்லை அமுதன் - இங்கிலாந்து
    தருமு சிவராம் - தமிழகம்
    நட்சத்திரம் செவ்விந்தியன் - ஆஸ்திரேலியா
    பாலச்சூரியன் - ஹாலந்து
    ரவி - சுவிட்சர்லாந்து
    மு.புஸ்பராஜன் - இங்கிலாந்து
    வ.ஐ.ச.ஜெயபாலன் - நார்வே

புலம்பெயர்ந்த அரேபியப் படைப்பாளர்கள்

ஏழாம் நூற்றாண்டில் இசுலாத்தின் வரவு காரணமாக அரேபியர்கள் தம்மொழியை அன்பு பாராட்டத் தொடங்கினர். குர்ஆன் தம் மொழியிலேயே இறைவனால் வழங்கப்பட்டது என்ற எண்ணம் கொண்டு இலக்கியங்களை அழகுணர்வுடன் படைக்க ஆரம்பித்தனர். பிரித்தானியர்களின் முன்னெடுப்பால் ஐ.நா.வின் அங்கீகாரத்துடன் பாலஸ்தீனத்தில் இசுரேல் உருவானது. இசுரேலின் உருவாக்கத்தால் தம் இடம் இழந்த அரேபியர்கள் கொதித்தனர். பலஸ்தீனக் கவிஞர்கள் தம் அறைகூவலைக் கவிதைகளில் வெளியிட்டனர். மஹ்மூத் தார்விஷ், சமீஹ்அல் காசிம், தௌபீக் சையது ஆகிய கவிஞர்கள் போராட்டக் குணத்துடன் கவிதைகள் படைத்தனர். இசுரேல் பலஸ்தீனர்களின் கலாச்சாரத் தனித்துவத்தை அடக்க முயன்றனர். இதற்கு எதிரான தோட்டாக்களாக பலஸ்தீனக் கவிதைகள் அமைகின்றன.

விஞனின் கவிதை உள்ளம்

கவிஞன் உணர்வுவயப்பட்டவன். தன் உணர்வுகளை எழுத்திலே வடிக்க வல்லவன். அவனால் தன் எழுதும் தொழிலில் இருந்து பிரிய இயலாது. மூச்சுக் காற்று போல அவனுக்கு எழுத்துக்கலை அமைகிறது.

‘சொல்வதற்கு ஒன்றுமில்லை
இறந்த உடல்களுக்கும்
அகதி முகாம்களிலே
குழந்தைகளின்
இடையறாத அழுகுரல்களுக்கும்
எரிந்த வீடுகளுக்கும்
இடையே எதைத் தான் எழுத’

என்ற கவிதை வரிகள் கவிஞர் சேரனின் கவிதை உள்ளத்தைப் பறைச்சாற்றுகின்றது.

பலஸ்தீனக் கவிஞர் அபூசல்மா புலம்பெயர்ந்து சென்று டமஸ்கஸில் வாழ்ந்தவர்.

“அன்புள்ள பாலஸ்தீன்
பிசாசுகள் என் கண்களைச் சித்திரவதை செய்கையில்
நான் எவ்வாறு துயில்வேன்?”

என்னும் வரிகள் “பாலஸ்தீனத்தின் ஒலிவ மரம்” என்றழைக்கப்பட் அபூசல்மாவின் வருத்தத்தைப் பிரதிபலிக்கின்றன.

போர்ச்சூழல்

இலங்கையில் போர் நடந்த காலகட்டத்தில் கொல்லும் தொழில் மட்டுமே சிங்கள இராணுவத்தின் பணியாகவும் கடமையாகவும் இருந்தது. கொலை செய்வதை இயல்பான பணியாக அவர்கள் செய்து வந்தனர் என்பதைக் கவிஞன் கவிதையில் பதிவு செய்கிறார்.

‘அவர்கள் அவனைச்
சுட்டுக் கொன்றபோது
எல்லாருமே பார்த்துக் கொண்டு
நின்றார்கள்
இன்னும் சரியாகச் சொல்வதானால்
அவன் சுடப்படுவதைக் காண்பதற்காகவே
அவர்கள் நின்றார்கள்’

என்னும் கவிதை வரிகள் இலங்கையில் நிலவிய போர்ச்சூழலைப் பதிவு செய்துள்ளன. மய்சயீஹ் என்னும் பாலஸ்தீனப் பெண் கவிஞர் தன் மகனுக்கு எழுதுவதாகக் கவிதை படைக்கிறார். முற்றுகை இடப்பட்ட பெய்ரூத் என்னும் தன் கவிதையில்

“ மகனே கவனமாயிரு
யுத்தம் இதயத்தை விழுங்குகிறது
என் கைகளிலிருந்து வாழ்வைப் பிடுங்குகிறது
நட்சத்திரங்களை அவற்றின் பயணப்பாதையில்
தடுத்து நிறுத்துகிறது
பகலை அணைத்து விடுகிறது
மகனே எதிர்த்து நில் சாட்சியாய் இரு
உன் சகோதரர்களுடன் இணைந்து கொள்
முற்றுகையை எதிர்த்து நில்
மகனே தயவு செய்து”

என்று போர்ச்சூழலைப் பதிவு செய்கிறார்.

பகை அரசினை எதிர்க்கும் நிலை

போரால் பாதிக்கப்பட்ட மக்களினம் தங்களுக்கு அநீதி இழைக்கும் சிங்கள அரசினை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பும் நிலையைக் காண முடிகின்றது.

‘சிங்கள அரசே கொலைப் பாதகரே
உழைப்பதும்
பசியை மறந்து சிரிப்பதும் அன்றி
ஏதுமறியாத மக்கள் பிணங்கள் மேல்
சிங்கக் கொடியை வானுற ஏற்றி
சுதந்திர தினமா குதூகலிக்கின்றீர்?
யாருடைய சுதந்திரம்?

என்ற கவிதை வரிகளில் வ.ஐ.ச.ஜெயபாலன் சிங்களர்களை எதிர்த்துக் குரல் எழுப்புகிறார்.

பாலஸ்தீனத்தின் சமீஹ் அல்காசிம் இருபதாம் நூற்றாண்டு என்னும் கவிதையில்

“பல நூற்றாண்டுகளின் முன் நான்
விருந்தினர் எவரையும் விரட்டியதில்லை
ஆனால் ஒரு நாள் காலை கண்களைத் திறந்தால்
என்னரும் பொருள்கள் எல்லாம் களவுபோயிருந்தன
என்னுயிர்த் தோழன் தூக்கிலே தொங்கினான்
என்னிளம் பிள்ளையின் பிடரி முழுவதும்
இரத்தக் களரி
என் விருந்தினரின் துரோகம் உணர்ந்தேன்
என் கதவடியில் கண்ணிகள் புதைத்தேன்
               கூர்வாள் மாட்டினேன்”

என்று பகைவர்கள் உள்நுழைந்து நாட்டில் செய்யும் அட்டகாசத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்.

புலம் பெயர்ந்தமைக்கான சூழல் விளக்கம்

புலம் பெயர்ந்த காரணமும் வலியும் கவிஞர்களின் பாடுபொருளாக இருப்பதைக் காண இயலுகின்றது. தன்னுடைய நாடு அந்நியருடைய கைகளில் பிடிப்பட்டதை எண்ணி வருந்தும் கவி உள்ளம் கவிதைகளில் இடம்பெறுகின்றது.

‘இம்முறை தெற்கிலே      
என்ன நிகழ்ந்தது
எனது நகரம் எரிக்கப்பட்டது
எனது மக்கள் முகங்களை இழந்தனர்
எனது நிலம் எனது காற்று
எல்லாவற்றிலும் அந்நியப் பதிவு’

என்ற சேரனின் (இரண்டாவது சூரிய உதயம்) கவிதை வரிகள் அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு வருந்தும் கவிஞனின் உள்ளதைக் காட்டுகின்றன.

புலம்பெயர்ந்து செல்லும் நிலை

புலம் பெயர்ந்த படைப்பாளர்கள் தம் அனுபவத்தினையும் பதிவு செய்துள்ளனர். தம்மிடம் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் இழந்தவர்களாக வெறும் கையோடு புலம் பெயர வேண்டியிருந்த கொடிய நிலையையும் இலக்கியங்களில் பதிந்துள்ளனர்.

‘மூட்டை முடிச்சு முதலியன இல்லாதார்
ஆட்டி நடந்தார் இரண்டு வெறுங்கையும்
பாதை நடையின் பயணத்துயர் அறியா
மாதிரியில் அந்த மனிதர் நடந்தார்கள்’
(இரண்டாயிரம் ஆண்டுப் பழயை சுமை எங்களுக்கு)

என்னும் இ.முருகையனின் வரிகள் பயணித்த மக்களின் துயரத்தை விளக்குகின்றன.

சொந்த மண்ணை நாடும் ஏக்கம்:

சொந்த மண்ணை விடுத்து வேறு மண் சென்று எத்தகைய நன்னிலையில் வாழ்ந்தாலும் மனிதனின் மனம் தன் பூமியையே சுற்றிச் சுற்றி வரும். அவ்வகையில் துன்புறும் மனநிலையை

'புலம் பெயா்ந்தோடி எங்கு
புதுமனை அமைத்த போதும்
நிலையிலா மனதிற் கோடி
நினைவுகள் கல்விப் பற்றும் ' (சலனம்)

என்னும் அம்பியின் வாிகளால் அறிய இயலுகின்றது. பலஸ்தீனத்தின் அப்துல்லா றத்வான் ஜோர்தானின் அகதிமுகாம்களில் வறுமையில் வாழ்ந்தவர். “நீதான் அனைத்தும்(பாலஸ்தீனுக்காக)” என்னும் கவிதையில்

” உன்னுள் ஒரு தாயை
ஒரு சகோதரியை
ஒரு மனைவியை நான் பார்த்தேன்
உன்னுள் என் குடும்பத்தைப் பார்த்தேன்
உன் இதழ்களில் குலக்குழுவின்
அன்பும் அரவணைப்பும் இருந்தது”2 என்று தன்னுடைய சொந்த மண்ணை எண்ணி ஏங்கும் மனநிலையைப் பதிவு செய்துள்ளார்.

எதிா்காலத்தின் மீதான நம்பிக்கை

அகதிகளாக வாழ்க்கையை வாழ வேண்டிய சூழலுக்கு மக்கள் சிரமத்துடன் பழகி விட்டாலும் கூட தம்முடைய எதிா்காலம் வளமானதாக மாறும் என்னும் நம்பிக்கையை மனதிலே ஆழமாகப் பதிய வைத்திருந்தனா்.

'இங்கே இப்போ அகதி அந்தஸ்து
கிடைக்குமா என்ற ஏக்கத்தோடு
நமது கனவுகளிற் பாதி
தஸ்தா அகதி முகாமில் என்னோடு...
வன்னியில் எங்கேனும் ஓா் மூலைக்குள்
உனக்கும் உன்னோடிருந்த நமது மீதிக் கனவுக்கும்
அகதி அந்தஸ்து
கிடைத்திருக்குமென சான் நம்புகிறேன் –
திரும்பவும் திரும்பவும்
ஒன்றையே நான் நான் சொல்லிக் கொண்டிப்பேன்
நம்பிக்கை மீதான நம்பிக்கை' (நீ தான் நமது கனவு)

என்னும் தமயந்தியின் வாிகள் நம்பிக்கைத்துளிா்களைக் காட்டுகின்றன.

இசுரேலியர்களால் கொல்லப்பட்ட பலஸ்தீனக் கவிஞர் கமால் நசீர்

“நாளை நம் பூமியிலிருந்து இரவு வெளியேறிவிடும்
மக்கள் தம் வலிமையைக் கண்டுபிடித்து
மாயைகளிலிருந்து விடுபடுவார்கள்
ஓநாய்களுக்காக ஒரு காலடித்தளம் எஞ்சியிருக்கும்வரை
தூங்கமாட்டோம் என
லட்சோபலட்சம் மக்கள் உறுதிகொள்வார்கள்
அனைத்துத் துன்பங்களின் ஊடாகவும்
அவர்கள் உண்மையின் வெற்றிக்கான
வேட்கையுடன் இருப்பார்கள்”3 என்னும் கவிதை வரிகளில் தன்னுடைய நம்பிக்கையினை வெளிப்படுத்துகிறார்.

யதாா்த்ததை எதிா்கொள்ளும் துணிச்சல்

வாழ்க்கையின் மீதான அச்சம் மக்களிடம் இருந்தாலும் நம்பிக்கை கொண்டு எழுந்தால் மட்டுமே வாழ்வு சாத்தியம் என்பதை உணா்ந்த யதாா்த்த மனநிலையும் படைப்பாளா்களிடம் வெளிப்படுகிறது.

'எதையும் நினைத்தழுதல்
இப்போது சாத்தியமில்லை
மனிதத்தின் மீது நம்பிக்கை கொண்டு
உயா்த்தெழுதலே வாழ்வு'(எதைநினைத்துஅழுவதும் சாத்தியமில்லை)

என்ற ஒளவையின் வாிகள் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளத் துடிக்கும் மனநிலையை உணா்த்துகின்றன.

“நாங்கள் முள்ளுக் கம்பியின் மீது
கிடக்கும் வரைக்கும்
இந்த உலகின் தலையணையின் கீழ்
டைனமைட் ஒன்றைநாம் நிறுத்தி வைப்போம்”4

என்னும் மூயின் பசைசோவின் வரிகள் அகதியாக வாழ்ந்த ஒரு பத்திரிக்கையாளரின் துணிச்சலைப் பறைசாற்றுகின்றன.

அமைதியை விரும்பும் நிலை

நிம்மதியாகச் சொந்த மண்ணில் இயல்பு வாழ்க்கையை அனுபவிக்கும் இன்பநிலை வராதோ என்று தவிக்கும் படைப்பாளாின் உணா்வினை அவா்தம் கவிதைகளில் காண இயலுகின்றது.

‘தோட்டம் துறவுகளில் சுவாின் சாிவுகளில் நீட்டிக் கால் முடக்கி நிமிா்ந்து குதித்தெழுந்து ஆட்டங்கள் போட்டுவிட்டு அமா்ந்தொடுங்கிப் பின்கதவால்
வீட்டுக்குள் நுழைந்திடுநாள் மீட்டுமினி வாராதோ’
(அந்த நாள் வாராதோ)

என்னும் யாழ்ப்பாணனின் வாிகள் அமைதியை விரும்பி இருக்கும் மனநிலையைச் சித்தாிக்கின்றன. இதைப் போன்ற ஒரு அமைதியான மனநிலையைத் பலஸ்தீனத்தின் தௌஃபீக் சையத்தினுடைய கவிதைத் தொகுப்பில் காண இயலுகின்றது. இவருடைய “நான் உன்னுடன் கை குலுக்குகிறேன்” என்னும் தொகுதி இஸ்ரேலுக்கு எதிரான பலஸ்தீனப் போராட்டத்தில் ஒரு மைல்கல்லாகவே அமைந்துள்ளது.

“என் தோளில் ஒரு போதும்
நான் துப்பாக்கி சுமந்ததில்லை
அதன் விசையை இழுத்ததில்லை
என்னிடம் இருப்பதெல்லாம்
ஒரு வீணையின் இசைதான்
என் கனவுகளை வரைவதற்கு
ஒரு தூரிகை தான்
ஒரு மைக்குடுவை தான்
என்னிடம் இருப்பதெல்லாம்
அசைக்க முடியாத நம்பிக்கை தான்
துன்புற்ற என் மக்கள் மீதான
ஒரு முடிவற்ற காதல் தான்”

என்று தன்னுடைய நம்பிக்கையைப் புலப்படுத்துகிறார். இவர் இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பாலஸ்தீன உரிமைகளுக்காகப் போராடியவர். அந்தோய்னே ஜபாறா என்னும் கவிஞரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பலஸ்தீனர்களின் முறையீடாக “சமாதான நதியும் போர்த் துப்பாக்கிகளும்” என்னும் கவிதையைப் படைத்துள்ளார்.

“ பயங்கர நிலைமை முடிந்திட வேண்டும்
எமது புண்ணிய பூமியின் ஊடாய்
சமாதான நதி பெருகிட வேண்டும்
என்பதே எமது பிரார்த்தனையாகும்
நீதியும் சமாதானமும்
புதியதான ஓர் சிந்தனைப் பாதையும்
இவையே எமது வேண்டுதலாகும்
இனக்கொலை புரிந்து கரங்கள் தறித்த
கடந்த கால அச்சுறுத்தல்கள்
எதையுமே இங்கு உருவாக்கவில்லை”


என்று அமைதியை வேண்டி நிற்கும் நிலை உருக்கத்தை ஏற்படுத்துகின்றது.

சொந்த மண்ணிற்குத் திரும்பும் விருப்பம்

சொந்த மண்ணிற்குத் திரும்பிச் செல்லும் நாளினை எதிா்பாா்த்திருக்கும் விருப்பத்தைக் கவிஞா்களின் கவிதைகளில் காண இயலுகின்றது.நாட்டைக் காணும் ஆவல் மக்கள் தம் மனதில் மிகுந்திருப்பதைத் திருமாவளவனின்

'மரக்கிளையிலிருத்து பேடைக்குக் குரல் கொடுத்து
மையலுக் கழைக்கிறது சின்னக் குருவி
அவசர அவசரமாக வந்து இறங்குகின்றன
பரதேசம் சென்றிருந்த பறவைகளும் மற்றவைகளும்
எனக்குள்ளும் பொறி கிளா்ந்து பற்றி எாிகிறது
என் தேசம் மீண்டும் திரும்புகிற ஆவல்'

கவிதை வாிகள் புலப்படுத்துகின்றன.

முடிவுரை

கவிஞா்கள் இயற்கையைகச் சொந்தம் கொண்டாடுபவா்கள். தம் சுற்றுச்சூழலோடு தம்மைத் தொடா்புடுத்திக் கொள்பவா்கள். அவா்களின் இயல்பான இவ்வுணா்வு புலம் பெயரும் போது மிகுகின்றது. தன் சூழலில் இருந்து வேறொரு இடத்திற்குப் பெயரும் போது மனம் குமுறுகின்றனா். அதனைப் படைப்புகளில் வடித்தெடுக்கின்றனா். இலங்கையை விட்டுப் பெயா்ந்த படைப்பாளா்களும் பலஸ்தீனத்தை விட்டுப் பெயர்ந்த படைப்பாளர்களும் தம் உள்ளக் குமுறல்களைத் தம்முடைய படைப்புக்களின் பாடுபொருள்கள் ஆக்குகின்றனர்.

சான்றெண் விளக்கம்

1. சு.தளபதி, ஈழம் ஓர் உண்மை வரலாறு, ப.3
2. பலஸ்தீனக் கவிதைகள், ப.212
2. பலஸ்தீனக் கவிதைகள், ப.44
3. பலஸ்தீனக் கவிதைகள், ப.49

துணை நூற்பட்டியல்

1
ஸ்ரீ. பிரசாந்தன்

20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்,
பூபால சிங்கம் புத்தக சாலை,
ஸ்ரீ லங்கா, 2006

2
எம்.எ.நுஃமான் (தேர்வும் தமிழாக்கமும்)
பலஸ்தீனக் கவிதைகள்
30 கவிஞர்களின் 109 கவிதைகள்
அடையாளம் வெளியீடு, 1989

3
எம்.எ.நுஃமான்
பதினோரு ஈழத்துக் கவிஞர்கள்,
காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில், 1984

4
செல்வகுமாரன்.சு
ஈழத்துப்புலம்பெயர் இலக்கியம்
காவ்யா வெளியீடு,
சென்னை, 2008.

5
சேரன் உ
மரணத்துள் வாழ்வோம்,
விடியல் பதிப்பகம்,
கோவை, 196

6
தளபதி சு.
ஈழம் ஓர் உண்மை வரலாறு,
இலக்கியன் வெளியீட்டகம்,
மதுரை, 2009.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.