முன்னுரை    

வானில் நிகழும் பல்வேறு விதமான செயல்பாட்டினை ஆராயும் இயலே ’வானியல்’ என்று அழைத்தனர். பண்டைய தமிழர்கள் வானியல் அறிவு நிரம்பப் பெற்று இருந்தனர் என்பதை பழந்தமிழ் இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது. வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும், மாற்றங்களையும், கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகத்திற்கு எடுத்து இயம்பினார்கள். கணியன் பூங்குன்றனார், கணிமேதாவியார், பக்குடுக்கை நக்கண்ணையார் போன்ற புலவர்கள் வானியல் துறையில் சிறந்து விளங்கினர். வானில் ஏற்படும் மாறுபாடுகள் குறித்துக் கம்பராமாயணத்தில் கூறப்பட்டிருந்தாலும் சந்திர கிரகணம், சூரிய கிரகணம் குறித்துக் கம்பர் கூறியுள்ள கருத்துக்களை ஆராய்வோம்.

கிரகணம்

கிரகணம் என்பது வானியல் பொருள் ஒன்று, வேறொரு பொருளின் நிழலிலோ அல்லது வேறொரு பொருள் இப்பொருளுக்கும் பார்வையாளருக்கும் இடையில் செல்வதாலோ தற்காலிகமாக மறைக்கப்படும் போது ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வாகும். கிரகணம் என்ற சொல் பெரும்பாலும் நிலாவின் நிழல் பூமியின் மேற்பரப்பைத் தாண்டும் போது நிகழும் சூரிய கிரகணத்தையோ அல்லது நிலா பூமியின் நிழலினுள் செல்லும்போது சந்திர கிரகணத்தையோ விவரிக்கிறது.

சந்திரகிரகணம்

சந்திர கிரகணம் என்பது சூரியன் ஒளியால் ஏற்படும் புவியியல் நிழலுக்குள் நிலவு கடந்து செல்லும்போது நிகழ்கிறது. இது சூரியன், பூமி, மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது மட்டுமே சாத்தியமாகிறது. எனவே ஒரு முழு நிலவு நாளில் மட்டுமே நிலவு மறைப்பு அதாவது ’சந்திர கிரகணம்’ நிகழ்கிறது. பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வைத் தான் ’சூரிய கிரகணம்’ என்று கூறுகிறார்கள். இந்த நிகழ்வின்போது நிலாவின் நிழல் சூரியனை மறைப்பதால் அது ’சூரிய கிரகணம்’ என்றும் பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் அது ’சந்திர கிரகணம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது வானத்தில் நிகழும் அறிவியல் நிகழ்வாகும்.

சந்திரனை ‘ராகு` என்னும் பாம்பு பிடித்துக்கொள்வதனால் ‘சந்திரகிரகணம்’ ஏற்படுகிறது. இதனை,

“என்னுள் இடும்பைத் தணிக்கும் மருந்தாக
நன்னுதல் ஈத்த இம் மா
திங்கள் அரவு உறின் தீர்க்கலா ராயினும்” (கலித்தொகை 140 : 13-15)

“அகலிரு விசும்பின் அரவுக்குறை படுத்த
பசுங்கதிர் மதியத்து அகல் நிலாப் போல”
(நற்றிணை 377 : 6-7)

என்ற பாடலடிகள் மூலம் அறியமுடிகிறது.

“கொங்குகவர் நீலச் செங்கட் சேவல்
மதிசேர் அரவின் மானத் தோன்றும்”
(சிறுபாணாற்றுப்படை 184-185)

" குழவித் திங்கள் கோள்நேர்த் தாங்கு"
( பெரும்பாணாற்றுப்படை 384)

சந்திர கிரகணம் ஏற்படுவதனை ராகு அல்லது கேது முதலான பாம்புகள் நிலவைப் பற்றுவது என புராணங்கள் எடுத்துரைக்கின்றன. அங்கு முழு நிலவினையே பாம்பு தீண்டுவதாகக் கூறப்படும். பிறை நிலவைப் பாம்பு தீண்டுவதாக கூறப்படுவதில்லை. இங்கு பிறையினை பாம்பு தீண்டினால் போல என உவமை கூறப்பட்டுள்ளது இது ’இல் பொருள் உவமை’ என்று கூறுவர்

சூரியகிரகணம்

ஞாயிறு மறைப்பு இருள்மதி நாளில் ஏற்படுகின்றது. சங்கப் புலவர்கள் கேது என்னும் பாம்புசூரியனை விழுங்குவதால் சூரியமறைப்பு ஏற்படுவதை குறுந்தொகையும், சீவகசிந்தாமணியும் கூறுகிறது.

“ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்” (குறுந்தொகை 58:3)

"அழலுடைக் கடவுளை அரவு சேர்ந்தென"(சீவகசிந்தாமணி 1092)

ஞாயிற்றைக்கேது பற்றுதல்

“பாஅய்ப் பகல் செய்வான்பாம்பின் வாய்ப் பட்டான் கொல்”

(மலைபடுகடாம் வெண்பா)

நிலவினை இராகு, கேது என்னும் இரு பாம்புகள் விழுங்கும் என்றும், விழுங்கி உமிழும் என்றும் புராணங்கள் கூறும். இதனையே குறளும்

“கண்டது மன்னும் ஒருநாள் அலர் மன்னும்
திங்களைப் பாம்பு கொண்டற்று” (குறள் 1146)

கம்பராமாயணத்தில் கிரகணம்

கிரகணம் குறித்தப் பதிவுகளைக் கம்பரும், தம் இராமாயணத்தில் பதிவு செய்துள்ளார்.பெரும்பாலும் உவமை கூறும் போதே கிரகணம் குறித்தச் செய்திகளைக் கூறிச்சென்றுள்ளார்.

1. மந்திரை சூழ்ச்சிப்படலத்தில் கிரகணம்

கோபத்துடன் கைகேயியின் அரண்மனையை அடைந்து அங்கு அவள் தூங்குவதைக் கண்ட கூனி, துன்பம் தரும் கொடிய நஞ்சினை உடைய இராகு என்னும் பாம்பு தன்னை விழுங்குவதற்காக நெருங்கி வரும் போதும் தன் தன்மையில் மாறாது ஒளியைப் பரப்பும் குளிர்ந்த வெண்மையான சந்திரன் ஒளி வீசுவது போல், பெரிய துன்பம் உன்னைத் தாக்குவதற்காக நெருங்கி விட்ட நேரத்திலும், அதை அறியாமல் நீ தூங்கிக் கொண்டே இருக்கிறாயே என்று கைகேயியிடம் கூறினாள் கூனி.

“அணங்கு வாள் விட அரா அணுகும் எல்லையும்
குணம் கெடாது ஒளி விரி குளிர் வெண் திங்கள்போல்”
( மந்திரை சூழ்ச்சிப்படலம்.138 )

2. விராதன் வதைப் படலத்தில் கிரகணம்

வலிய தோள்களை உடைய இராம இலட்சுமணர் கோபம் கொண்டு கரிய வாளினால் வேகத்தோடு விராதனின் இரண்டு தோள்களையும் வெட்டித் தள்ளி தாவிச் சென்றனர். அந்த விராதன் தேள் போன்ற தன் புருவங்கள் இரண்டும் நெரிய சினம் கொள்ளும் சிவந்த கைகளை உடைய இராகு எனும் பாம்பு சூரிய சந்திரரான இரண்டு கிரகங்களையும் பிடிக்கப் பின் தொடர்வது போல அவர்கள் பின்னே நெருங்கி வந்தான்.

“தோள் இரண்டும் நெரிய சினவு செங் கண் அரவக்
கோள் இரண்டு சுடரும் தொடர்வதின் குறுகலும்”
(விராதன் வதைப் படலம் 42)

3. சூர்ப்பணகைப் படலத்தில் கிரகணம்

இராமனைக் கண்ட சூர்ப்பணகை அவன் மேல் மிகுந்த ஆசை கொண்டாள். அந்தச் சூர்ப்பணகை எனக்கு அனுகூலமாகத் திகழாமல் தீங்கு செய்யும் சந்திரனை விழுங்குவதற்காக, அதன் பகையான இராகு எனும் பாம்பினை ஓடிப்போய்க் கொண்டு வருவேன் என்று சினம் கொண்டு சிந்தனை செய்வாள். பருமையும், மென்மையும் உடைய தன் முலைகளின் மேலே குளிர்ந்த காற்று வீச, அதனால் அருமையான உயிர் வெந்து போக, உடல் புழுங்குவாள்.

“அணவு இல் திங்களை நுங்க அராவினைக்
கொணர்வென் ஓடி எனக் கொதித்து உன்னுவாள்”
(சூர்ப்பணகைப் படலம் 294)

4. சடாயு உயிர்நீத்த படலத்தில் கிரகணம்

.சீறிக்கிழங்குவதும் கொடிய கொலைத் தொழிலை உடையதுமான இராகு கேது எனும் பாம்புகள், ஆகாயத்தில் பூ பூத்தாற் போலத் தோன்றும், வெண்மையான கதிர்களை உடைய சூரியனை விழுங்கியப் பிறகு வெளியே உமிழும். அழகிய பெரிய உலகத்தை ஒளி பெறச் செய்யும் சிறந்த கதிர்களை உடைய சந்திரனும் மாதத்துக்கு ஒருமுறை வளரும். ஒருமுறை தேய்ந்து போகும்.

“பொங்கு வெங் கோள் அரா விசும்பு பூத்தன
வெங் கதிர்ச் செல்வனை விழுங்கி நீங்குமால்”
(ஜடாயு உயிர் நீத்த படலம் 995)

5. அயோமுகிப் படலத்தில் கிரகணம்

சீதை என்ன பாடு படுவாளோ என்று இராமன் வருந்திக் கூறும் போது விஷத்தைக் காக்கும் பற்களை உடைய இராகு எனும் பெரிய பாம்பின் கொடிய வாயில் அகப்பட்ட சந்திரன் போல, ஒளி மங்குபவளான சீதை, அவளைக் காப்பாற்ற நான் வராததால், கொடும் கோபத்தை உடைய அரக்கரது கொடுமைக்கு இராமன் அஞ்சி விட்டானோ? என்று நினைத்துச் சந்தேகம் கொள்வாளோ? என்று இராமன் எண்ணி வருந்தினான்.

“நஞ்சு காலும் நகை நெடு நாகத்தின்
வஞ்ச வாயில் மதி என மட்குவாள்
வெஞ் சினம் செய் அரக்கர்தம் வெம்மையை
அஞ்சினம் கொல் என்று ஐயுறுமால் என்பான்”
(அயோமுகிப் படலம் 10:36)

6. கவந்தன் படலத்தில் கிரகணம்

அந்தக் கவந்தன் வெண்மையான சூரியன், விரும்பத்தக்க சந்திரன் ஆகிய கதிர்களை விழுங்கும் இராகு கேது எனும் கொடிய பாம்புகள், தான் செய்யும் தொழில், இல்லாதனவாகும்போது, வந்து தூங்குகின்ற செவித்தொளைகளை உடையவன். மிகுந்த கொடுமையால் பொய் ஒழுக்கம் மேற்கொள்ளும் இழிந்தவர்கள் தங்குகின்ற நரகத்தையும், தனக்கு ஒப்பாகாமையால் எண்ணி நகைக்கும் படியான வயிற்றை உடையவன்.

“வெய்ய வெங் கதிர்களை விழுங்கும் வெவ் அரா
செய் தொழில் இல துயில் செவியின் தொள்ளையான்”
(கவந்தன் படலம் 1142)

7. கவர்ந்தனிடம் அகப்பட்ட இருவரும் பலவாறு எண்ணுதல்

அந்தக் கவந்தன் தன்னை விழுங்குவதற்காக இராகு எனும் பாம்பு புரண்டு தன்னிடம் வர, அதைக் கண்டு அஞ்சி, புகுந்து வசிப்பதற்கு உரிய பாதுகாப்புள்ள இடத்தைத் தேடி, அருவிகளை உடைய ஒரு பெரிய மலையில் வலிய, பொருந்திய குகையில் நுழைகின்ற வெண்ணிறமான முழுச் சந்திரனை இரண்டு கூறாகப் பிளந்து வைத்துக் கொண்டது போல விளங்கும் கோரப்பற்களை உடையவன்.

“புரண்டு பாம்பு இடை வர வெருவிப் புக்கு உறை
அரண்தனை நாடி ஓர் அருவி மால் வரை
முரண் தொகு முழை நுழை முழு வெண் திங்களை
இரண்டு கூறிட்டென இலங்கு எயிற்றினான்”
( கவந்தன் படலம் 1140)

8. கடல் தாவு படலத்தில் கிரகணம்

வாளுக்கு ஒப்பான வெண்மையான பற்கள் பக்கங்களில் வரிசையாய் விளங்க, வானமெல்லாம் நிரம்பிய உடம்பை உடையவன் அனுமன். அவன் நீளமாக உயர்ந்த வாலினாலே, சூரியனைச் சில சமயம் மறைக்கும் இராகு எனும் கோளை ஒத்தான். அவனது உடம்பு, வானத்தில் பகல், இரவு என்னும் இரண்டு பகுதிகளையும், ஒரே சமயத்தில் உண்டாக்கிய ஒரு நாளைப் போலத் திகழ்ந்தது. அதனால், உலகமானது, மேலெல்லாம் ஒளி பெற்றிருந்தது. கீழெல்லாம் இருள் பெற்றிருந்தது.

“வாள் ஒத்து ஒளிர் வால் எயிது ஊழின் மருங்கு இமைப்ப
நீள் ஒத்து உயர் வாலின் விசும்பு நிரம்பு மெய்யன்
கோள் ஒத்த பொன் மேனி விசும்பு இரு கூறு செய்யும்
நாள் ஒத்தது மேல் ஒளிகீழ் இருள் உற்ற ஞாலம்”
(கடல் தாவு படலம் 64)

9. ஊர் தேடு படலத்தில் கிரகணம்

தினந்தோறும் தான் காத்து வரும் இலங்கை நகரின் ஆயுளைத் தன் ஆயுளாகக் கொண்டவளைப் போல தோன்றியவளான இலங்காதேவி, தூண்கள் எனத்தக்க தோள்கள் பெற்றவரான அனுமனைக் கண்டு, கதிரவனை விழுங்க வரும் இராகு, கேது எனும் பாம்புகளைப் போன்ற கோபக்கனல் உமிழும் கண்களைக் கொண்டவளாய் அவன் செல்லும் வழியிலே நின்றாள்.

“நாள் நாளும் தான் நல்கிக் காவல்நனி மூதூர்
வாழ்நாள் அன்னாள் போவதின் மேலே வலி நின்றாள்
தூண் ஆம் என்னும் தோள் உடையானை சுடரோனைக்
காணா வந்த கட்செவி என்னக் கனல் கண்ணால்”
( ஊர் தேடுபடலம் 169)

10. காட்சிப் படலத்தில் கிரகணம்

. பொறுமை பொருந்தியவளான சீதையின் அழகிய முகத்தின் பக்கங்களில் அமைந்த இரு கன்னங்களையும் நன்றாகக் கவ்விப் பறந்த கூந்தல் தொகுதியானது, நிலத்திடை கிடந்த மாசற்ற மதியைத் தன் வாயில் அடக்கும்படி விழுங்கி மீண்டும் உமிழ்கின்ற இராகு எனும் கரும்பாம்பின் தோற்றம் போல் பெற்றிருந்தன. இவ்வாறு ஒன்று திரண்டு ஒரு சடையாகத் திரிக்கப்பெற்றக் கூந்தலை உடையவள் ஆயினாள் சீதை.

“கமையினால் திருமுகத்து அயல் கதுப்பு உறக் கதுவி
சுமையுடைக் கற்றை நிலத்திடைக் கிடந்த தூ மதியை
அமைய வாயில் பெய்து உமிழ்கின்ற அயில் எயிற்று அரவின்
குமையுறத் திரண்டு ஒரு சடை ஆகிய குழலாள்”
(காட்சிப் படலம் 338)

11. உருக்காட்டுப் படலத்தில் கிரகணம்

எட்டாம் நாளில் விளங்குகின்ற அரைச் சந்திரன், உதிக்கும் போதே பெற்றுள்ள களங்கம்- தினமும் வளர்தல் தேய்தல் -ஒரு நாள் ராகு எனும் பாம்பினால் விழுங்கப்படும்- துன்பம் தினசரி பிறத்தல்- தினசரி இறத்தல் ஆகியவற்றை நீக்கி, அசையும் இருளின் அழகான நிழலில் பல காலம் நின்றால், அப்போது அது இராமனின் நெற்றியைப் போன்றதாகும்.

“வருநாள் தோன்றும் தனி மறுவும்
வளவும் தேய்வும் வாள் அரவம்,
ஒரு நாள் கவ்வும் உறு கோளும்
இறப்பும் பிறப்பும் ஒழிவுற்றால்”
(உருக்காட்டு படலம் 543)

12. நிந்தனைப் படலத்தில் கிரகணம்

இராவணன் அசோகவனத்தை விட்டு அரண்மனைக்குப் போய் விட்டான். அதன் பின்பு மிகக் கொடிய அரக்கியர் இராகு எனும் பாம்பு விழுங்கி வெளியே உமிழ்ந்த தூய மதியைப் போன்றவளும் மயிலைப் போன்றவளுமான சீதையை ஒரு சேரச் சுற்றிக்கொண்டனர். அவர்கள் மிகுந்த கோபம் கொண்டவர்களாகிப் பேரொலி பிறக்குமாறு அதட்டி, தன் மனம் போனபடியெல்லாம் பேசினார்கள்.

“போயினன் அரக்கன் பின்னை பொங்கு அரா நுங்கிக் கான்ற
தூய வெண்மதியம் ஒத்த தோகையைத் தொடர்ந்து சுற்றி”
(நிந்தனைப் படலம் 480)

13. அதிகாயன் போர்க்களம் நோக்கிச் செல்லல்

செங்கதிரை உடைய சூரியனோடு சேர்ந்து ஊர் கோளாகிய ஒளிவட்டம் சென்றது போல, அதிகாயனின் ஒரு தேரைச் சூழ்ந்து பல தேர்கள் வட்டமாகச் சென்றன. கருமேகத்தின் வரிசை சென்றதைப் போல, ஒளி வீசும் நெற்றிப் பட்டம் கொண்ட யானைகள் சென்றன. இச்சேனையோடு சென்றனவான- பாயும் இயல்புடைய குதிரைகள், வேகமாகச் செல்வதால் தரையில் கால்கள் பதிவது சரியாக தெரியாமையால் அவை பூமியில் செல்லவில்லை. (அதிகாயன் வதைப்படலம் 1693)

14. பஞ்ச சேனாதிபதிகள் வதைப்படலத்தில் கிரகணம்

சிறிதும் தளராதவனான யூபாட்சன், பிரகசன் என்னும் அந்த அரக்கர் இருவருடைய உயர்ந்த இரு கால்களோடு தோள்களையும் தன் வாலினால் கயிற்றால் கட்டுவது போலக் கட்டி முறித்தான் அனுமான். சூரியனை விழுங்கிய இராகு - கேது எனும் பாம்புகள் நீங்குவது போல, இருவரும் அனுமானை விட்டு நீங்கி இறந்து விழுந்தனர். அல்லி மலருக்குப் பகைவன் போன்ற சூரியனை ஒத்த அனுமான், தனக்கு எந்தத் தீங்கும் இன்றி நின்றிருந்தான்.

“தாம்பு என வாலின் வரிந்து உயர் தாளோடு
ஏம்பல் இனார் தோள்கள் இறுத்தான்
பாம்பு என நீங்கினர் பட்டனர் வீழ்ந்தார்
ஆம்பல் நெடும் பகை போல் அவன் நின்றான்”
(பஞ்ச சேனாதிபதிகள் வதைபடலம் 927)

15. வருணனை வழி வேண்டு படலத்தில் கிரகணம்

கடலினால் சூழப்பட்ட இந்த உலகமானது, செழுமையான கதிர்களை யுடைய சூரியனால் பகையாய் இருந்த வலிய இருள் நீங்கிய தன்மை, செழுமையான ஒளியையுடைய 16 கலைகளும் நிரம்பப் பெற்ற சந்திரன், வெதும்புகின்ற கொடிய சினத்தையும், கரிய நிறத்தையும் படப் புள்ளிகளையும் உடலில் வரிகளையுமுடைய இராகுவினால் விழுங்கப் பெற்றுப் பின் பாம்பின் வாயினின்றும் வெளிப்பட்ட தன்மையை ஒத்துத் தோன்றுகிறது.

"கொழுங் கதிர்ப் பகைக்கோளிருள் நீங்கிய கொள்கை
செழுஞ் சுடர்ப் பனிக் கலை எலாம் நிரம்பிய திங்கள்
புழுங்கு வெஞ் சினத்து அஞ்சனப் பொறிவரி அரவம்
. விழுங்கி நீங்கியது ஒத்தது வேலை சூழ் ஞாலம்"
(வருணனை வழி வேண்டு படலம் 533)

16. இலங்கை காண் படலத்தில் கிரகணம்

இலங்கை காண் படலத்தில் இராமன், இலட்சுமணனிடம் கூறும்போது, கொல்லும் தன்மை கொண்ட ஆண் சிங்கத்தைப் போன்றவனே, நட்சத்திரங்கள் பொருந்துகின்ற ஒளி பொருந்திய மேல் மாளிகையினிடத்தே ஒரு நாகர்குலப் பெண், கரிய நிறமுடைய நீண்ட உறையினின்று வெளியே எடுத்து கண்ணாடியானது, கொடிய இராகு எனும் பாம்பு வானத்திலே வாயால் கவ்வி விழுங்கிப் பின்பு உமிழ்கின்ற சந்திரனை ஒக்கும் தன்மையை நன்கு காண்பாயாக என்று கூறினான்.

“கொள் அவாவு அரியேறு அன்ன குரிசிலே கொள்ள நோக்காய்
நாள் அவாம் மின் தோய் மாடத்து உம்பர் ஓர் நாகர் பாவை
காள வார் உறையின் வாங்கும் கண்ணாடி விசும்பில் கவ்வி
வாள் அரா விழுங்கிக் காலும் மதியினை நிகர்த்த வண்ணம்”
(இலங்கை காண் படலம் 794)

17. இராவணன் வானரத் தானை காண் படலத்தில் கிரகணம்

இப்படலத்தில் தீய நிமித்தங்கள் உண்டாகவும், இராமனை அப்போது கண்ட இராவணன், வானத்திலே நிறைந்த செந்நிற ஒளியை கொண்டவனான கதிரவனை அமாவாசையின் போது அருகே சென்று எதிர்க்கும் வேகத்தை உடைய இராகு எனும் பாம்பைப் போல வெதும்பிச் சினந்தான்.

“ஏக ராசியினின் எய்த எதிர்க்கும்
வேக ராகென வெம்பி வெகுண்டான்”
(இராவணன் வானரத் தானை காண் படலம் 819)

18. முதற் போர் புரிபடலத்தில் கிரகணம்

தேவர்களுக்குத் தலைவனான இராமனின் கொல்லும் இயல்பையும் கொண்ட வில்லிலிருந்து எய்யப்பட்ட பெரிய அம்பு கொண்டு செல்லச் சென்ற இராவணனின் முடி, ஒலிக்கும் கடலில் முழுகிய தன்மை, வட்ட வடிவமாகத் தொடர்ந்து விளங்கும், கதிரையுடைய கதிரவன் தன்னை உண்டு கேது எனும் பாம்பான கோளுடனே ஒலிக்கின்ற கடலிலே வீழ்ந்ததையும் போன்று விளங்கியது.

“அண்டர் நாயகன் அடுசிலை உகைத்த பேர் அம்பு
கொண்டு போகப் போய்க் குரை கடல் குளித்த அக்கொள்கை
மண்டலம் தொடர் வயங்கு வெங்கதிரவன் தன்னை
உண்ட கோளொடு ஒலி கடல் வீழ்ந்ததும் ஒக்கும்”
(முதல் போர் புரிபடலம் 1203)

19.  கும்பகர்ணன் வதைப் படலத்தில் கிரகணம்

கும்பகர்ணன், சுக்ரீவனைத் தூக்கிச் சென்ற காட்சியில் மனப்புழக்கத்தால் கடும் சினம் கொண்டு கொதித்தெழுந்த கும்பகர்ணன், வருத்தம் இல்லாமல் எளிதாகப் பற்றிக்கொள்ளும் பாம்பு போலானான். எழுகின்ற கிரகங்களை உடைய சூரியனின் மகன் சுக்ரீவன் நினைத்து வருந்தத்தக்க வகையில், அந்தப் பாம்பினால் விளங்கப்பட்ட சந்திரனைப் போல மெலிந்து தோன்றினான் புழுங்கிய வெஞ்சினத்து அரக்கன் போகுவான்.

“அழுங்கல் இல் கோள் முகத்து அரவம் ஆயினான்
எழும் கதிர் இரவி தன் புதல்வன் எண்ணுற
விழுங்கிய மதி என மெலிந்து தோன்றினான்”
(கும்பகர்ணன் வதைப் படலம் 14 83)

போர்க்களத்தில் இராமன் செலுத்திய அம்பு, கும்பகர்ணனது வாளேந்திய வலக்கரத்தைத் துணித்து விட, பாவம் துன்புற்றது புண்ணியம் இன்புற்று ஆரவாரத்து எழுந்தது. ஊழிக் காலத்தில் பொங்கி எழும். வெப்பம் மிகுந்த கரிய கடலின் பெரிய அலையினைப் போன்ற வலக்கரம் இராகு எனும் பாம்பால் கவரப்பட்ட வானத்துச் சந்திரன் போன்ற வாளொடும் துண்டு பட்டது. எனவே இலங்கை நகருக்கும், இராவணனுக்கும் இனி பாதுகாப்பு ஒழிந்தது என்று புலம்பியவாறு, அரக்கர்கள் எழுந்து வேகமாக ஓடி, உடல் வியர்த்து கவலை அடைந்தனர்.

“வலக் கை அற்றது வாளொடும் கோளுடை
வான மாமதி போலும்
இலக்கை அற்றது அவ் இலங்கைக்கும் இராவணன்
தனக்கும் என்று எழுந்து ஓடி”
(கும்பகர்ணன் வதைப் படலம் 1550)

20.  நாக பாசப்படலத்தில் கிரகணம்

இலக்குவனின் உடலில் தைத்த அம்புகள் அனைத்தும் கிரணங்களாகவும், மெலிய மெலிய வழிகின்ற இரத்தம் வெயில் போலத் தோன்றவும், எல்லாத் திசைகளிலும் நிறைந்திருக்கும் இருட்டு நிலைகுலையுமாறு சினந்து விரட்டி நிறைந்துள்ள பெரிய ஒளியை உடையதும், இராகு எனும் பாம்பினால் பற்றப்பட்டதுமான உருவத்துடனே, தேவலோகத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்த கதிரவனைப் போல திகழ்ந்தான்.

“செம் புனல் வெயிலின் தோன்றத் திசை இருள் இரிய சீறிப்
பம்பு பேர் ஒளிய நாகம் பற்றிய படிவத்தோடும்
உம்பர் நாடு இழிந்து வீழ்ந்த ஒளியவனேயும் ஒத்தான்”
(நாகபாசப் படலம் 2145)

21.  நிகும்பலை யாகப் படலத்தில் கிரகணம்

இலட்சுமணன் செலுத்திய ஒளிமிக்க அம்புகள் துணிக்க, காம்பு அற்றுப் போய் விழுந்து அவ்வரக்கரது இரத்த வெள்ளத்தில் மூழ்குவதால், செந்நிறப் பாம்பினால் விழுங்கப்பட்ட சந்திரனைப் போன்று இருந்தன.

“ஒன்னார் முழு வெண்குடை ஒத்தனவால்
செந் நாகம் விழுங்கிய திங்களினை”
(நிகும்பலையாகப் படலம் 2910)

22. மீட்சிப்படலத்தில் கிரகணம்

இராகு, கேதுக்கள் என்ற பாம்புகளால் உட்கொள்ளப்பட்டுப் பின் உமிழப் பெற்ற சந்திரன் போன்ற தன்மையை உடைய சீதை, ஆம்பல் மலர் போன்ற வாயும் முகமும், மகிழ்ச்சிக்கு அறிகுறியாக அலர்ந்திட வாடிய நுட்பமான இடை, பின்னும் வருந்துமாறு, திரண்ட மார்பகங்கள் மகிழ்ச்சியுடன் தோன்றிய காதலால், இரட்டிப்பாக வந்து பெருகப் பெற்றாள்.

“ஏம்பல் ஆசைக்கு இரட்டி வந்து எய்தினாள்
பாம்பு கான்ற பனி மதிப் பான்மையாள்”
(மீட்சிப் படலம் 3913)

முடிவுரை

பண்டைய தமிழர்கள் வானியல் அறிவு நிரம்பப் பெற்று இருந்தனர் என்பதை பழந்தமிழ் இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது. பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வை தான் ’சூரிய கிரகணம்’ என்று கூறுகிறார்கள். இந்த நிகழ்வின்போது நிலாவின் நிழல் சூரியனை மறைப்பதால் அது ’சூரிய கிரகணம்’ என்றும், பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் அது ’சந்திர கிரகணம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது வானத்தில் நிகழும் அறிவியல் நிகழ்வாகும். ஒரு முழு நிலவு நாளில் மட்டுமே நிலவு மறைப்பு அதாவது ’சந்திர கிரகணம்’ நிகழ்கிறது. . கிரகணம் குறித்தப் பதிவுகளைக் கம்பரும், தம் இராமாயணத்தில் பதிவு செய்துள்ளார்.பெரும்பாலும் உவமை கூறும் போதே கிரகணம் குறித்தச் செய்திகளைக் கூறிச்சென்றுள்ளார்.மந்தரை சூழ்ச்சிப் படலம் முதல் மீட்சிப்படலம் உள்ளிட்ட பல படலங்களிலும் கிரகணம் குறித்தக் கருத்துக்களை கம்பராமாயணத்தில் பதிவு செய்துள்ளக் கருத்துக்களை அறிந்து கொள்ளமுடிகிறது.

துணை நூற்பட்டியல்

1.இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன்,சாரு பதிப்பகம், சென்னை, 2016.
2.எல்லைகள் நீத்த இராமகாதை,பழ.கருப்பையா,விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.
3.கம்பன் புதிய தேடல், அ. அ. ஞானசந்தரத்தரசு,தமிழ்ச்சோலைப்பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
4. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன்,வள்ளி பதிப்பகம், சென்னை,2019.
5.கம்பன் காட்டும் வைணவப் பேருலகம், அமுதன்,லக்‌ஷண்யா பதிப்பகம், சென்னை,2019.
6.கருத்திருமன். பி,சி.கம்பர் கவியும் கருத்தும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2018.
7.காசி. ஆ கம்பரும் திருத்தக்கதேவரும்,தமிழ்ச்சோலைப் பதிப்பகம்,சென்னை, 2010.
8.காலமும், கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம் புதுச்சேரி, 9. சக்தி நடராசன்.க, கம்பரின் கை வண்ணம், சரசுவதி பதிப்பகம், ஆர்க்காடு,  2017,
10. பழனிவேலு. தா, காலத்தை வென்ற கம்பன், பல்லவி பதிப்பகம், ஈரோடு. 2021.
11.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.