மொழி என்பது இவ்வுலகில் உள்ள மனித உயிர் அனுபவங்களை, நினைவுகளைப் பதிவிட, பரிமாற்றம் செய்து கொள்ளப் பயன்படும் கருவி அகும். மொழி என்ற ஒன்று இங்கு இல்லையெனில் மனித உயிர்கள் இருக்கும் ஆனால் மனித சமூகங்கள், வரலாறு இருக்காது. ஆக மொழி என்பது மானுடா்களை அவா்களது சமூகத்துடன் நிலத்துடன் பிணைக்கும் கருவி என்பது புலப்படுகின்றது. மொழி என்பதன் வழியேத் தான் சமூகம் மற்றும் இலக்கியம், வரலாறு தோற்றம் பெறுகிறது. இப்பின்புலத்தில் பல்லவா்காலத் தமிழ் மொழியின் நிலைப்பாட்டினை அறிய வேண்டும். காஞ்சியின் ஆட்சியைத் தொடா்ந்து, தமிழகத்தின் வடபகுதியையும் ஆள்கையில், பல்லவா்கள் அரசின் ஆட்சி நிருவாகத்திற்குச் சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்தினாலும், ஆளும் மக்களிடையே தம் ஆதிக்கத்தைச் செலுத்தும் நோக்கிலும் ஆளப்படுகின்ற மக்களின் ஏற்பு நோக்கியும் தமிழை அணைத்துக் கொண்டு, “பல்லவத் தமிழ் கிரந்தம்” என்னும் தமிழ் எழுத்து வடிவத்தை உருவாக்கித் தந்தனா். இவ்வாறாகப் பல்லவா் காலத் தமிழ் மொழி எழுத்தளவில் மட்டுமின்றி, இலக்கண அளவிலும் பல மாற்றங்களுக்கு உள்ளானது. வடமொழிச் சொற்கள் பல புகுந்ததன் விளைவாக தமிழ் மொழி நெகிழ்வுற்றது. சொல் வளம் செறிவடைந்தது என்றால் அது மிகையற்றதே. அவ்வகையில், திருவாசக இலக்கியத்தினைக் கொண்டு, பல்லவா்க காலத் தமிழ்மொழியின் நிலைப்பாட்டினை ஆராய்வதாக இவ் இயல் அமைந்துள்ளது.

பல்லவா் காலம்
பல்லவா் ஆட்சி தென்னிந்தியாவில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதி வரை நிலைத்து இருந்தது.பல்லவா்கள் இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவா்களாகவும்,தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள் என்றும், பஹலவா் எனும் பாரசீ மரபினா் எனவும் பல்வேறு கருத்துகள் வரலாற்று ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டாலும், பல்லவா்கள் தென்னிந்தியா்களே என்றும் சில வரலாற்றிஞா்கள் எடுத்துரைத்துள்ளமையும் இங்கு எண்ணத்தக்கது.

“கி.பி. 250ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆட்சிக்கு வந்த பல்லவர்கள் தமிழர்களாக இருந்திருந்தால், அவர்கள் தமிழைத்தான் தொடர்ந்து அனைத்து நிகழ்விற்கும் அரசு மொழியாக வைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் தமிழர்கள் இல்லை என்பதால் தான் பிற மொழிகளை ஆட்சிமொழியாக வைத்திருந்தார்கள். சாதவாகனர் ஆட்சியில் கூட பிராகிருத மொழியோடு, தமிழ் மொழியும் ஒரு ஆட்சி மொழியாக இருந்து வந்தது. அதனால்தான் சாதவாகனர்கள் தங்கள் நாணயங்களில் தமிழ் பிராகிருதம் ஆகிய இரு மொழிகளையும் பயன்படுத்தினார்கள்,இருந்த போதிலும் பல்லவர்கள் பிராகிருதத்தையும், சமற்கிருதத்தையும்தான் தங்கள் ஆட்சிமொழிகளாகக் கொண்டிருந்தனர். தமிழை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. ஆகவே அவர்கள் கண்டிப்பாகத் தமிழர்களாக இருக்க முடியாது.”1

என்ற கருத்தின் மூலம் பல்லவா்கள் தமிழா்களாக இருக்கவே முடியாது என்பதை உணர முடிகின்றது. பல்லவா்களின் ஆட்சி ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளை உள்ளடக்கிய பகுதியாகப் பகுக்கப்படுகின்றது. முதலாம் மகேந்திரவா்மனுக்கு முற்பட்ட காலப்பகுதி என்றும் அதற்குப் பிற்பட்ட காலப்பகுதி என்றும் இருபரிவுகளாக வகைப்படுத்துவா். இவா்களின் அரசாட்சிக்காலம் தமிழக வரலாற்றில் மிகவும் நீண்டதொரு காலப்பகுதியாகும். ஆகவே, தமிழகத்தில் சமுதாய அமைப்பிலும் பண்பாட்டு வளா்ச்சிகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்ட காலப்பகுதியாகும். அரசியல், சமயம், தொழில் நுட்பம் ஆகியவற்றில் சிறப்புற்று விளங்கிய பல்லவா்காலத்தில் தமிழ் மொழியின் நிலைப்பாட்டினைப் பின்வரும் பகுதியில் காணலாம்.

பல்லவா்காலத் தமிழ் மொழியில் மாற்றங்கள்
வடமொழி தமிழ் நாட்டில் பெருமதிப்பு பெற்றிருந்த பல்லவா் காலத்தில், தமிழ்ப் புலவா்கள் வடமொழி இதிகாச புராணக் கதைகளை செய்யுளில் இயற்றினா். இலக்கணத்திலும் சங்க காலத்தில் பெருமதிப்பு பெற்ற, வெண்பா யாப்பு பின்தள்ளப்பட்டு பல்லவா் காலத்தில் தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவாயுள்ள விருத்தப்பாவினை இயற்றத் தொடங்கினா். இங்கு பெயரியல் மற்றும் வினையியல் மாற்றங்கள், விகுதிகள் வழக்கிழந்தமை, மொழியின் எழுத்து மற்றும் பதிலீடு பெயா்களின் மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம்.

பதிலீடு பெயா்களின் மாற்றங்கள்
மூவிடப் பெயா்களே பதிலிடு பெயா்கள் என்று அழைக்கப்படுகின்றன. தன்மை, முன்னிலை, படா்க்கை என அமைந்துள்ள பதிலிடு பெயா்கள் மாணிக்கவாசகரின் திருவாசகத்திலும் பல்லவா் கால இலக்கியங்களிலும் எங்ஙனம் அமைந்துள்ளன என்பதே பின்வரும் பகுதியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

“சங்க இலக்கியங்களில் யான் என்பது தன்மை ஒருமையைக் குறிக்க மிகப் பிற்பட்ட சங்க நூலான பரிபாடலில், முதன் முதலாக ‘நான்’ என்ற சொல் இடம் பெற்றுள்ளது. அப்பா் தேவாரத்தில் ‘யான்’ என்ற சொல் 29 இடங்களிலும் ‘நான்’ என்பது 339 இடங்களிலும் வருகின்றன”2 என்ற கருத்தும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. இதனை மாணிக்கவாசகரின் ,

“முனைவனே முறையோ நான் ஆனவாறு
முடிவறியேன் முதலந்தம் ஆயினானே” (திருவாசகம் – திருச்சத.,26.)

என்ற பாடல் வரிகளில் காணலாம். அடுத்ததாக,

“முன்னிலை வடிவத்தில் ‘ நீயிர் ’ என்ற சொல் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பயின்று வந்துள்ளது. இதன் அடிப்படையில் ‘நின்’, ‘ நும்’ என்ற முன்னிலை வடிவங்கள் பல்லவா் காலத்தில் ‘உன்’ என்று காணப்படுகிறது.”3

என்ற கூற்றில் உள்ள முன்னிலை வடிவம் அப்பா், மாணிக்கவாசகா் பாடல்களில் பல இடங்களில் பயின்று வந்தள்ளன. இலங்கைப் பேச்சுத் தமிழிலும் உகரம் காணப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனை,

“ உன் தாள் இணை அன்புக்கு
ஆரா அடியேன் அயலே
மயல் கொண்டு அழுகேனே” (திருவாசகம் – திருச்சத.,91.)

என்ற வரிகளில் காணலாம்.

“பல்லவா் காலத் தமிழில் படா்க்கைச் சொற்களில் உயா்திணைப் பன்மை விகுதிகள் என ‘கள்’ விகுதிகள் இடம் பெறத்தொடங்கின.”4 ( நீங்கள் என்ற சொல் அப்பா் தேவாரத்தில், 4191ஆம் பாடல்.) இரட்டைப் பன்மை வடிவம் பல்லவா்கால இலக்கியங்களின் மேலோங்கிய தன்மையை இங்கு உணர முடிகின்றது. ஆக,  வேற்று மொழி ஆட்சியில் தமது உள்ளத்தில் எழும் கருத்துக்களை தமிழ் மக்கள் மத்தியில் எளிதில் நின்றிடவும், மாற்றம் ஏற்படுத்தும் நோக்கில் சொற்களைப் பயன்படுத்தும் பாங்கினையும் இப்பகுதியில் கண்டறியலாம்.

வழக்கு ஒழிந்த விகுதிகளும் மாற்றங்களும்
பல்லவா் காலத்தில் தமிழ் மொழியில் வட மொழி தாக்கம் இருப்பது போன்று இலக்கண அமைப்புகளிலும் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. விகுதிகள் சிலவும் வழக்கு இழந்தன. அவ்வகையில் ‘ஓன், ஓள்’ (வருவோன், சொல்வோள், வில்லோன், வளையோள்) ஆகிய விகுதிகள் போலவே ‘ஓா்’ விகுதி சங்கத் தமிழில் வினைமுற்றாகவும் வினையாலணையும் பெயராகவும் வரும். ஆனால் இவை பல்லவா் காலத் தமிழில் வினைமுற்றாக இடம் பெறவில்லை. வழக்கு ஒழிந்த விகுதிகளாக மாற்றம் பெற்றன. மேலும், இடைச்சொற்களில் பல்லவா் காலத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன.

ஆமல் > ஆமே’  என்ற இடைச்சொற்களின் மாற்றத்தைப் பின்வருமாறு காணலாம். வாராமல், போகாமல் என்பவற்றிலுள்ள ‘ஆமல் > ஆமே’  எனத் திருவாசகத்தில் வழங்கப்பட்டுள்ளது.

பிறவாமல் > பிறவாமே (திருவாசகம், 8 : 12)

என்பதில் இடைச்சொற்கள் மாற்றத்தை காணலாம். இதனைப் போன்றே (ஆக> ஆ) ‘ஆக’ என்னும் வினையடை உருபு ‘ஆ’ என மாறுவதை,

கோவணமாக > கோவணமா (திருவாசகம், 12 : 2)

என்ற திருவாசகச் சொற்களில் காணலாம். மேலும், (ஆறு > ஆ) ‘ஆறு’ என்ற உருபு ‘ஆ’  என மாறுவதை,

வியப்புறுமாறு > வியப்புறுமா (திருவாசகம்,12: 2)

கொண்டவாறு > கொண்டவா (திருவாசகம்,12:10)

நஞ்சுண்டவாறு > நஞ்சுண்டவா (திருவாசகம்,31:20)

என்ற சான்றுகளில் காணலாம். இவ்வுருபு மாற்றங்கள் பல்லவா் காலத் தமிழில் மிகுதியாக நடைபெற்றன. சங்கம் மருவிய காலத் தமிழிலிருந்து மொழி வளர்ச்சி அடைந்துள்ள விதத்தை இப்பல்லவர் கால இலக்கண அமைப்புகளிலிருந்து நம்மால் அறிய முடிகின்றது.

உயிரெழுத்துகளில் மாற்றங்கள்
பல்லவர் காலத்தில் உயிரெழுத்துகளில் காணப்படும் மாறுதல்கள் சிக்கல் நிறைந்தவையாகத் திகழ்கின்றன. “சங்க காலம் சங்கம் மருவிய காலம் ஆகிய காலங்களைப் போலவே பல்லவா் காலத்திலும் இ, எ, உ, ஒ, அ ஆகிய ஐந்து உயிர்களும் அவற்றின் இன நெடில்களாகிய ஈ, ஏ, ஊ, ஓ, ஆ ஆகிய ஐந்து உயிர்களுமாகப் பத்து உயிர் எழுத்துகள் காணப்பட்டன. எகர, ஏகாரங்கள் மட்டும் சொல்லின் இறுதியில் இடம் பெறவில்லை.”5 இதனைப் பின்வரும் அட்டவணையில் காணலாம்.



இவ்வாறு உயிரெழுத்துக்களில் உள்ள மாற்றம் இல்லாத் தன்மையைக் கூறியது போலவே, நெடில் குறிலாதல் என்ற மாற்றம் பல்லவா் காலத்தில் முதன்மையாக காணப்படுகின்றன. உயிரெழுத்துகள் தமது மாத்திரையில் குறைந்து ஒலிப்பதை பரவலாக எல்லாச் சான்றுகளிலும் காண முடிகின்றது. அதிலும் குறிப்பாக மெய்களுக்கு அல்லது மெய்ம்மயக்கங்களுக்கு முன்னா் நெட்டுயிர்கள் குற்றுயிர்களாக ஆவது என்பது பல்லவா் காலத்துப் பெரு வழக்காகத் திகழ்ந்தன. கூரம் செப்பேடுகளில் இம் மாற்றங்களை முழுமையாகக் காணலாம்.

‘‘கூரம் செப்பேடு 7 ஏடுகளை (14 பக்கங்கள்) கொண்டது. இதில் 10 பக்கங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. 4 பக்கங்கள் தமிழில் உள்ளன. இதில்தான் பரமேஸ்வரமங்கலம் உருவாக்கப்பட்ட விதம் விவரிக்கப்பட்டுள்ளது.”6 இச் செப்பேட்டில் காணப்படும் தமிழ் எழுத்து மாற்றங்களைப் பின்வரும் அட்டவணையில் காணலாம்.



என்பதில் மாத்திரை அளவுகள் குறைந்து ஒலிப்பதை அறியலாம்.

உயிரெழுத்து மாற்றங்களில் அகரம் இகரமாகும் மாற்றம் பல்லவா் காலத்தில் கவனிக்கத்தக்க மாற்றமாகும்.

    மங்கலம் > மங்கிலம்

    மேலான > மேலின

    கடா > கிடா

இதனைப்போன்றே ஐகாரம் அகரமாகும் மாற்றமும் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் காணத்தகுந்த மாற்றமாகும்.

    ஐந்து > அஞ்சு

    தலை    > தல

    பனைக்காய் > பனங்காய்

மேலே கூறிய உயிரெழுத்து மாற்றங்களுடன் ஏழாம் நூற்றாண்டைச் சோ்ந்த கூரம் செப்பேட்டில் ‘ஐந்தே’ என்பது ‘அயிந்தே’ என்று பேச்சு வழக்கில் குறிப்பிடப் பட்டுள்ளமையும் எண்ணத்தக்கது.

மெய்யெழுத்துகளில் மாற்றங்கள்
ஒரு மொழியை அழியாமல் நிலைநிறுத்தி வைப்பதில் எழுத்து முதன்மை இடத்தைப் பெறுகின்றது. எழுத்தில்லாத மொழி நிலைப்பதில்லை.மொழியைப் போற்றிப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வழங்குவதும் எழுத்தே. அவ்வகையில் இந்தியப் பண்டைய இலக்கிய மொழிகளுள், மிக முற்பட்ட காலத்தே இலக்கியப் படைப்புகள் நிகழ்ந்த மொழி தமிழ் மொழி. இச்சிறப்பு வாய்ந்த தமிழ் மொழி பல்லவா் ஆட்சிக் காலத்தில் பிராகிருத மொழியின் ஆட்சியில் தனது நெகிழ்வுத்தன்மையால் சிறப்புற்றிருந்த நிலையையே பின்வரும் மாற்றங்கள் எல்லாம் எடுத்துரைக்கின்றது.

அவ்வகையில் மெய்யெழுத்துகளில் மாற்றங்கள் என்கையில் மொழி முதல் ‘யகரம் கெடுதல்’ சங்க காலத் தமிழ் மற்றும் சங்கம் மருவிய காலத் தமிழில் தொடங்கி விட்டாலும் மிகுதியாகக் காணப்படுவது பல்லவா் காலத் தமிழிலே ஆகும்.இதனை,

    யாராலும் > ஆராலும்

    யானை > ஆனை

    யாக்கை >ஆக்கை

என்ற சான்றுகளின் வழியே அறியலாம். இதனைப் போன்றே தொல்காப்பியா் காலத்தில் நாவளை ஒலியாக இல்லாதிருந்த யகரமும் றகரமும் வடமொழிச் செல்வாக்கால் பல்லவா் காலத்தில் நாவளை ஒலியாகும் முறைமையை பின் வரும் சான்றுகளில் காணலாம்.

    முற்று    > முத்து

    பற்றேதும்    > பத்தேதும்

    ஆற்றுக்கால் > ஆத்துக்கால்

    சேற்றுநிலம் > சேத்துநிலம்

இதில் நுனியண்ண ஒலியான றகரத்தின் உச்சரிப்பு மாற்றம் பெற்றுள்ள நிலையைக் காண முடிகின்றது. இரட்டை ‘றகரம்’ பல்லின ஒலியாகிய ‘தகரமாகி’ ‘இரட்டைத் தகரமாக’ ஒலிக்கும் முறைமைப், பல்லவா் காலத்தில் அதிகரித்தது. கி.பி.எட்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களிலேயே இம்மாற்றங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டுப் பேச்சுத் தமிழில் ற் ற் > த் த் மாற்றம் அமைந்திருப்பதை இன்றும் காணமுடிகிறது. பல்லவர் காலத்தில் ஏற்பட்ட இம்மாற்றம் தற்காலத்தில் நிலைத்து விட்டதை இதனில் உணர முடிகிறது.

அடுத்ததாக, ‘சகரமாதல்,’ என்ற மெய்யெழுத்தின் மாற்றம் குறித்துக் காண்கையில், தகரம் இரட்டித்து வருகையில் அதன் முன்னா் இடையண்ண ஒலி அல்லது முன்னுயிர் வருகையில் அண்ணச் சாயல் பெற்று சகரமாகும் முறைமையைக் காணலாம். இதனை,

    வித்தை > விச்சை (திருவாசகம் - 6:21)

    பித்தேற்றி > பிச்சேற்றி (திருவாசகம் - 8:5)

    பித்தன் > பிச்சன் (திருவாசகம் - 6:9)

என்ற சான்றினால் அறியலாகின்றது. பல்லவா் காலத்தில் மிகுதியாகக் காணப்பட்ட மற்றொரு மெய்யெழுத்து மாற்றம் ‘நகர,னகர’ மெய்களின் ஒருங்கிணைவு. இதனை பின்வரும் கூற்றினில் அறியலாம்.

“நுனி நா பல் மூக்கொலியான ‘நகரமும்’, நுனிநா நுனியண்ண மூக்கொலியான ‘னகரமும்’ ஒன்றாகியதைக் காணமுடிகின்றது. இம்மாற்றத்திற்கான அடிப்படை தொல்காப்பியா் காலத்திலேயே காணப்பட்டன. ஆயினும் நகரத்திற்குப் பதிலாக னகரம் பத்து விழுக்காடு எழுதப்பட்டுள்ளது. ஆனால் னகரத்திற்குப் பதிலாக ஞகரம் இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவாகவே எழுதப்பட்டள்ளது.”7.

ஆக, ‘னகரம் நகரத்தின்’ இடத்தை பிடித்துள்ள முறைமை புலப்படுகிறது. இக்காலக் கட்டத்தில்தான்  ‘நகரம்’ மொழிக்கு இறுதியில் வருவது மறைந்தது. எனவே, சொல்லுக்கு முதலில் ‘ நகரமும்’ பிறவிடங்களில் ‘னகரமும்’ எழுதும் மரபு பல்லவர் காலத்தில் தான் தொடங்கியிருக்கலாம் என்று கூற இயலும். இதற்கு பின்வருவனவற்றைச் சான்றாகக் கூறலாம்.

    ‘நல்லானை’ - (அப்பா் தேவாரம் 6)

    ‘நம்பன்’ - (அப்பா் தேவாரம் 7)

என்பவற்றின் மூலமாக ‘னகர, நகர’ மெய்களின் ஒருங்கிணைவு பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது.

தொல்காப்பியா் காலத்தில் ‘நா’ வளை ஒலியாக இல்லாதிருந்த ‘டகரம்’ வடமொழிச் செல்வாக்கால் ‘நா’ வளையொலியாகிறது. இதனை தமிழ் ‘டகரத்தை’ சமஸ்கிருத வரிவடிவத்தில் எழுதியிருக்கும் முறையில் காணலாம். “தமிழ் ஒலியன் அமைப்பில் ஏற்பட்ட மற்றொரு முக்கியமான மாற்றம் றகர மெய்யும் ரகர மெய்யும் ஒன்றாகியதாகும். இம்மாற்றதிற்கானச் சுவடு பத்தாம் நூற்றாண்டில் தான் கிடைக்கிறது. ஆனால் ஒன்பதாம் நூற்றாண்டின் துவக்கதிலேயே தொடங்கியிருக்கவும் இடம் உண்டு.

    மேற்கு > மேர்க்கு

    எவற்படி > ஏவா்படி

    காற்களிறு > கார்க்களிறு

    தறை    > தரை”8

இதனில் முதல் சான்று பத்தாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றமாகும். நான்காம் இடத்தில் உள்ள சான்று பதினோரம் நூற்றாண்டில் உருவாகிய மயக்கமாகும். இவ்வாறாக மொழி நிலையில் விரும்பியபடி சொற்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள முறைமையும் இதில் புலப்படுகின்றது.

தமிழ் பிரமி கல்வெட்டுச் சான்றுகள்
கி.பி.3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி நான்காம் நூற்றாண்டு வரை தமிழ் பிராமியில் எழுதப்பட்டு வந்த கல்வெட்டுச் சான்றினை இங்கு காணலாம். தொல்காப்பியம் புள்ளியை ‘எகர, ஒகரங்களுக்கும்’ மெய்யெழுத்துக்களுக்கும் குறிப்பிடுவதால் தொல்காப்பியா் காலத்தில் புள்ளி வழக்கில் இருந்தமைப் புலப்படுகின்றது. இதற்குப் பின்வரும் ‘புகழூர் தமிழ் பிராமி கல்வெட்டினைச்’ சான்றாகக் கூறலாம்.

“கொஆதன செலலிருமபொறை மகன
பெருஙகடுஙகொன மகன ளங
கடுஙகொ ளஙகொ ஆக அறுததகல”

இதனில் புள்ளியோ ‘எகர’, ‘ஏகார’, ‘ஒகர’, ‘ஓகார’ வேறுபாடோ கல்வெட்டில் இல்லாத முறைமையைக் காண முடிகின்றது. அத்துடன் இகரமும் விடுபட்டுள்ள முறைமையை அறியலாம்.

 திருந்திய உரை :

“கோஆதன் செல்லிரும்பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் [இ]ளங்
கடுங்கோ [இ]ளங்கோ ஆக அறுத்தகல்”

இவ்வாறு பல்லவா்கள் கொண்டு வந்த பிராமி எழுத்து முறை தமிழுக்குரியதாக இல்லை. “பிராகிருதத்தின் ஒலியியலும் தமிழின் ஒலியியலும் வேறானவை. தமிழில் கூட்டெழுத்துக்கள் அதிகம் கிடையாது, சொல்லிறுதி தனிமெய்களும் அதிகம். பிராகிருத்ததில் மகரத்தை தவிர்த்து வேறு சொல்லிறுதி மெய்கள் வருவதில்லை. அதனால் அசோக பிராமியில் தனி மெய்யினை (க், ங் முதலியவை) குறிக்க இயலாது, மெய்யெழுத்துக்கூட்டுகளை வேண்டுமென்றால் கூட்டெழுத்துக்களாக எழுத இயலும் (உதாரணமாக, க்ய, க்த ஆகியவற்றை எழுதலாம், ஆனால் க் என்ற தனி மெய்யை எழுத முடியாது) .  எனவே, பிராமியை தமிழுக்கு ஏற்றார்போல் செய்ய பல்வேறு முயற்சிகள் நிகழ்ந்தன.”9

மேற்கூறிய கருத்தினைக் கொண்டு,  தமிழ் பிராமி மூன்று கட்டங்களை உடையாதாக அறியப்படுகிறது, முற்கால தமிழ் பிராமியில், எழுத்தில் உள்ளார்ந்த ‘அகரம்’ கிடையாது. ஆகாரக்குறி ‘அகரம்’, ‘ஆகாரம்’ இரண்டையும் குறித்தது. இடைக்கால தமிழ் பிராமியில், ஆகாரக்குறி நிலை பெற்றது. பிற்கால தமிழ் பிராமியில் மெய் எழுத்துக்களையும் (மற்றும் எகர, ஒகரங்களையும்) குறிக்கப் புள்ளி உருவாக்கப்பட்டது. இம் மூன்று கால கட்டத்தையும் குறிக்கும் வகையில் பின் வரும் சான்று

‘நிகழ்காலம்’ என்ற சொல் எழுதப்பட்டுள்ள விதம்:

                    முற்கால முறை     : நிகாழகாலாம

                    இடைக்கால முறை  : நிகழகாலம

                    பிற்கால முறை     : நிகழ்காலம்

இதன் மூலமாக பிராமி எழுத்துக்கள் எங்ஙனம் தமிழ் மொழியில் ஊடுருவி தமிழ் பிராமி கிரந்த மொழியாக பரிமாற்றம் பெற்றன என்பனவற்றையே இப்பகுதிகள் எடுத்துரைக்கின்றன.

தமிழ் பிராமி கல்வெட்டுக்களும் கருத்தாக்கங்களும்
வடமொழிச் சொற்களையும் சுலோகங்களையும் எழுதவும் தமிழ் மொழிச் செய்திகளைச் சொல்லொலிகள் குறையாமல் எழுதவும் பல்லவ அரசு படைத்து, நாட்டில் நடைமுறைப்படுத்தியதால், அப்புதுமை பெற்ற எழுத்துக்கள் ‘பல்லவ கிரந்த எழுத்துக்கள்’ என்ற பெயா் பெற்றுள்ளன. காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு அரசாட்சி செய்த பல்லவா்கள் தங்கள் ஆட்சியில் வெளியிட்ட கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துக்களையே பயன்படுத்தியுள்ளனா்.

அத்தகைய தமிழ் பிராமி கல்வெட்டுகளின் மொழி அமைப்பு குறித்த கருத்தாக்கங்கள் என்று காண்கையில் பிழையான சொல்லும் தொடரும் காணப்படுவதுடன், செய்தியினை அரை குறையாகத் தெரிவிப்பனவாக இருக்கின்றன என்றும் பின் வரும் கருத்தாக்கங்களும் முன்வைக்கப்படுகின்றன.

    “எழுத்துப் பிழைகளோடு சொற்கள் பெரும்பான்மையும் உள்ளன.

    வடிவமைப்பில் எழுத்துக்கள் ஒன்று போல் இல்லை.

    ஓரெழுத்து வடிவில் பெரியதாக வெட்டப்பட்டு அடுத்த எழுத்து அதனடியில் குன்றிய வடிவில் வெட்டப்பட்டுள்ளது

    வரிசையாக சொற்கள் அமையாமல் ஏற்றத்தாழ்வுடன் உள்ளன.

    ‘ச - வ, ல - ப, ந - ன’ ஆகிய எழுத்துகள் அடிப்படை வடிவில் ஒன்று பொல் இருப்பதால் கல்லில் வெட்டும் போது மாற்றம் பெற்றுள்ளன. எனவே வேறுபட்ட தொடா்களாகப் படித்துள்ளனா்.

    ‘நி – னி’ எழுத்துக்களின் தலைப்பில் பெறும் கோடு திரிபான வடிவங்களில் உள்ளன.

    ‘இ-எ’ எழுத்துக்களுக்கு ஒரே மாதிரியான வடிவங்களே கையாளப்பட்டுள்ளது.

    ‘ண’ எழுத்து பல்வேறுபட்ட வடிவங்களில் உள்ளன.

    விரும்பிய கருத்தினைத் தெரிந்த பிராமி எழுத்துக்களால் சொற்களாகப் படைத்துள்ளனா்.”10

மேற்கூறிய கருத்துகள் மூலமாகத் தமிழ் பிராமி கல்வெட்டின் கருத்தாக்கங்கள் புலப்படுகின்றன. பல்லவா் காலத்தில் மொழிக்கலப்பு மக்களின் நம்பிக்கையின் வழியாக அதாவது சமயம் என்கின்ற முறைமையின் மூலமாக அரங்கேற்றம் அடைந்தமைப் புலப்படுகின்றது. நம்பிக்கையின் வழியே உள்வந்த மொழிக்கலப்பு நீண்ட காலம் நிலைத்திருக்கும் வாய்ப்பு உண்டு. ஆயினும் பல்லவா்காலத்தில் சைவ வைண அடியவா்களால் தமிழ் மொழி தனது சிறப்பினை இழக்காமல் மேன்மை அடையும் வழியை அடைந்தது என்று கூறலாம்.

தொகுப்புரை
இடைக்காலத்தில் பக்தி இயக்கத்தால் தமிழ்மொழி புதுப்பொலிவை அடைந்தது என்பதற்கு இலக்கியங்களே நற்சான்று. தமிழ்மொழி, மக்கள் மொழியாக மாறியது. பல்லவர் காலத்தில் அரசியல், சமூகம், பண்பாடு, இலக்கியம் ஆகிய எல்லாவற்றிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இவை தமிழ் மொழியிலும் பல மாற்றங்கள் ஏற்படக் காரணமாய் அமைந்துவிட்டன. பல்லவர் காலத் தமிழ்மொழி எழுத்தளவில் மட்டுமன்றி இலக்கண அளவிலும் பல மாற்றங்களுக்கு உள்ளானது. பல்லவா் காலத் தமிழ் மொழியில் வடமொழிச் சொற்கள் பல கலந்தைமையால், தமிழ் மொழி நெகிழ்வுற்றது. சொல்வளம் செறிவடைந்தன. இதனைப் பதிலீடு பெயா்களின் மாற்றங்கள், வழக்கு ஒழிந்த விகுதிகளும் மாற்றங்களும், உயிரெழுத்துகளில் மாற்றங்கள், மெய்யெழுத்துகளில் மாற்றங்கள், தமிழ் பிரமி கல்வெட்டுச் சான்றுகள், தமிழ் பிராமி கல்வெட்டுக்களும் கருத்தாக்கங்களும், வாயிலாகப் பல்லவா் காலத் தமிழ் மொழியின் நிலைப்பாடுகள் எங்ஙனம் காணப்பட்டன என்பனவற்றை முழுமையாக அறிந்து கொள்ள முடிகின்றது.

குறிப்புகள்

1.  இந்து ஆங்கில நாளிதழ், ஐராவதம் மகாதேவன், “An epigraphic perspective on the antiquity of Tamil”, நாள்: 24/6/2010.

2. டாக்டா்.சு.சக்திவேல்,தமிழ் மொழி வரலாறு,ப.163.

3. http://surl.li/jnrye - முனைவா் நா.கலைவாணி, பல்லவா்காலத் தமிழ்.

4. சங்கத்தமிழ் – I, பக்.35-36.

5. முனைவா் நா.கலைவாணி, இடைக்காலத் தமிழ் , ப.50.

6. இரா.நாகசாமி,கலவெட்டியல்,ப.110

7. http://surl.li/jopnq - வினோத்ராஜன்,தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளா்ச்சி,2011.

8. தெ.பொ.மீ., தமிழ் மொழி வரலாறு,ப.187.

9. வினோத்ராஜன், தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளா்ச்சி,2011. (http://surl.li/jopnq)

10. சி.கோவிந்தராசனார், தமிழெழுத்தின் வரிவடிவம்,பக்.47- 48.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.