- வாலி : கம்போடியச் சிற்பம். -

முன்னுரை

கிட்கிந்தையின் மன்னன் வாலி. வானரக் குலத் தலைவன். சூரிய பகவானின் புத்திரன். சிறந்த சிவபக்தன். பாற்கடலைத் தனியாகக் கடையும் வல்லமை உடையவன். போரில் தனது எதிரில் நிற்பவர்களின் வீரத்தில் பாதியைத் தனக்கு வர, வரம் பெற்றவன். இலங்கை வேந்தன் இராவணனையே, தன் வாலில் கட்டித் தூக்கிய வலிமை பொருந்தியவன். நூல் பல கற்ற சிறப்புடையவன். சிறப்புகள் பல பெற்றவனானாலும் தன் வீரத்தில் தற்பெருமைக் கொண்டவன். மனைவியின் மேல் பேரன்பு கொண்டவன். வரம் பல பெற்றாலும் மதங்க முனிவரிடம் சாபமும் பெற்றவன். கோபம், நம்பிக்கையின்மை, தம்பி மனைவியைக் கைப்பற்றுதல், பிடிவாதம், பிறரை மதிக்காதத் தன்மை, தன் வீரத்தின் மீது கொண்ட கர்வம், வரபலத்தால் தன்னை யாராலும் வெல்லவே முடியாது என்ற இறுமாப்பு, யார் பேச்சையும் கேட்காதத் தன்மை போன்ற சில தீய குணங்களால் வீழ்ச்சியைக் கண்டவன் வாலி. இராமபிரானின் அம்பு பட்டதால், செய்த பாவத்தினின்று விடுபட்டு அமரரானான். இராமனின் அம்பு பட்டதால் மனமாற்றம் ஏற்பட்டு, இறக்கும் நிலையில் தம்பி சுக்ரீவனையும், மகன் அங்கதனையும் இராமனிடம் அடைக்கலப் படுத்தி விட்ட பின்பே, உயிர்த் துறந்தான். தம்பி சிலநேரம் மது அருந்திவிட்டு தீமை செய்தாலும் அவன் மேல் அம்பினை எய்து விடாதே என்றும், இராமபிரானிடம் கேட்டுக்கொள்கிறான்.அத்தகைய வாலியின் மாட்சியையும், வீழ்ச்சியையும் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்

வாலியின் சிறப்பு

தேவர்களுடன் சேர்ந்து, அசுரர்களின் எதிரில் நின்று மத்தாய் இருந்து சுழல்கின்ற மந்திர மலையின் வடிவம் தேயவும், சீறும் தன்மை கொண்ட வாசுகி எனும் பாம்பின் நடுவுடலானது தேய்ந்து போகவும், திருப்பாற்கடலை முற்காலத்தில் தான் ஒருவனாய் நின்று கடைந்த தோள் வலிமை உடையவன். (நட்புக் கோட்படலம் 115) பூமியும், நீரும், தீயும் காற்றும் ஆகிய அழிவற்ற பூதங்கள் நான்கும் ஒன்று கூடியது போன்ற வலிமையுடையவன். அலைகளையுடைய எல்லைப்புறக் கடல்கள் சூழ்ந்துள்ள சக்கரவாளகிரி என்னும் மலையிலிருந்தும் இங்கு இருக்கும் மலையில் தாண்டும் வன்மையுடையவன். (நட்புக் கோட் படலம் 116) அவன் போரில், தன்னை எதிர்ப்பவர் வந்தால் அவர்களிடம் உள்ள வலிமையில் பாதி அளவைத் தான் அடையும்படியான வரத்தைப் பெற்றவன். எட்டுத்திக்குகளின் எல்லை வரையும், நாள்தோறும் சென்று அங்குள்ள ’அட்ட மூர்த்தி’ எனப்படும் சிவபெருமானின் திருவடிகளை வணங்கும் அன்பை உடையவன்.

"கிட்டுவார் பொரக் கிடைக்கின் அன்னவர்
பட்ட நல் வலம் பாகம் எய்துவான்
எட்டு மாதிரத்து இறுதி நாளும் உற்று
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்"
(நட்புக் கோட் படலம் 117)

அந்த வாலியின் வேகத்திற்கு முன்னால் காற்றும் செல்லாது. அந்த வாலியின் மார்பிலே முருகப்பெருமானின் வேலும் நுழையாது. வெற்றியை உடைய அந்த வாலியின் வால் செல்லாத இடத்திலே அன்றி, வால் சென்ற இடத்திலே அந்த இராவணனின் ஆட்சியும், வெற்றியும் செல்லாது. (நட்புக் கோட் படலம் 118) அந்த வாலி இடம் விட்டு எழுவானால் அந்த அதிர்ச்சியால் மேரு முதலிய பெரிய மலைகள் எல்லாம் வேரோடும் இடம் விட்டுப் பெயர்ந்து போகும். அவருடைய பெரிய தோள்களினாலே பெரிய மேகமும், வானமும், சூரிய சந்திரர்களும், மலைகளும் மறைந்து போய்விடும். (நட்புக்கோட் படலம் 119) அவன் பூமியைத் தன் கொம்பால் பெயர்த்து மேல் எடுத்த வலிய திருமாலாகிய பன்றியும், பழங்காலத்தில் கடலில் கிடந்த திருமாலாகிய பெரிய ஆமையும், சமமாகக் கொள்ளத் தக்கவன். இரணியனின் மார்பைப் பிளந்து அழித்த நரசிம்மமே என்றாலும், அந்த வாலியின் தோள்களைக் கட்டுப்படுத்தி அடக்கக்கூடிய வலிமை உடையதோ? (நட்புக் கோட்படலம் 120) பூமியைத் தாங்கும் இந்தக் கிட்கிந்த மலையைப் பொருந்தியுள்ள வாலியானவன் நடக்கும் பூமியில் பாரம் மிகுதல் காரணமாக ஆயிரம் என்னும் எண்ணுள்ள மிகவும் நீண்ட தன் முடிகளைப் பரப்பிக் கொண்டு ஆதிசேஷன் கீழே இருந்தபடியே வாலி நடக்கும் இடமெல்லாம் நடந்து நாள்தோறும் இவ்வுலகத்தைத் தாங்குகிறான். வலிமையையும் வெற்றியையும் உடையவனே கடல் ஒலிப்பதும், காற்று உலவுவதும் வலிமையுடைய சூரியர்கள் தேரில் உலவுவதும் அந்த வாலி சினம் கொள்வானே என்ற அச்சத்தால் தான் அதுவன்றி பிற வகையால் அவை ஆவனவோ?

70 வெள்ளம் என்னும் கணக்கை உடைய குரங்குப் படையை உடையவன். இத்தகைய அவனது வலிமையின் மிகுதியால் எல்லா உயிர்களுக்கும் அவன் கருத்துக்கு வேறுபடாது மனம் ஒன்றி வாழ்கின்றன. அந்த வாலியின் கர்ஜனையாகிய குரலுக்கு என்றும் அஞ்சுவதால், அவன் வாழும் இடத்துக்கு எதிராக மேகங்கள் இடித்து ஒலியை எழுப்பா. வெற்றி மிக்க கொடிய சிங்கங்கள் தாம் வாழும் மலைக் குகைகளில் கர்ஜிக்க மாட்டா. வலிமை யுடைய கொடிய காற்றும் மென்மையான தழைகள் நடுக்கம் கொள்ள அவற்றின் பக்கத்தில் நெருங்காது. தன் உடலில் ஓர் உறுப்பாகக் கொண்ட வாலால், வலிய இராவணனின் 20 தோள்களை ஒன்றாகச் சேர்த்துப் பிணைத்து வாலி கட்டிய அந்நாளில், அவன் போய்ச் சேராததும், அந்த இராவணனின் இரத்த நீர் சிந்தாததுமான உலகங்கள் வேறு யாவை உள்ளன? ( வாலி பிணித்த இராவணனுடன் , வாலி எல்லா உலகங்களுக்கும் செல்ல, அப்போது இராவணனின் உடலின் நின்று இரத்தம் எங்கும் சிந்தியது.

"மொய்க்கொள் வாலினால் மிடல் இராவணன்
தொக்க தோள்உறத் தொடர்ப்படுத்த நாள்
புக்கிலாதவும் பொழி அரத்த நீர்
உக்கிலாத வேறு உலகம் யாவதோ"
(நட்புக் கோட் படலம் 125)

துந்துபியைக் கொன்றவன்

துந்துபி இரு கொம்புகளைத் தலையில் கொண்டவன். மந்திர மலைப் போன்றத் தோற்றமுடையவன். அவன் திருமாலிடம் சென்று போர் செய்ய அழைக்க, அவர் தன்னால் இயலாது என்றும், உன் திறமைக்கு நீ சிவ பெருமானுடனே போரிட வேண்டும் என்று கூறினார். அவன் நேராகச் சென்று சிவனைப் போருக்கு அழைக்க, அவர் நீ தேவர்களுடன் போரிடு என்றார். அவன் தேவர்களைப் போருக்கு அழைக்க, அவர்கள் போருக்குரிய வாலியிடம் செல்வாயாக என்றனர். உடனே நேரடியாகச் சென்று வாலியைப் போருக்கு அழைத்தான். இருவருக்கும் போர் நடைபெற்றது.

வாலி மேக மண்டலத்தைத் தாண்டிக், கதிரவன் இருக்கும் இடத்தையும், தாண்டி, மற்றும் உள்ள வானவர்கள் வாழ்கின்ற மண்டலங்கள் எல்லாம் கடந்து மற்ற மேலிடங்கள் எல்லாவற்றையும் கடக்குமாறு, உறுதியான வலியக் கையால் அந்தத் துந்துபியை இழுத்து வீசி எறிந்தார். அப்போது அவ்வரக்கனின் உயிர் மேல் உலகத்திற்குச் செல்ல, உடல் இம்மண்ணுலகத்தில் விழுந்தது. இறுதியில் வாலியே வென்றான்.(துந்துபிப் படலம் 190)

மாயாவியைக் கொன்ற வாலி

மாயாவி என்ற அரக்கன் வாலியைப் போருக்கு அறைகூவி அழைத்தான். வாலியும் அவனோடு போரிடச் சென்றான். வாலியின் வலிமைக்கு முன் நிற்க முடியாத மாயாவி, ஒரு பிலத்துக்குள் சென்று, புகுந்து கொண்டான். வாலி, சுக்ரீவனிடம்,’ நான் பிலத்துக்குள் சென்று, மாயாவியைக் கொன்று வருவேன். அதுவரை, நீ வாசலில் காவலாக இரு’ என்று கூறிவிட்டு, உள்ளேப் புகுந்தான். 28 மாதங்களாகியும் வாலி வெளியில் வராததால், சுக்ரீவன் வருந்தினான். வாலி இறந்திருக்க வேண்டும் என்று கருதி, அமைச்சர்கள் சுக்ரீவனை அரசாட்சியை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தினர். ஆனால் சுக்ரீவன் இது குற்றமாகும் என்று கூறி, மறுத்தான். நானும் பிலத்துக்குள் சென்று, தமையனை மீட்டுவருவேன். மாயாவி அண்ணனைக் கொன்றிருந்தால், நான் அவனைக் கொல்வேன் என்றான். அமைச்சர்கள் சுக்ரீவனுக்குக் கடமையை உணர்த்தி, அரசாட்சியை வற்புறுத்தி ஏற்கச் செய்தனர். மாயாவி வெளியே வராமல் இருக்க, பிலத்தின் வாயை, வானரர்கள் பாறைகளை வைத்து மூடினர். மாயாவியைக் கொன்றுவிட்டு வெளியே வந்தான் வாலி.

வாலியின் கோபம்

வெளியே வந்த வாலி, பிலத்தின் வாய்ப்பகுதி பாறைகளால் மூடப்பட்டிருப்பதைக் கண்டு, தம்பி காவல் செய்த முறை நன்று என்று, சினம் கொண்டு, பாறைகளை உதைத்துத் தள்ளிவிட்டு வெளியே வந்தார். சுக்ரீவன் அவன் அடியில் விழுந்து வணங்கினான். விருப்பமில்லாமல் அரசாட்சியைத் தான் ஏற்றுக்கொள்ள நேர்ந்த நிலையை விளக்கினான். இருப்பினும் அரசாட்சியை ஏற்றுக் கொண்டது தவறுதான் என்று கூறி, தன்னைப் பொறுத்தருள வேண்டினான். இது எதையும் நம்பாத வாலி, கோபத்தில் அவனைத் திட்டினான். அவனை அடிக்கத் தொடங்கினான். சுக்ரீவன் அதைத் தாங்க முடியாமல் தப்பி ஓடினான். வாலியும் விடாது பின் தொடர்ந்து சென்று, அவனைப் பிடித்துக் கொல்ல முயன்ற போது, சுக்ரீவன் அவனிடமிருந்து தப்பி, வாலி வர முடியாத ரிசிய முக பருவதத்தில் ஒளிந்து கொண்டான்.

தம்பி மனைவியைக் கவர்தல்

திரும்பி வந்த வாலி, சுக்ரீவனுடைய மனைவியான ருமையை விரும்பி கவர்ந்து கொண்டான்.

இராமன், வாலி மேல் அம்பினைச் செலுத்தல்

சுக்ரீவனுக்குத் துணையாக இராமன், வாலியின் மேல் மறைந்திருந்து அம்பை விடுத்தான். வாலி, இராமனிடம் உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களுக்கு விதித்ததைப் போல, ஒருவனை மணந்து அந்த ஒருவனையேப் புணரும் கற்பு நெறியை பிரம்மா தங்களுக்கு விதிக்கவில்லை என்றும், நேர்ந்தால் நேர்ந்தபடியே துய்ப்பவர்களாகவேத் தங்களைப் படைத்திருக்கிறான் என்றான்.

"ஐய நுங்கள் அருங்குலக் கற்பின் அப்
பொய் இல் மங்கையருக்கு ஏய்ந்த புணர்ச்சி போல்
செய்திலன் எமைத் தேமலர் மேலவன்
எய்தின் எய்தியதாக இயற்றினான்"
(வாலி வதைப் படலம் 338)

தான் செய்த தவற்றுக்கு போலியாகக் காரணங்கள் கூறினான் வாலி. ஏசும்போது தர்மம் பற்றியும் மனுநீதியைப் பற்றியும், ஒழுக்கம் பற்றியும் தொன்மையான நன்னூல் பற்றியும், அறம் பற்றியும் குறிப்பிடுகிறான்.

தற்பெருமை கொண்டவன் வாலி

வரம்பிலா ஆற்றல் பெற்றவன். இருப்பினும் இந்த ஆற்றலினால் விளைந்த செருக்கு, அவனது அறிவையும் மறைக்கிறது. இராமனைத் துணையாகப் பெற்ற சுக்ரீவன் வந்து, அறைகூவல் விடுத்தபோது, மனைவி தாரைக் கூறியதையும் மதிக்காமல், போருக்குச் சென்றான்.

"ஆற்றல் இல் அமரரும் அவுணர் யாவரும்
தோற்றனர் எனையவர் சொல்லற் பாலரோ
கூற்றம் என் பெயர் சொலக் குலையும் ஆர் இனி
மாற்றவருக்கு ஆகி வந்து எதிரும் மாண்பினார்"
(வாலி வதைப் படலம் 254)

அவன் கொண்ட செருக்கு

மாற்றான் வலிமையை அறிய விடாமல் அவன் கொண்ட செருக்குத் தடுத்து விடுகிறது. சுக்ரீவனுக்குத் துணையாக இராமன் வந்ததை ’துண்ணிய அன்பினர்’ தாரையிடம் உரைத்துள்ளனர். நாட்டின் அரசன் வாலி. அதை முதலில் அவன் தான் அறிந்திருக்க வேண்டும். அப்படி என்றால் வாலிக்குத் துண்ணிய அன்பினர் இல்லையோ? துண்ணிய அன்பினரை அவன் இழந்திருக்க வேண்டும். அவனது வலிமையும், சினமும் அமைச்சர்களுக்கும், குடிமக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியதால், அவனை யாரும் நெருங்கிச் செல்லவில்லை. சுக்ரீவனை, வாலி துரத்தி அடித்ததைக் கண்ட வானரக் குலமே அஞ்சி குடல் கலங்கியது என்பதை அனுமன், இராமனிடம் கூறினான்.

"அடல் கடந்த தோள் அவனை அஞ்சி வெங்
குடல் கலங்கி எம்குலம் ஒடுங்க முன்
கடல் கடைந்த அக்கரதலங்களால்
உடல் கடைந்தனன் இவன் உலைந்தனன்"
(நட்புக் கோட் படலம் 141)

சொல்லின் செல்வனான அனுமனும், சுக்ரீவனுடன் வெளியேறினான். அவனால் கூட, வாலியிடம் உரைக்க முடியவில்லை.

அமைச்சரவையில் விளக்கம்

சுக்ரீவன் நடந்தது அனைத்தையும் கூறியும், அவனை வாலி நம்பவில்லை. தன்னுடைய அமைச்சரவையை விசாரித்துத் தெரிந்தி ருக்கலாம். அதையும் அவன் செய்யவில்லை. வாலி என்றால் அமைச்சரவைக்கும் பயமே. அவர்களும் நடந்ததை வாலியிடம் கூறவில்லை .யார் பேச்சையும் கேட்காதவனாகவும், இரக்கமில்லாதவனாகவும் நடந்து கொள்கிறான். அரசனாக இருப்பான் செருக்கும், சினமும் சிறுமையாகிய காமமும் கடிய வேண்டுவனவாகிய குற்றங்களாகும்.

"செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து"
(திருக்குறள் 431)

மதங்க முனிவர் தந்த சாபம்

வாலி, அந்தத் துந்துபியை இரத்தம் சொட்ட சொட்ட தூக்கி வீசி எறிந்தான். அந்த உடல் பம்பை நதிக்கரையில் உள்ள மதங்க முனிவர் வழிபாட்டிற்குச் சுத்தப்படுத்தியிருந்த இடத்தை அசிங்கப்படுத்தியதோடு இரத்தத் துளிகள் அவர் மேலும்பட்டது. உடனே கோபம் கொண்ட முனிவர் தன் ஞானதிருட்டியால், இந்த உடலை எறிந்தவன் வாலி என்பதை அறிந்து ’என் ஆசிரமத்தைச் சுற்றி, ஒரு காத தூரம் சுற்றளவுக்குள்ள இடத்தில், வாலி வரக்கூடாது அப்படி வந்தால், தலை வெடித்து இறந்து விடுவான்’ என சபித்தார்.

"எந்தை மற்று அவன் எயிறு அதற்குமேல்
அந்தகற்கும் ஓர் அரணம் இல்லையால்
இந்த வெற்பின் வந்து இவன் இருந்தனன்
முந்தை உற்றது ஓர் சாபம் உண்மையால்"
(நட்புக் கோட் படலம் 143)

வாலியைக் கண்ட இராமனின் கூற்று

இராமன் , இலட்சுமணனை நோக்கி, ஐயனே நீ நன்றாகக் காண்பாயாக. அசுரர்களும், தேவர்களும் இருக்கட்டும். இவ்வுலகத்தில் வெவ்வேறாக உள்ள எந்தக் கடல்தான், எந்த மேகம்தான், எந்தக் காற்று தான், கொடிய எந்தத் தீ தான் இந்த வாலியின் உடலை ஒக்கும் என்று வியந்து கூறினான்.

வாலி, இராமனைப் பழித்தல்

இராமனிடம், வாலி என்ன நினைத்தாய்? என்ன செய்தாய்? என்று பழிப்பவனாய் சொல்லத் தொடங்கினான். தசரதனின் மகனே, பரதனின் அண்ணனே, மற்றவரைத் தீயவற்றைச் செய்யாமல் காத்து, தான் தீய செயல் செய்தால், அது குற்றமற்றது ஆகிவிடுமோ? உலகத்துக்குத் தாயாகியிருக்கும் தன்மையை அல்லாது, நட்பு குணத்தையும், அறத்தையும் மேற்கொண்டு நிற்பவனே, மேன்மையான குணம் நின்னுடையது. சிறந்த கல்வி நின்னுடையது. வெற்றி நின்னது. பொருந்திய நற்குண, நற்செயல்கள் நின்னுடையவை. இந்த உலகத்தைப் பாதுகாக்கும் மேன்மை நின்னுடையது. இங்ஙனமிருக்க, எல்லாம் அறிந்திருந்தும் எல்லாவற்றையும் மறந்ததுபோல அந்தத் திண்மைகள் எல்லாம் கலங்குமாறு நீ இப்படிச் செய்வது நல்லதோ?

ஜனகன் மகளான சீதையை, அமுதம் போன்ற மனைவியைப் பிரிந்த பின்பு, செய்யும் செயலில் தடுமாறினாய் போலும்.

"கோ இயல் தருமம் உங்கள் குலத்து உதித்தோர் கட்கு எல்லாம்
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய் உடைமை அன்றோ
ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை"
(வாலி வதைப்படலம் 312)

அரக்கர் நினக்கு ஒரு தீமையைச் செய்தால், அதற்காகக் குரங்குகளின் கூட்டத்துக்கு மன்னனான ஒருவனைக் கொல்லுமாறு மனுவினால் செய்யப்பட்ட அறநூல் கூறியது உண்டோ? நினக்கே உரியதான அருளை எங்கே சிந்தி விட்டாய். என்னிடம் எந்தப் பிழையைக் கண்டாய். பெரும் பழியை நீ ஏற்றுக் கொண்டால், புகழை ஏற்க வல்லவர், வேறு யாவருளர் என்று பலவாறாக வாலி, இராமனைப் பழித்துரைத்தான்.

ராமனிடம், வாலி வாக்குவாதம்

அம்பு பட்டதால் ஏற்பட்ட வலியினால் வாலி துன்பப்பட்டான். அவன் இராமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். வாலியின் கேள்விகளுக்கு விடையளிக்கும் படியாக இராமன், அடைக்கலமாக வந்த சுக்ரீவனை ஏற்றுக்கொள்ளாமல், அமைச்சர்களின் விருப்பத்திற்கே அரச பதவியை சுக்ரீவன் ஏற்றான். அதனை உன்னிடம் வந்து கூறி, அதற்காக மன்னிப்பும் கேட்ட பிறகும், அவனை நீ துரத்திச் சென்று, கொல்லும் நோக்குடன் அடித்தாய், அவன் மனைவி ருமையும் நீயேக் கவர்ந்து கொண்டாய் என்று இராமன், வாலி மேல் குற்றம் சாட்டினான்.

வாலியின் நிலை

வாலி, துன்பத்தால் மாறிய மனதைக் கொண்டவராய் அறநெறி அழியுமாறு, நீ ஒரு செயலை செய்ய மாட்டாய் என்பதை, மனதில் எண்ணி அடங்கி, இராமனைத் தலையால் வணங்கிச் சொல்லலானான். நல்ல வழியின் படி நீ நோக்கும் நன்முறையை, நாயைப் போன்ற எளியவரான எங்களால் குற்றம் இல்லாமல் அறிய முடியுமோ, எம் தீமையைப் பொறுத்துக் கொள்வாயாக என்றான்.(வாலி வதைப் படலம் 352)

தம்பி மேல் கொண்ட பாசம்

உன்னிடம் வேண்டிப் பெறக்கூடியது ஒன்று உண்டு. அது யாது என்றால், என் தம்பி சுக்ரீவன் மதுவைக் குடித்து அறிவு மாறுபடும் போது, தீமை செய்வானானால் அவன் மீது சினம் கொண்டு, இப்போது என் மீது செலுத்திய அம்பாகிய எமனைச் செலுத்தாதிருக்க வேண்டும் என்று வேண்டினான்.

"தீவினை இயற்றுமேனும் எம்பிமேல் சீறி என்மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான்"
(வாலி வதைப் படலம் 360)

அனுமனின் ஆற்றல் குறித்தும் இராமனிடம், வாலி உயர்வாகப் பேசினான்.

தம்பிக்கு அறிவுரை வழங்கல்

சுக்ரீவனைக் கட்டி அணைத்துக்கொண்டு, தம்பி உனக்கு நான் சொல்லக்கூடிய நன்மை ஒன்று உள்ளது. அதைக் கேட்டறிந்து, உள்ளத்தில் கொண்டு நடப்பாயாக. என் இறப்புக்காக நீ வருந்த வேண்டாம் என்றான். இராமன் பரம்பொருள். அவன் கட்டளையை ஏற்று, உள்ளத்தில் சஞ்சலம் ஏற்படாதபடி, அந்தக் குற்றேவல் செய்தலில் நிறுத்தி, மூன்று உலகங்களிலும் மேன்மை அடைவாயாக. அவனுக்கு வேண்டிய உதவியை மறக்காமல் மனதிலே கொண்டு செய். வேண்டிய சமயத்தில் உயிரையும் கொடுப்பாயாக. அரிய பிறப்புகளை எளிதில் நீங்கப் பெறுவாயாக. மன்னர்கள், அடிமைகள் செய்யும் குற்றங்களைப் பொறுப்பர் என்று எண்ணக்கூடாது. (367 370) என்று அறிவுரை கூறினான்.

சுக்ரீவனை, இராமனிடம் அடைக்கலப்படுதல்

சுக்ரீவனைக் காப்பாயாக என்று வாலி, இராமனிடம் அடைக்கலப் படுத்தினான்.

அங்கதனுக்கு, வாலி அறிவுரை

வாலி, இராமனின் அம்புபட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்ட அங்கதன், பலவாறு புலம்பி அழுதான். அதைக் கண்ட வாலி, அங்கதனை நோக்கி, இனி நீ வருந்த வேண்டியதில்லை என்று கூறி, தன் மார்புடன் அணைத்துக் கொண்டு, எல்லாவற்றிற்கும் தலைவரான இராமன் செய்த நல்வினையின் பயன் இது என்று கூறித் தேற்றினான். நான் முன் செய்த தவத்தால் இத்தகைய மரணம் எனக்கு வந்தது. இராமனே என்னிடம் வந்து, எனக்கு வீடு பேற்றைத் தந்தான். இராமனே மயக்கத்தைச் செய்யும் பிறப்புகளாகிய நோய்களைப் பற்று இல்லாமல் ஒழிப்பதற்கு ஏற்ற மருத்துவனை வணங்குவாயாக. இராமன் என் உயிருக்கு இறுதியை உண்டாக்கினான் என்று சிறிதும் நீ எண்ணாதே. இவன் பகைவருடன் போர் செய்ய நேர்ந்தால், நீ துணையாகச் செல். தர்மத்தை ஆதரித்து நிலை பெற்று வாழும் உயிர்க்கெல்லாம் நலத்தைச் செய்பவனான இராமனின் மலர் போன்ற அடியை வணங்கி வாழ்வாயாக, என்று வாலி, அங்கதனுக்கு அறிவுரை கூறினான்.(வாலி வதைப் படலம்382)

இராமனிடம், அங்கதனை அடைக்கலப் படுத்தல்

என் மகன் நெய் பூசப் பெற்ற பெரிய வேலை ஏந்திய சேனைகளை உடைய கருநிற அரக்கர்களான பஞ்சின் மூட்டைக்குத் தீயைப் போன்ற தோள்களை உடையவன். குற்றம் இல்லாத செயல்களையும் உடையவன். இத்தகைய இவன், உனக்கு அடைக்கலம் என்று மொழிந்தான்.

"பொய் அடை உள்ளத்தார்க்குப் புலப்படாப் புலவ மற்றுஉன்
கையடை ஆகும் என்று அவ் இராமற்குக் காட்டும் காலை"
(வாலி வதைப் படலம் 384)

வாலியின் இறப்பு

இராமனும், அங்கதனைத் தன் அடைக்கலமாக ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத், தன் உடைவாளை எடுத்து ’நீ இதை ஏற்றுக் கொள்வாயாக’ என்றான். இங்ஙனம் கூறிய அளவில் ஏழு உலகங்களும் அவனைத் துதித்தன. பின்னர் வாலி இறந்து அவ் உடலை விட்டு, மேல் உலகங்களுக்கு அப்பால் உள்ள முக்தி உலகத்தை அடைந்தான்.

"என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி
அந் நிலை துறந்து வானுக்கு அப் புறத்து உலகன் ஆனான்"
(வாலி வதைப் படலம் 385)

உயிரில் கலந்த உறவு

வாலி இறந்த செய்தியை அறிந்த தாரைப், போர்க்களம் வந்து இறந்து கிடக்கும் கணவன் வாலியைப் பார்க்கிறாள். அவனது உடலிலிருந்து ரத்தம் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. அப்படியே அவனது உடலில் விழுந்து கட்டிப் புரள்கிறாள்.(வாலி வதைப்படலம் 387)

பெருக்கெடுத்து வரும் இரத்தம் தாரையின் உடலையும், கூந்தலையும் நனைத்து விடுகிறது. மலைகள் போன்ற வலிமையான உன் தோள்களிடையே நாள்தோறும் நான் தங்குகின்ற போது, இதனால் வரையிலும் எப்போதும் என்னோடு மாறுபடாத குணத்தை உடையவனே, உனக்கு நேர்ந்த துன்பத்தைக் கண்டதும் இந்நேரம் என் உயிர்ப் பிரிந்திருக்க வேண்டும். அவ்வாறு பிரியாது உன் முன் நின்று கொண்டிருக்கிறேனே, உயிர்த் துறக்கையில் உடல் இன்பம் அடைவது என்பது உலகத்தில் இல்லை. ஆனால் உலகத்தில் நடக்காத செயலை நீ செய்து கொண்டிருக்கிறாய் என்று வருந்தி பேசுகிறாள். என்னை நோக்கி மிக்க அன்புடன் நீயே என் உயிர் என்றாயே, உன் உயிரான நான், இங்கு துன்பமடைய, உன் உடல் மட்டும் எப்படி இன்பமடைய முடியும்? அப்படியானால் நீ கூறியது பொய்யோ

"செரு வார் தோள நின் சிந்தை உளேன்எனின்
மருவார் வெஞ்சரம் எனையும் வவ்வுமால்
ஒருவேனுள் உளை ஆகின் உய்தியால்
இருவேமுள் இருவேம் இருத்திலேம்"
(வாலிவதைப்படலம்396)

இறந்து கிடக்கும் வாலியை நோக்கி பேசுகிறாள், நாம் இல்லறத்தை இனிதே நடத்திய போது, என்னை நோக்கி உன் இதயம் என்னிடத்தில் உள்ளது என்றாய். நானும் உன்னை நோக்கி உன் இதயம் என்னிடத்தில் உள்ளது என்று மாறி மாறி கூறினோம். நாம் பேசியது உண்மையென்றால், உன் உடலில் பாய்ந்த இராமனின் அம்பானது என் இதயத்தைத் தொலைத்து, என் உயிரைப் போக்கியிருக்க வேண்டும். ஆனால் இறந்திருப்பது நீ தானே. அப்படி என்றால் பொய்ப் பேசினோமோ என்று வருந்தி, அழுது, புலம்புகிறாள்.

முடிவுரை

கம்பராமாயண பாவிகத்தில் ஒன்று பிறர் மனைவியை விரும்புபவர் தன்னுடைய சுற்றத்தாரோடும் இறந்துபடுவர் என்பதாகும். இதையே தண்டியலங்காரம் ’பிறனில் விழைவோர் கிளையோடும் கெடுப’ என்று கூறுகிறது. வீர, புஜ பல பராக்கிரமங்கள் நிரம்பப் பெற்றிருந்தாலும், தகாத செயலைச் செய்தால் இறந்து படுவர் என்பதாகும். வளம் பல பெற்ற நாடான கிட்கிந்தையின் அரசன் என்றாலும், வரங்கள் பல பெற்றிருந்த போதிலும், அமைச்சர்கள் அறிவுரையைக் கேட்காமல், கோபம், பிடிவாதம், தன் செயலே சரி எனல், தம்பி மனைவியைக் கைப்பற்றுதல், தன் வீரத்தின் மீது அளவுகடந்த தற்பெருமை கொள்ளுதல், ஆணவத்துடன் இருத்தல், எதிரியின் வீரத்தைக் குறைத்து மதிப்பிடல், மனைவியின் சொல்லை மதிக்காமை, போன்ற சில தீய குணங்களால் இராமனின் அம்புபட்டு வாலி இறந்தான். மாயாவி, துந்துபி போன்ற மாபெரும் அரக்கர்களை வென்றவன். அறியாமல் செய்த தவற்றுக்காக மதங்கமா முனிவரின் சாபத்திற்கும் ஆளானான் என்பதையும், அறிய முடிகிறது. பரம்பொருளான இராமனின் அம்பு பட்டதால் உயிர்த் துறந்தாலும், அமரரானான் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

துணை நூற்பட்டியல்

1.இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன்,சாரு பதிப்பகம், சென்னை, 2016.
2.எல்லைகள் நீத்த இராமகாதை,பழ.கருப்பையா,விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.
3.கம்பன் புதிய தேடல், அ. அ. ஞானசந்தரத்தரசு,தமிழ்ச்சோலைப்பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
4. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன்,வள்ளி பதிப்பகம்,சென்னை,2019.
5.கம்பன் காட்டும் வைணவப் பேருலகம், அமுதன்,லக்‌ஷண்யா பதிப்பகம், சென்னை,2019.
6.கருத்திருமன். பி,சி.கம்பர் கவியும் கருத்தும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2018.
7.காசி. ஆ, கம்பரும் திருத்தக்கதேவரும்,தமிழ்ச்சோலைப் பதிப்பகம்,சென்னை, 2010.
8.காலமும், கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம் புதுச்சேரி, சென்னை.
9.சக்தி நடராசன்.க, கம்பரின் கை வண்ணம், சரசுவதி பதிப்பகம், ஆர்க்காடு, 2017,
10. பழனிவேலு. தா, காலத்தை வென்ற கம்பன், பல்லவி பதிப்பகம், ஈரோடு. 2021.
11.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.