முன்னுரை

அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பதே கம்பராமாயணப் பாவிகம் என்றாலும், அதையும் கடந்து வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல கருத்துக்களையும் கம்பராமாயணத்தால் அறிந்து கொள்ளமுடிகிறது. கம்பராமாயணம் முழுமையும் பார்க்கும்பொழுது நல்வாழ்க்கை வாழத் தேவையான நற்பண்புகளையும், வாழ்வியல் நெறிகளையும் எடுத்தியம்புகிறது. கம்பர் தம் இராமாயணத்தில் நேரடியாகவோ,, கதை மாந்தர்கள் மூலமாகவோ வாழ்வியல் நெறிகளைக் கூறிச் சென்றுள்ளார். உலகில் இன்பமும், துன்பமும் இயற்கை என்பதைச் சான்றோர்கள் நன்கு அறிவர். கம்பராமாயணத்தில் சில வாழ்வியல் சிந்தனைகள் குறித்து ஆராய்வோம்.

துன்பத்தையும் அனுபவித்து தான் ஆக வேண்டும்

மனித வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி ஏற்படுவது இயல்பு. சான்றோர்கள் இரண்டையும் ஒரே மாதிரியாகவேக் காண்பார்கள். இராமனைக் காட்டிற்கு அனுப்பியதால் துயருற்ற சுமந்திரன் என்னும் மந்திரியைத் தேற்றினான். பெரிய தர்மமானது முற்பட நின்று கீர்த்தியை நிறுவி இறந்த பின்பும் அழியாமல் நின்று உறுதியைத் தருவது தர்மமே. உலகில் இன்பம் வந்தபொழுது மகிழ்பவர்கள் துன்பம் வந்த பொழுது அதையும் அனுபவித்து தான் ஆக வேண்டும். அதனால் நீ துன்பப்படாதே என்று இராமன் தேற்றினான்.

“முன்பு நின்று இசைநிறீஇ முடிவு முற்றிய
பின்பும் நின்று உறுதியைப்பயக்கும் பேரறம்
இன்பம் வந்து உறும் எனின் இனியதாய் இடைத்
துன்பம் வந்து உறும் எனில் துறக்கல் ஆகுமோ”
(தைலமாட்டுப்படலம் 552)

உலகில் முதலில் துன்புற்றாலன்றோ அடுத்து சுகம் கிடைக்கும்

வாழும் இந்த உலகில் முதலில் துன்பம் வந்தால், பின்பு இன்பம் வரும் என்று மக்கள் நம்பிக்கைக் கொண்டிருந்தனர். இராமன் வனத்தில் சென்று துன்புருவானே என குகன் வருத்தமடைந்தான். அதை அறிந்த இராமன், குகனே உலகில் முதலில் துன்புற்றாலன்றோ அடுத்து சுகம் கிடைக்கும். இதற்கு மாறாக இருப்பவர்களுக்கு உளது துன்பமே. ஆகவே நான் துன்புறுவேன் என்று நீ கவலைப்படாதே. நமக்கிடையில் ஒரு நாளும் பிரிவு நேராது. நாங்கள் இதுவரையிலும் நால்வரை உடன் பிறந்தவராக இருந்தோம். அதோடு நின்றுவிடாமல் இப்பொழுது உன்னையும் சேர்த்து ஐவரானோம் என்று கூறினான்.

“துன்புளது எனின் அன்றோ
சுகம் உளது அது அன்றிப்
பின்புள து இடை மன்னும்
பிரிவு உள்ளது என உன்னேல்
முன்புளம் ஒரு நால்வேம்
முடிவுளது எனவுன்னா
அன்புள இனி நாம் ஓர்
ஐவர்கள் உளர் ஆனோம்”
(குகப் படலம் 677)

பின்னால் வரக் கூடியதை நன்மையாகவே எடுக்கவேண்டும்    

இராமன், இலட்சுமணனுக்குத் தந்தை, மகனுக்கு அறிவுரை கூறுவது போன்ற நீதியைக் கூறினான். இளையவ, செல்வத்தினால் வரும் இன்பத்திற்கு ஓர் எல்லை உண்டு. இது போன்ற அழிவற்ற பணிகளில் வரும் இன்பத்திற்கு அழிவில்லை. ஆகையினால் பின்னால் வரக்கூடிய பெரிய நன்மையைக் கருதி மகிழ்ச்சியோடு இரு என்றான்.

“பின்னும் தம்பியை நோக்கி பெரியவன்
மன்னும் செல்வத்திற்கு உண்டுவரம் இதற்கு
என்ன கேடுண்டு இவ் எல்லையில் இன்பத்தை
உன்னுமேல் வரும் ஊதியத்தோடு என்றான்”
(சித்திரகூடப் படலம் 782)

பிறத்தலும்,இறத்தலும் இயற்கை

இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிர்களும் இறந்துதான் தீர வேண்டும் என்பது உலகின் நியதி. எந்த உறவு இறந்தாலும் , அதற்காக எப்படி அழுதாலும் சென்ற உயிர் மீண்டும் வராது என்பதே உண்மை. தந்தை இறந்தமைக்கு வருந்திய இராமனை, வசிஷ்டர் தேற்றினார். வேதங்களை முடிய கற்ற இராமனே, உலகில் பிறந்தவர்கள் தங்களுக்கு உறுதியாகக் கொள்ளத்தக்கது துறவு பூண்டு முக்தி அடைதலும், அறம் செய்து சுவர்க்கம் புகுதலும் ஆகிய இவற்றைத் தவிர, வேறொரு உறுதி இல்லை. உலகில் உயிர்கள் பிறத்தலும், இறத்தலும் இயற்கை என்பதனை மறந்தனையோ என்று கூறித் தேற்றினார்.

“துறத்தலம் நல்லறத்துறையும் அல்லது
புறத்தொரு துணை யிலை பொருந்தும் மன்னுயிருக்கு
இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்பதை
மறத்தியோ மறைகளின் வரம்பு கண்ட நீ”
(திருவடிசூட்டு படலம் 1126)

நாசகாலம் வரும் போது பிறர் கூறுவது ஏறாது

ஒருவருக்கு நாசகாலம் வரும் போது,யார் கூறும் அறிவுரையும் அவர்கள் காதில் ஏறுவதில்லை என்பதே நடைமுறையில் நாம் காணும் உண்மையாகும்.. இராவணன், சீதையைக் கடத்தவேண்டும் உன் உதவி தேவை என்று மாரீசனிடம் கேட்டான். அதற்கு பதிலளிக்கும்போது மாரீசன், அற்ப வழியில் ஒழுகுகின்றவனே உன் நன்மையைக் கருதி இந்த நீதியைச் சொன்னேனன்றி, இராமன் இருக்கும் இடத்துக்குச் செல்வதால் எனக்கு சாவு நேரும் என்று போவதற்கு அஞ்சி நான் சொல்லவில்லை. ஒருவனுக்கு நாசகாலம் வரும்போது, பிறர் சொல்லும் நன்மைகள் எல்லாம் தீமை உடையதாகவேத் தோன்றும். நான் செய்ததற்குரிய காரியத்தைச் செய்வேன் என்றான்.

“நன்மையும் தீமை அன்றோ,
நாசம் வந்து உற்றபோது
புன்மையின் நின்ற நீராய்
செய்வது புகல்தி என்றான்”
(மாரீசன் வதைப் படலம் 753)

விதியால் மதியை வெல்ல முடியுமா ?

நம் வாழ்க்கையில் எது, எப்போது நடைபெற வேண்டும் என்பதை ஏற்கனவே எழுதப்பட்ட விதியே தீர்மானிக்கும் என்பது இன்றும் மக்களிடையே காணப்படும் நம்பிக்கையாகும். இராவணனின் வாளால் வெட்டப்பட்டு ஜடாயு, மயக்கம் தேறி இராம இலட்சுமணரைத் தேற்றுகிறார். ஒருவருக்கு பழைய வினைப்படி இன்ப துன்பங்கள் வரும். புதிதாக ஒன்றையும் உண்டாக்கிக் கொள்ள முடியாது. ஆதலால் இது முற்பிறப்பில் செய்த வினையின் பயன் என்று அமைதியாக இருக்க வேண்டும்.விதியால் நமது மதியை வெல்லமுடியுமோ? என்று ஜடாயு, இராமனிடம் கூறினார்.

“அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ
துதியறு பிறவியின் இன்ப துன்பம் தான்
விதி வயம் என்பதை மேற்கொளாவிடின்
மதி வலியால் விதி வெல்ல வெல்லமோ”
(சடாயு உயிர் நீத்தப்படலம் 992 )

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியும் இதேக் கருத்தையே வலியுறுத்துகிறது. மெய் உணர்வு கொண்டோர், எது நிகழ்ந்தாலும் ஊழ்வினை செயல் என்று அமைதியோடு இருப்பர். ஏனெனில் வருவதை யாராலும் தடுக்க முடியாது. ஆதலால் வருவது வந்தே தீரும் என்பர் உலகோர் .

“மறிப மறியும் மலிர்ப மலிரும்
பெறுப பெறும் பெற்று இழப்ப இழக்கும்
அறிவது அறிவார் அழுங்கார் உவவார்
உறுவது உறும் என்று உரைப்பது நன்று”
(குண்டலகேசி 18)

அழியும் பொருட்கள் அனைத்தும் அழிந்து தொலையும். அவற்றை அழியாமல் காக்க இயலாது. இவ்வாறே பெருகும் செல்வங்கள் பெருகியேத் தீரும். அவற்றைப் பெருகாமல் தடுக்க யாராலும் இயலாது. நல்வினைப் பயன் இருப்பின், நன்மை வந்தே தீரும். அதை யாராலும் தடுக்க முடியாது. அது போலவே தீவினை வந்தால், பெற்ற பொருளும் போய்த் தொலையும். அதைத் தடுக்க இயலாது. ஆதலின் பொருளின் இந்த இயல்பினை அறிந்த சான்றோர், பொருள் போயிற்றே என வருந்த மாட்டார்கள். அதுபோலச் செல்வம் பெருகினும் அதற்காக மகிழ்ச்சி கொள்ளவும் மாட்டார்கள். இரண்டும் ஊழ்வினைப் பயன் எனக் கருதி அமைதியுடன் இருப்பர்.

ஊழ்வினையால் தான் அனைத்தும் நடக்கும்

நம் வாழ்வில் ஏற்படும் அனைத்தும் நாம் ஏற்கனவே செய்த செயலின் ஊழ்வினையால்தான் நடைபெறும். சுக்ரீவன், இராமனைப் பார்த்து இவ்வுலகில் என்னைப்போல தவம் செய்தவர் வேறு யார்உளர்? நீ இந்த உலகுக்கெல்லாம் ஒரு பெருந் தலைவன். அத்தகைய உன்னை நண்பனாக அடையப் பெற்றேன். ஊழ்வினையே வந்து ஒன்றைத் தந்தால் அடைய முடியாத பொருளும் உண்டோ? அரிய பொருளும் எளிதில் கிடைக்கும் என்று கூறுகிறான்.

“ஆயதோர் அவதி யின்கண்
அருக்கன்சேய் அரசை நோக்கித்
தீவினை தீய நோற்றார்
என்னின் யார்? செல்வ?நின்னை
நாயகம் உலகுக் கெல்லாம்
என்னலாம் நலம் மிக் கோயே
மேயினென் விதியே நல்கின்
மேவலாகாது என் என்றான்”
(நட்புக் கோட் படலம் 100)

துன்பங்கள் வருதலும் ,அத்துன்பங்கள் நீங்கலும் அந்தரம் வருதலும் அனைய தீர்தலும்...சுந்தரத் தோளினிர் தொன்மை நீர்வால். (3451) ஊழ்வினைப் பயனால் ஒருவருக்குத் துன்பங்கள் வருதலும் ,அத்துன்பங்கள் நீங்கலும் பண்டைய காலம் தொட்டே நிகழ்வனவாகும். ஆதலால் துன்பம் வரும் போது வருந்தவும், இன்பம் வரும் போது மகிழவும் கூடாது.

நல்வினை செய்தார் நலம் பெறுவர்

நாம் இன்று செய்யும் செயல்களே நாளை தக்க பலனைத்தரும் என்பர்.

நல்ல செயல்களைச் செய்தால் அதற்கான நல்ல பலன்களும், நம்மை வந்தடையும், தீமை செய்தால் அதற்கான தீய பலன்களும் நம்மை வந்தடையும், இதையே முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பர். உலகில் உயிர்களுக்கு இறத்தலும், பிறத்தலும் இயல்பே. இதனிடையில் அவரவர்களுக்கு நேரும் இன்ப, துன்பங்கள், அவரவர் வினைக்கு ஏற்ப வரும், நல்வினை செய்தார் நலம் பெறுவர். தீவினை செய்தார் தீங்குறுவர். அறவழியில் தவறினால் பிரம்மனுக்கும் உடனே அழிவு நேரும் என்பதை உறுதியாகக் கொள் என்று சுக்ரீவனுக்கு, இராமன் அறிவுரை கூறும் போது கூறினார்.

“இறத்தலும் பிறத்தல் தானும்
என்பன இரண்டும் யாண்டும்
திறத்துளி நோக்கின் செய்த
வினை தரத் தெரிந்த அன்றே
புறத்தினி உரைப்பது என்னே
பூவின் மேல் புனிதற்கேனும்
அறத்தினது இறுதிவாழ் நாட்கு
இறுதி அஃது உறுதி என்ப”
(அரசியல் படலம் 421)

கொடுத்த வாக்கைக் காப்பாற்றாதவன் பிறவாதவன்

ஒருவன் மனிதனாகப் பிறப்பெடுத்தான் என்றால் அவன் கொடுத்த வாக்கைக் தன் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் அவன் மனிதனாகவேக் கருதப்படமாட்டான். கார்காலம் வந்தும் படைகளுடன் சுக்ரீவன் வராததால், இராமன், இலட்சுமணனை அனுப்பி அவனைப் பார்த்து வரச்சொன்னார். அந்நேரம் மதுவுண்ட மயக்கத்தில் சுக்ரீவன் இருந்தான். இலட்சுமணனின் கோபத்தைக் குறைக்க, அனுமனின் ஆலோசனைப்படி, வாலியின் மனைவி தாரை, இலட்சுமணனிடம் வந்து ஐயா, சுக்ரீவன் உங்களை மறக்கவில்லை. உங்களுக்கு உதவி செய்யும் பொருட்டு பலவகைப் பட்ட சேனைகள் எல்லாம் தன்னிடம் வரும்படி தூதரை ஏவி, அவர்கள் வராமையினால் தாமதம் செய்யலானான். தர்ம தேவதைக்கு நிகரான உங்களுக்குக் கொடுத்த வாக்கை அவன் நிறைவேற்றானாயின், பிறவாதவனே ஆவான் அன்றோ? இது மட்டுமா மறுமையில் அவனுக்கு நரகமும் தப்பாது என்று கூறினாள்.

“மறந்திலன் கவியின் வேந்தன்
வயப்படை வருவிப்பாரைத்
திறந்திறம் ஏவி, அன்னார்
சேர்வது பார்த்துத் தாழ்த்தான்
அறந்துணை நுமக்குத்தான் தன்
வாய்மையை அழிக்கு மாயின்
பிறந்திலன் அன்றே ஒன்றோ
நரகமும் பிழைப்பது அன்றால்”
(கிட்கிந்தைப்படலம் 625)

அற்பர்கள் பிறரை நம்பமாட்டார்கள்

நல்லவர்கள் சிலருடைய பெருமைகளைத் தாமே அறிந்துகொள்வர். ஆனால் அற்பர்கள் ஒருவரிடத்தில் உள்ள பெருமைகளைத் தாமே நேரில் கண்டபின்பே அறிந்து கொள்வர். கடலைத் தாண்டுவதற்கு உதவி செய்யும்படி வருணனை, இராமபிரான் வேண்டியது, உலகத்தில் ஜீவன் முத்தராயுள்ள மெய்ஞானிகளை அவர்கள் கையில் ஒன்றும் இல்லாமைக் கண்டு ஒருவரும் விரும்ப மாட்டார்கள். தம்முடைய ஆற்றல் பிறருக்குப் புலப்படாதவாறு அடக்கமுடையவராய் சிலர் இருப்பார். அவரையும் ஒருவரும் விரும்பார். அற்பர்கள் ஒருவரிடத்தில் உள்ள பெருமைகளைக் கண்ட பின் தான், அவரை நம்புவார்கள். இதுவே உலக இயல்பாகும்.

“மறுமை கண்ட மெய்ஞ்ஞானியர் ஞாலத்து வரினும்
வெறுமை கண்டபின் யாவரும் யார் என விரும்பார்
குறுமை கண்டவர் கொழுங் கனல் என்னினும் கூசார்
சிறுமை கண்டவர் பெருமை கண்டு அல்லது தேறார்”
(வருணனை வழி வேண்டு படலம் 543)

இன்று வென்றவர், நாளைத் தோற்பர்

காலம் என்றுமே ஒன்று போல் இருப்பதில்லை. தினம்தோறும் மாறிக்கொண்டே இருக்கும். வாழ்வில் இன்று வெற்றி பெற்றவர், நாளை தோற்பர். இன்று தோற்பவர், நாளை வெற்றி பெறுவர் என்பது உலக நியதி.

இலங்கை வேந்தன் இராவணனின் அமைச்சர், உலகில் ஏனையோரினும் மேம்பட்ட புகழை உடையவனே. அற்பமான இரண்டு தவசி பயல்கள் போரையாப் புகழ்கின்றாய். உலகின் நிலை இன்று வென்றவர், நாளைத் தோற்பர். இன்று தோற்றவர், நாளை வெல்வர். இன்று மேன்மை அடைந்தவர், நாளைத் தாழ்வர். இன்று தாழ்வோர், நாளை மேன்மையடைவர். உலகின் ஏனைய நிலைகளும் மாறி மாறி வரும் தன்மையதே என்று அறிஞர் கூறுவர். வல்லமைக்கு ஒர் எல்லை இருக்கிறதா என்று மகோதரன், இராவணனிடம் வினவினான்.

“வென்றவர் தோற்பர் தோற்றோர் வெல்குவர் எவருக்கும் மேலோய்
நின்றவர் தாழ்வர் தாழ்ந்தோர் உயர்குவர் நெறியும் அ ஃதே
என்றனர் அறிஞர் அன்றே ஆற்றலுக்கு எல்லை உண்டோ
புன்தவர் இருவர் போரைப் புகழ்ந்தியோ புகழ்க்கு மேலோய்”
(கும்பகர்ணன் வதைப் படலம் 1249)

காலத்தில் ஆக வேண்டியது ஆகியே தீரும்

எக்காலத்தில் எது நடக்கவேண்டுமோ அதை யார் தடுத்தாலும் நடந்தேத்தீரும் என்பது உலக நியதி. போர்க்களத்தில் தன்னிடம் வந்த வீடணனைக் கண்ட கும்பகர்ணன் அவனுக்கு அறிவுரை கூறுகிறான். அறத்தில் ஊன்றி இருக்கின்ற தன்மையையும், நல்லறிவையும் முழுமுதற் கடவுள் மேல் மிக்க தவம் செய்து நீ அடைந்தாய். பிரம்மன் கொடுத்த வரத்தால் அழிவற்ற ஆயுளை அடைந்தாய், இப்படி இருந்தும் அரக்கர் குலத்தின் இழிவை இன்னும் விட்டுவிடவில்லையோ என்கிறான். இதிலிருந்து அறம், அறிவு, நீதி மூன்றும் இறைவனருளாலே பெற்றவை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

வீடணனிடம், என்றும் வாழ்பவனே, உரிய காலத்தில் ஆக வேண்டியது ஆகியேத் தீரும். அழிய வேண்டியது அதற்குரிய காலத்தில் அழிந்து சிதறிப்போகும். அவ்வாறு அழிய வேண்டியதை அருகே இருந்து பாதுகாத்தாலும், அழிந்து போவது உறுதி. இதைக் குற்றமற உணர்ந்தவர், உன்னைக்காட்டிலும் யார் உள்ளனர். வருத்தம் கொள்ளாமல் இங்கிருந்து செல்க. எம்மை நினைத்து இரங்க வேண்டாம் என்று கும்பகர்ணன் கூறினான்.

“ஆகுவதுஆகும் காலத்து ஆகும் அழிவதும் அழிந்து சிந்திப்
போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம்
சேகு அறத்தெளிந்தோர் நின்னில் யார் உளர்? வருத்தம் செய்யாது
ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய்”
(கும்பகர்ணன் வதைபடலம் 1378)

பிறருக்குக் கேடு பட நினைப்பவர்கள் பிழைப்பார்களோ

பிறருக்குக் கேடு வரவேண்டும் என்று எண்ணக்கூடாது. அப்படி எண்ணினால், அவ்வாறு எண்ணியவனுக்கேக் கேடு வரும். அனுமான் தான் பறித்த மரங்களை இலங்கை நகரின் மேல் விட்டு எறிந்தான். அதனால் வானளாவ ஓங்கிய மாளிகைகள் மோதப்பட்டனவாகிப் பொடிகளாய் விட்டன.

அவ்வாறு குன்றம் மாளிகையின்மீது மோதும்போது நெருப்புப்பொறிகள் தெறித்ததனால், பக்கங்களில் இருந்த எல்லாப் பொருள்களையும் சுட்டெரித்தன. அரக்க வீரர்களும் அஞ்சி நடுங்கினவராய் அழிந்தனர். பிறர்க்குத் தீமை செய்பவர்கள் அத் தீவினைப் பயனை அனுபவிக்காமல் தப்புவார்களோ?

“விட்டனன் இலங்கைதன்மேல் விண்உற விரிந்தமாடம்
பட்டன பொடிகள் ஆன பகுப்பன பாங்கு நின்ற
கட்டனபொறிகள் வீழத் துளங்கினர் அரக்கர் தாமும்
கெட்டன வீரர் அம்மா பிழைப்பரோ கேடு சூழ்ந்தார்”
(பொழில் இறுத்த படலம்747)

பொய்ச்சாட்சி கூறியவர் குலம் அழியும்

தவறே செய்யாதவர்கள் மேல் தவறுசெய்ததாகப் பொய்க்குற்றம் சாட்டவோ, பொய்ச்சாட்சி சொல்லவோக் கூடாது. அவர்கள் விடும் கண்ணீர் பொய்ச்சாட்சிக் கூறியவனை மட்டுமல்லாது, அவனுடைய குலமே அழிந்து விடும். கோபம் தலைக்கேறியவர்களை அக்கிங்கரர், வருந்தி ஓடிவிடவில்லை.போர்க்களத்தில் போரிட அஞ்சவும் இல்லை.தம் அழிவுக்குப் பொய் என்று தெரிந்து பொய்ச்சாட்சி கூறிய இழிகுணம் கொண்டவரின் குலங்கள் அழிவதுபோல, கிங்கரர் அனைவரும் ஒரு குரங்கினாலே இறந்து போனார்கள் என்று நந்தவனத்து நாயகர் கூறினார்.

“சலம் தலைக் கொண்டனர் ஆய தன்மையர்
அலந்திலர் செருக்களத்து அஞ்சினார் அலர்
புலம் தெரி பொய்க்கரி புகலும் புன்கணார்
குலங்களின் அவிந்தனர் குரங்கினால் என்றார்”
(கிங்கரர் வதைப் படலம் 811)

பொய்ச்சான்று கூறிய கொடியவன் குலத்தோடு அழிவதுபோல வஞ்சக அரக்கர் இராமன் அம்பால் வேரொடு அழியலாயினர். " கைக்கரிஅன்னவன் பகழி கண்டகர்”124 பொய்ச் சான்றின் கொடுமையைக் கண்டிக்க இந்த இடத்தை கம்பர் பயன்படுத்திக் கொண்டார். துன்பப்படுபவர் சிலர் நான் பொய்ச்சாற்று சொன்னேனோ என்றும் கூறுவர்.

பரதன் பள்ளியடைப் படலத்தில் நான் இந்த தீமையைச் செய்தேனா யின் அல்லது நான் இந்த செய்யினாயின் பொய்ச் சான்று சொன்னவர் படும் பாட்டைப்படுவனாக என்று சூளுரைப்பதை

“பொய்க்கரி கூறினோன்……………..
மெய்க்கொடு நரகிடை விரைவின் வாழ்க யான்”
(பள்ளிபடைப்படலம் 885)

என்று கூறுகிறான்.

இராமபிரான் அரக்கரை அழித்தல் வஞ்சகமான ஓரம் நினைத்து பெரிய நீதிமன்றத்திலே எதிரிகளிடம் பொருள் பெற்றுக் கொண்டு பொய்ச் சாட்சி சொல்லும் பாவிகளுடைய குலம் இருந்த இடம் தெரியாமல் அழிவதைப் போல, அரக்கர்கள் அழிந்து ஒழிந்தனர். தருமத்தைப் போன்றவனாகிய இராமபிரான் விடங்கலந்த நீர் நிலையை ஒத்தான். அந்த நீரைக் குடித்து இறப்பவரைப் போல, பல அரக்கர்கள் இருந்தனர். பஞ்சகாலத்தில் வறியோர்கள் பலவித துன்பப்பட்டு இறப்பதைப் போலவும் பல அரக்கர்கள் மாண்டனர்.

வஞ்சவினை செய்து நெடுமன்றில் வளம்
உண்டு கரி பொய்க்கும் மறம் ஆர்
நெஞ்சம் உடையோர்கள் குலம் ஒத்தனர்
(மூலவதைப்படலம் 3381)

புண்ணியத்தின் பயன் தீர்ந்து விட்டது

ஒருவர் செய்த புண்ணியம் என்றும் அவர்களுக்குத் துணையாக, பக்கபலமாகவே என்றும் இருக்கும். ஆனால் அந்தப் புண்ணியபலம் தீர்ந்துவிட்டால் அவன் பாவக் கணக்குத் தொடங்கிவிடும். இராமன், இராவணனின் தலைகளை வெட்டி வீழ்த்தினான். ஒருவன் நெடுநாளாக நுகர்ந்து வந்த புண்ணியத்தின் பயன் போய்விட்ட பிறகு, அவனது மற்றைய பண்புகள் எல்லாம் பழுதடையும். அதுபோல இராவணனது புண்ணியத்தின் பயன் தீர்ந்து விட்டமையால், முன்பு அவனைத் தொழுது சுற்றி திரிந்த பேய் கூட்டங்கள் இன்று அவன் கண்களைத் தோண்டி தின்பனவாயின.

மங்கையர் மனதை அறிந்தவர் யார்?

பெண்ணின் மனதை யாரும் அறிந்ததில்லை. மும்மூர்த்திகளாலும் அறிந்து கொள்ள இயலாது. அறிந்து கொள்ளவேண்டும் என்று யாரும் முயற்சி செய்ததில்லை. மீட்சிப் படலத்தில் இராமன், சீதையைக் கோபித்த போது, சீதை தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும், காளையில் ஏறி வருபவராகிய சிவபெருமானும், சங்கு முதலிய ஐந்து ஆயுதங்களையும் ஏந்திய திருமாலுமாகிய இவர்களெல்லாம் உலகத்தில் உள்ள பலவற்றையெல்லாம் உள்ளங்கையின் நெல்லிக்கனியைப் போல எல்லாவற்றையும் உள்ளவாறு நன்கு உணர வல்லவராயினும், மாதர்களின் மனத்தின் நிலையை அறிபவர் அல்ல. அறிபவர்கள் ஆவார்களோ? ஆக மாட்டார்கள். ஆகையினால் என் கணவரும் என் மனதில் நிலைமையை அறிந்திலராயினர் என்று கூறினாள்.

“பங்கயத்து ஒருவனும் விடையின் பாகனும்
……………………………………………………..
மங்கையர மனநிலை உணரவல்லரோ”
(மீட்சிப்படலம் 3968)

கொடுப்பவர் இன்னது ஓர் கெடு இல்லை

ஒருவர் எனக்கு இது தேவை என்று கேட்டு வந்தால் நம்மால் முடிந்ததைக் கொடுக்கவேண்டும். இல்லையென்றாலும் பரவாயில்லை, யாராவது கொடுக்கும்போது கொடுக்காதீர்கள் என்று தடுக்காமலாவது இருக்கவேண்டும். பிறர் கொடுக்கும்போது அதைத் தடுப்பது பெரிய பாவமாகும். தீராத பழி வந்து சேரும் வழி செய்தவர்களும் அவருக்குப் பகையாக மாட்டார். அவர்களுக்கு உண்மையான பகைவர் யார் எனில், பிறருக்குத் தானம் கொடுப்பவர் முன்னே நின்று, கொடுக்காதே என்று கூறித் தடுப்பவர்களே. கொடுப்பவர்களுக்குப் பகைவர்கள் ஆவர். அவ்வாறு தடுப்பவர்கள் தம்மைத் தானே கெடுத்துக் கொள்பவர் ஆவர். கொடுப்பதைத் தடுப்பது போல ஒரு தீச்செயல் வேறில்லை என்று மாவலி, சுக்ராச்சாரியாரிடம் கூறினான்.

“அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்
கொடுப்பவர் முன்பு கொடேல் என நின்று
தடுப்பவரே பகை தம்மையும் அன்னார்
கெடுப்பவர் இன்னது ஓர் கெடு இலை என்றான்”
(வேள்விப்படலம் 429)

உன் பிழை என்பது அல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ.

தனக்குத் துயரம் வந்தபோது அதற்காகப் பிறர்மீது பழி சொல்லக்கூடாது. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று புறநானூறு கூறுகிறது. யாராலும், யார்க்கும் நன்மையையோ, தீமையையோ தரமுடியாது. அனைத்து செயல்களுக்கும் அவரரவரேக் காரணம். சீதையை, இராவணன் கவர்ந்து சென்றான் என்பதை அறிந்த இராமபிரான் கடும் சினம் கொண்டான். அண்ட கோளங்கள் அதிர்ந்தன. கீழும், மேலுமாக உள்ள 14 உலகங்களும் நடுங்கின. அங்ஙனம் சீற்றம் கொண்ட இராமபிரானது சினத்தைத் தணிக்க ஜடாயும் முனைந்தான். இந்தக் கொடுமைக்குக் காரணம் யார்? உண்மையில் யார் செய்தப் பிழை? எண்ணிப்பார் என பேச ஆரம்பித்தான். சீதையை இக்காட்டிலேத் தனியாக விட்டுவிட்டு, ஒரு மானின் பின்னே ஓடிச் சென்று, உங்கள் குலத்துக்கே பழியைத் தேடிக் கொண்டீர்கள். ஆராய்ந்து நோக்குங்காள், இது உங்கள் குற்றமே ஆகும் அல்லால் உலகத்தார் செய்த குற்றமாகுமா என்று ஜடாயு இராமபிரானைக் கேட்டான்.

“வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைக
கொம்பு இழை மானின் பின் போய் குலப்பழி கூட்டிக் கொண்டீர்
அம்பு இழை வரி வில் செங்கை ஐயன் மீர் ஆயும் காலை
உம் பிழை என்பது அல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ”
(ஜடாயு உயிர் நீத்த படலம் 10 10)

பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே

ஏதாவது தவறினைச் செய்பவர் சிறியவர்கள். அவர்கள் செய்த தவறினைப் பொறுத்துக் கொள்பவரே பெரியவர்களாவர். கௌதம முனிவர், அகலிகையைக் கல்லாகும்படி சபித்தவுடன் அகலிகை, கௌதம முனிவரிடம் சிவபெருமானைப் போன்றவனே, சிறியவர் செய்தப் பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுதல் பெருமையர் கடமையாகும். எனக்கிட்ட சாபத்துக்கு ஒரு முடிவினை அருள்வாயாக என்று வேண்டினாள். அதற்கு அவர் தசரதன் மகனான இராமனது திருவடி தூசு உன் மீது படியும்போது, கல் உருவம் நீங்குவாய் என்று சாப விமோசனம் கூறினார்.

“பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே அன்பால்
அழல் தருங் கடவுள் அன்னாய் முடிவு இதற்கு அருளுக என்ன
தழைத்து வண்டு இமிரும் தண் தார்த் தசரதராமன் என்பான்
கழல் துகள் கதுவ இந்தக் கல் உருத் தவிர்தி என்றான்”
(அகலிகைப்படலம் 480)

மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் வெற்றி ஆக வற்று ஆமோ,

யாரும் பொறாமை கொள்ளக்கூடாது.அது அவர்க்குக் கேடு தரும்.பிறரைக் கண்டு பொறாமைப் பட்டால் அது அவர்க்குக் கிடைத்து விடுமா? கிடைக்காது. இராவணன் காம மிகுதியால் சந்திரனைப் பழிக்கின்றான். எனது அரிய உயிருக்கு எமனாக இருக்கின்ற சிறந்த குலத்திலேப் பிறந்த சீதையினது இரு குவளைகள் மலர்ந்த ஒரு தாமரை மலரைப் போன்ற முகத்துக்கு நீ தோற்றுப் போனாய். அதனால் உள்ளம் கருகிப் போனாய். உடல் மெலிந்து விட்டாய். வெந்து போகத் தொடங்கினாய். பகைவரின் செல்வத்தைப் பார்த்து பொறாமை கொண்டு மனம் அழிந்தால், வெற்றி பெறும் வல்லமை உண்டாகுமோ? தமது பகையைக் வெல்லும் வல்லமை இல்லாதவரின் அறிவுடையவர்கள், தமது அறிவைக் கொண்டு தம் நிலையை உணர்ந்து அடங்கியிருக்க மாட்டார்களோ என்று கூறுகிறான்.

“ஆற்றார் ஆகின் தம்மைக் கொண்டு அடங்காரோ என் ஆருயிருக்குக்
கூற்றாய் நின்ற குலச்சானகி குவளை மலர்ந்த தாமரைக்குத்
தோற்றாய் அதனால் அகம் கரிந்தாய் மெலிந்தாய் வெதும்பத் தொடங்கினாய்
மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் வெற்றி ஆக வற்று ஆமோ”,
(சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 666)

கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால்

பிறரிடம் சென்று ஒரு பொருளை இரவாமல் இருப்பது நல்லது.அவ்வாறு கேட்பது இழிவானது.பிறரின் தேவை அறிந்து அவருக்குக் கொடுப்பதே உயர்வானது. நீ அறியாமை உடையவனாக இருப்பதால் இவ்வாறு கூறினாய் உயர்ந்தவர்கள் எவர் வந்தாலும், எதைக் கேட்டாலும் இல்லை எண்ணாமல் ஈவது அல்லாமல், அவர்களால் கொடுக்க கூடாதவை என்று விலக்கப்பட்டவை சில என்ன உண்டு? ஒன்றுமில்லை. எதனினும் இனிய தனது உயிரை இரந்து பெற்றுக் கொள்வது தீயது. உயிரையும் ஈவது சிறந்தது என்று மாபலி, சுக்ராச் சாரியரிடம் கூறினான்.

“வெள்ளியை ஆதல் விளம்பினை மேலோய்
வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால்
எள்ளுவ என் சில இன் உயிரேனும்
கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால் “
(வேள்விப் படலம் 427)

நங்கையர் மன தவம் நவிலற் பாலதோ

பெண்கள் உடல் பலத்தில் குறைந்தவர்கள்தான் என்றாலும், மனோபலம் என்றுமே பெண்களுக்கு அதிகம்தான். நற்குலத்தில் பிறந்து, இல்லறத்துக்குரிய பண்பும், பயனும் பெற்ற பெண்களின் மன உறுதி என்னும் தவத்தின் சிறப்புச் சொல்லுக்கு அடங்காதது. அப்பெண்களின் சிறப்போடுக் கனலிடை நின்றும், புனலிடை மூழ்கியும், உண்பன, பருகுவன நீக்கியும், தவம் செய்பவர்களை ஒப்பிட்டால் அவர்கள் இருப்பதே தெரியாமல் மறைந்து போவர்.

“வெங்கனல் முழுகியும் புனலுள்மேவியும்
நுங்குவ அருந்துவ நீக்கி நோற்பவர்
எங்கு உளர்? குலத்தில் வந்து இல்லின் மாண்புடை
நங்கையர் மனத்தவம் நவிலற் பாலதோ?”
(காட்சிப் படலம் 400)

பிறப்பு என்னும் பெருங்கடல் பிழைக் கல் ஆகுமா,

நாம் செய்யும் நன்மை, தீமைகளுக்கு ஏற்றபடி நாம் பலபல பிறவிகள் எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட துன்பமான இப்பிறவிப் பெருங்கடலைக் கடக்கவேண்டுமென்றால் இறையருள் வேண்டும். அதைப் பெற நாம் தவம் செய்யவேண்டும். எவ்வகையானவருக்கும் இப் பிறப்பில் இறப்பு உண்டு எனும் உண்மையை மறப்பதைக் காட்டிலும், அழிவு தருவது வேறொன்று உண்டோ இல்லை. துறவு எனும் தெப்பம் துணைசெய்யா விட்டால், பிறப்பு எனும் பெரிய கடலைக் கடக்க முடியுமா? முடியாது.

“இறப்பு எனும் மெய்ம்மையை இம்மை யாவருக்கும்
மறப்பு எனும் அதனின் மேல் கேடுமற்று உண்டோ
துறப்பு எனும் தெப்பமே துணை செய்யாவிடின்
பிறப்பு எனும் பெருங்கடல் பிழைக்கல் ஆகுமோ”
(மந்திரப்படலம் 20)

என்று தசரதன் கூறினான்

தீவினை உடையார் மாட்டே தீங்கினைச் செய்தது

தீவினை செய்தவர்களுக்கு தீமைதான் நடக்கும். எனவே நாம் என்றும் நல்லதையே செய்யவேண்டும். ஆராய்ச்சி உடையவராய்த் தர்மம் தவறாதவர்களுக்கு எல்லாம் நன்மையே அன்றிக், கேடு வந்து பொருந்துவது உண்டோ? அழிவைச் செய்து முடிக்க வல்லராய் வருணன்மீது இராமனுக்கு வந்த சினம் முழுவதும், அறத்தினின்று தவறாத வருணனுக்குத் தீமை செய்யாது, தீவினையுடைய அவுணருக்கேத் தீமையைச் செய்தது அன்றோ?, இராமன் அவுணரை அழித்தான்.

“ஆய்வினை உடையவர் ஆகி அறம் பிழையாதார்க் கெல்லாம்
ஏய்வன நலனே அன்றி இறுதி வந்து அடைவது உண்டோ
மாய்வினை இயற்றி முற்றும் வருணன் மேல் வந்த சீற்றம்
தீவினை உடையார் மாட்டே தீங்கினைச் செய்தது அன்றே”
(வருணனை வழி வேண்டுபடலம் 609)

பெரியோர் ஆயினும் பெருமை பேசலார்

யாரும் என்றும் தற்பெருமை கொள்ளக்கூடாது. சான்றோர்கள் என்றுமே தற்பெருமை பேசுவதில்லை. சீதையின் பிரிவினால் உள்ளம் தளர்ந்த இராமபிரானிடம், சுக்ரீவன் அணிகலன்களைக் காட்டுகிறான். அதைக் கண்ட இராமபிரானுக்கு வருத்தம் மேலிட்டது. தீயில் மெழுகு உருகுவது போல, உள்ளம் உருகினார். கண்ணீர் வெள்ளம் கடலினும் பெருகிற்று. சுக்ரீவன் ஆறுதல் கூறுகிறான். ஏழில் உலகம் உனது அன்புக்கு இலக்காகுமா? அறம் வேறு நீர்வேறோ? உமக்கு அரியது எதுவும் இல்லை என்றெல்லாம் கூறும்போது, எவ்வளவு பெருமையுடையவராக இருந்த போதிலும், சான்றோர்கள் தம் பெருமையைத் தாமே பேச மாட்டார்கள். உலகம் அவர்கள் செயலைக் தான் கண்டு பாராட்டுகிறது என்று கூறினான்.

“பெரியோர் ஆயினும் பெருமை பேசலார்
கருமமே அல்லது பிறிது என் கண்டது
தருமம் நீ அல்லது தனித்து வேறு உண்டோ
அருமை ஏது உனக்கு நின்று அவலம் கூர்தியோ”
(கலன் காணப்படலம் 208)

வருவது வரும் நாள் அன்றி வந்து கை கூடா வற்றோ?

எப்பொழுது எது நடக்கவேண்டுமோ அக்காலத்தில்தான் நடக்கும். நாம் அவசரப்பட்டாலும் நடந்துவிடாது. யார்க்கும் எதையும் கொடுப்பது விதியே ஆகும்.மிகப் பெரும் தவம் உடையவராக இருந்தாலும், அவருக்குக் கூட ஒரு பொருள் வந்து சேரவேண்டிய நாளில் வருமே தவிர, அதற்கு முன் வந்து சேராது.நல்வினைக்கு ஏற்பச் செல்வம் வந்து சேரும். தீவினைக்கு ஏற்பச் செல்வம் விலகிச் செல்லும். அதனை மாற்றமுடியாது.

“தருவது விதியே என்றால் தவம் பெரிது உடைய ரேனும்
வருவது வரும் நாள் அன்றி வந்துகை கூடா வற்றோய”
(சூர்ப்பணகை சூழ்ச்சிப்படலம் 631)

முடிவுரை

கம்பர் தம் இராமாயணத்தில் நேரடியாகவும், கதை மாந்தர்கள் மூலமும் வாழ்வியல் நெறிமுறைகளைக் கூறி சென்றுள்ளார். மனித வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வரும். இரண்டையும் அனுபவித்து தான் தீர வேண்டும். உலகில் முதலில் துன்புற்றால் தான், பின்பு சுகம் கிடைக்கும். உலகில் உயிர்கள் பிறத்தலும், இறத்தலும் இயற்கை. நாசகாலம் வரும்போது பிறர் கூறுவது ஏறாது. விதியால் மதியை வெல்ல முடியுமோ? நடப்பவை அனைத்தும் வினையால் தான். என்றும் நல்வினை செய்தவர்களே நலம் பெறுவர். கொடுத்த வாக்கை என்றென்றும் காப்பாற்ற வேண்டும். அற்பர்கள் பிறரை நம்ப மாட்டார்கள். இன்று வென்றவர் நாளைத் தோற்பர். எந்த காலத்தில் எது நடக்க வேண்டுமோ அது நடந்தேத் தீரும். பிறருக்குக் கேடு நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கேடடைவர். பொய்ச் சாட்சி சொன்னால் அவன் குலமே அழியும். மங்கையர் மனதை யார் அறிவார்? சிறியவர் செய்யும் பிழையைப் பொறுத்தல் பெரியவர் கடனே என்பன போன்ற பல வாழ்வியல் நற் சிந்தனைகளைக் கம்பராமாயணத்தின் வழி நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

துணை நூற்பட்டியல்

1.இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன்,சாரு பதிப்பகம், சென்னை, 2016.
2.எல்லைகள் நீத்த இராமகாதை,பழ.கருப்பையா,விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.
3.கம்பன் புதிய தேடல், அ. அ. ஞானசந்தரத்தரசு,தமிழ்ச்சோலைப்பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
4. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன்,வள்ளி பதிப்பகம், சென்னை,2019.
5.கம்பன் காட்டும் வைணவப் பேருலகம், அமுதன்,லக்‌ஷண்யா பதிப்பகம், சென்னை,2019.
6.கருத்திருமன். பி,சி.கம்பர் கவியும் கருத்தும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2018.
7.காசி. ஆ, கம்பரும் திருத்தக்கதேவரும்,தமிழ்ச்சோலைப்பதிப்பகம், சென்னை, 2010.
8.காலமும், கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம் புதுச்சேரி, சென்னை.
9.சக்தி நடராசன்.க, கம்பரின் கை வண்ணம், சரசுவதி பதிப்பகம், ஆர்க்காடு, 2017,
10. பழனிவேலு. தா, காலத்தை வென்ற கம்பபல்லவி பதிப்பகம், ஈரோடு. 2021.
11.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.


முனைவர். க.மங்கையர்க்கரசி,
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II),
மீனம்பாக்கம், சென்னை. -
https://orcid.org/0000-0002-0895-0460   

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.