முனைவர் பட்ட ஆய்வாளர் -  பொ. அபிராமி, தமிழாய்வுத்துறை, காவேரி மகளிர் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா. (பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்றது) - நெறியாளர் - முனைவர் ச. இராமலட்சுமி, துணை முதல்வர் மற்றும் துறைத் தலைவர், தமிழாய்வுத்துறை, காவேரி மகளிர் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா (பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்றது)


ஆய்வுச் சுருக்கம்    

சங்க இலக்கியங்கள் காதலையும் வீரத்தையும் கொண்டவைகளாகும். வீரமுடன் இணைந்த மன்னராட்சி முறையின் சிறப்பினைப் பற்றி கூறுகின்றன. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கின்ற பண்பானது அனைத்து மக்களிடமும் விளங்கியது. அதில் மன்னராகப் போற்றப்பட்டவரின் கடமைகள் மனிதநேயத்தன்மையுடன் காட்டப்பட்ட தன்மையினைப் பற்றி அறியலாம். மனிதர்களின் குறைகளைப் போக்கி விட்டு மனிதனது பெருமையையும் உரிமையையும் நிலைநாட்டுவது மனிதநேயப் பண்பாகும். மன்னர்களின் ஆட்சியின் சிறப்பினால் மாதம் மும்மாரி பொழிந்து நாட்டினைச் செழிப்பாக வாழ வைத்த செய்தியினையும் அறிந்து கொள்ள முடிகின்றது. மன்னர்களின் மனித நேயப் பண்பு செல்வத்தைத் தனக்கென சேர்த்து வைக்காமல் பிறருக்குக் கொடுக்கும் ஈகை பண்போடு விளங்கியத் தன்மை கூறப்படுகின்றது. போரின் போதும் அனைவரையும் காப்பாற்றியமை மனிதநேயம் மிக்க செயலாகப் போற்றப்படுகின்றது.

கலைச்சொற்கள்: வீரம், மனிதநேயம், மன்னர்கள், ஈகை, போர்

முன்னுரை

இலக்கியங்கள் காதல், வீரம், கொடை, மனிதம் போன்றவற்றில் சிறந்து விளங்கி இருக்கின்றன. புலவர்களின் நுண்ணறிவும், ஆழ்ந்த சிந்தனையும் சேர்ந்து மனிதத் தன்மையின் அடையாளமாக விளங்கக் கூடிய ஒன்றான மனிதநேயம் என்பதனை அனைவருக்கும் அறிவுறுத்தியது. ஓரறிவு உயிரிலிருந்து ஆறறிவு உயிர் வரை மனிதனால் பாதுகாக்கப் படுகின்ற அனைத்தும் மனிதநேயத்தின் அடிப்படையாகத் திகழ்கிறது. மனிதன் என்ற சொல்லானது மனிதம் என்ற சொல்லில் இருந்து பிறந்தது. மனதில் பலவகையான எண்ணங்கள் தோன்றினாலும் நல்ல எண்ணங்களே மனிதனைச் சிறந்தவனாகக் காட்டுகிறது. இத்தகைய சிறப்புப் பெற்ற மனிதத்தன்மையினை வெளிப்படுத்துவது மனிதமாகும். மனிதனை மனிதன் மதித்து அன்பு செய்வதையே முக்கிய நோக்கமாகக் கருதுகின்றது. மனிதனது குற்றங்களைப் போக்கி மனிதனது பெருமையையும் உரிமையையும் நிலைநாட்டுவதே மனிதமாகும். வறுமை இல்லாத வாழ்வினை மக்களுக்கு அளிக்க விரும்பினர். நாட்டில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிரம்பி நாடு செழிப்புற இருக்க வேண்டும் என்பதனையே தங்களுடைய கொள்கையாகக் கொண்டு மன்னர்கள் வாழ்ந்தார்கள். மாதம் மும்மாரி மழை பொழிந்து நாட்டினை வளப்படுத்தியது. மனிதத்தன்மையை உணர்ந்த மன்னர்கள் மக்களுக்கு முன்னுதாராணமாக விளங்கினார்கள். இதனால் மனிதநேயம் சங்க இலக்கியத்தில் சிறந்த செல்வாக்குடன் விளங்கியது என்பதனைக் காணலாம்.

ஆட்சி முறை    

தமிழ்ச்சங்க ஆட்சியாவது பாரம்பரிய மன்னராட்சியாகும். இந்த ஆட்சியில் மன்னர்கள் ஒரு நன்னடத்தை வரம்பிற்குட்பட்டு ஒழுகுவர். அரசன் தனது உயர் நிலையின் பெருமிதத்தையும், மக்களுடைய நலனை ஓம்பியும், சட்டம், அமைதி என்பனவற்றைக் காத்தும் நிலைநாட்ட வேண்டும். நல்லாட்சி புரியும் மன்னன் இறந்த பின்னர் அவருக்குப் புதல்வர்கள் இல்லையெனில் யானையின் துதிக்கையில் மாலையினைக் கொடுத்து வீதியில் விடுவார்கள். அம்மாலையை யானை யாருடைய கழுத்தில் இடுகின்றதோ அவர்களையே அடுத்த மன்னராக எண்ணுவார்கள் என்பதனை,

“ கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்
விழுமியோன் மேல்சென் றதனால் – விழுமிய
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுதல் அரிது.” (1)

என்ற பழமொழி வெண்பா ஒன்று உரைக்கின்றது. மன்னருக்கு உரிமைகளும் கடமைகளும் இருந்தன. சிம்மாசனம் என்பது ரோஜாக்களால் ஆன படுக்கையல்ல முட்களால் நிறைக்கப்பட்டது. ஆகவே தன் மக்களைக் காக்க வேண்டும் குடிமக்களைக் காப்பாற்றாத மன்னன் நரகம் எய்துவான்என்பதனை,

“ கானக நாடனை! நீயோ,பெரும
நீயோர் ஆகலின்,நின் ஒன்று மொழிவல்,
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவோடு ஒன்றாது காவல்,
குழவி கொள் பவரின், ஓம்புமதி !
அளிதோ தானே, அது பெறல்அருங் குரைத்தே.” (2)

என்ற புறநானூற்றுப் பாடல் உரைக்கின்றது. மன்னர்கள் நாட்டினைக் காக்க வேண்டிய முறைகளைப் பற்றி எடுத்துரைக்கின்றவர்களாக ஐம்பெரும் குழுவிலும்,எண் பேராயத்திலும் உள்ளவர்கள் செயல் பட்டனர். அமைச்சர்கள், புரோகிதர்கள், சேனாதிபதிகள், தூதவர்கள், சாரணர்கள் (ஒற்றர்கள்) போன்றவர்கள் ஐம்பெருங்குழுவில் இருக்கின்றவர்களாவர். தொழிலாளர் தலைவர்கள், உத்தியோகஸ்தர்கள், நீதிப் பாதுகாப்பாளர்கள், பாதுகாப்பு வேலை செய்வோர், நகர மக்கள்,சேனைத் தலைவர், யானை வீரர், குதிரை வீரர், இவர்கள்அல்லது இவர்களின் பிரதிநிதிகள் கூடிய சபைக்கு எண்பேராயம் என்று பெயரிட்டனர். இவர்கள் மன்னன் நீதி தவறிய போது இவர்கள் இடித்துரைத்து மன்னரை நல்வழி படுத்தினர் என்பதனை,

“ இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும். “ (3)

என்ற திருக்குறளின் வழி அறிய முடிகின்றது. இவ்வாறாக மன்னர்களின் ஆட்சி சிறந்த விளங்கியுள்ளது.

அரசனின் உயிர்

பரம்பரையாக நாட்டினை ஆளுகின்ற உரிமையைப் பெற்ற மன்னர்கள் பெரியோர்களின் அறிவுரைப் படியும், மந்திரி சபை, மக்கள் சபையின் ஆலோசனைக்குட்பட்டு ஆட்சி நடத்தியமைத் தெரிய வருகின்றது. மன்னர்கள் மக்களின் உயிராக இருந்த நிலைமையானது மாறி மக்கள் மன்னர்களின் உயிராக மாறினர் என்பதனை,

“ மன்உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன்
தன்னுயிர் என்னும் தகுதி.” (4)

என்று மணிமேகலையும்,

“ வையம் மன்னுயிராக அம்மன்னுயிர்
உய்யத்தாங்கும் உடல் அன்ன மன்னன்” (5)

என்று கம்பராமாயணமும் எடுத்துரைக்கின்றன. உலகை உயிராகவும், அவ்வுயிரைத் தாங்கும் உடலை அரசனாகவும் கூறுகின்றனர். அரசர்களுக்காக மக்களும் மக்களுக்காக அரசரும் வாழ்கின்ற மனிதம் நிறைந்த சமூகமாக விளங்கியது.

வரி பெறுதல்

தன்னாட்சிக்குட்பட்ட நாட்டில் வாழ்பவரிடம் வரிபெறும் உரிமை மன்னனுக்கு இருந்தது. அது புரவு, இறைஎன்ற சொற்களால் குறிக்கப்பெறுகின்றது. இறை என்பது அரசனைக் குறிக்கும் சொல்லாகும். ஆகவே இறைவனுக்குரிய வரி என்னும் பொருள்பட அச்சொல்லை ஆண்டனர் எனலாம். புரவு என்பதற்கு விளை நிலம் என்ற பொருளும் படும். போர்களின் போதுஅழிக்கப்படுவது விளைநிலமே எனவே விளை நிலத்தைக் காப்பாற்றுவதற்கு என்ற பொருளில் புரவு என்று அழைக்கப்பட்டிருக்கலாம். ஏற்றுமதி, இறக்குமதிக்கு வரி பெற்றதை, பட்டினப்பாலை என்ற நூல் கூறுகின்றது. உழவர்களும் வணிகர்களும் தவிர ஏனையோர் வரி செலுத்தினர் என்று கூறச் சான்றுகள் இல்லை. வரி பெறும் அளவும் இலக்கியங்களில் கூறப்படவில்லை. ஆனால் அதிகமான வரி பெறுதல் கூடாது என்று பிசிராந்தையார் கூறுவதனை,

“யானை புக்க புலம் போல” (6)

என்ற புறநானூற்றுப் பாடல் உரைக்கின்றது. இவ்வாறு பெறப்பட்டவரியானது தான் வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு கொடையாக மன்னன் கொடுப்பான் என்பதை,

“ முந்நூ றூர்ந்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர்” (7)

என்று கபிலர் கூறியுள்ளார். அரசனுக்குக் கிடைக்க வேண்டிய வருவாயின் அளவில் ஒரு பங்கினை மக்களுக்கு நிலமாகப் பிரித்துக் கொடுத்தனர். அதில் கிடைத்த வருவாயினைக் கொண்டு மக்கள் இன்புற்றனர். அரசியற் கோட்பாடுகள் ஏட்டளவில் நின்று விடாமல்மன்னர்கள் அவற்றினை நடைமுறைப்படுத்தினர். இதனை,

“எண்ணிழல் வாழ்நர் சென்னிழற் காணாது
கொடியனெம் இறையெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றம் கோலே னாகுக.” (8)

என்று தலையானங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்கூறுவதாக சான்றுள்ளது. மக்கள் இன்னலின்றி வாழும் செங்கோல் ஆட்சியை விரும்புகின்றான். இவ்வாறாக மன்னரின் பரந்த மனப்பான்மையை எடுத்துரைத்து மனிதநேயத்தைப் போற்றியுள்ளனர்.

ஈகையின் சிறப்பு

தன்னிடம் உள்ள செல்வத்தைப் பிறருக்கு ஈவதால் உண்டாகும் புகழே நிலைத்த பேற்றினைத் தருவதாக அமையும் என்னும் கருத்தினை வலியுறுத்திக் கூறுகின்றது. கிணற்றிலிருந்து நீரினை இறைக்க இறைக்க நீர் ஊறும் அதனைப் போல பிறருக்கு உதவி செய்து வந்தால் தம்முடைய செல்வம் பெருகும் என்பதை உணர்ந்து செயல் பட்டனர். பொருள் தேடுவதின் காரணமே பிறருக்குக் கொடுப்பதற்கு என்பதனை,

“பிறர்க்கென முயலும் பேரருள் நெஞ்சமொடு
பொருட்பிணி போகிய நங்காதலர்” (9)

என நற்றிணைப் பாடல் உரைக்கின்றது. ஒருவரிடம் நிலையாக இல்லாமல் கைமாறி மாறி செல்வதால் செல்வம் எனப் பெயர் கொண்டது. ஆகவே உழைத்துச் சேமித்தப் பொருட்களைத் தனக்கு மட்டும் சொந்தமாகக் கொள்ளாமல் பிறருக்குக் கொடுத்து உதவுவதையே சிறப்பாக எண்ணினார்கள். இதனை,

“திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து
வல்லாய் ஆயினும் வல்லுநர் ஆயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகுமதி” (10)

செல்வம் நிலையில்லாதது என்பதனை உணர்த்துவதோடு, நிலையில்லாத செல்வத்தால் பெரும் பயனை அடைவதற்கு முன்னர் அச்செல்வம் கையில் உள்ள போதே பிறருக்குக் கொடுத்து உதவி செய்து பெருமை பெருவதே சிறந்ததாகும் என்பதனைப் புறநானூறு நூலின் மூலம் ஆசிரியர் கூறுகின்றார். இதற்குச் சான்றாக வள்ளுவரும்,

“நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை” (11)

எனத் திருக்குறள் சுட்டுகின்றது. நிலையில்லாத செல்வத்தை நிலைடயெனக் கருதும் மக்களும் உள்ளனர். இது அறிவில்லாத தாழ்ந்த செயலென்பதை இதன் மூலம் கூறியுள்ளது. பொருள் சேர்ப்பதை விட துன்பம் ஆகிய இறுதி முடிவு வருவதற்கு முன்பே உலகத்தின் மீதுள்ள ஆசையை நீக்கி நல்வினையாகிய ஈகையைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உரைக்கின்றார்.

மன்னர்களின் மனிதம்

இருநாடுகளுக்கிடையேயான போராக இருந்தாலும், இயற்கையினால் பாதிப்பு ஏற்பட்டாலும், தீவிரவாதத் தாக்குதலாக இருந்தாலும் மக்கள் பாதிப்பிற்கு ஆளாகும் போது ஓடிச்சென்று உணவு, உடை, தங்குவதற்குத் தேவையான சூழல் போன்றவற்றை ஏற்படுத்தித் தருவது ஒவ்வொருவரின் கடமையாகும். இதனை,

“அலங்குவளைப் புரவி ஐவரோடு சிவணி
நிலந்தலைக் கொண்ட பொலம்
ஈரைம் பதின்மரும் பொழுது கனத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்” (12)

மகாபாரதத்தில் குருஷேத்திரப் போர் ஏற்பட்டது. பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் அங்கிருந்த படை வீரர்களுக்கும், போரில் காயம் பட்டவர்களுக்கும் உணவு அளித்து உபசரித்தார் மன்னன் பெருஞ்சோற்று உதியலாதன் என்னும் என்னும் செய்தி புறநானூற்றுப் பாடல் மூலம் அறிய முடிகிறது. இம்மன்னனின் உதவி கைம்மாறு கருதாத உதவியாக அமைகிறது. ஏனெனில் உதவும் குணம் அனைவருக்கும்வர வேண்டும் என்பதற்கும், பிறருக்கு உதவி செய்வதால் நமக்கு என்ன பயன் கிடைக்குமென்பதை ஆராயாத மனம் வேண்டும் என்பதற்கும் சான்றாக உள்ளது.

மக்களின் நல்வாழ்விற்காக அறம் மாறாமல் ஆட்சி புரிவது மன்னரின் இன்றியமையாத கடமையாகும். மன்னன் மட்டுமின்றி மன்னனின் பொருட்களாகக் கருதப்படுகின்ற செங்கோலும், வெண்கொற்றக் குடையும் அறத்தோடு சிறப்பாக அமைய வேண்டும் என்பதனை,

“அறன்நிழல் எனக்கொண்டா ஆய்குடை அக்குடை” (13)

என்னும் கலித்தொகை பாடல் உரைக்கின்றது. மேலும், ஆறறிவு மக்கள் மட்டுமின்றி ஓரறிவு உயிர்கள் வரை உதவுகின்ற சிறந்தவர்களை வள்ளல்கள் என்று உரைத்தனர். சிறிய நாட்டின் மன்னனாக இருந்த போதும் பிறருக்கு உதவிய பாரி, காரி, ஓரி, அதியமான், பேகன், நள்ளி போன்றோரை கடையேழு வள்ளல்கள் என்று போற்றுகின்றனர். இவை மட்டுமல்லாமல் நீர் வளத்தின் இன்றியமையாமையை மன்னர்கள் உணர்ந்தனர். என்பதனை,

“நீரின் றமையா யாக்கைக்கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்க் கொடுத்தோரே
உண்டி முதற்றே யுலகின் பிண்டம்
உணவென படுவது நிலத்தொடு நீரே
நீரு நிலனும் புணரி யோரின்
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே.” (14)

உழவுத் தொழிலுக்கு அடிப்படைத் தேவையாக அமைந்திருப்பது நீராகும். நீர் நிலைகளைப் பெருக்கி நாட்டை வளப்படுத்துவது அரசியலில் அரசனின் தலையாயக் கடமை என்று கூறுகிறார். பசியும், பகையும் , பிணியும் இல்லாமல் மக்கள் வாழ வேண்டுமென்றால் உணவு பற்றாக்குறை உண்டாகக் கூடாது. அதற்கு நீர் இல்லாத நிலம் இருத்தல் கூடாது. ஆகவே நீர் நிலைகள் பலவற்றை ஆங்காங்கே ஏற்படுத்தித் தருதல் ஒரு மன்னனின் தலையாய கடமையாகும் என்றுரைக்கிறார் குடபுலவியனார் என்னும் புலவர். அத்தகைய அரசனே நிலைபெற்ற புகழ்பெற முடியும் என்று அறிவுத்தியதோடு, அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டுமென்பதையும் புறநானூற்றின் மூலம் சான்று காட்டியுள்ளனர்.

முடிவுரை

இன்றைய அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உலகம் சுருங்கி விட்டது. ஆனாலும் உலகில் இன்றைக்கும் மனிதம் தேவையான ஒன்றாகவே உள்ளது. மக்களிடையே மனிதாபினமானம் குறைந்து வரும் காலகட்டத்தில் இன்றைய உலக மக்களும் ஏற்று நடப்பதற்கு ஏதுவானதாக அமைவது சங்க இலக்கியக் கருத்துக்களாகும். வாழ்வில் பின்பற்ற பட வேண்டிய அறங்கள், மனிதருக்கு மனிதன் உதவும் தன்மை, பிறர் துயரைத் தன் துயராக எண்ணும் விதம் போன்றவற்றால் இன்றும் உலகம் நிலைபெற்றுள்ளது என்பதற்குச் சான்றுகளாக மன்னர்களின் வாழ்க்கை அமைந்துள்ளது. மன்னர்கள் மக்களின் உயிராகவும், மக்களின் உயிர் மக்களின் உயிராகவும் விளங்கினர். எனவே மக்களுக்கோ அல்லது மன்னர்களுக்கோ ஆபத்து நேரிடுகின்ற பொழுது ஒருவருக்காக ஒருவர் வாழ்ந்து மறைந்துள்ளனர். ஆட்சி முறையிலும், அமைச்சர்களின் குழுவிலும், ஈகை செய்வதிலும் மன்னன் முன்னோடியாக திகழ்ந்துள்ளனர்.

துணை நூற்பட்டியல்

    பழமொழி
    புறநானூறு – 5
    திருக்குறள் – 448
    மணிமேகலை – காதை -7
    கம்பராமாயணம் – அயோத்தியாகாண்டம்
    புறநானூறு - 184
    புறநானூறு – 110
    புறநானூறு – 72
    நற்றிணை -186
    புறநானூறு – 27
    திருக்குறள் – 331
    புறநானூறு -2
    கலித்தொகை – 99
    புறநானூறு -18

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.