முன்னுரை

பண்டைய தமிழர் விலங்கியல், தாவரவியல் பற்றிய புலமை பெற்றிருந்தனர். ஓரறிவு முதலான உயிர்களைக் குறித்த செய்திகள் தொல்காப்பியம் தொடங்கி சங்ககாலம், சங்க மருவிய இலக்கியங்கள் ஆகியவற்றில் காணக்கிடக்கின்றன. அவை நேரடியாகவும் மறைமுகமாகவும் அடைமொழியாகவும், உவமைகள் வாயிலாகவும் கூறப்படுகின்றன. குறிப்பாக உயிரினங்களோடு இயைந்த தமிழர் தம் வாழ்வியல் தொடர்பையும் உயிரினங்கள் பற்றிய வாழ்வியல் பதிவுகளையும் சங்க இலக்கியம் விரிவாக விளக்கிக் காட்டியுள்ளது. அவற்றில் மரங்களின் வகைகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பாலை நிலம்

காதலால் கூடிக் கலந்த இருவரது பிரிவு ஒழுக்கத்தினைக் குறிப்பது பாலைத்திணையாகும். இவை அகத்திணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கோடைக்காலத்தில் எங்கும் வெப்பம் பொறுக்கமுடியாத நண்பகலில் மரங்களெல்லாம் காய்ந்து கரிந்து நிற்கும் வெஞ்சுரம் மழையே இல்லாத கொடிய நிலம் என்று பாலை நிலம் பற்றிக் குறிப்பிடுவர்.

குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை என்ற நான்கு திணைக்கும் நிலம் வகுத்த தொல்காப்பியர் பாலை என்றோர் நிலம் வகுக்கவில்லை.இதனை,

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் (தொல்.பொருள்.5)

எனும் சூத்திரம் வழி தெரிந்து கொள்ளமுடிகிறது.

குரவம் மரம்

குரவம் மரத்தினை சங்கப் பாடல்கள் குரா எனும் பெயரில் சுட்டுகிறது. இம்மரத்தின் அறிவியல் பெயர் சோமிலியா ஆசியடிகா என பெயரிடப்பட்டுள்ளது.

குரவம் மரம் பற்றி ஐங்குறுநூறு,

நறும் பூங்குரவம் பயந்த
செய்யாப் பரவை கொய்யும் பொழுதே (ஐங்.344)

என்கிறது. பொருள்தேடச் சென்றத் தலைவன் வரவில்லை. மாறாக இளவேனில் பருவம் வந்து, குரவம் மலர்கள் மலர்ந்தது என்று கூறும் இடத்தில் குரவமரம் எடுத்தாளப்பட்டுள்ளது. குரவ மரத்தின் மலர்கள் சிறிய அளவாக இருக்கும் என்பதை நறிய பூக்கள் என்று பாடல் அடி கூறுகிறது. இம்மரத்தின் மலர் வெண்மை நிறம் என்பதை,

குறுங்காற் குரவின் இணர் வான்பூ (நற்.266)

எனச் சுட்டப்பெறும் நற்றிணைப் பாடல் அடி வெண்மை நிறப் பூக்களுடன் குரவம் மரம் காணப்படும் எனக் குறிப்பிடுகிறது. இம் மலரின் வடிவினை அகநானூறு,

அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர்குரவின் (அகம்.237)

என்ற பாடல் அடி குரவ மலரின் அரும்பு பாம்பின் பல்போன்ற வடிவம் உடையது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

இவ்வாறு குரவ மரத்தின் மலர் பற்றி இலக்கியங்கள் குறிப்பிடுகிறது. இவற்றைத் தாவர நூல், வெண்மையான பூக்களை உடையது. நறுமணம் உள்ள மலர், முன்பனிக்காலத்தில் கொழுந்துவிட்டு பின் பனிக்காலத்தில் மலரும் என விளக்கம் தருவது ஈண்டு குறிக்கத்தக்கது.

புன்க மரம்

பாலை நிலத்தில் இடம்பெறும் மற்றொரு வகை புன்கமரமாகும். இதன் அறிவியல் பெயர் பொன்கமியா பின்னடா (pongamia pinnata) என்பதாகும்.
(கு.வி. கிருஷ்ணமூர்த்தி, தமிழரும் தாவரமும், ப. 397)

இப்புன்கமரம் பற்றி தாவர நூல் வழி சில செய்திகளை அறியமுடிகிறது.

இலையுதிர் மரம். இலைகள் சிற்றிலைகள், இரட்டைகளானவை மலர்கள் இளம் சிவப்பு தோய்ந்த வெண்மையானது. சமவெளிகள், கடற்கரையில் காணப்பெறும் மலைப்பகுதியில் வளரும் (ஜான் பிரிட்டோ. மையத் தமிழகத் தாவரவியல். ப.208 )  என்பர் தாவர நூலார். இவ்வாறு இடம்பெறும் புன்க மரம் பற்றி ஐங்குறுநூறு பாடல் வரி விளக்கம் தருகிறது.

எழில் தகை இளமுலை பொலியப்
பொருப் பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே (ஐங்.347)

எனும் மேற்கூறிய ஐங்குறுநூற்றுப் பாடல் மூலம் தோழி, தலைவன் பொருள்தேடி திரும்ப வராத நிலையினைக் குறிக்கும் இடத்தில் புன்கமரம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. நெற்பொரியைப் போன்ற அழகிய பூக்களையும், அழகிய தளிர்களையும் உடைய புன்கமரம் இளவேனிற் காலத்தில் மலரும். இவ்விடத்தில் புன்கமரத்தின் மலர், தளிர் முதலிய உறுப்புகளைப் பாடல் அடி சுட்டுகிறது. இவற்றோடு சங்க மகளிர் தன் மார்பகத்தில் இதன் இலையை அரைத்துப் பூசிக்கொண்ட செய்தியை எண்ணும்போது, புன்கமரத்தின் இலையில் ஒருவகை குளிர்ச்சித் தன்மை காணப்பட்டிருக்க வேண்டும். புன்க மரத்தின் மலர் பொரிபோன்று அளவில் சிறியதாகவும், உருண்டு வென்மையாகவும் காணப்படுவதைப் பொரிப் பூம் என்ற பாடல் அடி உணர்த்துகிறது.

இதுபோன்று குறுந்தொகைப் பாடல் அடியும் புன்கமரத்தின் மலரினைப் பொரிக்கு உவமைப்படுத்துகிறது.

பொரிப்பூம் புன்கொடு பொழில் அணி (குறுந். 341)

என சுட்டப்பெறும் பாடல் அடி இதனை வெளிப்படுத்துகிறது. மேலும் ஐங்குறுநூற்றுப் பாடல் புன்கமரத் தளிர் அழகுடன் காணப்படும் என விளக்குகிறது. இதனை,

தளிர்ப் புன்கின் தாழ் காவின் (பொருநர்.196)

என இடம்பெறும் பொருநாராற்றுப்படை பாடல் அடியும் புன்கமரத்தின் தளிர் அழகுடன் காணப்படும் எனவும் இதன் இலைகளை ஆடையாக பயன்படுத்தினர் என்பதையும் வெளிக்காட்டுகிறது.

வெண்கடம்ப மரம்

சங்க இலக்கியத்தில் வெண்கடம்ப மரம் பற்றிய செய்திகள் காணக்கிடக்கின்றன. இதற்கு அறிவியல் பெயராக மைட்ரோஜினா பார்விட் டோலியா (mitrogynaparvitolia) என்று பெயரிடப்பட்டுள்ளது.

சங்க இலக்கியங்கள் சுட்டும் வெண்கடம்பரம் பற்றித் தாவரநூலில் குறிப்புகள் கிடைக்கப் பெறவில்லை.

வலம் சுரி மராஅம் வேய்ந்து நம்
மணம் கமழ் தண் பொழில் மலரும் (ஐங்.348)

பொருள் காரணமாகப் பிரிந்த தலைவன் வரவில்லை. இளவேனில் பருவம் தொடங்கிவிட்டது என்று கூறும் தோழி கூற்றுப் பாடலில் வெண்கடம்பமரம் எடுத்தாளப்பட்டுள்ளது. வலமாகச் சுழிந்த பூக்களைக் கொண்ட வெண்கடம்பமரம் நறுமணம் கமழும் மலர்களைத் தன்னகத்தே கொண்டது. இங்கு கடம்பமரத்தின் மலர் வலது பக்கமாக சுழிந்துக் காணப்படும் என்று மலரின் வடிவத்தையும் நறுமணமிக்க மலர்களை கொண்டது எனவும், பாடல் அடிகள் முலம் அறியமுடிகிறது. அகநானூறும்,

வலம் சுரி மரா அத்துச் சுரம் கமழ் புதுவீ (அகம்.83)

கடம்ப மரத்தின் மலரானது குதிரையின் தலையில் காணப்படும் மயிர் போன்று வலப்புறமாக சுற்றிச் சுருண்டு மலரும் என்று ஐங்குறுநூற்று பாடல் வரியோடு தொடர்புப்படுத்தி மலரின் வடிவம், மலரின் நறுமணம் போன்ற கூறுகளை எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு காணப்படும் மலர்கள் இலைகள் இன்றி உதிர்ந்த நிலையில் காம்புகளில் காணப்படும்.

அரும்பு அற மலர்ந்த ஆய்ப்பூ மரா அத்து (மேலது. 257)

என இடம்பெறும் அகநானூற்றுப் பாடல் வென்கடம்பமரத்தில் இலைகள் இன்றி அதிகமான மலர்கள் காணப்படும் எனச் சுட்டுகிறது. இதனை மேலும் அரண்செய்யும் விதமாக,

தீய்ந்த மரா அத்து ஓங்கல் வெஞ்சினை (குறுந்.211)

என மேற்கூறிய குறுந்தொகைப் பாடல், கடம்பமரம் இலைகள் உதிர்ந்து, அக்காம்புகளில் மலர்ந்து காட்சியளிப்பதை விளக்குகிறது. இவ்வாறு ஐங்குறுநூற்றுப் பாடல் அடி மலரின் வடிவத்தைக் கூறுவதோடு கடம்பமரத்தின் அடிப்பகுதியின் அமைப்பையும் குறிப்பிடுகிறது.

நெடுங்காங் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி (ஐங். 383)

என்று ஐங்குறுநூற்றின் 383ஆவது பாடல் நெடிய அடிப்பகுதியும்,

குறுகிய கிளைகளும் (கொம்பு) உடையது என்று மரத்தின் அடிப்பகுதியையும், கொம்புகளையும் பற்றி விளக்குகிறது. இவ்வாறு இடம்பெறும் அடிப்பகுதி சிவப்பு நிறமாக காணப்படும் என்று நற்றிணைப்பாடல் அடி கூறுகிறது.

செங்கால் மராஅத்து அம்புடைப் பொருந்தி (நற். 148)

என மேற்சுட்டிய பாடலடி வெண்கடம்பமரத்தின் அடிப்பகுதி சிவந்து காணப்படும் என்பதை செங்கால் என்று குறிப்பிடுவதன் மூலம் புலப்படுகிறது.

பாதிரி மரம்

பாலை நிலத்தில் இடம்பெறும் மற்றொரு மரம் பாதிரி எனும் இனமாகும். “இதன் அறிவியல் பெயர்,

ஸ்டீரியஸ்பெர்ம் கெலொநோட்ஸ் (streospermumchelonodes) எனப் பெயரிட்டு அழைப்பர்” (கு.வி. கிருஷ்ணமூர்த்தி, தமிழரும் தாவரமும், ப. 395)

இந்தப் பாதிரி மரம் பற்றி ஐங்குறுநூறு குறிப்பிடுகின்றது.

அம் சினைப் பாதிரி அலர்ந்தென
செங்கண் இருங்குயில் அறையும் (ஐங்.45)

என இடம்பெறும் ஐங்குறுநூறு பாடல், தலைவன் பொருள்தேடி திரும்ப வராத நிலையில், பாதிரி மலர்ந்து இளவேனில் பருவம் தொடங்கிய நிலையை சுட்டுகின்ற இடத்தில் இம்மரம் இடம்பெறுகிறது. அழகிய கிளைகளை உடைய பாதிரி மலர்ந்துவிட்டது என்பதை குயில் உலகிற்கு அறிவிக்கும். இவ்விடத்தில் பாதிரி மரத்தின் கிளைகள், மலர் முதலிய உறுப்புகளை ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது.

சங்க கால மக்கள் இம்மலரினை மல்லிகையுடன் சேர்த்து தமது கூந்தலில் சூடி மகிழ்ந்த செய்தியினை,

மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத் தகட்டு எதிர் மலர் வேந்தகூந்தல் (நற்.52)

என்ற நற்றிணைப் பாடல் அடி உணர்த்துகிறது. இதன் மூலம் பாதிரி மலர் மணமுடையது என்பது வெளிப்படுகிறது.

வெள்ளிளோத்திர மரம்

வெள்ளிளோத்திரம் என்ற மரம் இலவம் மரத்தைச் சார்ந்த இனமாகும் என்பதை பொ.வே.சோமசுந்தரனார் உரைவழி அறியமுடிகிறது. இதன் அறிவியல் பெயர்,

சிய்பா பெண்டட்ரா (ceiba pentandra) என்பதாகும்.
(கு.வி. கிருஷ்ணமூர்த்தி, தமிழரும் தாவரமும், ப. 456)

தாவர நூலார் இம்மரத்தினைப் பற்றி கூறுமிடத்து,

மரத்தில் முட்கள் காணப்படுவதில்லை. இலை உதிர் மரம், இலை மூன்று வட்ட அடுக்கில் அமைந்தவை. சிற்றிலைகளாகப் பிரிந்தவை. மலர்கள் கிளைகளில் கொத்தாகக் காணப்படும். மலர்கள் வெண்மை நிறமானவை, ஆதிகாலத்தில் ஆப்பிரிக்காவில் காணப்பட்டவை

(ஜான் பிரிட்டோ. மையத் தமிழகத் தாவரவியல். ப.69 )

என்று குறிப்பிடுவர். ஐங்குறுநூற்றின் 301 ஆவது பாடல்,

மால் வெள்ளிளோத்திரத்து மை இல் வால்
அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும் (ஐங்.301)

என்று இம்மரம் பற்றிக் குறிப்பிடுகின்றது.

தலைவன் பொருள் காரணமாகப் பிரிந்து செல்லுகையில் வழியில் இம்மரத்தின் பூக்கள் உதிர்ந்துகிடந்ததாக ஐங்குறுநூறு சுட்டுகின்றது. பெரிய வெள்ளிளோத்திர மரத்தினது குற்றமற்ற வெண்மை நிறமுடைய பூங்கொத்துக்களை கொடிய பாலை நிலத்தில் செல்வோர், வெப்பத்தைப் போக்கும் பொருட்டு தலையில் சுமந்துசெல்வர் என்பது இப்பாடலடி உணர்ந்தும் பொருளாகும். வெள்ளிளோத்திரம் மரத்தின் மலர்கள் அடர்த்தியாகவும் ஒருவித குளிர்ச்சியும் உடையது என்பதைப் பாடல் உணர்த்துகிறது. மேலும் வெள்ளிளொத்திரம் மலர்கள் வெண்மைநிறம் என்னும் ஐங்குறுநூறு கூறுகிறது. தாவர நூலார் கருத்தும் இதனைச் சுட்டியே அமைகிறது. சங்க காலத்தில் சுட்டப்பெற்ற வெள்ளோத்திரம் என்ற பெயர் தற்பொழுது தாவரநூலில் இலவம் என்ற இனமாக வழக்கத்தில் உள்ளது.

ஓமை மரம்

ஓமை என்ற மரம் பற்றி சங்க இலக்கியத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அறிவியல் பெயர் ஆனோஜெய்சுஸ்லாஃப்பிலி ஃபோலியா (Anogeissuslatlifolia) என்பதாகும்.
(கு.வி.கிருஷ்ணமூர்த்தி, தமிழரும் தாவரமும்,ப.373)

மேலும்,

தற்பொழுது வெள்ளை ஞெமை என்று அழைக்கப்படுகிறது. மிகப் பெரிய மரமாக வளரும் தன்மை உடையவை. கிழக்கு மேற்கு மலைத்தொடர்களில் வளரும் மற்றும் இலையுதிர்காடுகளில் காணப்படும். இவை பெருமளவில் சமவெளி பகுதிகளில் காணப்படும். (மேலது.ப.92)

என்று தாவர நூல் மூலம் ஓமை மரம் பற்றி அறியமுடிகிறது.

ஓமை ஒரு மரம்,

இறந்தோர் மன்ற தாமே பிறங்குமலை
புல் அர ஓமை நீடிய (ஐங்.91)

என்ற தலைவன் பொருள் காரணமாக பிரிந்து செல்லும் காட்டுப் பகுதியை குறிப்பிரும் இடத்தில் ஓமை மரம் எடுத்தாளப்பட்டுள்ளது. வெப்பத்தாலே ஒளி வீசுகிற மலைகளையும், தழைகள் இன்றி நீண்டு நிழலின்றி உலர்ந்து பொருக்குற்று வற்றிய அடிப்பகுதியை உடைய ஓமை மரம் என்று ஓமை மரத்தின் கிளை, அடிமரம், உயரம்,முதலியவற்றையும் வறண்ட நிலத்தில் காணப்பெறும் இவ் ஓமைமரத்தின் தன்மையையும் இவ்வைங்குறுநூற்று பாடல் சுட்டிச்செல்கிறது.

ஐங்குறுநூறு ஓமை மரத்தின அடிப்பகுதியை புல் அரை ஓமை என்று குறிப்பிடுகிறது.

அரைய மரம்

அரைய மரமென்பது அரசமரமாகும். இதன் அறிவியல் பெயர் ஃபிய்யெஸ் ரிலிசியோசா (Fieusreligiosa) என்பதாகும்.
(கு.வி.கிருஷ்ணமூர்த்தி, தமிழரும் தாவரமும்,ப.110)

தாவர நூல் இம்மரத்தைப் பற்றிச் சில செய்திகளைத் தருகிறது.

இலைகள் அகன்ற முட்டை வடிவானவை. பழம் முதிரும்போது இளம் சிவப்பாக இருக்கும் சமவெளிகள், கடல் ஓரங்களில் காணப்படும். கோவிலில் பயிர்செய்வர். இமயமலை காடுகளி மிகுதியாகக் காணப்படும்
(ஜான் பிரிட்டோ,மையத் தமிழகக் களவகைத் தாவரவியல். ப.694)

என்று தாவர நூலில் விளக்கப்படுள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள அரையம் மரம் சங்க காலத்தில் காணப்பட்டதை தருகின்றது.

ஐங்குறுநூறு,

வேனில் அரையத்து இலை ஒலி வெரீஇ (ஐங்.325)

என ஐங்குறுநூறு அரையமரத்தைப் பற்றிக் கூறுகிறது. தலைவன் பொருள்தேடச் செல்லும் குறிப்பினை அறிந்த தோழி சுரத்தின் கொடுமையைக் கூறுகின்ற இடத்தில் அரையமரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இளவேனில் காலத்தில் அரையமரத்தின் இலைகள் ஓசை எழுப்ப அவ்வோசையால் போகில் பறவை அஞ்சி வேறு இடத்தை நாடிச் செல்லும் என சுட்டப்பெறும் பாடல் பொருள் மூலம் இளவேனில் காலத்தில் அரைய மரத்தின் இலைகள் சற்று காய்ந்து காணப்படும் என்றும், வெப்பக்காற்றால் இலைகள் ஒன்றோடுறொன்று உராய்வதன் மூலம் ஒருவித ஒலி எழுப்பும் என இலையின் தன்மைக் கூறப்பட்டுள்ளது.

அரையம் என குறிப்பிடும் இம்மரம் தற்பொழுது அரசமரம் என மறுவி வழக்கில் காணப்படுகிறது.
( கு.வி.கிருஷ்ணமூர்த்தி, தமிழரும் தாவரமும், ப.111)

நுணாமரம்

பாலைத்திணையில் இடம்பெறும் மற்றொன்று நுணா என்ற ஒருவகை மரமாகும்.

இதன் அறிவியல் பெயர் மோவிண்டா கோரிலா (Movinda corela) எனப் பெயரிட்டு அழைப்பர். ( கு.வி.கிருஷ்ணமூர்த்தி, தமிழரும் தாவரமும், ப.393)

தாவர நூலார் இம்மரம் பற்றி விளக்கம் தருவர்.

குறிஞ்செடி இனத்தைச் சார்ந்தது. இலைகள் கிளை இல்லாதது. அல்லிகள் வெண்மை நிறம் உடையது. மலைகள் கடற்கரை பகுதிகளில் பரவலாக காணப்படும்.32. என்று நுணா மரம் பற்றித் தாவர நூலார் குறிப்பிடுவர்.

சங்க இலக்கியமும் இம்மரத்தினைப் பற்றிச் சில குறிப்புகளைத் தருகின்றது.

சுரும்பு சுளித்து ஆலும் இருஞ் சினைக்
கருங்கால் நுணவம் கமழும் பொழுதே (ஐங்.342)

என மேற்காட்டிய பாடல் மூலம் தலைவன் பொருள்தேடிச் சென்று இளவேனில் பருவத்தில் வராத நிலையை எண்ணி தோழி கூறும் இடத்தில் இம்மரம் எடுத்தாளப்பட்டுள்ளது. பெரிய கிளைகளையும், கரிய அடிப்பகுதியையும் உடைய நுணா மரங்கள் நன்கு மலர்ந்து திசையெங்கும் மணம்பரப்பும். இவ்விடத்தில் நுணா மரத்தின் அடிப்பகுதி, கிளை, மலர் முதலிய உறுப்புகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

முடிவுரை

அகத்திணைகள் ஐந்து வகைப்படும். அவற்றில் பாலை ஒன்றாகக் கருதப்படுகிறது. பாலை நீர்வளம் பெறாத நிலம். இருப்பினும் பெருமளவிற்கே அந்நிலத்துக்கே உரிய உடற்கூறு அடிப்படையில் ஓரறிவு முதல் ஆறறிவு உயிர் வரை பிரித்துள்ளார் தொல்காப்பியர். ஓரறிவு உயிர்களாக வெள்ளிளோத்திரம் மரம், ஓமை மரம், இலவம் மரம், அரைய மரம், நெல்லி மரம், வேப்பம் மரம், நுணா மரம், கோங்கு மரம், குரவம் மரம், வெண்கடம்பமரம் முதலியவை இடம்பெற்றுள்ளன. இம்மரங்களைப் பற்றி ஐங்குறுநூற்று பாக்கள் வழி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவியல் ஆய்வாளர்கள் கருத்துக்களும் பதிவுசெய்யப்படுள்ளன. ஐங்குறுநூறு கூறும் கருத்துக்களை வெளிப்படுத்தும் பிற சங்க இலக்கியப் பாக்களை எடுத்துக்காட்டி விளக்கப்படுள்ளது. பாலை நிலம் நீர் வளமின்றி காணப்படும். அவற்றிற்கு ஏற்றாபோல் வண்ட நிலத் தாவரங்களை இனம் கண்டு பாடல்களில் புலவர்கள் பாடியுள்ளனர்.

துணைநின்ற நூல்கள்

    சதாசிவ ஐயர்,ஐங்குறுநூறு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.1999.

    இளம்பூரணர்,தொல்காப்பியம்,கழக வெளியீடு, சென்னை.1986.

    புலியூர் கேசிகன் நற்றிணை, கௌரா பதிப்பகம், சென்னை.2012.

    புலியூர் கேசிகன்,அகநானூறு, கங்கை புத்தகம் நிலையம், சென்னை.2015.

    புலியூர் கேசிகன்,குறுந்தொகை, பாரதி பதிப்பகம்,சென்னை.2021.

    முத்து.இராமமூர்த்தி, பெரும்பாணாற்றுப்படை, கௌரா பதிப்பகம்,2005.

    பொருநராற்றுப்படை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.2002.

    கு.வி.கிருஷ்ணமூர்த்தி, தமிழரும் தாவரமும், பாரதிதாசன் பல்கலைக்கழகம், 2007.

    ஜான் பிரிட்டோ,மையத் தமிழகக் களவகைத் தாவரவியல், சி.எல்.எஸ்.பிரஸ், சென்னை.1993.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.