முன்னுரை

உலக இலக்கியங்களின் தொன்மையும், சிறப்பும் வாய்ந்த நூல்கள் என போற்றப்படுபவை கடைச்சங்க நூல்களே ஆகும். அவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்பனவாகும். இப்பதிணென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று நாலடியார் எனும் நூலாகும்.

பதினெண்கீழ்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் நீதிநூல் நாலடியார். உலகப்பொதுமறையான திருக்குறளில் நிலையாமை பற்றி ஒரு அதிகாரம் மட்டும் காணப்பட, நாலடியாரில் மூன்று அதிகாரங்களில் நிலையாமை அமைந்துள்ளதால் நாலடியாரை நிலையாமையை வலியுறுத்தும் நூல் என்று அழைக்கலாம். நிலையாமையை முதலில் வைத்து வற்புறுத்தும் பாட்டுக்களும் சொல்லோவியங்களாய் இலக்கியச் சுவையோடு அமைந்துள்ளமை இந்நூலின் சிறப்பியல்பாகும். இந்த புவியில் கண்ணில் காணும் அனைத்தும் நிலையில்லாதவை என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய தேவை இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நிலையற்ற தன்மையை நாலடியார் வழி எடுத்துகூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நிலையாமை – விளக்கம்

நிலையாமை என்பதற்கு உறுதியற்றதன்மை என்று கோனார் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.

வாழ்கின்ற காலத்தில் நாம் வாங்கிய மாடுகளும். கட்டிய வீடுகளும், மனைவி, மக்கள், உறவினர்களும், வாங்கிய தங்கம், வெள்ளி போன்ற அனைத்தும் அழிந்துவிடும் தன்மை கொண்டதால் அழியாத சிவகதி என்ற பரகதியைச் சேர வேண்டும்.

மேலும்,

நாம் கண்ணில் பார்க்க கூடிய எல்லாப் பொருட்களும் ஒருநாள் அழிந்தே தீரும் கண்களுக்கு ஏது புலனாகவில்லையோ அதுவே அழியாப் பொருள். இந்த உலகில் எதுவுமே நிலைத்து இருக்கப் போவதில்லை.

என்பதை யோகி கைலாஷ்நாத் அவர்களின் சித்தர் களஞ்சியம் கூறுகிறது. எனவே நிலையாமை ஒன்றே நிலையான உண்மை என்பதை உணர முடிகிறது.

நாலடியாரில் நிலையாமை

நாலடியாரில் மூன்று அதிகாரங்கள் (முப்பது பாடல்கள்) நிலையாமையைப் பற்றி பாடப்பட்டுள்ளது. மக்களுக்கு நிலையாமை பற்றிய புரிதல் இருந்தால்தான் தர்மம், அறம், மனிதாபிமானம், உதவுதல் போன்ற நல்ல குணங்கள் மேலோங்கும் என்பதற்காகத்தான் நிலையாமையை முதலில் வைத்து தொகுத்துள்ளார் பதுமனார். மக்கள், செல்வத்தையே எல்லாமாக கருதுவதால் செல்வத்தின் நிலையில்லாத் தன்மையும், இளமை துடிப்புடன் இருக்கலாம் ஆனால் திமிருடனும், செருக்குடனும் இருக்க கூடாது என்பதை அறிவுறுத்த இளமை நிலையில்லாத் தன்மையும், உடல் வலிமையையும் மேனி அழகையும் சிறப்பாகக் கருதுவதால் அதுவும் நிலையில்லாதது என்றும் வலியுறுத்திக் கூறுவது இந்நூலின் சிறப்பு தன்மையாகக் கருதப்படுகிறது.

செல்வம் நிலையாமை

செல்வம் என்பதை கல்விச்செல்வம், மக்கட்செல்வம், பொருட்செல்வம் எனப் பலவாறு பொருள் கொள்ளலாம். இங்கு பொருட்செல்வம் என்றே எடுத்தாளப்படுகிறது.

பெருஞ்செல்வர் ஒருவர் தன்னிடத்தில் உள்ள செல்வம் அனைத்தும் நிலையானவை என எண்ணினால் பின்னொரு காலத்தில் அச்செல்வங்கள் அனைத்தும் இழந்து வறிஞராய் நிற்பர் என்றுரைக்கிறார் வள்ளுவர். செல்வம் சிறிதும் நிலையுடையப் பொருள் என நினைப்பது தகுந்ததன்று என்கிறார் நூலின் ஆசிரியர்.

செல்வம் நிலையாமை, நம்மிடம் உள்ள பொருள்கள் எவ்வாறு நம்மை விட்டுப் போகும் என்று நினைப்பது அனைவருடைய மனதிலும் தோன்றுவது இயல்பே. ஆனால் செல்வம் மாறும், அழியும் என்பதை நாம் கண்கூடாகவே பல குடும்பங்களில் காண்கின்றோம். அதுவும் இன்றையச் சூழ்நிலையில் செல்வம் என்பது ஒரு மனிதனின் கௌரவரமாகக் கருதப்படுகிறது. “இல்லாதவன் பேச்சு சபையேறுமா? என்ற ஒரு நடைமுறை வழக்கு உள்ளது. இது அனுபவம் இல்லாதவன் பேச்சு சபையேறுமா? என்று பொருள் கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில் பொருட்செல்வம் இல்லாதவனைக் குறிக்க இவ்வாக்கியம் பயன்படுத்தப்படுகிறது. எவ்வளவுதான் கல்விச் செல்வம் உட்பட பல செல்வங்கள் இருந்தாலும் பொருட்செல்வத்தையே பெரிதாகக் கருதுகின்றனர். பொருட்செல்வம் நிலையில்லாதது என்பதை இருவகையில் விளக்கப்படுகிறது.

செல்வன் ஏழையாதல்

இளம் வயதில் பெரிய வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சிறிது காலத்தில் அன்றாட வாழ்க்கை நடத்தவே துன்பப்பட வேண்டிய நிலையில் உள்ள குடும்பத்தை கண்டிருக்கின்றோம். எப்படி இந்த நிலைமை வந்தது என்றால் ஆளுக்கொரு காரணம் சொல்வார்கள். இதைத்தான் நாலடியாரில்,

அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூருழெனிற் செல்வமொன்று
உண்டாக வைக்கற்பாற் றன்று (நாலடி.1)

அறுசுவை உணவு வகைகளை விருப்பத்தோடு மனைவி ஊட்டிட அவற்றிற்கெல்லாம் முதற்பிடி உணவையை மட்டும் ஏற்றுக்கொண்டு, அடுத்த பிடியுணவை வெறுத்து வேண்டாமென்று நீக்கி உண்ட பெருஞ்செல்வர்களுக்கும் தரித்திரர்களாகிப் பிறிதோரிடத்துக்கு சென்று கூழினை யாசிப்பார்கள் (நாலடி.1.1) என்று கூறுகிறார். இதையே,

வெற்றிவேட்கையிலும் வெண்கொற்றக் குடையின் கீழ் அமர்ந்து யானை மீது பவனிவந்த அரசர்கள் கூட வறுமையுற்று, நடைதளர்ந்து ஓர் ஊரை அடைக்கலம் அடைய நேரிடும்.

என்று அதிவீரராம பாண்டியனின் வெற்றிவேட்கை பத்தாம் பாடல் கூறுகிறது. இதிலிருந்து செல்வன் ஏழையாவான் என்று அறிய முடிகிறது.

செல்வம் வரும் போகும்

செல்வம் எப்போது வரும் எப்போது போகும் என்று யாருக்கும் தெரியாது. நேற்றைய ஏழை இன்றைய பணக்காரன், இன்றைய பணக்காரன் நாளைய ஏழை என்ற ஒரு வழக்கு காணப்படுகிறது. இதனையே திருவள்ளுவர்.

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்ல்வம்
போக்கு மதுவிளத் தற்று ( குறள். 332)

என்ற குறளில் விளக்குகிறார்.

யாருடைய செல்வம் அழிந்துவிடும் என்பதை,
செல்வம் என்றுதாம் செல்வழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் – எல்லில்
கருக்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும் (நாலடி.8)

என்ற பாடல் விளக்குகிறது.

செல்வம் நிலையில்லாதது என்று உணர்த்தும் ஆசிரியர் அதனால் அறம், தர்மம், தானம் போன்ற காரியங்களில் ஈடுபடுமாறு கூறியுள்ளார். ஆனால் க.ப.அறவாணன். தனது அற இலக்கிய களஞ்சியம் என்ற நூலில்,

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு செல்வநிலை அடைந்துவிட்ட பெரிய குடும்பங்கள் இன்றும் தாழாமல் இருக்கின்றன. மேலும் உச்சத்தை நோக்கி உயர்ந்து கொண்டுள்ளன. செல்வம் நிலையாமை என்ற கருத்து வேளாண்மைக்கு மழையை மட்டுமே நம்பி இருந்த காலத்தில் தோன்றிய ஒன்றாகும். வணிக நிலை செழித்த பிறகு இக்கருதுகோள் பொய்த்தது.

என்கிறார். இக்கருத்து ஏற்புடையதாக இல்லை. வேளாண்மையை விட வணிகத்தில் தான் ஏற்ற இறக்கங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது. எனவே செல்வம் தங்குவதும், மாறுவதும் தனி மனிதனின் திறமையையும், செல்வத்தைக் கையாளும் முறையையும் பொருத்தே அமையும் என்பது தெளிவுபடுகிறது.

இளமை நிலையாமை

பழுத்த ஓலையைப் பார்த்து குருத்து ஓலை பரிகாசிக்கிறது.(பழமொழி) என்பது போல முதுமையைப் பார்த்து ஏளனம் பேசுபவர்கள் ஒருநாள் முதுமை அடைவது உறுதி. இன்றைக்கு இருக்கும் இளமை நாளை இல்லாமல் போகும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இளமை காலத்தை நல்ல விவேகிகள், முதுமைப்பருவம் வருமென்று கருதி இளமைப் பருவத்திலேயே மனத்திலுள்ள பற்றுகளையும், ஆசைகளையும் துறந்தனர். இளமைப் பருவம் நிலைத்திருக்கும் என கருதியிருந்தவர்கள் தடியை ஊன்றிக்கொண்டு துன்பத்தோடு கஷ்டப்படுவார்கள் என்பதை,

நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவியிடத்தே துறந்தார் புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோலூன்றி
இன்னாங் கொழுந்திருப் பார் (நாலடி.11)

என்ற பாடல் விளக்குகிறது.

இன்றைக்கு இருக்கும் இளமை நாளை இல்லாமல் போகும் என்னும் உண்மையினை உணர்ந்து விட்டால் பெண்களின் உடலழகை மனிதர்கள் பெரிதாகக் கொள்ளமாட்டார்கள் (நாலடி.14) இது பெண்களின் அறிவை மதிக்காமல் இளமையையும், அழகையும் மட்டுமே பார்ப்பவர்களுக்குக் கூறியுள்ளார்.

இளமையில் உள்ள வேகமும் துடிப்பும் முதுமையில் மாறி உடல் தளர்ந்துவிடும். அப்போது பார்பவர்களால் கேள்விகள் கேட்கப்பட்டு உடம்பின் உள்பகுதியின் இயல்பு ஆராயப்படும். இப்படிப்பட்ட முதுமைப் பருவம் வருவதை முன்னமே உணர்ந்த விவேகிகள் இளமைச் செருக்குக் கொள்ளமாட்டார்கள் (நாலடி. 18)

மனிதர்களில் பெரும்பான்மையினர் தங்கள் இறுதி ஆண்டுகளைத் துன்பம் ஆக்கிக்கொள்ள தங்கள் தொடக்க் ஆண்டுகளைப் பயன்படுத்தி விடுகின்றனர்.

என்று மது.ச.விமலானந்தம் தனது அருமையும் பெருமையும் என்ற நூலில் கூறியுள்ளார். எனவே இளமைக் காலத்தை முறையாக பயன்படுத்த வேண்டும். சிறிது காலம் இருக்கும் இளமைப் பருவம் ஒவ்வொரு மனிதனின் வாழ்கையிலும் மிகச் சிறந்த பகுதியாகும். இந்தப் பருவமே ஒரு மனிதனின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் நிர்ணயிக்க கூடியது. எனவே இந்த சிறிய காலமான இளமை பருவத்தை அறவழியில் பயன்படுத்தி இப்பிறப்பையும் மறுபிறப்பையும் செம்மையாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

உடலின் நிலையற்ற தன்மை

இன்று இருப்பார் நாளை இல்லை. உறங்கியவர் விழித்தால் தான் உண்டு என்று பல உலக வழக்குகள் நடைமுறையில் காணக்கிடைக்கின்றன. நேற்றுப் பார்த்தேன் காலையில் பார்த்தேன் இந்த இளம் வயதிலேயே இறந்துவிட்டான் என்று கூறக் காண்கிறோம். மனிதன் வாழ்க்கைப் புல்லின் நுனிமேல் இருக்கும் பனித்துளியைப் போல எனக் கருதி இப்போதே தரும காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதை,

புன்னுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்த அறிவினை – இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான் கேள் அலறச்
சென்றான் எனப்படுத லால் (நாலடி.29)

என்ற பாடல் விளங்குகிறது. இதனையே,

நெடுநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்றும்
பெருமை உடைத்துஇவ வுலகு (குறள்.336)

ஒவ்வொரு நாளும் ஞாயிறு உதித்து மறைவதால் ஆயுள் முடியும் முன் உபகாரம் செய்தவர்களான எத்தகையோரும் நிலவுலகத்தின் மேல் நிலைத்திருக்க மாட்டார்கள். (நாலடி.22) என்பதை,

நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள அது உணர்வார்ப் பெறின் (குறள். 334)

என்ற குறளடிகள் கூறுகிறது. இதனையே,

பிறப்பாரும் சாவாரும் என்றும் உளர் (நான். கடிகை.57)

என்று நான்மணிக்கடிகையும் கூறும். இப்பூவுலகில் நிலைப்பார் எவருமிலர். அதேபோல் மரணம் என்பது எப்பொழுது நிகழும் என்பதை எவரும் அறிய முடியாது. எனவே உடனடியாக அறம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

முடிவுரை

நாலடியாரைத் தொகுத்த பதுமனார் அறம் செய் என்று முதலில் அறத்தைக் கூறினால் எவரும் அறம் செய்ய மாட்டார்கள் என்பதை உணர்ந்தே நிலையாமையை முதலில் வைத்துத் தொகுத்துள்ளார். அதுபோல இன்றைய கால சூழ்நிலையிலும் மக்களை அறச்செயலில் ஈடுபடச் செய்ய வேண்டுமானால் முதலில் நிலையாமை என்பதை எடுத்துக் கூறவேண்டியுள்ளது.

நாலடியார் தொகுத்த கி.பி. 8ஆம் நூற்றாண்டில் அறத்தை வலியுறுத்தச் செல்வம், இளமை, உடல் போன்றவை நிலையில்லாதவை என்பதை எடுத்துக்கூற வேண்டிய அவசியம் இருந்திருக்கிறது. இளமை, உடல் போன்றவை மறைந்தால் திரும்ப தோன்றாது என்று கூறிய ஆசிரியர் செல்வம் மட்டும் வரும் போகும் என்று கூறியுள்ளார். செல்வம் நிலையில்லாதது என்றாலும் மீண்டும் உருவாக்கி கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது. உடல் இளமையை பற்றி பேசிய ஆசிரியர் மன இளமையைப் பற்றி பேசவே இல்லை. உடல் நிலையில்லாதது என்றும் ஆன்மா நிலையானது என்றும் கூறியுள்ளார்.

உசாத்துணை நூல்கள்

    சி.எஸ். முருகேசன், சித்தர் பாடல்கள் (பெரிய ஞானக்கோவை) ப. 216.
    யோகி கைலாஷ்நாத், சித்தர் களஞ்சியம், ப.215.
    அதிவீரராம பாண்டியர்ன், வெற்றி வேட்கை, பாடல்.50.
    க.ப. அறவாணன், அற இலக்கிய களஞ்சியம், ப. 959.
    பேராசிரியர், மது.ச விமலானந்தம், அருமையும் பெருமையும், ப.138.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.