முன்னுரை

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்று அசதியாடல் ஆகும். அசதியாடல் குறித்துப் பல்வேறு இலக்கியங்களில் காணப்பட்டாலும் பக்தி இலக்கியங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. சிலம்பில் இளங்கோவடிகளும், பெரியபுராணத்தில் சேக்கிழாரும், மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், திருவானைக்கா அகிலாண்டநாயகி மாலை ஆகிய நூல்களிலும் அசதியாடல் குறித்துப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன.கம்பரும் தம் இராமாயணத்தில் அசதியாடல் குறித்துப் பாடியுள்ளார் என்பது குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.

அசதியாடல்

அசதியாடல் என்பது தனித்தும், ஓரிருவரைத் துணையாகச் சேர்த்துக் கொண்டும் விளையாடும் விளையாட்டாகும். அசதியாடல் என்பது பரிகசித்தல், வேடிக்கை வார்த்தைக் கூறுதல், சிரித்துப் பேசுதல் என்று தமிழ் அகராதி பொருள் தருகிறது. உடன்பாடாக உரைப்பதுபோல் எதிர்மறைப் பொருள் பேசுவதே அசதியாடல் என்பதாகும்.அவ்வாறு எதிர்மறைப் பொருள்கள் வெளிப்படுவதேப் பாடலை அமைப்பது கவிஞரின் திறமையாகும்.

சிலம்பில் அசதியாடல்

இராமன் வனம் சென்று போது உயர்திணை, அஃறிணை உயிர்கள் எல்லாம் அழுதன. இதை வைத்துக் கொண்டு இளங்கோவடிகள் ஆய்ச்சியர் குரவையில்

‘மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத்
தாலிய சேவடி சேப்பத் தம்பியொரடும் கான் போந்து
(ஆய்ச்சியர் குரவை- படர்க்கைப் பரவல் 1 )

இராமா காலில் கல்லும், முள்ளும் குத்த கானகம் செல்கிறாயா, மகாபலிச்சக்கரவர்த்தி மூன்று அடி நிலம் எடுத்துக் கொள்ளச் சொன்னபோது, நீ ஒழுங்காக உன் பிஞ்சு விரல்களால் மூன்று அடி நிலத்தை எடுத்துக் கொண்டிருக்கவேண்டும். அதைவிட்டு விட்டு அவன் தலைமேல் கால் வைத்து விளையாடினாய். இப்போது அனுபவி என்பது போல் பாடுகிறார்.

கலித்தொகையில் அசதியாடல்

குறளன் ஒருவன் கரையில் நின்ற தொன்றின் நிழல் நீருள்ளே நுடங்கினாற் போல, நுடங்கிய மெல்லிய மென்மையோடே இவ்விடத்து உடலிலே கூன் தோன்ற கூனி நடக்கின்றவளே, நின்னொடு சில உசாவுவேன். அங்ஙனம் நான் உசாவுவதற்கு நீ நல்வினை செய்திருத்தல் வேண்டும், சற்றே இவ்விடத்தே நிற்பாயாக என்றான்.

குரலைக் கேட்ட கூனி கண்ணால் பார்க்கத் தகுதி இல்லாத குறளாய் பிறத்தற்கு ஏதுவாகிய நாழிகையின் முகூர்த்தத்தே, ஆண்டலைப் புள்ளுக்குத் தன் பெடை ஈன்ற பறழாய மகனே, நீ என்னை விரும்புவேன் என்று போகாமல் தடுத்தாய், நின்னைப் போல் குறளாய் இருப்பார் என்னைத் தீண்ட பெறுவார்களோ என்றாள்.

அன்னையோ, காண்தகை இல்லாக் குறள் நாழிப் போழ்தினான்

ஆண்டலைக்கு ஈன்ற பறழ் மகனே, நீ எம்மை
வேண்டுவல் என்று விலக்கினை நின் போல்வார்
தீண்டப் பெறுபவோ மற்று?
(கலித்தொகை-மருதக்கலி-94;5-8)

அதைக் கேட்ட குறளன் மாட்சிமைப்பட்ட கலப்பையில் தைக்கும் படை வாள் போல ஓரிடம் கூனாக மேலெழுந்து, ஓரிடம் முன்னே வளைந்து வலிய முறித்து விட்டாற் போல நிறைந்த அழகாலே எனக்குப் பொறுக்க இயலாத காமநோயைத் தந்தாய், யான் ஆற்றி இருக்க மாட்டேன். நீ அருளினால் என் உயிர் இருக்கும். இனி உன் எண்ணத்தைக் கூறு என்றான்.

அதைக் கேட்ட கூனி, இவன் மனக்குறிப்பைக் காணாய் என நெஞ்சோடு கூறி, வல்லுப்பலகையை எடுத்து நிறுத்தினாற் போன்ற, மகளிரைக்கூடும் முறை கல்லாத குறளனே, மக்கள் நடமாட்டம் இல்லாத உச்சிப் பொழுது என்று உணராது வந்து, என் கையைப் பிடித்து இழுத்து வீட்டுக்கு வா என்று சொல்லுவதற்கு ஏடா, நின் பெண்டிர் வேறு சிலர் உளவோ சொல்வாய் என்றாள்.

அது கேட்ட குறளன் நல்லாளே, தலைக்கு மேலும் நடுவில்லையாய் வாள் போன்ற வாயை உடைய கொக்கை உரித்தாற் போன்ற வளைந்த மடுப்பை உடையாய் என் கூறுகின்றதனைக் கேள். நின்னை யான் மார்பிடத்தே சென்று புல்லுவேனாயின் என்னுடைய நெஞ்சிலே அக்கூன் ஊன்றும். முதுகிலேயே புல்லுவேனாயின் முதுகில் கூன் கூசச் செய்யும், ஆதலால் கூடுதலையன்றி மயங்குதலையும் செய்ய மாட்டேன். இனி பக்கத்தே நின்று முயங்கும் படியாகச் சிறிது வருவாயாக என்ற குறளனை, கூனி இகழ்ந்து சொல்லுதலும் அவள் செலவு நோக்கி குறளன் தன் நெஞ்சுக்கு உரைத்தலும் அது கேட்ட கூனி சீ கெட்ட தன்மையை உடையவனே, நீ எம்மிடத்தினின்று போ என்றாள்.

அது கேட்டு அவன் அணுகுதலின், மக்களிற் பாதியானவனே, இனி இந்த எண்ணத்தைக் கைவிடு என்று கூறினாள். திரண்ட மரத்தின் வளைந்த இடத்தை விட்டு நீங்காமற் பற்றி வளர்ந்த பூங்கொடி போல, வடிவொத்தல் இல்லாத யாக்கையை முயங்கி எம்மைப் பாதுகாப்போம் என்று கூறுவாரும் பலராவர். இப்பரத்தமை உடையவன் பக்கத்தேப் புல்லுவதற்குத் தாராய் என்று கூறி நின்றனன். இங்ஙனம் கூற நமக்கு உண்டாகிய குறையாது தான் என அவன் கேட்பத் தன் நெஞ்சோடு கூறிக் குறிய வட்டினைப் போன்றவனே, உழுத்தம் பணியாரத்தினைக் காட்டிலும் மிகுதியாகத் துய்க்கப்பட்டிருக்கின்ற கூன் சாதியினுடைய பிறப்பு உன்னை விடத் தாழ்ந்ததோ என்றாள்.

இவ்வாறாக இருவரும் மாறி மாறி அசதியாடுகின்றனர் என்பதனை கலித்தொகை வழி அறிய முடிகிறது.

மீனாட்சி அம்மை பிள்ளை தமிழில் அசதியாடல்

உயிர்த்தோழியான திருமகள் தரையைக் காலால் உந்தி உயர்ந்த இடம் ஊஞ்சலில் அமர்ந்துள்ள மீனாட்சியின் தாமரை திருவடிகளைப் பார்க்கிறாள். வளைந்த பிறை தழும்பு அதில் தெரிகிறது. வாணி இதைப் பாரடி என்ன இது, இவள் மலரடியில் இது வலம்புரி சங்க ரேகையோ என்று கூவி, பரிகசித்து முத்துப்பல் தோன்றச் சிரிக்கிறாள். ஊடல் காலத்தில் சிவபெருமானின் தலைமுடியில் உள்ள பிறை நிலா அருந்தியதால் வந்த தழும்பு அதுவாகும். அதனை மறைமுகமாக இவ்வாறு கூறுகிறாள். திருமகள் தோழியர் முகத்தில் குறும்பு புன்னகை விரிகின்றது. மீனாட்சிக்கு நாணம் மிகுகின்றது பேரரசான அவருடைய என்றுமே வணங்காத முடிக்கு அப்போது அந்த நாணம் ஒரு வணக்கத்தை வழங்குகின்றது என பொருள் கொண்ட பாடல்.

“மல்கும் சுவட்டினை வலம்புரிக் கீற்றுஇதுகொல்
வாணிஎன் அசதிஆடி
மணிமுறுவல் கோட்டநின் வணங்கா முடிக்குஒரு
வணக்கநெடு நாண்வழங்கப்”
(மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ் பொன்னூஞ்சல் பருவம் 100 வது பாடல்)

கம்பராமாயணத்தில் அசதியாடல்

கம்பராமாயணத்தில் அனுமன் இந்திரஜித்தனை அசதியாடல்,

அனுமன், முதலியவரை இந்திரஜித் இகழ்தல், இராமன், சூர்ப்பணகையுடன் அசதியாடல், ஜடாயு, இராவணனை அசதியாடல், கும்பகர்ணன், இராவணனை அசதியாடல், வாலி இராமனை அசதியாடல் அனுமன் சீதையிடம் அசதியாடல் ஆகிய பல அசதியாடல்களைக் கம்பர் தம் இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அனுமன், இந்திரஜித்தனை அசதியாடல்

இந்திரஜித், மாயா சீதையை உருவாக்கி அவளை இராமன் மற்றும் வானர வீரர்கள் முன் கொலையும் செய்து விட்டு, நான் இங்கிருந்து அயோத்தி, மிதிலை சென்று அங்கிருப்பவர்களை எல்லாம் குலத்தோடு அழித்துவிட்டு வருவேன் என்று கூறிச் சென்றான். அனைவரும் பயந்தனர். வீடணன் வண்டு உருவில் சென்று அனைத்தையும் அறிந்து வந்து கூறினார். நிகும்பலையாகம் வெற்றி பெற்றால் இந்திரஜித்தனை யாராலும் வெல்லமுடியாது என்று சொல்ல, இராமன் ஆணைப்படியே இலட்சுமணன் யாகத்தை அழித்தான்.

அனுமன், இந்திரஜித்திடம் விசாலமான அலைகளை உடைய சமுத்திரம் போன்ற பரந்த சக்கர வியூகம் வகுத்து, நிகும்பலையில் நீ வேள்வி செய்ததை நாங்கள் கண்டிலமே. நீ அங்கு போர் புரிந்து இருப்பாய் இப்பொழுது நாண் ஒலியைக் கூட நாங்கள் கேட்டிலோமே. அயோத்தி நகரத்துக்குச் சென்று அங்குள்ளவர்களை அவர்கள் இனத்தோடு அழித்து எப்போது வந்தாய். நீ தொடங்கிய வேள்வி நன்கு நிறைவேறிற்றா? எடுத்துக் கொண்ட காரியம், நலமாக முடிந்ததா என்று கேட்டான்.

“தடந் திரைப் பறவை அன்ன சக்கர யூகம் புக்குக்
கிடந்தது கண்டது உண்டோ நாண் ஒலி கேட்டிலோமே
தொடர்ந்து போய் அயோத்தி தன்னைக் கிளையொடும் துணிய நூறி
நடந்தது எப்பொழுது வேள்வி முடிந்ததே கருமம் நன்றே?”
(நிகும்பலையாகப் படலம் 29 44)

பரந்த உலகையெல்லாம் தாங்குகின்ற ஆதிசேஷனை விடப் பெரிய திண்ணிய தோள்களை உடையவனும் பழியை விலகிய வேந்தனும் பரதனைச் சந்தித்து உமது வில்லாற்றலைப் புலப்படுத்தித் திரும்பி வந்தது எப்போது? போன காரியம் என்ன ஆயிற்று? நன்றாக நிறைவேறியதல்லவா? என்று கேட்டான்.

“ஏந்து அகல் ஞாலம் எல்லாம் இனிது உறைந்து இயற்கை தாங்கும்
பாந்தளின் பெரிய திண் தோள் பரதனைப் பழியின் தீர்ந்த
வேந்தனை கண்டு நீ நின் வில் வலி காட்டி மீண்டு
போந்ததோ உயிரும் கொண்டே ஆயினும் புதுமை அன்றே?”
(நிகும்பலையாகப்படலம் 29 45)

வானுலகில் இந்திரனுடன் போரிட்ட வலிமைமிக்க வில்லை உடைய சம்பரன் என்னும் அசுரனுடைய உயிரைப் போக்கித் தேவர்களுக்கு உதவி செய்த ஒப்பற்றவனாகிய தசரதனுக்கு மக்களாகத் தோன்றிய இராமனை முதலாக உடைய நால்வரில் இளையவரான சத்ருக்கணனைப் பார்த்து, நீ உனது வில்லின் வலிமையைப் புலப்படுத்தியதுண்டோ?

“அம்பரத்து அமைந்த வல் வில் சம்பரன் ஆவி வாங்கி
உம்பருக்கு உதவி செய்த ஒருவருக்கு உதயம் செய்த
நம்பியை முதல்வர் ஆன மூவருக்கும் நால்வரான
தம்பியைக் கண்டு நின் தன் தனு வலம் காட்டிற்று உண்டோ?”
(நிகும்பலையாகப் படலம் 29 46)

என்று கேட்டான்.

நெருப்பினை ஒத்தும் வைரம் போன்றதுமான அம்புகள், உன் உடலில் தைத்தலால் சிவந்த இரத்தம் உடம்பிலும், செவிலும், வாயிலும், கண்ணிலும் பாய்ந்து வழிய, இலங்கை சென்று அந்நகரில் புகுந்து கொண்டு நினது வஞ்சனைத் திறங்களை எங்கும் பரப்பச் செய்யும் மாயப் போரின் வலிமை அனைத்தும் இன்றுடன் முடியும் அல்லவா என்று கேட்டான்.

“தீ ஒத்த வயிர வாளி உடல் உறச் சிவந்த சோரி
காயத்தின் செவியினூடும் வாயினும் கண்களூடும்
பாயப் போய் இலங்கை புக்கு வஞ்சனை பரப்பச் செய்யும்
மாயப்போர் ஆற்றல் எல்லாம் இன்றொடு மடியும் அன்றே?”
(நிகும்பலையாகப்படலம் 2947)

நாக பாசமோ தாமரை மலரில் இருப்பவனாகிய பிரம்மனது பெருமை வாய்ந்த பிரம்மாஸ்திரமோ (எல்லா பொருட்கும்) பழையோனாகிய சிவபெருமானது பாசுபதாத்திரமோ? திருமாலுக்குரிய சக்கரப்படையோ வேறு யாதோ இனிமேலும் எங்கள் மேல் ஏவுவதற்கு நீர் விரும்பியுள்ளது வேறு யாதோ அதற்கு நாங்கள் மிகவும் அஞ்சி நடுங்குகின்றோம். போதும் கூற்றுவனார் நெருங்கி வந்துவிட்டார். (உம்மைக் கொல்ல வந்து விட்டார் என்பது குறிப்பு).

“பாசமோ மலரின் மேலான் பெரும் படைக்கலமோ பண்டை
ஈசனார் படையோ மாயோன் நேமியோ யாதோ இன்னம்
வீச நீர் விரும்புகின்றீர் அதற்கு நாம் வெருவிச் சாலக்
கூசினோம் போதும் போதும் கூற்றினார் குறுக வந்தார்”
(நிகும்பலையாகப்படலம் 2948)

என்று கூறினான்.

நீங்கள் வரங்களைப் பெற்றுள்ள தன்மையையும், மாயச் செயல்களில் வல்ல தன்மையையும், பெருமைமிக்க தேவர்களிடமிருந்து தெய்வத்தன்மை பொருந்திய படைக்கருவிகளைப் பெற்றுள்ள தன்மையையும், பிற வன்மையையும் நாங்கள் எண்ணி பிறகல்லவா உம்மை உயிருடன் தலையினைக் கவர்ந்து கொள்ள தீர்மானித்தது? அப்படிக் கூறும் வஞ்சினம் உள்ளது, அவ் வஞ்சினத்தில் இருந்து நாங்கள் தவறினோமா என்று கேட்டான்.

“வரங்கள் நீர் உடையவாறும் மாயங்கள் வல்லவாறும்
பரம் கொள் வானவரின் தெய்வப் படைக்கலன் படைத்தவாறும்
உரங்களோடு உன்னி அன்றோ உம்மை நான் உயிரினோடும்
சிரங்கொளத் துணித்தும் என்னக் கண்டது திறம்பினோமோ?”
(நிகும்பலையாகப் படலம் 29 49)

விடம் நிறைந்து ததும்புகின்ற கண்டத்தினைடைய சிவபெருமானும், பிரம்ம தேவனும், திருப்பாற்கடலில் படம் விரித்து எழுகின்ற ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டுள்ள திருமாலும், உடல் நடுக்கமின்றி உமக்குத் துணையாய் உதவிப் பாதுகாத்தாலும், நீ போரில் இறத்தல் உறுதி. உன் இடக் கண், தோள் ஆகியவை துடிக்கின்றன அல்லவா? இனியுமா உயிருடன் இருக்கப் போகிறீர்? என்று அனுமன், இந்திரஜித்திடம் கேட்டான். (நிகும்பலையாக படலம் 29 50)

உன்னைக் கொல்வேன் என்று முன்னர் சபதம் செய்த வில் வீரனாகிய இலட்சுமணன் நின்பக்கத்தை நெருங்கிச் சார்ந்து உன் படை முழுவதையும் அழித்து ’நீ விரைந்து போரிட வல்லையாயின் வருக’ என்று உன்னை அழைக்கின்றான். ஐயனே,வரிந்து கட்டப்பெற்ற அவனது வில் நாணின்றும் எழுகின்ற ஒல்லெனும் ஓசையானது நீ செய்து கொண்டிருக்கும் வேள்விக்கு ஓர் அங்கம் என்று கருதினாயோ என்று கேட்டான். (நிகும்பலையாகப் படலம் 29 51)

மூவுலகங்களையும் துன்பம் நீக்கிப் பாதுகாத்து அருளும் முதல்வனாகிய இராமனுக்குத் தம்பியாகிய இலட்சுமணனது போரினைக் காண தேவர்களும், முனிவர்களும் இன்னும் பல வகைப் பட்ட உலகங்களில் வாழ்வார் அனைவரும் வந்து நின்றனர். இனிமேல் தாமதிப்பது ஏன்? நீ இறப்பது உறுதி அல்லவா? என்று கூறினான் தர்மத்தினைக் காப்பவனாகிய அனுமன். (நிகும்பலையாகப்படலம் 29 52)

இவ்வாறு அனுமன், இந்திரஜித்திடம் அசதியாடினான்.,

அனுமன், முதலியவரை இந்திரஜித் இகழ்தல்

இந்திரஜித், அனுமன் கூறிய மொழிகளைக் கேட்டு நெருப்பு போன்று பெருமூச்சு விட்டு, மாலை அணிந்த பொன்மயமான தன் தோள்களினி ன்றும் மின்னொளி சிதற, பிளந்த வாயின் வழியாக வெப்பக் காற்று வெளிப்பட்டு வீச, வெகுளிச் சிரிப்பு மிகுதியாகத் தோன்ற, ’என் எதிரில் வந்து இம்மொழியினைக் கூறுகின்றீர்? நீர் கூறியதன் பொருள் யாதோ? அது என்னை இகழ்ந்து கூறியதேயாகும் என்று கூறி மேலும் சொல்லலானான்.

போர்கள் தோறும் தாக்கப்பட்டு இறந்த நீங்கள் செத்தவர் செத்தவரே என்பதற்கு மாறாக, உயிர்ப் பெற்று பிழைத்த இப்பொழுது முன்னுள்ள துன்பங்களை எல்லாம் மறந்து விட்டீரோ? இறத்தலை விரும்பி ,நெருங்கி வருவாயாக என்று போருக்கு அழைக்கின்றீர்கள். நீங்கள் இத்தனை பேரும் என்னால் அடிபட்டு இறக்கும்பொழுது, உயிரை மீட்பதற்குரிய மருந்தினை கையில் வைத்துள்ளீரோ? என்று கேட்டான் (நிகும்பலையாகப்படலம் 29 54)

என்னுடன் போரிட வருபவன் இலட்சுமணனே ஆகட்டும், அன்றி இராமனே ஆகட்டும், மேலும் இவருக்குத் துணையாக வந்தவர்களும் வந்து தடுத்து விலகட்டும்.. வானரப்படையாகிய வெள்ளம் கூட்டம் கூட்டமாக இறந்தொழிவதற்கு ஏதுவாகிய என் வீரத்தையும், என்னால் இராமலட்சும ணராகிய மானிடர் படும் துயரத்தையும், முனிவர்களும், தேவர்களும் ஒருங்கே காண்பார்கள் என்று கூறினான்.

“இலக்குவன் ஆக மற்றை இராமனே ஆக ஈண்டு
விலக்குவர் எல்லாம் வந்து விலக்குக் குரங்கின் வெள்ளம்
குலம் குலம் ஆக மாளும் கொற்றமும் மனிதர் கொள்ளும்
அலக்கணும் முனிவர் தாமும் அமரரும் காண்பர் அன்றே”
(நிகும்பலை யாகப் படலம் 2955)

எனது வில்லும் எனது திண்ணிய தோள்களும், இன்னுமும் நல்ல நிலையில் உள்ளவரையிலே என்னுடன் போரிடவரும் உடம்புடன் கூடிய உயிர்கள் எல்லாம் ஓடி ஒளியாமல் பிழைக்குமோ? கூனி வளைத்த உடம்பினையுடைய வானரங்களோடு இராம இலட்சுமணராகிய மனிதர்களையும் கொன்று, அவர்கள் தேவராகப் பிறந்து வானுலகு செல்லினும் அவர்களைத் தொடர்ந்து சென்று கொல்வேன். நீங்கள் முன்னர் பிழைத்தது போல, மருந்தினாலும் இப்பொழுது பிழைக்க முடியாது என்று இந்திரஜித், அனுமனிடம் கூறினான்.

“யாருடைய வில்லும் என் பொன் தோள்களும் இருக்க இன்னும்
ஊனுடை உயிர்கள் யாவும் உய்யுமோ ஒளிப்பு இலாமல்
கூனுடைக் குரங்கினோடு மனிதரைக் கொன்று சென்று அவ்
வானினும் தொடர்ந்து கொல்வென் மருந்தினும் உய்யமாட்டீர்”
(நிகும்பலை யாகப் படலம் 29 56)

செய்யும் வேள்வி இன்று நிறைவேறாமல் தவறிவிட்டது. நாங்களே வெற்றியடைந்தோம் என்று உம்முடைய வீரப் பேச்சையெல்லாம் எடுத்துக் கூறுபவர்களே, அவ்வாறு எடுத்துரைத்தல் வேண்டாம். நான் இனியும் தாமதிக்கப் போவதில்லை. உங்கள் தலைகள் தனித்தனியே சிதறுமாறு ஆராய்ந்து அழிக்க வல்ல வீரத்தன்மை, என் கையிலுள்ள அம்புகளாக, உங்களது உடம்பில் சென்று தைக்கும் என்று இந்திரஜித், அனுமனிடம் கூறினான். (நிகும்பலையாகப்படலம் 2957)

நான், உங்களைப் போல வாயளவில் பேசமாட்டேன். எனக்கு வெற்றியை இருமுறை அளித்தீர். தோல்வியுற்ற நீங்கள் இப்பொழுது விரைந்து தொழிலை மேற்கொள்வது என்னை வெல்வதற்காகவோ? நான் உங்களை அடைந்து வெகுண்டு போரிட்ட போது, ஒரு முறையேனும் என் முன்னே அஞ்சாமல் நிற்கக் கற்றீரோ?. இனிமேலும் இங்கு மாண்டு கிடக்கப் போகிறீர்களோ? அன்றித் தப்பி ஓடப் போகிறீர்களோ? என்று இந்திரஜித், அனுமனிடம் கேட்டான். (நிகும்பலையாகப்படலம் 2958)

மற்ற எல்லாம் நம்மை போல் வாயினால் சொல்ல மாட்டேன் வெற்றி தான் இரண்டும் தந்தீர் விரைவது வெள்ளைக்கு ஒல்லாம். ஊற்று நான் உறுத்தலத்தில் ஒருமுறை எதிரே நிற்க கற்றீரோ இன்னும் ஆண்டு கிடக்கிறோம். 29 58

இவ்வாறு இந்திரஜித், அனுமனுடன் அசதியாடினான்.

இராமன், சூர்ப்பணகையுடன் அசதியாடல்

சூர்ப்பணகை தன்னை ஏற்றுக்கொள் என்று இராமனிடம் வேண்டினாள். நீலமேகம் போன்ற இராமன் ஒரு விளையாட்டை மேற்கொண்டவனாகி, நங்காய் துன்பம் அறியாத அரக்கருடன், மானுடர் மணம் செய்து கொள்வது பொருந்தாது என்று சான்றோர் கூறுவர் என்று சொன்னான். (சூர்ப்பணகைப் படலம் 268) அதைக் கேட்ட சூர்ப்பணகை புகழ்வதற்கு அறிய ஊக்கம் நிறைந்த பக்தியின் பயனே இப்பிறவி என்று மட்டும் கூறுவதை அறியாமல் இராவணன் தங்கை என்று கூறியது அறியாமையின் விளைவாகும் என்று மனதில் நினைத்து இராமனை நோக்கி, பாம்பு படுக்கையில் பள்ளி கொள்ளும் பரந்தாமனைப் போன்றவனே, இதைப் பற்றி முன்னரே சொன்னேன். பழிக்கப்படும் அந்த அரக்கப் பிறவியை தேவர்களை வணங்கியமையால் நீக்கிவிட்டேன் என்று சொன்னாள். நங்காய் கவனித்துப் பார்க்கும்போது உன்னுடன் பிறந்தவர்களில் ஒருவனோ மூன்று உலகங்களுக்கும் சிறந்த தலைவனான இராவணன், மற்றொருவனோ குபேரன், அவர்கள் உன்னை எனக்குத் தருவார்கள் என்றால், ஏற்றுக்கொள்வேன். இல்லையென்றால் தனியாய் இருக்கும் நீ வேறு இடத்திற்கு செல்க என்றான் இராமன். அதற்கு சூர்ப்பணகை மீண்டும் பின்வருவனவற்றை சொல்லலானாள்.

உயர்ந்த அழகிய தோளை உடையவனே, காதலால் ஒன்று கலந்த மனத்தை உடைய மைந்தருக்கும், மங்கையருக்கும் உரியதாக வேதங்களே வகுத்து வைத்துள்ள மணமான ’கந்தர்வம்’ எனும் ஒன்று உள்ளது. எனக்கு மூத்தவர்களான இரண்டு வேந்தர்களுக்கும் அது விருப்பமுள்ளதாகும். அன்றியும் வேறொன்றையும் உனக்குச் சொல்ல வேண்டும் என்று சொன்னாள் சூர்ப்பணகை. எம் தமையனான இராவணன் முதலியோர் முன்பே முனிவர்களோடு முற்றிய பகையைப் பெற்றவர்கள். அம் முனிவர்களைக் கொல்வதில் நீதி முறையைப் பார்க்க மாட்டார்கள். முனிவர் கோலத்தில் உள்ள நீ தனியாக இருக்கின்றாய். அதனால் அவர்களுடன் நட்பு கொள்வதற்கு ஏற்ற செயல் இதுவல்லது வேறு இல்லை. என்னை நீ ஏற்றுக் கொண்டால், அவர்கள் உனக்கு இனிய நண்பர்களாகி, மண்ணுலகே அன்றி விண்ணுலகத்தையும் நீ ஆட்சிக்கு உரியதாக்கி, உன் கட்டளைக்கு அடங்கி நடப்பார்கள் என்று சொன்னாள். (சூர்ப்பணகைப்படலம் 272)

உடனே இராமன் நீ தரும் இன்பத்தைப் பெற்றேன். உன்னால் இது ஒன்று தானா? இன்னும் பல நன்மைகள் பெற்றேன். அரக்கரது அருளையும் அடைந்தேன். உன்னோடு நீங்காத செல்வ வாழ்வில் நிலையாக வாழும் வாழ்வையும் எப்போதும் பெற்றேன். சிறந்த அயோத்தி நகரத்தை விட்டு வந்த பின்பு, நான் செய்த தவம் பயனளித்துவிட்டது என்று கூறி, கட்டமைந்த வில்லை ஏந்திய அழகிய தோளை உடைய இராமன், ஒளி பொருந்திய பற்கள் வெளிப்படச் சிரித்தான்.

“நிருதர்தம் அருளும் பெற்றேன் நின் நிலம் பெற்றேன் நின்னொடு
ஒருவ அருஞ்செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன் ஒன்றோ
திரு நகர் தீர்ந்த பின்னர் செய்த தவம் பயந்தது என்னா
வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான்”
(சூர்ப்பணகைப் படலம் 273)

இவ்வாறு இராமன், சூர்ப்பணகையுடன் அசதியாடினான்.

ஊர் மக்கள் தங்களுக்குள் அசதியாடல்

சூர்ப்பணகையைக் கண்ட ஊர் மக்கள் தங்களுக்குள், இலட்சுமணனால் உடல் கூறுகள் அறுபட்ட நிலையில் இலங்கை வந்த சூர்ப்பணகையைக் கண்டவர்கள், பலவாறாகப் பேசிக்கொண்டனர். புகழுடன் வாழும் இராவணனின் தங்கை, இவளுக்கு வேறு யாரும் தீமை செய்ய முடியாது. இவள் தன் உறுப்புகளைத் தானே அறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றனர்.

“உன்னவே ஒண்ணுமோ ஒருவரால் இவள்
தன்னையே அரிந்தனள் தான் என்றார் சிலர்”
(சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 581)

இவ்வாறு, இலங்கையில் உள்ள மக்கள் தமக்குள் பேசிக்கொண்டனர்.

ஜடாயு, இராவணனை அசதியாடல்

இராவணனுக்கும், ஜடாயுவிற்கும் சண்டை நடந்தது. ஜடாயு இராவணன் மேலே பாய்ந்தான். அவனது மார்பிலும், தோள்களிலும் சிறகுகளால் ஓங்கி அடித்தான். அதனால் வலிமை இழந்து கீழே விழுந்து மூர்ச்சையான இராவணன் தலை சாய்த்து கிடந்தான். அதைக் கண்ட ஜடாயு உனது வலிமை போய்விட்டது. உனது வலிமை இவ்வளவுதானா என்று கேலியாகப் பேசினான்.

“மூச்சித்த இராவணனும் முடி சாய்த்து இருந்தான்
போச்சு இத்தனை போலும் நின்ஆற்றல் எனப் புகன்றான்”
(சடாயு உயிர் நீத்த படலம் 926)

இவ்வாறு சடாயு, இராவணனிடம் கேலியாகப் பேசினான்.

கும்பகர்ணன், இராவணனை அசதியாடல்

கும்பகர்ணன், இராவணனிடம் புகழடைய வேண்டுமென்று விரும்புவோம், குற்றமற்ற பிறன் மனைவியை சிறையில் வைப்போம், அடுத்து பேசுவது நமது மானமுடைமை. இடையிலே மனமார விரும்புவது காம இச்சையை இப்பொழுது நாம் கூசி நிற்பது 2 மனிதர்களை இவ்வாறு நினைத்துப் பார்த்தால் நமது வெற்றியின் பெருமை நன்றாக இருக்கிறது என்று இகழ்ச்சி தோன்ற கூறினான்.

“ஆசில் பரதாரம் இவை அம்சிறை அடைப்பேம்
மாசில் புகழ் காதலுறுவேம் வளமை கூரப்
பேசுவது மானம் இடை பேணுவது காமம்
கூசுவது மானுடரை நன்று நம் குற்றம்”
(இராவணன் மந்திர படலம் 63)

இவ்வாறு, கும்பகர்ணன், இராவணனை கேலியாகப் பேசினான்.

வாலி, இராமனிடம் அசதியாடல்

இராமன், வாலி மீது அம்பை எய்தான். இந்த நிலையில் வாலி இராமனிடம் கொற்றவ ,ஒருவர் துணையும் இன்றியே வெற்றி பெறத் தக்க வீரனே, நீ அங்கே உனக்குரிய அரசை உன் தம்பிக்குக் கொடுத்து நாட்டிலே ஒரு காரியம் செய்தாய். அதுபோல் இங்கே என் அரசை என் தம்பிக்குக் கொடுத்து காட்டிலேயும் ஒரு காரியம் செய்தாய் இதன் மேலும் செய்யத்தக்க காரியம் உண்டோ (வாலி வதைப்படலம் 315)என்கிறான்.

இவ்வாறு கும்பகர்ணன், இராவணனிடம் கேலியாகப் பேசினான்.

அனுமன், சீதையிடம் அசதியாடல்

எதிர்மறை பொருள் தரும் அசதியாடல்கள். சீதை தனது சூளாமணியை அனுமனிடம் தந்து, அதை இராமனிடம் சேர்க்கக் கூறினாள். ஒரு திங்களுக்குள் இராமன் வராவிடில் உயிர்த் துறப்பேன். அங்கே கங்கை ஆற்றங்கரையில் தன் சிவந்த கையால் கடன் செய்து முடிக்குமாறு கூறுக, சுக்ரீவனைக் கொண்டு இராமனுக்கு அயோத்தியில் முடிசூட்டு என்றெல்லாம் அனுமனிடம் கூறினாள்.

நூல் பல கற்ற அனுமன் தன் சொல்லின் செல்வனாக, சீதையிடம் அசதியாடினான். இராமன் 14 ஆண்டுகள் முடியும் முன்னர் எந்த நகரிலும் போக மாட்டேன் என்று விரதம் எடுத்தவன் அதை நினைவில் கொண்ட அனுமன்

“வீவாய் நீ இவண் மெய் அஃதே
ஓய்வான்இன் உயிர் உய்வானாம்
போய் வான் அந்நகர் புக்கு அன்றோ
வேய்வான் மௌலியும் மெய் அன்றோ?”
(சூளாமணிப் படலம் 644)

நீ இங்கே இறந்து விடுவாய் அது உண்மையே. நீ இறந்தபின் தளர்ந்து விடும் இராமன் தன் இன்னுயிரைத் தன்னுடன் வைத்துக்கொண்டு வாழ்வானாம். அயோத்தி புகுந்த பிறகு அல்லவா மவுலி சுடுவான் இவை தானே உண்மையில் நடக்க போகின்றவை அதை விட்டு என்ன பேசுகிறீர்கள் என்று கூறினான்.

“கைத்து ஓடும் சிறை கற்போயே
வைத்தோன் இன் உயிர் வாழ்வானாம்
பொய்த்தோர் வில்லிகள் போவாராம்
இத்தோடு ஒப்பது யாது உண்டே”
(சூளாமணிப்படலம் 645)

கற்பின் வடிவமான உன்னை மற்றவர் வெறுத்து விலகி ஓடுமளவு கொடுமை நிறைந்த சிறையில் வைத்தவன் இராவணன். அவன் இனிய உயிரோடு வாழ்ந்திருப்பானாம், ஒப்பற்ற வில்லை கையிலே வைத்திருக்கின்ற இராம லக்ஷ்மணர்கள் கடமையிலிருந்து திரும்பிப் போய்விடுவார்களாம். இதற்கு ஈடான நிகழ்ச்சியை எங்கேயாவது கண்டதுண்டா என்று அனுமன் கூறினான். அரக்கர்களை அழித்து அறத்தை நிலை நாட்டுவேன் என்று தாண்டகவனத்து முனிவர்களிடம் கூறியதை நிறைவேற்றாது இராமன் போக மாட்டான் என்பதைக் குறிப்பாகவும் கூறினான். (சூளாமணிப்படலம் 645)

நற்பண்பு கொண்ட தாயே, உன்னை வாட்டி வருத்திய அரக்கர்களைக் கொல்லாமல் எங்கள் உயிரைச் சுமந்து கொண்டு அயோத்திக்குப் போய்விடுவோம். எங்களைப் போல என் தலைவன் இராமபிரானும் வில்லுடன் போக வேண்டியது தானே? இது எவ்வாறு நிகழும். எங்கள் உயிர் இருக்கும் வரையிலும், இராமபிரான் கையில் வில்லிருக்கும் வரையிலும், நாங்கள் போராடி உன்னை மீட்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்தினான். வாலியால் அடிமைப்பட்ட சுக்ரீவன் முதலானோர் இராமபிரானால் விடுதலை பெற்றனர். அந்த பொருள் செல்வம் ஈந்தவனுக்கு நாங்கள் உன்னை விடுவித்து ஈயாது செயலற்றுக் கிடந்தால், எம்மை விட உயர்ந்தவர் யார் என்று அனுமன் கூறினான்.

இவ்வாறு அனுமன், சீதையிடம் அசதியாடினான்.

முடிவுரை

அசதியாடல் என்பது தனித்தும், ஓரிருவரைத் துணையாகச் சேர்த்துக் கொண்டும் விளையாடும் விளையாட்டாகும்.தமிழ் இலக்கியங்களில் பக்தி இலக்கியங்களிலும் சிலப்பதிகாரம், பெரியபுராணம், மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், திருவானைக்கா அகிலாண்டநாயகி மாலை ஆகிய நூல்களிலும் அசதியாடல் குறித்துப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. கம்பராமாயணத்தில் அனுமன் இந்திரஜித்தனை அசதியாடல்,அனுமன், முதலியவரை இந்திரஜித் இகழ்தல், இராமன், சூர்ப்பணகையுடன் அசதியாடல், ஜடாயு, இராவணனை அசதியாடல், கும்பகர்ணன், இராவணனை அசதியாடல், வாலி, இராமனை அசதியாடல், அனுமன், சீதையிடம் அசதியாடல்,ஆகிய அசதியாடல்களைக் கம்பர் தம் இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

துணை நூற்பட்டியல்

1.கருத்திருமன். பி,சி.கம்பர் கவியும் கருத்தும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2018.
2.காசி. ஆ, கம்பரும் திருத்தக்கதேவரும்,தமிழ்ச்சோலைப் பதிப்பகம், சென்னை, 2010.
3.காலமும், கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம் , புதுச்சேரி.
4.சக்தி நடராசன்.க, கம்பரின் கை வண்ணம், சரசுவதி பதிப்பகம், ஆர்க்காடு, 2017,
5. பழனிவேலு. தா, காலத்தை வென்ற கம்பன், பல்லவி பதிப்பகம், ஈரோடு. 2021.
6.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
7. ஜ ஸ்ரீசந்திரன், சிலப்பதிகாரம் மூம்மும் உரையும்,, தமிழ் நிலையம்,சென்னை,2012.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.