முன்னுரை

மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இசைக் கருவிகள் இசைக்கப்படுகின்றன. இசைக்கருவிகளைத் தமிழர்கள் தோல் கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, கஞ்ச கருவி, மிடற்றுக்கருவி எனப் பகுத்து வைத்தனர்.அரசனது அறிவிப்புகளை மக்களுக்கு முரசறைந்து அல்லது பறையடித்துச் சொல்வது மரபாகும்.இலக்கியங்களில் திருமணச்செய்தியை அறிவிக்க,முடி சூட்டு விழாவை அறிவிக்க, போர்த் தொடக்கத்தை அறிவிக்க, போர்ப் பூவைப் பெற்றுக்கொள்ள, போர் ஆரம்பித்து விட்டது என்பதை அறிவிக்க, சமாதானத்தை அறிவிக்க, போர் வெற்றியை அறிவிக்க, பிறந்தநாள் விழாவை அறிவிக்க,விழா நடைபெற இருப்பதை அறிவிக்க என்று பல அறிவிப்புகளை மக்களுக்குத் தெரிவிப்பதற்காகவே முரசு முழக்கப்பட்டதை இக்கட்டுரையில் ஆராய்வோம்.

1.தோல் இசைக்கருவிகள்

முரசம், துந்துவி, முரசு, தண்ணுமை, படகம், ஆகுளி, சிறுகட்பறை பேரி பம்பை, துடி திமிலை, தட்டி, தொண்டகம் குறிஞ்சிப்பறை தாளக்கருவிகளுக்குப் பொதுவாக பறை குறிக்கப்படுகிறது. வாரால் விசித்துக் கட்டப்பட்டது. இக்கருவி ஒரு முகம், இருமுகம் உடையது. போர்ப்பறை வெறுப்பறை, வெறியாட்டப் பறை என பல வகைப்படும். வீர முரசு, போர் முரசு, விருந்துன்ன குருதி பலி கொடுக்கும்போது என்று முரசின் பயன் நீண்டது.

2.முரசுக் கட்டுமானம்

முரசு என்பது காளையின் தோல், யானையின் தோல் ஆகியவற்றால் செய்யப்பட்ட ஒரு தாள வாத்தியமாகும். முரசு கறுப்பு மரத்தால் தோல்பட்டைகள் ஒன்றாக இணைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கருவியின் முகம் மூடி அகற்றப்படாமல் இறந்த காளையின் தோலோ அல்லது புலியை வென்ற பெண் யானையின் தோலோக் கொண்டு மூடப்பட்டிருக்கும். இது மேலும் கருப்பு மண்ணால் அபிஷேகம் செய்யப்பட்டு, கரும்புள்ளி அல்லது கண் கொண்டது. கருவி மரக்குச்சியினால் அடிக்கப்படுகிறது.

3.அரசருக்குச் சிறப்புடையன

படை, கொடி, முரசு, குதிரை, யானை, தேர், தார், முடி போன்றவை அரசனுக்குச் சிறப்புடையன.

“படையும், கொடியும், குடையும், முரசும்
நடை நவல்புரவியும் களிறும் தேரும்”
(மரபியல் நூற்பா 72)

முரசின் ஒலி வெற்றி பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் வீரத்தைக் கொடுக்கும். அதே முரசொலி தோல்வியடையும் வீரர்களுக்கு அச்சமும், தைரியமின்மையையும் ஏற்படுத்தும். தேறுதல் தரும் ஆயிரம் வார்த்தைகளை விட, பன்மடங்கு பலமானது.

“எடுத்தெறிந்து இmங்கும் ஏவல் வியன் பணை”
(பதிற்றுப்பத்து 39 – 5)

ஒரு மன்னருக்கு முரசு மதிப்புக்குரியவையாக இருந்து வந்தது. மன்னர்களின் முரசினைக் கைப்பற்றுதல் பெரிய வெற்றியாகவேக் கருதப்பட்டது. பல அரசர்கள் பகை அரசர்களின் முரசினைக் கைப்பற்றினர்.

4. பொருநராற்றுப்படையில் முரசு

சங்க இலக்கிய நூல்களில் பத்துப்பாட்டில் பொருநராற்றுப்படையில்

“முழங்கு தானே மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போல”
(பொருநராற்றுப்படை 53 – 54)

என்று முடத்தாமக்கண்ணியார் பண்டைய மூவேந்தர்களைக் குறிப்பிடுவர்.

பெரும்பாணாற்றுப்படையில் முரசு குறித்த செய்திகளை அறிந்து கொள்ளமுடிகிறது.

“மலர்களை உலகத்து மண்ணுயிர் காக்கும்
முரசு முழங்கு தானே மூவரும்”
(பெரும்பாணாற்றுப்படை 32 – 33)

5.முரசிற்குக் காவல்

முரசு முக்கியமானதாகக் கருதப்பட்டதால், அம்முரசிற்குக் காவல் போட்டுப் பாதுகாத்து வந்தனர். வஞ்சினம் கூறும் போது பகை மன்னர்களைத் தாக்கி அவர்களின் முரசுடன் சிறைபிடிப்பேன் என்று கூறி வஞ்சினம் உரைப்பர் என்பதை,

“அஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொடு”
(புறநானூறு 72:8)

என்று கூறுவதில் இருந்து அறிய முடிகிறது

6.முரசிற்கு வழிபாடு

முரசுறை தெய்வமான கொற்றவை வழிபாடு குறித்து பதிற்றுப்பத்து இரண்டு பாடல்களில் கூறியுள்ளது.

போர்க்களத்திற்குச் செல்லும் முன்னர் முரசிற்கு வழிபாடு செய்வர். ஆம்பல் பண் கொண்டு குழலில் இசைப்பர்.

“இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும்
ஆம்பல் அம் குழலின் ஏங்கி”
(நற்றிணை -113)

பகைவரை வென்று கொண்டு வரும் முரசிற்கு குருதிப்பலி கொடுத்தனர்.

“மண்ணுறு முரசன் கண் பெயர்ந்து இயவர்
கடிப்புடை வலத்தர் தொடித் தோள் ஓச்ச”
(பதிற்றுப்பத்து-19:7-8)

7.கொற்றவை வழிபாட்டில் துடி

கொற்றவை நிலையைத் தொல்காப்பியர்,

“மறம்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அகத்திணைப்புறனே”
(தொல்காப்பியம்- புறத்திணை இயல் நூ 4)

என்று பாடியுள்ளார்.

போர்க்கருதி எழும் வீரருக்கு மற உணர்வை ஒருங்கெழுப்பி ஓங்கச் செய்வது தோற்கருவியான துடியின் செயலாகும். போரில் வெற்றி பெறுவதற்காகப் போர்க்கள தெய்வமான கொற்றவையை வழிபடுவர். துடி, தண்ணுமை, பறை போன்ற தோற்கருவிகளில் போர் வெற்றிக்குரிய தெய்வமான கொற்றவை உறைகிறாள் என்று நம்பினார்.

கூலங்களுள் ஒன்றான செந்தினையை நிரப்பி, அதனைக் குருதியோடு கலந்து தூவி, பலியிட்டு நீராட்டப் பெற்ற முரசின் கண்ணில் பூசினர். கொற்றவையின் இடத்தில் முரசு வழிபாட்டுக்குரிய பொருளாயிற்று.

கொற்றவைக்கு பலி கொடுப்பதற்கு (புறநானூறு 400) மாற்றாக முரசிற்கும் பலி கொடுப்பதைக் குறிப்பிடுகின்றன.

பேய் மகன் கொற்றவைக்குப் படைத்ததாகப் புறநானூறு 392 கூறுகிறது.

செங்கோளுடன் அரசு சின்னங்களில் ஒன்றாயிற்று. முரசும், முரசுக் கட்டிலும் மதிப்பிற்குரியதாகும்.

அயிரமலை கொற்றவை வழிபாட்டுக்குரியவையாக மாறியமையை பதிற்றுப்பத்து கூறுகிறது.

முரசு வெற்றிக்குரிய வழிபாட்டுக்குரியது ஆனது என்பதை அறிய முடிகிறது.

போரின் தொடக்கத்தையும், முடிவையும் முரசரைந்தே அறிவிப்பர். வென்ற மன்னன், தோற்ற மன்னனின் முரசைக் கிழிப்பதை மரபாகக் கொண்டிருந்தான்.

“பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண்கண் கேட்பின்
அதுபோர் என்னும் என்னையும் உளனே”
(புறநானூறு 89: 7- 9)

தண்ணுமை, காற்றின் காரணமாக ஒலி எழுப்பியது. இதைப் போரின் அறிவிப்பு ஒலி என்று நினைத்த வீரர்கள் வேகமாகக் கிளம்பினர். இதிலிருந்து முரசு வீரர்களின் மனதில் ஊக்கத்தை அளித்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

8.மதிப்புக்குரிய முரசுக் கட்டில்

முரசு வைப்பதற்காகவே உயரமான இடத்தில் தனி மேடை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்த மேடையை “முரசுக் கட்டில்” என்று கூறுவர். மோசிக்கீரனார் என்ற புலவர், சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைக் காணச் சென்றார். களைப்பு மிகுதியால் அங்கிருந்த முரசுக் கட்டிலில் அறியாது படுத்து உறங்கினார். அக்காலத்தில் முரசு கட்டில் புனிதமாகக் கருதப்பட்டது. அதில் யாராவது படுத்து உறங்கினால் அவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்பட்டது. மன்னன் இதைக் கண்டு உறங்குபவர் யார் என்று காண அருகில் சென்று பார்த்தான். புலவர் என்பதை அறிந்த மன்னன், அவரை எழுப்பாமல் அவருக்குக் கவரி வீசினான் என்று புறநானூறு கூறுகிறது.(புறநானூறு 50)

9.மதிப்பிற்குரியது காவல் மரம்

சங்ககாலத்தில் ஒவ்வொரு அரசர்களுக்கும் ஒவ்வொரு காவல் மரம் இருந்தது, அம்மரத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்றும் நம்பினார்கள். காவல் மரத்திற்கு ஏதேனும் பிரச்சனை வந்தால், அது அந்த நாட்டுக்கே நல்லதல்ல என்றும் நம்பி வந்தனர்.

காவல் மரம்

நெடுஞ்சேரலாதன் தம்மை எதிர்த்த பகைவர்களை புறங்காட்டி ஓடச் செய்து அவர்களுடைய காவல் மரமாகிய கடம்பினை வெட்டி செய்த ஓசை அமைந்த முரசு சால் பெருந்தானை சேரலாதன் மால் கடல் ஓட்டி கடம்பு அறுத்து இயற்றிய பன்மை முரசின் கண் அதிர்ந்தன.(அகநானூறு 347 )

இதேக் கருத்தையே

“பலர் மொசிந்து ஓம்பிய திரல் பூங் கடம்பின்
கடியுடை முழு முதல் துமிய ஏஎய்
வென்று எறி முழங்கு பணை செய்த வெல்போர்”
(பதிற்றுப்பத்து 11: 12 – 14)

“கடம்பு அறுத்து இயற்றிய வலம் படு வியன்பணை”
(பதிற்றுப்பத்து 17:5)

பதிற்றுப்பத்தும் கூறுகிறது.

10.காவல் மரத்தினை வெட்டி முரசு செய்வர்.

போரின் கண் வெற்றி பெற்றால், தோல்வியுற்ற பகைவரது காவல் மரத்தினை வெட்டி அம் மரத்தினால் முரசு செய்தல் வென்ற மன்னர் இயல்புகளுள் ஒன்றாகும். பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தில் குமட்டூர் கண்ணனார், சேரலாதனை வாழ்த்திப் பாடுகிறார்.

11.பூக்கோள் பெற முரசு அறைதல்

போர் தொடங்கும் முன் மறப்பண்பு மிக்க வீரர்களை அரசன் அழைத்து கள்ளை உண்பதற்குத் தருவான். பாசறையிடத்து போருக்குரிய பூவை மறவர்க்கு தரும் நாள் இன்று என்று அறிவிக்கும் தோலை மடித்து போர்த்த வாயை உடைய தண்ணுமையை இயக்குவர்.

“ பூக்கோள் இன்று என்று அறையும்
மடி வாய்த் தண்ணுமை இழிசினன் குரலே”
(புறநானூறு 289: 5-10)

12. போருக்கு அழைத்தல்

போர் துவங்க போகிறது என்பதை அறிவிக்கவும், முரசு முழங்கப்படுகிறது.

“இரங்கு முரசின், இனம் சால் யானை
………………………………..
மறப்படை நுவலும் அரிக்குரற் தண்ணுமை”
(புறநானூறு 270 :2 - 9 )

இப் பேரொலியைக் கேட்டு வீரர்கள் போருக்குத் தயார் ஆவார்கள் பாண்டிய மன்னன் போருக்கு ஆயத்தமானதை கிணைப் பறை அறைந்து தெரிவித்ததைப் புறநானூறு மூலம் அறியமுடிகிறது.

போர் தொடங்க இருக்கிறது என்பதை அறிவிக்கும் முரசின் முழக்கம் புறநானூறு (259, 289) பதிற்றுப் பத்து(30) அகநானூறு (175, 246) புறநானூறு (211) குறிப்பிடுகிறது.

13.முரசின் ஒலி கேட்ட மன்னர் நிலை

களங்காய் கண்ணிநார்முடிச்சேரலை, உனக்கு அடங்காத அரசர் தம் கோட்டையைத் தம் இல்லம் என்று எண்ணாதிருக்கும் படி தும்பைப் பூ சூடி நின் போர் மறவர் முரசு முழக்குவர். இதனால் நீ அவர்களுக்கு காலன் போன்றவன் என்று பாடுகிறார்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் வீரத்தை அருகில் அரண்மனையில் வாழும் அரசர்கள் உறக்கம் வராமல், உன்னை நினைத்து நெஞ்சம் நடுங்குவார்கள் என்று பதிற்றுப்பத்து பன்னிரண்டில் பாடியுள்ளார்.

14.முரசொலி கேட்ட மன்னன் செயல்

ஒரு சீறூர் மன்னனின் ஊரில் மக்கள் உணவின்றி வாடுகின்றனர். எனினும் சீறூர் மன்னனின் மனைவி வந்த தன் குடிமக்களுக்காகச் சில கீரைகளைப் பறித்து வருகிறாள். விறகுகளை எடுத்து வந்து எரியூட்டி இலைகளைச் சமைத்து தம் மக்களுக்கு உணவிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாள். அப்போது போர் முரசு ஒலிக்கிறது. உடனே மன்னன் போருக்குப் புறப்படுவதற்குத் தன் அம்பையும், கருவிகளையும் சேகரித்துத் தன்னை ஒத்த மக்களைப் போருக்கு அழைக்கின்றான்.

15.முரசைக் கைப்பற்ற வஞ்சினம் உரைத்தல்

ஒரு அரசன் தன் பகையரசன் மேல் படையெடுத்துச் செல்லும் போது, அவன் முரசைக் கைப்பற்றுவேன் என்று வஞ்சினம் உரைக்கின்றான்.

“முரசு முழங்கு தானை நும் அரசும் ஓம்பு மின்”,
(புறநானூறு 301)

முரசு முழங்கும் படையை உடைய உங்கள் அரசனையும், யானையையும் நன்கு பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அம்மன்னனை வென்று, முரசை நான் கைப்பற்றுவேன் என்று மன்னன் வஞ்சினம் கூறுகிறான்.

மதுரைக்காஞ்சியில் மன்னன் எதிரிகள் தங்களிடம் நான்கு வகை படைகள் இருக்கின்றன என்ற கர்வத்தோடு, நம் நாட்டின் மீது படையெடுத்து வரும் அரசர்களைப் போரில் வென்று அவர்களது முரசினைக் கைப்பற்றுவேன். அப்படி செய்யவில்லை எனில் என்னை கொடுங்கோலன் என்று என் மக்கள் என்னைத் தூற்றட்டும். மாங்குடி மருதனார் என்னைப் பாடாது செல்லட்டும் என்று கூறினான்.

16.போர்க்கள வேள்வி

தலையாலங்கானத்தில் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை, மாங்குடி மருதனார் பாடும் போது, உன் பகைவர்களை வெற்றி கொண்டு அவர்களது கொற்ற முரசுகளைப் பிடுங்கி அவைகளைச் சோறாக்கும் பாத்திரமாகவும், அவர்களது முடிசூடிய தலைகளை அடுப்புகளாகவும், அவர்களது குருதியை உலை நீராகவும், அவர்களது தொடி அணிந்த கைகளை அகப்பையாகவும் கொண்டு ’போர்க்களச் சமையல்’ செய்தவன் என்று கூறுகிறார். (புறநானூறு 26)

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் வீரத்தை வியந்து பரணர் புகழ்ந்து பாடுகிறார். மோகூர் மன்னனின் முரசைக் கைப்பற்றி, அதைத் தன்னுடைய தாக்கி கொண்டாய். அவனுடைய காவல் மரத்தை வெட்டி, துண்டு துண்டாக்கி தன் யானைகளை வைத்து இழுத்து வந்து, தனக்கு புதிய முரசை செய்து கொண்டான் என்று குறிப்பிடுகிறார்.

“நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து
முரசு செய முரச்சி களிறு பல பூட்டி
ஒழுகை உய்த்தாய்”
(பதிற்றுப்பத்து 44:14-16)

17.சமாதான முரசு

இரு வேந்தர்களும் தம்முள் ஏற்பட்ட மாறுபாடு தீர்ந்து சமாதான முரசு ஒரே சேனையாக முரசு அறையப்பட்டன. நம் அரசனும் போர்முனை வந்து தான் மேற்கொண்ட வினையை வெற்றியுடன் முடித்தனன். பகை அரசனும் தமக்கென விதிக்கப்பட்ட திரை பொருளை கொடுத்து நம் அரசனுக்கு சுற்றத்தாராகினர் முன்பு மாறுபாடு கொண்டிருந்த இரு சேனைகளும் மாறுபாடு தீர்ந்து, ஒரே சேனையாக முரசு அறையப்பட்டன என்பதை,

“வந்து வினை முடித்தவன் வேந்தனும் பகைவரும்
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே
முரண் செறிந்திருந்த தானே இரண்டும்
ஒன்று என அறைந்தன பணையே நின்தேர்”
(அகநானூறு 44: 1 – 4)

அகநானூறு மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது.

18.வெற்றி முரசு

புறங்காட்டி ஓடாத கொல்லும் தொழிலை உடைய வீரமிக்க ஏற்றினது தோலை மயிர் சீவாமல் போர்த்த முரசம் ஒலிக்க, பகைவர்களை வென்று அவர் தம் நாட்டினைத் திரையாகக் கொண்டோம் (அகநானூறு 334)

பாசறையின் கண்ணே, இடியென முழங்கும் வெற்றிமுரசம் போர்க்களத்தே ஒலிக்க, வேந்தனும் போரினை வென்று கொடியினை உயர்த்தினான்.

“மத வலி யானை மறலிய பாசறை
இடி உமிழ்முரசம் பொருகளத்து இயம்ப
வென்று கொடி எடுத்தனன் வேந்தனும்”
(அகநானூறு 354:1-3)

19.முரசினையேப் பரிசாகத் தரல்

மன்னன் தம்மைப் புகழ்ந்து பாடி வருபவர்களுக்கு அரசாட்சியையும், சிறப்புடைய முரசினையும் பணிந்து நின்று தருவேன். வீரத்தன்மை பொருந்திய முரசினையும் சேர்த்து மகிழ்வுடன் கொடுத்ததை அறிய முடிகிறது.

“மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி
ஈ என இரங்குவர் ஆயின் சீருடை
முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம்
இன்னுயிர் ஆயினும் கொடுக்குவேன்”
(புறநானூறு 73:1-4)

20.அசுணமா பறவையைப் பிடிக்க முரசறைவர்

காடுகளில் வாழும் இப்பறவை இசையை உணரவல்லது. இசைக்கு மயங்கும் தன்மை உடையது.ஆனால் மிகவும் பலமானது. இதை எதிர்த்து நின்று வேட்டையாடுவது கடினம். இதை உணர்ந்த வேடுவர்கள் மனதை மயக்கும் இசையை இசைக்கருவிகள் கொண்டு மீட்டுவர். அசுணமா அந்த இசையைக் கேட்டு மயக்கத்தில் அருகில் நெருங்கி வந்ததும், காதைக் கிழிக்கும் அளவுக்கு சத்தமான ஒலியை பறையை முழக்குவர். அந்தச் சத்தத்தைத் தாங்காது காதுகளில் வலி வந்து மிரண்டு விடும் சூழ்நிலையில், ஆயுதங்களால் தாக்கிக் கொன்று விடுவர் என்பதை,

“அசுணம் கொல்பவர் கை போல், நன்றும்
இன்பமும் துன்பமும் உடைத்தே”
(நற்றிணை 304:8-9) என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

திணைப் பயிரை உண்ணவரும் பறவைகளை உழவர் கிணைப்பறை அடித்து ஓட்டுவர் என்பதை அகநானூறு மூலம் அறிய முடிகிறது.

21.திருப்பள்ளி எழுச்சிக்கு முரசு

மதுரைக்காஞ்சி மன்னவனின் அரண்மனை வாயிலில் காலையும், மாலையும் முரசு ஒலித்தது என்று கூறுகிறது.

22.முரசுக்கு உவமை

முரசுக்கு சில உவமைகள் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.

இடிமுரசின் ஓசைக்கு உவமையாக கூறப்பட்டுள்ளது. முரசு, இயம், தண்ணுமை, முழவு என பல்வகை முரசொலிகளுக்கு இடியோசை உவமையாகிறது. (நற்றிணை360)

“குழல் அகவ யாழ் முரல
முழவு அதிர முரசு இயம்ப”
(பட்டினப்பாலை 156- 157)

முழவுகளும் பெரும் முரசுகளும் எழுப்பும் ஒலி

“உழவுர் களி தூங்க முழவு பணை முரல”
(பரிபாடல்- வையை 7- 16)

உழவர்கள் மகிழ்ச்சியால் கூத்தாட முழவுகளும், பெரும் முரசுகளும் முழங்க

“முரைசுடைப் பெரும் சமம் தகைய, ஆர்ப்பு எழ
அரைசு படக் கடக்கும் ஆற்றல்
புரை சால் மைந்த”
(பதிற்றுப்பத்து 34: 10 – 12)

மேகத்தின் இடை குரல் முரசொலி போல இருந்தது

“உருமிசை முழங்குஎன முரசம் இசைப்ப”
(புறநானூறு 373 -1) இடியினது ஓசையை தன் பால் உடைய முரசு முழங்க

“பேய்க் கண் அன்ன பிளிறு கடி முரசம்
மாக் கண் அகல் அறை அதிர்வன முழங்க”
(பட்டினப்பாலை 237- 238)

“அரசு இருந்து பனிக்கு முரசு முழங்கு பாசறை”
(முல்லைப்பாட்டு 79)

23. இடி போல் முரசு முழக்கம்

வளையல் போல் மின்னி கூட்டம் கொள்ளும் முகில்கள் இனிய இசையை உடைய முரசு போல் ஒலிப்பதை நக்கீரர்,

“பொலத்தொடி போல மின்னி கணங்கொள்
இன்னிசை முரசின் இரங்கி”
(நற்றிணை 197: 9 – 10)

என்று குறிப்பிடுகிறார்.

கடலொளி போல முரசின் முழக்கம்

கடலின் அலைகள் கரையை நோக்கி வரும்போது ஏற்படும் ஒலியும் முரசினது ஒலியும் ஒத்துள்ளது.

“கடும் பகட்டும் யானை நேடுந்தேர்க்குட்டுவன்
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்தன்ன
ஓங்கற் புணரி பாய்ந்து ஆடு மகளிர்”
(நற்றிணை 395: 4- 6)

அருவி ஒலி முரசின் ஒலி

அருவி ஒலியும் முரசின் ஒலி போல இருந்தது.

“பேழ் வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன
அருவி இழி தரும் பெருவரை நாடன்”
(நற்றிணை 347 :6-7 )

அருவி, கூத்தர்களின் குலவெலி போல ஒலித்தது.

மண முரசு

மூவகை முரசில் மணமுரசும் ஒன்றாகும்.

“பல்லார் அறிய பறையறைந்து நாள் கேட்டு
கல்யாணம் செய்து கடிப்புக்க மெல்லியல்
காதல் மணையாளும் இல்லாளா என்னொருவன்
ஏதில் மனையாளை நோக்கு”
( நாலடியார் 86 )

பலரும் அறிந்து கொள்ளும்படி, பறை முழக்கம் செய்து, நல்ல நாள் பார்த்து திருமணம் செய்து கொள்வர் என்று கூறுகிறது.

“பறைபட பணிலம் ஆர்ப்ப“
(குறுந்தொகை 15)

திருமணத்திற்கு முரசு ஒலிப்பதை இப்பாடல் கூறுகிறது.

திருமணச் செய்தியை முரசறைந்து அறிவித்தல்

இராமன் வில்லை வளைத்து, வெற்றி பெற்ற செய்தியைத், தூதர்கள் வந்து சொல்லக் கேட்ட தசரதன், மகிழ்ந்தான். இராமனுக்குத் திருமணம் நடைபெற இருக்கின்ற செய்தியை, ஊர் மக்களுக்கு முரசறைந்து சொல்லுவாயாக என்று ஆணையிட்டான். அதன்படியே வள்ளுவனும் தசரதனது ஆணையை, முரசறைந்து அறிவித்தார். (எழுச்சிப்படலம் 687, 688)

மிதிலையில் இராமனுக்கும், சீதைக்கும் திருமணம் நாளை நடைபெற இருப்பதால், அதன் பொருட்டு மலர்களாலும், இந்த அழகான நகரத்தை மேலும் அழகு படுத்துங்கள் என்று ஜனகன் ஆணையிட்டான். அந்த ஆணையை ஏற்று, முரசை ஒலிக்கச் செய்து, வள்ளுவன் அறிவித்தான்.

“மானவர் பெருமானும் மண நினைவினன் ஆக
தேன் அமர் குழலாள்தன் திருமணவினை நாளை
பூ நறு மணி வாசம் புனை நகர் அணிவீர் என்று
ஆனையின் மிசை யாணர் அணி முரசு அறைக என்றான்“
(கடிமணப்படலம் 1125)

இவ்வாறு தசரதனும், ஜனகனும் திருமணச் செய்தியை நகர மக்களுக்கு முரசறைந்து அறிவித்ததை அறியமுடிகிறது.

சிலப்பதிகாரத்தில் மணமுரசு

கோவலனும், கண்ணகியும் திருமணம் செய்து கொள்ளும் நாளில் பெற்றோர் திருமண நாளை தீர்மானித்தவுடன் யானை மீது சென்ற மகளிர் மணச் செய்தியை நகர் உள்ளோருக்கு முரசறைந்து அறிவித்தனர்.

“முரசியம்பின முருடதிர்ந்தன முறை எழுந்தன பனிலம் வெண்கொடை”
(சிலப்பதிகாரம்-மங்கலவாழ்த்துப்பாடல் 46 – 47)

முடி சூட்டு விழா அறிவிப்பு

தசரதன், நகரை அலங்காரம் செய்யும்படி முரசறைந்து தெரிவிக்க என்று வள்ளுவருக்கு ஆணையிட்டான். (மந்தரை சூழ்ச்சி படலம் 116, 117) தசரதனால் ஆணையிடப்பட்ட வள்ளுவர்கள் இராமன் நாளையே நிலமகள் தலைவனாக மணிமுடி சூடுவார். ஆதலால் இத்தலை நகரத்தை அலங்கரிப்பீராக என்று சொல்லி, நகரமுழுவதும் பிரிந்து, தேவர்களும், களிப்புக் கொள்ளும்படி முரசறைந்து தெரிவித்தார்கள்.

“ஏவின வள்ளுவர் இராமன் நாளையே
பூமகள் கொழுநனாய் புனையும் மௌலி இக்
கோ நகர் அணிக எனக் கொட்டும் பேரி அத்
தேவரும் களி கொள திரிந்து சாற்றினார்“
(மந்தரை சூழ்ச்சிப் படலம் 118)

போருக்கான முரசு அறிவிப்பு

மலை போன்ற உடம்பையும், புகை போன்ற நிறத்தையும் உடைய புருவத்துடன் பொருந்திய தீப் போன்ற கண்களையும் உடைய மகோதரன் எனும் ஒப்பற்ற வீரனை, இராவணன் பார்த்து, இறப்பு இல்லாத சேனையாக இலங்கை நகரில் எது உள்ளதோ அச் சேனை எல்லாவற்றையும் போருக்கு எழுக என, அழகிய முரசை யானை மீது ஏற்றி அறையுமாறு செய்க என்று ஆணையிட்டான்.

"பூதரம் அனைய மேனி புகை நிறப் புருவச் செந் தீ
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி
ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை
யாதையும் எழுக என்று ஆனை மணி முரசு எற்றுக என்றான் "
(இராவணன் தேர் ஏறு படலம் 3582)

பஞ்ச சேனாதிபதியர் படலத்தில் அனுமனை அழிக்கத் தானே செல்வதாக இராவணன் கூறியபோது, பஞ்ச சேனாபதிகளான பூபாக்ஷன், துதிரன், பிரசன்னன், வீரபாட்சன், பாசக்காரணன் ஆகிய ஐவரும் போரிட எங்களை அனுப்புங்கள் என்று வணங்கி வேண்டி நின்ற போது, இராவணனும் சம்மதம் தெரிவிக்க, அவர்கள் பெரும் படையைத் திரட்டினர். ஐவரின் கட்டளையை ஏற்று, பறையறைவோரும் யானை மீது ஏறி முரசை அடித்து போர் செய்தியைத் தெரிவித்தார்கள்.

இதுவே

“ஆனைமேல் முரசு அறைக என வள்ளுவர் அறைந்தார்
பேன வேலையின் புடை பரந்தது பெருஞ்சேனை”
(பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம் 871)

சிலப்பதிகாரத்தில் முரசு -போர் அறிவிப்பு

சேரன் செங்குட்டுவன் வட திசை நோக்கி படையெடுத்துச் செல்கிறான் என்னும் செய்தியைத் தம் நாட்டு மக்களுக்கு முரசு அறிவித்து தெரிவியுங்கள் என்று தம் அமைச்சர்களுள் ஒருவரான அழும்பிள்வேளிடம் கூறுகிறான். இவ்வாறு போருக்கான முரசு அறிவிப்பு செய்ததை அறியமுடிகிறது.(வஞ்சிக்காண்டம்-காட்சிக்காதை)

வெற்றிச் செய்தியை அறிவித்தல்

இராவணனை வென்று இலங்கையை விட்டு புறப்படும் முன்னர் இராமனின் வெற்றிச் செய்தியை முரசறைந்து தெரிவிக்கும்படி சுக்ரீவன் வள்ளுவனிடம் கூறினான்.

மன்னன் பிறந்த நாளை அறிவித்தல்

அரசனின் பிறந்தநாளை மக்களுக்கு அறிவிக்கும்போது, முரசறைந்து அறிவிக்கும் வழக்கம் இருந்ததை பெருங்கதையில் காண முடிகிறது.

“திருநாள் படைநாள் கடிநாள் என்று பெருநாள் அல்லது பிற
நாட்களையா செல்வ செயினை வள்ளுவ முதுமகன்“
(பெருங்கதை 2: 32 - 34 )

இவ்வடிகள் மூலம் அரசனுடைய பிறந்தநாள், படை எடுத்தநாள், மண நாள் இப்பெரு நாட்களில் செய்தியினை மக்களுக்குப் பறையறைந்து தெரிவிப்பர் என்பதனை அறிய முடிகிறது.

மிருகங்களை விரட்ட முரசறைவித்தல்

குறவர் குல பெண்கள் தாங்கள் பயிரிட்டுள்ள கிழங்குகளைத் தோண்டி எடுப்பதற்கான காலம் வந்தவுடன், அதனை மற்றவர்களுக்கு அறிவிக்கவும், அப்போது கொடிய விலங்குகள் வராமலிருக்க ஆடவர்கள், புலிகள் நெருங்கி வாழும் பக்கங்களில் எல்லாம் வலிமையான பறை முதலிய தோல் கருவிகளை முழக்க, அவற்றின் ஒலி எங்கும் கலந்து ஒலிக்கும். பறையொலிகளை முழக்குவர். .(வரைக்காட்சிப்படலம் 822)

வெள்ள அறிவிப்பு

கம்பராமாயணத்தில் ஆற்றுப்படலத்தில் உழவர்கள் காத்து நின்ற வாய்க்காலில் வெள்ளம் வருதலைக் குறிக்கும் ஆரவாரத்தை உடைய கிணை என்னும் மருதநிலப்பறைகள் ஒலிக்க, விரைந்து சென்று திரண்ட நீர்த்துளிகளையும்-பொன்னையும், முத்தையும் அலைகளால் வீசி எறிந்து, பொருந்திய தலைமை உடையதாகச் சிறப்புற்று, நிலம் கிழியும்படி நீளமாகச்சென்று, முறையாகத் தொடர்ந்துள்ள ஒரு கால்வாயில் இருந்து மற்றொரு கால்வாய் என்னும் முறையில் குலப்பரம்பரை பிரிவது போல, அந்த வெள்ளம் பிரிந்து சென்றது என்று கூறப்பட்டுள்ளது. (ஆற்றுப்படலம் 30)

விழா அறிவிக்கும் முரசு

பழங்குடியிலேயே பிறந்தோன் இந்திரவிழா நடக்கப்போவதை மக்களுக்கு முரசறைந்து தெரிவிக்கத் தொடங்கினார். முதலில் காவிரி பூம்பட்டினம் வாழ்க என்று தெய்வத்தை வணங்கினார். அதன் பின் வானம் மும்மாரி பொழிக. வேந்தன் அரச நீதியில் மாறுபடக்கூடிய கொடுங்கோலனாக இல்லாமல், செங்கோலனாக வாழ்க என்று வாழ்த்தினான்.

“முரசு கடிப்பு இகூஉம் முதுகுடிப் பிறந்தோன்
திருவிழை மூதூர் வாழ்க என்று ஏத்தி
வானம் மும்மாரி பொழிக மன்னவன்
கோள்நிலை தெரியாக் கோலோனோகுக”
(மணிமேகலை 1: 31 – 34)

தலைக்கோல் ஊர்வலத்தில் முரசு

ஆடலும், பாடலும், அழகும் என்ற மூன்றில் ஒன்றிலும் குறைபடாமல் ஐந்தாம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து ஏழு ஆண்டுகள் நன்கு பயிற்றுவிக்கப்பட்டு 12ஆம் ஆண்டு அரங்கம் ஏறித் தன் ஆற்றலை சோழமன்னருக்குக் காட்ட மாதவி விரும்பினாள். ஆடலில் சிறந்தவர்கள் அரசனுடைய சபையில் தம் ஆட்டத்தை அரங்கேற்றி தலைக்கோல் பட்டம் பெற்றனர்.

"பேரிசை மன்னர் பெயர்புறத் தெடுத்த
சீரியல் வெண்குடைக் காம்பு நனி கொண்டு"
(அரங்கேற்றுக்காதை 114-115)

புகழுடைய பகைஅரசர் போர் செய்து புறங்கொடுத்த வழி பறிக்கப்பட்ட அழகு பொருந்திய வெண் கொற்றக்குடையின் காம்பை நன்கு எடுத்து கணுக்கள்தோறும் கழுவிய நவமணிகளால் கட்டி ‘சாம்பூநதம்’ என்னும் பொன்னின் தகட்டால் கணுக்களுக்கு நடுவாகிய இனங்களைக் கட்டி காவல் வெண்டுடையுடைய அரசன் கோயிலில் தேவேந்திரன் மகன் சயந்தனாக நினைத்து, மந்திர விதியாலே பூசித்துக் காப்பமைத்து வைத்தது தலைக்கோல்.

அத்தகைய தலைக்கோலை நல்ல தூய நீரைப் பொன்குடங்களில் கொண்டுவந்து நீராட்டி, மாலைசூட்டி நல்லநாளிலே பொன்னாலான பூணும்,பட்டமும் உடைய யானையின் நீண்ட துதிக்கையில் வாழ்த்திக் கொடுத்துப்பின், மும்முரசு முழங்க, பல்லியம் ஒலிக்க, அரசனும், ஐம்பெருங்குழுவும் உடன்வர அவ்யானை தேருடன் வலம்செய்து, அத்தேர்மீது இருந்த பாடுவோனிடம் தலைக்கோலைத்தர, ஊர்வலம் முடிந்தபின், அத்தலைக்கோல் நடன அரங்கிலே வைக்கப்பட்டது.

வெறியாட்டு விழாவில் முரசு

பட்டினப்பாலையில் வெறியாட்டு எடுத்தற்குரிய முருகனுக்கு புகாரில் விழாக்கள் நடைபெறும். மகளிரின் பாடல்களுக்கு ஏற்பத் துளூக்கருவியாகிய குழலும், நரம்புக்கருவியாகிய யாழ் முரலவும்,தோல் கருவியாகிய முழவு முழங்கவும், முரசு ஒலிக்கவும் விழாக்கள் நீங்காமல் என்றும் நடைபெறும் அகன்ற வீதிகளைக் கொண்டது புகார் நகரமாகும்.

“வெறி ஆடு மகளிரொடு செறியத் தாஅய்
குழல் அகவ, யாழ் முரல,
முழவு அதிர, முரசு இயம்ப,
விழவு அறா, வியல் ஆவணத்து”
(பட்டினப்பாலை 154-157)

வெறியாட்டின் போது முரசின் முழக்குவர் என்பதை நற்றிணை 47,273 பாடல் மூலம் அறியமுடிகிறது.

வீரர்கள் தம்மையே பலியிடல்- முரசு

மருவூர்ப்பாக்கத்தின் பக்கத்தே உள்ள மறம் கொள்வீரரும், பட்டினப் பாக்கத்தின் அருகே உள்ள படைக்கல வீரரும் பலி பீடத்திற்கு முன்னே சென்று நின்றனர். பெரிய பலிபீடத்தில் வெந்திறல் வேந்தருக்கு உறும் இடையூற்றை ஒழித்து வெற்றி தருக, எனத் தம்மையே பலியாகக் கொடுத்தவர். வலிமைக்கு வரம்பாவர் என்று வஞ்சினம் உரைத்தனர். பிறகு கல்லினை வீசும் கவண் உடையவராக ஊன் பொருந்திய கரிய தோலால் செய்யப்பட்ட பரிசையுடன் பல வேல்களை மிகுதியாக உடையவராய் தோள்தட்டி ஆர்ப்பரித்தனர். முன்னர் போர்க்களத்தைத் தமதாக்கிக்கொண்டு கண்டோர் அச்சம் கொள்ளுமாறு போரிட்ட அவர்கள், சுடும் கொள்ளி போன்ற கண்களையுடைய தம் தலையைக் கொய்து வேந்தன் வெற்றி கொள்க என பலி பீடத்திலே வைத்தனர். அப்பொழுது உயிர்ப்பலி உண்ணும் பூதத்தின் இடிமுழக்கம் போலும் குரல் எங்கும் ஒலித்தது. மயிர்த் தோல் போர்த்த முரசு முழங்கியது. இவ்வாறு வீரர்கள் பூதத்திற்கு நர பலி ஊட்டினர்.

“நற்பலி பீடிகை நலங் கொள வைத்தாங்கு
உயிர்ப் பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலியூட்டி”
(இந்திர விழா ஊரெடுத்த காதை 86 -89)

பிணமுரசு

இறப்பில் முரசு இறந்தவர் வீடுகளில் பறை ஒலிக்கச் செய்வார். பறையை இசைப்பவர் தகவல் பரப்பவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். பறை ஒலியைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் துக்கம் விசாரிக்க வருவர் என்பதனை,

“ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப”
(புறநானூறு 194:1-4) அறியமுடிகிறது.

ஊரில் ஒரே நாளில் ஒரு இல்லத்தில் நெய்தல் பறையும் இரங்கல் பண் இன்னொரு இல்லத்தில் திருமண முழவின் ஒலியும் கேட்கிறது. ஒரே ஊரில், ஒரே நாளில் இந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன.நெய்தற்பறையாகிய சாக்காட்டுப் பறை கேட்போருக்கு வருத்தம் செய்யக் கூடியது.

முழங்காத முரசு

போர்க்களத்தில் சண்டையிட்ட இரு பெருவேந்தர்களும் இறந்துவிட்டதால் கட்டுச் சிறந்ததும் மயிர்ச் செறிந்ததுமாகிய முரசம் அதனைத் தாங்குவோர் இல்லாமல் கிடந்தன. குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், பெருவிரற்கிள்ளிக்கும் இடையே போர் நடைபெற்றது.

“தோல் கண், மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே
விசித்து வினை மாண்ட மயிர்க் கண் முரசம்”
(புறநானூறு 63:6-7)

சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர்த்துறந்ததை அடுத்து நாட்டில் அத்துயரைத் தாங்கிக் கொள்ளமாட்டாது,முழவு என்னும் மத்தளம் அடித்தலை இழந்தது.

“மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப”
(புறநானூறு 65)

கம்பராமாயணத்தில் கேகயநாடு சென்ற பரதனும், சத்துருக்கணனும் அயோத்தி திரும்பி வந்தபோது, நாட்டில் பேரிகைகளும், குடமுழா என்னும் தோற்கருவியும் முழங்கவில்லை.

“மோதுகின்றல பேரிமுழா விழாப்
போதுகின்றில பொன் அணி வீதியே”
(பள்ளிப்படைப் படலம் 806)

நாட்டு மன்னன் இறந்த துக்கத்திலும், துயரிலும் நாட்டு மக்கள் இருந்தபோது முழவு ஒலிக்கப்படவில்லை என்பது தெரிகிறது.

கம்பராமாயணத்தில் காடு சென்ற இராமனை அழைத்து வரச் சென்ற பரதனுடன் சென்ற மத்தளம் முதலான பல்வகை ஒலித்தல் இல்லாது பல்லியம் என்னும் பெயர் பெற்றப் பொருந்தி, படையில் செல்வதால், அப்படையின் கூட்டம், நீண்ட சுவரில் சித்திரமாகத் தீட்டப்பட்ட படையின் தொகுதியை ஒத்திருந்தது.

“மத்தளம் முதலிய வயங்கு பல் இயம்”
(ஆறு செல் படலம் 974)

முடிவுரை

மணமுரசு, போர்முரசு, பிணமுரசு என்று மூவகையாக முரசுகள் காணப்படுகின்றன. அரசனது அறிவிப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல முரசு பயன்படுகிறது. இலக்கியங்களில் மணச்செய்தியைக் கூற, போர் நடைபெற இருக்கின்ற செய்தியையும், போர் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை தெரிவிக்கவும், முடிசூடு விழா அறிவிப்பைக் கூறவும், விழா தொடர்பான நிகழ்ச்சிகளை அறிவிக்கவும், பிறந்தநாள் விழா மகிழ்ச்சியினைக் கொண்டாடவும், பறவைகளைப் பிடிக்கவும், விலங்குகளைப் பயமுறுத்தித் துரத்தி அடிக்கவும்,. தலைக்கோல் விழா குறித்தச் செய்தியினை மக்களுக்கு கூறவும், இறைவனை வழிபடும் வெறியாட்டு விழா வழிபாட்டிலும் தம் மன்னனுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தன்னைத் தானே பலியிடும் விழாவிலும் முரசு முழங்கியது. இறந்தவர் வீடுகளிலும் முரசு முழங்கியது என்பதையும் இலக்கியங்களின் வழி அறிந்து கொள்ள முடிகிறது.

துணைநூற்பட்டியல்

1.ஆலி .ஆ,(உரை.ஆ) பதிற்றுப்பத்து மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை,2004.

2.இளம்பூரணர் உரை, தொல்காப்பியம்-பொருளதிகாரம், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் சென்னை, 1953.

3.சுப்பிரமணியன்.பி.எ (உரை.ஆ)தட்சிணாமூர்த்தி.அ, பரிபாடல் மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,சென்னை,2004.

4. நாகராஜன்.வி, (உரையாசிரியர்) குறுந்தொகை மூலமும் உரையும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் சென்னை 2004

5. நாகராஜன் வி பத்துப்பாட்டு மூலமும் உரையும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் சென்னை 2004

6. பாலசுப்பிரமணியன்.கு.வே புறநானூறு மூலமும் உரையும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் சென்னை 2004

7.பாலசுப்பிரமணியன் கு.வை.(உரை.ஆ) நற்றிணை மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,சென்னை,2004.

8.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

9.பெருங்கதை பகுதி 1 உஞ்சைக் காண்டம் மகோமகாபாத்யாய டாக்டர் உ.வே.சிமிநாதையர் நூல் நிலையம்,சென்னை-68.

10. ஸ்ரீசந்திரன்.ஜெ. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தொகுதி 1,2,3, தமிழ் நிலையம்,சென்னை,2007.

11.ஸ்ரீ.சந்திரன், ஜெ.சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும், தமிழ் நிலையம், சென்னை, 2012.

12.ஸ்ரீ.சந்திரன், ஜெ. மணிமேகலை மூலமும் தெளிவுரையும், தமிழ் நிலையம், சென்னை, 2012.

13.ஜெயபால் ரா. உரையாசிரியர் அகநானூறு மூலமும் உரையும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் சென்னை 2004

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.