-  நீலகிரிப் படகர் -

வரலாற்றைவிட வழக்காறுகள் இன்றியமையானவை. ஒரு சமூகத்தின் நெடிய மரபும் பண்பாடும் வழக்காறுகளில் வாழ்கின்றன. மானுட சமூகத்தில் நடப்பிலுள்ள வழக்காறுகளில் உட்செறிந்துள்ள மரபறிவினைத் தேடிச்செல்வதும், உற்றுநோக்குவதும் இன்றைய தேவைகளுள் ஒன்று என்பதனைவிட காலத்தின் கட்டாயம் எனலாம். நிலவும் உடலியல், உளவியல் பிணிகட்கும், வாழ்வியல் பிணக்குகளுக்குமான தீர்விற்கு முன்னோக்கி ஆய்வதைவிடவும் பின்னோக்கி ஆய்வதே ஏற்புடையது என்பதில் மாற்றமில்லை. அவ்வகையில் நீலகிரியில் வாழ்கின்ற, யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக சான்றளிக்கப்பட்ட ‘படகர்’ இனமக்களிடையே வழக்கிலுள்ள ‘காயிகல்லு’ என்ற மருத்துவத் தன்மைமிக்க பொருளொன்றின் பன்முகப் பயனிலையையும் அதன் தொன்மையினையும் இக்கட்டுரை ஆராய்கின்றது.

நீலகிரியும் படகர்களும் -

ஆண்டில் ஒன்பது மாதங்கள் மழைபொழியும் இயல்புடையது நீலகிரி மலை. உலகின் மிக முக்கியமான பல்லுயிர்ச் சூழல் மண்டலமான இம்மலையின் முகடுகளிலும் அதற்கு சற்றுக்கீழும் படகர்கள் வசிக்கின்றனர். இவர்கள் பேசும் மொழி படுகு. இவர்களின் வாழ்வியல் ‘பண்டா – பதுக்கு’ என்ற இருநிலைகளில் அடங்கும். இவர்களின் மொழியில் ‘பண்டா’ என்றால் எருமை மந்தை என்றும், ‘பதுக்கு’ என்றால் வாழ்க்கை என்றும் பொருள். எருமை மந்தை பேணலையே ஆதி வாழ்வாகக் கொண்டிருந்த இம்மக்களின் பெயர்க்காரணம்கூட இதை அடியொற்றியதே. ‘பண்டுக’ (எருமை மந்தைகளை உடையவன்) என்ற சொல்லே ‘படுகா’ என்று மருவியதாகக் கருதலாம். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் ஆயர்களான பொதுவர்களுக்கும் படகர்களுக்கும்கூட எண்ணற்ற ஒப்புமையுண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீலகிரியின் பெரும்பான்மையான இடங்களில் வாழ்கின்ற இவர்களின் இயற்கை, நிலவியல் மற்றும் சூழலியல் அறிவு வியப்பிற்குரியவை. தொன்றுதொட்டு தாம் வாழ்ந்துவரும், அடைமழையும், கடுங்குளிரும் மிகுந்த நீலகிரியின் காலச்சூழலிற்கேற்ப தம்மை தகவமைக்கவும், தற்காக்கவும் இடைவினைப்புரிந்த இம்மக்களின் மரபறிவு நோக்கத்தக்கது. குளிரிலிருந்து தற்காப்பதே நீலகிரி போன்ற மலைகளின் வாழ்வியலுக்கு அடிப்படையான ஒன்றாகும். அதேநிலையில் காற்றினால் உண்டாகும் பாதிப்பையும், அதற்குரிய தீர்வுகளையும் அறிவதும், வசப்படுத்துவதும் இன்றியமையானதாகும். படகர்களின் மரபார்ந்த மருத்துவங்களுள் மிகவும் முக்கியமான இடங்களைக் காற்றினால் ஏற்படும் பாதிப்புகளே பெற்றிருக்கின்றன.

முடிந்தளவிற்கு காற்றிலிருந்து, குறிப்பாக குளிர்க்காற்றிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்வதே இவர்களின் வாழ்வியல் முறையாக தொடர்கிறது. “கோடெய குறுக்கி கட்டு. கேரிய அரத்துக் கட்டு” (கோடெ – சுவர், குறுக்கி – குறுக்கமாக, கட்டு – கட்டுவது. கேரி – முற்றம், அரத்து – விசாலமாக) என்ற படகர்களின் முதுமொழியொன்று இந்த வாழ்வியல் முறையை தெளிவுப்படுத்துகின்றது. கூரையையும், சுவர்களையும் குறுகலாக அமைப்பதன்மூலம் குளிரின்வரத்து வீட்டினைத் தாக்காமல் தற்காக்கலாம். அதே நிலையில், முற்றங்களை விசாலமாக அமைப்பதன்மூலம் ஆநிரை மற்றும் மலைப்புல வேளாண்மைக்கு உகந்த சூழலை கட்டமைக்கலாம் என்கிறது அந்த முதுமொழி. வேட்டை, ஆநிரை, மலைப்புல வேளாண்மை என்ற மூன்று நிலைகளில் படிமலர்ச்சியடைந்த படகர்களின் வாழ்க்களமும், வீடுகளும் இந்நிலையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இது இவர்களின் மரபறிவிற்குத் தகுந்த சான்று பகர்கின்றது.

காயி – ஊலு

படகர்கள் காற்றினை ‘காயி’ என்று அழைக்கின்றனர். தமிழில் வாடை, கொண்டல் என்று இருப்பதைப்போல இவர்களிடம் திசைகளிலிருந்து எழும் காற்றிற்கான பெயர்களில்லை. ஏனெனில், அவர்கள் வாழ்களப்பகுதியான மலைப்பகுதி திசைப்பெயருக்குப் பொருந்தாது. அவர்களின் மொழியிலும் திசைப்பெயர்களில்லை. சூரியன் உதிப்பது மற்றும் மறைவதையொட்டி ‘மூடெ’ (சூரியன் உதிக்கும் திசை), ‘பூவெ’ (சூரியன் மறையும் திசை) என்ற இரண்டு திசைப்பெயர்கள் மட்டுமே இவர்களிடம் வழக்கிலுண்டு. பொதுவாக மேலே, கீழே, அங்கே, இங்கே என்ற சுட்டு நிலையே இவர்களின் திசைகாட்டுப் பெயர்களாக விளங்குகின்றன. இந்நிலையில் ‘மூடெ’ பகுதியிலிருந்து எழும் காற்றினை இவர்கள் ‘மேகாயி’ என்றும் ‘பூவெ’ பகுதியிலிருந்து தோன்றும் காயினை ‘கீகாயி’ என்றும் மேல், கீழ் என்ற நிலையின் அடிப்படையில் அழைக்கின்றனர். தமிழில் வழக்கொழிந்துபோன இடைமைச் சுட்டான ‘உ’ இன்றும் இவர்களிடம் வழக்கிலுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இடைமைச் சுட்டோடு தொடர்புடைய சொல்லாக ‘ஊலு’ என்ற சொல் திகழ்கிறது.

‘ஊலு’ என்ற படுகுச் சொல் ஒருசொல் பன்மொழியாகும். இது விசை, அடி, பாதிப்பு எனும் பால பொருட்களைக் கொண்டது. மீத்தன்மைக்கொண்ட காற்றினால் உண்டாகும் காற்றினால் உறும் பாதிப்பினை இவர்கள் இப்பெயரிட்டு அழைக்கின்றனர். குறிப்பாக, குழந்தைக்கு ஏற்படும் பாதிப்பையே பெரும்பாலும் இப்பெயரிட்டு அழைப்பது வழக்கம். மீத்தன்மைக் கொண்ட, துர்த்தன்மைக்கொண்ட காற்றினால் குழந்தைகள் பிணியுற்று துன்புறும் நிலையை ‘ஊலொடுப்பு’ என்றழைக்கின்றனர். ஊலு ூ ஒடுப்பு என்று பகுபடும் இச்சொல்லின் ‘ஒடுப்பு’ என்றால் துருத்தி நிற்கும் வலி என்று பொருள்.

மானுடவியலின் அடிப்படைகளின்படி குழந்தைகளை, குறிப்பாக குழவிகளைப் பேணுவதில் மேலதிகக் கவனம்கொள்ளும் தொல்குடித் தன்மை படகர்களிடம் பெருமளவில் விரவிக்கிடக்கின்றன. அத்தகு மீநிலைப் பாதுகாப்பே இந்த ஊலு. துர்நாற்றத்தால் குழந்தைக்கு உண்டாகும் ‘பிணி ஊலு’, பொருட்களின், குறிப்பாக கூரைகளின் பழமைத்தன்மையால் உண்டாகும் ‘இல்லுங்கு ஊலு’, பாதிக்கும் தன்மைக்கொண்ட தாவரங்களால் உண்டாகும் ‘அச்செ ஊலு’, புழுதியினால் உண்டாகும் ‘மண்ணு ஊலு’, சிறியளவிலான சூறாவளியினால் உண்டாகும் ‘சுத்தி ஊலு’, குளிர்ச்சித் தன்மை மிகுந்த காற்றினால் ஏற்படும் ‘காயி ஊலு’ என்ற காற்றினால் உண்டாகும் பாதிப்புகள், அதற்கான தற்காப்பு மற்றும் மருந்துகள் குறித்த மரபியல் அறிவினைப் படகர்கள் கொண்டுள்ளனர். இது அவர்களின் நெடுங்காலத்தைய இயற்கையோடு மேற்கொண்ட இடைவினையினால் அனுபவப்பட்டு கொள்ளப்பட்டவை.

எல்லாவகையான ‘ஊலு’ பாதிப்புகளும் காற்றினால் உண்டானாலும் ‘காயி ஊலு’, ‘சுத்தி ஊலு’ எனும் பாதிப்புகள் காற்றோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையவை. சூறாவளியை படகர்கள் ‘சுத்தி’ (சூழலும் காற்று) என்று அழைக்கின்றனர்.

காயிஊலு – காயிகல்லு

குளிர்ந்த காற்றினால் நேரும் ‘காய் ஊலு’ மலைப்பகுதியில் வாழும் அனைவருக்கும் உண்டாகும் பாதிப்பாகும். உடலின் வெப்பநிலை மாற்றத்தால் உண்டாகும் இந்தப் பாதிப்பின் அறிகுறிகளாக வாந்தி, காய்ச்சல், தலைசுற்றல், தலைவலி மற்றும் கண்சிவத்தல் போன்றவை விளங்குகின்றன. இந்தப் பாதிப்பிலிருந்து தவிர்ப்பதற்காக தலையில் நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் உறைத்தப்பின்பும், மாமிசம் உண்டப்பின்பும், கண்ணேறு கழித்தப்பின்பும், முடிந்தளவிற்கு சூரிய மறைவிற்குப்பின்பும் வீட்டினைவிட்டு வெளியேறுவதில்லை. அதேநிலையில் சமைத்த மாமிசம் மற்றும், நெய், எண்ணெயில் சுட்ட பண்டங்களை வெளியே கொண்டுசெல்லும்போதும் இந்தப் பாதிப்பு ஏற்படுமென்றும் இவர்கள் நம்பி, அதை பெரும்பாலும் தவிர்க்கின்றனர். அவ்வாறு கொண்டுசெல்ல நேரினும் அதற்குரிய சில காப்பினை மேற்கொள்கின்றனர். இந்த நம்பிக்கைசார்ந்த இப்பாதிப்பு துர்த்தன்மைக்கொண்ட காற்றினால் நேருமென்பது இவர்களின் திண்ணம். தீடிரென்று தோன்றி உடலின் இயல்புநிலையைப் பாதிக்கும் இப்பிணியைச் சீராக்க இவர்களிடம் பல மரபார்ந்த மருத்துவமுறைகள் வழக்கிலுள்ளன. அதில் ‘காயி கல்லு’ எனும் மருத்துவத் தன்மைக்கொண்ட கல்லினை மருந்தாக்கி தருவதும் ஒன்றாகும்.

காயிகல்லு -

இளஞ்சிவப்பு நிறம்கொண்ட இந்தக் ‘காயிகல்லானது’ ‘காய்க்கல்லு’, ‘காகல்லு’ என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றது. இதில் ‘காயிகல்லு’, ‘காய்க்கல்லு’ என்ற பெயர்கள் ‘காயி ஊலு’ பாதிப்பிற்கு அளிக்கும் மருந்து எனும் பயன்பாட்டு பொருண்மையிலும், ‘காகல்லு’ என்ற பெயர் அடர்த்தியானது, அடர்க்காட்டில் கிடைப்பது எனும் பண்பு மற்றும் தோற்றப் பொருண்மைகளிலும் பெயர்பெறுகின்றது. ‘கா’ என்ற படுகு ஒருசொல் பலமொழிக்கு அடர்ந்த மற்றும் அடர்ந்தக் காடு என்ற பொருளுண்டு. இந்தக் ‘காயிகல்லு’ கிடைக்கும் சூழலும், நிலையும் மிகவும் சுவாரஸ்யமானது. ‘காங்கீரபில்லு’ தோன்றும்போது இக்கல் கிடைப்பதாக இம்மக்கள் கருதுகின்றனர்.


                                                (காயிகல்லு)

வானவில்லை படகர்கள் ‘காங்கீரபில்லு’ என்று அழைக்கின்றனர். காங்கெ + ஈர + பில்லு என்று பகுபடும் இச்சொல்லின் ‘காங்கெ’ என்பதற்கு ‘வெக்கை’ என்று பொருள். ‘ஈர’ என்பதற்கு மழை, மழைமேகம் என்று பொருள். ஆனால், இங்கு மழை என்றே பொருள்படுகிறது. ‘பில்லு’ என்றால் வில் என்று பொருள். அதாவது வெயிலும் மழையும் ஒன்றாக நிலவும்போது தோன்றும் வில் என்று வானவில்லிற்கான மிக அழகான சொல்லாக்கத்தினை இவர்கள் பெற்றுள்ளனர். இந்த நேரத்தில், அடர்ந்த சோலைக்காடுகள் நிறைந்த மலைப்பகுதிக்கு சென்று இக்கல்லினைக் கொண்டு வருகின்றனர்.

காயி கல்லுவின் பயன்பாடு -

படகர்களின் மிகத் தொன்மையான புழங்குபொருளாக விளங்கும்; ‘காயி கல்லுவை’ பொதுநிலை மற்றும் சிறப்புநிலை என்ற இரண்டு நிலைகளில் பயன்படுத்துகின்றனர். பொதுநிலையில் இக்கல்லின் பயன்பாடு பெரும் அழகியலை உட்செறித்தது. படகர்களின் முன்னோர்கள் வாழ்ந்த ஊர்களில் உள்ள மலைக்குகைளில் அவர்கள் வரைந்திருக்கும் ஓவியங்கள் இக்கல்லினால் வரையப்பட்டிருப்பதாக இவர்கள் கருதுகின்றனர். மேலும், இவர்களின் தனித்தன்மைமிகுந்த, மரபார்ந்த மேலுடையான ‘சீலெ’ எனும் மேற்போர்வைக்கு விளிம்பு நிறமேற்ற இக்கல்லைப் பயன்படுத்துகின்றனர்.

‘காயிகல்லின்’ நிறமான இளஞ்சிவப்பின் விளிம்புடைத்த மேலுடையை இவர்கள் ‘எம்மெகெர சீலெ’ என்றழைக்கின்றனர். அதாவது எருமையின் நிறம்கொண்ட விளிம்பினைக் கொண்ட சீலை என்று இது பொருள்படுகிறது. அதேபோல இவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த வீடுகளில் நிகழும் சடங்குளின்போது சில இடங்களில், ‘தெவ்வமனெ’ எனும் மூதாதையர் இல்லங்களுக்கு வெளியே இக்கல்லினைக் கொண்டு சில குறியீடுகளை வரைவதுண்டு. இக்கல்லினைக்கொண்டு இவர்கள் மேற்கொள்ளும் பொதுநிலை பயன்பாடுகள் அனைத்தும் தொல், அழகியல் தன்மையைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. அதேநிலையில், மருத்துவ நிலையிலும் தம் வாழ்வியலோடு கூடிய சில பாதிப்புகளுக்கு மரபார்ந்து இக்கல்லினைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

‘காய்ஊலு’, ‘கிண்ணலு பெரண்டிரா’, ‘ஆணிகிசி’ எனும் மூன்று பாதிப்புகளுக்கு இவர்கள் இக்கல்லினைப் பயன்படுத்துகின்றனர். களிம்பாக்கல், பற்றிடல், நம்பிக்கை என்ற பல நிலைகளில் இக்கல்லினைக் கொண்டு மருத்துவத்தை மேற்கொள்கின்றனர். இதில், ‘காய் ஊலு’ பாதிப்பிற்கு ‘அரெகல்லு’ எனும் இவர்கள் மருந்தரைக்கும் கல்லினை வலதுகரத்தால் எடுத்து, அதை ‘ஒசநீரு’ எனும் அதிகாலையில் பறவைகள் பருகுவதற்கு முன்னதாக ஓடும் நீர்நிலைகளிலிருந்து கொணர்ந்துவந்த நீரினால் வலக்கரம்கொண்டு நன்குக் கழுவுகின்றனர். இவர்களின் எல்லா மருத்துவச் செயல்பாடுகளிலும் இது முதல் நிலையாகும். இக்கல்லிற்கு தருகின்ற மதிப்பு நிலைக்காகவும், பாங்குடன் இக்கல்லினைக் கையாளுவதற்குமான வழக்கு நிலையினையும் இம்முறை கொண்டுள்ளது. அதேபோல, களிம்பாக்கித் தருகின்ற எல்லா மருத்துவ முறைக்கும் இவர்கள் இந்த ‘ஒசநீரையே’ பயன்படுத்துகின்றனர். ஒருநாள் பயன்படுத்திய இந்நீரினை அடுத்தநாள் பயன்படுத்துவதில்லை. பெரும்பாலும் ‘ஜோனி’ என்றழைக்கப்படும் ஊருக்கு அருகில் அமைந்திருக்கும் நீர்நிலைகளிலிருந்து கொண்டுவரும் மூலிகைத்தன்மைக் கொண்ட நீர் மருந்தாக்கத்தில் பெருமளவில் துணைநிற்கின்றது. காய்ச்சல் போன்ற சில பாதிப்புகளுக்கு இந்நீரே மருந்தாவதுமுண்டு.

மருந்தரைக்கும் கல்லினைக் கழுவியப்பின்பு காயிகல்லினை வலக்கரத்தில் எடுத்து ‘ஒசநீரில்’ கழுவி, ‘அரெகல்லில்’ இட்டு, ‘ஒசநீரினை’ விட்டு தேய்த்துக் களிம்பாக்கி, அதை அரைக்கோப்பையளவுள்ள ‘ஒசநீரில்’ கலந்து பாதிப்படைந்தவருக்கு அளிக்கின்றனர். அளித்த சற்றுநேரத்தில் இப்பிணி நிறைவுறுகின்றது. இம்மருந்தினை அளித்துவிட்டு சிறிதுநேரம்வரை வேறு எதையும் உண்ணவோ, பருகவோ கூடாது.

‘கிண்ணலு பெரண்டிரா’ என்ற அதிர்ச்சியால் உண்டாகும் பாதிப்பும் இவர்களின் வாழ்க்களத்தில் அதிகமாக ஏற்படுவதாகும். ‘கிண்ணலு’ என்ற படுகுச் சொல்லிற்கு அதிர்ச்சி என்று பொருள். ‘கிண்ணலு எத்தரா’ என்ற சொல்லிலும் இப்பாதிப்பு குறிக்கப்படுகிறது. ‘பெரண்டிரா’ என்றால் பிறள்கிறது என்றும் ‘எத்தரா’ என்றால் எழுகின்றது என்றும் பொருள்படுகின்றது. அதாவது, திடீர் அதிர்ச்சியினால் அடிவயிற்றில் உண்டாகும் அச்சவுணர்வு நீள்கிற, மேல்நோக்கி எழும்புகின்ற நிலையை இது குறிக்கிறது. இப்பாதிப்பு ஏற்படும்போது சில வேளைகளில் மேல்மூச்சு எழுவதும் உண்டு. கொடிய காட்டு விலங்குகளால் உண்டாகும் பேராபத்துகள் நிறைந்த இவர்களின் வாழ்களத்தில் தீடிரென்று உண்டாகிவிடும் இப்பாதிப்பு நிலைக்குலைய செய்யுமொன்றாகும். இந்தப் பாதிப்பிற்கு ‘காயிகல்லினை’ ‘ஒசநீரினை’ விட்டுக் களிம்பாக்கி மோருடன் கலந்து அளிக்கின்றனர். படகர்கள் அன்றாடம், தவறாமல் பயன்படுத்தும் மோர் உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு பேருதவிப் புரியுமொன்றாகும். இவர்களின் இல்லங்களின் விருந்தோம்பல் பானமாக இன்றும் தொடருமிது ஆரோக்கியத்திற்கும் அடிப்படையான ஒன்றாகும்.


    (காயி கல்லினைக் கொண்டு அரைக்கல்லில் மருந்தாக்கும் காட்சி)

‘ஆணிகிசி’ என்று இவர்கள் அழைக்கின்ற பாதிப்பு ‘ஹெர்ப்பஸ்’ என்ற வைரஸ் கிருமியால் உண்டாவதாகும். தோள் மற்றும் மார்புப் பகுதியில் ஏற்படும் இப்பாதிப்பு நீர்க்கோர்த்த, நெருங்கிய சிறுசிறு கொப்பளங்களால் ஆனது. இன்று அலோபதி மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப்படும் மருத்துவ முறையாக படகர்களின் இந்நோய்க்குரிய மருத்துவமுறை விளங்கிவருவது குறிப்பிடத்தகுந்ததாகும். எருமைகளின் கழிவோடும், தொடர் வியர்வையோடும் உலவும் படர்களுக்கு இப்பிணியும் அடிக்கடி உண்டாகுமொன்று. இதற்குரிய மருத்துவம் சில படிநிலைகளைக் கொண்டது. முதல்நிலையில் நீர்க்கோர்த்த புண்களின் நீரை வற்றவைப்பதாகும். அதற்கு இளஞ்சூடோடு விளங்கும் ‘நேரி’ மரத்தினாலான அடுப்புச் சாம்பலினை மென்மையான துணியில் தொட்டு அப்புண்களின்மேல் மெதுவாகத் தொட்டு எடுக்கின்றனர்.

இரண்டாவது நிலையில் ‘காயிகல்லினை’ ‘ஒசநீரு’ அல்லது இவர்கள் ‘இம்பிக்கெ’ என்று அழைக்கின்ற எலுமிச்சையின் சாற்றினை விட்டு நன்கு களிம்பாக்கி, அதை ‘மொரந்தக்கோலு’ என்று இவர்கள் அழைக்கின்ற மருத்துவத் தன்மைக்கொண்ட விரலிச்செடியின் சிறு குச்சியினால் இடது கையில் எடுத்து, புண்களின்மீது அக்கையாலேயே பற்றிடுகின்றனர். தொடர்ந்து மூன்றாம்நிலையில் அக்கோலினாலேயே பாதிக்கப்பட்ட இடத்தினைச்சுற்றி பெட்டி, இவர்கள் ‘அணிகெ’ என்றழைக்கும் சீப்பு போன்ற படங்களைக் குறியீடாக வரைகின்றனர். பெட்டிக்குள் ஒருபொருள் அடங்குவதைப்போலவும், சீப்பினைக் கொண்டு சிகையைச் சீர்செய்வதைப்போலவும் இந்தப் பாதிப்பு சீரடைய வேண்டுமென்பதைக் குறீயிடாகக்கொண்ட தொத்து மருத்துவமாகவும் இது திகழ்கின்றது. சிலர் இதில் யானையின் படத்தையும் வரைகின்றனர். அவ்வாறு வரைபவர்கள் இப்பாதிப்பினை ‘ஆனெகிசி’ (ஆனெ – யானை) என்றும் அழைப்பதுண்டு. இந்த மாற்றம் பிற்பகுதியில் ஏற்பட்டதாகும்.

மருந்து செய்யும் நிலையில் காலை, மாலை, மறுநாள் காலை என்று மூன்று வேளையும், நோய் நிவர்த்தி நிலையில் மூன்று மாதங்களும் தொடரும் இந்த மருத்துவத்தில் மருந்து செய்பவரும், பாதிப்படைந்தவரும் பெரும் சுத்தத்தினைப் பேணுகின்றனர். ஒருவகையில் இந்தப் பாதிப்பானது, நம்பிக்கை நிலையில் இவர்களால் அம்மையோடு வைத்தெண்ணப்படுகிறது. 75 விழுக்காடு மருந்தாலும், மீதம் உள-உடலியல் மற்றும் உணவியல் சுகாதாரத்தாலும் நிறைவுகாணும் இந்நோய்க்கான மருத்துவம் முடியும்வரை பாதிக்கப்பட்டவர் உப்பு காரம் ஆகியவற்றை மிகவும் குறைத்து உண்ண வேண்டும். பெரும்பாலும் மோர் உணவையும், கீரைகளையுமே உணவாக உட்கொள்ள வேண்டும். இந்தப்பாதிப்புற்ற நபரின் இல்லங்களிலும், அதை ஒட்டியுள்ள இல்லங்களிலும் பாதிப்புற்றவர் குணமடையும்வரை தாளிப்பு இடுவதில்லை. தாளிப்பின் மணம் பத்தியம் கொண்டவரின் மனத்திண்மையைக் குலையச் செய்யும் என்பதற்காகவும், அவரின் நோயியல் மீட்சியில் பங்குக்கொள்வதற்காகவும் இவர்கள் பின்பற்றும் இந்த மருந்தியல், உணவியல் அறம் நோக்கத்தகுந்ததாகும்.

தொற்றும் தன்மைக்கொண்ட இப்பாதிப்பு மருந்திடுபவருக்கு பரவாமல் இருப்பதற்கும், செய்த மருந்தின் வீரியத்தைக் காப்பதற்கும் கூட்டுவதற்கும் ‘மொரந்தக் கோலுவில்’ மருந்தினை எடுத்து இடும் வழக்கம் இவர்களின் மருத்துவ அறிவிற்கு தகுந்த சான்றாகும். இதுபோல் தொற்றும் புண்களுக்கு மேற்கொள்ளும் சில மருத்துவத்திற்கும் இந்தக் கோலினைப் பயன்படுத்துகின்றனர். இந்நோய்க்கான மருந்திடும்போது குளிக்கக்கூடாது. இடப்பட்ட மருந்துப் பற்றின்மீதே அடுத்தடுத்து இருவேளையின் பற்றினை இடவேண்டும். இதற்குரிய மருந்தினை இடதுக்கையால் எடுப்பதும் விரைவில் இது குணமடைய வேண்டும் என்ற குறீட்டுத் தன்மைக் கொண்டாகும்.

பொது மற்றும் சிறப்புநிலையில் பயன்படுத்தப்படும் ‘காயிகல்லுவை’ பொதுவாக இடது கையால் தொடுவதில்லை. இல்லத்தில் முக்கியமான இடத்தில் வைக்கின்றனர். எங்குச் செல்லும்போதும் கொண்டுச்செல்கின்றனர். இதைப் பயன்படுத்தும்போது தம் மூதாதையர்களை வணங்குகின்றனர் இந்த நிலைகள் அனைத்தும் தாம் முன்னோர்களால் கண்டடையப்பட்டு ஆதியிலிருந்து பயன்படுத்திவருகின்ற இக்கல்லிற்கு அளிக்கும் மதிப்பு மற்றும் இன்றியமையாமையை வெளிப்படுத்துகின்றது. அதேநிலையில், இக்கல்லின் பொதுப்பயன்பாட்டினை “கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்” எனும் முல்லைப்பாட்டின் 37 ஆம் அடியுடன் பொருத்தலாம். தம் உடைகளில் சிவப்புநிற கல்லினைக் கொண்டு நிறமேற்றி பயன்படுத்தும் வேதவித்தகர்கள் என்று பொருள்தரும் இவ்வடியில் இடம்பெறும் முல்லைநில மக்களின் வழக்கம் ஆநிரை வாழ்வினை உட்செறித்த படகர்களோடு பொருந்துகின்றது. ஆநிரைப் பேணலை ஆதியாய்க் கொண்ட படகர்களிடம் இன்றும் நடப்பிலுள்ளது.

படகர்கள் எங்கே பயணித்தாலும், குறிப்பாக ஆநிரைகளை ஓட்டிச் செல்லும்போது, அதிலும் நெடுந்தூரப் பயணத்தின்போது தாம் அணிந்திருக்கின்ற சீலெக்குள் உள்ள 'கோட்டு' எனும் பைப்போன்ற பகுதியுள் நெருப்பினைக் கடையும் 'நெலிகோலு', நெருப்பினைப் பற்றவைக்க எளிதில் தீப்பிடிக்கும் புல்லான 'அசிணிக்கெ கோலு', 'கோரெ கத்தி' எனும் சிறுகத்தி, மழை பெய்யும் காலத்தில் நெருப்பு மூட்டப் பயன்படும் 'பிங்கசக் கல்லு' இவற்றுடன் இந்தக் 'காயி கல்லையும்' எடுத்துச் செல்கின்றனர். தமக்கும் பிறருக்குமான மருத்துவச் செயல்பாட்டிற்கு இந்தக் கல்லினைப் பயன்படுத்துவதை இவர்களின் மரபான மருத்துவ மரபாகவே பின்பற்றி வருகின்றனர். இச்சான்று ‘காயிகல்லின்’ தொன்மைக்கான குறிப்பிடத்தகுந்தவொன்றாகும் “புழங்குபொருளும் பண்பாடும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போல” (சீ.பக்தவத்சலபாரதி, பண்பாட்டு மானுடவியல்) எனும் கூற்றின்படி படகர்களின் மரபும், பண்பாடும் உட்பொதிந்துள்ள இன்றியமையான புழங்குபொருளாக ‘காயிகல்லு’ விளங்குகின்றது. இதையொட்டி இன்றும் மேற்கொண்டுவரும் மருத்துவ அறிவு படகர்களின் மரபறிவிற்கு சிறந்த சான்றாவதோடு, பாதிப்பில்லாத, பல்லாண்டு முதிர்ச்சியையுடைய எளிய மரபு மருத்துவத்திற்கான உரைகல்லாகவும் திகழ்கின்றது.

துணைநின்றவை

1. முல்லைப்பாட்டு, கழகவெளியீடு.

2. பண்பாட்டு மானுடவியல், சீ.பக்தவத்சலபாரதி, அடையாளம் வெளியீடு.

3. பொறங்காடு சீமை படகர்களின் மூலிகை மருத்துவம், கோ.சுனில்ஜோகி, ஆய்வியல் நிறைஞர்பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம்.

4. நீலகிரி படகர்களின் மரபுசார் பண்பாடுப் புழங்குபொருட்கள், கோ.சுனில்ஜோகி, முனைவர்பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம்.

மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.