* தமிழ் விக்கிமூலத்தில் தொல்காப்பியத் தரவு மேம்பாடு முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் , முனைவர் இரா. நித்யா, கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், ஆங்கிலத்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, & தகவலுழவன், விக்கிமீடியர், சேலம் -

ஆய்வுச்சுருக்கம்

இந்தக் காலம் தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்த காலம். காலத்திற்கு ஏற்ற வளர்ச்சியில் ஒரு மொழி பங்கு கொள்ளும் பொழுதுதான் அம்மொழி வளரும் என்று ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர். தமிழ் மொழி அவ்வாறே காலத்தைக் கடந்தும் வளர்ந்து வரும் மொழியாக அமைந்துள்ளது. தமிழ் மொழி வளர்ச்சியின் காலப் பரிமாணங்களில் பானையோடு, கல்வெட்டு, ஓலைச்சுவடி, செப்புப் பட்டயம், காகிதச் சுவடி, அச்சாக்கம், மின்னாக்கம், இணையம் ஆகியன அமைந்துள்ளன. அந்த வகையில் இணைய தளத்தில் தமிழ் மொழியின் தரவுகளைப் பதிவேற்றம் செய்வது காலத்தின் கட்டாயம் ஆகும். கல்விசார் வளங்களைப் பல்வேறு இணைய வளங்களில் பல்வேறு மொழிகள் பாதுகாத்து வருகின்றன. அவ்வாறு பாதுகாத்தல் வேண்டும் என்பதைக் கட்டற்ற தன்னார்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு கல்விசார் வளமாக விக்கிமூலம் அமைந்திருக்கின்றது. இத்திட்டத்தின் வழியாக மொழித்தரவுகளை மேம்படுத்தும் தன்னார்வலர்களுக்கு நிதியுதவி அளித்தும் போட்டிகள் நடத்தியும் ஊக்கப்படுத்தி வருகின்றார்கள் விக்கிமீடியா அறக்கட்டளையினர். இத்திட்டம் கட்டற்ற உரிமத்துடன் கல்விசார் ஆவணங்களைப் பாதுகாக்கும் திட்டமாக விளங்கி வருகின்றது. இது விக்கிமீடியா அறக்கட்டளையின் விக்கித் திட்டங்களுள் ஒன்று. இத்திட்டம் பற்றிய தகவல் இன்னும் பலரைச் சென்றடையவில்லை. விக்கிப்பீடியா சென்றளவில் கூட இத்திட்டம் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கிப்பீடியா என்பது விக்கித் திட்டங்களுள் கட்டுரை எழுதும்; உருவாக்கும் திட்டமாகும். விக்கிமூலம் என்பது மின்நூலகமாகும். நூலகமாக மட்டும் செயல்படவில்லை. தரவுத்தளமாகவும் செயல்பட்டு வருகின்றது. நூலகம் இல்லையேல் நூலாக்கம் இல்லை; கட்டுரை உருவாக்கமும் சாத்தியமில்லை. ஒரு நூலக மேம்பாடுதான் கற்றல், கற்பித்தல் வளங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகையால், இலவச இணைய நூலகமாக விளங்கும் விக்கிமூலத் திட்டத்தைப் பல்வேறு வகைகளில் மேம்படுத்துவது காலத்தின் கட்டாயம். ஏனெனில், இது கட்டற்ற உள்ளடக்கம் (பகிர்வுரிமம்) கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பாகும். இத்திட்டத்தை இதுவரை எழுபத்து நான்கு மொழிகள் பயன்படுத்திக் கொண்டு வருகின்றன. ஆனால் செபுதம்பர் 2023 நிலவரப்படி விக்கிப்பீடியாவின் திட்டதை 285 மொழிகள் பயன்படுத்தி வருகின்றமை நோக்கற்பாலது. இந்த மொழிகளில் தமிழ் மொழியின் இருப்பிடம் ஆறாவது இடமாகும். இந்திய அளவில் முதன்மையான இடமாகும். காலத்தால் பழமையான மொழியின் தரவுகள் இவ்வளவு பின்தங்கியிருப்பது முயற்சி, தேடல் ஆகியன இன்மையையும் குறிப்பாக விழிப்புணர்வு இன்மையையும் இது காட்டுகின்றது. இத்தகு விக்கிமூலத்திட்டத்தில் தமிழ் மொழிக்குரிய நூல்கள் மொத்தம் 2468 நூல்கள் உள்ளன. இவற்றில் 3.5 இலட்சம் பக்கங்கள் உள்ளன. அவற்றுள் தொல்காப்பியம் தொடர்பான நூல்கள் 10 மட்டுமே உள்ளன. இதில் விடுபட்டுள்ள தொல்காப்பியம் சார்ந்த நூல்களின் பட்டியலை விக்கிமூலத்தில் இணைக்க வேண்டிய தேவையையும் தமிழ் விக்கிமூலத்துடன் ஆங்கில மொழி விக்கிமூலத்தை ஒப்புநோக்குவதாகவும் இவ்வாய்வுரை முன்வைக்கின்றது.

திறவுச்சொற்கள்:- விக்கிமூலம், தொல்காப்பியம், தமிழ் இயற்கை மொழி ஆய்வு, பைத்தான் நிரல்

அறிமுகம்

விக்கிமூலம் என்பது விக்கிமீடியா அறக்கட்டளையால் செயல்படுத்தப்படும் இலவச மின் உள்ளடக்க நூலகமாகும். அக்டோபர் 2022 நிலவரப்படி, விக்கிமூலத்திட்டத்தை 72 மொழிகளும் செபுதம்பர் 2023 நிலவரப்படி, 74 மொழிகளும் பயன்படுத்திக் கொண்டு வருகின்றன. இத்தனை மொழிகளின் மொத்த தரவுகள் 5807873 பக்கங்கள் உள்ளன. இதனை 2320 தன்னார்வலர்களுக்குமேல் செய்து வருகின்றனர். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து வகையான மூலநூல்களையும் தட்டச்சுத் தரவுகளாக மாற்றுவதாகும். அதன்பின்பு பல மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்து வழங்குவதே ஆகும். முதலில் இத்திட்டம் பயனுள்ள அல்லது முக்கியமான வரலாற்று நூல்களைச் சேமிப்பதற்கான காப்பகமாகக் கருதப்பட்டது. இது பின்பு ஒரு பொது உள்ளடக்க நூலகமாக விரிவடைந்தது. இந்தத் திட்டம் அதிகாரப்பூர்வமாக நவம்பர் 24, 2003 அன்று சோர்சுபெர்க் திட்டம் (Project Source Berg) என்ற பெயரில் தொடங்கப்பட்டது. விக்கிமூலம் என்ற பெயர் அந்த ஆண்டின் பிற்பகுதியில்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது பின்பு களப்பெயராகவும் (Domain name) உருப்பெற்றது.

இந்தத் திட்டம் பொதுக்கள உரிமம் (Creative Commons License) பெற்ற படைப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. காப்புரிமையுடன் வெளியிடப்பட்ட படைப்புகள் அல்லது வரலாற்றுச் சான்று ஆவணங்கள், பதிப்பகங்களின் வெளியீடுகள் போன்றன இதில் அடங்குவதில்லை. பிற எண்ணிம நூலகங்களின் (Digital Library) நம்பகத்தன்மையை நம்பிச் சரிபார்ப்பு, தொடக்கத்தில் முடக்கலையில் (Offline) செய்யப்பட்டது. இப்போது இப்பணிகள் மெய்ப்புச் சரிபார்ப்புப் பக்கம் (Proofread Page) எனும் நீட்டிப்பு வழியாக இணைய எழுத்துணரியாக்கம் (OCR) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது இத்திட்ட உரைகளின் நம்பகத்தன்மையையும் துல்லியத்தையும் உறுதி செய்கின்றது.

இந்த விக்கிமூலங்கள், ta-தமிழ், ml-மலையாளம், te-தெலுங்கு, ka-கன்னடம், en-ஆங்கிலம் போன்றன ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட மொழியைக் குறிக்கும் குறியீட்டுச் சொற்கள். https://ta.wikisource.org என்பது தமிழ் விக்கிமூலத்தைக் குறிக்கும் தன்மையுடையது. அதுபோலவே ஒவ்வொரு மொழிக்குரிய விக்கிமூலத்தைக் குறிப்பிட அந்த மொழியின் முதல் இரண்டு எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இப்போது இந்தத் திட்டங்களில் எழுத்துணரியாக்கம் (OCR scan) மூலம் மேம்பாடு செய்யப்பெறும் படைப்புகள் பொதுக்கள உரிமத்தில் உள்ளனவா எனப் பார்த்து அனுமதிக்கப்படுகின்றன. அதன் சேகரிப்பில் பெரும்பகுதி நூல்களாக இருந்தாலும், காமிக்சு முதல் திரைப்படம் வரையிலும், ஒலிப் புத்தகங்கள் வரையிலும், மற்ற ஊடகங்களையும் விக்கிமூலம் வழங்குகிறது. விக்கிமூலத்தின் குறிப்பிட்ட கொள்கைகளுக்கு உட்பட்டு, சில விக்கிமூலங்கள் பயனர் உருவாக்கிய சிறுகுறிப்புகளை அனுமதிக்கின்றன. ஆனால் தேசிய ஆவணக் காப்பகங்கள், பதிவுகள், நிர்வாகம் போன்ற நிறுவனங்களால் மேற்கோள் காட்டப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது (https://en.wikipedia.org/wiki/Wikisource, பார்வை நாள்-12.09.2023).

இத்தகு வரலாறு உடைய விக்கிமூலத்தின் ஒரு திட்டமாகிய தமிழ் விக்கிமூலத்தில் தொல்காப்பிய நூலின் மேம்பாட்டிற்குப் பயன் நல்கும் முறைகளையும் அதனால் ஏற்படும் ஆய்வுமுயற்சிகளையும் தமிழ்-ஆங்கில விக்கிமூல முதன்மைப் பகுதி வடிவமைப்பையும் வகைப்படுத்த வேறுபாட்டையும் அறியத் தருவதாய் இக்கட்டுரை அமைகின்றது.
தமிழ் விக்கிமூலமும் ஆங்கில விக்கிமூலமும்

தமிழ் விக்கிமூல முதன்மைப் பக்கத்தையும் (https://ta.wikisource.org/) ஆங்கில விக்கிமூல முதன்மைப் பக்கத்தையும் (https://en.wikisource.org/wiki/Main_Page) ஒப்புநோக்குதல் வேண்டும். அவ்வாறு நோக்கும் பொழுது ஒன்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஆங்கில விக்கிமூலம் ஆண்டு அடிப்படையிலான வகைப்பாட்டை முன்னிறுத்தியுள்ளது. தமிழ் விக்கிமூலத்திலோ அவ்வாறில்லை. இலக்கிய வரலாற்றாசிரியர்களின் வரிசைப்படுத்துதலின்படி தமிழ்விக்கிமூலத்தை வடிவமைக்கும் பொழுது, இன்னும் தமிழ் மொழியின் தரவுத்தளம் இன்னும் கூடுதல் கவனம் பெறும். இனி வரக்கூடிய காலங்களில் தமிழ் சார்ந்த இயற்கை மொழி ஆய்வுகள் அதிகம் நிகழ்வதற்குரிய தரவுத்தளமாகவும் விளங்கும். தற்பொழுது இயற்கை மொழி சார்ந்த ஆய்வுகள் அங்கொன்றும் இங்கொன்றும் நிகழ்கின்றன. அவை இன்னும் மேம்பட தரவினை அதிகப்படுத்துவது தேவையாகின்றது. அந்த அடிப்படையிலும் சில அடிப்படைக் கட்டமைப்புகளை விக்கிமூலத்தில் செய்யவேண்டியுள்ளது. ஆகையால் தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்திலிருந்து தொடங்கும் பொழுது இன்னும் சிறப்புறும் என்ற கருத்தின் அடிப்படையில் அதன் மேம்பாடுகள் குறித்த கருத்துக்கள் இங்கு முன்வைக்கப்படுகின்றன.
தொல்காப்பிய நூல் அட்டவணை

காலத்தால் மிகவும் தொன்மையான நூல் தொல்காப்பியமாகும். இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன; பல்வேறு நூல்களும் வெளிவந்துள்ளன. இணையவெளியில் தொல்காப்பியம் என்ற குறிச்சொல் தந்து கூகுள் தேடுபொறியில் தேடும்பொழுது ஏறத்தாழ 2,78,000 முடிவுகளும், தொல்காப்பியர் என்ற குறிச்சொல் தந்த பொழுது ஏறத்தாழ 1,15,000 முடிவுகளும், Tolkappiyam என்ற குறிச்சொல் தந்த பொழுது ஏறத்தாழ 4,39,000 முடிவுகளும், Tolkappiyar என்ற குறிச்சொல் தந்த பொழுது ஏறத்தாழ 1,34,000 முடிவுகளும் (தேடிய நாள் - 14.09.2023) கிடைக்கின்றன. இது தொல்காப்பியம் தொடர்புடைய தரவுகள் இணையத்தில் இருக்கும் இருப்புநிலையைத் தெரிவிக்கின்றது.

அந்த வகையில் தமிழ் விக்கிமூலத்தில் தொல்காப்பியத் தரவுகளின் இருப்பிடத்தை அறிய முயல்வோம். அதற்கு முன்பு தமிழ் இலக்கிய, இலக்கணங்களை விக்கிமூலத்தில் வகைப்படுத்தியிருக்கும் முறையை அறிவோம். அதில் பொருள் அடிப்படையில் அட்டவணைகள் எனும் பகுப்பின்கீழ் மொத்தம் 33 துணைப்பகுப்புகள் இருப்பதை அறியமுடிகின்றன. அப்பகுப்புகள் வருமாறு:-



    அகரமுதலி அட்டவணைகள்‎ (1 பகு, 87 பக்.)
    அரசியல் அட்டவணைகள்‎ (3 பக்.)
    அறிவியல் அட்டவணைகள்‎ (27 பக்.)


    இலக்கண அட்டவணைகள்‎ (22 பக்.)



    உரைநடை அட்டவணைகள்‎ (6 பக்.)



    கட்டுரை அட்டவணைகள்‎ (37 பக்.)
    கலைக்களஞ்சிய அட்டவணைகள்‎ (48 பக்.)
    கவிதை‎ (4 பக்.)
    கவிதை அட்டவணைகள்‎ (51 பக்.)
    கேள்வி பதில் அட்டவணைகள்‎ (9 பக்.)
    கோயில் அட்டவணைகள்‎ (26 பக்.)



    சிறுகதைகளுள்ள அட்டவணைகள்‎ (44 பக்.)
    சிறுவர் இலக்கிய அட்டவணைகள்‎ (4 பக்.)
    செவ்விலக்கியங்கள்‎ (3 பக்.)
    சைவ அட்டவணைகள்‎ (6 பக்.)
    சொற்பிறப்பியல் அகரமுதலி‎ (3 பக்.)
    சொற்பொழிவு அட்டவணைகள்‎ (1 பக்.)



    தமிழ் இலக்கிய அட்டவணைகள்‎ (8 பகு, 42 பக்.)
    தொகுப்புநூல் அட்டவணைகள்‎ (1 பக்.)
    தொல்காப்பிய அட்டவணைகள்‎ (24 பக்.)



    நாட்டுப்புறவியல் அட்டவணைகள்‎ (8 பக்.)
    நாடக அட்டவணைகள்‎ (25 பக்.)
    நாடக ஆசிரியர் அட்டவணைகள்‎ (காலி)
    நாடக ஆசிரியர்கள் அட்டவணை‎ (1 பக்.)
    நாடக ஆசிரியர்கள் அட்டவணைகள்‎ (1 பக்.)



    பாரதிதாசன் அட்டவணைகள்‎ (5 பக்.)
    பாரதியார் அட்டவணைகள்‎ (22 பக்.)
    புதின அட்டவணைகள்‎ (20 பக்.)



    மரபுக்கவிதை‎ (1 பகு, 7 பக்.)
    மானுடவியல் அட்டவணைகள்‎ (2 பக்.)
    மொழிபெயர்ப்பு அட்டவணைகள்‎ (18 பக்.)



    வரலாற்று அட்டவணைகள்‎ (1 பகு, 85 பக்.)
    வரலாற்று நூல் அட்டவணைகள்‎ (1 பக்.)

இப்பகுப்புகள், தமிழ்மொழியின் இலக்கண, இலக்கிய வகைமைகளை அறிந்தவர்களால் உருவாக்கப்பெறவில்லை. மாறாகத் தன்னார்வம் கொண்ட பிற துறைப் பங்களிப்பாளர்களால் உருவாக்கப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுப்புகளுள் "தொல்காப்பிய அட்டவணைகள்" எனும் பகுப்பின்கீழ்ப் பின்வரும் 24 நூல்கள் ‘த’வரிசை நூல்களாகவே உள்ளன. அந்நூல்களின் விவரம் வருமாறு:-

    அட்டவணை:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf
    அட்டவணை:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf
    அட்டவணை:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf
    அட்டவணை:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf
    அட்டவணை:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf
    அட்டவணை:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf
    அட்டவணை:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf
    அட்டவணை:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf
    அட்டவணை:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf
    அட்டவணை:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf
    அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf
    அட்டவணை:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf
    அட்டவணை:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf
    அட்டவணை:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf
    அட்டவணை:தொல்காப்பியம் வரலாறு.pdf
    அட்டவணை:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf
    அட்டவணை:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf
    அட்டவணை:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf
    அட்டவணை:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf
    அட்டவணை:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf
    அட்டவணை:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf
    அட்டவணை:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf
    அட்டவணை:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf
    அட்டவணை:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf

இது ஒரு வகையிலான பட்டியல் என்றால், பழந்தமிழ் இலக்கணங்கள் எனும் பகுப்பின்கீழ், தொல்காப்பியம் பகுப்பு அமைந்துள்ளது. அதில் பின்வரும் அட்டவணை இடம்பெறுகின்றது.

    தொல்காப்பியம் எழுத்ததிகாரம்‎ (9 பக்.)
    தொல்காப்பியம் சொல்லதிகாரம்‎ (9 பக்.)
    தொல்காப்பியம் பொருளதிகாரம்‎ (9 பக்.)


இவற்றின் தனித்தனிப் பகுப்பிற்குள் இடம்பெறுவனவற்றைப் பின்ருமாறு பார்க்கலாம்.

    தொல்காப்பியம் எழுத்ததிகாரம்‎

        தொல்காப்பியம்/எழுத்ததிகாரம்/உயிர் மயங்கியல்
        தொல்காப்பியம்/எழுத்ததிகாரம்/உருபியல்
        தொல்காப்பியம்/எழுத்ததிகாரம்/குற்றியலுகரப் புணரியல்
        தொல்காப்பியம்/எழுத்ததிகாரம்/தொகை மரபு
        தொல்காப்பியம்/எழுத்ததிகாரம்/நூல் மரபு
        தொல்காப்பியம்/எழுத்ததிகாரம்/பிறப்பியல்
        தொல்காப்பியம்/எழுத்ததிகாரம்/புணரியல்
        தொல்காப்பியம்/எழுத்ததிகாரம்/புள்ளி மயங்கியல்
        தொல்காப்பியம்/எழுத்ததிகாரம்/மொழி மரபு

    தொல்காப்பியம் சொல்லதிகாரம்‎

        தொல்காப்பியம்/சொல்லதிகாரம்/இடையியல்
        தொல்காப்பியம்/சொல்லதிகாரம்/உரியியல்
        தொல்காப்பியம்/சொல்லதிகாரம்/எச்சவியல்
        தொல்காப்பியம்/சொல்லதிகாரம்/கிளவியாக்கம்
        தொல்காப்பியம்/சொல்லதிகாரம்/பெயரியல்
        தொல்காப்பியம்/சொல்லதிகாரம்/விளி மரபு
        தொல்காப்பியம்/சொல்லதிகாரம்/வினையியல்
        தொல்காப்பியம்/சொல்லதிகாரம்/வேற்றுமை மயங்கியல்
        தொல்காப்பியம்/சொல்லதிகாரம்/வேற்றுமையியல்

    தொல்காப்பியம் பொருளதிகாரம்‎

        தொல்காப்பியம்/பொருளதிகாரம்/அகத்திணையியல்
        தொல்காப்பியம்/பொருளதிகாரம்/உவமயியல்
        தொல்காப்பியம்/பொருளதிகாரம்/களவியல்
        தொல்காப்பியம்/பொருளதிகாரம்/கற்பியல்
        தொல்காப்பியம்/பொருளதிகாரம்/செய்யுளியல்
        தொல்காப்பியம்/பொருளதிகாரம்/புறத்திணையியல்
        தொல்காப்பியம்/பொருளதிகாரம்/பொருளியல்
        தொல்காப்பியம்/பொருளதிகாரம்/மரபியல்
        தொல்காப்பியம்/பொருளதிகாரம்/மெய்ப்பாட்டியல்

இவை இயல் அடிப்படையிலான பகுப்புகள் ஆகும். இவையனைத்தும் தொல்காப்பிய நூலின் மூலத்தை மட்டும் அறியச் செய்வன. அதிலும் எந்த மூலநூலின் அடிப்படையில் இம்மூலத் தரவுகள் உருவாக்கப்பெற்றுள்ளன என்ற குறிப்புகள் இல்லை.

தொல்காப்பியம் சார்ந்து வெளிவந்த நூல்கள் இவை மட்டும்தானா என்றால் இல்லை என்பது விடையாகக் கிடைக்கும். ஏனெனில் ஓலைச்சுவடிகள் தொடங்கி அதன் தரவுகள் கிடைக்கப்பெறுகின்றன. பல்வேறு பொருண்மைகளில் அதன் ஆய்வு முயற்சிகள் உள்ளன. இவை பெரும்பாலும் அச்சு வடிவங்களில் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றை மின்னாக்க வடிவமாகக் கொண்டு வருவது காலத்தின் தேவையாகும். அதிலும் விக்கிமூல நெறிமுறைகளுக்கு உட்பட்ட தரவுகளையாவது இடம்பெறச் செய்வது மிகத் தேவையான ஒன்றாகும். கட்டற்ற உரிமத்தில் கிடைக்கின்ற அனைத்துத் த்தொல்காப்பியத் தரவுகளையும் ஓரிடத்தில் குவித்து வைக்கும் ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப் பெறல் வேண்டும்.
தொல்காப்பிய அட்டவணை மேம்பாடு

தொல்காப்பியம் தமிழில் கிடைக்கப்பெறுகின்ற முதல் இலக்கணப் பனுவல் என்பது அனைவரும் அறிந்ததே. அதன் சிறப்பை இன்று அனைத்துத்துறை வல்லுநர்களும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் சிறப்பினை உணரும் பொழுதுதான் அந்நூல் சார்ந்த தரவு உருவாக்கத்தின் முக்கியத்துவத்தை உணரலாம். ஆகையால் அந்நூலின் சிறப்புக் குறித்துப் பின்வரும் கருத்துக்கள் தெளிவுபடுத்தும்.

''மொழியைப் பற்றித் தொல்காப்பியர் கொண்டிருந்த கருத்து உலகில் மற்ற அறிஞர்கள் கொண்டிருந்த கருத்திலிருந்து பெரிதும் வேறுபட்டுள்ளது. அதனால்தான் இவருடைய இலக்கண அமைப்பும் இலக்கணம் எழுதிய முறையும் வேறுபட்டிருக்கிறது. தொல்காப்பியருடைய இலக்கணக் கோட்பாட்டில் உரையாடல்கூட இடம்பெறுகிறது. வினா விடைகள் இடம் பெறுகின்றன. வினா எப்படி அமைய வேண்டும் விடை எப்படி அமைய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் தொல்காப்பியர் பேசுகிறார். வினாவிலும் விடையிலும் பிழைவராமல் காக்க ஒரு நூற்பாவை அமைக்கிறார். விடை சொல்லும்போது விடைக்குரிய செய்தியை மட்டும் கொடுத்தால் போதாது. வினாவுக்கு ஏற்றபடி விடை அமைப்பு அமைந்திருக்க வேண்டும். அண்ணாமலை நகர் எங்கே இருக்கிறது? என்று கேட்டால் பதில் நேராக அமைதல் வேண்டும். சுற்றி வளைத்துப் பேசக் கூடாது. உங்கள் பெயர் என்ன என்று கேட்டால் நேராக அமைதல் வேண்டும். சுற்றிவளைத்துப் பேசக்கூடாது. சில நேரங்களில் சில விதிவிலக்குகள் உண்டு. பொன்னி அரிசி இருக்கிறதா என்று கேட்டால், சீரக சம்பா இருக்கிறது என்று சொல்லுவது பிழையில்லை. இனமான பொருளைச் சொல்லுவதால் பிழையில்லை. நன்னூல் காண்டிகை படித்திருக்கிறீர்களா என்று கேட்டால் விருத்தியுரை படித்திருக்கிறேன் என்று சொன்னால் பிழையில்லை. இப்படியெல்லாம் எப்படிக் கேள்வி கேட்க வேண்டும். எப்படிப் பதில் சொல்ல வேண்டும் என்றெல்லாம் தொல்காப்பியர் கற்பித்திருக்கிறார்.

மொழியில் இவருடைய ஆய்வு மிகவும் நுணுகி நுணுகிப் போயிருக்கிறது." (பொற்கோ, ப.xiv)

எனப் பொற்கோ கூறியிருக்கும் கருத்து எண்ணிப் பார்க்கத்தக்கது. இக்கருத்து தொல்காப்பியரின் நுண்மாண் நுழைபுலத்தை எடுத்துக் காட்டுகின்றது. இப்படியே அச்சுவடிவத்தில் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் போதாது. காலத்திற்கு ஏற்றாற்போல் இணைய ஊடகத்தில் அதன் மேம்பாடு தேவை. இணையத்தில் கொண்டுவரும் பொழுது என்ன நிகழ்ந்துவிடப் போகின்றது என எண்ணலாம். குறிப்பாக விக்கிமூல இணையப் பக்கத்தில் வரும்பொழுது மேற்கோள் காண்பிக்கும் தன்மை கூடும். அது கூடும்பொழுது அதன் முக்கியத்துவம் வெளிப்படும்.

''இயற்கையில் உருவான மானிட உடல், தாவரங்கள், விலங்குகள் போன்றவைகளும் மானிடரால் உருவாக்கப்பட்ட சமூக அமைப்புகளும் தமக்கென ஓர் ஒழுங்கமைவையும் (system), அவற்றிற்குரிய துணை ஒழுங்கமைவுகளையும் (sub systems) கொண்டு அமைந்துள்ளன. மொழியின் அமைவொழுங்கு என்ன, அதன் துணை ஒழுங்கமைவுகள் என்ன என்பதில் மொழியியலாரிடையே கருத்துவேறுபாடுகள் உள்ளன. பல்வகை மொழியியல் சிந்தனைக்குழுவினரும் (schools of thought) மொழியின் அமைப்பை விளக்கப் பல்வகைத் துணை ஒழுங்கமைவுகளைக் கொண்ட விளக்க மாதிரிப் படிவங்களை (descriptive models) உருவாக்கியுள்ளனர். அமைப்புமுறை மொழியியலார் (structural linguistics) மொழி ஒலியமைப்பு (phonetic structure), ஒலியனமைப்பு (phonological structure) உருபொலியனமைப்பு (morphophonemic structure), சொல்லமைப்பு (morphological structure), தொடர் அல்லது வாக்கிய அமைப்பு (syntactic structure) இவ்விரண்டையும் உட்கொண்ட இலக்கண அமைப்பு (grammatical structure), பொருண்மை அமைப்பு (Semantic structure) ஆகிய துணை ஒழுங்கமைவுகளைக் கொண்ட மாதிரிப்படிவத்தை வகுத்தனர் (ஒ.நோ. Hocke. 1958, ch. 16). ஆனால் சாம்ஸ்கியால் உருவாக்கப்பட்ட மாற்றிலக்கண மொழியியல் (Transformational Generative approach அணுகுமுறை மொழியின் இலக்கணத்தை மூன்று பகுதிகளை (components) உடையதாகக் காட்டியது. தொடரியல் (Syntactic) பகுதியே மொழியமைப்பிற்கு இன்றியமையாத மையப்பகுதி (central component). ஒலியனியல் பகுதி (phonological component), பொருண்மையியல் பகுதி (semantic component) ஆகியவை தொடரியல் பகுதிக்கு உரிய விளக்கப்பகுதிகள் (interpretive components) என விளக்கியது (Chomsky, 1965). அமைப்புமுறை மொழியியலின் ஒலியமைப்பு, ஒலியனமைப்பு, உருபொலியனமைப்பு ஆகிய மூன்றும் மாற்றிலக்கண முறையின் ஒலியனியல் பகுதிக்குள் அடக்கப்பட்டன. சொல்லமைப்பு, தொடரமைப்பு வேறுபாடுகள் ஒதுக்கப்பட்டு அவ்விரண்டும் தொடரமைப்பின் பகுதியாக ஆராயப்பட்டன. பொருண்மையியல் பகுதி தனித்தன்மை உடையதாகக் கருதப்படாமல் தொடரியல் பகுதியின் விதிகளால் உருவான வாக்கியங்களுக்குப் பொருள் விளக்கம் கூறும் பகுதியாக மட்டுமே உருவாக்கப்பட்டது. சாம்ஸ்கியின் மொழியமைப்புக் கொள்கையும் அவர் தொடர்ந்து எழுதிய நூல்களில் பல்வகை மாற்றங்களை அடைந்தது. இது மொழியின் முற்றமைப்பு இன்னும் முழுவதுமாகப் புரிந்து கொள்ளப்படவில்லை; புதிய ஆய்வுச் சிந்தனைகளுக்கும் மாதிரிப் படிவங்களுக்கும் இடமளிக்கும் வகையில் உள்ளது என்பதைக் காட்டுகின்றது. இக்கண்ணோடத்தில் தொல்காப்பியம் காட்டும் மொழியமைப்பின் மாதிரிப் படிவம் என்ன? அது இன்றைய மொழியியலார் வகுக்கும் மாதிரிப் படிவங்களோடு ஒத்திருக்கிறதா? வேறுபடுகிறதா? அப்படிவத்தின் சிறப்பு என்ன என ஆராய்வது தொல்காப்பியத்தின் சிறப்பையும் தொல்காப்பியம் காட்டும் தமிழ் மொழியியல் சிந்தனையின் பெருமையையும் உணர்ந்துகொள்ளத் துணைபுரியும்" (க. பாலசுப்பிரமணியன், பக்.177 - 179).

என க.பாலசுப்பிரமணியன் தன்னுடைய மொழியியல் பார்வை கொண்டு தொல்காப்பியப் பனுவலை ஆராய்ந்து தொல்காப்பியத்தின் சீர்மையைக் கூறுகின்றார்.

மேற்கூறிய கருத்துக்கள் தொல்காப்பியத்தை மொழியியல் அடிப்படையில் ஆய்வு செய்தவர்களாகிய பொற்கோ, க.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கூறியவை. இவைபோன்ற சிந்தனைகள் அச்சு நூல்களிலேயே முடங்கிவிடக் கூடாது என்பதற்காகவும், தொல்காப்பியப் பனுவலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும், தொடர்ந்து பல ஆய்வுகள் தொல்காப்பியப் பனுவலில் நிகழ்த்தவும், குறிப்பாக இயற்கை மொழி ஆய்வுகள் நிகழ்த்துவதற்கான தரவு மேம்பாட்டிற்காகவும் அக்கருத்துக்கள் வலிமை சேர்க்கும் என்பதால் வலியுறுத்தப்பெற்றன. தொல்காப்பிய அட்டவணை கொண்டிருக்க வேண்டிய உள்ளடக்கங்களைப் பின்வருமாறு கட்டமைக்கலாம். இந்தக் கட்டமைப்பு விக்கிமூலத்தில் பங்களிப்புச் செய்யும் பிற மொழிகளுக்கும் பயன்படும் நோக்கிலும் எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் பிறமொழிகளின் தரவுகளும் ஓலைச்சுவடி, காகிதச் சுவடி போன்ற தரவாக்கங்களிலிருந்தே தொடங்குகின்றன. அதற்கு ஏற்ப வடிவமைத்து, ஒழுங்கமைத்துத் தருவது தேவையான ஒன்றாகும். அதனடிப்படையில்தான் தொல்காப்பியத் தரவு மேம்பாடு குறித்து இங்குச் சிந்திக்கப்படுகின்றன. இன்றைய காலத்தில் மொழியை இயற்கை மொழி சார்ந்த ஆய்வுகளில் ஆயத்தப்படுத்துகின்றனர். ஆகவே, பைத்தான் போன்ற இயந்திர மொழிகளில் நூலாக்கக் கட்டகங்களாக ஆங்கில மொழியின் தரவுகள் இடம்பெறுகின்றன. அந்த நோக்கிலேதான் தொல்காப்பியத் தரவுகளைப் பின்வருமாறு வகைப்படுத்தித் தருதல் வேண்டும்.

    ஓலைச்சுவடிகளில் தொல்காப்பியம்

        மூல நூற்சுவடிகள்
        உரை நூற்சுவடிகள்

    அச்சு நூல்களில் தொல்காப்பியம்

        மூலநூல்

        உரைநூல்

            பழைய உரைகள்
            உரைவளம்
            தற்கால உரைகள்

        ஆய்வுநூல்

            இந்திய மொழி ஒப்பீடு-ஒப்பாய்வு
            அயல்மொழிமொழி ஒப்பீடு - ஒப்பாய்வு
            திராவிட மொழி ஒப்பீடு-ஒப்பாய்வு
            தமிழ் இலக்கிய, இலக்கணங்களுக்கிடையே ஒப்பீடு-ஒப்பாய்வு

        கோட்பாட்டாய்வு

            எழுத்து
            சொல்
            பொருள்

இவ்வாறான வகைப்பாடு காலத்திற்கு ஏற்றதாகும்.

விக்கிமூலத்தில் இருக்கக் கூடிய தொல்காப்பிய அட்டவணைகளை வகைப்படுத்திப் பார்க்கும்பொழுது பின்வருமாறு வகைப்பாடு அமைகின்றது.



அச்சு நூல்களில் தொல்காப்பியம்‎ (2 பகு)



உரைநூல்‎ (1 பகு)



பழைய உரை‎ (1 பகு, 7 பக்.)

அட்டவணை:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf
அட்டவணை:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf
அட்டவணை:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf
அட்டவணை:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf
அட்டவணை:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf
அட்டவணை:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf
அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf




பழைய உரை‎ (1 பகு, 7 பக்.)



ஆய்வு நூல்‎ (9 பக்.)

அட்டவணை:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf
அட்டவணை:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf
அட்டவணை:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf
அட்டவணை:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf
அட்டவணை:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf
அட்டவணை:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf
அட்டவணை:தொல்காப்பியம் வரலாறு.pdf

அட்டவணை:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf
அட்டவணை:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf



உரைவளம்‎ (8 பக்.)

அட்டவணை:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf
அட்டவணை:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf
அட்டவணை:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf

அட்டவணை:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf
அட்டவணை:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf
அட்டவணை:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf
அட்டவணை:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf
அட்டவணை:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf


இந்த அளவில்தான் தொல்காப்பியத் தரவிற்குரிய தரவு வகைப்பாடு அமைந்துள்ளது.
தொல்காப்பிய நூல் தரவு மேம்பாட்டினால் ஏற்படும் விளைவுகள்

விக்கிமூலம் கல்விசார் வளங்களை மேம்படுத்தி வரும் கட்டற்ற தளமாக இருப்பதனால் தமிழில் இயற்கை மொழி சார்ந்த ஆய்வுகள் நிகழ்வதற்குப் பெருந்துணைநல்கும். அவ்வாய்வு மட்டுமின்றி உலகப் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் ஆய்வுகள் நிகழ்த்த இத்தளம் ஒரு நூலகமாகவும் செயல்படும். மேலும் இதனால் விளையும் பயன்களை,

    தொல்காப்பிய ஆய்வுகள் தொடர்ந்து நிகழ
    இந்திய மொழிகளின் இலக்கண ஆய்வுகள் எளிதில் நடைபெற
    உலக மொழிகளின் இலக்கண ஆய்வுகள் எளிதில் நடைபெற
    இயற்கை மொழி ஆய்வுகளுக்கான தரவுகள் கிடைத்திட
    விக்சனரி திட்டங்களில் தொல்காப்பியச் சொற்களை ஏற்படுத்த
    விக்கித்தரவில் சேர்க்க
    விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் உருவாக்க
    தொல்காப்பியத் தகவல் பெறுவி கருவியை உருவாக்க
    தொல்காப்பியம் குறித்த மென்பொருள் உருவக்க
    தொல்காப்பியக் கற்றல் கற்பித்தல் கருவிகளை வடிவமைக்க


எனக் குறிப்பிடலாம்.

நிறைவாக…

இதுவரை விளக்கப்பெற்றதின் அடிப்படையில் பார்க்கும் பொழுது ஆங்காங்கு நடைபெறும் தொல்காப்பிய ஆய்வுகளை ஓரிடத்தில் குவித்து வைக்கும் ஒரு கருவூல நூலகமாகத் தமிழ் விக்கிமூலம் அமையும் என்பதை உணர முடிகின்றது. இது நடக்கும்பொழுது 74 விக்கிமூலத் திட்டங்களுக்கெல்லாம் முன்னோடித் திட்டமாகத் தமிழ் விக்கிமூலத்திட்டம் அமையும்.
குறிப்புநூல்கள்

    "விக்கிப்பீடியா." விக்கிப்பீடியா. 8 ஆக 2023, 10:41 UTC. 13 செப் 2023, 12:54

    Wikipedia contributors. "Wikisource." Wikipedia, The Free Encyclopedia. Wikipedia, The Free Encyclopedia, 10 Aug. 2023. Web. 13 Sep. 2023.

    wikisource= Charte internationale des Droits de l’Homme (1948)/Déclaration universelle des Droits de l’Homme,

    Wikipedia contributors. "Vanity press." Wikipedia, The Free Encyclopedia. Wikipedia, The Free Encyclopedia, 9 Sep. 2023. Web. 14 Sep. 2023.

    இளமாறன் பா., தொல்காப்பிய ஆய்வுகள்,  July 1, 2012.

    Wikipedia contributors. "List of ISO 639-1 codes." Wikipedia, The Free Encyclopedia. Wikipedia, The Free Encyclopedia, 1 Sep. 2023. Web. 14 Sep. 2023.

    "பைத்தான்." விக்கிப்பீடியா. 4 நவ 2022, 15:06 UTC. 14 செப் 2023, 14:52

    சத்தியராஜ் தங்கச்சாமி. (2021). மொழி, ஓர் அமைப்பொழுங்கு அணுகுமுறையில் தொல்காப்பிய எழுத்ததிகார நூன்மரபு: Ilakkaṇaviyal aṇukumuṟaiyil tolkāppiya eḻuttatikāra nūṉmarapu. இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies), 7(28), 58-71.

    சத்தியராஜ் த., தொல்காப்பிய ஆய்வுகள்: அடைவு (Index of Research in Tolka:ppiyam), இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ், IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.6, Issue 25, pp.37-50

    பொற்கோ, தொல்காப்பிய நெறியில் மொழியியல் ஆய்வுகள், இசையமுது பதிப்பகம், சென்னை, 2021.

    பாலசுப்பிரமணியன் க., தொல்காப்பிய இலக்கண மரபு, அரிமா நோக்கு, சென்னை, முதற்குறிப்பு 2017.

    விக்கிமூலம் - பைவிக்கிமூலம் - https://ta.wikipedia.org/s/5ety

   https://github.com/tshrinivasan/tools-for-wiki

    "எழில் (நிரலாக்க மொழி)." விக்கிப்பீடியா. 9 மார் 2023, 07:51 UTC. 14 செப் 2023, 14:56

    "ஸ்வரம் (நிரலாக்க மொழி)." விக்கிப்பீடியா. 13 பெப் 2023, 07:54 UTC. 14 செப் 2023, 14:57

    "நிரலாக்கம் தலைப்புகள் பட்டியல்." விக்கிப்பீடியா. 1 சன 2022, 09:38 UTC. 14 செப் 2023, 14:57

    "கணினியில் தமிழ்." விக்கிப்பீடியா. 11 ஆக 2023, 12:27 UTC. 14 செப் 2023, 14:58

    வலைவாசல் - தமிழ்க்கணிமை - https://ta.wikipedia.org/s/3v8

    விக்கிமூலம்:பைத்தான் நிரல்கள் https://ta.wikisource.org/s/9z0e

References

    "Wikipedia." Wikipedia. 8 Aug 2023, 10:41 UTC. 13 Sep 2023, 12:54  .

    Wikipedia contributors. "Wikisource." Wikipedia, The Free Encyclopedia. Wikipedia, The Free Encyclopedia, 10 Aug. 2023. Web. 13 Sep 2023.

    wikisource= Charte internationale des Droits de l’Homme (1948)/Déclaration universelle des Droits de l’Homme,

    Wikipedia contributors. "Vanity press." Wikipedia, The Free Encyclopedia. Wikipedia, The Free Encyclopedia, 9 Sep. 2023. Web. 14 Sep 2023.

    Ilamaran B., Archaeological Studies,  July 1, 2012.

    Wikipedia contributors. "List of ISO 639-1 codes." Wikipedia, The Free Encyclopedia. Wikipedia, The Free Encyclopedia, 1 Sep. 2023. Web. 14 Sep 2023.

    "Python." Wikipedia. 4 Nov 2022, 15:06 UTC. 14 Sep 2023, 14:52 .

    Sathiyaraj Thangasamy. (2021). Language, a Systematic Approach to Literary Literacy: Ilakkaṇaviyal aṇukumuṟaiyil tolkāppiya eḻuttatikāra nūṉmarapu. Inam International E-Journal of Tamil Studies, 7(28), 58-71.

    Satyaraj T., Index of Research in Tolka:ppiyam, Inam International E-Journal of Tamil Studies, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.6, Issue 25, pp.37-50

    Porkko, Linguistic Studies in the Archaeological Method, Isaiyamudu Publishing House, Chennai, 2021.

    Balasubramanian K., Historical Grammatical Tradition, Arima Nokku, Chennai, Preprint 2017.

    Wikisource - Bywikisource - https://ta.wikipedia.org/s/5ety

   https://github.com/tshrinivasan/tools-for-wiki

    "Gen (programming language)." Wikipedia. 9 Mar 2023, 07:51 UTC. 14 Sep 2023, 14:56 .

    "Voice (Programming Language)." Wikipedia. 13 Feb 2023, 07:54 UTC. 14 Sep 2023, 14:57 .

    "List of Programming Topics." Wikipedia. 1 Jan 2022, 09:38 UTC. 14 Sep 2023, 14:57 .

    "Tamil on Computer." Wikipedia. 11 Aug 2023, 12:27 UTC. 14 Sep 2023, 14:58 .

    Portal - Tamil Enterprise - https://ta.wikipedia.org/s/3v8

    Wikisource:Python Programs  https://ta.wikisource.org/s/9z0e

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.