தமிழ்மொழியில் தோன்றிய படைப்புகளில் ஆசிரியர்கள் மக்களின் சமுதாயப் பிரச்சினைகளையும், வாழ்வியல் நிலைகளையும் நேரில் கண்டும், தன் வாழ்வியல் நிகழ்ந்த நிகழ்வுகளையும் தம் சிறுகதைகளின் மூலம் வெளிப்படுத்துகின்றனர். அத்திறன் மிக்கவர்களில் திருப்பூர் கிருஷ்ணன் இலக்கியத் துறைகள் அனைத்திலும் ஈடுபாடு கொண்டு ஐநூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரின் சிறுகதைகளில் குடும்ப வாழ்வியல், சமுதாய வாழ்வியலை மையமாகக் கொண்டும், பெரும்பாலான சிறுகதைகளில் பெண் கதைமாந்தரை முதன்மைப்படுத்தி எழுதியுள்ளார். ‘சிவப்பாய்ச் சில மல்லிகைகள்’, ‘பட்டொளி வீசி’ ஆகியன இவரின் சிறுகதைத் தொகுப்புகளாகும். 1981 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘சிவப்பாய்ச் சில மல்லிகைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பை ஆராய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

சிறுகதை

அளவிற் சிறிதாக இருப்பது சிறுகதை, ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்குள் படித்து முடிக்கக் கூடியதாகவும், ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடியதாகவும் இருப்பனவெல்லாம் இதிலடங்கும் என்பர். ஆனால் கால எல்லை மட்டும் அதன் முழு இலக்கணம் அன்று. சிறுகதை என்பது வாழ்க்கையில் நிகழும் ஒரு நிகழ்ச்சியை அல்லது ஓர் உணர்ச்சியைக் கருவாகக் கொண்டு பின்னப்படுவதாகும். ஒரு பாத்திரம், ஒரு மனவுணர்ச்சி, ஒரு நிகழ்ச்சி என ஏதேனும் ஒன்றை மட்டுமே நிலைக்களனாக வைத்துக் கொண்டு படைப்பது சிறுகதையாகும்.

சிறுகதை என்பது வாசிப்பவனின் மனதில் சோர்வு இல்லாமலும், அக்கதை படித்து முடிக்கும் வரை, அவன் மனதில் பல்வேறு சமுதாயக் கருத்துகளை எடுத்துக் கூறும் இலக்கிய வகை எனலாம்.

சிறுகதை வரலாறு

சிறுகதையின் இலக்கணம் குறித்து அறிஞர்கள் பல்வேறு கருத்துகளைக் கூறியுள்ளனர். “சிறுகதையாவது அரை மணியிலிருந்து ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்திற்குள் படித்துணர்தற்குரிய உரைநடையில் கூறப்படும் கதையாகும் என்பர்”1 எட்கார் ஆலன்போ. ‘ஓரே மூச்சில் படித்து முடித்தற்குரிய கதையே’ என்பார் வில்லியம் ஹென்றி அட்சன். சிறுகதையின் பொருள் குறிப்பிட்ட வரையறைக்குள் திறம்பட விளக்குதற்குரியதாய் இருத்தல் வேண்டும். கதையினை எழுதி முடித்த பிறகு அதன் கண் விளக்கியுள்ளவற்றை இதனினும் சிறப்பாக விளக்க இயலாது என்ற உணர்வு ஏற்பட வேண்டும். கதையின் செய்திகள் மிகத் தெளிவாகவும் நம் உள்ளத்தைக் கவருவனவாகவும் இருத்தல் வேண்டும்.

“நிகழ்வு, பண்பு, சூழல் ஆகியவற்றுள் ஏதாவதொன்றின் பின்னணியில் தான் உலகக் கதைகள் அனைத்தும் இயங்குகின்றன என்பார்”2 ஆர். எஸ். ஸ்டீவன்சன்.

“சுவையான ஒரு நிகழ்ச்சி அல்லது சூழ்நிலை அமைப்பு, கவர்ச்சியான ஒரு காட்சி, நெருங்கிப் பின்னப்பட்ட சிறு நிகழ்ச்சிகள், ஒருவரின் தனிப்பண்பு, ஒரு சிறு அனுபவம், வாழ்க்கையின் ஒரு வெற்றி. அற உணர்வில் விளைந்த ஒரு சிக்கல் - இவற்றுள் ஏதேனும் ஒன்று நல்ல சிறுகதையின் அடிப்படையாக அமையலாம் என்று மு.வ. குறிப்பிடுவார்.”3 இவ்வாறு அறிஞர்கள் பலர் சிறுகதைகளுக்கான விளக்கங்களைக் கொடுக்கின்றனர்.

சிறுகதையின் கதைக் களம்

சிறுகதை என்பது மனித வாழ்வியலைச் செம்மையாகவும், அழுத்தமாகவும் எடுத்துரைக்கும் இலக்கிய வகையாகும். இவ்விலக்கியம் மக்களின் வாழ்வியலான பெண்ணியம், தலீத்தியம், வறுமை, சாதி வேறுபாடு, கல்வி, சுயநலம், தன்னம்பிக்கை, தனிமனித சுதந்திரம், சுற்றுச்சூழல், தாய், தந்தை, குழந்தைகள் உறவு நிலை, குடும்ப வாழ்வியல், பெண் கல்வி, பருவ மாற்றம், சமுதாய மாற்றம், அரசியல், மனிதாபிமானம், பாலியல், வன்முறை, காதல், அன்பு, தீவிரவாதம் போன்ற பல்வேறு வகையான கதைக்களங்களைக் கொண்டு அமையும். அந்த வகையில் திருப்பூர் கிருஷ்ணனின் சிவப்பாய்ச் சில மல்லிகைகள் தொகுப்பில் சமுதாய வாழ்வியல், குடும்ப வாழ்வியலின் உறவுநிலைகளை அழகாக எடுத்துரைக்கிறார்.

திருப்பூர் கிருஷ்ணனின் ‘சிவப்பாய்ச் சில மல்லிகைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஆறு சிறுகதைகளில் குடும்ப உறவு நிலைகளைப் பற்றி வரும் ஐந்து சிறுகதைகள் மட்டும் ஆய்விற்குட்படுத்தப்படுகிறது. அவை,

    சிவப்பாய்ச் சில மல்லிகைகள்

    சின்னம்மிணி

    காலில்லாத தேவதைகள்

    பூப்போல ஒரு மனம்

    கடைசி நெருப்பு போன்றவையாகும்.

சிறுகதைகளின் கதைக்கரு

ஒவ்வொரு படைப்பாளரும் தன் வாழ்க்கை அனுபவங்களையும், எண்ணங்களையும், படைப்பின் வழி வெளிப்படுத்த, ஏதாவது ஒரு சமுதாயச் சிக்கலை மையமாக வைத்து அல்லது நன்மையை மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக கதைக்கரு அமைகிறது. திருப்பூர் கிருஷ்ணனின் ‘சிவப்பாய்ச் சில மல்லிகைகள்’ என்ற தொகுப்பில் உள்ள ஐந்து சிறுகதைகளின் கதைக்கருக்கள் விளக்கப்படுகின்றன.

“சிவப்பாய்ச் சில மல்லிகைகள்” என்ற சிறுகதையில் ஆண்மை இல்லையென்று தெரிந்தும் தன்னை காதலித்த ஒருவனை ஏற்காமல், அவனைத் திருமணம் செய்து கொண்டு, கணவனின் தம்பியை மகனாக எண்ணி அன்பு செலுத்தி இருவரும் வாழ்வதாக இச்சிறுகதையின் கதைக்கரு அமைந்துள்ளது.

“சின்னம்மிணி” என்ற கதையில் தந்தை தன் மகளுக்குத் திருமணம் செய்து வைக்க மனம் வருத்தமடைவதோடு, தந்தை மகள் பாசப்பிணைப்பு என்பது இதன் கதைக்கருவாகக் காணப்படுகிறது.

“காலில்லாத தேவதைகள்” என்ற கதையில் ஊனத்தைக் குறையாக நினைக்காமல், ஒரு பெண் ஆடவனைத் திருமணம் செய்துக் கொள்கிறாள். அப்பெண் சமுதாயத்தில் சந்திக்கும் சிக்கல்களை மையப்படுத்தியுள்ளது.

“பூப்போல ஒரு மனம்” என்ற கதையில் தாய் தந்தையை இழந்த குழந்தையை முதியோர் வளர்க்கின்றனர். அப்போது முதியோர்கள் தங்கள் பேரக்குழந்தை மீது பாசமாக நடந்துக் கொள்கின்றனர். பிற குழந்தைகளின் மேல் அன்பு செலுத்தாமல் வெறுப்பு காட்டுகின்றனர். ஆனால் அவ்விரு குழந்தைகளும் ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பதைப் பார்த்து முதியோர்களின் மனம் பூப்போல மாறுவதை இக்கதை எடுத்துரைக்கிறது.

“கடைசி நெருப்பு” என்ற கதையில் தந்தை இழந்து தாயால் வளர்க்கப்படும் ஆண் பிள்ளைகள் சமுதாயத்தில் தவறான பாதையில் செல்வதோடு, தாயின் இறுதிச் சடங்கிற்குக் கூட வருவதில்லை என்பது கதைக்கருவாக அமைந்துள்ளது.

குடும்ப வாழ்வியல்

உலகில் உள்ள குடும்ப அமைப்பு என்பது நிரந்தரமானது. குடும்ப அமைப்பின் சில அம்சங்கள் எனச் சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வகையிலான, பாலுறவுத் தொடர்பு உரிமை, இனப்பெருக்கம், ஒரே இல்லத்தில் வசித்தல், பொருளாதார ஒத்துழைப்பு போன்றவற்றைக் கூறலாம். ஆனால் இந்த அம்சங்களிலிருந்து சில பிரச்சினைகளும் தோன்றியுள்ளன. திருமண முறையிலோ அல்லது இரத்தத் தொடர்பிலோ பிணைப்பு ஏற்பட்டு மக்கள் தமக்குள் சேர்ந்து ஒரு குழுவாக வசிப்பார்கள். அவர்கள் தமக்குள் கணவன் – மனைவி, தந்தை – மகள், சகோதரன் – சகோதரி, தாய் - மகளாக அமைந்து ஒரு பொதுவான பண்பாட்டைத் தங்களுக்குள் கடைப்பிடித்து வருவர். இக்குடும்பம் சமுதாய அமைப்பில் அடிப்படை அலகாகும். இத்தகைய குடும்ப உறவுகள் திருப்பூர் கிருஷ்ணன் சிறுகதைகளில் புலப்படுத்தியுள்ள பாங்கு மிகச் சிறப்புடையதாக அமைந்துள்ளது.

குடும்பம்

மனிதன் தனியே வாழாமல் குழுவாக வாழ்தல் குடும்பம் எனப்படும். “குடும்பம் என்ற சொல் சில சமயங்களில் பெற்றோர் மற்றும் குழந்தைகளை உள்ளடக்கியதாகவும் (Nuclear Family) சில வேலைகளில் பெற்றோரின் பெற்றோர், பெற்றோரின் உடன் பிறந்தார் போன்ற மற்ற உறவினர்களைக் கொண்டதாகவும் (Extended Family) பொருள் கொள்ளப்படுகிறது”.4 என்ற கருத்தை ஆக்ஸ்போர்டு அகராதி கூறுகிறது.

தனிமனிதன் கூடி வாழ முற்பட்ட போது குழு அமைக்க முற்பட்டான். பின், அவற்றில் தனக்கென ஒரு குடும்பம் அமைக்கத் தொடங்கி, அவன் தனக்கான உறவின் எல்லையையும் உருவாக்கிக் கொள்கிறான்.

சமுதாயத்தின் வலிமையான பிடிப்புக்குட்பட்ட குடும்ப உறவுகள் நிலையாக அமைய வேண்டுமானால் குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு, பாசம், பணிவு, விட்டுக் கொடுத்தல், உரிமை, ஒற்றுமை, அடக்கம், இரக்கம் போன்ற நற்பண்புகள் இருத்தல் வேண்டும். குடும்ப அமைப்புகளில் உறவு நிலைகள் அமைந்துள்ளவை ‘சிவப்பாய்ச் சில மல்லிகைகள்’ சிறுகதைத் தொகுப்பில் காணலாம். அச்சிறுகதைகளில் பாத்திரங்கள் வழி உறவு நிலைகள்,

    கணவன் - மனைவி

    தாய் - மகள்

    தந்தை – மகன்

    தாத்தா – பேரன் போன்ற நிலைகளில் மாந்தர்கள் வழி வாழ்வியலை எடுத்துரைத்துள்ளார்.

கணவன் - மனைவி உறவு

மனித வாழ்வில் திருமணத்தின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகும். திருமணம் தொடங்கி இறக்கும் வரை ஒருவருக்கொருவர் துணையாக வாழ முற்பட்ட உறவு கணவன் - மனைவி உறவு. அக்கணவன், மனைவி உறவு சிறுகதைகளில் ஒருவருக்கொருவர் புரிந்துக் கொள்ளும் மனப் பாங்கில் ஆசிரியர் தன் சிறுகதைகளில் படைத்துள்ளார். இப்படியான கணவன் மனைவி உறவுகள் பற்றி ‘சிவப்பாய்ச் சில மல்லிகைகள்’, ‘காலில்லாத தேவதைகள்’ முதலிய சிறுகதைகளில் காணப்படுகின்றன.

‘சிவப்பாய்ச் சில மல்லிகைகள்’ என்ற சிறுகதையில் செங்க மலம் ஆண்மை இல்லையென்று தெரிந்தும் மாணிக்கம், என்பவரை திருமணம் செய்து கொள்கிறாள். மாணிக்கம் பெண் பார்க்கப் போகும் போது அவனின் குறைவான ஆண்மையின்மையை முதலில் கூறியதால் அவனின் நேர்மையைக் கண்டும். பெண்களைப் பார்க்கும் அணுகுமுறையாலும், அவனின் மேல் அன்பு செலுத்தி அவனையேத் திருமணம் செய்து கொள்கிறாள்.

“ஆனா உன்னை அப்படி ஒரேயடியாகவும் நஷ்டப்படுத்திடலை

செங்கமலம், என் தம்பி மனோகரன் இருக்கானே அவனை

உன் குழந்தையாகக் குடுத்திடுருக்கேன். கொஞ்சம் வளர்ந்த குழந்தை

அவ்வளவு தான்.”5

இருவருக்கும் குழந்தை இல்லாத குறையைத் தன் குடும்பத்தில் இருக்கும் தன் தம்பியான மனோகரனைக் குழந்தையாக எண்ணி அன்பு செலுத்துமாறு மாணிக்கம் தன் மனைவி செங்கமலத்திடம் திருமணத்திற்குப் முன்பு கூறி இருக்கிறான்.

மேலும் அவர்கள் இருவருக்கும் தம்பி மேல் கொண்ட அன்பு,

“என்னாது இது சலவையிலிருந்து வந்தவுடனேயே சட்டையை

எடுத்துப் பாக்கறதில்லே? இப்படி அவன் போற நேரத்துக்கும்

புறப்படற நேரத்துக்கும் பட்டன் தெச்சிக்கிட்டிருந்தா.

எண்ணிக்கு அவன் மீட்டிங் போறது.”6

இருவரும் தம்பி மனோகரனைக் குழந்தையாக எண்ணி வாழ்ந்து வருவதோடு, அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தங்களைக் குழந்தையாகவும் எண்ணிக் கொண்டு வாழ்த்து வருகின்றனர்.

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்புன் பயனும் அது.”7

என்ற வள்ளுவரின் கருத்திற்கு ஏற்ப செங்கமலமும் பிற உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி அறமாக வாழ்ந்து இல்வாழ்க்கையில் பண்புள்ளவர்களாக இக்குறள் காட்டும் அன்பின் அறத்தோடு நடந்து கொள்வதைக் காணலாம்.

சமுதாயத்தில் குழந்தை இல்லையென்றால் கணவன் மனைவி இருவரும் பிற குழந்தைகளின் மீதும், தன் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் அன்பாக பாசமாகவும் வாழ வேண்டும் என்ற கருத்தை இச்சிறுகதையின் மூலம் அறிய முடிகிறது.

“காலில்லாத தேவதைகள்” என்ற சிறுகதையில் கால் ஊனம் என்று தெரிந்தும் திருமணம் செய்துக் கொள்ளும் நளினி. தன் குடும்பத்தில் உள்ள கணவரின் அண்ணன் மனைவியால் நளினியின் மனதில் பல துன்பங்கள் ஏற்படுகின்றன. ஆனால் கணவன் - மனைவி இருவரும் அன்பாகவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்து வருகின்றதை,

“வீடு வந்து விட்டது ஒரு ரவுணட் சுற்றி வந்தாயிற்று. போதும்

இன்றைக்கு நளினி அதை அனைத்துத் தாங்கியவா வாசல்

கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தனர்.”8

தன் கணவன் நொண்டி என்ற எண்ணம் இல்லாமல் அவன் மேல் மிகுந்த அன்பாக நடந்துக் கொள்கிறாள் நளினி. ஆனால் கணவன் மனைவியின் அன்பைப் புரிந்துக் கொள்ளாத நளீன் அண்ணி மட்டும் நொண்டி என்று தினம் தினம் அவர்களின் மனதைக் காயமடையச் செய்கிறாள்.

“அப்படிச் சொல்கிறபோது தன் மனசில் ஏற்படுகிற ஊமைவலி.

நெஞ்சில் ஏற்படுகிற ரணகளம்… அப்படி ஏற்படுகிறது என்பதைத்

தெரிந்து கொண்டு தானே நாள்தோறும் நாள்தோறும் இந்த

ஏச்சுப் பேச்சு… தோசைக்கல்லில் போட்டுப் பழுக்கக் காய்ச்சின்

ஊசியை இடக்கியால் பிடித்துக் கொண்டு சடாரென்று இதயத்தில்

பாய்ச்சித் திரும்ப எடுக்கிற ராட்சஸ சாமர்த்தியம் என் புருஷன்

நொண்டி தான்.”9

நளீன் அண்ணி தினம் தினம் நொண்டி என்று கூறும் போது நளினியின் மனம் பெரிதும் துன்பப்படுகிறது.

மேலும் தன் கணவனின் குறையைப் பிறர் கூறினால் அதை நளினி மனதில் ஒரு குறையாக ஒரு நாளும் நினைத்ததில்லை. அவை,

“பரிசுத்தமான அவள் வாழ்க்கையில் அவன் கணவன் நொண்டி

என்ற விஷயம் லேசாய் நிரடுகிற மாதிரி நிரடுகிறதா?

இல்லை. நிராடவில்லை உறுத்தவில்லை அவளுக்கு அதைப்

பற்றிச் சிந்தனை இல்லை.”10

என்ற இக்கதையின் சான்று மூலம் காணமுடிகிறது. நளினி தன் வாழ்க்கையில் எவ்வித பிரச்சனையுமின்றி நலமாக வாழ்ந்தாலும் அண்ணியின் பேச்சால் பெரிதும் பாதிக்கப்படுகிறாள். அப்படி இருந்தாலும் தன் கணவன் மீது மிகவும் கனிவாகவும் அன்பாகவும் நடந்துக் கொள்ளும் பாத்திரமாக நளினி மூலம் பெண்களுக்கு தன் கணவரிடம் உள்ள குறையை எண்ணி வருந்தாமல் பெண்கள் வாழ வேண்டும் என்பதை இச்சிறுகதையின் கருத்தின் மூலம் ஆசிரியர் உணர்ந்துகிறார்.

பண்டைய இலக்கியமான சங்க இலக்கியத்தில் கணவன்-மனைவி அன்பாக இருப்பதைப் புறநானூற்றின் வீரை வெளியனார் 320-ஆவது பாடல் வழி அறிய முடிகிறது. பண்டைய இலக்கியங்களில் கணவன் மனைவி அன்போடு இருப்பதைப் போல திருப்பூர் கிருஷ்ணனின் “காலில்லாத தேவதைகள்” என்ற சிறுகதையின் மூலம் கணவன் மனைவிக்குள்ள அன்பை வெளிக்காட்டுகிறார்.

சமுதாயத்தில் ஒரு பெண் தன் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் அன்பாக வாழ்ந்தாலும் அவளைப் போன்ற மற்றொரு பெண்ணால் அவளின் மனம் துன்பப்படுவதைப் பெண்களின் பாத்திரத்தின் வழி நின்று. சமுதாயத்தில் வாழும் பெண்களுக்குப் பிறரின் குறைகளைச் சுட்டிக்காட்டி, மனதில் இது போன்ற துன்பங்களைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர் இச்சிறுகதைப் படைத்துள்ளார்.

தந்தை - மகள் உறவு

குடும்ப உறவுகளின் தந்தை-மகள் உறவில் மற்ற உறவுகளைக் காட்டிலும் சிறந்த அன்பு வெளிப்படுவதைக் காணலம். ஒரு குடும்பத்தில் தாய் இல்லாத குறை தந்தை மகளின் மீது அன்பாகவும், பாசமாகவும் பாதுகாத்து வருவதைக் காண முடிகிறது. இது தந்தை மகள் உறவுகள் ஏறப்படும் பாசப்பிணைப்பு சின்னம்மிணி சிறுகதையில் காண முடிகிறது. இச்சிறுகதையில் தந்தை மகள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசம் வைப்பதையும், சமுதாயத்தில் ஆனால் வளர்க்கப்படும் பெண் குழந்தை சின்னம்மிணி வளர்ப்பு பற்றி சிறுகதையில் வெளிக்காட்டுகிறார். இதில் தந்தை மகள் பாசப் பிணைப்பை பேசப்பட்டுள்ளதை,

“ஐயா பாத்துப்போகோனும், கௌம்பறதுன்னு இன்னஞ் சித்தத்

சீக்கரமே கிளம்பிரக் கூடாதா? ரேகை பார்த்தா ரேகை

தெரியல்லே. போறப்பபே இருட்டிக் கெடக்கே. வர்றப்ப என்னமா

இருக்கும்? லயிட்டுக் கம்பங் கூடத் தெரியல்லேங்கறீங்க அங்கயும்

இங்கயும் போய் முட்டிக்காதீங்க பாத்துப் போங்க.”11

சின்னம்மிணி தன் தந்தை கோயிலுக்குச் செல்லும் போது அவரைப் பாதுகாப்பாகச்; செல்ல வேண்டும் என்று கூறுகிறாள். ஏனென்றால் ஊரில் எப்பொழுதும் கலவரமாக இருப்பதால் தன் தந்தை கோயிலுக்குச் சென்று பத்திமாக வீடு திரும்ப வேண்டும் என சின்னம்மிணி தந்தையிடம் கூறுவது மூலம் அவளின் தந்தை மீது அவள் வைத்துள்ள பாசமும் அன்பும் வெளிப்படுகிறது.

“சின்னம்மிணியின் வயதை இப்போதெல்லாம் கவுண்டர் எண்ணிப்

பார்ப்பதே இல்லை. இருப்பத்திரண்டு இருபத்து மூணு வரை அடிக்

கடி எண்ணிப் பார்த்துக் கலங்கிக் கொண்டிருந்தார்.”12

தன் மகளுக்குத் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவரின் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஏனென்றால் எல்லா சாதிப் பெண்களுக்கும் கல்யாணம் செய்து வைக்க வேண்டுமென்றால் வரதட்சனை அதிகம் கேட்கிறார்கள். அதவாது சமுதாயத்தில் எல்லா சமூக மக்களிடமும் வரதட்சனைகள் அதிகம் கொடுத்து திருமணம் செய்து வைப்பதைக் கண்டு சின்னம்மிணி தந்தை மனதில் வருத்தமடைகிறார்.

மேலும் அவர் கோயிலுக்குச் சென்ற போது சின்னம்மிணியின் கவலை எண்ணி கடவுளிடம் தன் மகளுக்கு ஒரு நல்ல வலிமைக் கொடு என்று கேட்டுக் கொண்டே தான் இருப்பார்.

“முருகன் முன் கண்மூடி நின்ற போது அவருக்கு வேறெதும்

வேண்டத் தோன்றவில்லை. சின்னம்மிணிக்கு ஒரு துணையைக்

கொடு. சின்னம்மிணிக்கு ஒரு துணையைக் கொடு என்று மட்டும்

மந்திரம் போல் ஜெபித்துக் கொண்டார்.”13

இதன் மூலம் தந்தை மகள் சமுதாயத்தில் எவ்வாறு காணப்படுகிறது என்பதை சின்னம்மிணி கதை மூலம் வெளிப்படுவதை அறிய முடிகிறது.

இச்சிறுகதையின் மூலம் சமுதாயத்தில் தந்தை தன் மகளுக்குத் திருமணம் மடிக்க எவ்வாறு மனம் வருத்தமடைகிறார் என்பதையும், சாதிப் பாகுபாடின்றி அனைத்து இன மக்களும் சமுதாயத்தில் வறுமையில் விடுவதையும் ஆசிரியர் இச்சிறுகதை மூலம் சுட்டுகிறார்.

தாய் - மகள் உறவு

தாய் - மகள் உறவானது குடும்ப உறவில் சமுதாயத்தினரால் பெரிதும் போற்றப்படும் உறவாகும். பெண்ணிற்கு ஏற்படும் சிக்கல்களையும் துன்பங்களையும் அறிந்த முதலில் வருத்தப்படுபவர் தாயே ஆவாள். “தாயைப் போலப் பிள்ளை நூலைப் போல சேலை” என்பது பழமொழி. தாய் தன் மகளுக்கு அன்பும், கருணையும், பாசத்தையும் ஊட்டுகிறாள். தந்தை இல்லாத மகளுக்கு தாய் தான் வழிகாட்டியாகவும், அன்னையாகவும் செயல்படுகிறார். தன் வாழும் சமுதாயத்தில் அன்னைக்கு மகளாகவும், அன்னை பாதுகாக்கும் அன்னையாகவும் (மகளாக) ‘கடைசி நெருப்பு’ சிறுகதையில் மகள் உறவு கூறப்பட்டுள்ளது. இதனை,

“இந்த கமலி உறவு முறையில் அந்தப் பிணத்திற்கு மகளாக

வேண்டும். அதுசரி பிணத்திற்குக்கூட உறவு உண்டா என்ன?

அந்தப் பிணம் உயிரோடிருந்த போது அவளுக்கு இவள்

மகள். அவ்வளவு தான்.”14

தந்தை இறந்த பின் சமையல் வேலை செய்து தன் தாயால் வளர்க்கப்பட்ட கமலி. பின்பு சிறிது நாளில் தாய் காசநோயினால் பாதிக்கப்பட்டு படுத்தப்படுக்கையாவே இருந்து இறந்து வருகிறாள். அதன் வருத்தத்தை,

“தாய் தந்தை சோகம் மனசில் வருவாகப் பதிந்தாலும்

அவள் பட்ட வேதனைகளைப் பார்க்கும் போது இந்த

மரணமே வரவேற்கத் தகுந்த மாற்றமாகத் தோன்றியது

கமலிக்கு.”15

தன் தாய் நோயினால் அவதிப்படுவதை விட இறப்பது மேல் என்ற எண்ணம் கமலிக்குத் தோன்றியது. ஏனெனில் அனுதினமும் நோயினால் துன்பப்படும் நிலையைக் கண்டு அவள் உயிருடன் இருப்பதைக் காட்டிலும் இறப்பதே வாழ்வாகவே கமலி எண்ணுகிறாள்.

மேலும் தாயின் இறப்பு சடங்கில் ஒரு ஆண்மகனின் கடமை தன் பிறப்பின் உரிமையாக அவள் வேண்டுகிறாள். அதனை,

“நான் ஒருத்தி முழுசா இங்க நின்னுண்டிருக்கறப்போ எங்கம்மா-

வுக்கு அநாதையாட்டமா கோவிந்தாக் கொள்ளி போட முடியாது.

அதை என் மனது தாங்காது. அதுனால தான் சொல்றேன் சாஸ்-

திரிகளே நானே கொள்ளி போடறேன்.”16

இந்து மத சாஸ்திரப்படி பெண்கள் தாய்க்குக் கொள்ளிப் போட கூடாது என்று கூறும் சமுதாயத்தை எதிர்த்து சாஸ்திரம் தெரிந்த கமலி தன் தாய்க்கு அவளே கொள்ளி போடுகிறாள்.

“தன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்துப் பாலூட்டிய

அன்னையின் நெஞ்சங்களில் தீக்கங்குகளை எடுத்து வைத்த

போது கமலியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவள்

செய்து இந்தப் புனிதச் சடங்கை ஆசீர்வதிப்பது போல வானம்

லேசாக துற்றலிட்டு நின்றாது.”17

தன் தாய்க்குக் கொள்ளிப் போட்டதும், கமலியின் கண்களில் கண்ணீர் வடிந்தது. அவரின் கண்ணீருக்கு ஆசீர்வாதம் செய்தது போல இயற்கையும் சிறுமழைச் சாரலைத் தந்தது. அப்போது கமலி அதனைத் தன் தாயின் கண்ணீரின் ஆசீர்வாதம் என மனதில் எண்ணுகின்றாள்.

இச்சிறுகதை மூலம் வறுமையில் வாடும் தாய் மகள் பாசப்பிணைப்பும், இந்து மத சாஸ்திரத்தை எதிர்த்துப் பெண்களும் தாய்க்குக் கொள்ளி போடலாம் முற்போக்குச் சிந்தனையை ஆசிரியர் முன் வைக்கிறார்.

தாத்தா - பேரன் உறவு

சமுதாயத்தின் குடும்ப அமைப்புகளில் முதியோர்களின் வாழ்வியல் அனுபவம் இன்றியமையாதது. அந்த வகையில் தாத்தா - பேரன் உறவு உதிரத் தொடர்பானது. தாத்தாவின் அனுபவங்களைக் குட்டிக் கதையாக கூறி பேரன்களை வளர்ப்பது அவர்களின் கடமையாகும். ‘ பூப்போல ஒரு மனம்’ சிறுகதையில் அம்பி என்ற சிறுவன் தாய், தந்தையே இளம் வயதிலேயே இழந்து தன் தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறான். தாத்தாவின் வளர்ப்பில் வளரும் அம்பி சரியான முறையில் படிக்காததை முதியவரின் மனநிலை மற்ற பிள்ளைகளைக் கண்டாள் பொறாமையாக இருப்பார்.அதனை,

“தன் பேரனையொத்த வயசுப் பையன்கள் படித்துப் புத்திசாலிகளாக

இருப்பதைப் பார்த்தால் கபகபவென்று வருகிற வயிற்றெரிச்சல்!

நமநமவென மனசுக்குள் சதர அரித்துக் கொண்டிருக்கிற இன்ன

தென்றறியாத கோபம்.”18

கிழவர் தன் பேரன் சரியாக படிக்கவில்லை உதாரியாகச் சுற்றுக்கிறான் என்ற வருத்தம். அதனால் மற்ற பிள்ளைகள் நல்ல முறையில் படிப்பதைக் கண்டாலும் அவர்களைப் பாராட்டும் எண்ணம் அவரின் மனதில் வருவதில்லை.

மேலும் கிழவன் உள்மனதில் ஏதோ குரல் பேசுகிறது. அதனை,

“சொந்தப் பேரன் சொல் விளங்காமல் போனால் ஊர்ப்

பையன்களை ஊர் பேரனாக நினையேன் என்று ஒரு

பல்லி நெஞ்சுக்குள் குரல் கொடுத்தது. அது தான்

முடியவில்லையே என்று ஏங்கிப் பின் வாங்கிறார்.”19

தன் வீட்டில் வளரும் பேரன் வாழ்வில் கல்வி கற்று சரியான பாதைக்குப் போகமால் இருப்பதனால், மற்றப் பிள்ளைகளைத் தன் சொந்தப் பேரனாக எண்ணி வாழ்த்தலாம் என்று உள்மனம் சொன்னாலும் கிழவர்க்கு மற்றப் பிள்ளைகளைப் பாராட்டும் மனநிலை வருவதில்லை. எங்கு சென்றாலும் பேரன் நினைவாக,

“தெய்வமே! என் பேரனுக்குத் திடீரென்று தலையை உலுக்கித் தன்

நினைப்பை மாற்றிக் கொண்டார் கிழவர், இந்த பேரழகைப் பார்த்த

பிறகும் தன் பேரனைப் பற்றி மட்டுமேயா நினைப்பது.”20

கோயிலுக்குத் தெய்வத்தை வணங்கச் சென்றாலும் அங்கும் தன் பேரனின் வாழ்வை எண்ணியே வருந்துகிறார். அதாவது தன் மனம் பேரன் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வந்து கொண்டே தான் இருகிறது. ஆனால் தெய்வத்தை வலுக்கட்டாயமாக வேண்டிக் கொள்கிறார் கிழவர்.

தாய் - தந்தை இழந்த தன் பேரன் தன்னால் நல்ல முறையில் வளர்க்கப்படாமல் போயிட்டான் என்ற வருத்தம் கிழவர் மனதில் பதிக்கிறது. ஆதலால் மற்ற பிள்ளைகளைப் பாராட்டும் மனநிலை கிழவருக்கு வருவதில்லை. வயதான மனிதர்கள் எப்பொழுதும் தங்கள் வீட்டுக் குழந்தைகளின் மீது மட்டும் பாசம் வைப்பதைக் கிழவரின் பாத்திரத்தின் மூலம் இச்சிறுகதையைப் படைத்துள்ளார்.

தாய் - மகன் உறவு

குடும்பம் என்னும் கூட்டமைப்பில் தந்தைக்கென்று சில கடமைகள் இருப்பது போல தாய்க்கென்றும் சில கடமைகள் காணப்படுகின்றன. குழந்தைகள் வளர்ப்பதில் தாயின் பங்கே பெருமளவு காணப்படுவதால். தாய் மிகுந்த எச்சரிக்கையுடன் பிள்ளைகளை வளர்ப்பில் தீமைகளை உருவாக்குகின்றன. அந்த வகையில் ‘கடைசி நெருப்பு’ என்ற சிறுகதையில் தந்தையை இளம் வயதிலேயே இழந்து தாயால் வளர்க்கப்படும் பத்மநாபன் தீயவழியில் செல்கிறான். குடி பழக்கம், திருட்டு, சீட்டு அடுதல் போன்ற தீய பழக்கங்களைப் பழகிக் கொள்வதோடு, தன்னை பெற்று எடுத்த தாய் இறந்த பிறகு அவளுக்குக் கொள்ளிபோடுவதற்கும் கூட அவன் வரவில்லை.

‘விதவை வளர்க்கற பிள்ளை கெட்டுப் போவான் என்கிற

உலகு வசனத்திற்கு நல்ல எடுத்துக் காட்டாக அவன் விளங்களான்.”21

சமுதாயத்தில் தந்தை இல்லாமல் வளரும் சில இளைஞர்கள், வாழ்வில் திசைமாறித் தவறான பாதையில் செல்வதைப் பத்மநாபன் என்னும் பாத்திரத்தின் வழி ஆசிரியர் கூறியுள்ளார்.

திருப்பூர் கிருஷ்ணன் சிறுகதைகளின் உறவு நிலைகள்



திருப்பூர் கிருஷ்ணன் சிறுகதைகளில் கதை மாந்தர்களின் பண்புகள்

சிறுகதைகளின் உயிர்மூச்சாக அமைபவர்கள் கதை மாந்தர்கள் எனலாம். கதையென்றாலே கதையை நடத்திச் செல்லும் மாந்தர்களே நம் நினைவுக்கு வருவர். ஒரு சிறுகதை நம் உள்ளத்தைத் தொடுகிறது என்றால் அதன் முக்கியக் காரணம் அதில் இடம்பெறும் கதைமாந்தரின் பண்பாகும். திருப்பூர் கிருஷ்ணனின் கதைகளில் ஆண் கதைமாந்தர்கள், பெண் கதைமாந்தர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் பாத்திரப்படைப்பு ஆராயப்படுகிறது.

ஆண் கதை மாந்தர்கள்

சிறுகதையின் போக்கிற்கு ஏற்ப, ஆண் கதை மாந்தர்களின் பண்புகள் திருப்பூர் கிருஷ்ணன் தன் சிறுகதைகளில் கையாண்டுள்ளார். திருப்பூர் கிருஷ்ணனின் ஐந்து சிறுகதைகளில் உள்ள முதன்மை ஆண் கதாப்பாத்திரங்களாவன,

1. மாணிக்கம்

2. கவுண்டர்

3. நளீன்

4. கிழவர்

5. பத்மநாபன்

மாணிக்கம்

‘சிவப்பாய்ச் சில மல்லிகைகள்’ என்ற கதையில் மாணிக்கம், தன்னிடம் உள்ள குறையை (ஆண்மை) செங்கமலத்தைப் பெண் பார்க்கும் போகும் போதே கூறும் நேர்மையான பண்புடையவராக இருக்கிறார். தன் தம்பியே மகனாக எண்ணி அன்பு செலுத்தும் மனிதராக வாழ்கிறார்.

கவுண்டர்

‘சின்னம்மிணி’ என்ற கதையில் தன் மகள் மேல் அன்பு செலுத்தும் தந்தையாக கவுண்டர் இருக்கிறார். திருமண வயதை அடைந்த தன் மகளுக்கு எப்படி திருமணம் செய்து வைக்கப்போகிறோம் என்ற மனகவலையுடையவராக வாழ்த்து வருகிறார்.

நளீன்

‘காலில்லாத தேவதைகள்’ என்ற கதையில் கால் இல்லாத ஊனமுடைய பாத்திரமாக நளீனைப் படைத்துள்ளார். சமுதாயத்தில் ஊனமுடன் வாழ்பவர்கள் எந்த மாதிரியான பிரச்சனையைச் சந்திக்கின்றனர் என்பதை நளீன் மூலம் வெளிப்படுகிறது. ஆனால் நளீன் அனைவரிடமும் அன்பாக பழகும் குணமுடையவராக கதையில் வாழ்ந்து வருகிறார்.

கிழவர்

‘பூப்போல ஒரு மனம்’ என்ற கதையில் கிழவர். வயதடைந்த முதியோர்களுக்கு உடைய பண்புடையவராக படைக்கப்பட்டுள்ளார். முதியவர்கள் தங்கள் வீட்டு குழந்தைகள் மீது மட்டும் பாசம் காட்டுவார்கள். அதைப் போல பிற குழந்தைகளை வெறுக்கும் குணநலமுடையவராக படைக்கப்பட்டுள்ளார்.

பத்மநாபன்

‘கடைசி நெருப்பு’ என்ற கதையில் இளம்வயதிலேயே தந்தையே இழந்த பத்மநாபன் தாயின் அரைவணப்பில் வளர்க்கப்படுகிறான். விதவை வளர்க்கப்படும் ஆண் பிள்ளை கெட்டுப் போவான் என்கிற உலகு வசனத்திற்கு நல்ல எடுத்துகாட்டாக இவன் தீய வழியில் செல்கிறான். குடிப்பழக்கம், திருட்டு, சீட்டு அடுதல் போன்ற தீய பழக்கங்களைப் பழகிக் கொண்ட தீயகுணம் கொண்டவனாக படைக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் கிருஷ்ணன் கதைகளில் ஆண் கதைமாந்தர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு வாழ்வதை அறிய முடிகிறது.

பெண் கதை மாந்தர்கள்

திருப்பூர் கிருஷ்ணன் கதைகளில் பெண் கதைமாந்தர்களையே முதன்மைப் பாத்திரமாக படைத்துள்ளார். கதைகளில் நற்பண்புடைய கதாபாத்திரங்களாகவே கையாண்டுள்ளார். அவர்கள்,

1. செங்கமலம்

2. சின்னம்மிணி

3. நளினி

4. கமலி போன்றவர்களாகும்

செங்கமலம்

‘சிவப்பாய்ச் சில மல்லிகைகள்’ என்ற கதையில் செங்கமலம் ஒரு தலையாக காதலிக்கும் வடிவேலுவின் காதலை ஏற்காமல், ஆண்மை இல்லையென்று தெரிந்தும் மாணிக்கம் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறாள். கணவன் மீது மிகுந்த அன்பு செலுத்தும் நல்ல பண்பு நலமுடையவராகப் படைக்கப்பட்டுள்ளார்.

சின்னம்மிணி

‘சின்னம்மிணி’ என்ற கதையில் தாயை இழந்த தந்தையின் அன்பால் செல்லமாக வளர்க்கப்படும் கதாபாத்திரம் சின்னம்மிணி, சமுதாயத்தில் தன்னைத் தாக்க வரும் தீய சக்திகளை எதிர்த்து வாழும் வீரப் பெண்ணாகப் படைத்துள்ளார். மேலும் தந்தை மீது மிகுந்த பாசமுடைய பெண்ணாக கதையில் உலவ விட்டுள்ளார்.

நளினி

‘காலில்லாத தேவதைகள்’ என்ற கதையில் ஊனத்தை ஒரு குறையாக எண்ணாமல் நளீன் என்பவரைத் திருமணம் செய்து கொள்கிறாள் நளினி. கணவன் வீட்டில் அவனின் ஊனத்தை குறை கூறி கொண்டு இருக்கும் அண்ணியின் குணத்தைப் பொருந்துக் கொள்ளும் பாத்திரமாக படைத்துள்ளார். கணவன் மீது மிகுந்த அன்பு செலுத்தும் பெண்ணாகக் கதையில் வருகிறார்.

கமலி

‘கடைசி நெருப்பு’ என்ற கதையில் இளம் வயதிலேயே தந்தையை இழந்து தாயால் வளர்க்கப்படும் கமலி. தாயின் வறுமை உணர்ந்து கொண்டு நல்ல முறையில் படித்து. தாயைக் காப்பாற்றும் பாத்திரமாக படைத்துள்ளார். சமுதாயத்தில் இந்து சாஸ்திர தர்மத்தை எதிர்த்து, ஒரு பெண் தன் தாய்க்கு இறுதிச் சடங்கு நடத்தும் சவலான பெண்ணாக கதையில் படைக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் கிருஷ்ணனின் கதைகளில் பெண் கதை மாந்தர்கள் சமுதாயத்தில் எந்தச் சிக்கலையும் எதிர்த்து வாழும் தைரியமான பெண்களாகப் படைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

திருப்பூர் கிருஷ்ணன் சிறுகதைகளின் மொழி நடை

ஒரு படைப்பாளி தன் வாழ்க்கையில் கண்ட அனுபவத்தை ஒரு படைப்பாக உருவாக்குகிறான். அத்தகைய படைப்புகள் வாசகனைச் சென்றடைய படைப்பாளியின் மொழி நடையே காரணமாக அமைகின்றது. ஒரு படைப்பாளியிடம் இயல்பாகக் காணப்படும் மொழி வளமே. படைப்பின் வெற்றிக்குக் காரணமாக அமைகிறது. அந்த வகையில் திருப்பூர் கிருஷ்ணனின் ‘சிவப்பாய்ச் சில மல்லிகைகள்’ என்ற தொகுப்பில் கதை மாந்தர்களுக்கு தேவையான இடங்களில் உவமை, பேச்சு மொழி நடை, பழமொழிகள் போன்ற உத்திகளைக் கையாண்டுள்ளார்.

உவமை

இலக்கியங்களில் இபாடல்களில் சுவையை உணர்ந்து கொள்வதற்கு உவமைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. படிக்காத, கிராம மக்களும், தம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு உவமைகளை மிகச் சாதாரணமாகப் பயன்படுத்துகின்றனர். அத்தகைய உவமைகள், அம்மக்களின் மன உணர்வுகளைப் புரிந்து கொள்ள உதவுகிறது. திருப்பூர் கிருஷ்ணன் தம்முடைய கதைகளில் கதை மாந்தர்களே கூறுவதாக பல்வேறு உவமைகளைக் கையாண்டுள்ளார்.

“அலையலையாய் நெளிகிற இந்த கூந்தல், வானவில்லாய்க் குடை

விரிக்கும் இந்த இமைகள், எலுமிச்சம் பழத்திற்குச் சாணை தீட்டிய

மாதிரி மஞ்ச மஞ்சேர் என்றிருக்கிற இந்தக் கூரிய மூக்கு. கழுத்துக்கு

மேலே பிரதி ஷ்டை பண்ணியது மாதிரி என்ன ஒரு சிலையினை

முகம்.” (சி.சி.ம.ப.15)

“திராட்சைப் பழம் மாதிரி, நாவல் பழம் மாதிரி உருளற உன்னோட

கறுப்பு விழிகளைப் பாத்தா, அந்த முழியத் தோண்டியெடுத்து வாயில

போட்டுச் சாப்பிட்டா என்னன்னுதான் தோணுது” (சி.சி.ம.ப.40)

யாரோ, ஆடுகிற கோலத்திலுள்ள ஒரு நடராஜர் சிலையைப்

பிரசன்ட் பண்ணியிருந்தார்கள். (கா.தே.ப.91)

சிறுகதைகளில் ஒரு கதாபாத்திரம் வேறு கதாபாத்திரத்தை இயற்கையோடும். பிற உயிரினங்களோடும், உவமையாகக் கூறுவதாக அமைந்துள்ளது. இது போன்ற உவமைகள் ஆசிரியரின் சொல்லாட்சித் திறனை வெளிப்படுகிறது.

பழமொழிகள்

ஒரு கருத்தை மற்றவருக்கு வெளிப்படுத்தவும், தெளிவாகப் புரிய வைக்கவும் சாதாரண மக்கள் பயன்படுத்துவது பழமொழிகளாகும். நகர மக்களின் வாழ்க்கையை விட கிராமத்தில் வாழும் மக்களிடம், பழமொழிகள் இயல்பாக வழக்கத்தில் உள்ளன. திருப்பூர் கிருஷ்ணன் தம் கதைகளில் கதை மாந்தர்கள் பழமொழிகளை பயன்படுத்துவதாகவே அமைந்துள்ளார்.

“நெருப்பில்லாமல் புகையாது.” (சி.சி.ம.ப.40)

“சொந்தப் பேரன் சொல் விளங்காமல் போனால் ஊர்ப்

பையன்களை உன் பேரனாக நினை” (ப10.ஓ.ம.104)

“விரை ஒன்று போட சுரை ஒன்று முளைக்கும்.” (க.நெ.ப.150) 22

கதைகளில் கதாபாத்திரத்தின் தன்மைகளை விளக்க பழமொழிகளைப் பயன்படுத்தியுள்ளார். இது போன்ற பழமொழிகளால் புரியாத செய்தியை அனைவருக்கும் புரிய வைக்கும் திறன் வெளிப்படுகிறது எனலாம்.

பேச்சுமொழி நடை

பாமரர் மற்றும் படித்தவர்களுக்கும் ஏதுவானது பேச்சுமொழி நடை. பேச்சுமொழி மக்களின் பழக்க வழக்கங்களுக்கேற்ப நாகரிகம் பெற்றும் பெறாமலும் காணப்படுகின்றன. திருப்பூர் கிருஷ்ணனின் சின்னம்மிணி, பூப்போல ஒரு மனம் என்ற சிறுகதைகளில் அன்றாட பயன்படுத்தும் பேச்சுமொழி சொற்களைக் கையாண்டுள்ளார்.

“ஐயா, எளைப்பா இருக்குதா? சித்த இருங்களேன்.” (சி.மி.ப.66)

“எல்லாக் கவலையையும் போட்டுவிட்டு ‘அக்கடா’ என்று

இட என அறிவு சொல்கிறது.” (சி.மி.ப.69)

“சிரிச்சிக்கிட்டே லொட்டுனு போசியக் கீள வெச்சேன்.” (சி.மி.ப.78)

“ஆத்துப் புருஷ வெளீல போய்ட்டு வராளே அவனைச் சித்திக்

கவனிப்பமா, விஜாரிப்பமான்னு கெடையாது.” (ப10.ஓ.ம.ப.117)

இது போன்ற பேச்சுமொழி கதாபாத்திரங்கள் இயல்பாக பேசிக் கொள்வது போன்று அமைந்துள்ளதைக் காண முடிகிறது.

திருப்பூர் கிருஷ்ணனின் மொழி நடை கதைகளுக்கு ஏற்ப தேவையான இடங்களில் பயன்படுத்தி அனைவரும் புரியும் படி எளிமையாக கதைகளை அமைத்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.

தொகுப்புரை

    சிவப்பாய்ச் சில மல்லிகைச் சிறுகதையில் ஒரு பெண் தன் வாழ்வில் கணவனால் இன்பம் காணாமல் இருந்தாலும் அவள் இன்ப வாழ்வுக்காக மற்ற ஆண்களை ஒரு போதும் நினைத்துப் பார்த்ததில்லை. அவளின் கணவன் குறையை ஒரு நாளும் நினைத்து வருந்தம் அடைந்ததும் இல்லை. செங்கமலம் தன் கணவனோடு அன்பாக இணைபிரியாமல் வாழ்ந்து வருவதை அறியலாம்.

    ஒரு பெண் தன் கணவன் ஊனம் என்றாலும், நிம்மதியாக வாழ்ந்து வந்தாலும் இன்னொரு பெண்ணால் தன் கணவனின் ஊனத்தைக் குறை கூறுவதைக் கேட்ட அவளின் மனம் வேதனைப்படுவதை அறிய முடிகிறது.

    எந்த சாதியானலும் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் தந்தை மகள் உறவு நிலைகளைத் திருப்பூர் கிருஷ்ணன் சிறுகதையின் அறிய முடிகிறது.

    தந்தை இல்லாத தாயால் வளர்க்கப்படும் பெண் குழந்தை நல்ல முறையில் வளர்கிறாள். அதே தாயால் வளர்க்கப்படும் ஆண் குழந்தை சமுதாயத்தில் தீயவனாக மாறுகிறான் என்பதை கடைசி நெருப்பு சிறுகதை கண் முன் நிறுத்தி இருக்கிறது.

    வயதான முதியோர்கள் தங்கள் வீட்டுக் குழந்தைகளின் மீது மட்டும் பாசம் காட்டுவதாகவும் பிற குழந்தைகளைப் பாராட்டக் கூட மனம் வருவதில்லை என்பதை கதைமாந்தர்கள் வழி எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர்.

    திருப்பூர் கிருஷ்ணனின் சிறுகதைகளில் பெண் பாத்திரம் முதன்மைப்படுத்தி சிறுகதைகள் அமைந்துள்ளார். இவரின் சிறுகதைகளின் பெண் அகப்புணர்ச்சி சார்ந்த எந்த செய்தியும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் பெண்ணைப் பெருமைப்படுத்தும் கதையம்சங்களைக் காண முடிகிறது. முற்போக்குச் சிந்தனை உள்ள கதைமாந்தர்களை தன் கதைகள் வழி ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார்.

    கதைகளின் ஆண் கதைமாந்தர்கள் ஒவ்வொரு வரும் அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றனர். மேலும் பெண் கதைமாந்தர்கள் சமுதாயத்தில் தைரியமாக வாழும் கதாபாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர் கிருஷ்ணனின் சிறந்த கருத்துச் செறிவு, தெளிந்த மொழிநடை உத்திகள் போன்றவற்றை சிறுகதைத் தொகுப்பின் வழி அறியலாகிறது.

குறிப்புகள்

1. பெ.சிவசக்தி, சாமிநாத சர்மவின் தமிழ்ப்பணி, ப.382

2. கா.கோ. வெங்கடராமன், தமிழ் இலக்கிய வரலாறு, ப.359

3. பெ.சிவசக்தி, சாமிநாத சர்மவின் தமிழ்ப்பணி, ப.383

4. Oxford Dictionary, P.513

5. திருப்பூர் கிருஷ்ணன், சிவப்பாய்ச் சில மல்லிகைகள், ப.30

6. மேலது, ப.25

7. திருவள்ளுவர், திருக்குறள், குறள் - 45

8. திருப்பூர் கிருஷ்ணன், காலில்லாத தேவதைகள், ப.93

9. மேலது, ப.84

10. மேலது, ப.83

11. மேலது, ப.66

12. திருப்பூர் கிருஷ்ணன், சின்னம்மினி, ப.66

13. மேலது, ப.67

14. மேலது, ப.75

15. திருப்பூர் கிருஷ்ணன், கடைசி நெருப்பு, ப.150

16. மேலது, ப.155

17. மேலது, ப.158

18. மேலது,ப.158

19. திருப்பூர் கிருஷ்ணன், பூப்போல ஒரு மனம், ப.10

20. மேலது, ப.104

21. மேலது, ப.106

22. திருப்பூர் கிருஷ்ணன், கடைசி நெருப்பு, ப.150

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.