முன்னுரை

மக்களின் பேச்சு மொழியைப் புனைவிற்குள் கொண்டுவரும் போக்கு இன்று தொடர்ந்து பெருகி வருகிறது. தமிழின் பொது அல்லது இலக்கிய வழக்கிலிருந்து மக்களின் அன்றாட வழக்கில் வெளிப்படும் (பேச்சு) மொழியைக் கொண்டு அவர்களின் வாழ்வியலை மிக அணுக்கமாகக் கூறுவது படைப்பாளரின் தனித்த அடையாளங்களுள் ஒன்றாக அமைந்துவிடுகிறது. மண்ணின் மரபை அம்மண்ணின் மக்களின் வாழ்வியலை மிக அணுக்கமாக கூறுவதற்கு ஏற்ற ஒன்றாக அதைப் படைப்பாளர்கள் கையாளுகின்றனர். பேச்சு மொழியை அடிப்படையாகக் கொண்டு தான் சார்ந்துள்ள சமூகத்தினைப் புனைவிற்குள் கொண்டுவரும் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் வரவேற்று மகிழ வேண்டிய ஒன்று. அது காலத்தின் தேவையும் கூட.

செந்தமிழ் / கொடுந்தமிழ் என்பன வெறுமனே தமிழ் மொழியின் இரு பிரவுகள்தானே ஒழிய. உயர்ந்தது x தாழ்ந்தது என்ற பொருளில் அவற்றை அணுகுவது தவறான ஒருபோக்காகவே அமையும். கொடுந்தமிழ் என்பதைப் பாமர மக்களின் பேச்சு மொழி என்று விலக்கிவிட முடியாது. காரணம், அம்மக்களின் வாழ்வியலை விளக்குவதற்கான சாத்தியக் கூறுகளை அவை அதிகமாக்குகின்றன. இந்தக் கோணத்தில் சிந்திக்க முற்படுவதன் விளைவாகத்தான் பலர் அத்தகைய மொழிநடையைப் பின்பற்றுகின்றனர். அதனால் அவர்களுக்கு அம்மக்களின் வாழ்வியல் விழுமியங்களை மிக நுட்பமாக ஆவணப்படுத்துவதும் சாத்தியமாகின்றன.   சிலர் தங்கள் வட்டார வழக்குகளைத் தொடர்ந்து எழுவதன் மூலமாக முக்கியமான ஆளுமைகளாக வளர்ந்து வந்துள்ளதையும், அத்தகைய எழுத்தாளர்களைத் தமிழ் எழுத்து உலகம் கொண்டாடி மகிழ்வதையும் தற்போது பார்க்க முடிகிறது. 

என்றாலும், பேச்சு மொழி பயன்பாட்டினைப் பற்றிய மொழியியல் பின்புலத்தில் ஆய்வுகள் முன்னெடுக்க பட்டனவா? என்றால், இல்லை. அதாவது, மக்களின் பேச்சு வழக்குகள் புனைவிற்குள் வந்துள்ள அளவிற்கு அவற்றைப் பற்றிய ஆய்வு முன்னெடுப்புகள் நிகழ்த்தப்படவில்லை என்பது மறுக்க இயலாத உண்மை. அத்தகைய ஆய்வுகள் நிகழ்த்த வேண்டிய தேவை அவசியமாகிறது.

பேச்சு வழக்குகளை மையமாகக் கொண்டு எழுதப்படும் எழுத்தாளர்களின் எழுத்துக்களை மொழி அடிப்படையில் ஆராய்வது தமிழ் மொழியின் வளர்ச்சி போக்கையும், மொழியில் நிகழ்ந்துவரும் மாற்றங்களையும் குறித்து நாம் இடைவெளியின்றி அறிந்துகொள்ள வழிவகை செய்யும்.

மேலும், இன்றைய அறிவியல் வளர்ச்சி பேச்சு மொழியை வட்டார அளவில் என்ற எல்லையைக் கடந்த மனித வாழ்க்கையின் அடையாங்கள் எவ்வாறு மொழி வழியில் வெளிப்படுகின்றன என்பதைக் குறித்து அறிந்துகொள்ளமுடியும். ஒரு வட்டாரத்தின் பேச்சு மொழி இன்னொரு வட்டாரத்தில் கலந்து பயன்படுத்தப்படுவதைப் பார்க்க முடிகிறது. அதாவது, மொழிகலப்பு என்பது இன்று பேச்சு மொழி வரை ஊடுருவி வளர்ந்துள்ளது. இது இன்றை நவீன வளர்ச்சிகளின் காரணமாக நிகழ்ந்துள்ள மாற்றங்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.

இப்படி மொழிக்கும் அம்மொழியைப் பயன்படுத்தும் மனிதனுக்குமான உறவின் பல்வேறு பரிமாணங்களைக் கண்டடைய வழிவகை செய்யும் மொழியியல் அடிப்படையிலான ஆய்வின் ஓர் அங்கமாகத் திகழும் இந்த ஆய்வானது இராஜேந்திர சோழன் சிறுகதைகளில் 1970 - காலகட்டங்களில் வெளியான கோணல் வடிவங்கள் (1971), புற்றில் உரையும் பாம்புகள் (1971), தனபாக்கியத்தோட ரவ நேரம் (1973), தற்செயல் (1973) ஆகிய நான்கு கதைகளில் உள்ள சொற்களை மட்டும் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அக்கதைகளை மட்டும் மொழி அடிப்படையில் அணுகும் இக்கட்டுரை பேச்சு மொழி மற்றும் வட்டார வழக்கு சொற்கள் எவ்வாறு கதைகளில் இடம்பெற்றுள்ளன. அக்கால மக்களின் வழக்குச் சொற்களை ஆவணப்படுத்துகிற வேலைகள் படைப்பிற்குள் எவ்வாறு நிகழ்ந்துள்ளன என்பதைக் குறித்து ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

உயிர் மாற்றங்கள் 

பேச்சு மொழியில் பேசப்படும் போது ஏற்படும் உயிர் ஒலிகள் தங்களுக்குள் மயங்கி ஓர் உயிர் ஒளி வர வேண்டிய இடத்தில் மற்றொரு உயிர் ஒலி இடம் பெற்றிருகின்றன. இத்தன்மை நான்கு கதைகளிலும் இடம்பெற்றுள்ளன.  

‘அ’கரம் ‘இ’கரமாக மாறுதல் 

சொற்களில் இடம்பெற்றுள்ள உயிரொலியான ‘அ’கரம் ‘இ’கரமாக மாற்றம் அடைந்துள்ளது. இம்மாற்றம் சொல்லின் இடையில் ஏற்பட்டுள்ளது. அதை மூல வடிவம் நிகழ்ந்துள்ள மாற்றம் என்ற நிலையில் ஒப்பிட்டு இங்கு அடையாளம் காணலாம். அது வருமாறு.

    மூலம் வடிவம்        மாற்றம்

    அப்படியா                            அப்பிடியா

    எப்படி                                   எப்பிடி 

    இப்படி                                  இப்பிடி 

    அப்படி                                 அப்பிடி

‘உ’கரம் ‘ஒ’கரமாக மாறுதல் 

சொற்களில் இடம்பெற்றுள்ள உயிரொலியான ‘உ’கரம் ‘ஒ’கரமாக மாற்றம் அடைந்துள்ளது. இம்மாற்றம் சொல்லின் முதலில் ஏற்பட்டுள்ளது. அது வருமாறு.

    மூலம் வடிவம்                        மாற்றம்

    உனக்கு                                                    ஒனக்கு 

    உதைப்பேன்                                          ஒதைப்பேன்

    உட்கார்ந்திருப்பது                             ஒக்காந்திருப்பது

    உழைத்து                                             ஒழைச்சி

    உட்கார்ந்து                                            ஒக்காந்து

    உதைக்க                                               ஒதைக்க

    உங்கம்மாவிற்கு                              ஒங்கம்மாவுக்கு

மேற்கண்டவற்றில் உயிர் ஒலியுடன் இன்னும் சில மாற்றங்களும் நிகழ்ந்துள்ளதைக் மேலே உள்ள சொற்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகின்றன. அவற்றைப் பற்றிப் பின்னர் பார்ப்போம்.

‘உ’கரம் ‘இ’கரமாக மாறுதல்

சொற்களில் இடம்பெற்றுள்ள உயிரொலியான ‘உ’கரம் ‘இ’கரமாக மாற்றம் அடைந்துள்ளது. இம்மாற்றம் சொல்லின் முதலிலும் இறுதியில் ஏற்பட்டுள்ளது. அது வருமாறு.

    மூலம் வடிவம்                                   மாற்றம்

    ஆண் பிள்ளைக்கு                                                ஆம்பளக்கி

    உழைத்து                                                               ஒழைச்சி

    வேலைக்குக் கூடத்தான்                                 லைக்கி கூடந்தான்

    முன்னாடி                                                            மின்னாடி

மேற்கண்டவற்றில் உயிர் ஒலியுடன் இன்னும் சில மாற்றங்களும் நிகழ்ந்துள்ளதைக் மேலே உள்ள சொற்கள் காட்டுகின்றன.

‘இ’கரம் ‘உ’கரம் மற்றும் ‘எ’கரமாக மாறுதல்

சொற்களில் இடம்பெற்றுள்ள உயிரொலியான ‘இ’கரம் ‘உ’கரமாக மாற்றம் அடைந்துள்ளது. இம்மாற்றம் சொல்லின் முதலிலும் இறுதியில் ஏற்பட்டுள்ளது. அது வருமாறு.

    மூலம் வடிவம்                       மாற்றம்

    குடித்தனம்                                             குடுத்தனம்
                              
    இடமெல்லாம்                                       எடமெல்லாம்

    மிரட்டுகிறாய்                                       மெரட்ற

மேற்கண்டவற்றில் உயிர் ஒலியுடன் இன்னும் சில மாற்றங்களும் நிகழ்ந்துள்ளதைக் மேலே உள்ள சொற்கள் காட்டுகின்றன.

‘ஐ’காரம் ‘அ’கரமாக மாறுதல் 

சொற்களில் இடம்பெற்றுள்ள உயிரொலியான ‘இ’கரம் ‘உ’கரமாக மாற்றம் அடைந்துள்ளது. இம்மாற்றம் சொல்லின் முதல், இடை, இறுதி என்ற மூவிடங்களிலும் ஏற்பட்டுள்ளது. அது வருமாறு.

    மூலம் வடிவம்                மாற்றம்

    கதை                                                கத 

    வேலை                                           வேல

    கவலை                                           கவல

    அக்கறை                                       அக்கற

    ஆசைதான்                                 ஆசதான்

    இல்லை                                     இல்ல 

    போகவில்லை                      போவல

‘ஆ’காரம் ‘அ’கரம் மற்றும் ‘இ’கரமாக மாறுதல் 

சொற்களில் இடம்பெற்றுள்ள உயிரொலியான ‘ஆ’கரம் ‘அ’கரம் மற்றும் ‘இ’கரமாக மாற்றம் அடைந்துள்ளது. இம்மாற்றம் சொல்லின் இடையில் ஏற்பட்டுள்ளது. அது வருமாறு.

    மூலம் வடிவம்                      மாற்றம்

    பேசுவாயா                                            பேசுவயா

    இருப்பாயா                                           இருப்பியா

‘ஐ’காரம் ‘இ’கரமாதல் 

சொற்களில் இடம்பெற்றுள்ள உயிரொலியான ‘ஐ’கரம் ‘இ’கரமாக மாற்றம் அடைந்துள்ளது. இம்மாற்றம் சொல்லின் இடையில் ஏற்பட்டுள்ளது. அது வருமாறு.

    மூலம் வடிவம்                            மாற்றம்

    இதுவரைக்கும்                                             இதுவரிக்கும் 

    இத்தனை                                                       இத்தினி

    இல்லையா                                                   இல்லியா

    போகிறவரைக்கும்                                    போறவரிக்கும்

மேற்கண்டவற்றில் உயிர் ஒலியுடன் இன்னும் சில மாற்றங்களும் நிகழ்ந்துள்ளதைக் மேலே உள்ள சொற்கள் காட்டுகின்றன.

‘உ’கரம் ‘அ’கரமாக மாறுதல் 

சொற்களில் இடம்பெற்றுள்ள உயிரொலியான ‘உ’கரம் ‘அ’கரமாக மாற்றம் அடைந்துள்ளது. ஒருத்தனும் என்பது ஒரத்தனும் எனச் சொல்லின் இடையில் ஏற்பட்டுள்ளது. இந்த வடிவிலான சொல் ஒன்று மட்டும் கதையில் காணக் கிடைகின்றது.

‘ஏ’காரம் ‘இ’கரமாக மாறுதல்

எங்கேயும் என்பது எங்கியும் என ‘ஏ’காரம் ‘இ’கரமாக மாறுதல் என்பது ஓரிடத்தில் மட்டும் உள்ளது.

இவ்வாறு உயிர் ஒலிகளின் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதையும் அவற்றுடன் தொடர்புடைய வேறு சில மாற்றங்களையும் கதைகளில் காணமுடிகின்றன.

மெய்யொலி மாற்றங்கள் 

உயிர் ஒலிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் போலவே மெய் ஒலிகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றைக் குறித்து இனிக் காணலாம்.

‘ற்’ என்பது ‘க்’ ஆக மாற்றம் அடைதல்

நிற்பவனைப்போல் என்பது நிக்கறவனாட்டம் எனக் கதையில் கூறப்பட்டுள்ளது. இதில் ‘ற்’ என்பது ‘க்’ காக மாற்றம் அடைந்துள்ளதுடன், இன்னும் சில மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன.

‘ர்’ என்பது ‘க்’ ஆக மாற்றம் அடைவது

பார்ப்பதை என்பது பாக்கறத எனக் கதையில் கூறப்பட்டுள்ளது. இதில் ‘ர்’ என்பது ‘க்’ காக மாற்றம் அடைந்துள்ளதுடன், இன்னும் சில மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன.

‘ள்’ என்பது ‘ழ்’ஆக மாற்றம் அடைதல்

கேள்விப்பட்டு என்பது கேழ்விப்பட்டு என ‘ள்’ என்பது ‘ழ்’ காக மாற்றம் அடைந்துள்ளதைக் கதை பதிவு செய்துள்ளது.

‘ட்’ என்பதற்கு மாற்றாக ப், க் வருதல்

‘ட்’ என்ற மெய் ஒலிக்கு மாற்றாக ‘ப்’, ‘க்’ வருதல் கீழ்கண்டவறு அமைந்துள்ளது.

    மூலம் வடிவம்                        மாற்றம்

    கேட்பார்                                                   கேப்பார்

    கேட்பாயா                                              கேப்பியா

    கேட்கவேண்டும்                                  கேக்கணம்

மெய் மாற்றங்களும் அவற்றுடன் சேர்ந்து உண்டான மாற்றங்கள் குறித்தும் மேலே பார்த்தோம். இனி உயிர்மெய் ஒலிகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்துக் காண்போம்.

உயிர்மெய் மாற்றம்

உயிர் மெய் எழுத்துக்கள் சொற்களில் இடம் மாறி இடம்பெற்றுள்ளதைக் குறித்து இனிக் காண்போம்.

‘க’ என்பது ‘வ’ மற்றும் ‘யி’ ஆக மாற்றம் அடைதல்

உயிர்மெய் எழுத்து ‘க’ என்பது ‘வ’ மற்றும் ‘யி’ ஆக மாற்றம் அடைதல் குறித்த பதிவுகள் கதைகளில் இடம்பெற்றுள்ளன. அவை வருமாறு.

மூலம் வடிவம்                              மாற்றம்

போகட்டம்                                                     போவட்டம்

போகவில்லை                                              போவல

போகவில்லையா                                        போவலியா

ஆகிவிடாது                                                 ஆயிடாது

‘கி’ என்பது ‘கெ’ வாக மாற்றம் அடைதல்

உயிர் மெய் எழுத்து ‘கி’ என்பது ‘கெ’ மற்றும் ‘யி’ஆக மாற்றம் அடைதல் குறித்த பதிவுகள் கதைகளில் இடம்பெற்றுள்ளன. ‘கெ’ மொழிக்கு முதலிலும், ‘யி’ மொழியின் இடையிலும் மாறியுள்ளன. அவை வருமாறு.

    மூலம் வடிவம்                    மாற்றம்

    கிடையாதா                                       கெடையாதா

    கிடக்கிறான்                                      கெடக்கறான்

    ஆகிவிடாது                                      ஆயிடாது

‘நி’ என்பது ‘நெ’ வாக மாறுதல்

நினைப்பு என்பது நெனப்பு என்ற மாற்றத்துடன் கதையில் இடம்பெற்றுள்ளது. இந்த ஒரு சொல் மட்டும் ‘நி’ என்பது ‘நெ’ வாக மாற்றம் அடைந்துள்ளதாக உள்ளது.

‘பி’ என்பது ‘பொ’ வாக மாறுதல்

பிறந்திருக்க என்பது பொறந்திருக்க என்ற மாற்றத்துடன் கதையில் இடம்பெற்றுள்ளது. இந்த ஒரு சொல் மட்டும் ‘பி என்பது ‘பொ’ வாக மாற்றம் அடைந்துள்தாக உள்ளது.

‘பு’ என்பது ‘பொ’ வாக மாறுதல்

புறப்பட்ட என்பது பொறப்பட்ட என்ற ஒரு சொல்லில் மட்டும் ‘பு’ என்பது ‘பொ’ வாக மாற்றம் அடைந்துள்தாக உள்ளது.

‘கொ’ என்பது ‘கு’ வாக மாறுதல்

கொடுக்கின்றானா என்பது குடுக்குறானா என்ற மாற்றத்துடன் கதையில் இடம்பெற்றுள்ளது. இந்த ஒரு சொல் மட்டும் ‘கொ என்பது ‘கு’ வாக மாற்றம் அடைந்துள்தாக உள்ளது.

‘று’ என்பது ‘னு’ வாக மாறுதல்

உயிர் மெய் எழுத்து ‘று’ என்பது ‘னு’ வாக மாற்றம் அடைதல் குறித்த பதிவு கதைகளில் இடம்பெற்றுள்ளது. இது மொழிக்கு இடையிலும் இறுதியிலும் நிகந்துள்ளது. அது வருமாறு.

    மூலம் வடிவம்                       மாற்றம்

    நின்று கொண்டு                                     நின்னுகினு

    இல்லை என்று                                     இல்லன்னு

    ஒன்றும்                                                 ஒன்னும்

வி’ என்பது ‘பு’ மற்றும் ‘வு’ வாக மாறுதல் மற்றும் ‘வீ’ என்பது ‘வூ’ வாக மாற்றம் அடைதல்

உயிர் மெய் எழுத்து ‘வி’ என்பது ‘பு’ மற்றும் ‘வு’வாக மாற்றம் அடைதல். ‘வீ’ என்பது ‘வூ’ வாக மாற்றம் அடைதல் குறித்த பதிவுகள் கதைகளில் இடம்பெற்றுள்ளன. இம்மாற்றங்கள் மொழிக்கு இடையிலும் இறுதியிலும் நிகந்துள்ளன. அவை வருமாறு.

    மூலம் வடிவம்                          மாற்றம்

    ஓடிவிட                                                       ஓடிப்புட

    விடுவேன்                                                 வுடுவேன்

    விட்டுவிடு                                                வுட்டுர்றா

    வீடு                                                             வூடு

    வீட்டில்                                                     வூட்ல

மேற்கண்ட உயிர்மெய் எழுத்துக்கள் மாற்றங்களுடன் இடம்பெற்றுள்ளதைக் கதைகளில் காண முடிகின்றன. இவற்றுடன், ‘த்து’ என்பது ‘ச்சி’ ஆகவும், ‘ந்த’ என்பது ‘ஞ்சி’ ஆகவும் மாற்றமடைந்த சொற்கள் சிலவற்றையும் கதைகளில் காணமுடிகின்றன.

‘த்து’ என்பது ‘ச்சி’ மாற்றம்

சொற்களில் இடம்பெற்றுள்ள ‘த்து’ என்பது ‘ச்சி’ ஆக மாற்றம் அடைந்துள்ளது. இம்மாற்றம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் ஏற்பட்டுள்ளது. அது வருமாறு.

மூலம் வடிவம்        மாற்றம்

உழைத்து            ஒழைச்சி

கடித்து            கடிச்சி

வைத்துக்கொண்டு        வச்சிக்னு

கரைத்து            கரச்சி

கரைத்து            கரைச்சி

கடித்து            கடிச்சி

குதித்துக்கொண்டிருக்க    குதிச்சிப்புட்டிருக்க

மெய் ‘ந்த’ என்பது ‘ஞ்சி’ என்பதாக மாற்றம்

மெய் ‘ந்த’ என்பது ‘ஞ்சி’ என்பதாக மாற்றமடைந்துள்ளது. அது வருமாறு.

மூலம் வடிவம்                  மாற்றம்

தெரிந்த                                              தெரிஞ்சி

ஒழிந்த                                              ஒழிஞ்சி

கூடுதல் மற்றும் குறைதல்

உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள் இடையிலான மாற்றங்கள் நிகழ்வது ஒரு புறமிருக்க, மறுபுறம் ஒலிகள் கூடுதலாக இடம்பெற்றுள்ளதையும் ஒலிகள் மறைந்துவிடுவதையும் பற்றிய பதிவுகளையும் கூடக் கதைகளில் காணமுடிகின்றன. அவற்றைக் குறித்து இனிக் காண்போம்.

‘ம்’ என்ற ஒலி மொழியில் கூடுதலாக வருதல்

‘நீ’ என்பதுடன் ‘ம்’ என்ற மெய் ஒலி கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அம்மாற்றம் ‘நீம் பட்டுக்னு’ என்று ஓரிடத்தில் மட்டும் காணமுடிகின்றது. கூட என்ற சொல்லுடன் ‘ம்’ என்ற மெய் ஒலி கூடுதலாக வந்து இப்பகூடம், அப்படிக் கூடம், ஊருக்குக் கூடம் எனச் சில இடங்களில் வந்துள்ளன.

இறுதி ஒற்றுக்களான ள், ர், ல் மற்றும் உயிர்மெய் ‘க’ போன்றவை மறைதல்

ஒற்றெழுத்துக்கள் மறைவதான குறிப்புகள் சில இடங்களில் காணமுடிகின்றன. அவை வருமாறு.

    மூலம் வடிவம்                              மாற்றம்

    பெருமாள் கோயில்                                     பெருமா_ கோயில்

    வரமாட்டேன் என்றாள்                               வரமாட்டன்றா_

    இவள்                                                                இவ

    தண்ணிர் தெளித்து                                        தண்ணி_ தெளிச்சி

    வந்தால் கூட                                                வந்தா_ கூட

    இருந்தால் கேள்                                         இருந்தா_ கேளு

    தயக்கமாக இருக்கிறது                            தயக்கமா_ கிது

இவற்றில் மெய் ஒலி மறைவுடன் இன்னும் சில மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன.

‘யி’ என்பது மொழியில் மறைவதல்

    மூலம் வடிவம்                       மாற்றம்

    வெளியில்                                             வெளி_ல

    மெனியில்                                             மெனி_ல

மேற்கண்ட இரு சொற்களில் இம்மாற்றம் நிகழ்ந்துள்ளது.

‘ட்’ என்பது மொழியில் மறைதல்

வேண்டாம் என்ற சொல் வேணாம் என்று ‘ட்’ என்ற மெய் ஒலி மறைவுடன் உள்ளது.

‘ர்’ என்பது மொழியில் மறைதல்

‘ர்’ என்ற மெய் ஒலி மறைவதும் சில இடங்களில் நிகழ்கின்றன. அவை வருமாறு.

    மூலம் வடிவம்                          மாற்றம்

    பார்க்க வேண்டும்                                    பா_க்கணம்

    பார்ப்பதை                                                  பா_க்கறத

    பார்த்ததும்,                                               பா_த்ததும்,

    பார்த்துவிடப் போறாங்க                      பா_த்துடப் போறாங்க

மேற்கண்ட சொற்களில் ‘ர்’ என்ற மெய் ஒலி மறைவதுடன் இன்னும் சில மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன.

விகுதி மாற்றங்கள் 

விகுதி மாற்றங்கள் சில இடங்களில் ஏற்பட்டுள்ளன. அவை குறித்து இனிக் காண்போம்.

‘என்று’ என்பதற்கு மாற்றாக ம்னு, க்னு என்பனவும் என்றால் என்பதற்கு ன்னு, ன்னா என்று மொழியின் விகுதியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவை வருமாறு.

    மூலம் வடிவம்        மாற்றம்

    நடக்குமென்று                  நடக்கும்னு 

    திடுக்கென்று                    திடுக்னு

    இல்லை என்று               இல்லன்னு

    பேசுவது என்றால்         பேசறதுன்னா

    பேச்சு என்றால்              பேச்சின்னா

கொண்டு என்பதற்கு க்னு, கினு என்று அமைதல் 

‘கொண்டு’ என்பதற்கு மாற்றாக க்னு, கினு என்பனவாக மொழியின் விகுதியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவை வருமாறு.

    மூலம் வடிவம்           மாற்றம்

    புகுந்துகொண்டு                      பூந்துக்னு

    திருப்பிக்கொண்டு                  திருப்பிக்னு

    வந்துகொண்டு                       வந்துக்னு

    பேசிக்கொண்டு                      பேசிக்னு 

    வந்துகொண்டு                      வச்சுக்னு 

    வாங்கிக்கொண்டு                வாங்கிக்னு

    பார்த்துக்கொண்டு               பாத்துக்னு

    கேட்டுக்கொண்டு               கேட்டுக்னு

    நின்றுகொண்டு                    நின்னுகினு

மேலுள்ளவற்றில் புகுந்து என்பது பூந்து என்றும் வந்து என்பது வச்சு என்றும் நின்று என்பது நின்னு என்றும் பலவித ஒலி மாற்றங்களைக் கொண்டுள்ளது கவனிக்கதக்கது.

‘போல்’ என்பதற்குப் பதிலாக ‘மாரி’ என்று அமைதல்

போவதுபோல் என்பது போறமாரி என உள்ளது. இதில் போல் என்ற விகுதிக்கு மாற்றாக மாரி என்பது வருவதுடன், ‘வது’ என்ற இரு ஒலிகளுக்கு மாற்றாக ‘ற’ என்ற ஒலிவந்துள்ளது.
‘இடம்’ என்பதற்குப் பதிலாக ‘கிட்டியும்’ என்று அமைதல்

‘மற்றவர்களிடம்’ என்பது ‘மத்தவங்கிட்டியும்’ என உள்ளது. இதில் ‘இடம்’ என்ற விகுதி ‘கிட்டியும்’ என்ற மாற்றமடைந்துள்ளது. மேலும், ‘ற்ற’ என்பது ‘த்த’ என்றும் ‘வர்’ என்பது ‘வங்’ என்றும் மாற்றமடைந்துள்ளது.

‘இருப்பதால்’ என்பதற்குப் பதிலாக ‘வாசி’ என்று அமைதல்

‘இருப்பதால்’ என்பதற்குப் பதிலாக ‘வாசி’ என்று மாறி அமைவதுடன், இன்னும் சில மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. அது வருமாறு.

    மூலம் வடிவம்                        மாற்றம்

    ஆண் பிள்ளையாக இருப்பதால்        ஆம்பளன்னவாசி

    நானாக இருப்பதால்                              நான்னாவாசி

    நீயாக இருப்பதால்                                நீன்ன வாசிதான்

‘கொண்டது’ என்பதற்குப் பதிலாக ‘கிச்சி’ என்று அமைதல் 

‘கொண்டது’ என்பதற்குப் பதிலாக ‘கிச்சி’ என்று மாறி அமைந்துள்ளது. அத்துடன், ‘பி’ என்ற ஒலி ‘பு’ என்பதாகவும், ‘த்த்’ என்ற இரட்டை மெய் ‘ச்ச்’ என்ற மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. அது வருமாறு.

    மூலம் வடிவம்              மாற்றம்

    எடுத்துக்கொண்டது                 எடுத்துக்கிச்சி

    பிடித்துக்கொண்டது                 புடிச்சுக்கிச்சி

அருகில் என்பதற்குப் பதிலாக ஆண்ட என்று அமைதல்

‘அருகில்’ என்பதற்குப் பதிலாக ‘ஆண்ட’ என்று விகுதி இரு இடங்களில் கதைகளில் காணமுடிகின்றன. அவை வருமாறு.

    மூலம் வடிவம்          மாற்றம்

    கதவின் அருகில்                 கதவாண்ட

    வீட்டின் அருகில்                  வூட்டாண்ட

‘இருக்கிறது’ என்பது ‘கீது’, ‘கிது’ மற்றும் ‘குது’ என்பனவாகச் சுருங்குவது 

‘இருக்கிறது’ என்பது ‘கீது’, கிது, மற்றும் ‘குது’ என்பனவாகச் சுருங்குவதைச் சில இடங்களில் கதைகளில் காணமுடிகின்றன. அவை வருமாறு.

    மூலம் வடிவம்        மாற்றம்

    நன்றாக இருக்கிறது      நல்லாகீதே

    வந்து இருக்கிறது           வந்துகிது

    போல் இருக்கிறது        போலக்குது

‘வேண்டும்’ என்பது ‘ணம்’ என்று சுருங்கி அமைதல்

‘வேண்டும்’ என்பது ‘ணம்’ என்று சுருங்கி அமைவதுடன் இன்னும் சில மாற்றங்கள் நிகழந்துள்ளதைக் காணமுடிகின்றத்து. அது வருமாறு.

    மூலம் வடிவம்          மாற்றம்

    இருக்க வேண்டும்              இருக்கணம்

    காதில் விழ வேண்டும்    காதுலவுழணம்

    பார்க்க வேண்டும்             பாக்கணம்

நிகழ்கால இடைநிலை ‘கிறு’ மறைவு

நிகழ்கால இடைநிலையான ‘கிறு’ என்பது மறைவதை அல்லது சிதைவதை கதைகளில் உள்ள சொற்களின் மூலம் அறியலாம்.

    மூலம் வடிவம்         மாற்றம்

    ஆடுகின்ற                         ஆடற

    ஆடுகின்றேனா              ஆடறனா

    ஆடுகிறேன்                   ஆடறேன்

    பேசுகிறாயா                  பேசறியா

    வாங்குகின்ற                 வாங்குற

மேலும் இச்சொ    ற்கள் சிலவற்றில் உகரம் இகரமாகவும் மாறுகின்றது கவனிக்கதக்கது.

இரட்டைச் சொற்கள் பயன்பாடு

இரண்டு சொற்கள் அடுத்தடுத்து அடுக்குத் தொடர்போல் அமைந்துள்ளன. அவை வருமாறு.

மூஞ்சை கீஞ்சை

திதியோ கிதியொ

பைத்தியம் கியித்தியம்

திருப்பி திருப்பிக்னு

கேப்பார் மேப்பார்

திணை மயக்கம்

திணை, பால் வேறுபாடற்ற பேச்சு மொழி சொற்கள் கதைகளில் இடம்பெற்றுள்ளன. அவை இருவர் உரையாடும் சூழல் பின்புலங்களில் அமைந்துள்ளன. அவை,

எது (யார் என்று கேட்க)

பயப்படுது (பயப்படுகிறார் என்று சொல்ல)

அது (அவன் என்பதைக் குறிக்க)

போவுது (போகிறான் என்பதைக் குறிக்க)

இது (இவள் என்பதைக் குறிக்க)

கெடக்குது (அவள் கிடக்கிறாள் என்பதைக் குறிக்க) என்றவாறு அமைந்துள்ளன.

வட்டார வழக்குச் சொற்கள்

வட்டார சொற்கள் அல்லது திரிந்த வடிவங்கள் பல கதைகளில் இடம்பெற்றுள்ளன. அவற்றினை அவற்றிற்கான பொது வடிவங்களுடன் கீழே காணலாம். அவை வருமாறு.

அதுந் (அதன்)

இம்மா – இவ்வளவு

இமுஷை – துன்பம்

எம்மா (எவ்வளவு)

எம்மாத்தரம் (எவ்வளவு பெரிய)

எங்கனா (எங்காவது)

ஒரே இதுவாயிடுச்சி (வருத்தம் கலந்த துன்பம்)

கொஞ்சோன்டு, செத்த, ரவ (சிறிது)

பூடேன் (போய்த் தொலை என்ற ஆதங்கத்துடன் வெளிப்படுவது)

பூட்டேனடா (போய் விட்டேனா என்ற ஆதங்கத்துடன் வெளிப்படுவது)

வாங்கியாந்து (வாங்கி வந்து)

வவுத்தெரிச்சல் (வயிற்றெறிச்சல் -பொறாமை)

மூஞ்சியிலடித்த (முகத்தில் அடித்த என மனம் வருந்த பேசுதல்)

வர்ரதெல்லாம் (வருவதெல்லாம்)

வர்றாலாம் (வருகிறேன் என்று சொன்னாள்)

கொறச்சலு (குறை ஏதும் இல்லை)

வந்தே தீரணம் (வந்தே அகவேண்டும்)

தலமூச்சனை (தலையெழுத்து - தொந்தரவு)

நெனப்பு எடுத்துக்கிச்சாங்காட்டியும் (நினைப்பு வந்துவிட்டது போல காதல் பின்புல உரையாடல்)

குதுர்படாம (புரியும்படியாக)

கட்டுமானம் (தடை)

பகுடாலு (அடம் பிடித்தல்)

பத்தரமா (எச்சரிக்கையாக)

தெனம் (நாள்தோறும்)

ராவுல, ராவிக்கு (இரவில், இரவுக்கு)

ஏனத்தை (பாத்திரத்தை)

கம்முன்னு இரு (அமைதியாக இரு)

காத்தால (காலை)

நம்பகிட்டியா (என்னிடம் வேண்டாம் என்று )

எப்பனா (எப்போதாவது)

கட்னவன் (கணவன்)

வோணும் (வேண்டும் – தண்டிக்கப்படவேண்டும், துன்பத்தை அனுபவிக்க வேண்டும்)

கூசுது (அருவருக்கதக்க உடல் சார்ந்த உணர்வின் வெளிப்பாடு)

அரிவிகால் (வாயிற்படி)

நவுரு (நகர்ந்து நில்)

பூட்டாதான் தெரியும் (இறந்துவிட்டால் – என்ற சூழல் பின்புல புலம்பல் பின்னணி )

பாட்டுக்னு (விருப்பத்திற்கு ஏற்ப)

ஓடியாந்து (ஓடிவந்து)

கொண்டாந்து (கொண்டுவந்து)

என்ற பல சொற்கள் கதைகளில் இடம்பெற்றுள்ளன.

இவற்றுடன், ‘இட்டாமே, இட்டுக்னுவா, இட்டாரியோ, இட்டாரானா, இட்டாந்து, இட்டாராப்பம்’ என்று ‘அழைத்துவா’ என்பதன் பல்வேறு சூழல் பின்புல வட்டார வழக்குச் சொல் வடிவங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேச்சு வழக்கிலான விளிச் சொற்கள்

பேச்சு வழக்கிலான ஆண், பெண் விளிச்சொற்கள் சில கதைகளில் இடம்பெற்றுள்ளன. பெண் விளி சொற்களாக

ஏமே

த...

தா...

ஏமா

என்பனவும், ஆண் விளிச் சொற்களாக

என்னாதே

ஏந்தே

ஏன்யா

ஏம்பா

பாருதே

ஏன்னா

என்பனவும்,

இருபால் விளிச்சொல்லாக ‘ஏய்’ என்பதும் அவ்வாறாக அமைந்துள்ளவை ஆகும்.

முடிவுரை

கதைகளை மொழி அடிப்படையில் அணுக, பேச்சு மொழி மற்றும் வட்டார வழக்கு சொற்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதை மேற்கண்ட தரவுகள் உறுதி செய்கின்றன. அக்கால (1970 - கள்) மக்களின் வழக்குச் சொற்களின் ஆவணமாக அப்படைப்புகள் திகழ்கின்றன. அவை வடதமிழகத்தின் வட்டாச் சொற்களாக (வடக்குக் கிளை மொழியில்) கதைகளின் பின்னணி மற்றும் சொற்களின் பயன்பாடு ஆகியவற்றின் மூலம் உறுதியாகக் கூறமுடிகின்றன.

என்றாலும், அவற்றில் பல சொற்கள் வட்டாரம் என்ற எல்லையைக் கடந்தும் மக்களின் பேச்சு வழக்கில் இடம்பெறுவதை இன்று காணமுடிகின்றது. அதாவது, வட்டா வழக்கு என்பது இன்று நிலவியல் என்ற எல்லையைக் கடந்து மக்களால் பயன்படுத்தப்படுகின்றது.

உதாரணத்திற்கு, … ”என்னடா சொல்லு கடத்தெரு போறதுக்காவ கௌம்பிக்கிட்டு இருந்தேன் நீயே வந்துட்ட ஒனக்குக் கடத்தெருவுக்குப் போற வேல இருந்தா அப்டியே ஒரு எட்டு என்னயும் கொண்டாந்து வுடுறியான்னு கேப்போமுன்னு நெனச்சேன். ஒனக்கு ஏதாவது வேல இருக்காடா"ன்னு கேட்டான் வேலு…” என்ற (கனிமொழி செல்லத்துரை 2025, ப.103) நாகப்பட்டினம் மாவட்ட வேதாரண்ய பகுதியை மையமாகக் கொண்ட நாவலில் இடம்பெற்றுள்ள அடையாளப்படுத்தப்பட்ட சொற்களைக் கூறலாம்.

அறிவியல் வளர்ச்சி போக்குவரத்து வசதி உள்ளிட்ட காரணங்களால் மக்களின் பயணங்கள், இடப்பெயர்வுகள் முதலானவை மிக எளிதான ஒன்றாக மாறியுள்ள இன்றைய நவீன உலகில் இந்த நிலைமை தவிர்க்க இயலாத ஒன்றாகிறது. என்றாலும், அவ்வழக்குச் சொற்களின் உருவாக்கம் எந்த வட்டாரத்தில் உருவானது என்பதை அறிவதும் ஆவணப்படுத்துவதும் அவசியமான ஒன்றாகிறது. அப்படியான நோக்கில் ஆய்வுகள் தொடரவேண்டி உள்ளது என்பதை மேற்கண்ட தரவுகள் உணர்த்துகின்றன.

பயன்பட்ட நூல்கள்

    இராஜேந்திர சோழன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், பா. இரவிக்குமார், புதுவை சீனு. தமிழ்மணி (தொகுப்பாசிரியர்கள்), 2021 (முதல் பதிப்பு), டிஸ்கவரிபுக் பேலஸ், சென்னை -600 078.

    தமிழ் மொழி வரலாறு, டாக்டர் சு. சக்திவேல், 2014 (முதல் பதிப்பு), மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 600 008.

    உயிர்சுருட்டி, கனிமொழி செல்லத்துரை, 2025 (முதல் பதிப்பு), ஆம்பல் பதிப்பகம், சென்னை – 600 008.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.