* 'டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி - VNG -
முன்னுரைதாரை என்ற சொல்லுக்குக் ’கண்ணின் மணி’ என்று பொருள் தருகிறது திவாகரம்.தாரை, கிட்கிந்தை நாட்டின் வானரகுல அரசன் வாலியின் மனைவி.சுக்ரீவனுக்குத் துணையாக இராமன் வந்துள்ளதையும், உன் உயிரை எடுப்பதற்காகவே அவன் வந்துள்ளான் என்று நம்மீது அன்புடையவர்கள் கூறினர் என்று சொன்னாள். இளையபெருமாள் கோபத்துடன் வருவதைக்கண்டு, தவறு செய்த வானரர்களைக் கடிந்து பேசிவிட்டு, தானே நேராக இலட்சுமணனிடன் சென்று இதமாகப்பேசி, அவன் கோபத்தைத் தணித்து, சுக்ரீவன் மீது பிழை இல்லை என்று புரியவைத்து, ஒரு ராசமாதாவாக நடந்துகொண்டாள். தாரையின் அழகு, புத்திசாலித்தனம்,அமைதி,தவறு செய்தவரிடத்து கண்டிக்கும் மனநிலை, வானர குலத்தைக்காக்க அவள் செய்யும் முயற்சி, வாலி இறந்ததால் கைம்மைத் தோற்றம் என்று பன்முகத்தன்மை கொண்ட தாரை குறித்துக் கம்பராமாயணம் கூறியுள்ள கருத்துக்களை இக்கட்டுரையில் ஆராய்வோம்.
தாரை
அமிழ்தம் போன்ற மூங்கிலின் இயல்பை தன்னிடத்தில் கொண்டவள். சுக்ரீவன் போருக்கு வா என்று அழைத்ததனால் வாலியின் வாயினின்றும் புகை உண்டாகக், கண்ணினின்றும் தோன்றுகின்ற தீயில் தன் கூந்தல் தீயப் பெற்றவளாய் போர் செய்வதற்குச் செல்லும் வாலியை இடையில் தடுத்து விளக்கினாள்.
வேறு பெருந்துணையைப் பெற்றமையைக் கூறல்
சுக்ரீவன் முன்னாளில் நின் தோள் வலிக்குத் தோற்று வருத்தமடைந்து ஓடினான். அத்தகையவன் இப்பொழுது பெரிய உடல் வன்மையைப் பெற்றானில்லை, அப்படி இருக்க, அவன் திரும்ப உன்னுடன் போர் செய்வதற்கு வந்த இச்செயலானது, வேறு பெருந்துணையைப் பெற்றமையாலாகும் என்று கூறினாள்.
துணையாக வந்தவன் இராமனே
வாலி தன்னுடன் யாரும் போரிட்டு வெல்ல முடியாது என்று பல காரணங்களைக் கூறிய போது தாரை, வாலியை நோக்கி அரசே, இராமன் என்பவன் அந்தச் சுக்ரீவனுக்கு இனிய உயிர்த் துணையாகப் பொருந்தி, உன் உயிரைப் பறிப்பதற்காக வந்துள்ளான் என்று நம்மிடம் அன்புடையவர்கள் கூறினார்கள் என்று சொன்னாள்.
பின்னும் உரை செய்ய அஞ்சினாள்
இராமன் தன் தம்பிக்கு நாட்டையே அளித்தவன். எங்கள் இடையில் வரமாட்டான் என்று பலவாறாக வாலி கூறிவிட்டு, நீ சிறுபொழுது இங்கேயே இருப்பாயாக, ஒரு மாத்திரைப் பொழுதிலே சினந்து வந்த சுக்ரீவனின் உயிரைக் குடித்து, அவனுடன் வந்தவரையும் மனம் குலையச் செய்து விட்டுத் திரும்பி வருவேன். நீ கலங்க வேண்டாம் என்று தாரையை நோக்கிக் கூறினான். அதன் பின்பு தாரை தன் கணவனின் கருத்துக்கு மாறான சொல்லைச் சொல்வதற்கும் அஞ்சினாள். (வாலி வதைப் படலம் 262)
வாலி இறந்ததை செவியேற்ற தாரை அங்கு வந்து வாலியின் உடல் மீது விழுந்தாள். வாலியின் இரத்தம் மார்பில் படும்படியாகவும், கூந்தலின் இரத்தம் படிந்து சிவக்கும் படியாகவும், செவ்வானத்தில் காணப்படும் மின்னல் கொடி போல விழுந்து புரண்டாள். (வாலி வதைப் படலம் 388)
தாரையின் துயரம்
புகழ்பெற்ற என் உயிர்ப் போன்றவனே, என் உள்ளம் போன்றவனே என் தலைவனே, மலைகள் போன்ற உன் தோள்களில் நாள்தோறும் தங்கி எல்லையில்லாத துன்பக் கடலை, இதுவரை ஒருநாளும் காணாமல் இருந்த நான், உனது இந்நிலையைக் காண அஞ்சுகிறேன் என்றும், என்னுடன் இதுவரை மாறுபடாத குணத்தை உடையவனே, உனக்கு நேர்ந்த துயரத்தைக் கண்டு உயிரும் நீங்காதிருக்கும் என்னையும் கூப்பிட்டு அழைக்க மாட்டாயா? என்னிடம் கோபம் நீங்காத என் விதி வடிவமான கடவுளை உயிர் நீங்கி விட்டதால் உடல் மட்டும் பிழைத்திருக்குமா? நின் உயிரை வாங்கிய எமன் சிறந்த அமிழ்தத்தைத் தாம் உண்ணும்படி, நீ கொடுத்ததால் தம், இனிய உயிர் உடலை விட்டு நீங்காதிருத்தலை அறிய மாட்டாரோ என்றாள்.
சிவனை வணங்க எழுந்து வா
நீ அமிழ்தம் அளித்த அந்தப் பேருதவியை எண்ணிப் பாராத சிறியவரோ? எல்லாத் திக்குகளிலும் சென்று உள்ளத்தில் கொண்ட பக்தியோடும் கூடி, வாடாத புதிய மலரைக் கொண்டு தூவி காலை, மாலை, நண்பகல் ஆகிய மூன்று வேளைகளிலும் உமையம்மையை ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமானை வணங்குவாயே, வழக்கப்படி வணங்காமல் இவ்வளவு நேரம் செயலற்று இருப்பாயோ?
பொய் பேசாத புண்ணியனே,
பூக்களாகிய படுக்கையின் மீது விரிக்கப்பட்ட மென்மையான ஆடை மீது படுத்து இருப்பவன் நீ. இப்போது அதற்கு மாறாக வெற்றுத் தரையில் பொருந்தி இருக்கும் தன்மை இது என்பதால், நான் மனம் உருகி உன் எதிரே இருந்து அழும் அழுகையைப் பார்த்து, ஒன்றும் பேசாமல் இருக்கின்றாய். அங்ஙனம் என்னை நீ வெறுக்குமாறு நான் செய்த குற்றம் யாது? பொய் பேசாத புண்ணியனே, இங்கு நான் இருந்து வருந்துகிறேன். அங்ஙனம் வருந்தவும், நீ தேவர் உலகை அடைந்து இன்பம் அடைகின்றாய்.
உயிரில் கலந்த உறவு ,
இதுநாள் வரையிலும் எப்போதும் என்னோடு மாறுபடாத குணத்தை உடையவனே, உனக்கு நேர்ந்த துன்பத்தைக் கண்டதும் இந்நேரம் என் உயிர்ப் பிரிந்திருக்க வேண்டும். அவ்வாறு பிரியாது உன் முன் நின்று கொண்டிருக்கிறேனே, உயிர்த் துறக்கையில் உடல் இன்பம் அடைவது என்பது உலகத்தில் இல்லை. ஆனால் உலகத்தில் நடக்காத செயலை நீ செய்து கொண்டிருக்கிறாய் என்று வருந்தி பேசுகிறாள். என்னை நோக்கி மிக்க அன்புடன் நீயே என் உயிர் என்றாயே, உன் உயிரான நான், இங்கு துன்பமடைய, உன் உடல் மட்டும் எப்படி இன்பமடைய முடியும்? அப்படியானால் நீ கூறியது பொய்யோ?
"செரு வார் தோள நின் சிந்தை உளேன்எனின்
மருவார் வெஞ்சரம் எனையும் வவ்வுமால்
ஒருவேனுள் உளை ஆகின் உய்தியால்
இருவேமுள் இருவேம் இருத்திலேம்"
(வாலிவதைப்படலம்396)
இறந்து கிடக்கும் வாலியை நோக்கி பேசுகிறாள், நாம் இல்லறத்தை இனிதே நடத்திய போது, என்னை நோக்கி உன் இதயம் என்னிடத்தில் உள்ளது என்றாய். நானும் உன்னை நோக்கி உன் இதயம் என்னிடத்தில் உள்ளது என்று மாறி மாறி கூறினோம். நாம் பேசியது உண்மையென்றால், உன் உடலில் பாய்ந்த இராமனின் அம்பானது என் இதயத்தைத் தொலைத்து, என் உயிரைப் போக்கியிருக்க வேண்டும். ஆனால் இறந்திருப்பது நீ தானே. அப்படி என்றால் பொய் பேசினோமோ என்று வருந்தி, அழுது, புலம்புகிறாள்.
இராமன் சொன்னால் கேட்டிருப்பாயே?
பலவாறாகப் புலம்பி, சாவாமைக்குக் காரணமான அமுதம் வேண்டும் என்றாலும் அதைத் தருபவனே, தனக்கு இலக்கானவரின் உயிரைக் கவர்வதன்றி ஒழியாத அம்பை மறைந்து நின்று உன் மேல் செலுத்துவதற்கு உடன்பட்டு வந்த இராமன், தன் வாயால் இன்னது தருக என்று நின்னைக் கேட்பானாயின், உன் செல்வ வாழ்க்கையை எல்லாம் உன் தம்பி சுக்ரீவனுக்கு நீ அளிக்க மாட்டாயோ?
நான் சொன்னதை நம்பவில்லையே ஐயா
நீ போருக்குச் செல்ல புறப்பட்ட போதே இராமன், சுக்ரீவனுக்கு துணையாய் வந்துள்ளான் என்று சொன்னேன். அதை நீ ஏற்றுக்கொள்ளாமல் இராமன் அத்தகைய செயலைச் செய்ய மாட்டான் என்று கூறி, உன் தம்பியுடன் போர் செய்யச் சென்றாய். நெடுங்காலம் வாழ வேண்டிய நீ, இப்போது இறந்து விட்டாய். உன்னை நான் எப்போது காண்பேன். தேவர்கள் செய்த மாயமோ, நான் இதைத் தெரியாதவளாய் உள்ளேன் அல்லது இங்கே இறந்து கிடப்பவன் நீயின்றி வேறு ஒரு வாலியோ என்று பலவாறாக தாரை பு லம்பினாள்.
பொன்னின் மாற்றை அறியும் கல்
தன் மகனை நோக்கி மகனே அங்கதா உன் தந்தைக்குத் தம்பியான சுக்ரீவன் பெருமை பொருந்திய வாலியின் தம்பியாய் இருத்தல் எனும் புகழிலே நிலைத்திருந்து, பின்னர் அவருடன் பகை கொண்டதால் உன் தந்தை இறக்க, நம் செல்வ வாழ்வு எல்லாம் தகுதி கெட்டு அழிந்து விட்டன. அதை நீ கண்டாய் அல்லவோ என்று வருந்திப் புலம்பினாள். அரிய மருந்தைப் போன்று மற்றவரின் ஆபத்தை நீக்கும் வில் ஆற்றலில் வல்ல இராமன் எந்த வீரனுக்கும் தகாத செயலைச் செய்து விட்டார். அறவழி பொருந்திய பெரியோருக்கெல்லாம் அவரவர் செய்யும் செயலே, அவரவரின் பெருமையான பொன்னின் மாற்று அறிவதற்கு ஏற்ற உரைகல்லாகும் என்பதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துப் போகாத வெறும் கட்டுப்பாட்டுச் சொல்தானோ என்றெல்லாம் புலம்பினாள்.
“அருமைந்து அற்றம் அகற்றும் வில்லியார்
ஒருமைந்தற்கும் அடாத துன்னினார்
தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம்
கருமம் கட்டளை என்றால் கட்டதோ”
(வாலி வதைப்படலம் 402)
இவ்வாறு பலவாறாகப் புலம்பிய புலம்பலில் (வாலி, ருமையை வௌவினான் என்று இராமனை நம்ப வைத்த அனுமன் கூறினானே)அது குறித்து ஒரு வார்த்தைக்கூட கூறவில்லை.இராவணன் இறந்தவுடன் மண்டோதரி புலம்பலில் அவன் சீதை மீது வைத்த காமமே அவன் உயிரை இன்று குடித்தது என்று புலம்பினாள். அதுபோல் உன் உயிர்ப்பிரிய நீ ருமையை வௌவியதே என்று புலம்பவில்லை. உயிரில் கலந்த உறவாக நாம் இருந்தோமே என்றே புலம்புகிறாள்.
இலட்சுமணன் கிட்கிந்தை அரண்மணை வருகை
கார்காலம் முடிந்ததும் சுக்ரீவன், இராமனைக் காண வராததால், இராமன் கோபமடைந்து அவனைக் கண்டு வர இலட்சுமணனை அனுப்பினார். மிகுந்த கோபத்துடன் வரும் இலட்சுமணனைக் கண்ட வானரர்கள், அங்கதனிடம் சொல்ல, சுக்ரீவன் எழுந்து வரும் நிலையில் இல்லாததால் அனுமனிடம், அங்கதன் ஆலோசனை கேட்டான். அதன்படி தாரையிடம் சென்று பேசினான்.
தாரை கண்டித்துப் பேசுதல்
அங்கதன், தரையிடம் சென்று நடந்தவற்றையெல்லாம் அவளுக்குச் சொல்லி, இனிமேல் நாம் செய்யத்தக்கது யாது என்று வினவினான். அவ்வளவில் அவள் அந்த வானர வீரர்களை நோக்கி, ’செய்யத் தகாத பெருந்தீய செயல்களைச் செய்வீர். அவற்றால் உண்டாகும் தீமைகளை எளிதில் நீக்கி கொள்ளவும் வழி பார்ப்பீர். செய்நன்றி மறந்தவர்களான நீங்கள் தப்பி வாழ்வீர் போலும்’ என்று சொன்னாள். (கிட்கிந்தைப் படலம் 588)
படைகளைத் திரட்டி கொண்டு வாருங்கள் என்று உங்களை நோக்கி இராமன் சொல்லி, குறிப்பிட்ட தவணை நாள் தவறினால் உங்கள் வாழ்நாளும் தவறிவிடும் என்று அடிக்கடி நான் கூறி வரவும், அதனை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப நடவாமல் போய்விட்டீர்கள். இனி அதன் பயனை அனுபவத்தில் காண்பீர்கள். குற்றத்தில் சிக்கிக்கொண்டீர்கள் என்று மேலும் ஒரு சொல்லைச் சொன்னாள்.
“மீட்டு மொன்று விளம்புகின்றாள் படை
கூட்டும் என்று உமைக் கொற்றவன் கூறிய
நாள் திறம்பின் உந் நாள் திறம்பும் என
கேட்டிலீர் இனிக் காண்டிர் கிடைத்திரால்”
(கிட்கிந்தைப் படலம் 589)
வாலியின் அரிய உயிரை எமன் கவரும்படி வில்லை வளைத்து அம்பைப் பூட்டி ஒளியுள்ள அரசாட்சி செல்வத்தை உங்களுக்குக் கொடுத்தவரான இராமனா உங்களால் அலட்சியப்படுத்தப்படுபவர். பேருதவி செய்தவரை நீங்களும் அலட்சியப்படுத்துவது உங்களைப் போன்ற செய்நன்றி மறந்தவர்களுக்குத்தான் பொருந்தும். (கிட்கிந்தைப் படலம் 590)
தன் மனைவியான சீதை பிரிந்து இருக்க, அத் துன்பத்தால் தேவர்களைக் காட்டிலும் சிறந்த அந்த இராமன் உயிர் நீங்கப் பெற்றவன் போலத் தளர்வார். அதை நீங்கள் மனத்தில் கொள்ளாமல், உங்கள் மனைவியரான, காதலாகிய இன்ப நீரைக் குடித்து மகிழ்வீர் போலும். நீங்கள் மெய்ம்மையினின்று தவறினீர்கள். செய்த நன்றியை மறந்து நீங்கள் செய்த பாவம் தன் பயனைத் தர வந்ததால், இங்ஙனம் குணம் கெட்டவர் ஆனீர்கள். அந்தப் பெருவீரரை எதிர்த்துப் போர் செய்யத் தொடங்கினால், அவரால் நீங்கள் இறப்பீர்கள். இனி செய்யத்தக்கது யாதுள்ளது என்று அங்கதன் முதலியவரைத் தாரை கண்டித்துப் பேசினாள்.
மதில் கதவைக் கற்களால் அடைத்து வைத்த குரங்குகள்
கோபத்துடன் இலட்சுமணன் வருவதைக் கண்ட குரங்குகள் மதில் கதவைச் சாற்றி கதவைக் கற்களால் அடைத்தும் வைத்தன.
இலட்சுமணன் அவற்றை தன் கால்களால் எற்றித் தள்ளி வந்தார். சுற்றி இருந்த அங்கதன் முதலியோர் மிகவும் அஞ்சி, அத்தாரையை நோக்கி இலட்சுமணன் வந்துவிட்டானே நாம் என்ன செய்வது என்று வினவினர். அப்போது அனுமன் பெண்ணாகிய நீ சென்று சுக்ரீவனின் அரண்மனை வாசலின் வழியே உள்ளே போக ஒட்டாமல் தடுத்தால், அந்த இலட்சுமணனின் உள்ளத்தையும் ஆராய்ந்து உணரக்கூடும். அறங்களை எண்ணிப் பார்க்கும் இயல்புடையவனான அந்த இலட்சுமணன் அந்த நீண்ட வழியைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டான். தான் வந்தது எதற்காக என்பதை வாய்விட்டுக் கூறுவான். இதுவே இப்போது செய்யத்தக்க செயலாகும் என்று தாரையை நோக்கி அனுமன் கூறினான்.
தாரை, இலட்சுமணன் வழியினைத் தடுத்து நிற்றல்
தாரை, அங்கதன் முதலியவர்களை நோக்கி நீங்கள் எல்லாம் அப்பால் செல்லுங்கள். நான் இந்த இலட்சுமணனின் எதிர் சென்று, வீரரான அவனுடைய மனக்கருத்தை அறிந்து வருவேன் என்றாள். அவ்வளவில் அவ்வானரர்கள் இருவரும் விலகி நின்றனர். உடனே தாரை பின்வாங்காமல் மலர் சூடிய கூந்தலையுடைய தோழியர் பலருடனே புறப்பட்டுச் சென்றாள்.
இலட்சுமணன் , சுக்ரீவனின் அரண்மனைக்குள் போகும்போது, தாரை இலட்சுமணனை வழி மறித்தாள். வெண்மையான பற்களையும், வெண்மையான வளையலையும், மின்னலைப் போல விளங்கும் நுட்பமான இடையினையும், உயர்ந்த விளங்கும் இளைய மெல்லிய கொங்கை யிணையும், மயில் போன்ற சாயலையும் கொண்ட வானரமாதர்களின் குழுவைக் கொண்டு அந்த பெரிய வழியைத் தடுத்தாள்.
அணிந்துள்ள அணிகள் தோறும் வில்லும், வாளும் விளங்கவும் மென்மையான படுக்கை கற்களையுடைய கால் சிலம்புகளின் ஒலியும், மேகலை எனும் இடுப்பு அணியின் ஒலியும் பறை ஒலியாக ஆரவாரித்துத் தோன்றவும் பல்வகையான புருவங்களாகிய கொடிகள் நிறைந்திருக்கவும் மகளிர் கூட்டமாகிய படை, வலிமையுடனே வந்து இலட்சுமணனைச் சூழ்ந்து வளைத்தது. இலட்சுமணன் அம்மாதரைக் கண்ணெடுத்துப் பார்க்கவும் அஞ்சினான்.
தாரை பேசுதல்
இலட்சுமணன் தாமரை மலர் போன்ற தன் முகத்தைச் சாய்த்துக்கொண்டு தலைகுனிந்து கையில் கொண்ட வில்லைத் தரைமீது ஊன்றி மாமியார் கூட்டத்தில் வந்த புது மருமகனைப் போலக் கூச்சம் கொண்டு நின்றான்.(கிட்கிந்தைப் படலம் 608)
இலட்சுமணனிடத்தில், தாரை வீரனே, நீ திருவடிநோக வருவது என்பது, எல்லை இல்லாத காலம் தவம் செய்தாலன்றி, இந்திரன் முதலிய தேவர்களுக்கும் பெறக்கூடிய தன்மையது அன்று. அத்தகைய பெருமையை யுடைய நீ, நின் திருவடிகளால் எங்கள் இல்லத்துக்கு வந்ததால், நாங்கள் நல்வாழ்வு பெற்றோம். வினைகள் அனைத்தும் நீங்கப் பெற்றோம். இதைவிட நாங்கள் மேலாக பெறக்கூடிய நற்பயன் வேறு இருக்கின்றதோ இல்லை. நீ கடுமையாக வருவதைப் பார்த்து, நீ வருவதன் காரணத்தை அறிய மாட்டார்கள். உங்களுக்கு உதவி செய்யக் கடமைப்பட்டுள்ள வானரப்படை அஞ்சுகிறது. அப்படையின் அச்சம் நீங்குமாறு உன் உள்ளக் கருத்தை அறிவித்து அருள்வாயாக என்று சொல்லி, மேலும் ஐயனே அருளுடன் கூடிய மன்னனான இராமனின் திருவடிகளை என்றும் பிரியாது இருப்பவனான நீ, அவனை விட்டு பிரிந்து வந்ததன் காரணம் என்ன என்று வினவினாள்.
“வெய்தின் நீ வருதல் நோக்கி வெறுவுறும் சேனை வீர
செய்திதான் உணர்கிலாது திரிஉளம் தெரித்தி என்றார்
ஐய நீ ஆழி வேந்தன் அடியிணை பிரிகலாதாய்
எய்தியதென்னை என்றாள் இசையினும் இனிய சொல்லாள்”
(கிட்கிந்தைப் படலம் 610)
ஒளி இழந்த முகத்தைக் கொண்ட தாரை
தாரை கூறிய சொற்களைக் கேட்ட இலட்சுமணன் இங்கு பேசியவர் எவராக இருக்கக்கூடும் என்று அறிய எண்ணியவனாய் விளங்கும் வெண்மையான முழுமதி பகட்காலத்திலே பூமியில் வந்த தோற்றத்தைப் போன்ற ஒளி குன்றிய அழகு விளங்கும் முகத்தை உடைய தாரையைத் தன் முகத்தைச் சிறிது நிமிர்ந்து பார்த்து அதனால் தன் தாயாரான சுமித்திரை முதலியாரை நினைத்து வருந்தினான்.
தாரையின் தோற்றம்
திருமாங்கல்யத்தை ஒழித்து மணிகள் பதித்துச் செய்யப் பெற்ற மற்ற அணிகலன்களையும் அணியாமல் நீக்கி, நறுமணம் உள்ளதும் தேன் மிகுந்ததுமான மலர் மாலையையும் அணியாது விலக்கி, குங்குமப்பூவின் குழம்பையும் சந்தனக் குழம்பையும் பூசிக்கொள்ளாத பருத்த கொங்கைகள் பாக்கு மரம் போன்ற கழுத்துடன் மறையும் படி மேலாடையால் நன்கு போர்த்துள்ள மகளிரில் சிறந்தவளான அந்தத் தாரையைப் பார்த்த இலட்சுமணன் இரங்கத்தக்க இத்தோற்றத்தைக் கண்டதாலும், தன் தாயாரை நினைந்ததாலும் தன் கண்கள் நீர் வார வருத்தம் கொண்டான்.
“மங்கல அணியை நீக்கி மணி அணி துறந்து வாசக்
கொங்கலர் கோதை மாற்றிக் குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்கு வெம் முலைகள் பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நைந்தான்”
(கிட்கிந்தைப் படலம் 612)
இலட்சுமணன், தாரையிடம் சூரியன் மகனான சுக்ரீவன், என் படையும் யானுமாகச் சீதையைத் தேடித் தருவேன் என்று இராமனுக்குக் கூறிய சொல்லை மறந்துவிட்டான். அத்தகைய சுக்ரீவனின் எண்ணத்தை விரைவில் சென்று அறிந்துவா என்று என்னை நோக்கி இராமன் கூறினார். அவ்வாறு கூறலால் நான் இங்கு வந்தேன். மேலான அரசாட்சி நிலையைப் பெற்று நின்ற சுக்ரீவனின் செய்கை யாது? சொல்வாயாக என்றான்.
தாரை அளித்த புத்திசாலித்தனமான பதில்
அதற்குத் தாரை ஐயனே நீ சினம் கொள்ள வேண்டாம். அறிவு முதலியவற்றில் சிறியவர் தீமை செய்தால், அவற்றில் பெரியவரான நீ பொறுத்துக் கொண்டு சினம் தணிய வேண்டும். அங்ஙனம் பொறுத்துக் கொள்ள உன்னை அல்லாமல் வேறு யார் இருக்கின்றார். இது நிற்க. சுக்ரீவன் தான் கூறியவற்றை மறக்கவில்லை. வானரப் படைகளை ஒருங்கு திரட்டுவதற்காக உலகின் எல்லா இடங்களுக்கும் தூதரை அனுப்பியுள்ளான். அவ்விடங்களில் இருந்து அந்தப் படைகள் வந்து சேர்வதை எதிர்பார்த்துக் கொண்டு காலம் தாழ்த்திருக்கின்றான். நீங்கள் அவனுக்கு செய்த உதவிக்குத் தக்கவாறு அவன் உங்களுக்கு செய்யும் உதவி ஒன்று உண்டோ? இல்லை.
ஆயிரம் கோடித் தூதர்கள்
குரங்குகளின் கூட்டத்தை அழைத்துக் கொண்டு வருவதற்காக தூதர்கள், சுக்ரீவனின் கட்டளைப்படி உலகமெங்கும் சென்றுள்ளார்கள். அவ்வானரக் கூட்டங்கள் இங்கு வந்து சேரக்கூடிய காலமும் நெருங்கிவிட்டது. அடைக்கலம் அடைந்தவர்களிடம் தாயை விட மிக்க அன்புடைய நீங்கள் சினமாறக் கடவீர். அவ்வாறு பொறுத்துக்கொள்வது அறமாகும். தீய செயல்களைச் செய்யாது இருப்பாரானால் தண்டிப்பதற்கு உரியவர் ஆவர் யார்?.
உங்களை அடைக்கலம் அடைந்தவருக்கு அபயம் அளித்துத் தந்த அளவில்லாத செல்வம் கூடியதால், அடைக்கலம் அடைந்தவர் மகிழ்ந்து உங்கள் கட்டளையினின்று தவறினால் அதுவும் உங்கள் செயலாகவே கொள்ளத்தக்கது அன்றோ. சீதையாம் பெண் காரணமாக உண்டாகின்ற கொடிய போர்க்களத்தில் நண்பர்களுக்காகச் சென்று போரிட்டு இறந்து கிடவாராயின் அதன் பின்பும் நட்பு நிலை பெறுமோ?
செம்மைப் பொருந்திய மனத்தை உடையவர்களான நீங்கள் சுக்ரீவனுக்குப் புரிந்துள்ள பெரிய உதவி என்றென்றைக்கும் அழியாமல் இருக்குமாறு, கொடிய பகைவரை அழித்து அரசாட்சி பெற்று, மிகுந்த சிறப்புடன் இருக்குமாறு செய்தீர்கள். எங்களுக்கு உதவிய உங்களையேப் புறக்கணித்தால் அவர்கள் இழிகுணத்தவரின் பாற்பட்டுப் பெருமை அழிவது ஒன்று மட்டுமா? அந்தச் செயலின் பயனாக இப்பிறவியிலேயே வறுமையை அடைந்து இம்மை, மறுமை எனும் இரண்டையும் இழந்து விடுவர் அல்லரோ? அப்போது போரில் வல்ல வாலியைக் கொன்றது உங்கள் அம்பு ஒன்றே என்றால், உங்களுக்குத் துணையாய் ஒருவர் தேவையோ? உங்களிடம் இருக்கும் வில்லை விட சிறந்ததொரு உதவி உள்ளதா? மேலும் நீங்கள் சீதை இருக்கும் இடத்தைத் தேடிக் காண்பவரை விரும்பி நிற்கின்றீர்கள். உங்கள் திருவடியில் அடைக்கலமான சுக்ரீவன் முதலியோரும் அச்செயலைச் செவ்வையாய் ஏற்றுக்கொண்டு செய்து ஈடேறக் கடமைப்பட்டவராவர் என்று தாரை கூறிய சொற்கள் எல்லாவற்றையும் இனிதாக நன்கு கேட்டுணர்ந்து, இலட்சுமணன் அருள்மிகு மனதில் வெட்கம் கொண்டு நின்றான். அங்ஙனம் அவன் நின்ற அளவில் அவன் சினம் தணியப் பெற்றான் என்று நினைத்து அனுமன், இலட்சுமணன் அருகில் வந்தான்.
சுக்ரீவன் மற்றும் வானரர்கள் செய்த தவறை அவர்களுக்கும் எடுத்துச் சொல்லி, இராமன், சீதையைத் தேட நீங்கள் அனைவரும் செல்ல வேண்டும் என்பதையும் அவ்வப்போது எடுத்துச் சொல்லி, தவறு செய்தபோது கண்டித்தும், இலட்சுமணனின் கோபம் கண்டு அதைக் குறைக்கும் முகமாக இனிய சொற்களால் தகுந்த காரணங்களைப் பொருத்தமாக எடுத்துச் சொல்லி இலட்சுமணனின் சீற்றத்தைக் குறைத்தாள் தாரை.
முடிவுரை
கிட்கிந்தை அரசன் பராக்கிரமசாலியான வானர குல வாலியின் மனைவி. அனுமனுக்கு நிகரான போர்ஆற்றல் வாய்ந்தவனான அங்தனை மகனாகப்பெற்றவள். சிறந்த அரசியாகவும், சிறந்த புத்திசாலி மனைவியாகவும், தாய் அன்பில் சிறந்தவளாகவும் இருக்கிறாள்.வாலி சுக்ரீவனுடன் போரிடப் புறப்பட்ட போது, அவனைத் தடுத்து அவனுக்காக போர் செய்ய இராமன் வந்துள்ளதையும், அவன் உன் உயிரை எடுப்பதற்காகவே வந்துள்ளான் என்பதை நம்மீது அன்புகொண்டவர்கள் கூறினர் என்றாள்.வாலி பலவாறாக இராமனின் பெருமைகளையும், தன் வரத்தையும் ஆற்றலையும் கூறியபின் மறுத்து ஒன்றும் பேசாத பெண்மையாய் இருக்கிறாள். வாலி இறந்த பின் உயிரில் கலந்த உறவு குறித்து வருந்திப் புலம்பினாள். கைம்மைநிலை வாழ்வு என்பது மனிதகுலத்திற்கு மட்டுமல்ல வானரகுலத்திற்கும் பொருந்தும் என்று எண்ணும்படி வாலியை நினைத்தே வாழ்ந்திருக்கிறாள்.இலட்சுமணன் கோபத்துடன் வருவதைப் பார்த்து முதலில் வானர குலத்தினரிடம் செய்நன்றியை நீங்கள் மறந்தது தவறு, நான் சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை என்று கடிந்துகொண்டும், வானர குலத்தைக் காக்க வேண்டியும், கோபாவேசத்துடன் வரும் இலட்சுமணனிடம் சென்று, சொற்களைத் தேர்ந்தெடுத்து கருத்துக்களை அழகாக தெரிவுசெய்து, அவனுக்குக் கோபம் தணியும் விதமாகப் பக்குவமாக எடுத்துக் கூறும் புத்திசாலியான ராசமாதாவாகவும் விளங்கியிருக்கிறாள் என்பதையும் நாம் கம்பராமாயணத்தின் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது.
துணைநூற்பட்டியல்
1.சுப்பிரமணியம்.வ.த.இராம.தண்டியலங்காரம்,முல்லைநிலையம்,சென்னை, 2019.
2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம், சென்னை,2016.
4.நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம்,சாரதா பதிப்பகம், சென்னை,2012. 5.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.