* டிஜிட்டல் ஓவியத்தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG
முன்னுரைமனிதனின் மெய்யில் தோன்றும் சில உணர்வுகளை அவரவர்களின் செயல்பாடுகள் மூலமாகவும் குறிப்புகள் மூலம் அறியலாம்.பேச்சுமொழித் தோற்றத்திற்கு முன்பே மனிதன் தன் உள்ளத்து உணர்ச்சிகளை உடலைசைவுகளால் வெளிப்படுத்தினான். உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடாக உடலின் மேல் தோன்றும் புறக்குறிகள் மெய்ப்பாடுகள் என அழைக்கப்பெறுகின்றன. மெய்யின் படுதல் மெய்ப்பாடு, அதாவது, உணர்ச்சி மெய்யில்(புற உடலில்) வெளிப்படுதல் மெய்ப்பாடு எனப்படும். உண்மைத் தோற்றம் உண்மை நிகழ்ச்சி, உண்மை நிலை என்றெல்லாம் பொருள் விளக்கம் பெறுகிறது. மெய்ப்பாடுகள் என்பவை மிகவும் நுண்மையானவை.அத்தகைய மெய்பப்பாடுகளை குறுந்தொகையில் மூலம் காணலாம்.
நகை
உள்ளத்தோடு தொடர்பு கொண்டு தோன்றும் சிரிப்பின் வெளிப்பாட்டை நகை என்பர். மெய்ப்பாடுகளில் இன்றை இளைஞர்கள் பெரிதும் ஏற்பது நகைச்சுவையே ஆகும். இத்தகைய சுவைமிகுந்த இலக்கியங்கள் அதிகம் பாடப்பட்டுள்ளது நமது தமிழிலக்கியத்திலேயே ஆகும். வாழ்வும் வளம் சேர்க்கும் கருத்துக்களைத் தரும் இலக்கியங்களைத் தேடிப் படித்து வாழ்வை வண்ணமையமாக மாற்ற வழிவகுக்கும் தமிழிலக்கியம். அவ்வாறு வழிவகைசெய்வதில் முதன்மையாக காணப்படுவது குறுந்தொகையாகும். அதில் நகையை ஆலங்குடிவங்கனார் மருதத்திணைப் பாடலில் விளக்குகிறார்
“கழனி மா அத்து விளைந்து உகுதீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித், தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப்பாவை போல ,
மேவன செய்யும், தன்புதல்வன் தாய்க்கே” (குறுந்தொகை பாடல் -8)
ஒருவன் தகுதிக்கு ஏற்ற செயல்களில் ஈடுபடல் வேண்டும் அதைவிட்டு தகுதியற்ற செயல்களில் ஈடுபடுவது நகைக்கு உரியது.
அழுகை
இதனை அவலம், துயரம், பிரிவுத்துன்பம், மாயை என பல பொருள்களில் அழைக்கப்படுகிறது. இம்மெய்ப்பாடு நகைக்கு எதிரானது. இவை மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்தது, நகைகைப் போன்றே அழுகையும் மனித இனத்திற்கு அடிப்படையான மெய்ப்பாடாகும். வாழ்க்கையில் கவலையை வளர்க்கும் துன்பம் கலையுலகில் கவலையைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது என்னும் அவலம் உள்ளச் சுமையைக் குறைப்பதற்கு உறுதுணையாகிறது என்று மு. வரதராசனார் கூறுகிறார்.(மு.வ. இலக்கிய ஆராய்ச்சி, ப.69) குறுந்தொகையில் அழுகையானது பரவலாகக் காணப்படுகின்றது.
“எவ்வி, இழந்த வறுமை யாழ்ப்பாணர்
பல்இருங் கூந்தல் யாரளோ நமக்கே”(குறுந்தொகை பாடல் பா. 19)
என்று எவ்வி என்னும் வள்ளலை இழந்த பாணர் வறுமையைக் குறுந்தொகை காட்டுகிறது. மேலும்,
“ஆசு இல் தெருவில் நாய் இல் வியன்கடைச்
-----------------------------------------------------
அக்கால் வருவர் எம் காதலோரே” (குறுந்தொகை பாடல் பா. 277)
என்ற வரிகளில் பிச்சை ஏற்று உண்ம் அறிவர் வறுமை கூறப்படுகிறது.
“அன்னாய்! இவன் ஓா் இளம் மாணாக்கன்
தன்ஊர் மன்றத்து என்னன் கொல்லோ
இரந்தூண் நிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெரும் செம்மலளே” (குறுந்தொகை பாடல் பா. 33)
என்று இரந்துண்ணும் வாழ்க்கையால் உடல்வளம் பெறாத பாணன் வறுமையும் குறுந்தொகையில் அறிப்படுகிறது.
இளிவரல்
இளிவரல் என்பது இழிப்பு, இழிவு, இளிவு, இழிபு எனப் பல வகைப்படுத்துவர் உரையசிரியர்கள். அழுகை மெய்ப்பாடு பிறக்கக் காரணமானவைகளில் ஒன்றான இளிவு என்பது இளிவரல் மெய்ப்பாட்டிலிருந்து சற்று மாறுபட்டதாகக் காட்டுவர் இளிவரல் இறப்பவலத்திற்கு வழி கோலும். ஆனால், இறப்பிற்கு வழிகோலாது. இது அழுகை இல்லாத அல்லது மேலோங்கி மறைந்த நிலையில் தாழ்வு உணர்ச்சியாக நிற்கின்றது. இதனை குறுந்தொகையில் வரும் பிரிவுத்துயரால் மிகவாடி மெலிந்த தலைவிபால் காமபடபிணி இளிவரல் தோன்றியது. அலைக்கும் வாடைக் காற்றை நோக்கி
“இமயமும் துளக்கும் பண்பினை
துணையிலர், அளியர், பெண்டியர், இஃதுஎவனோ? (குறுந்தொகை .பாடல் பா. 158)
எனக் கூறுனின்றான். முலையைத் துளக்கும் ஆற்றலை உடைய வாடைக் காற்று, காமப்பிணியால் மெலிந்த தன்னை அலைப்பது அதன் தகுதிக்குப் பொருந்தாது என இளி வந்து மொழிகின்றாள். மேலும்,
“குணகடற் திரையது பறைதபு நாரை
-----------------------(குறுந்தொகை .பாடல் பா. 128)
நோயை, நெஞ்சே! நோய்ப் பா லோயே(குறுந்தொகை. பாடல் பா. 128) எனக் காட்டுவா் பரணர். முதுமையடைந்த நாரை பறந்து சென்று இறை பெற இயலாத நிலைபோல், தலைவன் காமநோயால் மெலிவுற்றுத் தலைவியை அடையப்பெறாது இளிவரலுற்றான், நாரையின் நிலையைக் காட்டி, காமநோயால் நொந்த தலைவனின் இளிவந்த நிலையைக் காட்டுகின்றார் பரணர்.
மருட்கை
மருட்கையை அற்புதம், வியப்பு என அழைப்பர். இம் மருட்கை புதுமை, சிறுமை, பெருமை, ஆக்கம் என்னும் நான்கு உணர்ச்சிகளால் பிறக்கும். “வியப்பு என்பது இடைப்பட்ட தூண்டுதல் அல்லது உள்ளக்கிளர்ச்சியாம். வியப்பின் போது கண்ணியமைகள் உயருகின்றன. வாய் அகலத் திறக்கின்றது. செற்றில் குறுக்கு வளையங்கள் தோன்றுகின்றன. மூக்கின் மேல் விரல் வைக்கப்படுவது நிகழும். மருட்கையை, மருள்வேன், மருண்டனென், மருண்டே, மருள்வன வியப்பு எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பெறுகிறது.
இயல்பான நிலையிலிருந்து மெய் வேறுபாட்டால் தலைவன், தலைவியரிடையே புத்துணர்ச்சி தோன்ற, வியப்படைதலைப் புலவோர் குறிப்பிடுகிறார்.
“எற்றோ வாழி.......... தோழி...... முற்றுபு
........................................................
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே” (குறுந்தொகை .பாடல் பா. 396)
அச்சம்
மனித வாழ்வில் சின்னஞ்சிறு குழந்தைப் பருவம் முதல் எல்லா வயதினரிடத்தும் இம்மெய்ப்பாடு எளிதாக நிகழ்வதுண்டு. கொல்லி மலையின் மேற்குப் புறத்தே தெய்வம் வரைந்த பாவை என்பர். இதை,
“காந்தள் வேலிச் சிறு குடிப் பசிப்பின்
......................................
...............................
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்” (குறுந்தொகை .பாடல் பா. 100)
என்ற வரிகள் அச்சம் மிகுவதற்குக்் காரணமான கரிய கண்ணுடையவன், அணங்காவான், பிறரை மயக்கிக் கொல்லும் தொழில் உடையவன் என்றும், “ பா அடி உரல பகுவாய் வள்ளை” (குறுந்தொகை .பாடல் பா. 89) என்ற வரிகளில் அச்சம் தரும் அப்பாவை, முதிர் தெய்வம் என அழைக்கப்படுகிறது.
பெருமிதம்
பெருமிதம் என்னும் மெய்ப்பாடு கல்வி, தறுகண், இசைமை கொடை என்னும் நான்கு உணர்ச்சிகளால் இம்மெய்ப்பாடு துான்றுகின்றது. எடுப்பான பீடுநடை முதலானவைப் பெருமிதத்தின் அறிகுறிகளாகும். மனிதன், தான் ஒவ்வொரு நிலையிலும் மற்றவர்களைக் காட்டிலும் மேம்பட்டு விளங்க விழைகின்றன.
அந்த விழைவு நிறைவேறும் போது மனமகிழ்ச்சியோடு எடுப்பான தோற்றத்தையும், நேர் கொண்ட பார்வையினையும், பீடு நடையினையுமு் கொண்டு பெருமிதமடைகின்றன. எல்லோராலும் ஒப்ப நில்லாது பேரெல்லையாக நிற்றல் பெருமிதம் ஆகும். அபருமிதம் என்பது வீறுதரும் தறுக்காகும். நிலைக்களன்கள் நான்கனுள் வீரம் என்பதாலும் பெருமிதம் குறிக்கப்படும்.
தலைவி, தலைவன் மீது கொண்ட நட்பின் பெருமிதம் பற்றிக் குறுந்தொகையில் “பெருந்தேன் இழைக்கும் நாடனொடு – நட்பு”(குறுந்தொகை .பாடல் பா. 3) என்று தலைவன்மீது கொண்ட நட்பைப் பெருமித உணர்வோடு உரைக்கின்றான்.
வெகுளி
உலக வாழ் உயிர்களிடத்தும் வெகுளி தோன்றுவதுண்டு. வெகுளி உயிர்களிடையே சண்டை நேர்வதற்கு அடிப்படை காரணமாகின்றது. இம்மெய்ப்பாடு உறுப்பறை, குடிகோள், அலை, கொலை என்னும் நான்கு உணர்ச்சிகளால் பிறக்கிறது.
வெகுளி பல வழிகளில் மறைந்து நிற்கும் என்றும் அது மொழி, செயல், உடல், எதிர் விளைவுகள், நிகழ்ச்சிகள் என்னும் நான்கு முறைகளில் வெளிப்படுகிறது என்றும் உரைப்பர்.
வெகுளி வெளிப்படும் வகையில் குறுந்தொகையில்
“பசித்து வாடும் போதும் களைத்து மெலிந்து கிடக்குட்
போதுஈ நோயால் வருந்தும் போதும்” (இராஜேஸ்வரி ஈ.த. குழலி உள்ளம், ப. 307) என மூன்றாகக் கூறுவர். இந்நிலைகளை வெகுளி கொழித்து வளரத்தக்க செழித்த வயல்களாகும். இதைக் குறுந்தொகையில்,
“செல்வச் விறா அர் சீறடிப் பொலிந்த
.....................................................
கனவோ மற்று இது. வினவுவல் யானே” (குறுந்தொகை .பாடல் பா. 148) என பிரிவாற்றாத் துயரால் வருந்தும் தலைவிக்கு வெகுளி பிறப்பதைக் குறுந்தொகை உணர்த்துகிறது.
உவகை
உவகை என்பது மகிழ்ச்சி, இன்பம், களிப்பு எனவும் பொருள்படும் இம்மெய்ப்பாடு செல்வம், புலவ், புணர்வு, விளையாட்டு என்னுமு் நான்கு உணர்ச்சிகளால் பிறக்கும். இதை “விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்” (குறுந்தொகை .பாடல் பா. 101) என்று உலகம் முழுவதும் ஒரு இடை நிலில் ஆறும் அரச செல்வ நுகர்ச்சியின்பம் சிறந்ததாகக் கருதப்படுகின்றது. அது உவகையூட்டுவதும் துன்ப மூட்டுவதும் அன்று. பொதுவாக, எதற்கும் இடம் கொடுக்காமல் பாராமுகமாய் இருத்தல் போன்றது. ஆனால், வாழ்க்கையில் களைப்பூட்டும் சமயங்களிலோ அல்லது தெம்பூட்டும் நிலையிலோ வியப்பு உவகையளிக்கின்றது.(Henry Rudgers marshall, Pain, Pleasure and Aesthetics, P.297) என்பர் பெயின் என்னும் உளவியலார் உரைக்கின்றார்.
முடிவுரை
உள்ளத்து உணர்ச்சியின் வெளிப்பாடாக, உடலின் மேல் தோன்றும் புறக்குறிகள் மெய்ப்பாடு என்பதையும் அதைக் குறுந்தொகையினைக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது. எட்டு மெய்ப்பாடுகள், அவற்றின் கண் உள்ள நான்கு உணர்ச்சிகள் போன்றன குறுந்தொகையில் பொருந்தியுள்ளமைய விளக்கிவந்துள்ளன. தலைவன், தலைவி, செவிலி, தோழி காமகிழத்தி, ஆகியோர்களிலிருந்து வெளிப்படும் மெய்ப்பாடுகளையும் வெளிப்படுத்தியுள்ளது. பழக்கவழக்கங்கள், மரபுகள், இழிச்செயல்கள், பிரிவுகள், களவு, கற்பு செயல்பாடுகள், போர், இன்பம், துன்பம் போன்றவற்றிலிருந்து வெளிப்படும் மெய்ப்பாட்டு உணர்வை விளக்கிறது.
ஆதார நூல்
1. குறுந்தொகை மூலம் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட், சென்னை - 96, 2- ஆம் பதிப்பு 1981
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.