முன்னுரைதிருப்பரங்குன்ற திருமுருகத் திருத்தல வரலாறும் அதன் சிறப்பும் குறித்து இக்கட்டுரை விரிவாக ஆராயவுள்ளது. இதில் சங்க இலக்கியங்களில் திருபரங்குன்ற முருகன் திருத்தல வரலாற்று ஆதாரங்கள், கல்வெட்டுகளின் வழியான ஆதாரங்கள், வரலாற்று ஆய்வாளர்கள் முன் வைக்கும் தொல்லியல் ஆதாரங்கள் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்ற வரலாறு
திருப்பரங்குன்றம் சங்க இலக்கியங்களுள் ஒன்றான மதுரைக்காஞ்சியில், தளிமழை பொழியும் தண் பரங்குன்றில்(மதுரை.263) தண்பரங்குன்று என்று சுட்டப்படுகிறது . இக்குன்றம் முருகன் குடியிருந்த இடமாக அகநானூறு,
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடுவேல்
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து (அகம்.59)
எனும் அகப்பாடல்கள் மருதன் இளநாகனாரின் பாடல் சூரபன்மனையும் அவன் சுற்றத்தையும் தொலைத்த ஒளி பொருத்திய வேலை உடைய முருகன் தண்பரங்குன்றில் உறைவதாகவும் சந்தன மரங்கள் மிக்க அந்தக் குன்றை நல்லந்துவனார் பாடியுள்ளதாகவும் கூறகின்றது. எருக்காட்டூர் தாயங்கண்ணனாரால் பாடப்பட்டுள்ள,
பல்பொறி மஞ்சை வெல்கொடி உயரிய
ஒடியாவிழவின் நெடியோன் குன்றத்து (அகம்.149)
எனும் பாடலில் மதுரைக்கு மேற்கிலுள்ள பரங்குன்று மயில் கொடியினை உயர்த்திய நெடியோனான முருகப் பெருமானின் இடமென்றும் அங்கு விழாக்கள் நிறைந்திருந்தன என்றும் தெரிவிக்கிறது.
பரிபாடலில் இடம்பெற்றுள்ள செவ்வேளைப் பற்றிய எட்டுப் பாடல்களில் ஏழு பாடல்கள் பரங்குன்றை முருகனின் உறை விடமாகக் எடுத்துரைப்பதுடன் அவர் கோயில் மலைமேல் இருந்ததையும் அதற்கு மதுரையிலிருந்து மன்னரின் பரிவாரங்களுடன் மக்கள் வந்ததையும் மலையின்மீது இருந்த முருகக் கோயில் வளாகத்தில் காமவேள் படைக் கொட்டில் ஒத்த எழுதெழில் அம்பலம் இருந்ததை,
எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின் (பரி.28)
என்று உரைக்கின்றது. மேலும், குன்றத்துக் காட்சிகளையும் (பரி. செவ்வேள் 30-39), குன்றத்தின் சிறப்பியல்புகளையும் (40-50) விரிவாகப் பேசுகின்றது. திருப்பரங்குன்றத்தில் மக்கள் நிகழ்த்திய முருக வழிபாட்டு முறைகள் ஆகியனவும் சொல்லப்பட்டுள்ளன.
இவ்வாறு சங்க காலத்தில் முருகன் உறைவிடமாக இருந்த திருப்பரங்குன்றம் பக்தி இலக்கிய காலத்தில் சிவனின் தலமாக மாற்றம் கொண்டது வியப்பானது. இதனை, சம்பந்தர் பெருமானே முதன் முதலாகப் பரங்குன்றை திகழ்சடை வைத்தோர் தேன்மொழி பங்கினன் மேய நன்னகர் என்று பரவுவதோடு பரங்குன்றை உன்னிய சிந்தை உடைய வர்க்கு இல்லை உறு நோயே என்றும் உறுதி கூறுகிறார்.(முதல் திருமுறை, 100:5) அவரைத் தொடர்ந்து பல்லவர் காலத்தினரான சுந்தரரும் பரங்குன்றைப் பரமன் இடமாகவே கட்டுகிறார்.(ஏழாம் திருமுறை, 2:1-10)
முருகன் தலமாகவும் பின்னர் சிவபெருமான் உறைவிடமாகவும் அறியப்படும் பரங்குன்றம் சங்க காலத்திலேயே சமணத் துறவியரின் வாழிடமாகவும் இருந்தமையை இக்குன்றின் மீதுள்ள இரண்டும் குகைத்தளங்களிலும் காணப்படும் படுக்கைகளும் பழந்தமிழ்க் கல்வெட்டுகளும் நிறுவுகின்றன. அவற்றுள் மேல் தளக் கல்வெட்டுகளின் காலத்தைக் கி.மு. முதல் நூற்றாண்டாகவும் கீழ்த் தளத்துக் கல்வெட்டின் காலத்தைக் கி. பி. முதல் நூற்றாண்டாகவும் அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர். (மதுரை மாவட்டக் குடைவரைகள், ப.190)
இக்கல்வெட்டுகளாலும் சங்க இலக்கியப் பாடல்களாலும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் பரங்குன்றம் சமணர் வாழிடமாகவும் முருகப் பெருமானின் திருத்தலமாகவும் விளங்கியமையை அறியலாம். மலைமீது சென்று மக்கள் வழிபட்டதாகப் பாடல்கள் கூறுவதால் சங்ககால முருகன் கோயில் மலை மீது தனியாக அமைந்திருந்ததெனக் கருதலாம்.
சிவ வழிபாடு உச்சத்தை அடைந்த பதிகக் காலத்தில் சிவபெருமான் திருக்கோயில் அமைந்த இடமாகப் பரங்குன்றம் கொண்டாடப்படுவால், கி.பி. ஆறாம் நூற்றாண்டளவில் அங்குச் சிவபெருமானுக்கும் ஒரு கோயில் இருந்ததாகக் கொள்ளலாம்.
முற்பாண்டிய வேந்தர்களுள் குறிப்பிடத்தக்கவரான நெடுஞ்சடையப் பராந்தகரின் ஆறாம் ஆட்சியாண்டில் (கி.பி. 7763) அவரது மகா சாமந்தனாகிய கரவந்தபுரத்தைச் சேர்ந்த வைத்திய குலத்தினன் பாண்டி அமிர்தமங்கவரையரான சாத்தன் கணபதி திருத்துவித்தனவாகத் திருக்கோயிலையும் தடாகத்தையும் குறிப்பிடும் வட்டெழுத்துக் கல்வெட்டு அவர் மனைவி நக்கன் கொற்றி துர்காதேவிக்கும் சேட்டைக்கும் கோயில்கள் எடுத்ததாகவும் கூறுகிறது. கொற்றலைக் கருவறை மேல்நிலையில் உள்ள வடமொழிக் கல்வெட்டு பரங்குன்றத்தில் கலியாண்டு 3874ல். (கி.பி. 773) சாமந்த பீமன் சிவபெருமானுக்காகக் கோயில் குடைவித்ததைச் சொல்கிறது.
இக்கல்வெட்டுகளால் பரங்குன்றில் கி.பி. 773ல் சிவபெருமான் கொற்றவை சேட்டை இம்மூலர்க்கும் இடம் அமைந்தமை உறுதிப்படுகிறது. சிவபெருமான் கொற்றவைக் கருவறைகள் அமைந்திருக்கும் முதன்மைக் குடைவரைப் பகுதியின் கட்டமைப்புக் கொண்டு நோக்கும்போது இங்குள்ள விஷ்ணு கருவறை, பிள்ளையார், முருகன் சிற்பங்கள், முகப்புத் தூண் வரிசை, இரண்டாம் தூண் வரிசை இவை அனைத்துமே சிவபெருமான், கொற்றவைக் கருவறைகள் உருவாக்கப்பட்ட காலத்திலேயே தோன்றியிருக்க வேண்டும் என்றுதான் கொள்ளமுடியும். (மதுரை மாவட்டக் குடைவரைகள், ப.191)
இம்முதன்மைக் குடைவரையிலுள்ள அனைத்துப் பெருஞ் சிற்பங்களும் தொடரான புதுக்கல்களால் உருமாறியுள்ளன. பெருஞ் சிற்பங்களைச் சூழ்ந்துள்ள உடன்கூட்டச் சிற்பங்கள் குடைவரை தோன்றிய காலத்தனவா அல்லது பின்னர் புதுக்கல்களின்போது உருவாக்கப்பட்டனவா என்பதை அறியவும் வாய்ப்பில்லை. அதனால் இங்குள்ள சிற்பங்களைக் கொண்டு இக்குடைவரையின் காலத்தைக் கண்டறிதல் இயலுவதன்று.
முகப்புத் தூண்கள் இரண்டாம் வரிசைத் தூண்கள் அவற்றின் மீதுள்ள கூரை உறுப்புகள் கருவறைகளின் தாங்குதள உறுப்புகள் கருவறைகளின் சுவர்கள் தாங்கும் கூரை உறுப்புகள் இவை சமகால அமைப்பின என்பதால் குடைவரையின் அனைத்துப் பகுதிகளும் அதாவது மூன்று கருவறைகளும் ஒரே காலகட்டத்தில் உருவானவை என்பதை உறுதியாகக் கூற முடியும்.
முருகனும் பிள்ளையாரும் உள்ள அர்த்தமண்டபப் பின்சுவர்ப் பகுதிகள் இரண்டாம் வரிசைத் தூண்களிலிருந்து நன்கு உள்ளடங்கிய நிலையில் குடையப்பட்டள்ளன. தென் தமிழ்நாட்டிலுள்ள வேறெந்தக் குடைவரையிலும் கருவறையை அடுத்துள்ள சுவர்ப் பகுதிகள் இவ்வளவு ஆழமாகக் குடையப் பட்ட நிலையில் சிற்பங்களைப் பெறவில்லை. இவ்வமைப்பு முறை நாமக்கல் கீழ்க் குடைவரையிலும் மாமல்லபுரம் வராகர் மகாவராகர் குடைவரைகளிலும் காணப்பெறுவது இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
இவ்விரண்டு சுவர்ப்பகுதிகளிலும் பழைமையை வெளிப்படுத்தும் கட்டுமானக் கூறுகளாகக் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள சுவரொட்டிய அரைத்தூண்களைக் குறிக்கலாம். சிவம் விஷ்ணு காணப்படும் அரைத்தூண்களை அவை ஒத்துள்ளமை அவற்றின் பழைமையை உறுதிப்படுத்தும். (மதுரை மாவட்டக் குடைவரைகள், ப.192)
திருத்துவித்தது திருக்கோயிலும் ஸ்ரீ தடாகமும் இதனுள் அறம் உள்ளதும் எனும் கல்வெட்டு வரியிலுள்ள திருத்து வித்தது என்னும் சொல் சீர்மைப்படுத்தப்பட்டது பண்பத்தப்பட்டது எனப் பொருள் தரும். பாறையாக இருந்த இடத்தைத் திருக்கோயிலாகச் சீர் செய்த பணியையே திருத்துவித்தது என்ற சொல்லால் சாமந்த பீமன் குறிப்பதாகக் கொள்ளவேண்டுமே தவிர ஏற்கனவே குடைவரைக் கோயில் ஒன்று அங்கிருந்து அதையே சாமந்த பீமன் மாற்றி அமைத்திருக்கலாம் எனக் கருதுவது சரியாகாது இப்போதுள்ள குடைவரை அமைப்பு எத்தனையோ புதுக்கல்களுக்குப் பிறகும் தன் பழங் கட்டமைப்புக் குலையாமல் காட்சி தருவதொன்றே இக்கருத்தினை உறுதிப்படுத்தப் போதுமான சான்றாகும். (மதுரை மாவட்டக் குடைவரைகள், பக்.192-193)
தாம் சிவபெருமான் கருவறையை உருவாக்கியதையும் கொற்றவை சேட்டைக் கருவறைகளைத் தம் தேவி உருவாக்கியதையும் கூறியுள்ள பீமன் விஷ்ணு கருவறை பிள்ளையார் முருகன் சிற்பங்கள் இவற்றின் உருவாக்கம் பற்றிக் கூறாமை ஏன் எனும் கேள்வி எழலாம்.
இக்கேள்விக்கான மறுமொழி வட்டெழுத்துக் கல்வெட்டிலுள்ள இதனுள் அறம் உள்ளதும் என்னும் தொடரில் உள்ளது. அறம் எனும் சொல் புனிதம் சமயம் செவ்வையாக எனப் பல பொருள்கள் தரும். இதனுள் புனிதமாக உள்ளனவும் இதனுள் செவ்வையாக உள்ள பிறவும் என்ற பொருள்களைத் தரவல்ல. இதனுள் அறம் உள்ளதும் என்ற பீமனின் சொற்றொடர் இக்குடைவரை அமைப்பிற்குள் இடம்பெற்றிடும் விஷ்ணு கருவறை பிள்ளையார் முருகன் சிற்பங்களைக் கருதியே கல்வெட்டில் இணைக்கப்பெற்றதாகக் கொள்ளமுடியும். அதனால் இன்றிருக்கும் வடபரங்குன்றம் குடைவரை முழுமையும் சாமந்த பீமனின் பணியாகக் கி. பி. 773ல் உருவாக்கப்பட்டதே எனக் கொள்வதில் தடையிருக்க முடியாது. (மதுரை மாவட்டக் குடைவரைகள், ப.193)
இங்குள்ள பிற சிற்பத்தொகுதிகளுள் இராவண அனுக்கிரகத் தொடர் சாமந்த பீமனின் பணியாகவோ அல்லது அவர் காலத்திற்குச் சற்று முற்பட்ட படைப்பாகவோ இருக்காலம். எழுவர் அன்னையர் உமாசகிதர் சிற்பங்களும் எட்டாம் நூற்றண்டச் செதுக்கலகளாகவே காட்சி தருகின்றன. யாணைத் திருமகள் தொகுதி கனமான சுதைப் பூச்சும் அன்னபூரணித் தொகுதி எண்ணெய்ப் பூச்சும் கொண்டிருப்பதால் அவற்றின் உருவாக்கக் காலத்தை உறுதிபடக் கூறக்கூடவில்லை எனினும் அவற்றையும் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன் அமைந்த சிற்பங்களாகவே கொள்ளவேண்டும். அண்டராபரணன் உக்கிரமூர்த்திச் சிற்பங்களும் அக்காலத்தனவே. (மதுரை மாவட்டக் குடைவரைகள், ப.193-194)
திருப்பரங்குன்றத்தில் முருகன்
கொற்றவைக் கருவறையை அடுத்து இருபுறத்தும் விரியும் அர்த்தமண்டபத் தென்சுவரில் வலப்புறச் சுவர்ச் சிற்பமாய் இடம்பெற்றுள்ள முருகப் பெருமான் சுகாசனத்தில் உள்ளார். இடக்காலை மடக்கி வலக்காலைத் தொங்கவிட்டுள்ள முருகனின் பின் கைகளில் வலப்புறம் வஜ்ரம் இடப்புறம் சக்தி. கீழிறக்கப்பட்டுள்ள வலக்காலின் பாதத்தைத் தாமரை மலர் ஒன்றில் இருத்தியுள்ளார். முன் கைகளில் வலக்கை காக்கும் குறிப்பில் இருக்கைகளும் தொடைமீதுள்ளது.
கரண்டமகுடராய்ச் செவிகளில் மகரகுண்டலங்களும் கழுத்தில் ஆரங்களும் தோள், கை வளைகளும் இடையில் பட்டாடையும் பெற்றுள்ள முருகனின் வலப்புறம் நாரதரும் இடப்புறம் தேவயானையும் கருடாசனத்தில் சிறிய வடிவினராய்க் காட்டப்பட்டுள்ளனர். சடைமகுடராய்த் தாடி மீசையுடன் உள்ள நாரதரின் வலக்கை சின்முத்திரையிலிருக்க இடக்கையில் மலர். கழுத்தில் உருத்திராக்க மாலை கைகளில் உருத்திராக்கத் தோள், கை வளைகள். இடையில் சிற்றாடை கரண்ட மகுடமணிந்துள்ள தேவயானையின் வலக்கையில் மலர். கடக இடக்கையிலோ மலர்ந்த பூவொன்றை ஏந்தியுள்ளார். இடையில் பட்டாடை மார்பில் கச்சு. உடலில் பல்வகை அணிகள்.
முருகனின் இருபுறத்தும் மேற்பகுதியில் பக்கத்திற்கொருவராக வலப்புறம் சூரியனும் இடப்புறம் சந்திரனும் அவரவர் துணைவியருடன் (காயத்திரி சாவித்திரி) உள்ளனர். நால்வரும் தம் உள் கைகளால் இறைஇணையைப் போற்ற புறக்கைகள் அவரவர்க்குரிய மலரைக் கொண்டுள்ளன. தலைக்குப் பின் ஒளி வட்டம் பெற்றுள்ள சூரியனும் சந்திரனும் கிரீடமகுடம், தோள் மாலை, சரப்பளி, முப்புரிநூல், தோள், கை வளைகள், பனையோலைக் குண்டலங்கள் பெற்று இடையில் முழங்கால் அளவில் சுருக்கிய பட்டாடையும் இடைக்கட்டும் அணிந்துள்ளனர்.
காயத்திரியும் சாவித்திரியும் நெற்றிப்பட்டம் அணைத்த கிரீடமகுடமும் கழுத்தணிகளும் கையணிகளும் உதரபந்தமும் பட்டாடையும் அணிந்துள்ளனர். அவர்தம் ஆடை முடிச்சுகள் இருபுறத்தும் பறக்கின்றன.
கீழுள்ள தளப்பகுதி
முருகனின் திருவடிகளுக்குக் கீழுள்ள தளப்பகுதியில் கிழுக்கில், வாயில் பாம்புடன் மயிலும் மேற்கில் சேவல் கொடியை ஏந்தியவாறு முதிய பூதம் ஒன்றும் காட்டப்பட்டுள்ளன. உயரமான தளம் ஒன்றின்மீது தென்பார்வையாய் நிற்கும் மயில் தன் காலொன்றின் கீழ்ப் படமெடுத்திருக்கும் பாம்பை அடக்கி உள்ளது. அலகிலும் படமெடுத்திருக்கும் பாம்பொன்றைப் பிடித்துள்ளது. மயிலின் கழுத்தில் மூன்று மணி வளையங்கள் இடைவெளியிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
பாதங்களை வடமுகமாகத் திருப்பி உயரக் குறைவான தளம் ஒன்றின்மீது நிற்கும் கொடிப்பூதம் இடைக்கையை இடுப்பில் வைத்துள்ளது. வலக்கை உயர்ந்து கொடித்தண்டைப் பிடித்துள்ளது. பனையோலைக் குண்டலங்களும் உருத்திராக்க மாலையும் முப்புரிநூலும் தோள், கை வளைகளும் தண்டையும் அணிந்துள்ள அதன் தலையில் தலைப்பாகை இடையில் சிற்றாடை நெற்றியில் வட்டப்பொட்டு அணிந்துள்ள அதன் கொடித் தண்டின் உச்சியில் சேவல் காட்டப்பட்டுள்ளது.
இடைப்பட்ட தளப்பகுதியில் முருகனின் வாகனமான பிணிமுகம் எனும் பெயர் கொண்ட யானையும் இரண்டு பூதங்களும் ஆடு ஒன்றும் காட்டப்பட்டுள்ளன. மேற்குப் பார்வையில் நிற்கும் நான்கு கால்களையும் உபானத் தளத்தின் மீது இருத்தியுள்ளது. நீளமான தந்தங்களும் துதிக்கையில் கரும்பும் கொண்டு முகபடாமும் செவிகளில் செவிப்பூக்களும் கால்களில் தண்டையும் அணிந்துள்ள யானையின் கழுத்தில் ஆரங்கள். முதுகில் அழகிய விரிப்பொன்று மடிப்புகளுடன் காட்டப்பட்டுள்ளது.
பிணிமுகத்தை அடுத்து மேற்கு நோக்கி ஒருக்களித்துள்ள பூதம் வலக்கையில் அரிவாள் ஏந்தியுள்ளது. இடக்கை இறைவன் அமர்ந்துள்ள தளத்தைத் தாங்குமாறு காட்டப்பட்டுள்ளது. பனையோலைக் குண்டலங்களும் முப்புரிநூலும் அணிந்துள்ள அதன் இடுப்பில் கருக்கிய ஆடை கழுத்தில் பதக்கம் வைத்த பெருமுத்துச்சரமும் சரப்பளியும் இரண்டு ஆரங்களும் உள்ளன. சுருள்முடியும் சடைப்பாரமுமாய்க் காட்சிதரும் அதன் கால்களில் தண்டை வலத்தோளில் துண்டு.
முதல் பூதத்தைப் பார்த்தவாறு கிழக்கு நோக்கி ஒருக்களித்துள்ள இரண்டாம் பூதம் வலக்கையில் கத்தி போன்றதொருகருவியைக் கொண்டுள்ளது. இடக்கை இடுப்பில். பனை யோலைக் குண்டலங்கள் சவடி சரப்பளி பெருமுத்துச்சரம் முப்புரிநூல் கையணிகள் தண்டை அணிந்துள்ள அதன் தலை அலங்காரம் முதல் பூதத்தைப் போலவே அமைந்துதுள்ளது. இடத்தோளில் துண்டு அணிந்து இளஞ்சிரிப்புடன் நிற்கும் அதன் நெற்றியில் பொட்டு.
வளைந்த கொம்புகளுடன் கிழக்குப் பார்வையில் நிற்கும் ஆட்டின் நான்கு கால்களும் யானையைப் போலவே உயரக் குறைவான தளமொன்றின்மீது உள்ளன. கழுத்தை இறுகத் தழுவிய நிலையில் ஆரமொன்றும் பெருமணிச்சரமொன்றும் அணிந்துள்ள அதன் முதுகிலும் அழகிய துணிவிரிப்புக் காட்டப்பட்டுள்ளது.
பிற்காலக் கட்டமைப்புகளும் தொடர்ந்தமைந்த புதுக்கல்களும் பரங்குன்றின் பழந் தோற்றத்தை முற்றிலுமாய் மாற்றியுள்ள நிலையிலும் முதன்மைக் குடைவரையின் கட்டமைப்பும் சிற்பத்தொகுதிகள் சிலவும் பாண்டியர் கைவண்ணம் காட்டப் பிறந்த மேனியாகவே விளங்கிவருவது கலை வரலாற்று அறிஞர்களுக்கு ஆறுதல் தரும் உண்மையாகும். பரங்குன்று பற்றிப் பேசும் இலக்கிய சிற்ப கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் பரங்குன்றின் சமய வரலாற்றைக் கீழ் வருமாறு கருங்கச் சொல்லலாம்.
கி. மு. முதல் நூற்றாண்டளவில் பரங்குன்றின் ஒருபால் சமணர் வாழிடமும் மறுபால் முருகன் கோயிலும் இருந்தன. அவற்றுள் பரங்குன்றில் முதலில் தடம் மதித்தது எது என்பதை அறுதியிட்டுக் கூறச் சான்றுகள் இல்லை.
கி. பி. ஆறாம் நூற்றாண்டில் சிவபெருமானுக்கும் இக்குன்றில் கோயில் அமைந்தது.
பாண்டியார் பராந்தக நெடுஞ்சடையர் ஆட்சிக்காலமான கி. பி. 773ல் குன்றின் வடபுறம் சாமந்த பீமனின் குடைவரை அமைந்தது. இராவண அனுக்கிரகர் எழுவர் அன்னையர் உமா சகிதர் தொகுதிகளும் இக்காலகட்டத்தில் உருவாக்கப்பட்டதாகக் கொள்ளலாம்.
ஏறத்தாழ இதே காலகட்டத்தில் அல்லது சற்றுப் பிற்பட்ட நிலையில் குன்றின் தென்புறம் வடபுறக் கலை முறையிலேயே ஆனால் ஒரு கருவறை மட்டுமே பெற்றமைந்த குடைவரை ஒன்று உருவாக்கப்பட்டது. (மதுரை மாவட்டக் குடைவரைகள், ப.194)
கி. பி. ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளில் சமணர் இப்பகுதியில் வளமாக இருந்தமையைப் பழனியாண்டவர் கோயில் காசிவிசுவநாதர் கோயில் வளாகங்களில் உள்ள சமணச் சிற்பங்களும் பழனியாண்டவர் கோயில் தொகுதிகளை அடுத்துள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் உறுதிப் படுத்துகின்றன. (மதுரை மாவட்டக் குடைவரைகள், பக்.194 - 195)
நடுவணரசால் இவ்வளாகத்திலிருந்து படியெடுக்கப் பட்டுள்ள இரண்டாம் பாண்டியப் பேரரசர்களின் கல்வெட்டு தன் வடபரங்குன்றம் குடைவரையைச் சிவபெருமானின் குடைவரையாகக் காட்டுவதும் அவற்றுள் ஒன்றுகூட முருகப் பெருமானைச் சுட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கன. ஆனால் இதற்கு மாறாக இக்கால இலக்கியமாகக் கொள்ளப்படும் கல்லாடம் பரங்குன்றை கடம்பின் நெடுந்தார்க் கண்ணியன் அரிமகள் விரும்பிப் பாகம் செய்து களியுடன் நிறைந்த குன்றமாகக் காட்டுவது கருதத்தக்கது.
இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலத்திலும் பரங்குன்றம் பகுதியில் சமணம் தொடர்ந்து செல்வாக்குடன் விளங்கியமைக்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.
தென்பரங்குன்றம் குடைவரையில் சிற்பங்கள் உருவாக்கப்பட்டமை இரண்டாம் பாண்டியப் பேரரகக் காலத்தில்தான் என்றாலும் உருவாக்கியவரை அறியக்கூடவில்லை. அங்குள்ள கல்வெட்டுக் குறிப்பிடும் சுந்தரபாண்டிய ஈசுவரத்தை அடையாளப்படுத்த உறுதியான சான்றுகள் கிடைத்தில.
ஆறாம் நூற்றாண்டிற்குப் பிறகு சிவபெருமான் தலமாகவே அறியப்படும் பரங்குன்றின் வடகுடைவரையில் முருகன் இருப்புக் கூறும் முதல் கல்வெட்டை நாயக்கர் காலத்திலேயே காணமுடிகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளுள் ஒன்றாகக் கொண்டாடப்பட்டு வரும் இக்குன்றின் தொடரான வரலாறு இப்பகுதியில் நிலவிய சமய நல்லிணக்கத்தையும் பாண்டியர் காலந்தொட்டுப் படிப்படியாக வளர்ந்து பேருருக் கொண்டுள்ள ஒரு சமய நிறுவனத்திற்குக் கிடைத்த அணைப்புகளையும் அவ்வப்போது நேர்ந்த அவலங்களையும் நன்கு வெளிப்படுத்துகிறது. (மதுரை மாவட்டக் குடைவரைகள், ப.195)
முடிவுரை
இக்கட்டுரையின் வழி சங்ககாலம் முதல் இன்றுவரை திருப்பரங்குன்றத்தில் முருகத் திருத்தலம் இருந்து வருகின்றது என்பதும். பக்தி இலக்கியக் காலத்தில் அங்கு சிவபெருமான் வழிபடபட்டார் என்பதும் அறியப்படுகின்றது.
துணைநின்ற நூல்கள்
அகநானூறு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், 2007.
திருமுறைகள் 1-7, தருமபுர ஆதீனம், 1964.
நளினி.மு, கலைக்கோவன். இரா, மதுரை மாவட்டக் குடைவரைகள், டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையம்,திருச்சிராப்பள்ளி, 2007.
பரிபாடல், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், 2007.
மதுரைக்காஞ்சி (பத்துப்பாட்டு), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், 2007.
கூடுதல் தரவுகளுக்கு
தமிழ் இலக்கியங்களில் திருப்பரங்குன்றம்
கலைநோக்கில் திருப்பரங்குன்றம்
* Image - Attribution: Kramasundar at the English-language Wikipedia
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.,