முன்னுரை

மகாகவி பாரதியார் அனைத்துத் துறைகளிலும் சொல், பொருள், வளம், கலை ஆகியவற்றைப் புதிய நோக்கில் தமது படைப்புகளில் தமிழுலக்கு அறிமுகப்படுத்தினார். தாம் வாழ்ந்த முப்பத்தொன்பது ஆண்டுகளில் (1882 - 1921) தமிழ் மொழிக்குப் புதுப்பொலிவையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தினார். இத்தகைய பரிமாணங்களோடு விளங்கிய இக்கவிஞரிடம் காணப்படுகின்ற மற்றொரு வியத்தகு ஆற்றல் வடிவமே கல்வி குறித்து அவர் கொண்டிருந்த சிந்தனைகளாகும்.

நாடு பூரண முன்னேற்றம் காணுவதற்கு அடிப்படையாது கல்வி மட்டுமே என்பதை வலியுறுத்தி அக்கல்வியை மக்கள் அனைவரும் பெறுவதற்கான கொள்கைகளையும் வழிமுறைகளையும் சிந்தனைகளின் வாயிலாக வெளிப்படுத்துகிறார்.

தாய்த்திரு நாட்டையும், தாய் மொழியையும் பெறுவதற்கான முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்டிருந்தவர் பாரதி. அதற்கு கல்வியே அடிப்படையானது என்பதை உணர்ந்து அக்கல்வியை மக்கள் அனைவரும் வழிமுறைகளைத் தனது சிந்தனையினின்று கவிதை வாயிலாக வெளிப்படுத்தியவர். பாரதியின் கல்வி குறித்த சிந்தனையில் புதுமை மிகுந்திருக்கிறது. அவர் எடுத்துரைத்துள்ள கல்வி தொடர்பான கருத்துக்களை ஆராய்ந்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பழந்தமிழ் இலக்கியங்களில் கல்வி

கல்வியின் சிறப்பு, பெருமை, பயன், கல்வி கற்கும் முறை இவற்றை மையப்படுத்திப் பழந்தமிழ் இலக்கியங்களில் சான்றாக, ஏராளமான செய்யுள்கள் உள்ளன. சான்றாக,

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வரும் என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நூற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே? (புறம்.183)

என்ற பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் புறநானூற்றுப் பாடல் அவன் காலத்து மக்களுக்குக் கல்வியின் பெருமையை வலியுறுத்தும் பொருட்டு இயற்றப்பட்டது. கல்வியினால் ஏற்படும் நன்மையை நாலடியார்,

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழுகும்
மஞ்சள் அழகும் அழகல்ல; நெஞ்சத்து
நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி யழகே அழகு (நாலடி. 131)

என மனத்தில் நல்ல எண்ணங்கள் தோன்றக் கல்வி உறுதுணை செய்கிறது என்றும் அழகூட்டுகிறது என்றும் என கூறுகிறது. அதனை,

பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்.
எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் (பாரததேசம்)

உணர்ந்து தான் கல்வி பயிலும் பள்ளிகள் கோயில்களுக்கு ஒப்பானவை என்று கூறுகிறார் பாரதியார்.

பாரதி காலக் கல்வி சூழல்

ஆங்கிலேயர் நம்மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த போது, அவர்களை எதிர்க்கும் முக்கியக் கருவியாகக் கல்வியைக் கருதினார் பாரதி. அதிகார பலத்தைக் கொண்டு இந்தியாவை நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியாது எனக் கருதிய ஆங்கில அரசு மெக்காலேயின் கல்வித் திட்டத்தைத் தீவிரப்படுத்தியது. ஆங்கிலக் கல்வியைப் பயில்பவர்கள் சமூக மதிப்பைப் பெற்று வாழ்க்கையில் மேன்மை அடைவர் என்ற போலித்தனமான எண்ணம் உருவாக்கப்பட்டது. இதன் பின் விளைவுகளை உணராதப் பொதுமக்கள் மாயவலையில் சிக்கினர்.

ஆட்சியாளர்களின் தேவைக்கேற்பக் கல்விக் கொள்கையைத் தாமசு பாரங்டன் மெக்காலே இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் தோலின் நிறத்திலும் இரத்தத்திலும் இந்தியர்களாக இருப்பினும் ஆங்கில மேல் நாட்டு கல்வித் திட்டத்தால் எண்ணங்களிலும், அறிவிலும், கருத்துக்களிலும் நடை, உடை, பாவனைகளிலும், நீதி அறிவதிலும் ஆங்கில உணர்வுள்ள இனம் இந்தியாவில் ஏற்படும். இந்த இனம் ஆங்கிலேயர்க்கு உதவும் என உரையாற்றினார் பாரதி ஆங்கிலேயர்களின் இந்த அரசியல் தந்திரங்களை முறியடிப்பதற்காகத் தேசியக் கல்வியை முன் வைத்தார்.

கல்வியின் அவசியம்

மனத்தினைப் பண்புடையவனாக வாழவைப்பது கல்வி. நம் நாட்டு மக்கள் உரிமை இழந்து ஆங்கிலேயரின் அடிமைத்தனத்தில் வாழும் அவல வாழ்வைப் பார்த்த பாரதி மக்களுக்குச் சுதந்திர உணர்வு ஏற்பட வேண்டுமானால் அவர்கள் கல்வி பெற வேண்டும் என்று உணர்ந்தார்.

பயிற்றிப் பலகல்வி தந்து இந்தப்
பாரை உயர்ந்திடவேண்டும் (முரசு)

மனத்தின் ஐயங்களையும், அச்சங்களையும் அகற்றவும் மக்கள் மேம்பாடு அடையவும் கல்வியே துணை செய்யும் என்று அறிந்தார். எனவே கற்றலின் அவசியத்தை மக்களுக்கு அறிவுறுத்தினார்.

கல்விக்கு அடித்தளம்

பிஞ்சு நெஞ்சங்களில் கல்வியை விதைத்தார். இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள். அவர்கள் மனத்தில் நல்லவற்றை ஏற்கும் போது நாடு வளர்ச்சியுறும்.

எனவே பாப்பா பாட்டின் மூலம்,
காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலைமுழுதும் விளையாட்டு என்று
வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா (பாப்பா பாட்டு)

என்று அனைத்துக் கல்வியையும் வலியுறுத்தினார். கல்வியின்பால் அனைவரும் தம் மனத்தைச் செலுத்த வேண்டும் என்கிறார். தவமிருந்து பெறவேண்டிய கல்வியை இவ்வுலகில் நிலைபெறச் செய்ய வேண்டும் என்ற தன் விருப்பத்தை கல்வியினால் எடுத்துரைக்கிறார்.

மக்கள் அனைவரும் அனைத்துத் திறமையினையும் பெற்றவர்களாகவும் தீமையற்ற தொழில்புரிந்து. தேர்ந்த கல்வி ஞானம் பெற்றவர்களாகவும் இந்நாட்டில் வாழவேண்டும் என்றும் ஆசைப்பட்டார். கல்வி செல்வத்தினை அனைவரும் எய்தி மனமகிழ்ந்து ஒருநிகர் சமானமாக வாழவேண்டும் என்று விரும்பினார். தனிமனிதனின், நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியே அடித்தளம் என்று கண்டார்.

பெண் கல்வி

பெண்கல்விக்குக் குரல்கொடுத்த பாரதி, தான் காணும் சமுதாயத்தில் தன் கண்ணெதிரே தீமை நடக்கக் கூடாது. அடிமைகள் போன்று நடத்தப்படும் பெண்சமுதாயத்தின் நிலையை மாற்றியே தீரவேண்டும் என்ற செயல்பட்டு வெற்றி கண்டார்.'

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சிலமூடர் நல்ல
மாதரறிவைக் கெடுத்தார்
கண்களிரண்டி னிலொன்றைக் குத்திக்
காட்சிக் கெடுத்திடலாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் வையகம்
பேதமை யற்றிடும் காணீர் (முரசு)

இவ்வுலகமானது அறியாமையிலிருந்து விடுபட ஒரேவழி பெண்கல்வி பெற்ற சமுதாயத்தை உருவாக்குவதே என்பதை எடுத்துரைத்தார்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் (பெண் விடுதலைக் கும்மி)

என்று தன் உரிமைகளைத் தானே பெறுபவளாகப் பெண்ணைக் காட்டினார். வீரப்பெண்களின் சரித்திரம் பெண்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்று குறிப்பிடுகிறார்.

தொழிற்கல்வி

தொழிற்கல்வியல் முன்னேற வேண்டும். அதற்கு இரும்பைக் காய்ச்சிப் புதிய இயந்திரங்கள் செய்ய முற்பட வேண்டும். கல்வி பெருக்குதற்கு காகித உற்பத்தியினையும். கல்விச்சாலைகள் வைத்தலையும், பெரிய பெரிய ஆலைகள் அமைத்தலையும் ஓய்வில்லாமல் உழைப்பதையும் செய்தல் வேண்டும் என்கிறார்.

இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே
யந்திரங்கள் வகுத்திடு வீரே
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே
கடலில் மூழ்கிநன் முத்தெடுப் பீரே
அரும்பும் வேர்வை உதிர்ந்து புவிமேல்
ஆயிரந்தொழில் செய்திடு வீரே (தொழில்)

இங்கு தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டிய பாரதி. தொழிலாளரின் முயற்சியையும் போற்றத் தவறவில்லை.

உடற்கல்வி

நம் மனமும் உடலும் சிறப்பாகச் செயல்படுவதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். நலமான வாழ்வே அனைத்திற்கும் ஆதாரம் என்பதை உணர்ந்து உடற்கல்வியினை வலியுறுத்துகிறார். பாப்பா பாட்டில் ஓடி விளையாட வேண்டும். கூடி விளையாட வேண்டும், ஓய்ந்திருக்கலாகாது, சோம்பல் மிகக் கெடுதி என்றெல்லாம் பாப்பாவுக்கு உடற்கல்வியை வலியுறுத்துகிறார். இளைத்தல் இகழ்ச்சி, சிதையா நெஞ்சு கொள், உடலினை உறுதிசெய் என்று உடற்கல்வி இன்றியமையாதது என்று வலியுறுத்துகிறார்.

மேலும், ஒளிபடைத்த கண்ணும், உறுதி கொண்ட நெஞ்சும், களிபடைத்த மொழியும், கடுமை கொண்ட தோளும், தெளிவு பெற்ற மதியும் உடல் உறுதியினைப் பெற்றால் மட்டுமே பெறமுடியும் என்பதை உணர்த்தியவர்

தோளை வலிமையுடையதாக்கி உடற்
சோர்வும் பிணிபலவும் போக்கி – அரி
வாளைக் கொண்டு பிளந்தாலும் – கட்டு
மாறா உடலுறுதி தந்து – சுடர்
நாளைக் கண்டதோர் மலர்போல் – ஒளி
தண்ணிதிகழு முகம் தந்து – மத
வேளை வெல்லுமுறை கூறித்-தவ
மேன்மை கொடுத்தருளால் வேண்டும் (யோக சக்தி)

என்று உடலும் உள்ளமும் உறுதிபெற வேண்டும் என்பதை விரும்பிக் கேட்கிறார்.

வேளாண் கல்வி

உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பதற்கிணங்க மக்களின் உணவுத் தேவையினைப் பூர்த்தி செய்யும் வேளான் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

உண்ணக் காய்கனி தந்திடுவீரே
உழுது நன்செய் பயிரிடு வீரே
எண்ணெய் பாலநெய்கொணர்ந்திடு வீரே
இழையை நூற்றுநல் லாடைசெய் வீரே (தொழில்)

என்ற பாடலில் வேளாண் தொழிலைக் குறிப்பிடுகின்றார். உழவுத் தொழிலின் மூலம் காய் கனி வகைகள், பயிறு வகைகள் தானிய வகைகள் முதலியவற்றை விளைவித்து நாட்டின் உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்கிறார். வேளாண்மைக்கும், உணவுக்கும் பெரிதும் உதவும் கால்நடை வளர்ப்பின் முக்கியத்துவதையும் எடுத்துரைத்துள்ளார். தாய்மொழிக் கல்வி

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம் என்று தமிழின் மேன்மையை உணரச்செய்தவர் பாரதி. அழியாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் என்ற தமிழ்வளர்க்க வழிவகுத்தவர்.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத்
தொழுது படித்திடடி பாப்பா (குழந்தைப் பாடல் )

தமிழின் மேன்மையை உணர்த்தியவர்.

பல்துறைக் கல்வி

பாரததேசம் பற்றிய பாடலில் வானை அளப்போம் கடல் மீனை அளப்போம், சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம். காடு வளர்ப்போம், காவியம் செய்வோம் கலை வளர்ப்போம்.

பாட்டும் செய்யுளும் கோத்திடுவீரே
பரதநாட்டியம் கூத்திடு வீரே
காட்டும் வையப் பொருள்களின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்திடு வீரே (தொழில்)

என்று கணக்கற்ற கல்வி வளர கனவு கண்டு நனவாக்கியவர் எட்டுதிக்கும் சென்று கலைச் செல்வங்கள் அனைத்தையும் தமிழில் கொண்டு சேர்த்துத் தமிழை வளப்படுத்த வேண்டும் என்று விரும்பியவர். மண்பாண்டங்கள் செய்தல் வேண்டும். மரத்தினை வெட்டி வீடுகள் செய்தல் வேண்டும் என்று இயற்கைக்கும் மனிதனுக்கும் பாதிப்பில்லாத வாழ்க்கை முறையினை எடுத்துரைக்கிறார்.

முடிவுரை

வீடுதோறும் கலையின் விளக்கம்
வீடுதோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்க ளெங்கும்பல பல பள்ளி
தேடு கல்வி இல்லாத ஊரைத்
தீக்கிரையாக மடுத்தல்" (வெள்ளைத் தாமரை)

என்று ஊரும் நாடும் சிறந்து விளங்க வேண்டுமெனில் அங்கு பாடசாலைகள் வேண்டும் என புதுக்குரல் கொடுத்தவர். மேலும் உயர்கல்வி, வெற்றிதரும் வீரம், அறிவு, ஆண்மை இவை வேண்டுமென்று விரும்பியவர். அதே போன்று கவலை அறச்செய்து, மதிதன்னை மிகத் தெளிவு செய்து என்றும் மகிழ்ச்சி கொண்டிருக்க வேண்டும் என்றும் விழைகிறார். தானம், வேள்வி, தவம், கல்வி அனைத்தும் இவ்வுலகினில் நிலைப்பெறச் செய்வேன் என்றும் கூறுகிறார். பயிற்சி பல கல்வி தந்த இப்பாரினை உயர்த்திட வேண்டும் என்று தனிமனிதனும் பாரதமும் உயர்ந்திட தேவையான அனைத்துக் கல்வியையும் எடுத்துரைத்தவர் பாரதி.

துணை நின்ற நூல்கள்

 பாரதியார், பாரதியார் கவிதைகள், வானவில் பிரசுரம், சென்னை.
 புலியூர் கேசிகன், புறநானூறு, சாரதா பதிப்பகம், சென்னை.
 புலவர் சிவஞானம், நாலடியார், விஜயா பதிப்பகம், கோவை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.