
கட்டுரையாசிரியர்: -கலாநிதி செல்லத்துரை சுதர்சன், தமிழ்த்துறை, பேரதனைப் பல்கலைக்கழகம்
அறிமுகம்
சைமன் காசிச்செட்டி (1807-1860) அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூல் The Tamil Plutarch.. அந்நூலின் விரிவுப் பெயர் The Tamil Plutarch Containing A Summary Account of The Lives of The Poets and Poetesses of Southern India and Ceylon from the Earliest to the Present time, with Select Specimens of Their Compositions என்பதாகும். இது, 1859ஆம் ஆண்டு வெளிவந்தது. இதனை Jaffna: Ripley & Strong Printers என்ற நிறுவனம் வெளியிட்டது. இந்த நூற்பெயர் தொடர்பாக, சுவாமி விபுலானந்த அடிகளின் எழுதிய சிறு குறிப்பு ஒன்றை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
அடிகளார் கண்ணுற்ற அஞ்சலி
இந்த நூலின் இரண்டாம் பதிப்பு 1946 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதனை, Colombo: The General Publishers Ltd என்ற நிறுவனம் வெளியிட்டது. சுவாமி விபுலானந்த அடிகள் இந்த நூற்பெயரில் ஓர் அஞ்சலியைக் கண்ணுற்றுள்ளார். இரண்டாம் பதிப்பிற்கு, அடிகளார் ஆங்கிலத்தில் வழங்கிய அணிந்துரையில், அதனைப் பதிவுசெய்துள்ளார். அதன் தமிழாக்கம் வருமாறு:
'இந்தப் படைப்பிற்கு ஆசிரியர் வழங்கிய பெயர், பண்டைய கிரேக்க மற்றும் ரோமின் உயர் மானுடர்களின் இணையான வாழ்க்கையை எழுதிய, புகழ்பெற்ற ஆசிரியருக்கு ஓர் அஞ்சலியாக இருக்கலாம்' (16.12.1946)
அடிகளாரின் கூற்றில் புலப்படுவது யாதெனில், சைமன் காசிச் செட்டியது புலவர் சரித நூற் பெயரில் வரும் Plutarch என்பது ஒரு ஞானியின் பெயர் என்பதே. செட்டி அவர்கள் தமது நூலில் அந்த ஞானியின் பெயரைக் குறிப்பிடவில்லை என்பதையும் மனங்கொள்ளல் வேண்டும்.
எச்சங்களை மீட்டலும் வளப்படுத்தலும்
வாழ்க்கைச் சரிதத்தை, ஓரளவாவது அறிவியல் ரீதியாக எழுதும் பழக்கத்தை, காலனிய கால ஆங்கிலக்கல்விமுறையே ஏற்படுத்தியது. அதற்கு முன்னர், எழுத்துநிலையிருந்த புலவர்களின் வரலாறுகள், பெரும்பாலும் புராணக் கவிதைகளாக அமைந்தவை. அதனால், புனைவுகளின் பின்னல்களை அதிகம் பெற்றவை. நாமறிந்தவரையில், ஈழத்தில் புலவர்கள் குறித்த புராணங்கள்கூடத் தோன்றவில்லை.
காலனிய காலத்தில்தான், புலவர்களது நாமாவளிகளை அகரவரிசைப்படுத்தி, தொகுத்து, சரிதம் எழுதும் முயற்சி முளைகொண்டது. பிரபந்தங்களில் அமையும் குரவ வணக்கச் செய்யுட்கள், சிறப்புப் பாயிரங்கள் ஆகியவற்றில் நூலாக்கியோன் மரபைச் சொல்லும் செய்திகளும், புலவர்களின் நூல்கள் குறித்த பத்திரிகை விளம்பரச் செய்திகளும் அவற்றுக்குத் துணைசெய்தன. மேலை அறிவுச் செல்வத்தால் தமிழை வளமாக்கச் சரிதங்கள் எழலாயின. சைமன் காசிச் செட்டி தமது நூல் முன்னுரையில் கூறும் பின்வரும் செய்தி கவனத்திற்குரியது.
'அரசாங்கமும் கிறிஸ்தவ மிசனரிகளும் நிறுவிய தாய்மொழிப் பள்ளிகள் மூலம், தமிழ் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கான அனைத்து வசதிகளும் கிட்டியுள்ளன. வலிமைமிக்க சாதனமான பத்திரிகை, மற்றைய இடங்களைப் போலவே, இந்தியாவிலும் மிகப்பெரிய ஆசீர்வாதத்தை நிரூபித்துள்ளது... ஒருபுறம் பண்டைய பூர்வீக இலக்கியத்தின் எச்சங்களை மறதியிலிருந்து மீட்பதன் மூலமும், மறுபுறம் ஐரோப்பியக் கலை மற்றும் அறிவியல் பற்றிய ஏராளமான வெளியீடுகளால் அதை வளப்படுத்துவதன் மூலமும்.' (1859:எ)
பண்டைய இலக்கிய எச்சங்களை வரலாற்றின் மறதியிலிருந்து மீட்டலும், மேலை அறிவின் துணைகொண்டு நவீன யுகத்துக்கான தமிழைத் தகுதிப்படுத்தலுமான செயற்பாடுகளுள் ஒன்றாகப் புலவர் சரிதவியலையும் காணவியலும்.
- சைமன் காசிச் செட்டி -
கைவிட எண்ணிய முயற்சி
சைமன் காசிச் செட்டி அவர்கள், புலவர் சரிதம் எழுதும் முயற்சியை ஆரம்பித்து, விடயதானங்கள் போதாமையால், அந்த முயற்சியைக் கைவிட எண்ணியுள்ளார். இதனை, அவரது முன்னுரையின் பின்வரும் பகுதி உணர்த்துகிறது.
'நமது புலவர்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு மதிப்பீட்டை மக்களுக்கு வழங்குவது எனது நீண்டகால நோக்கம். ஆனால், பண்டைய அல்லது நவீன தமிழில் வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகள் இல்லை. விடயதானங்களைப் பெறுவதில், அவர்களுக்கு ஏற்பட்ட அநேக சிரமங்களே அதற்குக் காரணம். நான் கணக்கிட்டதைவிடவும் அவை அதிகமானவை. இந்த முயற்சியைக் கைவிடலாம் எனக் கிட்டத்தட்ட முடிவு செய்தேன்.' (1859:எ)
முயற்சியைக் கைவிட எண்ணியவர், பின்பு அதனைத் தொடர்ந்து வெற்றிகரமாக நிறைவேற்றியமைக்கான காரணம் எதுவென எண்ணும்போதுதான், இக்கட்டுரையின் ஆரம்பத்தில், விபுலானந்த அடிகளார் ஆங்கிலத்தில் எழுதிய அணிந்துரையில் வரும் அஞ்சலி குறித்த செய்தி துணைசெய்கிறது. இச்செய்தியை அகராதி மற்றும் வரலாற்றின் துணைக்கொண்டு, சற்று ஆழ்ந்து நோக்கலாம்.
Plutarch என்பது சீமான்
Plutarch எனும் சொல் ஆதி கிரேக்க மொழியிலிருந்து உருவாகிய சொல். சொற்பிறப்பு அகராதியின் துணைக்கொண்டு நோக்குகையில், ஆதி கிரேக்க மொழியில் உள்ள ploutos, arkhos ஆகிய இரு சொற்களின் இணைப்பாகத் தோன்றிய சொல்லே, Plutarch என்பது தெரிய வருகிறது. (Oxford Dictionary of English Etymology)
ploutos என்னும் கிரேக்கச் சொல், வளம் அல்லது செல்வம் (Rich or Wealth) என்பதைக் குறித்து நிற்கிறது. arkhos என்ற கிரேக்கச் சொல். அரசன் அல்லது ஆள்பவன் (Ruler or Master) என்பதைக் குறித்து நிற்கிறது. இவ்விரு சொற்களும் இணைந்து உருவானதே Plutarch எனும் கிரேக்கச் சொல். (Oxford Dictionary of English Etymology)
Plutarch என்பதன் நேரடி அர்த்தம் செல்வத்தின் அரசன் அல்லது செல்வச் சீமான் (Wealthy master or Ruler of riches) என அமைகிறது. நாம் 'சீமான்' எனக் குறித்துக்கொள்ளலாம். Plutarch என்பது ஒரு பெயர்ச்சொல் என்பதும் இப்போது தெளிவாகிறது.
வாழ்க்கைச் சரிதவியலாளர் Plutarch
மேற்குறித்த புரிதலுடன் விபுலானந்த அடிகளார் கூற்றில் உள்ள செய்தியை நோக்கலாம். Plutarch என்பவர் கிரேக்கத் தத்துவஞானிகளுள் ஒருவர். புகழ்பெற்ற வாழ்க்கைச் சரிதவியலாளராக நன்கறியப்பட்டவர். Lucius Mestrius Plutarchus. என்பது அவரது முழுப் பெயர். அவர் கி.மு. 46-120 காலப்பகுதியில் வாழ்ந்தார் என்பது வரலாற்றாசிரியர்கள் பலரதும் பொதுவான கருத்து.
அவர் எழுதிய Parallel Lives என்ற நூல், புகழ்பெற்ற நூல்களுள் ஒன்று. அது, தொல்சீர் கிரேக்க மற்றும் ரோமானியர்களின் வாழ்க்கைச் சரிதத்தை விபரிக்கிறது. குறிப்பாக, புகழ்பெற்ற கிரேக்க மற்றும் ரோமானியர்களின் வாழ்க்கைச் சரிதத்தை இணைத்து, அவற்றின் தார்மீகப் பண்புகளையும் குறைகளையும் ஒப்பிட்டுப் பேசுகிறது. இரு வரலாறுகளின் மனித இயல்பின்மீது, இந்நூல் வெளிச்சம் பாய்ச்சுகிறது.
செட்டி கண்ட Plutarch ஞானி
இதுவரை நோக்கியவற்றால், சைமன் காசிச் செட்டி அவர்கள், தமிழுக்கு நன்கொடையாக The Tamil Plutarch என்பதை அளிக்க, ஊக்கியாக அமைந்தவர், கிரேக்க வாழ்க்கைச் சரிதவியலாளரான Plutarch என்பவரே எனத் தெளிவாகிறது.
ஐரோப்பிய நாகரித்தின் தொட்டில் எனப் புகழ்பெறும் தொல்சீர் கிரேக்க மற்றும் ரோமானிய வாழ்க்கைச் சரிதவியல்; நூலான Parallel Lives எனும் நூலால் உந்தப்பெற்றமையாலேயே, சைமன் காசிச்செட்டி தமது நூற்பெயரின் பின்னொட்டாக கிரேக்க ஆசிரியரின் பெயரை இட்டார் எனத் தோன்றுகிறது. தமிழில் ஒரு புதுமுயற்சியைத் தொடங்கும்போது அவருக்கிருந்த, பரந்து விரிந்த உலக வரலாற்றுப் பார்வையும் இதனூடு புலனாகிறது.
கற்பனைகளைக் கழுவுதல்
Plutarch எழுதிய Parallel Lives என்பது அவருக்குக் கைகொடுத்துள்ளது. தமிழில் கற்பனைகள் விரவிக் கலந்த புலவர் குறித்த கதைகளிலிருந்து, ஓரளவாவது சரித்திரக் குறிப்புக்களை எடுத்தாக வேண்டும் என்றநிலையில், சைமன் காசிச் செட்டிக்கு, Plutarch எழுதிய Parallel Lives கைகொடுத்துள்ளது. எனவே அவர், கிரேக்க, ரோமானியக் கதைகளைக் கழுவி, வாழ்க்கைச் சரிதம் வடிக்கும் முயற்சி போன்ற ஒரு முயற்சியை முன்மாதிரியாகக் கொண்டு தமது முயற்சியைத் தொடர்ந்தார். அதனை அவரே பின்வருமாறு கூறுகிறார்.
'கீழைத்தேய மக்களிடையே நிலவும் வாழ்க்கை வரலாறு பற்றிய கதைமரபுகள், அகமகிழ்வுக்குரிய கற்பனையான மற்றும் அலங்காரமான சேர்க்கைகள், கவனமாகச் சேகரிக்கப்பட்டு, அவதானமாகப் பிரிக்கப்பட்டால், விரும்பிய தகவல்களை வழங்கும் என நம்பினேன். அந்த நம்பிக்கையால், அந்த அறிவு மூலத்தில் என் கவனத்தைச் செலுத்தத் தூண்டப்பட்டேன்.' (1859:எ)
இத்தகைய எல்லாச் சீரின்மைகளின் விளைவு இப்போது மக்கள் முன் உள்ளது. இந்தப்படைப்பு இந்த வகையான எனது முதல் முயற்சியாக இருந்தாலும், எனது விழிப்புணர்வையும் மீறிய பல தவறுகளுக்கும் உட்பட்டதாக இருக்கலாம். இதற்காக நான் வாசகர் மற்றும் விமர்சகரின் அன்பைக் கோருகிறேன். (1859:எ)
அகர வரிசையில் புலவர்கள்
தமிழ்ப் புலவர் சரிதங்களைத் தொகுத்து அகர வரிசையில் கூற எழுந்த முதன் முயற்சியே, சைமன் காசிச் செட்டியின் முயற்சி. இது ஆங்கில மொழியில் எழுதப்பட்டது. அகஸ்தியரிலிருந்து யாழ்ப்பாண நாயனார்வரை 196 புலவர்களின் வரலாற்றுக் குறிப்புகளை 138 பக்கங்களில் இந்நூல் கொண்டுள்ளது.
புலவர்களுடன் தொடர்பான அறிஞர்கள் பற்றியும் வருவதால் எல்லாமாக 202 புலமையாளர்களை இந்நூல் விபரிக்கிறது என்பார், பொ. பூலோகசிங்கம் (2001:ஒiii-ஒiஎ). இதில் 189 புலவர்கள் தமிழ்நாட்டவர்கள். 13 புலவர்கள் ஈழத்தவர்கள். ஈழத்துப் புலவர்களில் சேனாதிராயர், சின்னத்தம்பி ஆகிய இருவருக்கும் ஒவ்வொரு பாடல் இடம்பெற்றுள்ளது.
தமிழ்ச் சூழலில் முதல் முயற்சி
தமிழ்ப் புளூராக்கின் இரண்டாவது பதிப்பிற்கு, சுவாமி விபுலானந்தர் ஆங்கிலத்தில் எழுதிய அணிந்துரையில், இந்த நூலைத் தமிழ்ச் சூழலின் முதலாவது முயற்சியாக அடையாளம் காண்கிறார். அத்துடன், தமிழ் இலக்கியக் கல்விக்குப் பயன் சேர்க்கும் நூலாக இது அமைகிறது எனக் கூறுவதோடு, தமிழ்க் கவிதைகளைச் செம்மையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் நூலாசிரியரின் மொழித் தேர்ச்சியையும் வியக்கிறார். அதன் தமிழாக்கத்தை இங்கு தரலாம்.
'தென்னிந்தியா மற்றும் இலங்கையின் கவிஞர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைச் சுருக்கமான விவரணையை சைமன் காசிச்செட்டி என்பவர் எழுதிய தமிழ்ப் புளூராக் முதன்முறையாக 1859இல் வெளிப்படுத்தியது... தமிழ் இலக்கியத்தைக் கற்கும் மாணவர்கள் நிச்சயமாக அதைப் படிப்பதன் மூலம் மகிழ்ச்சியையும் பயனையும் பெறுவார்கள். எடுத்துக்காட்டப்பட்ட தமிழ்க் கவிதைகளின் சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஆசிரியரின் ஆங்கில மொழியின் தேர்ச்சியை வெளிப்படுத்துகின்றன. (16.12.1946)
முடிவுரை
தமிழின் சீமான்களான, தமிழ்ப் புலவர்களின் வரலாற்றைச் சரிதமாக எழுதிய சைமன் காசிச் செட்டியை, முதலில் ஆழமாகவும் விரிவாகவும் ஆய்ந்தவர், பொ. பூலோகசிங்கம் அவர்கள். அவர் தனது நூலான, 'தமிழ் இலக்கியத்தில் ஈழத்தமிழறிஞரின் பெரு முயற்சிகள்' என்ற நூலில், 'சைமன் காசிச்செட்டி அவர்கள் தந்த தமிழ்ப் புலவர் சரிதம்' என்ற கட்டுரையில், இது பற்றித் தொட்டுச் செல்கிறார். 'தமிழ் புளூராக் என்னும் நூலே, தமிழ்ப் புலவர்களின் சரிதங்களை ஒரே நூலாகக் கூற எழுந்த முதல் நூலாகும்' (2002:4) என்பது அவர் துணிபு. தமிழ் எனும் செல்வத்தை ஆண்ட சீமான்கள், தமிழ்ப் புலவர்கள். அந்தச் சீமான்களின் சரிதைதான் The Tamil Plutarch!
உசாத்துணைகள்
Simon Casie Chitty (1859) The Tamil Plutarch, Containing A Summary Account of The Lives of The Poets and Poetesses of Southern India and Ceylon from the Earliest to the Present time, with Select Specimens of Their Compositions, Jaffna: Ripley & Strong Printers.
Simon Casie Chitty (1946) The Tamil Plutarch, Containing A Summary Account of The Lives of The Poets and Poetesses of Southern India and Ceylon from the Earliest to the Present time, with Select Specimens of Their Compositions, Colombo: The General Publishers Ltd.
பூலோலகசிங்கம், பொ. (2002) தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெரு முயற்சிகள், கொழும்பு – சென்னை: குமரன் பத்தக இல்லம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.