கட்டுரையாளர்: முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,

முன்னுரை

தமிழ்மொழி இனிமையானது. பழமையும், தொன்மையும் வாய்ந்தது. இலக்கியவளம், இலக்கணச் செழுமை கொண்டது. செம்மொழி பெருமை நிலை கொண்டது. சொல்வளம் நிறைந்தது. ஒரு சொல்லுக்குப் பல பொருளும், பல சொல்லுக்கு ஒரு பொருளும் தரும் ஒரு அற்புதமான மொழி நம் கன்னித்தமிழ். இதுபற்றி தருவது நிகண்டுகளாகும். திவாகரநிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு, கயாதர நிகண்டு என்று பல நிகண்டுகள் உள்ளன. அரசன் என்ற சொல்லைத் திரும்பத்திரும்ப பயன்படுத்தாமல் அதே பொருள்தரும் பல சொற்கள் தமிழிலே இருப்பதால் அவை அனைத்தையும் கம்பர் தம் காப்பியத்தில் பயன்படுத்தியுள்ளார். புரவலன், கொற்றவன், பெருமான், காவலன், அரையன், ஏந்தல், கோவே,குரிசில், தலைவன், மன்னவன்,வேந்தன், முதல்வன், நிருபன்,பூபாலன், நரபதி, பார்த்திவன், இறைவன், அண்ணல் எனப் பதினெட்டுச் சொற்களும் அரசன் என்ற ஒரு சொல்லைக் குறிக்கும். கம்பராமாயணத்தில் இச்சொற்கள் எவ்வாறு இடம் பெற்றுள்ளன என்று குறித்து ஆராய்வோம்.

நிகண்டு -அரசன்

"புரவலன், கொற்றவன்,பெருமான், காவலன்
அரையன், ஏந்தல், கோவே,குரிசில்
தலைவன், மன்னவன்,வேந்தன், முதல்வன்
நிருபன்,பூபாலன், நரபதி,பார்த்திவன்
இறைவன், அண்ணல் எனப்பதினெட்டும்
அரசன் தொல்பெயர் ஆகும் என்ப"
(சேந்தன் திவாகரம்- மக்கட் பெயர்த் தொகுதி-கஅ)

அரசர்

சந்திரசைலப் படலத்தில் மங்கையரும் மைந்தரும் மயங்கித் திரிந்தனர். நடனம் செய்யும் மயில் போல நடந்து வருகின்ற மானின் பார்வை பெற்ற மங்கையரும், கூராக்கப்பட்ட வடிவேலையுடைய வாலிப வீரர்களும் தம்முள் கலந்து திரிந்தனர். இடி போல அதிரும் முரசொலியாலும் சங்குகளின் ஒலியாலும், உயர்த்தப்பட்ட கொடிகளாலும் அரசன் இருக்கும் இடம் இதுவே என்று அறிந்து தசரதன் தங்கிய இடத்தைச் சிலர் அடைந்தனர்.

“நடிக்கும் மயில் என்ன வரும் நவ்விவிழி யாரும்
வடிக்கும் அயில் வீரரும் மங்கினர் திரிந்தார்
இடிக்கும் முரசக் குரலின் ஏங்கும் முரல் சங்கின்
கொடிகளின் உணர்ந்து அரசர் கோநகர் அடைந்தார்”
(சந்திரசைலப்படலம் 776)

புரவலன்

மந்திரப்படலத்தில் இலட்சுமணனுடன் இராமன் தயரதன் இருந்த இடம் சேர்தல் குறித்துக் கூறும்போது இராமன் வீதி வழியே வந்தபோது மகளிர் இராமனைக் கண்டு ஏங்கி நின்றனர். ஆடவர் அனைவரும் தாய்ப் பசுவை நினைத்த கன்றைப்போல நின்று மனம் மகிழ்ந்தனர். தூயவனாகிய இலட்சுமணனும் தானுமாகச், சுமந்திரனது தேரிலே சென்று, மனம் மகிழும் தசரதன் இருக்கும் இடத்திற்குள் நுழைந்தான்.

“ஆயது அவ்வழி நிகழ்தர ஆடவர் எல்லாம்
தாயை முன்னியகன்று என நின்று உயிர் தளிர்ப்ப
தூய தம்பியும் நானும் அச்சுமந்திரன் தேர்மேல்
போய் அகம் குளிர் புரவலன் இருந்துழிப் புக்கான்”
(மந்திரப்படலம் 57)

புரவலன் என்ற சொல் அரசன் என்ற பொருளிலேயே வந்துள்ளது.

கொற்றவன்

கடிமணப் படலத்தில் இராமன் மணமண்டபம் சேர்ந்து முனிவர்களையும், தந்தையையும் தொழுது தந்தையின் அருகில் அமர்தல் குறித்து கூறும்போது, உலகில் வாழும், வீசும் படைகளை உடைய வேந்தர்களின் கூட்டம் ஒருவரும் குறையாமல் யானைக் கூட்டம் போல சுற்றிலும் நிற்க, வெற்றி வேந்தன் தசரதன் வீற்றிருந்த திருமண மண்டபத்தைப் பகைவர் மீது சினம் கொள்ளும் வில்வித்தையிலே வல்லவனான இராமன் பெரிய மேருமலையை அடையும் சிவந்த கிரகணங்களை உடைய சூரியனைப் போலத் தேரில் சென்று சேர்ந்தான்.

“எஞ்சல் இல் உலகத்து உள்ள எறிபடை அரச வெள்ளம்
குஞ்சரக் குழாத்தின் சுற்ற கொற்றவன் இருந்த கூடம்”
(கடிமணப்படலம் 1183)

கொற்றவன் என்ற சொல் அரசன் என்ற பொருளிலேயே வந்துள்ளது.

பெருமான்

மிதிலைக் காட்சிப் படலத்தில் ஜனகன், மண்டபத்தில் முனிவர் முதலாயினார் சூழ வீற்றிருக்கும் காட்சி கூறும்போது மகுடம் சூடிய ஜனகன் எனும் பெரிய மன்னன் அப்போது வேதங்கள் கூறிய விதிகளின்படி வேள்வி செய்து முடித்தான். பிறகு இடி குரல் போன்ற முரசொலி எல்லாப் பக்கங்களிலும் முழங்க சந்திரனைத் தொட உயர்ந்த அரண்மனைக்குள் இந்திரன் போல நுழைந்தான். சிறந்த மணிகள் பதித்துக் கட்டப்பட்ட மண்டபத்தில் வீற்றிருந்தான். அங்கே சிறப்பாக மதிக்கப்படும் தவத்தை உடைய விசுவாமித்திரன் இருந்தான். முனிவனின் பக்கத்தில் புதுப் பூமாலை சூட்டப்பட்ட கட்டமைந்த வளையத்தக்கவில்லைக் கையில் ஏந்திய இராமனும் அவன் தம்பியும் இருந்தனர்.

“முடிச் சனகர் பெருமானும் முறையாலே
பெருவேள்வி முற்றி கற்றும்
இடிக்குரலின் முரசு இயம்ப இந்திரன் போல்
சந்திரன் தோய் கோயில் எய்தி”
(மிதிலைக் காட்சிப்படலம் 584)

பெருமான் என்ற சொல் அரசன் என்ற பொருளிலேயே வந்துள்ளது.

காவலன்

திரு அவதாரப் படலத்தில் தேவருக்குத் திருமால் அருளியதை வசிஷ்டன் தன் மனதுக்குள் சிந்திக்கும்போது, அரக்கர்களின் பேய்த் தேரைப் போன்ற மாய வாழ்வையும், பெற்றுள்ள வரத்தையும் இலக்குத் தவறாமல் எதிர்த்தோரின் உடலில் பாயும் சாரமுள்ள அம்புகளினால் தூளாக்கும் பொருட்டு, நான் யானை- தேர்- குதிரைகளாகிய படைக்கடலை உடைய தசரதனுக்கு மகனாக பூமியில் அவதரிப்பேன் என்று திருமால் கூறினார்.

“மசரதம் அனையவர் வரவும் வாழ்வும் ஓர்
நிசரத கணைகளால் நீறுசெய்ய யாம்
கசரத துரக மாக் கடல் கொள் காவலன்
தசரதன் மதலையாய் வருதும். தாரணி”
(திரு அவதாரப் படலம் 201)

காவலன் என்ற சொல் அரசன் என்ற பொருளிலேயே வந்துள்ளது.

ஏந்தல்

ஆறு செல் படலத்தில் பரதன், இராமனை அழைத்து வரவேண்டும் என்று கூறிய போது, அவையோர் பரதனைப் பாராட்டுகின்றனர். பெருமைமிக்க தசரதன் உயிரோடு இருக்கும் போதே இராமனும் இரத்தினம் பதித்த மகுடம் சூடுதலை ஏற்றுக்கொண்டான். சிறப்புமிக்க மன்னனே, நீயோ, தசரதன் இறந்த பின்னும் அவனது மறைவால் கிடைத்த அரசு செல்வத்தை வேண்டாம் என்று மறுத்துக் கூறுகிறாய். அரசகுலத்தில் தோன்றிய இளவரசர்களுள் உன்னைப்போல புகழுடன் தோன்றியவர் யாருலர் என்று பாராட்டினர்.

“ஆன்ற பேரரசனும் இருப்ப ஐயனும்
ஏன்றனன் மணிமுடி ஏந்த ஏந்தல் நீ
வான்தொடர் திருவினை மறுத்தி மன் இளந்
தோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார்”
(ஆறு செல் படலம் 944)

ஏந்தல் என்ற சொல் அரசன் என்ற பொருளிலேயே வந்துள்ளது.

கோ

திருஅவதாரப்படலத்தில் தேவர்க்குத் திருமால் அருளியதை வசிட்டன் தன் மனதிற்குள் சிந்தித்தான். முரசுகள் முழங்குகின்ற பெரிய அரண்மனை வாயிலையும், முத்துக்கள் பதித்த மணி முடியையும் உடைய தசரதச்சக்கரவர்த்தி அவ்வாறு கூறினான். அவன் கூறியதும் மணம் மிகுந்த தாமரை மலரின் பொகுட்டிலே தங்கிய பிரம்மனின் புதல்வனான வசிட்டன் தன் மனதில் நினைத்தான்.

“முரசு அறை செழுங் கடை முத்த மா முடி
அரசர் தம் கோ மகன் அனைய கூறலும்
விரை செறி கமல மென் பொகுட்டில் மேவிய
வர சரோருகன் மகன் மனத்தில் எண்ணினான்”
(திருஅவதாரப்படலம் 185)

கோ என்ற சொல் அரசன் என்ற பொருளிலேயே வந்துள்ளது.

குரிசில்

இராம- இராவண யுத்தம் முடிந்த பிறகு, இராமன் தேவரிடம் வரம் கேட்கும்போது, தேவர்களின் கூட்டங்கள் வளைக்கின்ற நீண்ட வில்லைக் கொண்ட பெருந்தகையான இராமனைத் திரும்பவும் பார்த்து ’வீரனே நீ விரும்பிய வரங்களை எம்மிடம் கேட்பாயாக’ என்று சொல்ல இராமன் ’எடுத்துச் சொல்வதற்குரிய போரில் அரக்கர்கள் அழித்த, உயிரிழந்த குரங்குகள் எல்லாம் உயிர்ப் பெற்று எழுதல் வேண்டும்’ என்று வரம் கேட்டான்.

“கோட்டு வார்சிலைக் குரிசிலை அமரர் தம் குழாங்கள்
மீட்டும் நோக்குறா வீர நீ வேண்டுவ வரங்கள்
கேட்டியால் என அரக்கர்கள் கிளர் பெருஞ்செருவில்
வீட்ட மாண்டுள குரங்கு எலாம் எழுக என விளம்பி”
. (மீட்சிப் படலம் 4025)

குரிசில் என்ற சொல் அரசன் என்ற பொருளிலேயே வந்துள்ளது.

தலைவன்

மந்திரப்படலத்தில் தசரதன் அழைத்ததால் மந்திரக்கிழவர் வந்து அவையில் அமர்ந்தனர். அமைச்சர்களின் நடத்தைக் குறித்துக் கூறும்போது அந்த அமைச்சர்கள், ஒரு செயலை வெற்றியுடன் செய்வதற்குத் தகுந்த காலத்தையும், இடத்தையும், கருவிகளையும், தாம் கற்ற நூல்களில் கூறியுள்ளவற்றின் கருத்துக்களோடு பொருந்தத் தேர்ந்து, தெய்வங்களை வழிபட்டு, அறத்தையே தம் உயிராகக் கொண்ட ஆன்றோர்களது ஒழுக்கத்தையும், புகழ் அடையத் தேவையான செயலையும் ஆராய்ந்து அறிந்து,இவற்றின் பயனாக வரும் நன்மைகள் யாவும் தம் மன்னனுக்கு அமையுமாறு செயல்களைச் செய்யும் சிறப்பு மிக்கவர்கள்.

“காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரிந்து கற்ற
நூல் உற நோக்கு தெய்வம் நுனித்து அறம் குணித்த மேலோர்
சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெரிந்து கொண்டு
பால்வரும் உறுதி யாவும் தலைவற்குப் பயக்கும் நீரார்”
(மந்திரப்படலம் 7)

தலைவன் என்ற சொல் அரசன் என்ற பொருளிலேயே வந்துள்ளது.

மன்னவன்

பரசுராமப் படலத்தில் தசரதன் அயோத்திக்குப் பயணமாதல் பற்றி கூறும்போது விசுவாமித்திரன் சென்ற பின்பு ஒருநாள் வலிமை உடையவனான தசரதன் அழகிய பெரிய அயோத்தி நகருக்குச் செல்வதற்காக, இப்பொழுதே நம் சேனையும் உடன் வந்த பிறரும் புறப்படுக என்று இனிமையாகக் கூறினான். துதிக்கையை உடைய யானை போன்ற அரசர்களின் கூட்டம் வந்து தன் திருவடிகளை வணங்க, உவமையற்ற உயர்ந்த தேரினில் அவன் இனிதாக ஏறினான்.

“அப் போதினில் முடி மன்னவன் அணி மாநகர் செலவே
இப்போது நம் அனிகம் தனை எழுக என்று இனிது இசையா”
(பரசுராமப் படலம் 1210)

மன்னவன் என்ற சொல் அரசன் என்ற பொருளிலேயே வந்துள்ளது.

வேந்தன்

பிணிவீட்டுப் படலத்தில் வாலி இறந்த செய்தியை அனுமன் இராவணனுக்குத் தெரிவிக்கும் போது அரக்கனே, அஞ்சாதே கொடுங்கோபம் உடையவனான வாலி இந்த உலகத்தை விட்டு வானுலகம் அடைந்து விட்டான். இனித் திரும்பி வரமாட்டான். அப்போதே அவனது வாலும் அழிந்துவிட்டது. மை போன்ற கருநிறம் உடைய இராமன் கொல்லும் அம்பு ஒன்றினாலேயே வாலி வருந்தி இறந்தான். இப்போது எங்களுக்கு அரசனாக இருப்பவன், சூரியனுடைய புதல்வனான சுக்ரீவன் என்று உரைத்தான் அனுமன்.

“அஞ்சலை அரக்க பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே

வெஞ் சின வாலி மீளான் வாலும் போய் விளிந்தது அன்றே
அஞ்சன மேனியான் தன் அடு கணை ஒன்றால் மாழ்கித்
துஞ்சினன் எங்கள் வேந்தன் சூரியன் தோன்றல் என்றான்”
(பிணிவீட்டுப்படலம் 1128)

வேந்தன் என்ற சொல் அரசன் என்ற பொருளிலேயே வந்துள்ளது.

முதல்வன்

ஆறு செல் படலத்தில் இராமன் காடு செல்ல, அவனை அழைத்து வர பரதன் தன், கருத்தைத் தெரிவிக்கிறேன். மூவுலகங்களுக்கும் ஒப்பற்ற முதல்வனாகி என் முன்னே பிறந்த இராமன் இருக்க, நான் முடிசூடி அரசு பெறுவது தர்மம் என்று சான்றோர் சொல்லுமாறு ஆகிவிட்டதே,, அப்படியானால் என்னைப் பெற்றவளான கைகேயியின் செயலில் குற்றம் உள்ளதாகுமோ? மூத்தவன் இருக்க இளையவன் முடி புனைதல் தர்மமே என வசிஷ்டன் கூறுவானேயானால் என் தாயின் செயலும் தவறாகாது என்றான் பரதன். இவ்வாறு கூறுவதன் மூலம் தாய் செய்தது தவறானது போல், வசிஷ்டனின் கூற்றும் தர்மத்திற்கு மாறுபட்டதே என முனிவனைப் பழித்தான் பரதன்.

“மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வன் ஆய் முதல்
தோன்றினான் இருக்க யான் மகுடம் சூடுதல்
சான்றவர் உரைசெயத் தர்மம் ஆதலால்
ஈன்றவள் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ”
(அயோத்தியா காண்டம் ஆறுசெல் படலம் 939)

முதல்வன் என்ற சொல் அரசன் என்ற பொருளிலேயே வந்துள்ளது.

நிருபர்

திருஅவதாரப்படலத்தில் தசரதன் கலைக்கோட்டுமுனிவரைக் கண்டு வணங்கினான். பழமையான எனது சிறந்த குலம் உனது கருணையால் சிறப்புற்றது. இனிமேல் தொடர்ந்து அரசாட்சி செய்யும் தொழிலில் நிலைத்திருக்கும் நான் முற்பிறப்பில் செய்த நற்றவத்தை உடையவன் என்பதும் பயனற்றது அன்றோ? என்று தசரதன் கூறியவுடன், கலைக்கோட்டு முனிவன், அவன் மனம் குளிர நோக்கி, ‘மன்னர்க்கு மன்னனே, வசிட்டன் என்னும் சிறந்த முனிவனின் துணையைப் பெற்றிருக்கிறாய். குற்றமற்ற செயல்களை உடையவன் நீ. இவ்வுலகத்தில் உள்ள அரசர்கள் உனக்கு ஒப்பாவார்களோ? என்றான்.

“நல் நெடுந் தவன் துணை நவை இல் செய்கையால்
நின்னை இவ் உலகினில் நிருபர் நேர்வரோ”
(திரு அவதாரப் படலம் 259)

நிருபன் என்ற சொல் அரசன் என்ற பொருளிலேயே வந்துள்ளது.

நரபாலன்

பரசுராமப் படலத்தில் தசரதன், பரசுராமரிடம் அபயம் வேண்டும்போது சிறந்த தவத்தை உடைய காசிப முனிவனே இந்தப் பூவுலகத்தை நீ தானமாக ஏற்றுக்கொள் என்று கூறிக் கொடுத்த ஏழு உலகையும் அரசாலும் தனி உரிமை கொண்டவனே, உன் கோபத்தை நீக்குவாயாக. குளிர்ச்சி பொருந்திய நீண்ட கடலால் சூழப்பட்ட இந்த உலகை ஆளும் என் போன்ற அரசர்களிடம் கருணை கொண்டு, முன்பு உன் கோபத்தைத் தணித்துக் கொண்டாய். இப்போது மீண்டும் கோபம் கொள்வது நீதியாகுமோ என்றான் தசரதன்.

“நனி மாதவம் உடையாய் இது பிடி நீ என நல்கும்
தனி நாயகம் உலகு ஏழையும் உடையாய் இது தவிராய்
பனி வார் கடல் புடை சூழ் படி நரபாலரை அருளா
முடிவு ஆறினை முனிகின்றது முறையோ என மொழிவான்”
(பரசுராமப் படலம் 1229)

நரபாலன் என்ற சொல் அரசன் என்ற பொருளிலேயே வந்துள்ளது.

பார்த்திவன்

சகர மன்னர்களின் தொடுதலால் (அவர்களின் சாபத்தால்), கடலுக்கு 'சாகரம்' என்ற பெயர் நிலைத்தது.அந்தக் கடலின் (சாகரத்தின்) பெருமை சிறந்தது. அந்த மன்னனின் (பகீரதனின் முன்னோரின்) மகனாகப் பிறந்த நிகரற்ற மகன் (பகீரதன்) பூமி முழுவதையும் ஆட்சி செய்தான். இவன் நெடு மரபில் பகீரதன் எனும் பார்த்திவன் வந்து அவதரித்தான் அந்த நீண்ட அம்சுமான் மைந்தன் திலீபன்; திலீபன்; மகன் பகீரதன்.

“சகரர் தொட்டலால், சாகரம் எனப் பெயர் தழைப்ப
மகர வாரிதி சிறந்தது; மகிதலம் முழுதும்
நிகரில் மைந்தனே புரந்தனன்; இவன் நெடு மரபில்
பகிரதன் எனும் பார்த்திவன் வந்து அவதரித்தான்”
(பால காண்டம் - பக்கம் எண் – 878

பார்த்திவன் என்ற சொல் அரசன் என்ற பொருளிலேயே வந்துள்ளது.

இறைவன்

திருவடிசூட்டுப் படலத்தில் முனிவன் ஆசி கூறி பரதன் வருகை பற்றி கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். வேதங்களின் நாயகனாக விளங்கும் இராமபிரானுக்குப் பின்னர் பிறந்த தம்பியாகிய பரதன், மூத்தவனுக்கு அரசுரிமை என்னும் முறையில் இருந்து இளையவனாகிய நான் ஒருபோதும் தொல் புகழ் வாய்ந்த எமது நாட்டினை அரசாள முற்பட மாட்டேன். எனது தலைவனாகிய இராமனிடத்தில் நாட்டாட்சி பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுமாறு நான் வேண்டும்போது, அவன் ஏற்றுக்கொள்ள மறுத்தான் என்றால், அவன் காட்டில் வாழ வேண்டுமென விதித்த 14 ஆண்டு காலமும் நானும் அவனுடன் காட்டில் வாழ்வேன் என்று சொன்னார்.

“மறையின் கேள்வற்கு மன் இளந் தோன்றல் பின்
முறையின் நீங்கி முதுநிலம் கொள்கிலேன்
இறைவன் கொள்கிலன் ஆம் எனின் யாண்டெலாம்
உறைவென் கானத்துஒருங்கு உடனே என்றான்”
(திருவடிசூட்டு படலம் 1060)

இறைவன் என்ற சொல் அரசன் என்ற பொருளிலேயே வந்துள்ளது.

அண்ணல்

வாலி, இராமனிடம் வேடன் போல மறைந்து நின்று நம்மீதுஎய்த மர்மம் என்ன என்ற வினாவுக்கு விடை சொல்ல இலட்சுமணன் வருகிறான். முன்பு உன் தம்பி வந்து அடைக்கலம் அடைய,அப்போது இராமன் நீதி நெறியில்லாத உன்னைக் கொல்வதாக அவனுக்கு வாக்குறுதி அளித்தான். பின்பு நீயும் போரில் இராமனிடம் வந்து நானும் உனக்கு அடைக்கலம் என்று கூறலாம் என்று நினைத்தே, அவன் மறைந்து நின்று அம்பு எய்தான் என்று கூறினான்.

“அன்பினை உயிருக்கு ஆகி அடைக்கலம் யானும் என்றி
என்பது கருதி அண்ணல் மறைந்து நின்று எய்தது என்றான்”
(வாலி வதைப்படலம் 351)

அண்ணல் என்ற சொல் அரசன் என்ற பொருளிலேயே வந்துள்ளது.

இவை மட்டுமல்ல மன்னன், அரசர்க்கு அரசே, மன்னர் மன்னன், தாராபதி என்று கம்பர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னன்

தசரதன், தன்னுடன் வந்த அரசர்கள் வணங்கி, அந்தப்புரத்தின் வாசலில் நின்றுவிட, அங்கே, ஏவிய வேலைகளைச் செய்யும் பணிப் பெண்கள் வந்து தன்னைச் சூழ்ந்து கொள்ள, உள்ளே சென்று, படுக்கையை விடுத்த, வேற்படை போலும் பெரிய விழிகளையும் மென்மையான தோள்களையும் உடைய கைகேயியை அடைந்தான்.

“வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப வந்து ஆங்கு
ஏயின செய்யும் மடந்தைமாரொடு ஏகி
பாயல் துறந்த படைத் தடங்கண் மென் தோள்
ஆயிழை தன்னை அடைந்த ஆழி மன்னன்”
(கைகேயி சூழ்வினைப்படலம் 183)

அரசர்க்கு அரசே

நகர்நீங்கு படலத்தில் சக்கரவர்த்தியே இருள் முற்றிலும் அற்றுப்போகும்படி ஒளியுற்ற சூரியனுக்கு ஒப்பான ஆணைச் சக்கரத்தை ஒப்பில்லாமல் உருளும்படி செய்து, ஒப்பற்ற செங்கோல் செலுத்தி வருவதை முழுமையாக உணர்ந்துள்ளது உலகம். அதே உலகம் எல்லாப் பொருளும் அழியும்படி வந்து சேரும் பிரளய காலத்துப் பேரழிவை இப்போதே அடையவேண்டும் என்று எண்ணி இச்செயலைச் செய்தாயோ இது அருளை நினைத்துச் செய்த செயலாகுமா? என்பாள் கோசலை.


“இருள் அற்றிட உற்று ஒளிரும் இரவிக்கு எதிரும் திகிரி
உருளத் தனி உய்த்து ஒரு கோல் நடையின் கடை காண் உலகம்
பொருள் அற்றிட முற்றுறும் அப் பகலில் புகுதற்கு என்றோ
அருளக் கருதுற்றுதுவோ அரசர்க்கு அரசே என்னும்”
(நகர்நீங்கு படலம் 323)

மன்னர் மன்னன்

திருஅவதாரப்படலத்தில் கலைக்கோட்டு முனிவரை அழைத்து வருவது எப்படி என்ற இச்செய்தியைத் தெரிவித்த முனிவர்களுக்கு அரசனான வசிட்டனின் மலரடியை வணங்கி வாழ்த்திய தசரதன், கடவுள் போன்றவனே, குற்றமற்ற நற்குணங்கள் நிறைந்த கலைக்கோட்டு முனிவன் எங்கே இருக்கிறான்? இப்போது நான் செய்ய வேண்டிய செயல் என்ன என்பதைச் சொல்லுக என்று கேட்டான்.

“ஆங்கு உரை இனைய கூறும் அருந்தவர்க்கு அரசன் செய்ய
பூங்கழல் தொழுது வாழ்த்தி பூதல மன்னர் மன்னன்
தீங்குஅறு குணத்தால் மிக்க செழுந்தவன் யாண்டை உள்ளான்
ஈங்கு யான் கொணரும் தன்மை அருளுதி இறைவ என்றான்”
(திருஅவதாரப்படலம் 214)

தராபதி

குலமுறை கிளத்துப் படலத்தில் கூறுகிறார். விசுவாமித்திரர், ஜனகரிடம் விவசுவான் எனப்படும் சூரியனது குலத்தில் தோன்றிய முதல் மன்னனான வைவசுவதன் எனும் மனுச்சக்கரவர்த்தியை அறியாதவர்கள் யார் உள்ளனர் .எவருமில்லை பல்வேறு வகையான உயிர்கள் எல்லாம் கொடிய பசியால் வருந்தாத படி, ஒளி மிகுந்த கட்டமைந்த தனது வில்லால் பூமாதேவி முலை சுரக்கும்படி ஒரு சாதனையைச் செய்து முடித்த பெருந்தகையான பிருது சக்கரவர்த்தியும் இப்புதல்வர்களின் குலத்திலே உதித்த ஓர் அரசனே ஆவான்.

“சோதித் தன் வரி சிலையால் நிலமடந்தை முலை சுரப்ப
சாதித்த பெருந்தகையும் இவர் குலத்து ஓர் தராபதி காண்”
(குலமுறை கிளத்து படலம் 586)

முடிவுரை


அமிழ்தினும் இனிய மொழி என்று புகழப்படும் நம் தாய்மொழியாம் தமிழ் மொழி தொன்மை, வளமை, இளமை, தனித்தன்மை பெற்ற சிறந்த மொழி ஆகும். பாவாணர் தமிழுக்குத் தொன்மை, முன்மை,மேன்மை, எண்மை, ஒண்மை,வண்மை, வாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, தனிமை, இனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என பதினாறு சிறப்புக்களைக் குறிப்பிடுகிறார்.ஒரு சொல்லுக்குப் பல பொருளும், பல சொல்லுக்கு ஒரு பொருளும் தரும் தனித்தன்மை பெற்ற தமிழ் மொழியில் அரசன் என்று சொல்லுக்குப் பொருள் தரும் சொற்களான புரவலன், கொற்றவன், பெருமான், காவலன், ஏந்தல், கோவே,குரிசில், தலைவன், மன்னவன்,வேந்தன், முதல்வன், நிருபன், நரபாலன், பார்த்திவன், இறைவன், அண்ணல் எனப் பதினைந்து சொற்களும் அரசன் என்ற ஒரு சொல்லைக் குறிக்கும். கம்பராமாயணத்தில் இச்சொற்கள் எவ்வாறு இடம் பெற்றுள்ளன என்பதை நாம் இக்கட்டுரையின் வழி அறிந்து கொள்ளமுடிகிறது.

துணைநூற்பட்டியல்


1.சுப்பிரமணியம்.வ.த.இராம.தண்டியலங்காரம்,முல்லைநிலையம்,சென்னை, 2019.

2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.

3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம், சென்னை,2016.

4.நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம்,சாரதா பதிப்பகம், சென்னை,2012. 5.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.