
கட்டுரையாளர் - முனைவர் சா. சதீஸ் குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல், கல்லூரி , கோயம்புத்தூர் -641105. -
தமிழ் சங்க இலக்கியங்களில், குறிப்பாக எட்டுத்தொகை அகநூல்களில், காதல் மற்றும் மனித உணர்வுகளோடு இணைந்த சமூக–பொருளாதார வாழ்க்கையின் தடங்கள் காணப்படுகின்றன. அந்தக் கால சமூகத்தின் வணிக வாழ்க்கை, கடல் வணிகம், வணிகர் வர்க்கம், பொருளாதார உறவுகள் ஆகியவை இலக்கியத்தில் இயல்பாகப் பிரதிபலிக்கின்றன. இக்கட்டுரை, அகநூல்களில் காணப்படும் வணிகவியல் சுட்டுமொழிகளையும், அவை சங்ககாலத்தின் பொருளாதார நிலையைக் காட்டும் விதத்தையும் இக்கட்டுரை ஆராய முற்படுகின்றது.
முன்னுரை
தமிழ் இலக்கிய மரபில் சங்ககாலம் பொருளாதார, கலாச்சார வளர்ச்சியின் பொற்காலமாகக் குறிப்பிடப்படுகிறது. எட்டுத்தொகை அகநூல்கள், தமிழரின் உணர்ச்சி, பண்பாடு, சமூக வாழ்வு ஆகியவற்றை ஆழமாக வெளிப்படுத்துகின்றன. அகநூல்கள் பெரும்பாலும் காதல் சார்ந்தனவாக இருந்தாலும், அந்தக் காதல் நிகழ்ச்சிகளின் பின்னணியில் சமூக வாழ்க்கை, தொழில், வணிகம், பொருள் பரிமாற்றம் போன்றவை தெளிவாகப் பிரதிபலிக்கின்றன.
அந்தக் காலத்தில் வணிகம் தமிழரின் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. உள்நாட்டு மற்றும் கடல் வழி வணிகம் இரண்டும் செழித்திருந்தன. இதனை பல அகநூல் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.
எட்டுத்தொகை அகநூல்கள் – ஒரு அறிமுகம்
எட்டுத்தொகை என்பது எட்டு சங்க நூல்களின் தொகுப்பு. அவை: நற்றிணை,குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை, பரிபாடல், புறநானூறு, பதிற்றுப்பத்து.இவற்றில் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல் ஆகியவை அகநூல்கள் என அழைக்கப்படுகின்றன. காதல் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டிருந்தாலும், அதனுள் மறைந்திருக்கும் சமூக – பொருளாதார உறவுகள் வணிகவியல் நோக்கில் முக்கியத்துவம் பெறுகின்றன.
இலக்கண இலக்கியங்களில் வணிகம் குறித்த செய்திகள்
சங்க இலக்கியம் மற்றும் இலக்கண நூல்களில் வணிகம் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. பண்டைக்கால தமிழர்களின் வணிக நடவடிக்கைகள், பொருட்கள், வணிக தளங்கள், மற்றும் வணிகர்கள் பற்றிய தகவல்கள் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சங்க இலக்கியங்களில் வணிகம் தொடர்பான செய்திகள் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில், கடல்சார் வணிகம், நில வணிகம் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. முத்து, பவளம், சந்தனம், மிளகு போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், உள்நாட்டில் நெல், அரிசி, கரும்பு போன்ற பொருட்கள் வணிகம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பண்டமாற்று வணிக முறை:
சங்க காலத்தில் உள்ளூர் அளவில் நடைபெற்ற வணிகங்களில் பண்டமாற்றுமுறை வணிகமே பெரும்பான்மையாக நடைபெற்று வந்திருக்கின்றது. பண்டமாற்று வணிக முறை என்பது பணம் பயன்பாட்டிற்கு முன் இருந்த பரிமாற்ற முறை ஆகும்.இதில், பொருள் ஒன்றுக்கு பதிலாக மற்றொரு பொருள் நேரடியாக மாற்றிக் கொள்ளப்பட்டது.உதாரணமாக, தானியத்திற்கு பதிலாக துணி அல்லது உப்பைப் பெறுவது போன்ற பரிமாற்றம் நடைமுறையில் இருந்தது
“கான் உறை வாழ்க்கை கதநாய் வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும் ஆய் மகள்
தயிர் கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகத்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்” ( 1- 7 , புறநானூறு)
என்கிற புறநானூற்று அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. இப்பாடலில் காட்டில் வாழும் வாழ்க்கையினை உடையவன் வேடன். சினம் மிகுந்த நாயுடன் அவன் வருவான். மான்கறியினைவட்டிலிலேகொண்டுவருவான். ஆயர் பாடியிலே இருக்கிற ஆயர் மகள் பானையிலே தயிரைக் கொண்டு வருவாள். அதற்குப் பதிலாக அவர்கள் நெல்லை முகந்து முகந்து அவ்வட்டிலும் பானையும் நிறையுமாறு கொடுப்பார்கள். அவர்களும் அது பெற்று மகிழ்ச்சியோடு செல்வார்கள் என்பதுதான் இந்தப்பாடலின் பொருள். இதன் மூலம் சங்க காலத்தில் இறைச்சியினையும் தயிரையும் கொடுத்து நெல்லினைப் பண்டமாற்றாகப் பெற்றிருப்பதை அறியலாம்.
அயல்நாட்டினருடன் வணிகத்தொடர்பு
சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் அயல்நாட்டினரோடு கொண்டிருந்த தொடர்பை பட்டினப்பாலை என்னும் பத்துப்பாட்டு இலக்கியம் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
“பல் ஆயமொடு பதிபழகி
வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல்
சாறு அயர் மூதூர் சென்று” ( 11-13, பட்டினப்பாலை)
என்னும் பாடல் வரிகளில் பல மொழிகளைப் பேசுபவர்கள் பழகி, வெவ்வேறு உயர்தர முதுவாய் ஒக்கல்கள் (வணிகர்கள்), விழா நடைபெறும் பெரிய நகரத்திற்குச் சென்று பல்வேறு வகையான வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்பதைக் குறிக்கிறது. இது சங்க காலத்தில் புகழ்பெற்ற பட்டினப்பாலை மற்றும் புகழூர் போன்ற வணிக நகரங்களின் சர்வதேச வணிக உறவுகளையும், பல்வேறு நாட்டினர் வந்து தங்கியிருந்ததையும் காட்டுகிறது இதனை அறியலாம். பிற நாட்டிலிருந்து பலமொழிகள் பேசக் கூடியவர்களும் தமிழகத்திற்கு வந்து இங்குள்ளவர்களிடம் ஒன்றாகக் கலந்து இனிதாக வாழும் நகரமாகக் காவிரிப்பூம்பட்டினம் விளங்கியிருக்கின்றது. பிறநாட்டிலிருந்து வந்து தமிழகத்தில் வாழ்ந்தவர்களைச் சங்க இலக்கியம் யவனர்கள் என்றும் மிலேச்சர் என்றும் குறிப்பிடுகின்றது. இதனை முல்லைப்பாட்டு என்கிற இலக்கியம் எடுத்துக்காட்டுகின்றது.
வணிகர்களின்சிறப்பு
வணிகர்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுபவர்கள். அவர்கள் உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோருக்கு இடையே பாலமாக செயல்படுகின்றனர். வணிகம் சிறந்த புகார் நகரத்திலே சிறந்த வணிகர்கள் பலர்வாழ்ந்திருந்தனர்.அவர்களின்சிறப்பினை
“நெடு நுகத்துப் பகல் போல
நடுவு நின்ற நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகை கொளாது
பல் பண்டம் பகர்ந்து வீசும்
தொல் கொண்டித் துவன்று இருக்கை” ( 206 – 212, பட்டினப் பாலை.)
என்று கருத்தாழமிக்க வரிகளில் பாடியிருக்கிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
வணிகர்கள், வளைந்த கலப்பையைக் கொண்டு, உழவுத் தொழிலை விரும்பிச் செய்யும் உழவர்களின் நீண்ட நுகத்தடியின் நடுவில் தைக்கப்பட்டுள்ள பகலாணி போல, நடுவு நிலை என்ற குணம் நிலைபெற்று விளங்கும் நல்ல உள்ளம் உடையவர்கள் ; பொய் உரைப்பின் தம் குடிக்குப் பழிச் சொல் வந்து சேரும் என அஞ்சி உண்மையே கூறுவர்.வணிகர்கள், தம்முடைய பல பண்டங்களையும் பிறருடைய பல பண்டங்களையும் வேறுபடுத்தி நோக்காமல் ஒப்ப ஆராய்ந்து காண்பர்.தாம் கொள்ளும் பொருள்களை மிகுதியாகக் கொள்வதில்லை ; தாம் கொடுக்கும் பொருள்களையும் குறைவாகக் கொடுப்பதில்லை. தங்களுக்கு வரக்கூடிய இலாபத்தை வெளிப்படையாகக் கூறி வணிகம் செய்வர். இந்நெறியில் அவர்கள் நின்றமையால் அவர்கள் வணிகத்தில் சிறந்த செல்வத்தால் மிகுந்து விளங்கினர்.
ஏற்றுமதி, இறக்குமதி
"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் கூற்றுக்கிணங்க நம் நாட்டு வணிகர்கள் பல்வேறு மேலை நாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அதாவது எகிப்து, கிரேக்கம், உரோம், பாபிலோனியா முதலிய நாடுகளுடன் வாசனைப் பொருட்கள், விலையுயர்ந்த முத்துக்கள், யானைத் தந்தங்கள் போன்ற பல்வேறுப் பொருட்களையும் ஏற்றுமதி செய்தும் இவர்களுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்தும் வந்தனர். கி.மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி.மூன்றாம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஏற்றுமதியும், இறக்குமதியும் மிகுதியாக இருந்தது என்பது மேல்நாட்டு யாத்ரீகர்கள் எழுதியுள்ள குறிப்புகளில் இருந்து தெரிகிறது.
இத்தகைய ஏற்றுமதி இறக்குமதி மூலமாக தமிழகத் துறைமுகங்களான காவேரி பூம்பட்டினம், கொற்கை, முசிறி போன்றவைச் சிறப்பு பெற்று விளங்கின.
"தத்துநீர் வரைப்பின் கொற்கை" (சிறுபாணாற்றுப்படை-62) என்ற வரிகள் மூலம் கொற்கை சிறந்த துறைமுக பட்டினமாக விளங்கியதை அறியலாம்.
சீனம் முதலிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்பூரம், பன்னீர், குங்குமம். போன்றவையும், மேற்றிசை நாடுகளாகிய அரேபியா போன்றநாடுகளிலிருந்து குதிரைகளும் கொண்டு வரப்பட்டன என்பதை,
“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும் (185-186, , பட்டினப் பாலை )
என்ற வரிகள் மூலம் தமிழகம் இறக்குமதியிலும் ஈடுப்பட்டிருந்ததை என்பதை அறியலாம். புகார் வணிகர் கடல் வணிகத்திலும் சிறந்து விளங்கினர். அரேபியா. ஈழம், கடாரம், சீனம், போன்ற நாடுகளுடன் வணிகம் புரிந்தனர்.
“நீரினின்று நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர் பரப்பவும்
அளந்து அறியா பல பண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி ( 129-132. , பட்டினப் பாலை)
என்னும் பாடல் வரிகளில் ,மரக்கலன்களும் வணிகத்தின் பொருட்டுப் புகார் துறைக்கு வந்தமையை, நீரினின்றும் நிலத்து ஏற்றவும், நிலத்தினின்று நீர்ப் பரப்பவும், அளந்து அறியாப் பல பண்டம் வரம்பு அறியாமை வந்து ஈண்டி" என்ற அடிகள் மூலம் ஏற்றுமதியும், இறக்குமதியும் சிறந்து விளங்கியதை அறியலாம்.
குறுந்தொகையில் இடம் பெறும் வணிகம் பற்றிய செய்திகள்
சங்கத் தமிழர் அன்றாடத் தேவைகளான அரிசி, பருப்பு, உப்பு, தயிர், மீன். இறைச்சி, முதலான பொருட்களைப் பண்டமாற்று முறையிலே பெற்றுக் கொண்டனர். இடையன் பாலைக் கொடுத்து அதற்கு ஈடாகத் தானியத்தைப் பெற்றுக் கொண்டான் என்பதை
“பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடுடைஇடைமகள்"( 221-222, குறுந்தொகை)
என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார் இதேப் போன்று உப்பினை நெல்லாக மாற்றியதை.
“ …………………………….யாவும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்புவிளை கழனிச் சென்றனன்( 267-269,குறுந்தொகை)
என்ற அடிகளில் தலைவியின் தாயார், உப்பை உப்புவிளை நிலத்தில் கொடுத்து அதற்குப் பதிலாக வெண்ணெல் வாங்கி வருவதற்காக உப்பு விளையும் வயலுக்குச் சென்றார் என்பது கூறப்பட்டுள்ளது. சுட்டியுள்ளார்.
முடிவுரை
எட்டுத்தொகை அகநூல்கள் தமிழரின் காதல், வாழ்க்கை உணர்வுகளை மட்டுமின்றி, சங்ககாலத்தின் பொருளாதார நிலையையும் வெளிப்படுத்துகின்றன. அவற்றில் வணிகர் வாழ்க்கை, கடல் வணிகம், பொருள் பரிமாற்றம் போன்றவை இயல்பாக இடம் பெற்றுள்ளன. இது தமிழரின் வணிக அறிவும், உலகளாவிய வணிக உறவுகளும் தொன்மையானவை என்பதைஉணர்த்துகின்றது.அகநூல்கள் வணிகவியல் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யப்படுவது, தமிழ் சமூக வரலாற்றை விளக்கும் முக்கிய ஆதாரமாகவும் திகழ்கின்றது.
மேற்கோள்கள்:
அகநானூறு- முனைவர் இரா . செயபால் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( பி ) லிட், 41-பி,சிட்கோஇண்டஸ்ட்ரியல் எஸ்டேட்அம்பத்தூர் சென்னை - 600098, நான்காம் பதிப்பு - அக்டோபர் -2011
குறுந்தொகை- முனைவர் இரா . செயபால் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( பி ) லிட், 41-பி,சிட்கோஇண்டஸ்ட்ரியல் எஸ்டேட்அம்பத்தூர் சென்னை - 600098, நான்காம் பதிப்பு - அக்டோபர் -2011
Mail : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.