
*கட்டுரையாளர் - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,
முன்னுரை
இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்று முக்காலத்திலும் நடைபெறுவதை அறிவன் நமக்கு கூறுவர். அறிவன் என்பது ஜோதிடரைக் குறிக்கும் சொல்லாகும். சங்க இலக்கியத்தில் கணியன் என்று கூறப்பட்டுள்ளது. பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதல் இன்று வரை எல்லா இலக்கியங்களிலும் ஜோதிடக் குறிப்புகளை நாம் காண முடிகிறது. ஜோதிடம் குறித்த சிந்தனை மிகப் பழங்காலம் தொட்டே நம் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. ஜோதிடம் என்பது மக்கள் அறிவியல் பயனால் பெற்ற ஒன்று. ஜோதிடம் அன்று முதல் இன்று வரை தமிழக வாழ்வுகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. மக்களும், மன்னர்களும் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். மன்னர்கள் போர் செய்யும் போது, திருமணம் செய்யும்போது, முடிசூட்டும் போது நல்ல நாள் பார்த்து செய்து மகிழ்வுடன் வாழ்ந்து வந்தனர். கம்பர் தம் இராமாயணத்தில் ஜோதிடம் குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை ஆராய்வோம்.
ஜோதிடவியல்
ஜோதிடம் என்பது கோள்களின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றினால் ஏற்படும் நன்மை, தீமைகளைக் கணித்துக் கூறுவதாகும். ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்வையும் ஜோதிடத்தின் மூலம் கணித்து கூறுகின்றனர். பழந்தமிழர் ஒரு செயலைச் செய்ய வேண்டுமாயின், நாளும் கோளும் பார்த்து நல்ல நாளினைத் தேர்வு செய்து அச்செயலினைச் செய்துள்ளனர் என்பதனைப் புறத்திணைகளில் உள்ள 36-வது நூற்பா கூறுகிறது. ஒருவர் பிறக்கும் நேரத்தில் விண்ணில் நட்சத்திரங்கள் அல்லது கோள்கள் இருக்கும் நிலையை அடிப்படையாகக் கொண்டு அவருடைய ஆயுள், இயல்புகள், வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கணிப்பது ஜோதிடம் ஆகும்.
கணியன்
மூவுலக நிகழ்ச்சிகளையும் மனதால் கணித்துக் கூறுபவன் கணி. தொல்காப்பியர் “அறிவன்” என்று கூறியதை இளம்பூரணர் தனது உரையில் கணியன் என்கிறார். அறிவன், அறிவர், என்பவர்கள் முக்காலமும் அறிந்து அதன் விளைவுகளை உரைப்பவர்கள்.
ஜோதிடர்களுக்கு அறிவன், கணியன், காலக்கணிதன், வள்ளுவன், நிமித்திகன், உய்த்துணர்வோன், அறிவாளன், புரிநூல், உத்தமன் போன்ற பலப் பெயர்கள் இருந்தமையை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இதனை புறப்பொருள் வெண்பாமாலை
“ ……………………………………………………………..திரிபின்றி
வின் இவ்வுலகம் விளைக்கும் விளைவெல்லாம்
எண்ணி உரைப்பான் கணி”
(புறப்பொருள் வெண்பாமாலை 174)
கூறுகிறது.
தொல்காப்பியத்தில் ஜோதிடவியல்
தொல்காப்பியத்தில் அறிவன் என்ற சொல் ஜோதிடரைக் குறிப்பதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.
" மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்
நாவிரு வழக்கில் தாபதப்பக்கமும்
பாலறி மரபில் பொருநர் கண்ணும்"
(புறத்திணையியல் 16)
ஜோதிடம் சொல்லும் பொருளும்
ஜோதிடம் என்பதற்கு நாள், ஓரை, நிமித்தம், பஞ்சாங்கம், சாதகம் எனும் பொருள்களை லெக்ஸிகன் (பக்கம் 1667) கூறுகிறது. ஜோதிடம் கணித ஸ்கந்தம், சங்கிராஸ்கந்தம், சாதக ஸ்கந்தம் என மூன்று வகைப்படும். அவற்றுள் பஞ்சாங்கம் கணிக்கும் விதத்தைக் கூறுவது கணித ஸ்கந்தம்.
நாளும் கோளும்
பண்டைத் தமிழர்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் 27 எனவும், கோள்கள் 7 எனவும், ஓரைகள் 12 எனவும் கண்டறிந்து வைத்துள்ளனர். ஏழு கோள்களின் பெயரால் கிழமைகளின் பெயர்களையும் வகுத்துக் கொண்டனர். 12 ஓரைக்குள்ளும் புகுவது பன்னிரு மாதம் எனவும் அதன் ஒரு வட செலவும், தென் செலவும் சேர்ந்து ஓர் ஆண்டு என கணக்கிட்டுள்ளனர். பழங்கால மக்கள் தாங்கள் செய்ய வேண்டிய எந்தக் காரியமாக இருந்தாலும் நல்ல நாளில்தான் தொடங்குவார்கள். அவர்களிடம் நல்ல நாள், கெட்ட நாள் பார்க்கும் வழக்கம் இருந்தது என்பதை,
“மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை”
(தொல்காப்பியம் -பொருளதிகாரம் 1081)
குறிப்பிடுகிறது.
நாள் குறித்தல்
மக்கள் தங்கள் செய்யப் போகும் நிகழ்ச்சிகளைத் தொடங்கும் முன் நாள் கோள் நோக்கியும், பல்வகை நிமித்தங்களை ஆராய்ந்தும் செயல்களைத் தொடங்கினர். திருமணத்திற்குத் தீய கிரகங்களின் சேர்க்கை இல்லாத காலமாகவும், ரோகிணி விண்மீன், திங்கள் எனும் சந்திரனுடன் மருவிக் கலக்கும் மங்களப் பொழுதை உகந்ததாகக் கொண்டனர்.
கணிமேதாவியார், கணியன் பூங்குன்றனார், கணிப்புக்குன்றனார் பக்குடுக்கை நக்கண்ணியார் போன்றவர் ஜோதிட கலையில் சிறந்திருத்தல் கூடும் என்பதை அவர்தம் அடைமொழிகள் காட்டுகின்றன. ஆனால் இவர்களது ஜோதிட அறிவு புலப்படும் படியான பாடல்கள் சங்க இலக்கியத்தில் கிடைக்கவில்லை.
ஜோதிடக்குறிப்புகள் உள்ள சில நூல்கள்
தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெரியாழ்வார் திருமொழி, கலிங்கத்துப்பரணி, பெருங்கதை, யசோதரகாவியம், நளவெண்பா, காஞ்சிபுராணம், கயிலாயநாதர் சதகம், அறபளீசுரசதகம்.
கம்பராமாயணத்தில் ஜோதிடம்
கம்பராமாயணத்தில் ஜோதிடம் குறித்தப் பதிவுகள் காணக்கிடைக்கின்றன. நல்ல செயல்களைச் செய்யத் துவங்கும் முன் நல்ல நாள், நல்லநேரம் பார்த்தே செய்யும் வழக்கம் இருந்தது. அசுவமேதயாகம், புத்திரகாமேட்டியாகம், வில்லை வைத்து செய்யும் யாகம், நிகும்பலையாகம் என அனைத்து யாகங்களும் வெற்றி பெற வேண்டி நல்ல நாள், நல்ல நேரம் பார்த்தே செய்தனர்.குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள பிறந்த நட்சத்திரமும், ராசியும் குறித்து வைத்தனர். திருமணம் செய்ய நாளும், கோளும் பார்த்து செய்தனர். அயோத்தி மன்னனாக இராமன் முடிசூட ஏற்ற நல்லநாளையும் ஜோதிடர்கள் குறித்துக் கொடுத்தனர்.பதினான்கு வருட வனவாசம் எப்போது முடியும் அண்ணன் இராமன் எப்போது அயோத்தியை வந்தடைவான் என்பதையும் ஜோதிடர்களே பரதனுக்குக் கூறினர்.வனவாசம் முடித்து வந்த இராமனுக்கு முடுசூட்டு விழா செய்யவேண்டி பரதன் வசிட்டன் உள்ளிட்டோரையும், ஜோதிடர்களையும் அழைத்து கேட்டான்.
புதல்வர்கள் பிறந்ததும் ஜோதிடர் நாள் பார்த்தல்
மன்னன் தேவியர் மூவருக்கும் மகப்பேற்றுக்கு உரிய காலம் வந்த அந்த நேரத்தில், மிகப்பெரிய பூமாதேவி மகிழ்ச்சியால் பூரிக்கவும், வேய் என்னும் பெயரையுடைய புனர்பூச நட்சத்திரமும்,தேவர்கள் புகழும் தூய்மையான கடக லக்னமும் மகிழ்ச்சியால் குதித்துத் துள்ளவும் கோசலையின் மணி வயிற்றில் திருமால் அவதரித்தார்.
“ஆயிடை பருவம் வந்து அடைந்த எல்லையின்
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட
வேய் புனர்பூசமும் விண்ணுளோர்களும்
தூய கற்கடகமும் எழுந்து துள்ளவே “
(திருஅவதாரப் படலம் 281)
பூசநட்சத்திரமும், மீனலக்னமும் விளக்கம் அடையவும், குற்றமற்ற கேகய வேந்தனின் புதல்வியான கைகேயி ஒரு புதல்வனைப் பெற்றெடுத்தாள்.
“பூசமும் மீனமும் பொலிய நல்கினாள்
மாசு அறு கேகயன் மாது மைந்தனை”
(திருஅவதாரப்படலம் 284)
இந்திரனும், தேவர்களும் ஆகாயத்தில் நின்று ஆரவாரம் செய்யவும், புற்றிலே புகும் தன்மை பெற்ற பாம்பின் வடிவமான ஆயில்ய நட்சத்திரமும், கடக லக்னமும் நல்வாழ்வு பெறவும், சுமித்திரை இளையபெருமாளைப் பெற்றெடுத்தாள்.
“அளைபுகும் அரவினோடு அலவன் வாழ்வுற
இளையவற் பயந்தனள் இளைய மென்கொடி”
(திரு அவதாரப் படலம் 285)
படத்தொடு விளங்கும் பல தலைகளை உடைய ஆதிசேஷன் சுமந்து நிற்கும் பூமாதேவி ஆனந்தக் கூத்தாடவும் வேதங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடையவும், சிங்க ராசியும் மக நட்சத்திரமும் வாழ்விலே சிறப்படையவும் விஷம் போல கடுமை பொருந்திய கண்களை உடைய சுமத்திரை மீண்டும் ஒரு புதல்வனைப் பெற்றெடுத்தாள்.
“படர் கிளர் பல்தலைப் பாந்தள் ஏந்து பார்
நடம் கிளர் தர மறை நனி மகிழ்ந்திட
மடங்களும் மகமுமே வாழ்வின் ஓங்கிட
விடம் கிளர் விழியினாள் மீட்டும் ஈன்றனள்”
(திரு அவதாரப்படலம் 286)
தேவியர் மூவருக்கும் குழந்தை பிறந்ததைப் பணிப் பெண்கள் அரசனிடம் ஓடிச் சென்று மகிழ்ச்சி செய்தியைக் கூறி கூத்தாடினார்கள். புரோகிதர்கள் ஒன்றுகூடி புதல்வர்கள் பிறந்த போது நட்சத்திரங்களும், கிரகங்களும் நின்ற நிலையை நன்றாக ஆராய்ந்து இனி உலகத்துக்குத் துன்பம் இல்லை என்று கூறினார்கள்.
“கூடினர் நாளொடு கோளும் நின்றமை
நாடினர் உலகு இனி நவை இன்று என்றனர்”
(திரு அவதாரப் படலம் 288)
ஒருவர் பிறக்கும்போது உள்ள கோள்நிலை அவனுடைய வாழ்க்கை முறைகளை முழுவதுமாகத் தீர்மானித்துவிடுகிறது. அதன் பின்னர் மாறி வரும் கோள்நிலைகளைக் கவனித்து, அவனுடைய அன்றாட வாழ்க்கை முறைகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளவும் ஜோதிடம் உதவுகிறது.
திருமணத்திற்கு நாள் குறித்தல்
பழந்தமிழர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை தங்கள் வாழ்க்கையில் செய்யும் செயல்களை நாள்,கோள் பார்த்தே செய்து வந்தனர்.நல்ல நாள் பார்க்கும் இயல்பு எல்லா நிலைகளிலும் பின்பற்றப்பட்டாலும் திருமண முறையில் சிறப்பாகக் கடைபிடிக்கப்பட்டுள்ளது.
இராமன் வில்லை உடைத்த செய்தியை அறிந்த மன்னன் தசரதன் தன் மனைவி மற்றும் ஊர் மக்களுடன் மிதிலை வந்து சேர்ந்தான். அவையில் தசரதன், விசுவாமித்திரனைப் பார்த்து சீதையின் திருமண நாளாகிய அளவில்லாத நன்மை மிகுந்த நாள் எந்த நாள் அதைச் சொல்க என்று கேட்டான். (கோலம் காண்படலம் 1103) அதற்கு அவர் திருமணத்திற்குப் பொருந்திய நாள் நாளையே ஆகும் என்றார்.
“பாளை விரியக் குதி கொள் பண்ணை வள நாடா
நாளை என உற்ற பகல் நல் தவன் உரைத்தான்”
(கோலம்காண்படலம்1104)
திருமணம்
வசிட்டமுனிவன் மங்கல அங்கியினை வளர்த்தான். வசிஷ்ட முனிவர் பங்குனி மாதத்தில் ருத்ர நட்சத்திரம் கூடிய அந்த நல்ல நாளில் அங்கங்களோடு கூடிய வேதங்களில் சொல்லப்பட்ட ஆயிரம் திருநாமங்களை உடைய சிங்கம் போன்ற இராமனது திருமணச் சடங்கை செய்த முறைமைக்கு ஏற்ப மங்களமான ஓமாக்கினியை வளர்த்து மணவினையை முடித்தான்.
"பங்குனி உத்திரமான பகல் போது
அங்க இருக்கினில் ஆயிர நாமச்
சிங்கம் மணத்தொழில் செய்த திறத்தால்
மங்கல அங்கி வசிட்டன் வகுத்தான்
(கடிமணப்படலம் 1205)
நிமித்தம் பார்த்தல்
நிமித்தம் பார்த்தல் குறித்தும் கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.
நிமித்தம்:
பின்னர் நிகழும் நன்மை, தீமைகளை முன்னரே அறிவிக்கும் குறியை நிமித்தம் என்று கூறுவர்.இவற்றை கூறுபவரை நிமித்திகன் என்பர். நிமித்தங்களில்,, நன்னிமித்தம், தீ நிமித்தம் என்றும் பிரிப்பர்.
புள் நிமித்தம்:
பறவைகளின் ஒலிப்புமுறையில் நிமித்தம் பார்த்தனர்.
இதைத் தொல்காப்பியம்
" நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்"
(தொல்காப்பியம் 103)
என்று கூறுகிறது.
அரசர்கள் ஓரைகளிலும், சகுனம் பார்த்தே எதையும் செய்யவேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதாலும் ஜோதிடரை தம் அரசவையில் நிரந்தரமாக வைத்திருந்தனர். தாம் எங்கு சென்றாலும் அவர்களையும் தம்முடனேயே அழைத்துச் சென்றனர்.
தசரதன் தன் மகன்களுக்கு திருமணம் முடிந்து அயோத்திக்கு பயணமானார். வரும் வழியில் மயில் நல்ல சகுனமாக வலப்பக்கத்தில் வந்தன. காகம் தீய சகுனமாக இடப்பக்கத்தில் வந்தன. இதைக் கண்ட தசரதன் சகுன நூல் அறிந்த நிமித்திகனை அழைத்து இச்சகுனம் நல்லதாக உள்ளதா தீங்கு உள்ளதா உண்மையை நீ உள்ளபடி உரை என்று கேட்டான். பறவைகளால் நேரும் சகுனங்களை நன்கு அறிந்த அந்நிமித்திகன் மலைகளைப் போன்ற தோள்களை உடைய தசரதனிடம் இப்போது ஓர் இடையூறு தடை ஏற்படும். ஆனால் அது நல்லதாக முடியும் என்று கூறினார். அப்பொழுதுதான் பரசுராமர் எதிரில் வந்தார்.
“நின்றே நெறி உணர்வான் ஒரு நினைவாளனை அழையா
நன்றோ பழுது உளதோ நடுஉரை நீ நயம் என்ன
குன்றே புரைதோழன் எதிர் புள்ளின் குறி தேர்வான்
இன்றே வரும் இடையூறு அது நன்றாய் விடும் என்றான் “
(பரசுராமப் படலம் 1214)
வெற்றி பெறுவதற்கான நிமித்தங்கள்
வேள்வித்தீ நறுமணம் பொருந்தி வலப்புறமாக சுழன்று வந்து நிமிர்ந்தது. நன்மையைத் தருவனவாகிய சிறந்த குறிப்பினை அது முறையாக உணர்த்தியது. அதனால் அரக்கர் குலத்தில் பிறந்து தோன்றுகின்ற கொடுமைகளை உடையவனாய் இந்திரசித் போர்க்களத்திலிருந்து தனக்கு வெற்றி தோன்றும் என்பதை முறைமையினால் உணர்ந்து கொண்டு பிரம்மாத்திரத்தைச் செலுத்துவதற்காக வானத்தே உயர்ந்து சென்றான்.
பிரம்மாத்திரம் செலுத்தினான். அத்திரத்தைக் கண் இமைப்பதற்கு முன் இந்திரசித் செலுத்தினான். பொன்மயமான பெரிய மலையிலே குருவிக்கூட்டங்கள் வந்து மொய்ப்பதைப் போல சொல்லும் தரம் அல்லாதவனவான ஒளி வீசுகின்ற அம்புகள் அந்த இலட்சுமணன் உடலில் பாய்ந்தன.
கோடி கோடி நூறாயிரம் கொடிய அம்புக் கூட்டங்கள் உடலை முழுவதும் மூடிச் சூழ்ந்தனவாய் மூழ்க, இடையில் செய்வது இன்னது என்று உணராத இலட்சுமணன், தனது அறிவு ஒடுங்கிப் போக, வலிய பெரிய யானை செயல் இழந்து படுக்கையில் அடங்கினாற் போலக் களைத்து விட்டான்.
“இன்ன காலையில் இலக்குவன் மேனி மேல் எய்தான்
முன்னை நான்முகன் படைக்கலம் இமைப்பதன் முன்னம்
பொன்னின் மால் வரைக் குரீஇ இனம் மொய்ப்பது போலப்
பன்னல் ஆம் தரம் அல்லன சுடர்கணை பாய்ந்த”
(பிரம்மாத்திரப் படலம் 2552)
சீதையின் கண்கள் துடித்தன
அசோகவனத்தில் இருக்கும் சீதை, தன் கண்கள் துடித்ததைப் பற்றி கூறுகிறாள்.
“பொலந்துடி மருங்குலாய் புருவம் கண்முதல்
வலம் துடிக்கின் றிலவருவது ஓர்கிலேன்”
(காட்சிப்படலம் 360)
தன்னுடைய கண்கள் இப்போது இடப்பக்கமாகத் துடிக்கின்றன என்று திரிசடையிடம் கூறுகிறாள். நல்லது நடக்கும் போது, என்கண்கள் இடப்பக்கம் துடிக்கும். முன்பு இராமன், விசுவாமித்திரருடன் மிதிலை நகருக்கு வந்த போது, இடக்கண்கள் துடித்தன.
“முனியொடு மிதிலையில் முதல்வன் முந்து நாள்
துனி அறு புருவமும் தோளும் நாட்டமும்
இனியன துடித்தன ஈண்டும் ஆண்டு என
நனி துடிக்கின்ற ஆய்ந்து நல்குவாய்”
(காட்சிப்படலம் 361)
முன்பு இராமன் நாடு முழுவதையும் பரதனே பெரும்படி அதைத்துறந்து காட்டுக்கு வந்த நாளில், என் கண்ணும், புருவமும் வலப்பக்கம் துடித்தன.
“மறந்தெனன்இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்
அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன்
பிறந்த பார் முழுவதும் தம்பியே பெறத்
துறந்து கான் புகுந்த நாள் வலம் துடித்ததே”
(காட்சிப்படலம் 362)
இராவணன் தண்டகாரணியத்தில் வஞ்சச்செயலைச் செய்ய வந்த போது, எனக்கு வலப்பக்கமே துடித்தன என்கிறாள்.
“நஞ்சு அனையான் வனத்து இழைக்க நண்ணிய
வஞ்சனை நாள் வலம் துடித்த வாய்மையால்
எஞ்சல் ஈண்டுதாம் இடம் துடிக்குமால்
அஞ்சல் என்று இரங்குதற்கு அடுப்பது யாது என்றாள்”
(காட்சிப்படலம் 363)
முடிசூட்ட நாள் குறிக்க ஜோதிடர்களை அழைத்தல்
தசரதன், இராமனுக்கு முடி சூட்ட எண்ணியதை அமைச்சரவையில் பேசி அவர்களின் முடிவையும் அறிந்து கொண்டான். பின் அரசவையை விட்டு குற்றமற்ற நாளுடன் ஒரு மங்கள நேரத்தையும் பார்ப்பதற்காக ஜோதிட நூலை அறிந்தவர்களைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு மலையைப் போன்ற மற்றொரு மண்டபத்துக்குச் சென்றான்.
“உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு ஒரு
வரை பொரு மண்டபம் மருங்கு கோயினான்”
(மந்திரப் படலம் 85)
முடி சூட்ட நாள் பார்த்தல்
ஜோதிட நூல்களில் வல்லவர்கள் உன் மகனுக்கு மகுடம் சூட்ட பொருந்திய மங்கள நாள் நாளையே ஆகும் என்று தெரிவித்தனர்.
“பொருந்து நாள் நாளை நின் புதல்வர்க்கு என்றனர்
திருந்தினார் அன்ன சொல் கேட்ட செய் கழல்”
(மந்தரை சூழ்ச்சிப்படலம் 95)
அந்த இனிய சொல்லைக் கேட்ட தசரதன் மாசற்ற தவம் செய்த நோய் நீங்கும் மருந்து போன்ற வசிஷ்டன் இங்கு வருவானாக என்று கூற, வசிஷ்டர் அங்கு வந்தார். தசரதன், வசிஷ்டனை நோக்கி நல்ல நன்மை அமைந்த முடி சூடுவதற்கான மங்கள நேரம் பொருந்திய நாள் நாளையே ஆகும். எனவே வில் வீற்றிருக்கும் தோளை உடைய இராமனுக்கு இன்று செய்ய வேண்டிய சடங்குகளை விரைவாக செய்து, உறுதி பயக்கும் உபதேச உரைகளை விளக்கமாகக் கூறுக என்று வணங்கிக் கூறினான்.
நல்ல நாள் பாராமல் பரதன் புறப்படல்
வசிஷ்டன், பரதனிடம் தூதுவர்களை அனுப்பினான். பரதன் அயோத்திக்குப் புறப்பட ஏற்றதான நல்ல நாளையும், நல்ல வேளையையும் பாராமல் சேனைகள் புறப்படட்டும் என்று ஆணையிட்டான். பின்பு கேகய அரசனை அடைந்து வணங்கி, அவனுடைய அனுமதியைப் பெற்றுக்கொண்டு தன்னை எப்போதும் பின்தொடரும் தம்பியாகிய சத்ருகணனுடன் தேரில் ஏறிப் புறப்பட்டான்.
“எழுக சேனை என்று ஏவினான் எய்தினன்
தொழுது கேகயர் கோமகன் சொல்லொடும்
தழுவு தேரிடைத் தம்பயொடு ஏறினான்
பொழுதும் நாளும் குறித்திலன் போயினான்”
(பள்ளிபடைப் படலம் 791)
இராமன் திரும்பி வரும் நாள்
இராமனின் பாதுகைகளைப் பெற்ற பரதன் நந்தியம்பதியில் அவன் வரவை எண்ணி கண்ணீர் மல்க காத்திருந்தான். இராமன் திரும்பி வரும் நாள் எது என்று ஜோதிடர்கள் குறித்துச் சொன்ன நாளை எண்ணினான். இராமன் எப்போது இங்கு வருவான் என்று எண்ணிய பரதன், தன் ஏவலாளர்களைப் பார்த்து மாட்சிமையுடைய ஜோதிடத்தில் வல்ல வாக்குநலம் உள்ள புலவரை இங்கு அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டான். அந்த ஜோதிடர்கள் வந்து ஆண்களில் சிறந்தவனான இராமனுக்கு இன்றைய தினம் 14 ஆண்டுகள் வனவாசம் முடியும் காலம் என்று சொன்னார்கள்.
“யாண்டு வந்து இங்கு இறுக்கும் என்றெண்ணினான்
மாண்ட சோதிட வாய்மைப் புலவரை
ஈண்டுக் கூய்த் தருக என்ன வந்து எய்தினார்
ஆண்தகைக்கு இன்று அவதி என்றார் அரோ”
(மீட்சிப்படலம் 4101)
முடிசூட நாள் பார்த்தல்
பதினான்கு வருட வனவாசம் முடிந்தபிறகு பரதன் வசிஷ்டரையும் மற்ற ஜோதிடத்தில் வல்லவர்களையும் அழைத்து வருக என்று அமைச்சர் சுமந்திரனுக்கு ஆணையிட்டான். தேர் ஓட்டுவதில் வல்லவனான சுமந்திரன் அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்தார். பரதன் அந்த வசிஷ்ட முனிவர் அமர்வதற்கு இருக்கையை அளித்தான். காப்பு நாண் அணிவதற்கு உரிய நாள் எந்நாள் என்று வினவிய அந்த பரதனைப் பார்த்து, பெருமையுடைய பூதேவியுடன் உரிய தாமரை மலரில் வீற்றிருக்கின்ற திருமகளுடன் கூடி மணமகிழ்ந்து நீண்ட காலம் இராமன் ஆட்சி செய்வதற்குப் பொருந்திய காப்பு அணிவதற்குரிய நாள் நாளை ஆகும் என்று சொன்னார்.
தேவர்களின் குருவான பிரகஸ்பதியை ஒத்தவராய் எத்தனையோ பேர் என எண்ணுமாறு பலராக இருந்த மந்திரங்களில் வல்லவரும் வசிஷ்ட முனிவனும், சந்திரனைப் போன்ற ஒன்றை வெண்குடை உயர்ந்து விளங்கும் தசரதராமனுக்கு ஒளி பொருந்தியதும் அழகுள்ளதுமான திருமுடி சூடுகின்ற நல்ல நேரத்தையும் நாளையும் ஆராய்ந்து எழுதி விரைவாக பல மன்னருக்கும் செய்தியை அனுப்பினர்.
“இந்திர குருவும் அன்னார் எனையவர் என்ன நின்ற
மந்திர விதியினாரும் வசிட்டனும் வரைந்து விட்டார்
சந்திர கலிகை ஓங்கும் தயரத ராமன் தாமச்
சுந்தர மவுலி சூடும் ஓரையும் நாளும் நோக்கி”
(திருமுடிசூட்டுப்படலம் 4255)
கணி தொழில் புரியும் வேங்கை
வரைக்காட்சிப் படலத்தில் குறிஞ்சி நில குமரிகள் இசை போலப் பேசும் பவளம் போன்ற சிவந்த வாயையும் குளிர்ச்சியான குவளையையும் போன்ற கண்களையும் தாமரை மலர் போன்ற முகத்தையும் உடையவர்கள் பெண்களுக்கு நல்ல காலத்தை அதன் மூலம் அறிவித்து ஜோதிடரின் தொழிலை செய்வன வேங்கை மரங்கள் மலர்ந்த பூக்களில் தேனை உண்டு அதன் பின் அவற்றை வெறுத்த வண்டுகள் புதிய தேனை தரும் சுரபுன்னை மரத்தின் குளிர்ந்த மலர்கள் இவை என நினைத்து வானத்தை விளங்கும் நட்சத்திரங்களின் மேல் தாவிச்செல்லும்.
“பண்மலர் பவளச் செவ்வாய் பனி மலர்க் குவளை அன்ன
கண்மலர்க் கொடிச்சிமாருக்கு கணித் தொழில் புரியும் வேங்கை
உண் மலர் வெறுத்த தும்பி புதிய தேன் உதவும் நாகத்
தண்மலர் என்று வானத் தாரகை தாவும் அன்றே”
(வரைக்காட்சிப் படலம்794)
முடிவுரை
ஜோதிடம் என்பது கோள்களின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றினால் ஏற்படும் நன்மை, தீமைகளைக் கணித்துக் கூறுவதாகும். மக்கள் தங்கள் செய்யப் போகும் நிகழ்ச்சிகளைத் தொடங்கும் முன் நாள் கோள் நோக்கியும், பல்வகை நிமித்தங்களை ஆராய்ந்தும் செயல்களைத் தொடங்கினர். கம்பராமாயணத்தில் புதல்வர்கள் பிறந்ததும் ஜோதிடர் நாள் பார்த்தல், திருமணத்திற்கு நாள் குறித்தல், முடிசூட்ட நாள் குறிக்க ஜோதிடர்களை அழைத்தல், இராமன் திரும்பி வரும் நாள் என்று பல நேரங்களில் ஜோதிடர்களை அழைத்து ஜோதிடம் பார்த்துள்ளனர் என்பதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.
துணைநூற்பட்டியல்
1.இராம சுப்பிரமணியன்.வ.த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
2.இளம்பூரணர் உரை, தொல்காப்பியம்-பொருளதிகாரம், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் சென்னை, 1953
3.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்..