
கட்டுரையாளர்: முனைவர்.கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.
மானுட சமூகத்தின் இயங்கியல் வழக்காறுகளில் உறைகிறது எனலாம். வாழ்வியல் ஒழுகலாறுகளை அடியொற்றிய தகவமைப்பு, பண்பாடு மற்றும் மரபுநிலை போன்ற கூறுகளாலான வழக்காறுகள் மரபறிவின் திரட்சியாகும். ஒருவகையில், வழக்காறுகள் வரலாறுகளுக்கு அடிப்படையாகத் திகழ்வதையும், வரலாற்றைவிட மேலோங்கி நிற்பதையும் மறுப்பதற்கில்லை. நாட்டுப்புறவியல், மானுடவியல் போன்ற அனைத்து நிலையிலான ஆய்வுகளுக்கும், குறிப்பாக, மானுடவியல் ஆய்வுகளுக்கு அடிச்சரடாகத் திகழும் இவை பண்பாட்டின் தொகைநிலையெனலாம். அவ்வகையில், ஆயர்வாழ்வியலின் களஞ்சியமாகத் திகழும் திருப்பாவையில் இன்றும் வழக்கிலுள்ள சில ஆயர் வழக்காறுகளை இக்கட்டுரை ஆய்கிறது.
திருப்பாவையின் களம் ஆயர்பாடியாகும். அதில் ஆயர்களின் பல்வேறு வழக்காறுகள் செறிந்துள்ளன. ஆயர்ச் சமூகத்தைக் கூர்ந்த கள ஆய்வின் விளைவாக எழுந்த இலக்கியமாக இதைத் துணியலாம். அதோடு, இதில் இடம்பெறும் சில ஆயர் வழக்காறுகள் சங்கம்தொட்டு வழக்கிலிருப்பவை. அதனைச் சங்க, ஆயர்ச் சமூகத்தின் தொடர்ச்சியாகவும் அச்சமூகத்தின் நெடிய பண்பாட்டினை, மரபினை வெளிப்படுத்தும் நிலைக்களன்களாகவும் கொள்ளலாம். அவ்வகையில், ஆய்வின் எல்லைகருதி, திருப்பாவையில் இடம்பெறும் ‘சிறுவீடு’, ‘காசும் பிறப்பும்’ ஆகிய தொன்மையான ஆயர் வழக்காறுகளை நீலகிரியில் வாழ்கின்ற ஆயர்களான ‘படகர்’ இனமக்களின் வழக்காறுகளுடன் இணைத்து இக்கட்டுரை ஆய்கிறது.
படகர்கள் எனும் ஆயர்கள்
நீலகிரியில் வாழ்கின்ற படகர்கள் ஆயர்கள் என்பதை அவர்களின் ‘படகா’ எனும் பெயரே சான்றுபகர்கின்றது. ஆயர் என்பதும் ஆயர்பாடி என்பது எவ்வாறு ஆநிரை வாழ்வினைச் சுட்டுகின்றதோ அதேபோல, ‘பண்டுகா’ எனும் சொல்லிலிருந்து உருவான ‘படகா’ எனும் சொல்லும் ஆயர் வாழ்வியலை உணர்த்துகின்றது. படகர்களின் மொழியான ‘படுகு’ மொழியில் ‘பண்டா’ எனும் சொல் மந்தைகளை, குறிப்பாக எருமை மந்தைகளைக் குறிக்கிறது. எருமை மந்தைகளைப் பேணுபவர்கள், எருமை மந்தைகளை உடையவர்கள் எனும் அடிப்படையில் இவர்களின் வாழ்வியலை இப்பெயர் குறித்து நிற்கின்றது. அதற்கேற்பவே, அவர்களின் வாழ்வியலிலும் எண்ணற்ற எருமைகள் சார்ந்த வழக்காறுகள் விரவியுள்ளன. சான்றாக அவர்களின் வாழ்வியலை வரையறுக்கும் “பண்டா பதுக்கு” எனும் இணைச்சொல்லினைக் கருதலாம். இதில் ‘பதுக்கு’ எனும் சொல்லிற்கு வாழ்வு என்றும் ‘பண்டா’ என்பதற்கு ஏற்கனவே கண்டதுபோல எருமை மந்தையென்றும் பொருள். அதாவது, எருமை மந்தைகளே வாழ்வு என்பதை இது சுட்டுகின்றது.
நீலகிரி மலையின் கோடுகளிலும், அதையொட்டிய சரிவுகள் மற்றும் குன்றுகளிலும் ‘அட்டி’ எனும் குடியிருப்பினை அமைத்து வாழ்ந்துவருகின்ற படகர்களின் நெடுவாழ்வில் எருமைகள் தவிர்க்க வியலாதவை. அதோடு, அவர்களின் மரபார்ந்த சடங்குகளின் மையம் எருமைகளையே உட்தரித்துள்ளன. ஆநிரைப் பேணலையும் அதோடு மலைப்புல வேளாண்மையினையும் மேற்கொண்டுவரும் இச் சமூகத்தார் தொன்மையான வாழ்வியலிற்காக யுனெஸ்கோவால் உலகப் பூர்வ குடிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள்.

சிறுவீடும் படகர்களும்
‘சிறுவீடு’ எனும் சொல் ஆயர்களின் தொன்மையான வழக்கினைக் குறிக்கிறது. இதை, ஆண்டாள் திருப்பாவையில் பதிவுசெய்கிறார். பாவை நோன்பின் பயனை ஆயர்குலப் பெண்களெல்லாம் பெறவேண்டி, அவர்களைத் துயிலெழுப்ப முயலும் ஆய்மகளொருத்தி பொழுது புலர்ந்ததற்கான சமிக்ஞைகளைப் பட்டியலிடுகிறாள். அதன்வழி,
“கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான்”
(திருப்பாவை.பா.8.1-2)
என்கிறாள். அதாவது, கீழ்வானம் வெளுத்தபிறகு எருமைகளை மேய்ச்சலிற்கான தயாரிப்பிற்காகத் திறந்துவிடும் வழக்காறினை இவ்வரிகள் வெளிப்படுத்துகின்றன. இது, ஆயர் வாழ்வின் மூலமாகும். இதனைப் படகர்களின் வாழ்வியலோடு பொருத்திப்பார்க்கவும் இடமுண்டு.
படகர்களின் வாழ்களமான ‘அட்டிகளில்’ ‘அணெ’ எனும் பகுதியுண்டு. இது, எருமைகள் மேய்வதற்கான சிறிய புல்வெளியாகும். இது, இவர்களின் வாழ்களத்தின், வாழ்வியலின் மையமாக இருப்பதை ‘அட்டணெ’ (அட்டி – ஊர், அணெ – சிறு மேய்ச்சல்வெளி) எனும் இவர்தம் சொல்லாட்சி நிறுவுகின்றது.
‘அணெ’களில் அமைத்திருக்கும் எருமைகளை அடைக்கும் திறந்தவெளிப் பட்டியினை இவர்கள் ‘தோ’ என்கின்றனர். சிறு சிறு பாறைகளையும் கற்களையும் கொண்டு கட்டப்பட்ட வட்டவடிவிலான இந்தத் தோக்களில் இரவு முழுதும் எருமைகளை அடைப்பதுண்டு. இவர்களிடையே எருமைகளைக் கட்டும் வழக்கம் கிடையாது. இது, இவர்தம் மரபுபடி பெரும் பாவமும்கூட. எனவே, அடைப்பதற்கு உகந்த இடமாக இந்தத் தோக்கள் திகழ்கின்றன. இதன் வாசலினை இவர்கள் ‘கெணெ’ எனும் கணமான கம்புகளைக் கொண்டு அடைப்பதுண்டு. புலி, சிறுத்தை போன்ற விலங்குகளுக்குக் காப்பாகத் தோக்களின்மீது முட்களைப் பரப்புவதுண்டு. இரவுமுழுக்க காய்ந்த எருவினைப் புகைப்பதுண்டு. தோராயமாக 50 முதல் 100 வரையிலான எருமைகளை அடைக்கும் இடமாக இது திகழும். பிறந்து ஆறுமாதம்வரை எருமைக் கன்றுகளை இந்த இடத்தில் அடைத்தால் அவை மிதிப்படும் என்பதற்காக, முதல் ஒரு மாதம் வரை வீட்டின் ‘அடிகோட்டு’ எனும் பகுதியிலும், சற்று வளர்ந்தபிறகு ‘கொட்டகெ’ எனும் வீட்டின் முற்றத்திலும் அடைப்பதுண்டு. அதேபோல, ஒரு வருடம்வரை எருமைக் கன்றுகளை அணெக்கு வெளியில் அதாவது, காடுகளுக்கு மேய்ச்சலுக்கு அனுப்புவதில்லை.
படகர்கள் அதிகாலையில் வெள்ளி முளைப்பதை விடியலிற்கான குறியாகக் கொள்வர். அதன்பிறகு, ‘கரி அக்கிலு’ எனும் பறவையினத்தின் ஒலியை விடிந்ததற்கான உறுதியாகக் கொள்வதுண்டு. ஏனெனில், அவர்களின் வாழ்விடத்தில் இப்பறவையே முதலில் விழிக்கும். அதோடு, சற்று ஓங்கியும் குரலெழுப்பும். இது ஒலியெழுப்புவதை ‘கரிஅக்கலு ஆதரா’ என்று மரபுகொண்டு இவர்கள் சுட்டுவதுண்டு. சற்று சப்தமாக ஒலியெழுப்பி விளிப்பதை இவர்களின் ‘ஆதரா’ எனும் சொல் விளக்குகின்றது. இந்த வழக்கினையும் “கீசுகீ சென்று ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ” (திரு.பா.7.1-2) எனும் ஆண்டாளின் வரியோடு பொருத்தி நோக்கலாம். ஆண்டாள் கூறும் இந்த ஆனைச் சாத்தன் என்பது இந்தக் கரி அக்கிலு பறவையாக இருக்கலாம். இப்படிக் கொள்வதற்கு நுட்பமான ஓர் ஒப்புமையுண்டு. நாயின் குரைப்பானது உள்ளுறைப் பொதிந்தது. அதாவது, தனது குரைப்பொலி தனதருகிலோ, சற்றுத் தொலைவிலோ இருக்கும் மற்றொரு நாயிற்கு அது செய்கின்ற செய்திப் பரிமாற்றமாகும். இது ஓர் அலைவரிசைபோல நீளும். இதேபோலவொரு இயல்பு ஆனைச்சாத்தனுக்கும் இருப்பதை “கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ” என்று ஆண்டாள் அறிவிக்கிறாள். இதை, படகர்களின் ‘கரிஅக்கிலு ஆதரா’ எனும் மரபுநிலையோடு பொருத்திப்பார்க்க மேலதிக இடமுண்டு. மேலும், கரிஅக்கிலே ஆனைச்சாத்தன் என்று துணிவதற்கும் இடமுண்டு. பெரும்பாலும் படகர் பெண்கள் இந்தக் கரிஅக்கிலுப் பறவையின் ஒலிகேட்டப்பிறகு உறங்குவதில்லை. ஆண்கள் அதற்கு முன்னமே எழுந்துவிடுவதுண்டு.
வெள்ளி முளைத்தவுடன் முதல்பணியாக எருமைகளை அடைத்துள்ள தோவின் வாசலை இவர்கள் திறந்துவிடுவதுண்டு. அப்போது, இரவெல்லாம் கிடந்துறங்கிய எருமைகள் தமது சோம்பலினை முரித்துக் கொள்ள தோவிற்கு அருகிலிருக்கும் ‘அணெயில்’ சிறுமேய்ச்சல் கொள்ளும். பொழுது தெற்றென புலர்ந்தபிறகு அவற்றை மேய்ச்சலிற்காகக் காட்டிற்கு அழைத்துச்செல்வர். இந்தச் சிறுமேய்ச்சலே ஆண்டாள் கூறும் ‘சிறுவீடு’ ஆகும். சுற்றியுள்ள தோக்களிலுள்ள எருமைகளை மேய்ச்சலிற்காக ஒருங்கிணைப்பதற்கான செயல்பாடாகவும், காலையில் பால்கறக்கும் சில எருமைகளைத் தயார்செய்யும் செயல்பாடாகவும் இது விளங்குகின்றது.
எருமைகளைச் சிறுவீடு அனுப்பும்போது படகர்கள் மேலதிக கவனத்துடன் இருப்பதுண்டு. அதிகாலையில் வெள்ளி முளைத்ததை இவர்கள் பலமுறை சோதிப்பதுண்டு. ஏனெனில், வெள்ளி முளைப்பதற்குமுன்பு வானில் இருக்கும் ஒருவிதமான மீனினை இவர்கள் ‘எத்து கெடிசி மீனு’ என்கின்றனர். அதாவது, நிலத்தை உழும் எருமைகளை இவர்கள் ‘எத்து’ என்கின்றனர். இது ‘எருது’ என்பதன் திரிபாக இருக்கலாம். ஆண் எருமையினைக் குறிக்கும் ‘கோணா’ எனும் சொல்லாட்சி படகர்களிடையே இருந்தபோதும் உழுதல், போர் அடித்தல் ஆகிய செயல்நோக்கியதாக ‘எத்து’ எனும் சொல்லாட்சி விளங்குகின்றது. இவர்களிடம் மாடுகள் சார்ந்த வழக்கம் வந்தபிறகு ‘எத்து’ என்பது எருதினைக் குறித்து நின்றது. அதாவது, தோவினைத் திறந்ததும் முதலில் வெளியில் வருவது அந்த மந்தைக் கூட்டத்தை வழிநடத்தும் கோணா எருமையே. வெள்ளி முளைப்பதற்கு முன்பு இந்த எத்து கெடிசி மீன் எழுந்திருக்கும்போது புலி, சிறுத்தைகள் போன்ற வேட்டையாடும் விலங்குகள் தோவினைச் சூழ்ந்து காத்திருக்கும். கெணெயை அகற்றியதும் முதலில் வெளியேறும் இந்த ஆண் எருமைகளை அவை எளிதில் வேட்டையாடிவிடுகின்றன. எனவே வெள்ளிபோல் இருந்து ஏமாற்றும் இந்த விண்மீனினை இவர்கள் ‘எத்து கெடிசி மீனு’ (கெடிசி – கெடுக்கும்) என்கின்றனர். எருமைகள் சார்ந்த சிறுமேய்ச்சலான இந்தச் சிறுவீடும், அந்தச் சிறுவீட்டிற்கான இடமும் படகர்களிடம் இன்றும் தொடர்வது நோக்கத்தகுந்தது.

குப்பிகெ மணி
படகர்களின் மரபார்ந்த ஆபரணங்களுள் ‘குப்பிகெ மணி’ (கா.பி.இ.நி.ப.1) இன்றியமையாத வொன்றாகும். இவ்வணியைக் ‘குப்பிலு மணியென்றும்’ இவர்கள் அழைப்பதுண்டு. ஏறநோக்கின் ‘குப்பிகெ’, ‘குப்பிலு’ என்பது ஒரே பொருளைத் தருவன. ‘குப்பிலு’ என்ற படகச்சொல்லிற்குக் கூட்டம் என்றுபொருள். எருமை மந்தையினை இவர்கள் ‘குப்பிலு’ என்றழைப்பதுண்டு. இந்தக் குப்பிலுவைக் கொண்டே எருமை மந்தைகளை அளவிடுவதுண்டு. இக் குப்பிலுவிற்கும் இவர்களின் மரபார்ந்த ஆபரணமான ‘குப்பிகெ மணிக்கும்’ பெரும் தொடர்புண்டு.
படகர்களிடையே தாலிகட்டும் வழக்கில்லை. அதேபோல, ஜோசியம், ஜாதகம் போன்ற எவ்விதமான கட்டுப்பாடும் கிடையாது. மறுமணம், மணவிலக்குப் போன்ற எல்லா உரிமைகளும் தொன்றுதொட்டு இவர்களிடமுண்டு. திருமணத்திற்குப் பெண்கேட்டு, உறுதிப்படுத்தி, ஆண்வீட்டிற்கு அழைத்துவரும்போது பெண்வீட்டின் சார்பாகவும், ஆண்வீட்டினை அடைந்தவுடன் ஆண்வீட்டின் சார்பாகவும் இந்த ஆபரணத்தை மணமகளுக்கு அணிவிப்பதுண்டு. இது, மணப்பெண்ணிற்கான மணஉரிமையின் குறியீடாகும். அதிலும், இதை உரிமைக் குறியீடுகளின் தொகையெனலாம். வெள்ளியாலான இவ்வணி கோர்க்கப்பட்ட சரடுடன் சேர்ந்து ஐந்து அணிகளின் தொகையாகும்.
குப்பிகெ மணியின் நடுவில் அமைந்திருக்கும் சற்று திண்ணமான அணியினை இவர்கள் ‘குப்பிலு’ என்கின்றனர். அது, பலவகையான வடிவுடைய கதம்பம்போன்று அமைந்திருக்கும் (கா.பி.இ.நி.ப-2). இதனை மையமாக வைத்தே அதன் இரு பக்கத்திலும் மருங்குவரை ‘குண்டு’ (கா.பி.இ.நி.ப.3), ‘குசுறு’ (கா.பி.இ.நி.ப.4), எனும் இருவடிவிலான மணிகள், இரண்டு ‘குசுறு’ இரண்டு ‘குண்டு’ என்ற வகைதொகையில் கோர்க்கப்பட்டிருக்கும். இதன் இரு விளிம்பிலும் ‘உங்கர’ (கா.பி.இ.நி.ப.5) எனும் இரண்டு மோதிரங்கள் சரடோடு கட்டப்பட்டிருக்கும். இந்நான்கு ஆபரணங்களின் குவியலாக இருப்பதால் இவ்வணி ‘குப்பிலு மணி’ எனும் பெயரினைப் பெறுகின்றது. இதை சிலர் கோர்க்கப்பட்டுள்ள முறையினைக் கொண்டு ‘மாலெ மணி’ என்றும் அழைப்பதுண்டு. இந்தக் கோர்வை மணிகள் நான்கிற்கும் தனித்த குறியீட்டுத் தன்மைகள் உண்டு.
குப்பிகெ மணியில் உள்ள அறுகோண வடிவில் அமைந்த சற்றுத் திண்ணமான ஆபரணமான ‘குண்டு’ என்பது ஆண் தன்மையின் குறியீடாகும். படகர்களிடையே ஆண் குழந்தை பிறந்தால் இந்தக் ‘குண்டு மணிகள்’ ஐந்தினைக் கோர்த்து அக்குழந்தைக்குக் கட்டுகின்றனர். அதேபோல, இவ்வணியிலுள்ள வட்டவடிவிலான ‘குசுறு’ மணியானது பெண்தன்மையின் குறியீடாகும். பெண்குழந்தை பிறந்தால் இந்தக் ‘குசுறு மணியினை’ அதே எண்ணிக்கையில் கோர்த்துக் கட்டுகின்றனர். குப்பிகெ மணியின் இரண்டு விளிம்பிலுமுள்ள ‘உங்கரா’ எனும் மோதிரமானது உரிமையின் குறியீடாகும். அதேபோல, ஏற்கனவே கண்ட, இவ்வணியின் நடுவில் அமைந்துள்ள ‘குப்பிகெ’ என்பது எருமை மந்தைகளின் குறியீடாகும். ஆக, மணமகளானவள் பிறந்தகம் மற்றும் புகுந்தகத்தின் எருமை மந்தைகள், ஆண்கள், பெண்கள் ஆகியவற்றைப் பேணுகின்ற, கவனம் செலுத்துகின்ற பொறுப்புணர்வின் குறியீடாக இவ்வணி திகழ்கின்றது. இந்த அணி இவர்களின் வாழ்வினை வரையறுக்கின்ற ஒன்றாகவும் திகழ்வது நோக்கத்தகுந்தது. இவ்வணியினை ஆண்டாளின்,
“காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?”
(திரு.பா.7.3)
எனும் வரியோடு ஒப்புநோக்கலாம். மத்தால் தயிர்கடையும்போது அசைந்து உரசி ஒலியெழுப்பும், “காசும் பிறப்பும்” எனும் ஆயர்களின் ஆபண வழக்கினைப்போலவே படர்களிடம் இந்தக் ‘குப்பிலுமணி’ விளங்குகின்றது. இது சங்கம்தொட்டு ஆயர்களிடம் வழக்கிலுள்ள வழக்காறாகவும் இருக்கலாம். படகர்களிடையே மரபார்ந்த ஆபரணமாக நீளும் இதிலும் எருமையே முன்னிலை வகிப்பதை நோக்கலாம்.
மூதாதையர் மற்றும் முன்னோர்கள் வழிபாட்டினைக் கடைப்பிடிக்கும் படகர்கள் தம் பெண் மூதாதையர்களை ‘முத்தே’ என்றும், பெண் முன்னோர்களை ‘எத்தெ’ என்றும் அழைக்கின்றனர். தாயை, ‘ஒளவெ’ என்றழைக்கும் இவர்களிடம், ‘முத்தே’ என்பது மூதாய் எனும் சங்கசொல்லின் திரிபாகவிருக்கலாம். இவர்களிடையே கோயில் வழக்கில்லை. ‘தொட்டமனெ’ என்றழைக்கும் முன்னோர்களின் வீடுகளே இவர்களின் வழிபாட்டுத் தலங்கள். இவர்தம் வாழ்க்கைவட்டச் சடங்குகள் முழுக்க இங்கேயே நிகழ்த்தப்படுகின்றன. தமது மூதாதையர்களுக்கு மேற்கொள்ளும் சடங்குகளில் பூசைசெய்யும்நபர் இந்தக் ‘குப்பிலு மணியை’ அணிவதுண்டு. இதை இவர்களின் தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகக் கருதலாம். மேலும், தம்முடன் பிறந்த அக்காள் மகளை இவர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை. இதுவும் இவர்களின் தாய்வழிச் சமூக மரபினைக் காட்டுகின்றது.
‘குப்பிலு மணி’ ஆபரணத்தைத் தாலியாகக் கருதவும் இடமில்லை. இதை, இந்தச் சடங்கியல்சார்ந்து அணிவதைத் தவிர்த்து, கட்டாயமாக அணிய வேண்டுமென்ற கட்டாயமில்லை. இரவில் உறங்கச் செல்லும்போது கழற்றி வைப்பதுண்டு. மேலும் இதை, பிறந்தகம், புகுந்தகமென்று ஆண்வீட்டோடு மட்டும் தொடர்பின்றி இருவீட்டோடும் தொடர்புடையதாகவும் திகழ்கிறது.
திருப்பாவைச் சுட்டும் ஆயர் வழக்காறுகளான சிறுவீடு, காசும் பிறப்பும் எனும் ஆபரணம், ஆனைச்சாத்தன் பறவை போன்ற வழக்காறுகள் இன்றும் படகர்களிடம் வழக்கிலுள்ளதை நோக்கலாம். இந்தத் தொன்மையான வழக்காறுகள் இவர்களின் சடங்குகளோடு பின்னிப்பிணைந்தவை. மேலும், குறியீட்டு நிலைகளைத் தரித்தவை. இந்த ஆபரண ஆக்கத்திற்கு மையமாய் அமைந்த, உலோகக் காலத்திற்கு முந்தைய, இந்த ஆபரணத்தில் உட்செறிந்துள்ள குறியீட்டுநிலைகளை இயற்கையாகவே உட்செறித்த தாவர வழக்காறுகளும் இவர்களிடம் வழக்கிலுண்டு. இந்த இயற்கைசார்ந்த நிலையின் அடுத்த பரிமாணமாக இவ்வாபரணத்தைக் கொள்ளலாம். படகர்களிடம் இன்றும் வழக்கிலுள்ள, என்றும் வழக்கிலிருக்கும்படி சடங்குகளோடு பிணைந்த இவ்வழக்காறுகள் இவர்தம் நெடிய ஆயர்வாழ்வியலைத் தக்கவைத்திருக்கின்றன.

துணைநின்றவை
1. திருப்பாவை, வானதி பதிப்பகம், சென்னை, 2014.
2. கோ.சுனில்ஜோகி, நீலகிரி படகர்களின் மரபுசார் பண்பாட்டுப் புழங்குபொருட்கள், முனைவர்பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், 2015.
3. பண்பாட்டு மானுடவியல், சீ.பக்தவத்சலபாரதி, அடையாளம் வெளியீடு, 2019.
4. பொறங்காடு சீமை படகர்களின் மூலிகை மருத்துவம், கோ.சுனில்ஜோகி, ஆய்வியல் நிறைஞர்பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், 2011.
5. படகர்களும் வெள்ளியும் ஓர் குறியீட்டியல் பார்வை, ஆய்வுக்கட்டுரை, பதிவுகள் பன்னாட்டு மின்னிதழ், கனடா, 2022.
6. நீலகிரியின் பெருநிலப்பரப்பும் படகர்களின் நிலவியல் அறிவும், ஆய்வுக்கட்டுரை, பதிவுகள் பன்னாட்டு மின்னிதழ், கனடா, 2022.
7. நெலிகோலு எனும் தீக்கடைக்கோலும் படகர்களும், ஆய்வுக்கட்டுரை, பதிவுகள் பன்னாட்டு மின்னிதழ், கனடா, 2022.
மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.