அரிஸ்டோட்டில் (கி.மு 384 - 322)

கி.மு 384ல் கிரேக்க கொலனியான மெசடோனியா ஸ்ட்ரெஜிராவில் பிறந்த அரிஸ்டோட்டில் 17வது வயதில் எதென்ஸில் உள்ள பிளேட்டோவின் அகெடமியில் பிளேட்டோவின் மாணவனாகச் சேர்ந்தார். கி.மு. 368ல் இருந்து 20 வருடங்கள் அங்கு கல்வி கற்றார். பிளேட்டோவின் மரணத்தின் பின்னர் அரிஸ்டோட்டில் “லைசியம்” என்ற தனது கல்விக் கூடத்தை நிறுவினார். அதை ஆரம்பித்த பிறகு அரிஸ்டோட்டிலின் மெய்யியல் மற்றும் விஞ்ஞான ஆய்வுகள் பெரும் முன்னேற்றத்தை அடைந்தன. இவர் தனி ஒரு மனிதனாக வானவியல், உயிரியல், உடலியல் உடற்கூற்றியல், ஒழுக்கவியல், அரசியல் அளவையியல் எனப் பலதுறைகளை போதித்துச் சிறப்புப் பெற்றார்.

புலக்காட்சிக்கு உட்படும் தனித்தனிப் பொருட்களே புற உலகில் இருப்பவை. இவை அழியக் கூடியன. ஆனால் பொதுமைகள் நிலைபேறு உடையவை என்பது பிளேட்டோவின் கருத்து. அரிஸ்டோட்டில், ஒவ்வொருதனிப்பட்டபொருளும் உண்மையானதே. ஒவ்வொரு தனிப்பட்ட பொருளிலும் எல்லாவற்றிற்கும் பொதுவானதன்மைகள் உண்டு. அவை தனிப்பட்ட பொருள்களில் தான் புதையுண்டு கிடக்கிறது என்றார்.

அரிஸ்டோட்டில், பிளேட்டோவில் இருந்துமாறுபட்டு மனிதனின் சாதாரன வாழ்வுக்கும் மண்ணுலக அனுபவத்திற்கும் அமைவான ஒழுக்கவியல் சிந்தனையை முன்வைத்தார். அரிஸ்டோட்டில் ஒழுக்கவியலை அலட்சிய நோக்கில் பார்க்காது நற்பண்புகள் பற்றியதொரு ஆய்வாகப் பார்த்தார்.

மனித நடவடிக்கைகளின் இறுதி இலக்கு மகிழ்ச்சியாகும் என்ற நோக்கில் அரிஸ்டோட்டில் ‘மகிழ்ச்சியை’ முடிவான ஓர் விடயமாக எடுத்து நோக்குகின்றார். ‘மகிழ்ச்சி ’என்ற சொல்லை அரிஸ்டோட்டில் ஒரு விரிந்த பொருளில் கையாள்கின்றார். அதற்கு யூடைமோனியா என்ற பதம் கையாளப்படுகிறது. இப்பதம் மகிழ்ச்சி என அர்த்தப்பட்டாலும் இதனை அரிஸ்டோட்டில் ஒருவகை செயற்பாடாகக் கருதிச் செயற்பட்டார். உயர்ந்த நன்மையை இலக்காகக் கொண்ட மனித வாழ்வு பற்றியதாக இது அமைகிறது. இதுவே மனிதன் நாட வேண்டியதொரு இலக்காகும். இதனையே யூடைமோனியா என்ற பதம் அர்த்தப்படுத்துகிறது. இதுவே ஒரு வகை அறிவு ரீதியான ஆன்மீகச் செயற்பாடாக அமைகின்றது. இந்நிலைமையை அடைவதற்கு ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி அவசியமாக உள்ளது.

மனிதனுடைய அறவியல் செயற்பாடு ஒரு வகை பகுத்தறிவுசார் நடவடிக்கையாகவும் நன்மைக்குறியவிடயமாகவும் காட்டப்படுவதிலிருந்து. அறிவும் அறமும் இணைக்கப்படுவதை அவதானிக்கலாம். இத்தகைய இணைப்பை நாம் பிளட்டோவின் சிந்தனையிலும் காணலாம். விலங்கு நடத்தையிலிருந்து மனிதநடத்தை அறிவுசார் நடவடிக்கை மூலமே வேறுபடுகிறது. ஒரு மனித நடத்தை அறிவுசார் நடவடிக்கை மூலமே வேறுபடுகிறது. ஒரு மனித நடத்தை ஒழுக்கம் என்ற வரையறைக்குள் இடம் பெறவேண்டுமாகில், அந்நடத்தை பகுத்தறிவின் அடிப்படையில் இடம் பெற்றிருக்கவேண்டும். அவ்வாறு இடம்பெறுகின்ற போது தான் அது மனநிறைவை, மகிழ்ச்சியை எம்மில் உண்டு பண்ணும்.

பிளட்டோவை விட அரிஸ்ரோட்டிலின் ஒழுக்கவியல் கருத்துக்கள் கூடுதல் நடைமுறைத் தன்மையைக் கொண்டுள்ளது. இவர் மகிழ்ச்சிக்கான நடைமுறைக் காரணிகளான வறுமை, பிணி, செல்வம் பற்றியும் குறிப்பிடுகிறார். இவைகளும் மகிழ்ச்சிக்கான நிபந்தனைகளாகும் எனக் கருதுகின்றார். எனவே உண்மையான மகிழ்ச்சிக்கு பகுத்தறிவுக் காரணிகள் மட்டுமல்லாது நடைமுறைக்காரணிகளும் அவசியமாகும் என்பதை காட்டுகிறது.

ஒரு நல்லொழுக்கம் சார்ந்த நடத்தை இரு அர்த்தங்களுக்கு மத்தியிலுள்ள மத்தியபாதையில் அமைவதாக இருத்தல் வேண்டுமென அரிஸ்ட்ரோட்டில் கருதுகிறார். இரு தீவிர அர்தங்களுக்கிடையில் உள்ள மத்தியபாதையை அவர் இதற்கான மார்க்கமாகக் கருதினார். துணிவு என்பது முரட்டுத்தனத்திற்கும் கோழைத்தனத்திற்கும் இடையிலானது. தாராள மனப்பான்மை என்பது அளவு மீறி வாரி வழங்குவதற்கும், எதையும் வழங்காத கஞ்சத்தனத்திற்கும் இடைப்பட்டது. இது ஒரு வகை சமநிலையான நடத்தையை குறிக்கிறது. ஒரு விடயம் உறுதியாக அமைவதற்கு சமநிலை என்பது அவசியமானது. அவ் வகையில் அரிஸ்டோட்டிலின் இவ்விளக்கமும் நடைமுறைத் தன்மை வாய்ந்ததாகும்.

அரிஸ்டோட்டில் மனிதனுடைய மகிழ்ச்சியில் அரசின் இன்றியமையாமை பற்றியும் குறிப்பிடுகிறார். அரசின் குறிக்கோள் மனிதனது நிறைவான வாழ்க்கையாகும். பிளேட்டோ கருதியதைப் போலவே அரசின் நோக்கம் குடிமக்களின் ஒழுக்கமும் மகிழ்வுமாகும், என்பதையே அரிஸ்ரோட்டிலும் வலியுறுத்தினார். இது அவனது உலகியல் தேவைகளை நிறைவேற்றும் ஒரு அமைப்பாகும். எனவே மனிதனை மனிதனாக உயர்விக்க அரசு அவசியமாகும்.

அரிஸ்டோட்டில் கூறும் துன்பியல்

அரிஸ்டோட்டில் துன்பியல் பற்றிக் கூறும் கொள்கைகள், அவருடைய படைப்பான கவிதையியலில் இடம் பெற்றுள்ளன. கவிதையியல் ,கவிதைகளைப் பற்றிய விளக்கத்தோடு முடிகிறது. துன்பியல் கதை வடிவங்களில் மிகவும் மேலானது என்பது அரிஸ்டோட்டிலின் கொள்கை. துன்பியல் என்பது கருத்தாழம் மிக்கதும் நிறைவானதுமான ஒரு செயலைப் போலச் செய்துகாட்டுதல் என்றார். போலச் செய்வதென்பது கதை கூறும் முறையிலன்று, நடிப்பின் மூலம் காட்டுவது. அவ்வாறு நடித்துக் காட்டுவதில் நிகழ்ச்சிகளையும் சம்பவங்களையும் அழகாக விளக்கிக் காட்டும் முறையிலும், மொழிநடையிலும் ஒரு பரிமாணத்தை அல்லது முழுமையான வடிவத்தைப் படைத்துக் காட்டவேண்டும் என்றார். அனுதாபம், அச்சமாகிய உணர்ச்சிகளைக் காட்டுவதில் மேடைகளில் நடித்துக் காட்டத் தகுதி வாய்ந்த உயர்ந்த உணர்ச்சிகளை நாடகத் தூய்மையின் மூலமே வெளிப்படுத்த வேண்டும் என்பது அரிஸ்டோட்டில் கூறும் துன்பியல் பற்றிய கொள்கையாகும்.

துன்பியல் நாடகத் தலைவன்

துன்பியல் என்பது துன்ப உணர்வுகளை வெளிப்படுத்துவதாகும். தலைவன் ஒருவன் நல்லொழுக்க விதி முறைகளையும் நீதியையும் நிலை நாட்டுவதற்குப் போராடுவதும் அப்போராட்டத்தில் வெற்றி பெற்று அல்லது தோல்வியுற்று அவன் இறப்பதும் ஆகிய நிகழ்ச்சிகளை விளக்கும் நாடகம் துன்பியலாகும். அந்தநாடகத் தலைவன் தன்னேரில்லாதவனாகவும் பலராலும் பாராட்டப்பெறும் சிறப்பியல்புகளை உடையவனாகவும் இருக்க வேண்டும். அவன் நீதியை நிலை நாட்டுவதில் பணிந்து போகிறவனாக இல்லாமல் எதிர்த்துப் போராடி வீழ்ச்சியடைவதன் மூலம் பலரின் அனுதாபத்தைப் பெறுகிறவனாகவும் இருக்கவேண்டும். நாடகத்தில் கதைத் தலைவன் பெறும் பங்கும் அவன் முடிவை ஏற்றுக்கொள்ளும் முறையும் நாடகத்தின் துன்பியல் உச்ச நிலைக்குக் காரணமாக அமைகிறது.

கதைத் தலைவன் சாதாரண மனித இயல்புகளையும் குறைபாடுகளையும் உடையவனாக இருக்க வேண்டுமேயன்றி குறைபாடற்ற முழு நிறைப் பாத்திரமாக இருக்க கூடாது.கதைத் தலைவனின் மிகப் புனிதமான முயற்சிகளும் அரிய செயல்களும் அவனைக் குற்றம் புரிவதற்கும் துன்பத்திற்கும் ஆளாக்கிறது என்பதை மறைமுகமாக விளங்கவைக்க வேண்டும் என்பது துன்பியல் பற்றிய கொள்கையாகும். அரிஸ்டோட்டில் கூறும் துன்பியலுக்கும் இன்பியலுக்கும் ஒற்றுமை வேற்றுமைகளை , அ.மணவாளன்

1. மனித வாழ்க்கையில் நிகழும் செயல்களைப் பற்றியது.

2. அச்செயல்கள் பலருக்கும் பொதுவானதும் முழுமையானதும் கருத்தாழம் மிக்கதுமாக இருத்தல் வேண்டும்

3. நாடகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பொருந்துமாறு பல வகைக் கவிதை உத்திகளைக் கொண்ட வளமான மொழிநடையில் இயற்றப்பட வேண்டும்.

4. கதை கூறும் முறையில் அமையாமல் நடித்துக் காட்டத்தக்க நாடக முறையில் அமைவது அச்சம்,இரக்கம் என்னும் மாட்சிகளைப் படைத்துக் காட்டி செம்மைப்படுத்துவது துன்பியல்.

என்று கூறியுள்ளார். இதுவே அரிஸ்டோட்டிலின் கொள்கையாகும்.

ந.பிச்சமுத்து, “கொடிய மரணம் சித்தரவதை போன்ற அழிவு அல்லது துன்ப நிகழ்ச்சி நல்லவனின் வீழ்ச்சி இவைகளெல்லாம் துன்பியல் நாடகத்தின் சிறப்புக் கூறுகளாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அடிப்படையில் லைலா மஜ்னு, ரோமியோ ஜீலியட், அம்பிகாபதி அமராவதி நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

மேலும் அவர் இன்பியல் என்பது ''துன்புறுத்தாத அழிவுகளையும், சம்பந்தமில்லாத சில மனிதக்குறைபாடுகளையும், விகாரங்களையும் சாதாரண மனிதனிடத்தில் இருப்பதைக் காட்டிலும் மிகைப்படுத்திக் காட்டுவது. இன்பியலின் நோக்கம் குறைகளை நையாண்டி செய்வதன் மூலம் நகைச்சுவையூட்டுவதாகும்.” என்று கூறியுள்ளார்.

கதைத் திட்டம் பற்றிய அரிஸ்டோட்டில் கொள்கை

அரிஸ்டோட்டில் இலட்சியமான துன்பியல் கதைத் திட்டத்தின் இயல்பு அமைப்பு கூறுகள் ஆகியவற்றில் மிகுந்தகவனம் செலுத்தியுள்ளார். அரிஸ்டோட்டில் கொள்கையின் படி கதைத்திட்டம் என்பது சம்பவங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் அமைப்பு ஆகும். கதைத்திட்டம் என்பது முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்தது. துன்பியலுக்கு உயிர் போன்றது. கதைத்திட்டம் இல்லாமல் துன்பியல் இல்லை என்றார். துன்பியல் உருவாக்கத்திற்கான ஆறு உருப்புகளைக் கூறியுள்ளார்.

அவையாவன,

1.கதைத்திட்டம்

2.பாத்திரங்கள்

3.சிந்தனை

4. இனிமை

5.சொற் தேர்வு

6.காட்சி.

இந்த ஆறு உருப்புகளுள் கதைத்திட்டத்திற்கே முதன்மை அளித்துள்ளார். துன்பியலுக்கு கதைத்திட்டமே முதன்மையானது. அரிஸ்டோட்டிலின் துன்பியல் பற்றியகொள்கையானது, “கதைகள் பழக்கமானதாகவும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் பாத்திரப்படைப்புக்கு உதவியாகவும் இருக்க வேண்டும். எனவே கதையை தேர்ந்தெடுப்பது முக்கியமாகும். அவ்வாறு தேர்ந்தெடுப்பதில் பொருத்தமான நிகழ்ச்சிகளையும் சந்தர்ப்பங்களையும் மனதில் கொண்டு தேர்ந்தெடுக்கப்படும் சம்பவங்கள் கருத்தாழமிக்கவையாகவும், கனமான செய்திகளாகவும் அமையவேண்டும். கருத்தாழமுள்ளசெயலில் போலச் செய்தலான துன்பியல், பார்வையாளர் மனதில் அவல உணர்வுகளையும் அனுதாப, அச்ச உணர்வுகளையும் எழுப்ப வேண்டும். ஆகையால் அதில் அற்பசம்பவங்களுக்கு இடமிருக்கக் கூடாது”. என்றார் ந.பிச்சமுத்து.

அரிஸ்டோட்டிலின் கொள்ளையின் படி துன்பியல் கதைத்திட்டம் தொடக்கம், இடைநிலை, முடிவு என்னும் மூன்று பகுப்புக்களை கொண்டதாக அமைந்து முழுமையானதாக இருக்கவேண்டும் எனலாம். துன்பியல் பாத்திரங்கள் நல்லவர்களாக இருத்தல் வேண்டும். பெண் மக்கள் பழங்கால கிரேக்க நாட்டில் தாழ்ந்தவர்களாகவும், அடிமைகள் பயனில்லாதவர்களாகவும் கருதப்பட்டனர். ஆனால் துன்பியலில் இடம்பெறும் பெண்கள், அடிமைகள் ஆகியோரிடமும் சில சிறப்புக்கள் உண்டு என்று காட்ட வேண்டும். மனிதன் கெட்டவன் இல்லாததால் முழுக்கக் கெட்டவனாகக் காட்டக் கூடாது. என்பது துன்பியல் பாத்திரம் பற்றிய அரிஸ்டோட்டிலின் கொள்கையாகும்.

மேலும் பாத்திரப்படைப்பில் பொருத்தம் இருக்க வேண்டும் என்றார். ஒரு பெண்ணுக்கு ஆண் இயல்புகளையோ, அடிமைக்கு பிரபுத்துவமோ, பெருந்தன்மையோ இருப்பதாகக் காட்டுவது பொருத்தமற்றது. அவரவர்க்குரிய இயல்புகளோடு காட்டப்பட வேண்டும் என்பது அரிஸ்டோட்டிலின் கொள்கை.

கவிதையியலில், கதையுடன் கூடிய உயிரோட்டமும் சோகத்தை விவாதிக்கும் தன்மையும் காணப்படும். சோகத்தின் அம்சம், தனி மனிதன் மற்றும் சமுதாயத்தின் ஊடாக அரசியலில் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஆராய்கின்றது. சோகத்தினால் உந்தப்படும் அரசியல் செயற்பாடுகள் சமூகத்தையும், சொந்த இடங்களில் வாழும் மக்களிடமும் கூடுதலான சோகத்தை பிரதிபலிக்கும். கவிதையியலில் காணப்படும் உணர்ச்சி வெளிப்பாடு தனிமனித ஆத்மாவையும், சமூகத்தையும் சமநிலைப்படுத்தும் விவாத வடிவமாக காணப்படுகின்றது. இவர் வாதிடுவது என்னவெனில் சமுதாயத்தின் பார்வையை அதன் அடையாளம் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் உண்மைகளை விரிவுபடுத்துவதாகும். துயரம், சோகம், பயம் போன்ற உணர்ச்சி வெளிப்பாடுகள் கதை வடிவினுள் அடங்கும் அழகியல் மட்டுமல்ல. அது ஒரு அரசியல் மற்றும் தத்துவச்செயற்பாடாகும். சரியான பதிலை ஆழமான புரிதலுக்கு பங்களிக்கின்றது. சோகத்தின் செயற்திறன் தனிப்பட்ட சமூகத்தின் மத்தியில் நிலவுகின்றது.

உசாத்துணைப் பட்டியல்

Wellek,R.,& Warren, A. Theory of Literature. Harcourt, Brace & World. (p.24)

Shelly,P.B. A Defence of poetry.

Issadeen,M.L. Greek and Medieval philosophy. South Eastern University of Sri Lanka.

Peris,H. Greek myths. University of Peradeniya, Sri Lanka.

Aristotle. (1987). Poetics (R. Janko, Trans). Hackett Publishing.

இலக்கிய ஆராய்ச்சி. (p. 30).

அரிஸ்டோட்டிலின் கவிதையியல். (pp. 75–77).

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்