கட்டுரையாளர் - முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம்.


முன்னுரை

இரவலன் என்ற சொல்லுக்கு ஏற்போர், பரிசிலர் என்று பொருள். புரவலன் என்ற சொல்லுக்குக் காத்துதவுவோன், கொடையாளன் என்று பொருள். தன்னை நாடி வருகிற புலவனை வள்ளலோ அல்லது மன்னனோ அன்புடன் எதிர்கொண்டு அழைத்து அவரது திறனுக்கு ஏற்ப பரிசில்களைக் கொடுப்பது சங்க கால மரபாக இருந்துள்ளது. புலவர்கள் அரசர்களிடம் அல்லது வள்ளல்களிடம் சென்று ஆடிப்பாடித் தங்களுடைய கலைத்திறனை வெளிக்காட்டுவர். அவ்வாறான ஆடல், பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த அரசர்கள் அல்லது வள்ளல்கள் அவர்களுக்குத் தேவையான அளவு செல்வங்களை வாரி வழங்குவர். இவ்வாறான இரவலர் - புரவலர் உறவு என்பது எட்டுத்தொகைப் பாடல்களிலும் பத்துப்பாட்டுப் பாடல்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன. அவற்றில் பத்துப்பாட்டில் உள்ள இரவலர் - புரவலர் உறவு எவ்வாறு இருந்துள்ளது என்பது குறித்து மட்டும் ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

இரவலர் விருப்பம் / எதிர்பார்ப்பு

இரவலர்களுக்குத் தேவை பரிசு மட்டுமன்று. அவர்களது தகுதிக்கான பரிசு. புரவலனின் அன்புடன் அது கிடைக்கவேண்டும் என்பது அவர்களது விருப்பமாக இருந்துள்ளது. இதைத்தான் பெருஞ்சித்திரனாரின் பின்வரும் இரு பாடல்கள் சொல்லுகின்றன.

‘‘பற்பல குன்றும் மலையும் கடந்து பரிசில் பெற வந்து நின்றுகொண்டிருக்கும் என்னைப் பார்க்கவும் செய்யாமல் ‘இதனை ஏற்றுக்கொண்டு செல்லுங்கள்’ என்று தந்து சொல்லி அனுப்புவதற்கு நான் என்ன பரிசில் வாணிகம் செய்ய வந்தவனா? என்னிடம் விரும்பி வந்து தினையளவு பரிசில் தந்தாலும், அதன் அன்பு பெருமையை உணர்ந்து நான் ஏற்றுக்கொள்வேனே! (புறம்.208)’’ என்று பெருஞ்சித்திரனார் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பார்த்துப் பாடிய பாடல் இது. இன்னொரு பாடல் வருமாறு.

‘’வெளிமானிடம் பரிசில் பெறச்சென்றார் பெருஞ்சித்திரனார். “தம்பி, இவர்க்குப் பரிசில் தருக” என்று தன் தம்பியை நோக்கிக் கூறினான் வெளிமான். இளவெளிமான் தன் கைக்குக் கிட்டிய பொருளைக் கொண்டு வந்து பரிசெனக் கொடுத்தான். பெருஞ்சித்திரனார் பரிசைப் பார்த்தார். இளவெளிமான் முகத்தைப் பார்த்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுக் குமணனை அடைந்தார். குமணன் புலவர் முகத்தைப் பார்த்தான். அவர் கண்களில் பனிக்கும் நீர்த் துளியைக் கண்டான். அவன் கைகள் நீண்டன. அவர் பாடினார்.

குமணன், பெருஞ்சித்திரனாருக்குக் கை நிறையப் பரிசு கொடுக்கவில்லை. அவர் கண் நிறையப் பரிசு கொடுத்தான். ஒரு பெரிய யானை! அவர் யானையை ஓட்டிக்கொண்டு தன்இல்லத்திற்குப் போகவில்லை. நேரே இளவெளிமானிடம் சென்றார். அவன் காவல் மரத்தில் யானையைக் கட்டினார். ‘அரசே! உன் காவல் மரத்தில் கட்டியிருக்கும் யானையைப் பார்! அது புரவலன் தந்த பரிசில். அதனை நான் உனக்குத் தருகிறேன் ஏற்றுக்கொள்! சென்று வருகிறேன்’ என்று தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டார் (புறம்.162)’’.

பரிசில் கிடைத்தால் போதும் என்றில்லாமல் அது கொடுக்கும் முறையும் முக்கியம். கொடுப்பவர் வாங்குபவர் இடையில் ஓர் உறவு அவசியம். அது இருவரையும் பிணைக்கும் அன்பாக, கருணையாக இருக்கவேண்டும். புலவர்களின் விருப்பம் இதுதான் என்பதை இவ்விரு பாடல்களிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

இவ்வாறான நிலையில்தான் சங்ககால இரவலர் இயல்புநிலை இருந்துள்ளது. இரவலர்களைப் புரவலர்கள் அன்புடன் வரவேற்று விருந்து உபசரித்து மகிழ்ந்துள்ளனர். இரவலர்களான கூத்தர், பாணர், பொருநர், விறலி என்ற நால்வகை கலைஞர்களுக்கும் புரவலர்களான மன்னர்களுக்கும் இடையிலான இந்த உறவு மிகவும் அழகானதாக இருந்துள்ளது.

இரவலர்களின் இயல்புநிலை

வற்றாத செல்வ வருவாயினை உடைய பெரிய ஊர்களில் நிகழும் விழா முடிந்த பின்னாளில் ஆங்கு வழங்கப்பெறும் சோற்றை விரும்பாமல் அயலிடம் செல்லுதலைக் கருதிவந்தவன் பொருநன் (பொருநர்.1-3). பெருமைமிக்க செல்வத்தையும், புகழையும் உடைய மூவேந்தர்கள் ஓரிடத்தில் வீற்றிருந்தால் எவ்வாறு இருக்குமோ அத்தகைய சிறப்பினை உடையது பொருநர் கூட்டம். அக்கூட்டத்தின் தலைவனாகிய கூத்தன் பாடலின் பயனை எல்லாம் தன்பாற் கொண்ட யாழினைக் கைகளில் ஏந்தியவன். அவன் பிறர் புகழை அரசவையில் மேம்படுத்த வல்லவன். என்றாலும் அவனும் அவனது சுற்றத்தாரும் பல நாட்களாக பசியால் வாடி வருந்திவருகிறார்கள் (பொருநர்.53-62) என்று இரவலர்களின் இயல்பைப் பதிவு செய்துள்ளது பொருநராற்றுப்படை. அதில் இரவலர்களது புலமைத் திறனும் x வறுமை நிலையும் இடம்பெற்றுள்ளன.

பண் முற்றுப்பெற்ற இனிய பாலைப் பண்ணினை இயக்கும் முறை அறிந்தவர்கள். சிறிய யாழை மீட்டுவதில் வல்லவர்கள். பரிசில் தருவோர் யாரும் இல்லாததால் உலக வாழ்வை வெறுத்து மிக்க வருத்தத்துடன் வறுமை தம்மை ஆற்றுப்படுத்தியதால் வழியின்றித் தவிப்பவர்கள். பரிசில் தருவோரை நாடி வழிநடந்த வருத்தத்தைப் பற்றிக் கவலைக் கொள்ளாதவர்கள். பேரறிவு வாய்ந்தவர்கள் (சிறுபாண்.34-40) என்று சிறுபாணாற்றுப்படை இரவலர்களின் இயல்பு நிலையைப் பதிவு செய்துள்ளது. பொருநராற்றுப்படையைப் பேலவே அதிலும் இரவலர்களது புலமைத் திறனும் x வறுமை நிலையும் இடம்பெற்றுள்ளன.

கடல் சூழ்ந்த இவ்வுலகில் காப்பவர் எவரும் இல்லாததாலும் மழைபெய்யாததாலும் வெப்ப ஆவி சூழ்ந்த மலையிடத்தே

“பழுமரம் தேரும் பறவை போலக்
கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவுவாய்... ’’ (பெரும்பாண்.19-22)

பாணர்களாக இருப்பவர்கள் என்று பெரும்பாணாற்றுப்படையில் கூறப்பட்டுள்ளது.

குளத்தில் புகுந்தது போல் பயனைத் தருகின்ற குளிர்ந்த நிழலில் காட்டின் வழிவந்த வருத்தத்தைப் போக்கிக்கொள்ள ஒன்று கூடியிருப்பவர்கள். கூத்தர்களின் அக்கூட்டத்தை ஒருவன் வழி நடத்திச் செல்லுகிறான் (கூத்தர்.47-50) என்று இரவலர்கள் கூட்டமாகப் பாடியாடிச் செல்லும் இயல்புள்ளவர்கள். தங்களுக்குள் ஒருவரைத் தலைவனாக - வழிகாட்டியாகக் கொண்டு செயல்படும் இயல்புள்ளவர்கள் என்கிறது கூத்தராற்றுப்படை.

இரவலர்கள் புலமைத்திறம் மிக்கவர்கள் என்றும் அதேவேளை அவர்கள் வறுமையுடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளன. மேலும் தம்முடைய வறுமையைப் போக்கிக் கொள்ளத் தொடர்ந்து பயணத்தை மேற்கொள்பவர்களாக இருப்பது அவர்களுடைய இயல்பாக இருந்துள்ளது என்று நான்கு பாடல்களிலும் சொல்லப்பட்டுள்ளன.

அரசன் நல்கும் பரிசில்

இரவலர்களுக்கு வள்ளல்கள் அளிக்கும் பரிசில் பற்றி நான்கு ஆற்றுப்படைப் பாடல்களிலும் கூறப்பட்டுள்ளன.

‘கரிகாலன் விரைந்து வந்து உன்னுடைய கொட்டைப் பாசியின் வேர் போல அழுக்கோடு குறைந்த தையலையுடைய துணிகளைப் போக்கி கொட்டைக்கரை போட்ட பட்டுடையைக் கொடுத்து உடுக்கச் செய்தான். பின்னர் பொன்னாற் செய்த தாமரையை நும் கரிய தலை மயிரிலே பொலிவு உண்டாகச் சூட்டினான். பொன்னரி மாலையைப் பாடினிக்குச் சூடத்தந்தான். ஏழடி தூரம் தொடர்ந்து நடந்து வந்து இவ்வாறு ஏறுக! என்று நான்கு குதிரைகளைச் சேரக்கட்டியத் தேரில் இரவலர்களை ஏற பயிற்றுவித்தான். வளமான யானைகளையும் அவர்களுக்குத் தந்து வழியனுப்பினான் (பொருநர்.163-177) என்கிறது பொருநராற்றுப்படை.

நல்லியக்கோடனிடம் பகைவர் நாட்டின் மீது போரிட்டு அங்கிருந்து கொண்டுவந்த பொருட்களை இரவலர்களுக்குக் கொடுத்து வறுமையைத் தீர்த்தான். தன் படைத்தலைவர்கள் மிகுதியாகக் கொண்டு வந்து தந்த சிறந்த நிறங்களையுடைய ஆடை அணிகளாகிய செல்வத்தை அளித்தான். பல்வகையான தொழில் சிறந்து விளங்கும் தேரினை அளித்தான். அத்தேரினை ஓட்டிப்பார்த்து அதனைப் பாகனோடு அளித்தான். அவற்றுடன் யானை, குதிரை, அணிகலன் முதலான பிற பரிசில்களையும் கொடுத்தான் (சிறுபாண்.246-261)” என்கிறது சிறுபாணாற்றுப்படை.

பொன்னாலான தாமரையை நீண்ட கரிய மயிர் அழகுறச் சூட்டினான். பொன்னாற் செய்து தொடுத்த மாலையைக் கரிய கூந்தல் அழகு பெரும்படி ஆடும் மகளிர்க்குச் சூடிக்கொள்ளத் தந்தான். குதிரை நூல் கற்றோர் புகழ்ந்த மாண்புடையவனும் பெரிய பாற்கடலின் சங்கைக் கண்டாற் போன்ற வெள்ளிய பிடரி மயிரையுடையனவும் தம் இனத்தோடு இயைந்து தொழில் செய்வனவும் ஆகிய சிறந்த குதிரைகள் நான்கினையும் ஒருசேரப்பூட்டிய பொன்னால் செய்த தேரினைத் தந்தான். அத்துடன் தான் போரில் வென்று கொண்டுவந்த விண்ணிலே விரைகின்ற குதிரைகளுடன் பசிய சேணமும் தந்தான் (பெரும்பாண்.480-493) என்று பெரும்பாணாற்றுப்படையில் இளந்திரையன் பெரும்பாணன், பாடினிக்கு அளித்த பரிசுகளாகப் பெரும்பட்டியல் ஒன்றினைத் தருகிறது.

பொற்றாமரையைச் சூடத்தந்தான். விறல்பட ஆடும் மகளிர்க்கு வேலைப்பாடு பொருந்தின சிறப்பினையுடைய அழகுற விளங்குகின்ற பேரணி கலன்களை அணியத் தந்தான். தண்ணீர் ஒலியின்றி ஓடுவது போல வரிசையாக இயங்கும் நெடிய தேர்களையும், யானை பிடிக்கும் இடத்தினின்று தாமே பிடித்துக்கொள்ளாது பகைவர் படையினின்றும் பிடித்துக் கொண்ட மலையோ என்று மயங்குதற்குக் காரணமான யானைகளையும், ஒலிக்கும் மணிகள் ஆரவாரிக்கும் ஏறுகளையுடைய பெரிய பசுக் கூட்டங்களையும் அழகு செய்யப்பெற்ற கழுத்தினை உடைய குதிரைகளையும் மண் தின்னும்படிக்கிடந்த பழையவனாகிய பொருள் குவியலோடு எல்லாவற்றையும் கொடுத்து அனுப்பி வைத்தான் (கூத்தர்.568-581) நன்னன் என்கிறது கூத்தராற்றுப்படை.

புரவலன் அளிக்கும் பரிசில் பொருநராற்றுப்படையைத் தவிர்த்த பிறவற்றில் “தலைநாள் விடுக்கும் பரிசில்” (கூத்தர்.581), “அன்றே விடுக்கும் பரிசில்” (சிறுபாண்.261), “அன்றே விடுக்கும் பரிசில்” (பெரும்பாண்.493) என்று இரவலன் சென்ற அன்றே காலம் தாழ்த்தாமல் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், பொருநராற்றுப்படையில் கரிகாலன் சென்ற உடனே பரிசில் அளித்தாலும் “செல்க என விடுக்குவன் அல்லன் (பொருநர். 177)” அவன் இரவலனைப் பல நாள் தங்கவைத்து உபசரிப்பான். அவ்விரவலன் தன் ஊருக்குச் செல்ல நினைப்பின் வருத்தமடைவான். இன்னும் சில நாட்கள் தங்கிச் செல்ல விரும்புவான். இரவலர் விரும்பவில்லை என்றால் பல வகைச் செல்வத்தைக் கொடுத்துக் குதிரை பூட்டிய தேரில் இவ்வாறு ஏறுக! என்று ஏழடி முன் வந்து வழி அனுப்பி வைப்பான் என்று கூறப்பட்டுள்ளது.

அரசனின் உபசரிப்பு

பரிசிலுக்குச் செல்லும் இரவலனை அரசன் வரவேற்று உபசரிக்கும் முறைமை பற்றி நான்கு பாடல்களிலும் கூறப்பட்டுள்ளன.

வறுமை தோன்றத் தன்னிடம் வந்த இரவலனைக் கன்றீன்ற பசு அக்கன்றினை விருப்பத்தோடு நோக்குவது போன்று ஆர்வத்தோடு நோக்குவான். அவர்களுடைய அழுக்காடையை நீக்கிக் கொட்டைக்கரை பட்டுடையைக் கொடுத்து உடுக்கச் செய்வான். பின்னர் நல்ல பூவின் மணம் கமழ்கின்ற கள்ளின் தெளிவை மேன்மேலும் வார்த்துத் தருவான். போதும் போதும் எனக் கையால் தடுப்பினும் விடாது வார்ப்பான். பாடினிக்குப் பொன்னரி மாலையைச் சூட்டி மகிழ்வான் (பொருநர்.149-162)” என்கிறது பொருநராற்றுப்படை.

“.. .. .. .. .. .. மாசு இல்
காம்பு செலித்தன்ன அறுவை உரீஇ
.. .. .. .. .. .. .. .. . .. .. .. .. .. .. .. .. .. ..
விளங்கு பொற் கலத்தில் விரும்புவனபேணி
ஆனா விரும்பின் .. .. .. .. .. .. (சிறுபாண்.235-245)

தானே முன்னின்று உபசரிப்பான்” என்கிறது சிறுபாணனாற்றுப்படை.

திரையனுடைய திருவடி நீழலை அணுகி நிற்பவர் வறுமையை இல்லாதபடி செய்வான். தன்னை நாடிவந்த இரவலரை விரும்பி அழைப்பான். பாசியின் வேர் போன்ற உடையை நீக்கி நூலால் செய்த துகிலை உடுக்கச் செய்வான். நன்கு சமைக்கப்பட்ட இறைச்சியையும் அமிழ்தம் போன்ற சோற்றையும் உண்ண அளிப்பான். தாய் மகவினைப் பார்ப்பது போல் அருகினில் நின்று பார்த்துக்கொள்வான் (பெரும்பாண்.464-479) என்கிறது பெரும்பாணாற்றுப்படை.

நன்னன் கூத்தர்களுக்குப் பசிய கொழுப்பு நிறைந்த தசைகளோடு வெண்மையான அரிசிச் சோற்றைத் தருவான். அவர்கள் பல நாள் தங்கியிருப்பினும் அவ்வுணவினை முதல் நாள் போலவே விருப்பம் குறையாமல் பல நாட்களுக்குக் கொடுப்பான் (கூத்தர்.561-566) என்கிறது. கூத்தராற்றுப்படை.

சிறுபாணாற்றுப்படையில் கள்ளுடன் சமையல் நூலில் கூறப்பட்ட முறையில் செய்த பல்வேறு உணவுகள் அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளன. அவ்வுணவுகள் பொன்னாலான உண்கலத்தில் அளிக்கப்பட்டுள்ளன.

பெரும்பாணாற்றுப்படையில் சமையற்கலையில் வல்லோன் செய்த இறைச்சி மற்றும் அரிசியால் செய்த சோறு அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளன. அவ்வுணவுகள் வெள்ளியிலான உண்கலத்தில் அளிக்கப்பட்டுள்ளன.

பொருநராற்றுப்படையில் கள், இறைச்சி ஆகியவற்றைப் பற்கள் மழுங்கி போதுமளவிற்கு அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளன. அவ்வுணவுகள் பொன்னாலான உண்கலத்தில் அளிக்கப்பட்டுள்ளன.

கூத்தராற்றுப்படையில் கொழுப்பு நிறைந்த இறைச்சி, கள், அரிசியால் செய்த சோறு ஆகியவற்றைப் பல நாட்கள் தங்கி இருப்பினும் முதல் நாள் போலவே என்றும் அளித்தான் என்று கூறப்பட்டுள்ளது.

முடிவுரை

இரவலர்களின் புலமைத்திறன் மற்றும் அவர்களின் வறுமை நிலை ஆகியவற்றைப் பற்றி நான்கு ஆற்றுப்படைப் பாடல்களிலும் கூறப்பட்டுள்ளன.

தங்கள் நாட்டில் சிறந்து விளங்கிய உணவு வகைகளை வள்ளல்கள் இரவலர்களுக்கு அளித்ததாகக் கூறப்பட்டுள்ளன.

இரவலர்களுக்குத் தேவையான பொருட்களும் தாங்கள் தர விரும்பிய பொருட்களும் என விதவிதமான பொருட்களைப் புரவலர்கள் இரவலர்களுக்கு அளித்ததாக் கூறப்பட்டுள்ளன.

விருந்து உபசரித்தலில் சிறுபாணாற்றுப்படையில் தானே முன்னின்று உண்ணச்செய்வான் என்றும், பெரும்பாணாற்றுப்படையில் தாய் மகவினை உண்ணச் செய்வது போல் தானே முன்னின்று உண்ணச்செய்வான் என்றும், பொருநராற்றுப்படையில் தன் கண்ணெதிரே இருக்க வைத்து உண்ணச்செய்வான் என்றும், கூத்தராற்றுப்படையில் இன்முகத்துடன் வரவேற்றுப் பல நாட்கள் தங்கி இருப்பினும் முதல் நாள் போலவே என்றும் உபசரிப்பான் என்றும் கூறப்பட்டுள்ளன.

சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகிய மூன்று ஆற்றுப்படைப் பாடல்களிலும் இரவலர் - புரவலர் இடையிலான உறவானது விருந்தினராகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாணாற்றுப்படையில் இரவலர் - புரவலர் உறவானது ஒருபடி மேல் சென்று தாய்- மகன் உறவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

துணை நின்றவை

இராசமாணிக்கனார் டாக்டா் மா., 1970, பத்துப்பாட்டு ஆராய்ச்சியுரை, சென்னைப் பல்கலைக்கழகம்.
நாகராசன், முனைவர் வி. (உ.ஆ.), 2007, பத்துப்பாட்டு (பகுதி -2), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை.
பாலசுப்பிரமணியன், முனைவர் கு.வெ. (ஆசிரியர் குழு), 2004, புறநானூறு மூலமும் உரையும் (புத்தகம் 1, 2), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை.
மோகன், முனைவர் இரா. (உ.ஆ.), 2004, (மூன்றாம் அச்சு 2007), பத்துப்பாட்டு (பகுதி -1), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை.
இரவலர் | அகராதி | tamil dictionary | சொலல்வல்லன்
இரவலர் - தமிழ் விக்சனரி
புரவலன் | அகராதி | Tamil Dictionary

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்