
முனைவர் வ.கோபாலகிருஷ்ணன் , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேலம் – 636005 (பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்றது, சேலம், தமிழ்நாடு, இந்தியா.
முகவுரை
ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதன் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவதற்கு ஒலி குறிப்பின் மூலம் தெரியப்படுத்தினான். காலப்போக்கில் மனித இனம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய பேச ஆரம்பித்தான். அப்பேச்சே மொழியாக உருவெடுத்தது. இத்தகைய மொழி மென்மேலும் வளர்ச்சி பெற்று இலக்கிய வழக்கு, பேச்சு வழக்கு, வட்டார வழக்கு எனப் பல்வேறு வகைகளைத் தழுவியுள்ளது. இவ்வகையில் படைப்பிலக்கியங்கள் அமைந்துள்ளன. படைப்பிலக்கியங்களைப் படைக்கின்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு என ஒரு உத்தியினைக் கையாளுகின்றனர். அவற்றில் பலரும் அவர்களுடைய சொந்த மண்வாசனையைக் கமலச் செய்கின்ற வகையில் படைக்கின்றனர். அவ்விதத்தில் கலைச் செல்வியின் முதல் படைப்பான சக்கை புதினமும் அவருக்கு உரிய மொழி நடை அமைப்பில் அமைந்துள்ளது. இதனைப் பற்றி ஆராய்வதாக அமைகின்றது.
மொழி
மொழி நம் விழி என்று பேராசியர் மா.நன்னன் குறிப்பிடுவார். அவ்வகையில் நம்முடைய விழியைப் பாதுகாப்பது போல நம்முடைய மொழியையும் பாதுகாக்க வேண்டும். அவ்வாறு பாதுகாத்தால் மட்டுமே சமுதாயம் பாதுகாக்கப்படும். சமுதாயம் பாதுகாக்கப்பட்டது என்றால் மக்களைப் பாதுகாக்கின்றோம், மக்களைப் பாதுகாக்கின்றோம் என்றால், அம்மக்களின் மொழி, பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் முதலியவற்றைப் பாதுகாக்கின்றோம். எனவே மொழி என்பது சமுதாயம் சார்ந்தும் மனித உணர்வுகளைச் சார்ந்ததும் ஆகும். மேலும், மொழியினைப் பற்றி மொழியியல் அறிஞர்கள் பலரும் பல கருத்துக்களை எடுத்து கூறுகின்றனர். அவ்வகையில், “மொழி சமுதாயம் சார்ந்தது. மொழி இல்லையேல் சமுதாயம் இல்லை.

அதே போன்று சமுதாயம் இல்லையேல் மொழியும் இல்லை. இந்த இரண்டறக் கலந்த உறவை அடிப்படையாகக் கொண்டே மொழியானது அது சார்ந்துள்ள சமுதாயத்தினையும் பண்பாட்டினையும் பிரதிபலிக்கும் கண்ணாடி என்று குறிப்பிடப்படுகிறது. இன்னும் குறிப்பிட்டு விளங்கும் நிலையில் மொழியானது மனித நாகரீகத்தோடும் சமுதாய உணர்வுகளோடும் பின்னிப்பிணைந்து இயங்கி வருகிறது என்றும் குறிப்பிடப்படுகிறது.”1; என்றும் “மொழி ஆற்றல் வாய்ந்த-கருத்துப் பரிமாற்றத்திற்கான தலையாய கருவி. மனிதனின் எண்ணங்களை, ஆசைகளை, சிந்தனைகளைப் பல்வேறு வகையில் ஏற்றவாறு வெளிப்படுத்தும் ஓர் ஒப்பற்ற சாதனமாகவும் இயங்கு தன்மை கொண்ட இயந்திரமாகவும் விளங்கி வருவது மொழியாகும். சில ஒலிகளை அவற்றின் சேர்க்கைகளின் வாயிலாகப் பல்வேறு முறைகளில் வடிவமைத்து, சமுதாயம் பொருளுள்ள கூறுகளாக ஆக்கி சமுதாய இயக்கத்திற்கு ஆதாரமாகவும் அடிப்படையாகவும் மொழியைப் பயன்படுத்துகிறது.”2 என மொழியினைச் சமுதாயத்தின் ஒரு கூறு என்று குறிப்பிடுகின்றனர். மேலும், “மொழி அது சார்ந்துள்;ள சமுதாயத்திற்காகவும் பிற சமுதாயங்களோடு தொடர்பு கொள்வதற்காகவும் பயன்படுகிறது. இது பேச்சு வழக்காகவும், எழுத்து வழக்காகவும் அமைந்து சமுதாயத்தின் பல்வேறு பணிகளை நிறைவேற்றிடப் பெரும் பங்காற்றுகிறது”3 என மொழியியல் அறிஞர்கள் சுட்டுவதன் மூலம் மொழியின் தன்மையினை அறிந்து கொள்ளலாம்.
இதேபோல பிற மொழியியல் அறிஞர்களும் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்வதன் மூலம் மனித இனத்தின் பண்பாடு, பாரம்பரியம் தொடர்போடு மனிதனின் மனம், அறிவு, ஆற்றல், செயல் ஆகியவையும் தூண்டுவதாக மொழி அமைகின்றது. இக்கருத்தை, “படைப்பாற்றல் மிக்க மனிதன் படைத்த அருங்கலைகளுள் தலைமை சான்ற கலை மொழிக்கலையே. எண்ணத்தின் வடிவாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும், பண்பாட்டின் பிரதிபலிப்பாகவும் திகழும் இக்கருத்துப் பரிமாற்றக்கலை மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், சமுதாய இணைப்புக்கும் துணை செய்து நிற்கின்றது. தனி மனிதனைச் சமுதாயத்தோடு இணைத்து அவனை அச்சமுதாயத்தின் உறுப்பினனாக மாற்றி அச்சமுதாயப் பிணைப்பில் இன்ப வாழ்வு வாழச் செய்யும் இணைப்புக் கருவியாகத் திகழ்வதோடு மட்டுமின்றிக் கருத்துப் பரிமாற்றக் கருவியாகவும் மொழி செயலாற்றுகின்றது. மேலும் சமுதாய விலங்கான மனிதனைக் காட்டு விலங்கினின்றும், நிலைத்திணைப் பொருட்களினின்றும் வேறுபடுத்திக் காட்டும் சீரிய பண்பாட்டுக் கருவூலமாகவும் மொழி அமைகின்றது. இத்தகைய மொழியின் ஆய்வு அதனைப் படைத்துப் பயன்படுத்தும் மனித சமுதாயத்தின் ஆய்வாகவே உள்ளது. எனவே எந்த அளவிற்கு நம்மையும் உலக அரங்கில் நாம் பெறும் இடத்தையும் ஆய்ந்தவராவோம். மனிதனை மனிதனாக வாழவைக்கும் இக்கருத்துப் பரிமாற்றக் கலை மக்கள் வாழ்வுடன் பிரிக்க முடியாவண்ணம் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதால் அதன் அமைப்பு, செயல் முறை, அதன் வியத்தகு ஆற்றல் ஆகியவற்றை நாம் அதிகமாக எண்ணிப் பார்ப்பதில்லை. எனினும் ஆழ்ந்து நுணுகி வியப்பினையும் உவகையினையும் அளிப்பதோடு மட்டுமின்றி அதைப் படைத்துப் பயன்படுத்தும் மனித அறிவு, மனம் ஆகியவற்றின் செயற்றினையும் ஆற்றலினையும் மனம் மகிழ்ந்து செயல் மறந்து வாழ்த்தவும் தூண்டுகின்றது.”4 என்ற கருத்தையும் காணலாம்.
மேலும், ஒரு மொழியை ஆழமாக நோக்கும்போது அதனுடைய வளம், உயிரோட்டம், இலக்கணம், இலக்கியம் ஆகியவையும் கருத்தில் கொள்ளப்படுகிறது. அவ்வகையில், “மொழியின் தோற்ற நிலைகளோடு பிரிக்க முடியாவண்ணம் இணைந்தேயுள்ளது என்று முன்னர் குறிப்பிட்டோம். மொழியின் தோற்றம், வளர்ச்சி ஆகியன பற்றி கற்பனைக் கண்கொண்டு உணர்ச்சி மேலிட்டநிலையில் ஆய்ந்த மனிதன் மொழியின் தோற்றத்திற்கும் புராணங்கள் பலவற்றை அமைத்து கூறத் தொடங்கினான். இவைகள் மொழி ஆய்விற்கு எவ்வளவு துணை செய்யா. எனினும் கதைகள் படைப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் மொழியைப் படைத்த மனிதன் தன் சீரிய முயற்சியின் பயனாக அம்மொழியினைக் கூறுபடுத்தி ஆய்வதிலும், விளக்கியுரைப்பதிலும் அளப்பரிய வேட்கை கொண்டதால் ஒவ்வொரு மொழியிலும் எண்ணற்ற இலக்கணக் கருவூலங்கள் தோன்றின. இலக்கண அறிஞர்களின் இம்முயற்சிகள் ஏற்றிப்போற்றத் தக்கனவெனினும், அவர்கள் வகுத்துச் சென்ற விதிமுறைகளும், விளக்கங்களும் அவர்கள் காலத்திலிருந்து மொழியின் விளக்கங்களாகவும், விதிமுறைகளாகவும் அமைந்தனவேயன்றி நாள்தோறும் வளர்ந்தும், குறைந்தும், பல சொற்களை இழந்தும், பதுக்கியும், புதுச்சொற்களை ஏற்றும், பழஞ்சொற்களுக்குப் புதுப்பொருட்களைக் கொடுத்தும் கால வெள்ளத்தை எதிர்த்து நின்று சாவாப் பெருவாழ்வு வாழும் உயிரோட்டமுள்ள ஒரு வாழும் மொழியின் முழு இயல்பினையும் விளக்கப் பயன்படாது என்பது திண்ணம். மேலும் அவர்கள் வகுத்த விதிமுறைகளை ஒரு இலட்சிய மொழியின் விதிமுறைகளாகுமேயன்றி மனித சமுதாயத்தோடு இணைந்து வளர்ந்து வரும் உண்மை மொழியின் விதிமுறைகளாகா”5 என்ற கருத்தையும் காணலாம். மேலும் ஒரு மொழியில் சுவை இருந்தால் அதில் மனித வாழ்க்கையும் பகுத்தறிவையும் காணலாம் என்ற கருத்தை “தமிழில் சுவை இல்லாமல் அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை, அறிவு, வளர்ச்சி அறிவு பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தைச் சிறு கருத்தைக் காண முடியாது.”6 மேலும் “வளர்ந்து வரும் அறிவியல் யுகத்திற்கு ஏற்ப மொழியில் புதுமைகள் செய்து கொள்ள எந்தவிதத் தயக்கமும் தேவையில்லை”7 என்ற கருத்தை நோக்கும் போது படைப்பிலக்கியங்களில் புதுமையான நோக்கு இன்றைய ஆசிரியர்களிடம் கணப்படுவது சாலச்சிறந்தது ஆகும். எனவே மொழி என்பது மனித சமுதாயத்தின் ஓர் அங்கம் என்றும் மனிதர்களின் பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கம், பகுத்தறிவு, வாழ்க்கை ஆகியவற்றை எடுத்துக்காட்டும் உன்னதக் கருவி என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்.
நடை-விளக்கம்
நடை என்பது ஓர் ஆசிரியரின் தனித்தன்மையை வெளிப்படுத்துவது ஆகும். அத்தகைய நடையமைப்பின் மூலம் ஆசிரியரின் பண்பாடும் அவர் சொல்ல வருகின்ற கருத்தையும் அறிந்து கொள்ளலாம். அவ்வகையில் சக்கை புதினத்தின் மொழி நடையை ஆசிரியர் கலைச்செல்வியின் மூலம் அறியலாம். இவர் தன் நாவலில் வட்டார வழக்கு நடை, வருணனை நடை, கலவை நடை, ஒலி குறிப்புச் சொற்கள், தொடர் நிலையில் அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி ஆகியவற்றையும் நாட்டுப்புற நடையில் பாடல், கலை, தொழில் ஆகியவற்றை அமைத்துள்ளார். எனவே இந்நடையமைப்பைப் பார்க்கும் போது ஆசிரியரின் தனித்தன்மை வெளிப்படுகிறது. மேலும், “நடை என்பது ஆசிரியர்களின் மனோபாவத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது என்பதை உணர்கிறோம். எது எப்படியாயினும் சரி, படிப்போரைத் தன்னோடு ஒன்றுபடுத்திக்கொள்ளும் ஆற்றல் ஒரு நடைக்கு இருக்குமானால் அது சிறந்த நடையே என்பதில் ஐயமில்லை”8 என்ற கருத்தை இவ்விடத்தில் பொருத்திக் காணும் போது நாவலுடைய தனித்தன்மையும் வெளிப்படுகிறது என்பதை இவற்றின் மூலம் அறியலாம்.
வட்டார வழக்கு நடை
வட்டார வழக்கு என்பது ஒவ்வொரு பகுதிக்கு ஏற்றவாறு அமைவது ஆகும். குறிப்பாகத் தமிழ்நாட்டில் திருநெல்வேலி, மதுரை, சென்னை, தஞ்சை ஆகிய இடங்களுக்கு ஏற்றவாறு மக்களின் பேச்சு வழக்கு அமைந்திருக்கும். அதனையே வட்டார வழக்கு என்று கூறுகிறோம். அதன் அடிப்படையில் சக்கை புதினமும் சேலம் வட்டாரத்தை ஒட்டியதாக அமைந்துள்ளது. அவ்வகையில் வட்டார வழக்கு நடையைக் காணலாம். இந்நாவலில் மரகதம் என்ற முதன்மை பாத்திரம் மற்ற பெண்களிடம் வேலையை வேகமாக கவனிக்க வேண்டும் என்ற நோக்கில்,
“ஒண்ணுஞ்சொல்லாம குந்திக்கிட்டு கெடந்தா வெசனம் தீந்துடுமா…?”9
என்று சொல்வதைக் காணும் போது குந்திக்கிட்டு என்ற சொல்லானது அமர்ந்திருத்தல் என்ற பொருள் அடிப்படையில் அமைந்துள்ளதை கவனிக்க வேண்டும். மேலும்,
“ஆருமே பேசுலேன்னா பெரச்சன தீந்துடுமா…?”10
என்று சின்னதாயி கேட்டதன் மூலம் கிராம மக்களின் யதார்த்த பேச்சினைக் காணமுடிகிறது. மேலும்,
“ஏங்கருமம் இம்பூட்டு இரும இருமற… மேலுக்கு ரொம்ப சொகப் படலயா…?”11
என மரகதம் பேசுவதன் மூலம் இவ்வளவு என்ற சொல்லானது இம்பூட்டு என்று புதினத்தில் பேசப்பட்டுள்ளதை இங்கு காணலாம். தொடர்ச்சியாக,
“ஒனக்காவதான் எடுத்தாந்தேன்… அதுக்குள்ள அவுசரபடுதீய…”12
என்று பாத்திர உரையாடலில் உனக்காகதான் என்பது ஒனக்காவதான் என்று கிராமத்து பேச்சாக உள்ளதை இவ்விடத்தில் அறியலாம். எனவே வட்டார வழக்கு நடையின் மூலம் குந்திகிட்டு, ஆருமே, இம்பூட்டு, ஒனக்காவதான் ஆகிய சொற்கள் வட்டார வழக்கில் அமைந்திருப்பதை ஆய்வின் வழி அறிகின்றோம். இதுபோன்ற எண்ணற்ற சொற்கள் நாவலில் இருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
வருணனை நடை
வருணனை நடை என்பது கவிதை வடிவத்தில் வருணித்துக் கூறுவது ஆகும். இந்நடையமைப்பு அனைத்து நாவல்களில் அமைந்திருந்தாலும் ஒரு சில புதினங்களில் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அவ்வகையில் சக்கை என்னும் புதினத்தில் அமைந்துள்ள வருணனை நடைகளைக் காண்போம். இதனை,
“இளங்காலை நேரம், இரவு சமைத்த சோறு ஊறல் போட்ட சாராயமாய் அவரவர் வீட்டுப் பானைகளில் அளவுக்கதிகமாகவே ஊறிக்கிடந்தது. சுற்றி திரிந்த சோனி நாய்களுக்கு இன்று உணவுக்கு பஞ்சமிருக்காது. மண் பரிந்து போய் வெளியே நீண்டு கிடந்த கற்களில் திட்டுத் திட்டாக மக்கள் அமர்ந்திருந்தனர். இருபதை நெருங்கும் வயதிலேயே மாமாங்க உழைப்பு உழைத்திருந்தால் நாற்பதிலேயே மூப்பு அப்பிகிடந்த முகங்களில் இப்போது பீதியும் சேர்ந்திருந்தது. இடையில் கட்டியிருந்த வேட்டி என்றோ ஒரு நாள் வெள்ளை நிறத்தில் இருந்ததற்கான அடையாளங்களை முற்றிலுமாக தொலைத்திருந்தது. ஆங்காங்கே கல் துறுத்திக் கொண்டிருந்த பூமி புல் பூண்டு அதிகமில்லாத பொட்டலாக இருந்ததில் அடிக்கின்ற காற்றுக்கு அதிகமாகவே புழுதியைக்கிளப்பி மண்ணையும் வாரி தூற்றிக் கொண்டிருந்தது.”13
எனவும்,
“எங்கேயோ மழை பெய்வதற்கான அடையாளமெல்லாம் இங்கேயும் நெருங்கி வர பகல் நேரம் சற்றே மங்கியிருந்தது. மெல்லிதான வெளிச்சக் கீறல்களைத் தொடர்ந்து தூரத்தில் கொட்டி முழக்கும் இடிசத்தம் முப்பத்தெட்டு வயசு மாணிகத்தின் கவனத்தை திசை திருப்பியது.”14
எனவும்,
“கிட்டதட்ட ஐம்பத்தைந்து வருடங்களுக்கு முன் மலைகளெல்லாம் உயர உயரமாக நிறைய அளவில் இருந்தது. தார்ரோடுகளும் ரயில் தண்டவாளங்களும் கட்டுமான பணிகளுமாகச் சுதந்திர இந்தியாவை உருவாக்கிக் கொண்டிருந்த நேரம் அது. ஜல்லிகளின் தேவை அதிகரித்ததில் தட்டுபாடு அதிகமாகி விடவும் ஓங்குதாங்காக நிற்கும் கல்மலைகளைல்லாம் காசு மலைகளாக தெரிந்தது மாணிக்கத்தின் அப்பா லோகநாதனுக்கு”15
எனவும்,
“கல் புதைந்த வறண்ட பூமிதான் என்றாலும் எப்போதாவது பெய்யும் மழை அத்தனையும் கொட்டி தீர்த்து விடும் வைராக்கியத்தோடு பெய்து கொண்டிருந்தது அன்று வானம் வெளிவாங்காமல் இருந்ததில் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் இன்றி போயிருந்தது. மண் சுவரும் தரையும் ஈரத்தை உள் வாங்கி இருத்திக்கொள்ளும் காலம் கடந்து விட்டிருந்ததில் சுவர் இப்போதோ அப்போதோ என்றிருக்க தரைபனிக்கட்டியாகி இருந்தது.”16 என்ற வருணனை நடையைப் பார்க்கின்ற போது கிராமபுறங்களில் உள்ள இயல்பான நிகழ்வுகளைக் கண்முன்னே காட்டுவதாக ஆசிரியர் அமைத்துள்ளார் என்பதை ஆய்வின் மூலம் அறிகின்றோம்.
கலவை நடை
கலவை நடை என்பது தமிழ் மொழியோடு பிறமொழியைக் கலந்து எழுதுவது ஆகும். இந்நடை புதினத்தில் அதிகம் பயின்று வந்துள்ளது. இதனை,“கிரக்ஷர் டிரைவர் கந்தசாமியின் மனைவியிடம் கதை நீளும். டிப்பர் லாரி டயர்தான் அவளுடைய சிம்மாசனம்… மண்ணுக்குள்ளே பாதி டயர் புதைந்திருக்கும், மீதி டயருக்குள் மண் புதைந்து கிடக்கும். டயர்க்குள்ளேர்ந்து ஓடிய சின்ன பூரானை உட்கார்ந்நவாறே குதிகாலால் நசுக்கினாள்.”17 என்றும்,“கைக்கு அடக்கமாக இருந்த டிரான்ஸ்சிஸ்டர் யாருடைய உணர்வுகளையும் புரிந்துகொள்ளவில்லை.”18 என்றும்,“இன்னிக்கு மொத்தத்துக்கும் அம்பத்து நாலு யூனிட்டு கணக்குல ஏத்திக்குனும்யா…”19 என்றும்,“கிரக்ஷர் ஓட்டும் டிரைவர் இருவர்..ஜல்லியை ஏற்றி விடும் லோடுமேன் குடும்பம் ஒன்று…கணக்குப்பிள்ளை ஒருத்தன் அவனே எலக்ட்ரிசியன் வேலையும் வாட்ச்மேன் வேலையும் சேர்த்து பார்த்துக் கொள்வான்.”20 என்றும்,“நைட்டு வர லேட்டாவும் சாப்பாடு வேணாம்… நீ சாப்டுட்டு படு…”21 என்றும்,“சலூனு கடைக்கு முடி நறுக்க போனனா…அப்ப லேடியா பெட்டியில கேட்டன்…அங்க இருந்த பேப்பர்ல பெருசு பெருசா கலரு கலரா போட்டோ போட்டுருந்தான் புள்ள…”22 என்றும், பல விதங்களில் பிற மொழி சொல்லான ஆங்கிலச்சொல் கலந்திருப்பதை நாவலில் அறியமுடிகிறது.
இவற்றின் மூலம் புதினத்தில் டிரைவர், டயர், யூனிட்டு, டிரான்சிஸ்டர், ஜல்லி, எலக்ட்ரிசியன், வாட்ச்மேன், நைட்டு, லேட்டு, சலூனு, லேடியா (ரேடியா), கலரு, போட்டா போன்ற எண்ணற்ற ஆங்கிலச் சொற்கள் நாவலில் கலந்திருப்பதைக் காணமுடிகிறது. இவற்றின் மூலம் நாவலில் கலவை நடையமைப்பு அதிகமாக இருப்பதை அறிகின்றோம்.
ஒலி குறிப்புச் சொற்கள்
நாவலில் ஒலிகுறிப்புச் சொற்களும் இடம் பெற்றுள்ளது. அதாவது ஒருவர் மற்றொருவரை அழைப்பது போலவும், அச்சம், விரைவு ஆகிய நிலைகளில் தொழிலாளர்கள் தங்களை கவனப்படுத்திக் கொள்வதற்காக ஒலி குறிப்பு வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். இத்தகையச் சொற்கள் அதிகம் நாவலில் இடம்பெறவில்லை ஏதேனும் ஒரு சில இடங்களில் மட்டும் இடம் பெறுகிறது. இதனை நாவலில்,
“ஹர்ர்… ஹர்ர்…ஹர்ர்…நாக்கை மடித்து சத்தம் கொடுத்தான் ரங்கராசு.”23
என்றும்
“எம்மா… எம்மாவோவ்…”24
அழைத்தாள் சின்னதாயி. என்ற ஒலி குறிப்புச் சொற்கள் நாவலில் இடம் பெற்றுள்ளதை மேற்கண்ட மேற்கொள்களின் மூலம் நாவலில் காணலாம்.
தொடர்நிலை
தொடர்நிலை அடிப்படையில் அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி ஆகியவற்றை நாவலில் நடையமைப்பு மூலம் இனி வரும் பகுதிகளில் காணலாம். இத்தகையச் சொற்கள் பேச்சு வழக்கிலும் வட்டார வழக்கிலும் அமைகின்ற நாவல்களில் பெரும்பாலும் காணலாம். அவ்வகையில் சக்கை புதினத்தின் நடையிலும் இத்தகைய தொடர் நிலைகள் அமைந்துள்ளது.
அடுக்குத் தொடர்
அடுக்குத் தொடர் என்பது அச்சம், விரைவு போன்ற குறிப்புகளில் வருவது ஆகும். அதே சமயத்தில் அச்சொற்களைப் பிரித்தால் பொருள் தரும். அவ்விதத்தில் நாவலில் இடம் பெற்றுள்ளது. அடுக்குத் தொடர்களைக் காணலாம். அதாவது,
“ சொல்றோம்…சொல்றோம்…செத்தபொறுங்க...”25
எனவும்,
“ஏய்… இரு…இரு…”26
எனவும்,
“வாரன்… வாரன்…நீ கௌம்பு…”27
எனவும்,
“கத்தி கத்தி பார்த்து விட்டு வாய்க்குள் விரலை போட்டுக் கொள்வாள்”28
எனவும்,
“அண்ணே…அண்ணே… கத்திக்கொண்டே ஓடி வந்தான் ரங்கராசு.”29
எனவும்,
“ஏறுங்க…ஏறுங்க… கத்திக்கிட்டே எல்லோரும் ஏறிய பிறகு கடைசியாக ஏறினான் சண்முகம்”30
எனவும், அமைந்திருப்பதை நாவலில் அறியலாம். ஆகவே இவற்றின் மூலம் சொல்றோம் சொல்றோம், இரு இரு, வாரன் வாரன், கத்தி கத்தி, அண்ணே அண்ணே, ஏறுங்க ஏறுங்க என்னும் அடுக்குத் தொடர்களைப் புதினத்தின் மூலம் காண்கின்றோம்.
இரட்டைக்கிளவி
இரட்டைக்கிளவி என்பது பிரித்தால் பொருள் தராமல் வருவது ஆகும். இது நாவலில் ஒரு சில இடங்களில் அமையப் பெற்றுள்ளதைக் காணலாம். இத்தகைய இரட்டைக்கிளவியானது புதினத்தில்,
“டப் டப்பென்று தட்டிக் கொண்டே கிடைக்கும் நாலைஞ்சு கோழிங்களும்”31
எனவும்,
“பட்பட்யென்று தானியத்தை அலகால் கொத்தி தின்னும் ஓசை”32
எனவும்,
“படபடவென்று இறக்கையை அடித்துக் கொள்ளும்”33
எனவும்,
“டல்ல…டல்ல்… என்று ஆடுகளைப் பார்த்து அவள் கொடுத்தாள்”34
என இரட்டைக்கிளவிச் சொற்கள் நாவலில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு டப்டப், பட்பட், படபட, டல்ல டல்ல எனவும் இரட்டைக்கிளவிச் சொற்கள் நாவலில் அமைந்துள்ளதன் மூலம் தொடர்நிலை சொற்களை அறிகின்றோம்.
நாட்டுப்புற நடை
நாட்டுபுறம் என்பது கிராம மக்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டுவது ஆகும். அத்தகைய மக்கள் இயல்பான வாழ்க்கையை வாழக்கூடியவர்கள். இவர்களுக்கென்று தனிப்பட்ட ஏட்டில் எழுதப்பெறாத இலக்கியங்கள் உண்டு. இத்தகைய எதார்த்தமான மனித இனத்தின் வாழ்வானது மொழித்தோற்றம் பெற்ற காலத்திலே தோன்றிவிட்டன என்ற கருத்தை, “மொழியின் தோற்றம் உருவான போதே மனித இனமும் தன் சிந்தனைத் திறனை வளர்க்க முற்பட்டபோதே வாய்மொழி இலக்கிய வகை கருக்கொண்டது எனலாம். உலகில் மொழியும் அடுத்து வாய்மொழி இலக்கியங்களும் அதனைத் தொடர்ந்து எழுதப்பட்ட இலக்கியங்களும் முகிழ்த்தன எனக் கூறலாம். எனவே, மனித இனம் தோன்றிய அன்றே நாட்டுப்புற இலக்கியங்களும் தோன்றிவிட்டன எனக் கருதலாம். மண்ணின் மைந்தர்தம் மணக்கருவறையில் கருக்கொண்டு உருப்பெற்று உயிர்பெற்று உலா வரும் உள்ளத்தின் உண்மையான வெளிப்பாடுகளே நாட்டுப்புற இலக்கியங்கள்.”35 என்ற கூற்றை நாட்டுப்புற இயல் ஆய்வின் மூலம் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு நாட்டுபுற மக்களின் இலக்கியங்களாகக் கருதப்படும். நாட்டுப்புறப் பாடல், நாட்டுபுறக் கதை, நாட்டுப்புறத் தொழில் ஆகியவையும் சக்கை புதினத்தின் ஆசிரியர் கலைச்செல்வி கையாண்டுள்ளதை ஆய்வின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
நாட்டுபுறப் பாடல்
நாட்டுபுறப் பாடல் வகையில் தொழில் பாடலாக ஆசிரியர் பதிவு செய்துள்ளார். அவ்வகையில் கல்லுடைக்கும் தொழிலாளர்களைப் பற்றி இந்நாவலில் அமைந்துள்ளதால் கல்லுடைக்கும் தொழில் பாட்டைக் காண முடிகிறது. மேலும், தொழில் பாடல்களைக் குறித்து “பொதுவாகத் தொழில் புரியும்போது பாடும் பாடல்களைத் தொழில் பாடல்கள் என்கிறோம். தொழிலின் சுமையும் உழைப்பின் களைப்பும் தெரியாமல் இருக்கப் பாடுகின்றனர். தொழிலாளர்கள் தங்கள் வேதனைக்கு வடிகாலாகவும் பயன்படுத்துகின்றனர். மனிதர்கள் கூடித் தொழில் செய்யும் போது அக்கூட்டுறவிலே பிறப்பது தொழில் பாடல்கள். தொழில் பாடல்களிலே அன்பு மலர்வதையும், பாசம் பொங்குவதையும், உழைப்பின் ஆர்வத்தையும் நன்மையில் ஈடுபாட்டையும், தீமையில் வெறுப்பையும் காண்கிறோம். தொழில் பாடல்கள் தொழிலாளர்களது இன்ப துன்பங்களையும் நெஞ்சுக் குமுறல்களையும் ஆசாபாசங்களையும் விருப்பு வெறுப்புகளையும் வெளியிடுகின்றன.”36 எனும் சக்திவேல் அவர்களின் கூற்றையும் இங்கு அமைத்து நோக்குவது சிறப்புடையது ஆகும். அவ்வகையில் நாவலில்,
“கல்லொடைச்சு கல்லொடைச்சு தேகம் நலிஞ்சு போயிடுச்சே…. உளப்புக்கும் ஊதியத்துக்கும் எடவெளி உளுந்துடுச்சே… வயித்தையும் வாயையும் அடைக்க வளி ஒண்ணும் தெரியலியே… உள்ளதும் நொள்ளையாகி போவதெங்கே புரியிலியே”37
எனவும்,
“பாத்தி வெட்டி நாத்து நட்டு வெள்ளாம செஞ்சோமே... அண்ணன்புள்ள மாமன்புள்ள ஒத்துமையா இருந்தோமே…ஊரு சனம் மொத்தமும் ஒரு ஒலயில தின்னோமே…கேடு கெட்ட பஞ்சம் வந்து திக்குக்கொண்ணா நிக்கோமே.”38
எனவும்,
“சோள சோறு பொங்குனதும் கனவாகிப் போவுதய்யா… என்னைக்கிந்த பஞ்ச பொளப்பு எங்களவுட்டு நீங்குமோ… செங்கழனி தண்ணியில செங்கறையான் பூந்ததுபோல நெறகொடமா இருந்த வாழ்வ நேர திருப்பிபோட்டுடுச்சே கொத்துகளும் கொளையுங்களும் செத்து செத்து பொளைக்குதே… கம்பங்களியும் புளிச்ச மோரும் கேவுரு மாவு எள்ளு அடையும் வரகரிசி குத்து சோறும் முருங்கீரை புளி கொழம்பும்”39
எனவும்,
“கஸ்டப்படற சனத்துக்கெல்லாம் வளி சொல்ற எந்தாயி தும்பப்படுற மக்களுக்கு நல்ல கதி சொல்லிடு என் ஆயி சின்னாபின்னப்பட்டு போயி சிரப்பா சிரிச்சு போயி வக்கத்து நின்ன எங்களுக்கு வாழ வழி சொல்லு ஆயி”40
எனவும்,
“கெடா அடிச்சு கோழி அறுத்து கொலசாமிய கும்புடல…கொளம் கோயிலு நிலம்நீச்சு பாத்தறிஞ்சு வளருல…பொங்க வச்சு பூச பண்ணி கொண்டாட வழியில்ல… அதுக்காவே கொலையறுத்துட்டு போயிட்டீயே எஞ்சாமி நீ எங்கயிருக்க…?”41
எனவும்,
“பொறந்து விழுந்த பூமி இது… பொழப்பு செஞ்ச ஊரு இது… கண்ணான புருசனையும் முத்தான புள்ளைகளையும் கொடுத்த இந்த பூமிக்குள்ள பொனதஞ்சு கிடக்கும் எங்க மக்கா வாழப் போற சந்ததிக்கு நல்ல வாக்கு அருளு மக்கா மக்கிப்போன குடிசைங்க வாழ்வாகிப் போனதய்யா பாம்பு தங்கும் கல்லு பாறைங்க வவுத்து பொழப்பாகியாச்சே சம்மட்டிய தூக்கிப் போட்டு சக்கிப் போன தேகம் முழுசும் இந்த மண்ணை உள் வாங்கி உள் வாங்கி சுவாசம் பண்ணி வாழ்ந்தோமய்யா….நின்னது நிக்கப் போக சொன்னா வாவு வழி புரியிலியே…மக்கிப் போன பெரிசுங்களுக்கு வாழ்ந்த ஊரும் ஒண்ணு இருக்கு… நேத்தி மக்க எங்களுக்கு சொந்த ஊரு இந்த ஊருதான்…ஊரு நினைப்பு கொத்திப் புடுங்க கௌம்பிடுச்சு பெரிசுங்க…அதுங்க வாயோர வெத்தலையில செவந்து வந்தது சிரிப்புக்களை நெஞ்ச புடுங்கி போட்டாப்பல உன்னைவிட்டு போறோமே…அழுது சிரிச்சு வாழ வைச்ச எங்க மண்ணை விட்டு போறோமே….”42
என நாட்டுபுறப் பாடல்கள் சக்கை நாவலில் அமைந்துள்ளது.
மேற்கண்ட பாடல்களை ஆராயும் போது கல்லுடைக்கும் தொழிலில் வேலை அதிகமாக இருப்பினும் அதற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்ற புலம்பலையும் வயிற்றுப் பசிக்காக உழைத்தாக வேண்டும் என்ற நிலையும் பாடலில் பதிவாகியுள்ளது. இவ்வாறு அல்லல்படுகின்ற வேலையில் அம்மக்களின் தொழிலான விவசாயத்தை எண்ணி புலம்புவதை இவ்விடத்தில் ஆசிரியர் அழகாகப் பதிவு செய்துள்ளார். இறுதியாகத் தங்களுடைய துன்பங்களை எல்லாம் எண்ணி இறைவனை வேண்டுவதும் தங்களுடைய மகிழ்ச்சியான வாழ்க்கை அடியோடு அழிந்துவிட்டது என்று எண்ணி வேதனைப்படுவதும் நாட்டுபுறப் பாடல்களின் வழியாக அறியலாம். ஆகவே, சக்கை என்னும் நாவலை எழுதியுள்ள ஆசிரியர் கலைச்செல்வியிடம் நடை அமைப்பு என்பது தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக வட்டார வழக்கு, வருணனை, கலவை, ஒலிகுறிப்புச் சொற்கள், அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி, நாட்டுப்புறப் பாடல்கள் போன்ற பல்வேறான நடையமைப்புப் புலப்படுவதை இவ்வாய்வு தெளிவாக எடுத்துக் கூறுகிறது.
சான்றெண் விளக்கம்
1. முனைவர்.கி.கருணாகரன், முனைவர் வ.ஜெயா, மொழியியல், ப.1
2. மேலது. ,
3. மேலது. ,
4. டாக்டர் ஜி.ஜான்சாமுவேல், திராவிடமொழிகளின் ஒப்பாய்வு, ப.1
5. மேலது, பக்.3-4
6. நன்னன், மா.பெரியாரியல், ப.899
7. மு.ப.கமலக்கண்ணண், இலக்கியம் மொழி கலை குறித்த பெரியாரின் சிந்தனைகள், ப.65
8. மு.மா.இராமலிங்கம், நாவல் இலக்கியம், ப.139
9. கலைச்செல்வி, சக்கை,ப.2
10. மேலது, ப.4
11. மேலது, ப.12
12. மேலது, ப.93
13. மேலது, பக்.2-3
14. மேலது, ப.163
15. மேலது, ப.104
16. மேலது, ப.23
17. மேலது, ப.12
18. மேலது, ப.36
19. மேலது, ப.13
20. மேலது, ப.77
21. மேலது, ப.133
22. மேலது, ப.144
23. மேலது, ப.92
24. மேலது, ப.68
25. மேலது, ப.86
26. மேலது, ப.93
27. மேலது, ப.141
28. மேலது, ப.57
29. மேலது, ப.74
30. மேலது, ப.202
31. மேலது, ப.37
32. மேலது. ,
33. மேலது. ,
34. மேலது, ப.118
35. டாக்டர்.சு.சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, ப.13
36. மேலது, ப.52
37. கலைச்செல்வி, சக்கை, ப.69
38. மேலது, ப.107
39. மேலது. ,
40. மேலது, ப.212
41. மேலது, ப.216
42. மேலது, ப.199
Mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Orcid: https://orcid.org/0000-0002-9465-4421











