சென்ற ஞாயிற்றுக் கிழமை கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் ‘நூல்களின் சங்கமம்’ என்ற நூல்களின் கண்காட்சி - 2026 ரொறன்ரோ ரப்ஸ்கோட் வீதியில் உள்ள தமிழ் இசைக் கலாமன்ற மண்டபத்தில் இடம் பெற்றிருந்தது. இந்த நிகழ்வில் பல எழுத்தாளர்கள் தங்கள் நூல்களைக் காட்சிக்கும், விற்பனைக்கும் வைத்திருந்தனர். அரங்க மேடையில் நூல்களை வெளியிடவும், அறிமுகம் செய்யவும் சந்தர்ப்பம் கொடுத்ததால் சில எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியையும் நடத்தியிருந்தனர். எதிர்பார்த்ததைவிட அதிக இலக்கிய ஆர்வலர்களும், இளையோரும், மாணவர்களும் கலந்து கொண்டதால், மண்டபம் நிறைந்திருந்தது.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் இதுவரை கனடாவில் உள்ள சுமார் 49 எழுத்தளர்களை மெய்நிகர் வழியாக அறிமுகம் செய்திருக்கின்றது. அவர்களில் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். இதைவிட வெளி நாடுகளில் இருந்தும் சிலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் இ.பாலசுந்தரம், உமா மோகனதாஸ், கமலவதனா சுந்த, மணிமேகலை கைலைவாசன், திருமதி கெங்கா ஸ்ரான்லி, நடராசா முரளிதரன், அம்சன் குமார், அகணி சுரேஸ், தீபச்செல்வன், கலைவாணி (தமிழ்நதி), குரு அரவிந்தன் ஆகியோரது நூல்கள் சில வெளியிடப்பட்டும், அறிமுகம் செய்யப்பட்டும் இருந்தன. இந்த நிகழ்வின் போது எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் ‘அனுபவம் புதுமை,’ ‘கதிரவன் குடும்பம்,’ ‘தமிழ் ஆரம் சிறுவர் பாடல்கள்’ ஆகிய ‘மூன்று நூல்களும் 30 நிமிடத்தில்’ வெளியிடப்பட்டுக் கனடாவில் சாதனை ஒன்றை ஏற்படுத்தியிருந்தது. இதில் தமிழ் ஆரம் சிறுவர் பாடல் நூல் வெளியிட்ட ஒருமணி நேரத்தில் 153 பிரதிகள் அதே மண்டபத்தில் விற்பனையாகியிருந்ததும் ஒரு சாதனையாக அமைந்தது. கனடியச் சிறுவர் தமிழ்க் கல்வியில் பெற்றோரின் ஆர்வத்தை இது எடுத்துக் காட்டியது.

இதைத் தொடர்ந்து கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின் காலாண்டு இதழான வதனம் இதழ் - 10 ஐ நிர்வாக ஆசிரியர் திருமதி கமலவதனா சுந்தா அறிமுகம் செய்து வைக்க, இணையாசிரியர் சஞ்சை செல்வத்தின் உரையைத் தொடர்ந்து, முதன்மை ஆசிரியர் குரு அரவிந்தன் அவர்கள் இதழை வெளியிட்டு வைத்தார். தொடர்ந்து திருமதி கமலவதனா சுந்தா எழுதிய ‘எனது குட்டி உலகம்’ என்ற சிறுவர் பாடல்கள் அடங்கிய நூலும், ‘பெண் எனும் பேராற்றல்’ என்ற நூலும் இந்த நிகழ்ச்சியில் வெளியிட்டு வைக்கப்பெற்றது. கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பு வெளியிட்ட 62 பெண்கள் ஒன்று சேர்ந்து எழுதிச் சாதனைபடைத்த ‘மண்ணின் மணமும் மங்கையர் நினைவுகளும்’ என்ற நூலின் உலக சாதனையைப்பாராட்டி, அதில் பங்கு பற்றிய பெண்கள் ‘ஆல் இன்டியா புக்ஸ் ஒவ் ரக்கோட்’ நிறுவனத்தினரால் சாதனைச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நூல்களின் சங்கமம் நிகழ்ச்சியின் போது, பண்ணிசை, இசைநிகழ்ச்சி, நடனம், பாடல், பேச்சு, இளையோரின் பட்டிமன்றம், காவடியாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய இளையோரின் தமிழ் ஆர்வத்தை அங்கு வந்திருந்த பலரும் பாராட்டி இருந்தனர். வருகை தந்தோர்க்கு சிற்றுண்டி, மதிய உணவு வழங்கி விருந்தோம்பலும் இடம் பெற்றது. நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக ஜோதி ஜெயக்குமார், ரஜினி சுபாகரன் ஆகியோர் பணியாற்றியிருந்தனர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்