மக்கள் எழுத்தாளர்' கே. டானியல் நூற்றாண்டு விழா கடந்த ஞாயிறு மாலை (20 - 09 - 2026) யாழ்ப்பாணம் றிம்மர் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் டானியலின் நாவல்களில் பாத்திர வார்ப்பு செய்யப்பட்டிருக்கும் நிஜ மனிதர்களை அடையாளம் கண்டு, அவர்களை நேரில் அழைத்து கௌரவித்தனர். அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் அந்தந்த நாவல்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நோயினாலும் மூப்பினாலும், விழா மண்டபத்திற்கு நேரில் வர முடியாத கதை மாந்தர்கள் பேசும் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் காணொளி மூலம் காட்டப்பட்டன. அதில் யாழ் முஸ்லீம் வட்டாரத்தைச் சேர்ந்த, பொதுவுடமைக் கட்சி மூத்த செயற்பாட்டாளர் எம். ஏ. சி. இக்பாலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வினை கவிஞர் கருணாகரன் தொகுத்து வழங்கினார். டானியலின் மகள் தாரகா நினைவுச் சின்னங்களை வழங்கினார்.

டானியலோடு நெருங்கிப் பழகி இணைந்து பணியாற்றிய வி. ரி. இளங்கோவன், சி. கா.செந்திவேல், கே. சுப்பையா ஆகியோர் தமது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

டானியலின் வரலாறு பக்கச் சார்பற்ற முறையில் எழுதப்பட வேண்டும், அவர் பற்றிய ஆவணப் படமொன்று தயாரிக்கப்பட வேண்டும், அவருக்கு சிலை ஒன்றை வைக்க வேண்டும் போன்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களான கலாநிதி இராஜேஸ்கண்ணன், கலாநிதி ம. திருவரங்கன், சிராஜ் மஷ்ஹூர், சி. விமலன், முல்லை முகுந்தினி, ராகவன், ஷோபா சக்தி ஆகியோர் டானியலின் பன்முக ஆளுமை, சமூக - அரசியல் பங்களிப்புகள், எழுத்தின் உள்ளடக்கம் - போக்குகள் குறித்து கருத்துரைத்தனர். நன்றியுரையை டானியல் வசந்தன் நிகழ்த்தினார்.

டானியலின் நாவல்கள் 'கருப்புப் பிரதிகள்' வெளியீடாக சமீபத்தில் வெளிவந்துள்ளன. அவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. மண்டபம் நிறைந்த மக்களது பங்குபற்றலோடு நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேறியது.

மேலும் சில நிகழ்வுக் காட்சிகள்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள் (Pathivukal)

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்