அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் பின்புலம்: ஈழத்துத் தமிழ்ப் பிரதேசங்களில் நூலகங்களும் நூலகர்களும் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு அறிவியல், தொழில்நுட்ப ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பே அயோத்தி நூலக சேவை அமைப்பாகும். (யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஆனைக்கோட்டையில்,இவ்வமைப்பு கருவுற்று வளர்ச்சிகண்ட இல்லத்தின் பெயரான அயோத்தியே அவ்வமைப்பின்அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் பின்புலம்: ஈழத்துத் தமிழ்ப் பிரதேசங்களில் நூலகங்களும் நூலகர்களும் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு அறிவியல், தொழில்நுட்ப ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பே அயோத்தி நூலக சேவை அமைப்பாகும். (யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஆனைக்கோட்டையில்,இவ்வமைப்பு கருவுற்று வளர்ச்சிகண்ட இல்லத்தின் பெயரான அயோத்தியே அவ்வமைப்பின்
பெயராகவும் வைக்கப்பட்டது). ஈழத்தின் தமிழ் நூலகவியல்துறையில் முன்னோடிகளாகவிருந்த அமரர் கலாநிதி.வே.இ.பாக்கியநாதன், அமரர் எஸ்.எம்.கமால்தீன், திரு.இ.முருகவேள் போன்றோருடைய ஆலோசனை, வழிகாட்டலுடன் 1985இல் அயோத்தி நூலகசேவைகள் அமைப்பு, யாழ்ப்பாணம் ஈவ்லின் இரத்தினம் பல்லினப்பண்பாட்டு நிறுவன நூலகராகவிருந்த என்.செல்வராஜா அவர்களால் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம் நூலகவியல் கல்வியை தமிழில் பரவலாக்குவதும், நூலியல் அறிவை தமிழரிடையே விஞ்ஞானபூர்வமாகவும், நடைமுறைச் சாத்தியமான வழிகளிலும் எடுத்துச்செல்வதுமாகும்.

 

இத் திட்டத்திற்கு அடிப்படையாக நூலகவியல் எனற் காலாணடு சஞ்சிகை செப்டெம்பர் 1985இல் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டு தமிழ்ப் பிரதேசங்களில் இயங்கும் அனைத்து நூலகங்களுக்கும், நூலகர்களுக்கும் சந்தா அடிப்படையில் வழங்கப்பட்டுவந்தது. 1991வரை தடங்கலின்றி வெளிவந்த நூலகவியல் சஞ்சிகை, அதன் ஆசிரியர் (திரு. என்.செல்வராஜா) புலம்பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றதோடு வெளிவராது நின்றுபோயிற்று. அதன்பின்னர் இன்றுவரை ஈழத்தில் தமிழில் நூலகவியல்துறைசார் சஞ்சிகைகள் எதுவும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் உதவி, நூற்பகுப்பாக்கம், கல்வி நிறுவன நூலகங்கள், கலைச்சொற்றொகுதி: நூலகமும் தகவல் விஞ்ஞானமும், கிராமிய நூலகங்களும் அபிவிருத்தியும், ஆரம்ப நூலகர் கைந்நூல், நூலும் நூலகமும், யாழ்ப்பாணப் பொது நூலகம் ஒரு வரலாற்றுத்
தொகுப்பு ஆகிய வரலாற்று முக்கியத்துவமான நூல்களை அக்காலகட்டத்தில் அயோத்தி நூலகசேவையே வெளியிட்டது. ஈழத்தின் தமிழ் நூலகவியல்துறையின் முன்னோடி வெளியீடுகள் இவை என்பது இன்றைய வரலாறு.

அயோத்தி நூலக சேவையின் மிக முக்கியமான நூலியல் பங்களிப்பாக அமைவது “நூல்தேட்டம்” என்ற பாரிய நூல்விபரத்தொகுப்பு முயற்சியாகும். தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பட்ட ஈழத்துத் தமிழ்நூல்களுக்கான குறிப்புரையுடனானதொரு தமிழ் நூல்விபரப்பட்டியல் நூல்தேட்டமாகும். ஒவ்வொரு தொகுதியிலும் 1000 நூல்களுக்கான பதிவுகள் நூல்பற்றிய குறிப்புரையுடன்
தொகுக்கப்பட்டுள்ளன. 2002இல் முதல் தொகுதியை வெளியிட்ட அயோத்தி நூலக சேவைகள் இன்று 2011இல், 8ஆவது தொகுதியின் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

அயோத்தி நூலக சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட 1985ம் ஆண்டிலிருந்து மேற்கொண்டு வந்த நூலகவியல், நூலியல் முயற்சிகளில் முக்கியமானதாகக் கருதப்படும் மற்றொரு அம்சம் இவ்வமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட பல்வேறு கருத்தரங்குகளாகும். யாழ்ப்பாணம் இவ்லின் இரத்தினம் பல்லினப்பண்டபாட்டியல் நிறுவனத்தில் நூலகர் ஒன்றுகூடல்களைத் தொடர்ந்து நடத்தியதுடன், யாழ்ப்பாண மாவட்ட சனசமூக நிலையங்களின் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்புடன் 300க்கும் அதிகமான சனசமூக நிலையங்களை பாரிய அளவில் ஒருங்கிணைத்து சனசமூக நிலைய நூலகர்களுக்கான 6 நாள் பயிற்சியும் சான்றிதழ் வழங்கலும் ஐப்பசி 1989இல் சனசமூக நிலையங்களின் சம்மேளனத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணத்தில் கொட்டடிப்பகுதியில் அமைந்திருந்த சம்மேளனத்தின் தலைமை அலுவலகத்தில் நடத்தி முடிக்கப்பட்டது.

தோட்டப் பிரதேசங்களுக்கான கூட்டுச் செயலகத்தின் அழைப்பின்பேரில்(Coordinating Secretariat for Plantation Areas, Kandy) கண்டி புஷ்பதான மாவத்தையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் 1990 ஏப்ரல் 6-8ம் திகதிகளில் மலையக நூலக அபிவிருத்திதொடர்பான கருத்தரங்கொன்று அயோத்தி நூலக சேவைகளினால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இலங்கையின் பிரபல பல நூலகர்களை ஈழத்து நூலகவியல் வரலாற்றில் முதன்முதலாக ஒரே மேடையில் இடம்பெறச்செய்தமை இந்நிகழ்வின் முக்கிய வெற்றியாகும்.

மாநகரசபைகளின் வேண்டுகோளின் பேரில் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பு பிரதேசரீதியில் உள்ளுராட்சி நூலகங்களுக்கான நூலகவியல் கருத்தரங்குகளையும் மேற்கொண்டிருந்தது. சண்டிலிப்பாய், உடுவில் உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள கிராமிய நகர நூலகர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு ஜுன் 1986 இல் மானிப்பாய் நூலகத்தில் இடம்பெற்றது. திருகோணமலை நகர சபையின் ஆதரவுடன் திருகோணமலை மாவட்ட நூலகர்களுக்கான கருத்தரங்கும் இருநாள் பயிற்சியும் நவம்பர் 1989இல் இடம்பெற்றது.

சமூக அமைப்புகளின் நிதிவளத்தை அதிகரிக்கவும், நூலக விழிப்புணர்வினை அப்பிரதேச மக்களிடையே ஏற்படுத்தவும் அயோத்தி நூலக சேவை அமைப்பு தோள் கொடுத்து வந்துள்ளது. நவாலி வை.எம்.சீ.ஏயுடன் இணைந்து நூலக வாரம் ஏற்பாடு செய்யப்பட்டு கிராம விழிப்புணர்வை ஊட்டியதுடன் நவாலியில் வை.எம்.சீ.ஏ நூலகத்துக்கு நூல்களும் நிதியும் திரட்டியுதவினர். புங்குடுதீவு சர்வோதய அமைப்பினரின் கிராம நூலகத் திட்டங்களுக்கு ஆலோசனையும் பயிற்சிகளும் வழங்குவதில் அயோத்தி நூலக சேவை இன்றும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

ஸ்கொட்லாந்தின் டீழழமள யுடிசழயன நிறுவனத்தின் வாயிலாக தாயகத்தின் நூலக அபிவிருத்திக்கான நூல் உதவித் திட்டங்களை தற்போது முன்னெடுத்து வரும் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் நூலகவியல் மற்றும் நூலியல் பணிகள், போர்க்காலச் சூழலில், நூலகத்துறையின் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிராதவொரு வேளையில் தீவிரமாக  ன்னெடுக்கப்பட்டிருந்ததென்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.

இந்த அயோத்தி நூலகசேவைகள், அதன் தாபகர், நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் முன்னெடுப்புடன் மேற்கொள்ளப்படும் புது முயற்சியாகவே ஈழத்துத் தமிழ் நூற் சந்தையும் எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு நிகழ்வும் அமைகின்றது. கூட்டுறவு முறையில் ஒரு விற்பனைச் சந்தையை லண்டனில் ஆண்டுக்கு இரு தடவையாவது மேற்கொள்வது என்பதே இத் திட்டமாகும். இது முழுமையானதொரு
புத்தகச் சந்தையேயன்றி புத்தகக் கண்காட்சியல்ல. லண்டன்வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்குத் தாம் முன்னர் வெளியிட்ட நூல்களைச் சந்தைப்படுத்தும் பொது வாய்ப்பினையும் அங்கு வழங்குவதுடன் இன்று அவர்களின் வீட்டறைகளில் விநியோகிக்க வாய்ப்பின்றிக் கட்டிவைக்கப்பட்டிருக்கும் அந்த நூல்களை ஆண்டுக்கு இரு தடவையாவது, மக்களின் பார்வைக்கு மீண்டும் வைத்து அவற்றைக் கொள்வனவுசெய்யும் வாய்ப்பை ஏற்படுத்துவதற்கு இத்திட்டம் உதவுகின்றது.

எம்மிடையே புத்தகக் கலாச்சாரத்தை வளர்க்கும் திட்டத்தின் முதற்படியாக அங்கு குடும்ப நூலகத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உதவியாக, புத்தகங்களை எம்மவரின் இல்லங்களுக்குள் நுழையவைப்பதும் இச்சந்தையின் மற்றொரு நோக்கமாகும். தமிழகத்தின் மேலாதிக்கத்தின்கீழ் நலிந்துசெல்லும் ஈழத்தில் தமிழ்ப் பதிப்புத்துறைக்கு புது இரத்தம் பாய்ச்சும் வகையில் அவர்களது வெளியீடுகளில் குறைந்தது 25 பிரதிகளையாவது கொள்வனவு செய்து அவர்களுக்கு உறுதியான புகலிடச் சந்தை வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்போம்.

இலங்கையின் தமிழ்ப் பதிப்பகங்களிலிருந்து தருவிக்கப்பட்ட அண்மைக்கால வெளியீடுகளை அன்றையதினம் புத்தகச் சந்தையில் விற்பனைக்காக ஒரு மண்டபத்தில் கடைவிரிப்போம். இதில் அறிவியல் ஆய்வுகளுக்கும், சிறுவர் நூல்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. வாசகரின் தனிப்பட்ட விருப்புகளும் கவனத்துக்கெடுத்துக்கொள்ளப்படும். இத்திட்டத்தில் புத்தகக் கலாச்சாரத்தை புகலிடத்தில் வளர்த்தெடுக்கவேண்டும் என்று உதட்டளவில் மாத்திரம் பேசித்திரிபவர்களன்றி, உளமார விரும்புவோர் தாமும் நேரடிப் பங்காளர்களாகலாம்.

எதிர்வரும் ஒக்டோபர் 2011இல் முதலாவது ஈழத்துத் தமிழ்ப் புத்தகச் சந்தை லண்டன் வோல்த்தம்ஸ்ரோவில் இடம்பெறவுள்ளது. இரண்டாவது புத்தகச் சந்தை தமிழர் செறிந்து வாழும் வேறோரிடத்தில் மே 2012இல் திட்டமிடப்படுகின்றது. இது தொடரும் ஒரு செயல்திட்டமாகும்.

தயவுசெய்து இச்செய்தியை வாசிப்பவர்கள் எவரும், இது நல்லதிட்டம், அறிக்கை நன்றாக எழுதப்பட்டுள்ளது, உடனே செயற்படுத்துங்கள் என்று பாராட்டை மாத்திரம் வழங்கிவிட்டு உங்கள் பங்களிப்பை மேற்கொண்டுவிட்டதாகத் திருப்திப்பட்டுக்கொண்டு ஒதுங்கிவிடாதீர்கள்.

இவ்வறிக்கையின் கருத்தையே முதலில் உள்வாங்குங்கள். உங்களால் என்ன பங்களிப்பைச் செய்யமுடியும் என்று சிந்தியுங்கள். பெற்றோர்களே, தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களே, குறைந்தபட்சம் உங்கள் இல்லத்திலேயே ஒரு குடும்ப நூலகத்தை உருவாக்கி வீட்டில் ஒரு புத்தகக் கலாச்சாரத்தை உருவாக்க மனதளவிலாவது முதலில் முன்வாருங்கள். எம்மவரிடையே அதுவே மிகச்சிரமமானதொரு பணியாகும். மனமிருந்தால் இடமுண்டு. அதற்கான வாய்ப்பினை அயோத்தி நூலக சேவைகளின் புத்தகச் சந்தை உங்களுக்கு மலிவு விலையில் வழங்குகின்றது. வர்த்தக நோக்கற்றவிதத்தில் இலங்கை விலையுடன் அந்நூலை இங்கு எடுப்பிக்க ஆகும் செலவையும் மாத்திரம் சேர்த்து விலை நிரணயிக்கப்படும். இத்திட்டத்தை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விளக்கி புத்தகச் சந்தைக்கு ஒக்டோபர் 16ம் திகதி அவர்களையும் வோலத்தம்ரோஸ்ராவுக்கு அழைதது வாருஙக்ள். லணட்னிலுள்ள பல்வேறு இலக்கிய வட்டத்தினர்களே, முடிந்தவரையில் உங்கள் இலக்கிய வட்டத்தின் அங்கத்தினருக்கு இத்தினத்தை நினைவுபடுத்துங்கள்.

லண்டன் வாழ் தமிழ் எழுத்த்தாளர்க்களே, முன்னொரு தடவை வெளியீட்டு விழாவுடன் முடிவுக்கு வந்துவிட்ட உங்கள் நூல்களை ஆண்டுக்கு இருமுறையாவது மீண்டும் மக்களிடம் சேர்ப்பிக்கவும், சக எழுத்தாளர்களுடனும் வாசகர்களுடனும் இறுக்கமற்ற ஒரு எளிமையான நேரடிச் சந்திப்பை மேற்கொண்டு உரையாடவும் கருத்தாடவும் இவ்வாப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். நிகழ்வில் எவ்விதமான கருத்தரங்குகளோ, கலை இலக்கிய நிகழ்ச்சிகளோ, பேருரை-சிற்றுரைகளோ ஒழுங்குசெய்யப்படமாட்டாது. இது ஒரு வித்தியாசமான இலக்கிய, அறிவியல் அனுபவத்தை உங்களுக்கு வழங்கும் சந்திப்பு நிகழ்வாகும். விரைவில் புத்தகச் சந்தைகளில் சந்திப்போம்.

முதலாவது புத்தகச் சந்தை விபரம்:

இடம்: Lord Brooke Hall,Shernhall St,Walthamstow, E17 3EY London
காலம்: October 16 2011, 10:00 - 20:00
இத்திட்டத்தில் அக்கறை கொண்டவர்கள் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்: என். செல்வராஜா 01582 703786
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
N Selvarajah <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>