தமிழ் கலை இலக்கியப் பரப்பில் 'பேராசிரியர் க.கைலாசபதி மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. அவர் மறைந்து சுமார் 30 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் அவரது பெயர் குறிப்பிடப்படாத அரங்கு இல்லை எனச் சொல்லுமளவிற்கு இன்றும் பேசப்படுகிறார். விமர்சனங்கள் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் எழுப்பப்பட்டபோதும் அவரது பெயர் தொடர்ந்தும் உச்சரிக்கப்படுகிறது. அவரது எழுத்துகளிலிருந்து உதாரணங்கள் காட்டப்படுகின்றன. அவரது நூல்கள் பாடப் புத்தகங்களாகவும் பயிலப்படுகின்றன. ஆயினும் அவரை நேரடியாகத் தெரியாத, அல்லது அவரது காலத்தில் வாழ்ந்திராத இளம் எழுத்தளார்களும் ஏனைய மாணவர்களும் இருக்கிறார்கள். இன்றைய தலைமுறையினருக்கு 'பேராசிரியர் க.கைலாசபதி பற்றிய ஒரு சிறிய ஆனால் காத்திரமான அறிமுகத்தைத் தருவதற்கான ஒரு நூல் தேவை என உணரப்பட்டது. இந்நிலையில் திரு லெனின் மதிவானம்  எழுதி குமரன் புத்தக நியைத்தின் வெளியீடாக ஒரு நூல் வெளிவந்துள்ளது. 'பேராசிரியர் க.கைலாசபதி சமூக மாற்றத்திற்கான இயங்காற்றல்' என்ற லெனின் மதிவானம் அவர்களின் இந் நூல் ஆய்வு விழா 09.10.2011 ஞாயிறு  மாலை நடைபெற்றது.

இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் ஆதரவில் வெள்ளவத்தை தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் மாலை 4.30மணிக்கு ஆரம்பமாகியது. கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் திரு சிவா சுப்பிரமணியம் அவர்களாகும்.

" சமூகவியல் நோக்கிச் சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் வழிகாட்டியவர் அவராகும். இலக்கியப் படைப்பானது மனிதநல மேம்பாட்டிற்காக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் அவர்.

பத்திரிகைத்துறை, பல்கலைக்கழம், விமர்சனம் என பல்துறைகளில் தனது ஆளுமையை அவர் பதித்தார். இதனால்தான் 50 வருடங்கள் மட்டுமே வாழ்ந்து ஆற்றிய பணி சந்ததி சந்ததியாக பயன்படுத்தப்பட்டும் முன்னெடக்கப்ட்டும் வருகிறது.

மிகக் கடுமையான விமர்சனங்களுக்கு அவர் ஆளானார். காய்த்த மரம் கல்லெறிபடுவது போல அவர் கல்லெறிபட்டார். அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி மறைந்து பல காலம் ஆன பின்னரும் அவர் மீதான விமர்சனங்கள் தொடர்கின்றன. இந்த விமர்சனங்கள் பெரும்பாலும் கோட்பாட்டு ரீதியாகவே எழுப்பப்பட்டது. தனிப்பட்ட விமர்சனங்கள் குறைவு எனலாம்" என திரு சிவா சுப்பிரமணியம் தனது ஊரையில் குறிபிட்டார்.
 
ஆய்வுரையை திரு ந.இரவீந்திரன்  ஆற்றினார்.


 
"வாழ்க்கைப் பின்னணி, எழுத்துக்கள், பத்திரிகைத்துறை, பல்கலைக்கழகம், அரசியல், இலக்கிய அடைப்புகள், விமர்சனங்கள், நிறைவுரை ஆகிய தலைப்புகளில் நூல் பிரித்து எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக

*கைலாசபதி பற்றிய முக்கிய தகவல்கள்
*கைலாசபதியின் எழுத்துக்கள் வெளிவந்த பிரசுரங்கள்
*உலகத் தமிழாராச்சி மாநாடு: பின்னணியும் பின்நோக்கும் - க.கைலாசபதி
*ஈழத்துத் தமிழ் இலக்கியம் - க.கைலாசபதி
*சோஷலிசத்திற்கான பாதை பற்றி பேராசிரியர் கைலாசபதி

ஆகிய முக்கிய கட்டுரைகள் அடங்குகின்றன.சுமார் 103 பக்கங்களிலுள்ள நூலில் இப் பின்னிணைப்புகள் 40 பக்கங்களை அடக்குகின்றன. 

50களில் முற்போக்கு எழுச்சி எற்பட்டது. பின்னர் ரஷ்ய, சீனா எனப் பிரிந்தது. இவர் உறுதியாக சீன தளத்தை எடுத்துக் கொண்டார் இருந்தபோதும் மாற்றக் கருத்தினர் மீது பகைமை பாராட்வில்லை. இதனால் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உடையாமல் இயங்க முடிந்தது. சீனா சார்பாக மாற்றுக் கருத்துக்களை எதிர்த்து கடுமையாக கட்டுரைகளை எழுதியுள்ளார். சோஷலிச சமூதாயம் நோக்கியதாகவே அவரது பார்வை இருந்தது.

1974ல் தேசிய கலை இலக்கியப் பேரவை ஆரம்பித்தது. தாயகம் சஞ்சிகையை முதன் முதலாக நெல்லியடியிலிருந்து வெளியிட்டு வைத்தது அவர்தான்.
விமர்சனங்களைவிட ஆய்வக்கட்டுரைகளிலேயே அதிக நேரம் செலவழித்தார். அவர் தன் அணிசார்ந்தவர்களைத் தூக்கிப்பிடித்து முற்றவர்களை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்படுகிறது. ஆனால் மக்கள் சார்ந்தவற்றை, அவர்களை வழிப்படுத்தும் பார்வைகளை ஆதரித்தார் என்பதே உண்மை.

மஹாகவியை இருட்டித்தார் என்று சொல்வது தவறு. அவர் பற்றி அவர் சில இடங்களில் சொல்லியிருக்கிறார். ஆனால் மக்கள் இலக்கியம் எனப் பார்க்கும்போது மஹாகவியிடம் முற்போக்கான சில கருத்துகள் இருந்தபோதும் முற்போக்கு இயக்கத்தோடு சேர்ந்து இயங்கியவர் அல்லர். கைலாசபதி தான் சார்ந்த கருத்துள்ள படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தாரே ஒழிய ஏனையவற்றை ஒதுக்கவில்லை.
 
உள்நாட்டு நிலவரங்கள் பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றையும் நூலாக வெளிக்கொணர வேண்டும்." என்றார் ந.இரவீந்திரன் தனது உரையில்.

மற்றொரு ஆய்வுரையைத் தர இருந்த பேரசிரியர் சபா ஜெயராசா சமூகம் அளிக்கவில்லை. தான் அவசர வேலையாக வவுனியா சென்றிருப்பதால் கலந்து கொள்ள முடியவில்லை எனச் செய்தி அனுப்பியிருந்தார்.


 
வாசகர் கருத்தரங்கில்  கே.விஜயன் மற்றும் கே.எஸ்.சிவகுமாரன் ஆகியோர் கருத்துரைத்னர்.

லெனின் மதிவானம் தனது ஏற்புரையை காலம் கடப்பதை அடுத்து சுருக்கமாகச் செய்தார்.

கைலாசபதி தனது காலத்திற்கு முந்தியவர். அவரை நேரச் சந்தித்ததோ பழகியதோ இல்லை. தனது தந்தையும் அவரது நண்பரான திருகணேசலிங்கனூடாகவுமே அவரது பெயர் முதல் அறிமுகமானது. அவரை பற்றிய நூலைத் தந்து படிக்கவைத்தவரும் அவர்தான். ஹைலண்ட்ல் கற்பித்த ஆசிரியர் ஒருவர் கைலாசின் பார்வை பற்றி எப்பொழுதும் சொல்லுவார். இவை அவர் பற்றிய ஆர்வத்தை எழுப்பின.

90களில் தேசியகலை இலக்கியப் பேரவை ஊடாக பார்வை விரிந்தது. இந்த நூலை எழுத வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. இந் நூலை எழுதுவதற்கான பல தகவல்களை ரவீந்திரன், நீர்வை பொன்னையன், நந்தினி சேவியர், இருதயராஜா ஆகியோர் வழங்கினர். அவர்களுக்கு நன்றி என்றார்.
 
கைலாசபதி பற்றியும் அவரது ஆக்கங்கள் பிரசுரங்கள் பற்றிய பட்டியல் பூரணமானது அல்ல. இன்னமும் பலவற்றைச் சேகரிக்க வேண்டும். அவற்றை பின்னர் இணைப்பேன் என்றார். கூட்டம் 7மணியளவில் நிறைவு பெற்றது.


visit my blogs
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot.com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.