அ.ந.க.வின் படைப்புகள் அனைத்தையும் சேகரிப்பதற்குப் பற்பல வழிகளில் 'பதிவுகள்' முயன்று வருகின்றது. தினகரனில் வெளிவந்த அ.ந.க.வின் படைப்புகள் அனைத்தையும் சேகரிப்பதற்குப் பற்பல வழிகளில் 'பதிவுகள்' முயன்று வருகின்றது. தினகரனில் வெளிவந்த 'மனக்கண்' நாவலின் முழு அத்தியாயங்களும் திருமதி கமலினி செல்வராசனிடம் இருந்ததாக அறிந்து தொடர்பு கொண்டோம். ஆனால் அதனைப் பெற முடியாமல் போயிற்று. அதன்பின்னர் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்துடன் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டபோது அவர்கள் நியாயமான கட்டணத்தில் A 4 அளவுத் தாளில் பிரதிகளெடுத்து அனுப்பியிருந்தார்கள். அதற்காக சுவடிகள் திணைக்களத்திற்கு நன்றி கூறவேண்டும். ஆனால் அவர்கள் அனுப்பிய பிரதிகளில் எழுத்துகள் மிகச் சிறியனவாக இருந்த காரணத்தினால் தமிழகத்திற்கு அனுப்பி , நண்பர் 'ஸ்நேகா' பாலாஜி மூலம் நியாயமான கட்டணத்தில் தட்டச்சு செய்து எடுப்பித்தோம்.

அதனையே 'பதிவுகள்' இதழில் முன்னர் தொடராக வெளியிட்டோம். தற்போது மீண்டும் தமிழ் ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. மேற்படி நாவலைச் சுவடிகள் திணைக்களத்திலிருந்து பெற்றபோதும் , அப்பிரதியில் அத்தியாயம் 30ஐக் காணவில்லை. மீண்டும் பணம் செலவழித்துச் சுவடிகள் திணைக்களத்தில் கொழும்பிலிருந்த பதிவுகள் வாசகரொருவர் மூலம் தேடியும் அந்த அத்தியாயம் 30 அங்கு, சுவடிகள் திணைக்களத்தில் இருக்கவில்லை. இன்றுவரை அந்த அத்தியாயம் கிடைக்காததால் 'மனக்கண்' நாவல் நூலுருப்பெற முடியாமலுள்ளது.  மேற்படி பதிவுகள் வாசகர் மூலம் அ.ந.க.வின் கவிதைகள், மொழிபெயர்ந்த 'நாநா' நாவலின் அத்தியாயங்கள், கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர் என்னும் பெயர்களில் எழுதிய கட்டுரைகள், ஆங்கிலக் கட்டுரைகள் இரண்டு எனப் படைப்புள் சிலவற்றைப் பெறமுடிந்தது. ஆனால் இன்னும் அ.ந.க.வின் படைப்புகள் அனைத்தையும் பெறுவதற்கு நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது.

பெட்ராண்ட் ரசலின் யூத அராபிய உறவுகள் என்னும் நூலின் அவரது மொழிபெயர்ப்பு 'இன்சான்' சஞ்சிகையில் வெளிவந்ததாக அறிகின்றோம். அத்துடன் இலங்கைத் தகவற் திணைக்களத்தில் அவர் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றியபோது , தகவற் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட 'சிறிலங்கா' சஞ்சிகையில் 'பொம்மை நகர்' என்னும் சீன நாவலொன்றின் அவரது மொழிபெயர்ப்பு வெளிவந்ததாகவும் அறிகின்றோம். இலங்கை அரசின் சாகிததிய விழாவொன்றில் பாடப்பட்ட அவரது கவிதையான 'கடவுள் என் சோர நாயகன்' மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றதாக அறிய முடிகின்றது. தென் புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை ‘ ஒரு நூற்றாண்டிற்கு ஒருமுறைதான் இப்படிப் பட்ட நல்ல கவிதை தோன்றும்’ என்று குறிப்பிட்டுள்ளதாகப் பலர் குறிப்பிட்டுள்ளனர். அதனையும் இதுவரையில் பெறமுடியவில்லை.  சிரித்திரனில் அ.ந.க.வின் 'சங்கீதப் பிசாசு' என்னும் சிறுவர் நாவலொன்று வெளியாகியுள்ளது. அதனையும் இதுவரை பெறமுடியவில்லை.

அ.ந.க.வின் படைப்புகளைத் தேடும் முயற்சியினைப் பதிவுகள் இப்பொழுதும் தொடர்கிறது. உதவ விரும்பும் ஆர்வலர்கள் எம்முடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும். எமது மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. நீங்கள் இந்தவிடயத்தில் செய்யவேண்டிய பணி பற்றிய விபரங்களைத் தருவோம். உங்களது ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும். குறிப்பாக 'மனக்கண்'  நாவலின் அத்தியாயம் 30 எவ்வளவு விரைவில் பெறமுடிகிறதோ நல்லது. - பதிவுகள் -