யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஓராயம் அமைப்பு!

1971-1977 காலப்பகுதியில் யாழ் இந்துக்கல்லூரியில், சமகால வகுப்புகளில் கல்வி கற்று வெளியேறி  அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா, இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வசித்துவரும் மாணவர்களில் சிலர் இணைந்து உருவாக்கிய, சமூக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும், பதிவு செய்யப்பட்ட,  இலாப நோக்கற்று இயங்கும் அமைப்பே ஓராயம் அமைப்பு. இவ்வமைப்பு புலத்து மக்களோடு இணைந்து செயற்படும் வகையில் கல்வி, விவசாயம், நீர்வளப்பாதுகாப்பு, சுகவாழ்வு, சூழற்பாதுகாப்பு, இளையோர் தொழிற்கல்வி ஆகிய துறைகளில் ஆறு உபகுழுக்களை அமைத்து இயங்கத்தொடங்கியுள்ளது. இதற்காக இவர்கள் இணையத்தளமொன்றினையும் உருவாக்கியுள்ளார்கள். அத்துடன் இவர்கள் புலத்தில் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்களை பின்வரும் மூன்று வகைகளாகப் பிரித்து ,அவற்றின் அடிப்படையில் செயற்படவும் முடிவு செய்துள்ளார்கள்:

1. உடனடியாக நிறைவேற்றக்கூடிய சிறு திட்டங்கள்.
2. ஒன்றிரண்டு வருட காலத்தில் அமுலாக்கக்கூடிய தொடர்திட்டங்கள்.
3. நீண்ட காலச் செயற்பாடுகளைக்க்கொண்ட பெருந் திட்டங்கள்.

இவ்வமைப்பு தற்போது மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயம் பின்தங்கிய பிரதேசமாக அடையாளம் காணப்பட்டு அப்பகுதி மாணவர்களுக்கு உதவும் செயற் திட்டங்களை ஏற்படுத்தியுள்ளது:

1. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மாணவர்கள் இனங்காணப்பட்டு, அவர்களுக்கு 46 மாதம் ரூபா 750 வழங்கும் திட்டம்.
2. முன் பள்ளி மேலதிக உதவித்தொண்டர் ஆசிரியர்கள் 10  பேருக்கும் மாதம் ரூபா 3,500 வழங்கும் திட்டம்.
3. நன்கு படிக்கும் ஐந்து உயர்வகுப்பு (A/L) மாணவர்களுக்கு Tablet வழங்கும் திட்டம்.
4. வறுமையான குடும்ப நிலையில் வாழும் 26 பாடசாலைகளில் கல்வி கற்கும் 719 மாணவர்களுக்கு Pen Drive வழங்கும் திட்டம்.

இத்திட்டத்தினைச் செயற்படுத்தும் வகையில் ஓராயம் அமைப்பானது ஓராயத்தின் நோக்கங்களுடன் ஒத்துப்போகும் சமூக நிறுவனங்கள், சமூகச் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து செயற்பட விரும்புகின்றது. இதற்காக அனைவர்தம் ஆதரவினையும் வேண்டி நிற்கிறது. ஓராயம் அமைப்பு பற்றிய விரிவான தகவல்களை அதன் இணையத்தளத்தில் அறிந்துகொள்ளலாம். அதற்குரிய இணையத்தள முகவரி: https://www.oraayam.org அதனுடன் தொடர்புகொள்வதற்குரிய மின்னஞ்சல் முகவரி : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஓராயம்
பற்றிய அறிமுகம்: https://oraayam.org/wp-content/uploads/2021/01/A01.OF-Introduction-Tamil-210116.pdf
ஓராயம் நிறைவேற்றுக்குழு (2020 - 2021) : https://oraayam.org/our-team/

ஓராயம் அமைப்பு பற்றிய அறிமுகத்தினை அதன் இணையத்தளத்திலிருந்து இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.


ஓராயம் அமையம் அறிமுகம்

ஓராயம் கல்வித்திட்டங்கள்...

யாழ்.இந்துக்கல்லூரியில் 1971 - 1977 காலப் பகுதியில், சமகால வகுப்புகளில் கல்விகற்று வெளியேறிய மாணவர்கள் சிலர் , இந்த கோவிட் (covid) 19 இடர் காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடந்த நிலையில் , 18.04.2020 இல் கூடிக் கதைத்து , எம் வகுப்பு மாணவர்களை இணைத்து ஒரு தாபனத்தைத் தொடங்கி , அதன் மூலம் எம் புலத்து மக்களுக்கும், நீண்டகால நோக்கில் உலகில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிட உள்ளோம்.

இன்று எம் யாழ் இந்துவில் எம்முடன் ஓன்றாகக் கல்வி கற்ற, பின்வரும் எட்டு நாடுகளான, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஜக்கிய அரபு இராச்சியம், இந்தியா, இலங்கை, தென்னாபிரிக்கா, அவுத்திரேலியா ஆகிய இடங்களில் இருந்து இணைத்து, "ஓராயம் அமையம்" என்ற தாபனத்தை தொடங்கியுள்ளோம்.

எமது புலத்துச் செயற்பாடுகளாக கல்வி (முக்கியமாக இணையவழிக் கல்வி), விவசாயம் (உதாரணமாக வீட்டுத் தோட்டம்,பசுமைச் சுற்றுச்சூழல் போன்றவை) சிறு குடிசைக் கைத்தொழில்கள், நீர்ப்பாசன -நீர் சேமிப்பு, வைத்திய சுகாதார விழிப்புணர்ச்சி(முதியோர் பராமரிப்பு உள்ளடங்கலாக), இளையோரிற்கான தொழிற்கல்வி, இளையோரின் சமூகத் தொண்டு, அவர்களிற்கான நற்சிந்தனை வகுப்புகள், பெற்றோரிற்கான விழிப்புணர்வு போன்றவற்றை முன்னிலைப் படுத்தியுள்ளோம்.

இத் திட்டங்களை அடையாளம் கண்டு, அவற்றைப் புலத்து மக்களோடு இணைந்து செயற்படுத்திடும் வகையில் , இத் திட்டங்களுக்கான ஆறு உபகுழுக்களை அமைத்துள்ளோம்.

அவையாவன

1. கல்வியும், இணையவழிக் கற்கையும்.
2. விவசாயமும் இயற்கையைப் பேணலும்.
3.நீர்வளங்களைப் பாதுகாத்தலும், சேமித்தலும்.
4. சுகவாழ்வும் முதியோர் பராமரிப்பும்.
5.கழிவுப் பொருள்களை மீள் உற்பத்திக்கு பாவித்தலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும்.
6. இளையோர் தொழிற்கல்வியும் அவர்களுக்கான நற்சிந்தனை வகுப்புகளும்.

இந்தத் திட்டங்களை செயற்படுத்திட, இவற்றை பரப்புரை செய்து பணி செய்திட, நாம் ஓர் இணையத் தளத்தையும் அமைத்துள்ளோம்.இதை வழிநடத்திடவும் ஓர் உபகுழு உருவாக்கப் பட்டுள்ளது.

எமது திட்டங்களை நாம் கீழ்க்கண்ட வகையில் மூன்று வகையாக அடையாளம் கண்டுள்ளோம்.

1.உடனடியாக நிறைவேற்றக்கூடிய சிறுதிட்டங்கள்,
2. ஓன்று , இரண்டு வருட காலத்தில் அமுலாக்கக் கூடிய தொடர்திட்டங்கள்,
3. நீண்ட கால செயற்பாடுகளைக் கொண்டு வரையறுக்கப்படும் பெருந் திட்டங்கள்

எம் இத் திட்டங்களை வழி நடத்திச் செயற்படுத்திட, உலகின் பல்வேறு நாடுகளில், பொறுப்பான பதவிகளில் வேலை பார்க்கும் நம் பள்ளித்தோழர்கள் ஒவ்வொருவரிடமும் பல ஆளுமைகள், அனுபவங்கள், ஆற்றல்கள் உள்ளன.

இந்த ஆற்றல்களுடன், எம் நோக்குடன் ஒத்த கருத்துள்ள சமூக தாபனங்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டு, எம் நோக்கங்களை நிறைவேற்றிட விரும்புகின்றோம்.

இந்தச் சிந்தனைகளின் அடிப்படையில், எம்முடனிணைந்து பயனுள்ள பணிகள் செய்திட வரும்படி, தொண்டு நிறுவனங்கள், சமூக தாபனங்கள், சமூக ஆர்வலர்கள், அன்பர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நன்றி.

ஓராயம் அமையம் செயற்குழு


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.