யாழ்ப்பாணத்தில் சாதாரண மத்திய தரக் குடும்பத்தில் பிறந்து, உயர்கல்வியை பெறுவதற்குரிய வாய்ப்பு வசதிகளை இழந்து, அறிஞர்களினதும் முற்போக்கு எழுத்தாளர்களினதும் நூல்களை வாசித்துப்பெற்ற அனுபவங்களினாலேயே மேதையாக வலம்வந்து, ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்திருக்கும் மல்லிகை ஜீவா, கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் தமது 93 வயதில் மறைந்தார்.

ஜோசப் – மரியம்மா தம்பதியருக்கு 1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி பிறந்திருக்கும் டொமினிக் ஜீவா, மல்லிகை எனும் கலை, இலக்கிய மாத இதழை 1966 ஆம் ஆண்டுமுதல், 2012 ஆம் ஆண்டு வரையில் வெளியிட்டார். இதுவரையில் நானூறுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளியாகியிருக்கின்றன. இவ்விதழ்களை நூலகம் ஆவணகத்தில் பார்க்கமுடியும்.

டொமினிக் என்பது அவரது இயற்பெயர். தமிழகத்திலிருந்து பொதுவுடமை இயக்கத்தோழர் ஜீவானந்தம் பிரித்தானியர் காலத்தில் தலைமறைவாக இலங்கை வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலப்பகுதியில் அவரது கருத்துக்களினால் கவரப்பட்ட டொமினிக், தனது பெயருடன் ஜீவா என்ற எழுத்துக்களையும் இணைத்துக்கொண்டார்.

மல்லிகை ஆசிரியராகவும் பதிப்பாளராகவுமிருந்து சுயமுயற்சியோடு அதனை வெளியிடத்தொடங்கியதும், மல்லிகை ஜீவா என பரவலாக அறியப்பட்டார். அவரது இந்த நாமம் இலங்கையெங்கும் மட்டுமல்ல தமிழகத்தில் இலக்கியவாதிகள் மத்தியிலும் பரவியிருந்தது. தமது இலக்கிய வாழ்வில் வெள்ளிவிழா, மணிவிழா, பவளவிழா, அமுத விழா கண்டிருக்கும் ஜீவா, இன்னும் சில வருடங்கள் வாழ்ந்திருப்பின் நூற்றாண்டுவிழாவும் கண்டிருப்பார்.

ஜீவா, மல்லிகை இதழின் ஊடாக ஈழத்து இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் பலர். இலங்கையில் மூவின இலக்கியவாதிகளினாலும் ஆழமாக நேசிக்கப்பட்டவர். சிறுகதை இலக்கியத்திற்காக ( தண்ணீரும் கண்ணீரும் ) இலங்கையில் முதல் முதலில் தேசிய சாகித்திய விருது பெற்றவரான ஜீவா, பின்னாளில் சாகித்திய ரத்னா, தேசத்தின் கண் முதலான உயரிய விருதுகளும், கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல் விருதும் பெற்றவர்.

மகாகவி பாரதி மறைந்து சுடுகாடு செல்லும்போது விரல்விட்டு எண்ணத்தக்கதாக ஒரு சிலர்தான் உடன் வந்தனர். கொரோனோ பெருந்தொற்று காலத்தில், ஜீவா - கொழும்பில் மின்மயானத்தில் தகனமாகும்போது ஒரே ஒரு ஜீவன்தான் அவரது பூதவுடல் தாங்கிய பேழையை பார்த்துக்கொண்டு நின்றது. அந்த ஜீவன், ஜீவாவின் ஏக புதல்வன் திலீபன்.

மல்லிகை ஜீவா எம்மத்தியில் நினைவுகளாக வாழ்ந்துகொண்டேயிருப்பார். மல்லிகை ஜீவா மறைந்து ஓராண்டாகியிருக்கும் இத்தருணத்தில், அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட மேற்கிலங்கையைச்சேர்ந்த கவிஞர் மேமன்கவி, மற்றும் முருகபூபதி ஆகியோர் இரண்டு நூல்களை வெளிக்கொணர்ந்துள்ளனர்.

கொழும்பில் வதியும் மேமன்கவி, டொமினிக் ஜீவாவும் நானும் என்ற நூலை ஜீவா மறைந்த தினத்தில் வெளியிடுகிறார். தனக்கும் ஜீவாவுக்குமிடையே நீடித்திருந்த இலக்கிய நட்புறவை இதில் விரிவாக பதிவுசெய்துள்ளார். அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் முருகபூபதி, வாழும் வரலாறு மல்லிகை ஜீவா என்ற நூலை இந்த வாரம் இறுதியில் முதலில் மின்னூலாக வெளியிடுகிறார். ஜீவாவின் வாழ்வில் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங்கள் இதில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.