இன்று 3600 கிங்ஸ்டன் 'றோட்'டில் அமைந்துள்ள ஸ்கார்பரொ சமூக நிலையத்தில் நடு இணைய இதழாசிரியரும், எழுத்தாளருமான கோமகனின் நினைவு கூரல் நிகழ்வும், நடு 50 இணைய இதழ் வெளியீடும் நடைபெற்றது. நேரிலும் ZOOM செயலி மூலமும் எழுத்தாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். எழுத்தாளரும் , பதிவுகள் இணைய இதழ் ஆசிரியருமான வ.ந.கிரிதரனின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற நிகழ்வு அமரர் கோமகனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆரம்பமானது.

முதலில் வ.ந.கிரிதரன் கோமகனுடனான தனது அனுபவங்களையும், அவரது பன்முகப்பட்ட ஆளுமைகளைப்பற்றியும் , அவரது இலட்சியக் கனவான நடு இதழ் .அதன் எதிர்காலம் பற்றிய அவரது எண்ணங்களையும் குறிப்பிட்டு, நடு 50 இதழ் படைப்புகள் பற்றிய தனது கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார். நடு 50 இதழானது சிறந்த வடிவமைப்பில் மானுடரின் சமூக, அரசியற் சீர்கேடுகள், போர், சீதனப்பிரச்சினை, பொருந்தா மணம், சட்டரீதியாகத்திருமணம் என்னும் பெயரில் நடைபெறும் பாலியல் வன்முறை, இயற்கைச் சீரழிவு, காமம் அதன் விளைவுகள், பணியிடத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பாலியற் பிரச்சினைகள், போர்ச்சூழல் ஏற்படுத்திய அழிவுகள், அது பெண்கள் மேல் ஏவிவிட்ட பாலியல் வன்முறை, இளைஞர்கள் மேல் ஏற்படுத்திய வன்முறை எனப் பலவற்றைப் பேசுமொரு காத்திரமான இதழாக வெளிவந்துள்ளது என்று கூறியதுடன் , நடு இதழில் வெளியான படைப்புகள் சிலவற்றைப்பற்றிய தனது கருத்துகளையும் எடுத்துரைத்தார்.

அடுத்துப் பேசிய 'காலம்' இதழின் ஆசிரியரும், சிறந்த புனைகதை ஆசிரியருமான செல்வம் அவர்கள் பாரிசில் தான் சந்தித்த கோமகனுடான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அத்துடன் புலம்பெயர் இலக்கியமென்பது அக்காலகட்டத்து மக்களின் வாழ்வைப் பதிவுசெய்கின்றது. அவ்விலக்கியத்தில் கோமகனின் பங்களிப்பு முக்கியம் மிக்கது என்னும் கருத்துப்பட தன் கருத்துகளை முன்வைத்தார். அத்துடன் நடு இணைய இதழ் மூலம் பல்வேறு கருத்துகளைக்கொண்ட படைப்பாளிகளையெல்லாம் அரவணைத்துச் சென்றார். புதிய படைப்பாளிகள் பலரை (ஓவியர்கள் உட்பட) அறிமுகப்படுத்தியது அது முக்கியமானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி அவர்கள் கோமகனுடனான தனது கருத்துப்பரிமாறல்களை நினைவு கூர்ந்ததுடன், நடு 50 இதழில் வெளியான சிங்கள எழுத்துகள் பற்றிய தனது கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார். அவர் எடுத்துக்கொண்ட படைப்புகள்: ஜிஃரி ஹாசனின் 'மார்ட்டின் விக்கிரமசிங்கவின் மடொல் தூவ நாவல் பற்றிய கட்டுரை, லறீனா அப்துல் ஹக்கினால் மொழிபெயர்க்கப்பட்ட அனுரசிறி ஹெட்டிகேயின் சிறுகதையின் தமிழ் வடிவமான 'முசுறு',

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய எழுத்தாளர் பா.அ.ஜயகரன் கனடாவில் ஆரம்ப காலத்திலிருந்த கலை, இலக்கியச் செயற்பாடுகள் பலவற்றை நினைவு கூர்ந்ததுடன் , அக்காலகட்டத்தில் நிலவிய இனத்துவேசத்தை, நிறத்துவேசத்தை விபரித்தார். இவ்விதம் உருவான இலக்கியத்தின் தொடர்ச்சியாகவே நடு இணைய இதழையும் , கோமகனின் பங்களிப்பையும் அவர் காண்பதை அவரது உரை புலப்படுத்தியது.

தொடர்ந்து நடு 50 இதழ் வெளியீடும் , பிரதிகள் வழங்கலும் இடம் பெற்றன. இதழினைக் கோமகனின் சகோதரர் யோக வளவன் அவர்கள் வெளியிட்டு வைத்தார். முதற் பிரதியினை கோமகனின் சித்தப்பாவான லோகானந்தன் ஆறுமுகம் பெற்றுக்கொண்டார். விசேட பிரதிகளை பால்ய காலத்து நண்பர்களான ஜெகன் வைத்திலிங்கம், எல்லாளன் இராஜசிங்கம் மற்றும் உதயன் மார்க்கண்டு சார்பில் அவரது சகோதரரான் சிவகுமார் மார்க்கண்டு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து Zoom செயலி வழியாக எழுத்தாளர் முருகபூபதி உரையாற்றினார். அவர் தனதுரையில் எழுத்தாளர் கோமகனுடன் ஏற்பட்ட சந்திப்புகள் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதுடன் நடு 50 இதழ் மூலம் மார்ட்டின் விக்கிரமசிங்கவின் 'மடொல் தூவ' நாவல் பற்றி அறிந்துகொண்டதாகவும் கட்டுரையாரியரின் மார்ட்டின் விக்கிரமசிங்க பற்றிய கருத்துகள் சிலவற்றில் உடன்பாடில்லையென்றும், அவை தொடர்ந்தும் விவாதிக்கப்பட வேண்டியவையென்றும் குறிப்பிட்டார்.

நிகழ்வில் எழுத்தாளர் டிசெதமிழன், சமூக, அரசியற் செயற்பாட்டாளர்களான சிவா முருகுப்பிள்ளை , அலெக்ஸ் வர்மா, 'தேடகம்' சேனா, எல்லாளன் ராஜசிங்கம், எழுத்தாளர் கடல்புத்திரன், கட்டடக்கலைஞர் சிவகுமார் , 'திரைப்படக் கலைஞர் பிரின் நாத் என்று பலரைக் காண முடிந்தது.

இறுதியில் கோமகனின் சகோதரரும் , சமூக, அரசியற் செயற்பாட்டாளருமான யோக வளவன் நன்றியுரை தெரிவிக்க நிகழ்வு இனிதே முடிந்தது.


இந்நிகழ்வு பற்றி எழுத்தாளர் முருகபூபதி மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்த செய்தி:

"அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். இன்று நீங்கள் ஒருங்கிணைத்திருந்த நண்பர் கோமகனுக்கான நிகழ்ச்சி கனதியாகவும்  காத்திரமாகவும் அமைந்திருந்தது. கோமகனின் திடீர் மறைவு  சோகமானது. அவரது இலக்கியப்பங்களிப்பு பற்றி தொடர்ந்து பேசவேண்டும். இந்நிகழ்வில் எனது கருத்துக்கும் இடமளித்த தங்களுக்கு மீண்டும் எனது நன்றி.

அன்புடன்
முருகபூபதி

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.