நூல்: “எனினும் நான் எழுகிறேன்” | ஆசிரியர்: திரு க.நவம்

மொழிமாற்றங்கள்  ஒன்றும் புதிதல்ல, நூல் வெளியீடுகளும் ஒன்றும் புதிதல்ல.  ஆனால் எவற்றை மொழிபெயர்க்கிறோம், அவற்றை எங்ஙனமாய் மொழி மாற்றங்கொள்ளும் மொழிக்குள் உள்வாங்குகிறோம்,  அவற்றை யார் மூலமாக யாரிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறோம் என்பவற்றை இந்நூலும் இந்நூல்சார்ந்த வெளியீடும் எனக்குள் ஏற்படுத்திய அனுபவங்கள் வாயிலாக,வாசகர்களாகிய உங்களுக்கு எடுத்துக் கூறுவதுதான் இவ்வரைபின் முக்கிய நோக்கம்.

இந்நூலுக்கு முகவுரை எழுதியவன் என்ற வகையில் , நூலைப்பற்றியும், இந்நூல் வெளியீடு பற்றியும் என் மனதில் தோன்றியதை எழுதவேண்டும் என்ற ஆர்வமும் இக்குறிப்பின் இன்னொரு காரணமாக அமைகிறது.

'ஆதியிலே அச்சிலேறிய எழுத்துக்களுக்கு என்று  இருந்ததே ஒரு தனி வாசம் , ஆயினும் பாதியிலே வந்த இலத்திரனியல் தொழிநுட்பம் நூல்களின் வாசத்தை மட்டுமன்றி அவற்றின் வாசகர்களையும்  நுனிப்புல் மேய்பவர்களாகக் காவுகொண்டு விட்டது பெருந்துயரம்.'

ஆகவே இப்பொழுது நவீன தொழிநுட்பங்களின் தயவில்  வெளியீட்டு வடிவம் காணக்கூடிய வசதியில் பலபேருடைய  படைப்புக்கள் இருந்தாலும்  அவற்றுள் கரைசேரக்கூடியவையாக இருப்பவற்றை ஆழ்ந்து நோக்கி உணர்ந்து கொள்வதன் மூலம் தான் ஒரு ஆரோக்கியமான வாசிப்பை ஒரு வாசகன் தனதாக்கிக் கொள்ள முடியும் என்று நான் மிகத் தீவிரமாக நம்புகிறேன்.

அத்தகையதொரு வாசிப்பை திரு க.நவம் அவர்களின்  'எனினும் நான் எழுகிறேன்'  எனும் இந்நூல் எனக்கும் என் போன்றவர்களுக்கும் தந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. ஒரு மொழிமாற்ற நூலுக்கு இத்தகைய ஒரு பீடிகை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாவென உங்களில் சிலர் எண்ணக்கூடும், அங்ஙனமில்லாமல் இந்நூலின் முழுமையை இன்னமும் சிறப்பாக தங்களால் உணர்ந்திருக்க முடியும் என்று நீங்கள் எண்ணும் வண்ணம் நான் உங்களுக்கு உணர்த்த வேண்டுமென்றால் நான் நூலுக்குள் உங்களை அழைத்துச் செல்ல வேண்டும்.  அதற்கு முன் நூல் வெளியீட்டு நிகழ்வையும், அந்நிகழ்வின் மூலமாய் நூலாசிரியரின் உண்மையான உளவிருப்பு எவையெயெவை என்பதையும் நான் சிறிது விளக்க வேண்டும்.

நூல் வெளியீடு திட்டமிட்டபடியே குறித்த நேரத்தில் தொடங்கி, குறித்த நேரத்திலேயே நிறைவுபெற்ற நிகழ்வு என்பது பாராட்டப்பட வேண்டிய விடயமெனில், நிகழ்வின் ஒவ்வொரு பாகத்தையும் , அவற்றை ஏற்றுக்கொண்டவர்கள் நிறைவேற்றிய விதம் மிகுந்த பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியதென்றால் அது மிகையில்லை.

அரங்கத்தினுள் நுழைந்ததும், முதலில் என்னை வியக்க வைத்த விடயம், பொதுவாக இந்நிகழ்வுகளுக்கு உரை நிகழ்த்துபவர்களாக இருக்கின்ற பிரமுகர்களில் பலர் பார்வையாளர்களின் இருக்கைகளில் அமர்ந்திருக்க, பார்வையாளர்களாக வருகின்ற, அல்லது வரப் பின்வாங்குகின்ற இளையவர்களில் சிலரோ பேச்சாளர் வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.

நிகழ்ச்சியைத் தலைமை தாங்கி வழங்கிக் கொண்டிருந்த பெண்மணியோ ,இப்படியான நிகழ்வில் வழமையாக நடைபெறுவது போன்று, குறுக்குமறுக்காய் ஓடிக்கொண்டோ, அடிக்கொருதரம் விழாநாயகரின் காதுகளைக் கடித்துக்கொண்டோ ,எந்தவிதப் பதட்டமோ இல்லாமல் பேச்சாளர்களின் பின்வரிசையில் அமர்ந்திருந்தார்.

நிகழ்ச்சி ஆரம்பமானதும், தலைமை தாங்கியவரின் அறிவிப்பிற்கேற்ப வாழ்த்துப் பாடல்கள் பாட வந்த குழந்தைகள் அழகாக நம்மை நிகழ்ச்சிக்குள் அழைத்துச் செல்ல, பின்னர் உரைகள் வழங்கிய இளைஞர்கள் , நூலைப்பற்றியும், நூலாசிரியரைப் பற்றியும் மிகவும் கச்சிதமாகத் தங்கள் உரைகளை நிகழ்த்தினார்கள். யாரும் தங்களை சுயவிளம்பரங்கள் செய்து கொள்ளவில்லையென்பது பெருத்த நிம்மதி.

குறிப்பாக நூலாசிரியர் தனது ஏற்புரையை நிகழ்த்தும்வரை எந்த விடயங்களிலும் தேவையற்ற குறுக்கீடுகள் செய்யாமல் பின்னணியில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருந்ததும், மற்றவர்கள் தத்தமது பணிகளை சிறப்பே செய்து கொண்டிருந்ததும் மிகுந்த இரசனைக்குரியவையாக இருந்தன. இவற்றை பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த இலக்கிய ஆளுமைகளும் இரசித்தார்கள் என்பதை , நிகழ்ச்சிக்குப் பின்னதான உற்சாகமான அவர்களது உரையாடல்கள் கூறின.

ஒரு நூலைப்பற்றி பேசுகையில், அந்நூல் வெளியீட்டு விழாவின் நிகழ்விற்கு ஒரு விமர்சனம் அவசியமா என்ற கேள்வி எழும். உண்மையில் நூலினதும், நூலின் வெளியீட்டு நிகழ்வினதும் நோக்கங்கள் ஒன்றையொன்று அனுசரிப்பவையாக இருக்க வேண்டும். அங்ஙனமே இந்நிகழ்வு நடந்தேறியது என்பதைக் கூறவேண்டிய கட்டாயம் இங்கு அவசியமாகிறது.

ஆரோக்கியமான கவிதைகளும் அவற்றின் எமது மரபுகள்,பண்புகள் சார்ந்த மொழிமாற்றமும் ,  கவிதை ஆர்வலர்களுக்கும்,  கதைகள்,கவிதைகள் புனையவிழையும்  இளையவர்களுக்கும் மிகவும் இன்றியமையாதவை என்பதை உணர்ந்துதான், இத்தகையதொரு மொழிமாற்ற நூலையும் வெளிக்கொணர்ந்து, அதன் வெளியீட்டு விழாவிலும் இளையவர்களை , நூலாசிரியர் முன்னிறுத்தியிருக்கிறார் என்பதை நான் உணர்ந்து கொள்ளக் கூடியதாகவிருந்தது.

இனி நூலுக்குள் செல்வோமெனில்,  Maya Angelou வின் கவிதையின் தலைப்பான  'Still I Rise' என்பதையே நூலின் தலைப்பாக சூட்டிக் கொண்டதுடன் , அதை மிக எளிமையாக , வாசகனின் இதயத்திற்கு நெருக்கமாக 'எனினும் நான் எழுகின்றேன்'  என மொழிமாற்றி நூலின் தமிழ்மொழித் தலைப்பாக வைத்துக் கொண்டதிலேயே நூலுக்குள் எத்தகைய மொழிபெயர்ப்பு பொதிந்திருக்கும் என்ற சுவாராஸ்யத்தை நூலாசிரியர் ஏற்படுத்தி விட்டார்.

Maya Angelou வுடன் அழைத்துவரப்பட்ட  கவிஞர்கள் அனைவரும்  உலகம் முழுவதும் , வெவ்வேறு சமூகங்களிடை, தனிமனித, சமூக மாற்றங்களுக்கான பாதிப்புக்களை ஏற்படுத்திய படைப்புக்களின் பிதாமகர்கள் என்பதை இலக்கிய உலகத்தில் உள்ளவர்கள் மட்டுமன்றி,  நல்லவற்றை வாசிக்கும் பழக்கம் கொண்ட எந்த சாதாரணர்களும் அறிவார்கள்.

இத்தகைய படைப்பாளிகளின் கவிதைகளை,தமிழுக்கு அதிலும் கவிதைகளை வாசித்து அனுபவிக்கின்ற ஆர்வலர்களுக்கு, நல்ல கவிதைகளைப் படைக்கவேண்டும் என்ற இலக்கிய தாகத்துடன் முனைபவர்களுக்கு , மாற்றுமொழி இலக்கியத்தை மிக அழகாகவும் ஆழமாகவும் ஆசிரியர் எடுத்து வந்திருப்பது  எமக்குக் கிடைத்த பெரும்பேறு.

எந்த மொழிமாற்றமும், சம்பந்தப்பட்ட மொழிகளின்  இலக்கண வரைபுகளிற்கேற்ப கச்சிதமாகக் கையாளப்படும்போது சிறப்பாக அமைந்து விடும், ஆனால் இங்கே அது அதற்கும் ஒருபடி மேலே போய் , மூலமொழிக் கவிதைகளிலிருந்து உள்வாங்கப்பட்ட உணர்வுகளை தமிழ் மொழிக்கேற்ப,தமிழின் பண்பாடு கலாச்சராத்தை மேவி நின்று உணர்ச்சிகரமாக மொழி பெயர்க்கப்பட்டிருப்பதை ஒவ்வொரு கவிதையிலும் காணக்கூடியதாக இருப்பது மிகச்சிறப்பு.

Chris Abani எழுதிய “Aphasia” என்ற கவிதையை  'பேச்சிழப்பு'  என்று தலைப்பிட்டு மொழிமாற்றம் செய்கையில், எத்தனையோ வழிகளில் கருத்துப்பட்டிருக்கக் கூடிய 'straining' என்ற சொல்லை, அந்தக் கவிதையின் ஆழ்மனதிற்குள் சென்று  'பிரயத்தனம்' என்று மொழிமாற்றம் செய்திருக்கிறார் ஆசிரியர். அந்த இடத்தில் வேறெந்த சொல்லைப் பொருத்தியிருந்தாலும் கவிதை புரிந்திருக்கும், ஆனால் அந்தக் கவிதை மனதோடு பேசியிராது.

மற்றொரு கவிதையாக பாலஸ்தீனத்தின் கவிதை என அழைக்கப்பட்ட , அடக்குமுறைக்குள்ளான பாலஸ்தீன மக்களின் குரலாக அறியப்பட்ட - Fadwa Tuquan எழுதிய  'Ever Alive' என்ற கவிதையை தமிழில் ' என்றும் உயிர்ப்புடன்'  என எழுதும்போது, ஆங்கில மூலத்தில் வெளிப்படுத்தப்பட்டிருந்த காதலும், வலியும் , பெருநம்பிக்கையும் தமிழ் மொழிபெயர்ப்பில் ஒவ்வொரு தமிழ்ச் சொற்களாக பொறுக்கி எடுக்கப்பட்டு கவிதையில் பொருத்தப்பட்டிருக்கும் நேர்த்தி, எம்மை எமது இழப்புகளோடும், வலிகளோடும் பேச வைத்துவிடுகிறது.

ஐம்பத்திநான்கு முத்துக்களில் , இன்னொரு முத்தாக Joyce Kilmer இன் Trees என்னும் கவிதை தமிழ்மொழியில் மடைமாற்றி பாயவிடப்பட்ட பொழுதில், வரிகள் இப்படி அழகாகப் போகும்.

“ஒரு மரம்
 பூமியின் இனிய பானம் பாயும் மார்பகத்தில்
தன் பசித்த வாயைப் பதித்திருக்கும்.
ஒரு மரம்
நாள் முழுவதும் இறைவன் மேல்
விழிவைத்து
தன் இலைக் கரங்களை ஏந்திப்
பிரார்த்திக்கும்.”

ஆங்கில வரிகளை அணைத்தபடி வந்து விழுந்திருக்கிறது இந்தத் தமிழ் மொழி பெயர்ப்பு. இவை ஒருசில கவிதைகளிலிருந்து எடுத்த முத்துக்கள்தாம், ஆனால் மொத்தமாய் ஐம்பத்து நான்கு கவிதைகளுமே அந்த முத்துக்களைச் சூடிக் கொண்டிருக்கின்றன என்பதை , நூலை முழுமையாக வாசிக்கக் கிடைத்தவர்கள் உணர்ந்து அனுபவித்திருப்பார்கள்.

மொத்தத்தில் இளமையான பொருள்பொதிந்த ஒரு மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டதன் மூலம்,  அந்நூலின் வெளியீட்டு விழாவின் மூலம் , நம்மிளையவர்களின் திறமைகளையும் வெளிக்கொணர்ந்ததன் மூலம், இளைஞர்கள் வசம் ஒரு பெரிய இலக்கியப் பொறுப்பை நூலாசிரியர் கையளித்திருக்கிறார் என்றே நம்பத் தோன்றுகிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.