நேற்று மாவை நித்தியானந்தனின் ஐந்து நூல்களின்  வெளியீட்டு நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். எழுத்தாளர் பா.அ.ஜயகரனின்  தலைமையில் நடந்த நிகழ்வைத் தேடகம் ( தமிழர் வகைதுறை வளநிலையம்) ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில் எழுத்தாளர்கள் மீராபாரதி, துஷி ஞானப்பிரகாசம், எஸ்.கே.விக்னேஸ்வரன் ஆகியோர் நூல்களைப்பற்றிய உரைகளை நிகழ்த்தினர். சிறப்புப் பிரதிகளைக் கவிஞர் திவ்வியராஜன், எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம், நாடகவியலாளர் சொர்ணலிங்கம், ஒலி, ஒளி ஊடகவியலாளர் பி.விக்னேஸ்வரன், கலாநிதி பால சிவகடாட்சம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

எழுத்தாளர் மீராபாரதி வித்தியாசமாகத் தன் உரையினை ஆற்றினார். வழக்கமான உரையாக அல்லாமல் ஒரு நவீன நாடகக் காட்சியைப்போல் அவரது உரை அமைந்திருந்தது. பார்வையாளர்களின் பின்னாலிருந்து, வந்திருந்த கூட்டத்தின் எண்ணிக்கையைப்பற்றிய விமர்சனத்துடன் ஆரம்பித்து 'இனிச் சரிவராது' நாடகத்தின் உரையாடல்களை நடித்துக் காட்டியபடி தன் உரையினைத்தொடர்ந்தார். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள். அதுபோல் உரை, நடிப்பு என இரு வடிவங்களில் நினைவில் நிற்கும் வகையில் அமைந்திருந்தது அவரது உரை.  வித்தியாசமான முயற்சி, ஆனால் நினைவில் நிலைத்து நிற்கும் வகையிலானதாக  அமைந்திருந்தது.

நிகழ்வில் 'ஐயா லெக்சன் கேட்கிறார்' நாடகத்திலிருந்து வரிகளைப் பாடலாக்கிப் பாடினார்கள் எழுத்தாளர்களும்,  நாடகக் கலைஞர்களுமான  பா.அ.ஜயகரன், சொர்ணலிங்கம் மற்றும் திவ்வியராஜன்  ஆகியோர். சிறப்பாக இருந்தது. சுவைத்தது. மறக்கவும் முடியாத நிகழ்வின் அம்சமாக இதுவும் அமைந்துவிட்டது.  கனடாப் பாடகர்களில் பாடகர் திவ்வியராஜின் குரல் எனக்கு  மிகவும் பிடித்த குரல்களில் ஒன்று. இன்னுமொருவர்  கனடியப் பாடகர் ஆனந்தபிரசாத். குரலை வரிகளின் உணர்வுகளுக்கேற்ப திவ்வியராஜன் ஏற்றி,இறக்கிப் பாடியதும், நடித்ததும், அவரது அங்க சேட்டைகளும்  நினைவில் இன்னும் நிற்கின்றன. இன்னும் பல பாடல்களை அவர்கள் நாடக வரிகளிலிருந்து பாடியிருக்கலாம் என்று தோன்றியது.

ஜயகரன் இயக்கத்தில் திவ்வியராஜன், சொர்ணலிங்கம் போன்றோரின் நடிப்பில் 'ஐயா  லெக்சன் கேட்கின்றார்' நாடகமாக நடிக்கப்படுமானால் நிச்சயம் பெரு வெற்றியடையுமென்பது ம்ட்டும் திண்ணம். இதனை இவர்கள் கவனத்தில் எடுப்பார்களாக. நிகழ்வின் முடிவில் தனது ஏற்புரையில் மாவை நித்தியானந்தன்  இவர்களது பாடல்கள் தந்த இன்ப உணர்வு பற்றி எடுத்துரைத்ததும் குறிப்பிடத்தக்கது.

துஷி ஞானப்பிரகாசம், எஸ்.கே.விக்னேஸ்வ்ரன் போன்றவர்கள் எழுத்து, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் பன்முக ஆற்றல்கள் மிக்கவர்கள். துஷி ஞானப்பிரகாசம்  'இனிச் சரி வராது' நாடகம் பற்றியும், எஸ்.கே.விக்னேஸ்வரன் 'சிறுவர் நாடக நூல்கள் பற்றியும் சிறப்பான உரைகளை ஆற்றினர். விக்னேஸ்வரன் எழுதி வாசித்ததால் ஒலிவாங்கியைக் கையிலேந்தி வாசிப்பதில் சிரமப்பட்டார்.அதை உணர்ந்த மீராபாரதி அவருக்கு உதவியாக அவர் உரை முடியும் வரையில் பொறுமையாக ஒலிவாங்கியைத் தாங்கி நின்றதும் நிகழ்வின் மறக்க முடியாத  காட்சிகளில் ஒன்றாக ஆகிவிட்டது.

நிகழ்வில் அறிமுகமான ஐந்து நூல்களையும் $15 டொலர்களுக்கு விற்றார்கள்.  அதுவும் மறக்க முடியாத நிகழ்வின் அம்சங்களில் ஒன்று.  நாடகங்களை ஒரு தொகுப்பாகவும், சிறுவர் நாடகங்களை இன்னுமொரு தொகுப்பாகவும் வடிவமைத்திருக்கலாமென்று தோன்றியது.

இறுதியாகத் தனது ஏற்புரையில் சிறப்புப்பிரதிகளை வாங்கியவர்கள், நூல்களைப் பற்றி உரையாற்றியவர்கள் பற்றியெல்லாம் குறிப்பிட்டு நன்றி தெரிவித்த மாவை நித்தியானந்தன் தேடகம் அமைப்புடனான தனது தொடர்பு பற்றியும் சிலாகித்துப் பேசினார். அதிலவர் 96இல் தேடகம் அமைப்பின் மூலம் வெளியான  தனது பாப்பாப் பாரதி  இறுவட்டு பற்றியும், அந்நிகழ்வு காரணமாக அது ஆயிரக்கணக்கில் பலரைச் சென்றடைந்தது பற்றியும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். அத்துடன் தனது பாரதி பள்ளி மூலம் சிறுவர்களுக்குத் தமிழ் வகுப்புகள் நடத்துவது பற்றியும் விரிவான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்வில் கனடாத் தமிழ் இலக்கியக் கலை உலகில் நன்கறியப்பட்ட ஆளுமைகள் , ஆர்வலர்கள் மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழக நண்பர்கள்  பலரைக் காணக்கூடியதாகவிருந்தது. மொத்தத்தில் திருப்தியையும், நிறைவையும் தந்த நல்லதொரு நிகழ்வு.