இலக்கியப்பணியை ஆர்வத்தோடும் அர்ப்பணிப்போடும் செய்த கலாநிதி தம்பிஐயா கலாமணியின் வாழ்வும் பணியும் காலங்காலமாக போற்றப்பட வேண்டும். கடந்த வாரம் மார்ச் 11இல் ஆசான் கலாமணியின் முதலாவது மாத நினைவாக அல்வாயில் உருவச்சிலையும், மூன்று நினைவு நூல்களும் வெளியாகின.

தமிழ் உலகிற்கு அவர் ஆற்றிய இலக்கிய, நாடகப் பணி வரலாற்றில் முக்கியமானது. தலைமுறை தலைமுறையாக செய்யவேண்டிய நாடக வழி முறைகளையும், அதனால் கிடைக்கிற பிரதிபலன்கள் அனைத்து மக்களிடம் கிடைக்க வேண்டுமென்கிற ஆர்வம்தான் கலாநிதி தம்பிஐயா கலாமணியின் வாழ்நாள் சாதனையாக மிளிர்கிறது.

ஒரு புத்தகத்தை நாம் வாசிக்கும்போது நம்முடைய பொதுப்புத்தியில் அதுவரை தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழுமியங்கள், எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள் உருவாகும். அப்படியே புத்தகத்தை வாசிக்கும்போது நமது அறிவுப்பரப்பு ஒரு பாரியளவு விசாலமாகும். இத்தகைய பண்புசால் தகைமையை தன் மாணாக்கரிடம் வளர்த்த பெருமை கலாமணி பேராசனுக்கு உரியதாகும்.

நாம் வாசிக்கும் நூல்களின் ஊடக நம்முடைய வீடு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, இனம், மதம், சாதி, மொழி, இவையாவும் மறைந்து போகும். பிரபஞ்ச மனிதனாக உணரமுடியும். அதனைப் போல ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய உணர்வுகள் கூர்மையடையும்.

முன்னுரைகளுக்கு எல்லாம் முன்னுரையாக விளங்கும் “கலாநிதி கலாமணி அணிந்துரைகள்” எனும் இந்தத் தொகுப்பானது நீண்ட காலமாக அவர் எழுதிய விஞ்ஞானபூர்வமான முன்னுரைகளின் தொகுப்பு நூலாகும். பல்வேறு காலகட்டங்களில் அமரர் கலாநிதி கலாமணி எழுதிய முன்னுரைகள் ஒரு நூலின் உள்ளடக்கத்தை, தெளிவான பார்வையை வாசிக்கும் வாசகர்களுக்கு உத்வேகமூட்டியது. ஓர் நூலுக்கு பல நூறு புத்தகங்களிலிருந்து தரவுகள் எடுக்கப்பட்டாலும், ஆசிரியரின் கருத்தை அப்படியே சொல்லவேண்டும் என்பதில் தனிக்கவனம் செலுத்து முன்னுரை வரைவதில் அமரர் கலாநிதி கலாமணியின் எழுத்து வண்ணம் அழகானதாகும்.

அதனாலேயே நான் தொகுத்த “கல்லறை மேலான காற்று”கவிதைத்தொகுதிக்கு முன்னுரை எழுத அவரிடம் வினவிய போது, இக் கவிதை தொகுதிக்கு முன்னுரை ஒன்று அவசியம்தானா என்பது இன்னமும் வினாவாகவே என்னிடம் உள்ளது என ஆசான் கலாமணியின் வார்த்தைகள் இன்னமும் என் மன நினைவுகளில் பதிந்துள்ளது.

வடமராட்சியில் கடந்த 1987 'ஒப்பரேஷன் லிபரேஷன்’ போது நடந்தேறிய கொடுமைகளின் கோரங்களையும் சிதைவுகளையும் முதலாவதாக ஆண்டு நினைவு கூர்வாகக் கொண்டு வெளியான கவிதை தொகுப்பே அந்நூலாகும்.

இப்படித் தான் எங்கள் இலக்கிய நட்பு முகிழ்ந்தது. காற்றுக் கூட அனலாக வீசிக்கொண்டிருந்த 1988 போர்க் காலகட்டம். அவ்வேளையிலும் விடியலை நோக்கிய எழுச்சியில் சண்டமாருதமாய் எழுந்து நின்ற இளங் கவிஞர்களின் படைப்பான “கல்லறை மேலான காற்று” எனும் கவிதை தொகுப்பு வெளியாகியது.

இக்கவிதை தொகுதியின் முன்னுரையில் ‘விமர்சனமாக அமையக் கூடாதென்பதனால் கவிதைகள் பற்றி தனித்தனியாகவே கருத்துக்கூறுதல் பொருத்தமன்று எனினும் இக்கவிதைகள் யாவுமே, இராணுவக் கொடுமைகள் எம்மிடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளன என்பதை வெளிக் காட்டும் பொதுப்பண்பைத் தம்மகத்தே எனக்கூறுதல் சாலப் பொருந்தும். வடமராட்சியில் நிகழ்ந்த கொடுமைகளைக் கூறும் வகையிலும் இதற்கு ஓர் இடமுண்டு’ என எழுதியுள்ளார் ஆசான் கலாமணி.

வடமராட்சியின் மூத்த விருட்சமாக என்றும் விளங்கும் கலாமணி ஆசான் படைத்த படைப்புக்கள் பல. அவற்றுள் அம்மாவின் உலகம், இலக்கியமும் உளவியலும், இளையோர் இசை நாடகம், ஏனிந்தத் தேவாசுர யுத்தம், காலநதியின் கற்குழிவு, ஜீவநதி நேர்காணல்கள் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

அல்வாய் மண்ணின் அகள்விளக்காக ஒளிவீசிய ஆசான் மண்வாசனை வீசும் எழுத்தை தன் உயிராக நேசித்தவர். அவர் என்றும் புதிய தலைமுறைகளுக்கான வழிகாட்டியாய் இருப்பார். எவரின் எழுத்துக்கள் என்றும் உயிர்ப்பின் சுவாசமாகும்.

மண்வாசனை வீசும் படைப்புகளை வழங்கிய கலாநிதி அமரர் கலாமணி யாழ் பல்கலைக்கழக கல்வியியல்துறை ஆசானாக பணியாற்றியவர்.
கலாநிதி தம்பிஐயா கலாமணி யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த பிரபல்யமான நாடகக் கலைஞரும் ஆவார்.

பேராதனை பல்கலைக்கழக பௌதிகவியற் பட்டதாரியன இவர், இயல், இசை, நாடகம் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டவர். இயல் நாடகம், கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் போன்ற பல துறைகளையும் கற்றுக் கலைப்பணி ஆற்றி வந்த கலாமணியின் முதலாவது மாத நினைவாக மூன்று நினைவு நூல்கள் வெளியாகிமை குறிப்பிடத்தக்கது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.