நேற்று ஸ்கார்பரோவில்  எழுத்தாளர் தேவகாந்தனின் 'இலங்கைத் தமிழ் நாவல் இலக்கியம்', 'சகுனியின் சிரம்' ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

முனைவர் மைதிலி தயாநிதி, எழுத்தாளர் அருண்மொழிவர்மன், எழுத்தாளர் த.அகிலன் நூல்களைப்பற்றிய தமதுரைகளை ஆற்றினர். நிகழ்வுக்குத் தலைமையேற்று நெறிப்படுத்தியவர் எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரன். பேச்சாளர்கள் தமதுரைகளை நூல்கள் பற்றிய குறை நிறைகளுடன் சுட்டிக்காட்டி ஆற்றினர். முதற் பிரதியினைக் 'காலம்' செல்வம் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நூல்கள் பெரும்பாலும் விற்பனையாகின. நூல்களை விற்கும் பொறுப்பினை எழுத்தாளர் டானியல் ஜீவா ஏற்றுக்கொண்டார்.

நிகழ்வில் எழுத்தாளர்கள் , கலை, இலக்கிய ஆர்வலர்களைக் காண முடிந்தது. 'தடயத்தார்' கிருபா கந்தையா நிகழ்வினை ஒளிப்பதிவு செய்தார். புகைப்படங்களையும் எடுத்தார். அலெக்ஸ் இரவிவர்மா அவர்களும் புகைப்படங்களை எடுத்தார். இங்குள்ள  புகைப்படம் அவர் எடுத்ததுதான்.

எழுத்தாளர் மீராபாரதி தன் முகநூற் பதிவில் கூறியிருப்பதைப்போல் எழுத்தாளர் தேவகாந்தன் கொண்டாடப்பட வேண்டியவர். அவரது கனவுச்சிறை நாவலின் மூன்று பாகங்கள் மொழிபெயர்ப்பாளர் நேத்ரா ரொட்றிகோவால் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு 'மாவென்சி' பதிப்பகத்தால் கனடாவில் வெளியிடப்பட்டுள்ளது. மிகுதி இரண்டு பாகங்களும் இவ்வருட முடிவுக்குள் வெளியாகுமென அறிகின்றேன்.  அவ்விதம் வெளிவருகையில் ஆங்கில இலக்கியத்துக்கு , உலக இலக்கியத்துக்கு வளம் சேர்த்த தென்னாசிரியரகளின் நாவல்களில் ஒன்றாக அது விளங்குமென்பது என் நம்பிக்கை. முன் கூட்டியே தேவகாந்தனை இவ்விடயத்தில் வாழ்த்துகின்றேன்.