இன்று 'டொராண்டோ'வில் எழுத்தாளர் பெனடிக்ற் பாலனின் சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல் & குட்டிக்கதைகள் அடங்கிய 'பெனடிக்ற் பாலன் படைப்புகள்' என்னும் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. தமிழர் வகைதுறை வள நிலையத்தின் தேடல் பதிப்பகமும், இலங்கையிலுள்ள தேசிய கலை இலக்கியப்பேரவையும் இணைந்து வெளியிட்ட நூல்.
தேடல் பதிப்பகம் ஏற்கனவே 'எலும்புக் கூடுகளின் ஊர்வலம்' (கவிதைத்தொகுப்பு), ஒரு அகதியின் பாடல்' (கவிதைத்தொகுப்பு) , 'எல்லாப் பக்கமும் வாசல்' (நாடகம்) & செ.கதிர்காமநாதன் படைப்புகள் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நூலின் அட்டை வடிவமைப்பினை பா.அ.ஜயகரன் செய்திருந்தார், அட்டை ஓவியத்தினை செளந்தர் வரைந்திருந்தார்.
நிகழ்வு எழுத்தாளர் பா.அ.ஜயகரனின் தலைமையில் நடைபெற்றது. பெனடிக்ற் பாலனின் சிறுகதைகள் பற்றி எழுத்தாளர் க.நவம், குட்டிக்கதைகள் பற்றி முனைவர் மைதிலி தயாநிதி & மேலும் சில சிறுகதைகளைப்பற்றி முன்னாள் வீரகேசரி ஆசிரியரும் , பெனடிக்ற் பாலனின் மாணவருமான ஆ.தேவராஜ அவர்களும் உரையாற்றினார்கள். கலை, இலக்கிய , அரசியல் ஆளுமைகள் எனப் பலர் நிகழ்வுக்கு வந்து சிறப்பித்திருந்தனர். 'தடயத்தார்' யு டியூப் சானலை நடத்தி வரும் கிருபா கந்தையா நிகழ்வுக் காணொளியினை உருவாக்கிக்கொண்டிருந்தார். கூடவே புகைப்படங்களையும் எடுத்தார். நண்பர் அலெக்ஸ் வர்மாவும் புகைப்படங்களை எடுத்தார்.
நூலின் முதற் பிரதியினை பெனடிக்ற் பாலனின் மகள் அமரதீவன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டது. நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.