குட்டிக்கதைகள் அடங்கிய புனைவு ஒன்றை நீண்ட காலத்திற்குப் பின்பு வாசித்திருக்கிறேன். புனைவுகள், நாவல்களை நான் வாசிப்பது மிகவும் குறைந்து போயிற்று இப்போது. எல்லோரையும் போலவே நேரம் ஒரு அரும்பொருளாகிவிட்டிருந்தது எனக்கும். ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய் புத்தகத் தெரிவு தற்செயலானதுதான்.

உண்மையில் நேரம் இருக்கிறதா, வரிசையாக அமர்ந்திருக்கும் வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வாசிக்க பயனுள்ளதா என மனம் மிக நுண்ணிய செக்கன்களைக் கணக்கிட்டு முடிவு செய்து, தமிழ்தானே என்று ஆதரவுக்கரம் நீட்டி வாசித்து முடித்ததுதான் ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய் புனைவுகளின் தொகுப்பு.

ஐம்பத்தியொரு நுண்கதைகளை உள்ளடக்கிய இந்தப்புனைவு கிண்டிலின் மூலம் எனக்கு வாசிக்க கிடைத்தது. முதற்பதிப்பு ஆவணி 2020 இல் மின்னூலாக வெளிவந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள இந்த நூல் சென்னை, பெசனட் நகரிலுள்ள சஹானா பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளது.

இந்த புனைகதைக்களுக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் பெருந்தேவி. அழகிய அட்டையும், வாசிப்பு ஆர்வத்தை நீடிக்க வைக்கும் எழுத்தின்( Font) தேர்வும் நன்றாக இருக்கின்றன. இடையிடையே வரையப்பட்டிருக்கும் கோட்டுச்சித்திரங்கள் கூட பொருத்தமாக இருக்கின்றன. இதனை பேப்பர் புத்தகமாக கையில் வைத்து வாசித்திருந்தால் நன்றாக இருக்கும் போலவும் தோன்றியது.

ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கோணத்திலும் பார்வையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்குட்டிக்கதைகள் புனைவுகள் என்று முத்திரையுடன் வெளியிடப்பட்டிருந்தாலும் சில விடயங்கள் சமூகத்தில் மக்கள் மத்தியில் நிலவும் மூடநம்பிக்கைகள், சம்பவங்கள், எண்ணங்கள், சிந்தனை மற்றும் மனப்பாங்கு பற்றியதாக இருக்கின்றன. அதேவேளை இது கற்பனைக் கதைதான் என்பதை நிரூபிப்பதற்கென சிலநுண்சிறுகதைகளும் கூடவே இருக்கின்றன.

வாசகர்களின் வாசிப்பு அனுபவத்திற்கு பங்கம் ஏற்படாதவகையில் ஒரு சில நுண்கதைகள் பற்றிய எனது கருத்தை கூறலாம் என்று நினைக்கிறேன்.

படுக்கை அறைகளின் கதை : ஒரு குடும்பஉறவு மிக நுணுக்கமான சொல்லாடல்களால் கூறப்பட்டுள்ளது.உறவின் ஆரம்பத்திலுள்ள நெருக்கம், பின்பு குழந்தைகள், அதனையடுத்து பெண்கள் குழந்தைகளுடன் இறுகிப்போகும் போக்கு, பிள்ளைகள் வளர்ந்தவர்களாகிய பின்பும் பெற்றோர்களிடையே நீடிக்கும் «பிரிவு» நிரந்தரபிரிவாகி, ஒரு கூரையின் கீழே வாழும் அந்நிய, வேற்று மனிதர்களாக போய்விடுவது என்ற பல உறவுச்சிக்கல்களை ஒரு குட்டிக்கதைக்குள் சொற்ப வரிகளுக்குள் அடக்க முடியுமாயின் அது தமிழை அல்லது எழுத்தை தன்வயப்படுத்திக் கொண்டுள்ளார் என்றுதான் அர்த்தம் கொள்ளலாம்.

இதில் மேடைகள் என்று ஒரு கதை வருகிறது. இக்கதை பழைய காலத்து வீடுகளில் காணப்படும் சமையலறை பற்றியது. இக்கதையில் இருபது மேடைகள் வருகின்றன. ஒரு சமையலறையில் இத்தனை மேடைகள் இருக்கும் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இந்தக் கதையில் வரும் இவ்வளவு மேடைகளையும், அவை எல்லாவற்றின் பயனையும் நினைவில் வைத்திருக்க பிரத்தியேக நுண்ணறிவும், ஞாபகசக்தியும் வேண்டும். இந்தக் கதையை அப்பா அமர்ந்திருந்த மேடையில் ஒரு நாள் கடவுள் பூசணிக்காயை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார் என முடித்துள்ளார். உண்மையிலேயே கொஞ்சம் பெரிதாக சிரித்து விட்டு அக்கம் பக்கதில் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்ட கதை இது.

அடுத்து மனதில் இடம்பிடித்தது ஹிந்தி/குஜாராத்தி ரீயூஷன் ரீச்சர் தேவை என்ற கதை. இக்குட்டிக்கதை ஒரு குழந்தை மற்றும் அவரது தாய் தொடர்பானது. பேய் என்பதே புனைவு, அதனுடன் உரையாடுவதும், அதற்கு ஹிந்தியும் குஜராத்தியும் தெரியாது என்பதும் புனைவு. இதையெல்லாவற்றயும் விட ஒரு ரியூசன் வாத்தியார் வேற, அம்மா பேய், குட்டிப்பேய் ஆகியோரின் மொழியைகிரகிக்கும் தன்மை பற்றிய அங்கலாப்பு வேறு, பெரிய பேய்தான் என செய்யப் போகிறதோ என்ற அக்கறையும் கூட, இந்த அக்கறை உண்மையில் நியாமானதாக இருக்கலாம் பெண்பேயின் இடத்தில் இருந்து பார்க்கும் போது. இது எல்லாவற்றையும் விட பேய்கள் மீதான கரிசனை என்பதே இக்கதையின் மகுடம். ஒரு புனைவுக்குள் இத்தனை புனைவுகளைப் பொருத்தலாமா என்று எனக்கு இன்று வரை தெரிந்திருக்கவில்லை. புனைவு எழுத வரேவராது என்று கூறும் எனது நட்புக்களை பெருந்தேவி அவர்களிடம் வகுப்பிற்கு அனுப்பி வைக்கலாமா எனத் தோன்றுகிறது.

மனம் எடுக்கும் முடிவு நுண்கதையை தனிமையை விரும்பாத அப்பா என்று எடுத்துக் கொள்ளலாமோ என்று தோன்றுகிறது. பெண்எழுத்தாளரைப்பற்றிய மதிப்பு என்னாவது, இப்படி சமயத்தில் எழுத்தாளரின் சுய கருத்துக்களும் வெளிப்படுகின்றன. சில சொற்பிரயோகங்களை நீண்ட காலத்திற்குப் பிறகு பார்க்கிறேன். அதரப்பழசு இந்தச் சொல்லை எப்போது கடைசியாக கேட்டேன் என்பது எனக்கு ஞாபகம் இல்லை. வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.