( அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் நடத்தப்பட்ட போட்டியில் ஐம்பதினாயிரம் ரூபா பரிசுபெற்ற கே. ஆர். டேவிட் சிறுகதைகள் தொடர்பாக இச்சங்கம் நடத்திய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில் சமர்ப்பிக்கப்பட்ட உரை )


இலக்கிய உலகில் தன் எழுத்துக்களால் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்திருப்பவர் கே ஆர் டேவிட். . சிறுகதை, குறுநாவல், நாவல் எனும் தளங்களில் அறுபது வருடங்களுக்கு மேலாக பயணித்து வருபவர். தன்னுடைய எழுத்துக்களுக்காக பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றிருப்பவர். இலங்கையில் வசிக்கும் எழுத்தாளர்களுக்காக அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய போட்டியில் சிறுகதைகளுக்கான விருதை கே ஆர் டேவிட் சிறுகதைகள் எனும் தொகுதி பெற்றிருக்கின்றது. இப்படி ஒரு போட்டியை நடத்திய அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினருக்கு பாராட்டுகளையும் சொல்லிக் கொள்கின்றேன். பரிசு பெற்ற இந்நூலின் ஆசிரியருக்கும் என் வாழ்த்துக்கள்.

இத்தொகுப்புக்கு முன்னுரை எழுதிய இராஜேஸ் கண்ணன், தோழமையுரை வழங்கிய ராதேயன் மற்றும் கருத்துரைகளை வழங்கிய இலக்கிய உலகின் முக்கிய ஆளுமைகள் ஆறுபேர் என எட்டுப் பேர் கே.ஆர். டேவிட் பற்றியும் அவரது கதைகள் பற்றியும் இதில் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு படைப்பாளி இச்சமூகத்தை எப்படிப் பார்க்கிறான்… எப்படி அந்த மக்களின் வாழ்வியலை உள்வாங்குகின்றான்… அதை எந்த விதத்தில் எழுத்தாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறான்… என்பது பற்றி பல பார்வைகள் விமர்சனங்கள் எழுவதுண்டு. அதற்காக ஒரு படைப்பாளி எந்த விதமாக செயல்படுகிறான் என்பதும் கவனிக்கத்தக்க ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த விதத்தால் தனது எழுத்தால் கவனம் பெற்ற ஒருவராகவே எம்மால் கே. ஆர், டேவிட் அவர்களைப் பார்க்க முடிகிறது. இவரது சிறுகதைகள் நமக்கு பல்வேறு அனுபவங்களைத் தருகின்றன. அந்த அனுபவங்கள் எமக்குள் அதிர்வுகளையும் ஏற்படுத்துகின்றன என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கால நகர்வு இவரது எழுத்துக்களுக்கு வலு சேர்த்துக் கோண்டே வந்திருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. சக மனிதர்களை நோக்கும் இவரது பார்வை கூர்மை மிக்கது. தன்னைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்வை பதிவு செய்வதே எழுத்தாளராகிய தனது கடமை என்ற நோக்கில் தனது பயணத்தை மேற்கொண்டு வந்திருப்பவராகவே இவரைப் பார்க்க முடிகிறது.

கே. ஆர். டேவிட் எனும் பெயர் நான் எழுத ஆரம்பித்த எழுபதுகளிலேயே எனக்கு பரிச்சயமாகிவிட்ட ஒரு பெயர். பத்திரிகைகள் சஞ்சிகைகளில் இவரது கதைகள் வரும்போது தவறாமல் படித்திருக்கிறேன். இப்போது இந்நூலை வாசிக்கும் போது பல கதைகளை அந்த நாட்களில் படித்த நினைவு வந்தது. மனதைப் பாதித்த கதைகள் என்றும் நினைவில் இருந்தும் மறையாமல் நெருடிக்கொண்டேதான் இருக்கும். எளிமையான நடையில் வலுவான கருத்துக்களைச் சொல்லும் கதைகள் இவருடையது. நல்லதொரு கதை சொல்லியாக தன்னை எப்போதுமே அடையாளப்படுத்தியிருக்கிறார்.

‘கே. ஆர். டேவிட் சிறுகதைகள்’ எனும் 666 பக்கங்கள் கொண்ட இந்நூலில் மொத்தம் அறுபது சிறுகதைகள் உள்ளடங்கியிருக்கின்றன. 1971 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரையான காலத்தில் எழுதப்பட்ட கதைகள் இவை. இதுவரை இவர் வெளியிட்ட நான்கு சிறுகதைத் தொகுப்புகளிலும் இடம் பெறாத கதைகள் இவை என்பதும் குறிப்பிடத்தக்கது. 47 வருட காலத்தின் சமூக வாழ்வைச் சுமந்திருக்கும் இக்கதைகள் எமக்குத் தரும் அனுபவம் மிகவும் துயர் நிறைந்தது.

காலம் எத்தனையோ மாற்றங்களை எமது சமூகத்தில் ஏற்படுத்திக் கொண்டே நகர்ந்து வந்திருக்கிறது. எண்பதுகள் வரை சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள், வர்க்கபேதங்கள், அடிப்படைத் தேவைக்கான போராட்டங்கள், உறவு நிலைச் சிக்கல்கள், சாதிய பிரச்சினைகள், பெண் நிலைவாதம் போன்றவற்றை பேசிய ஈழத்துப் படைப்புக்கள் எண்பதுகளின் பின்னர் போர்க்கால் வாழ்வையும் சேர்த்துப் பேசத் தொடங்கின. இடப்பெயர்வுகள், உயிர் இழப்புக்கள் பற்றி படைப்புக்கள் பேசினாலும் சமூகத்தில் அடிப்படையாக இருந்த மேற்சொன்ன விஷயங்களையும் தொடர்ச்சியாக பதிவு செய்து கொண்டுதான் வந்திருக்கின்றன.

பசி கொண்ட மனிதர்கள் எக்காலத்திலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். கே. ஆர். டேவிட்டின் அநேக சிறுகதைகள் பசியில் வாடி வதங்கும் ஏழை மக்களைப் பற்றியதாகவே இருக்கிறது. ஒரு நேர உணவுக்கான அவர்களின் போராட்டத்தின் வலியை… அந்தத் தவிப்பை… அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார். வாசகர் மனதை அதிரச் செய்யும் எழுத்துக்கள் அவருடையது.

நமது சமூகத்தில் பலதரப்பட்ட மனிதர்கள் வாழ்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் எத்தனையோ பிரச்சினைகள்… அவற்றுக்கு முகம் கொடுத்துத்தான் அவர்கள் வாழ வேண்டியிருக்கிறது. தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை நோக்கும் இவரது பார்வை கனிவு மிக்கது.

இவருடைய கதைக்களங்கள் பலதரப்பட்டவை. இலங்கையில் பல பாகங்களில் இவர் பணிபுரிந்ததனால் ஒரு ஆசிரியராக இவருக்கு கிடைத்த அனுபவங்களும் பலதரப்பட்டதாக இருந்திருக்கிறது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, முரசுமோட்டை, பரந்தன், மன்னார், மலையகம், திருகோணமலை, கொழும்பு என்ற பல இடத்து மனிதர்களின் வாழ்க்கை இதில் பேசப்பட்டிருக்கிறது. அந்தந்த மண்ணில் அதனதன் சூழலில் அவர்களின் வாழ்க்கை எந்த விதமாக அமைந்திருக்கிறது என்பதெல்லாம் எம் கண்முன்னே காட்சிகளாக விரிந்து கொள்கிறது. மனிதர்களின் பாடுகளை பதிவு செய்யும்போது ஒரு படைப்பாளியாக இவருக்குள் இருக்கும் அறச்சீற்றம் அவ்வப்போது விசிறி எழுந்து வெளிப்படுவதையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

இவரது பாத்திரங்கள் நாம் அன்றாடம் காண முடிகின்ற மனிதர்கள். வறுமையோடு போராடி வாழ்கின்ற அடித்தட்டு மனிதர்கள். இவர் அடையாளம் காட்டும் இந்த ஏழைகளின் நிலை எமது மனதையும் பாரமாக்கி விடுகிறது.

ஆடம்பரமாக நடந்த பிறந்தநாள் விழாவில் விருந்தினர் சாப்பிட்டு விட்ட மீதி உணவை சேகரிக்கும் சிறுவன், பாடசாலையில் தரும் பிஸ்கற்றுடன் களவாக மூன்றே மூன்று பிஸ்கற்றுக்களை எடுத்து அதை விற்று தங்கைக்கு பாண் வாங்கிக் கொடுக்க ஆசைப்படும் சிறுவன். ஏழ்மை நிலையில் கூலி வேலை செய்யும் அம்மாவின் வாரிசாக உருவாகும் சிறுமி, ஏழ்மையிலும் படிப்பைத்தொடர ஆசைப்படும் சிறுமி, மகளின் படிப்புக்காக அடுத்தவரிடம் கையேந்தி நிற்கும் தாய், என்று சிறியவர்களின் பிரச்சினைகளை… அவர்களது கையறு நிலையை… வெளிச்சம் போட்டுக்காட்டும் பல சிறுகதைகள் மனதை நெகிழ வைக்கின்றன. அதேசமயம் முதியவர்களின் வயிற்றுப் பசியின் கொடுமையையும் அவர்களின் அனாதரவான நிலைமையையும் பேசும் கதைகள் எமது கண்களை நனைய வைக்கின்றன. இவர்கள் எல்லாம் எம்மைச் சுற்றித்தான் வாழ்கிறார்கள்…. என்ற ஆதங்கத்தையும் துயரையும் நமக்குள் கடத்தியிருப்பதில் இந்தக்கதைகளின் வெற்றி தங்கியிருக்கிறது என்பது நாம் ஒப்புக் கொள்ள வேண்டியது.

அதேசமயம் பலருடைய போலி முகங்களையும் தோலுரித்துக் காட்டுகிறார். ஏழை மக்களை சுரண்டி வாழ்பவர்கள், அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி ஏமாற்றுபவர்கள், பசி பட்டினியோடு வாழ்ந்த காலங்களில் தாயின் பசி தீர்க்காமல் அவள் இறந்ததும் ஆடம்பரமாக செத்தவீடு செய்யும் மகன்கள், அழுகின்ற ஒரு குழந்தைக்கு போச்சியைக் கொடுத்து உதவாத பணக்கார மனிதர்கள், தம்மிடம் வேலை செய்யும் ஏழைகளை இளக்காரமாய் நினைக்கும் முதலாளிகள், வறுமை நிலை பார்த்தும் மனம் இரங்காமல், ஏழைகளின் வாழ்வாதாரக் கூப்பன்களை அடைவு பிடிக்கும் சுயநலமிக்கவர்கள் என்று எமது சமூகத்தில் அவர்கள் போன்ற மனித நேயமற்றவார்களும் வாழ்கிறார்கள் என்றும் அம்பலப்படுத்துகின்றார்.

                                                                        - எழுத்தாளர் கே.ஆர்.டேவிட் -

இவருடைய பாத்திரங்கள் பற்றிப் பேசும் போது ஒரு சிறப்பம்சத்தையும் குறிப்பிடுவது அவசியமாகிறது. ஒருவர் துன்பப்படும் போது அவருக்கு ஆதரவாக ஆறுதல் சொல்ல யாராவது ஒரு நல்லவரையும் பாத்திரமாக்கி விடுகிறார். நிர்க்கதியாய் கலங்கி நிற்கும் அவர்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொடுக்கும் வார்த்தைகள் இந்த சமூகத்துக்கானதாகவும் ஆகிப்போகிறது. ஏன் இந்தச் சமூகம் இப்படி இருக்கிறது என்று கவலைப்படும் மனித நேயமுள்ளவர்களை அடையாளம் காட்டுவதன் மூலம் இந்தச்சமூகம் நல்லவர்களால் ஆனதாகவும் இருக்கவேண்டும் என்ற ஆதங்கம் இவரிடம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. மனிதர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற ஒரு சமூக நேசிப்பாளராக தன்னை அடையாளம் காட்டுகிறார்.

இக்கதைகளின் இன்னொரு சிறப்பு இயல்பான மொழிநடை. அலுப்புத் தராமல் வாசகரை கதைகளுடன் ஒன்றிப்போகச் செய்யும் எளிமையான வார்த்தைகள், சுற்றிலும் தான் பார்க்க நேருகின்ற நிகழ்வுகளால் ஏற்படுகின்ற ஆதங்கத்தை வெளிப்படுத்த இவருக்கு கை கொடுத்துக் கொண்டே வருகிறது. எங்கேனும் தேவையற்ற வர்த்தைகள் என்று எதுவுமில்லை.

அநேகமான கதைகளில் ஒரு கதை சொல்லியாக தன்னையும் முன் நிறுத்தியுள்ளார். அந்தப்பாத்திரங்களுடன் நாம் சுலபமாக ஒன்றிப் போக இது உதவி செய்கிறது. உணர்வுகளை வாசகர் மனதுக்குள் கடத்தும் இந்த உத்தி இவர் நோக்கத்தை நிறைவேற்றி வைத்திருக்கிறது.

சமூகம் பற்றிய இவரது கேள்விகள் சுளீரென்று முகங்களில் வந்து அறைகிறது. பல கேள்விகளுக்கு சமூகம் விடை தர மறுக்கிறது. ஏற்றுக் கொள்ளும் விதத்திலும் விடைகள் கிடைப்பதில்லை. விடை சொல்லும் பொறுப்புக்களையும் பலர் ஏற்றுக் கொள்வதில்லை. சுயநலமிக்க இந்த உலகத்தில் நசிபடவும் மிதிபடவுமே பிறந்த ஏழை மக்கள் மீதான கருணையே இவருடைய எழுத்துக்களின் பலம் என்று கூறலாம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஒரு மனம் இருக்கிறது, அதில் சராசரி மனிதருக்குரிய ஆசாபாசத்தை வெளிபடுத்தும் இவரது எழுத்துக்கள் எம் சமூக வாழ்வியலின் ஒரு வெட்டு முகம்.

சமூக மாற்றங்களிடையேயும் அது தந்த நெருக்கடிகளுக்கிடையேயும் இவர் தொடர்ந்தும் எழுதி வருவது பாராட்டுக்குரியது. சக மனிதர்களை நேசிக்கின்ற மனதால்தான் இது சாத்தியமாகிறது. ஒரு படைப்பாளியின் சமூகப்பொறுப்பும் அதனால் உணரப்படுகிறது. அந்த வகையில் ஒரு இலக்கியவாதியாக தன் பொறுப்பையும பணியையும செவ்வனே செய்து வருபவராக கே. ஆர். டேவிட் அவர்களை நம்மால் பார்க்க முடிகிறது. அப்படி ஒரு நம்பிக்கையை இவரது எழுத்துக்கள் எமக்குத் தருகின்றன.

47 வருடகால எமது சமூக வாழ்வின் ஆவணமாக ‘கே. ஆர். டேவிட் சிறுகதைகள்’ எனும் இத்தொகுப்பை நாம் குறிப்பிட்டு சொல்ல முடியும். இனிவரும் நாட்களிலும் இவரது இலக்கியப்பணி தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

* பதிவுகளுக்கு அனுப்பி உதவியர் எழுத்தாளர் முருகபூபதி. -