அருண்மொழி வர்மனின் ‘தாயகக் கனவுகள்’ நூல் பார்வையிடக் கிடைத்தது. ‘பிரதிகளை முன் வைத்து ஓர்  உரையாடல்’  என்ற தலைப்புடன்   தனது வாசிப்பனுபவங்களையும் வாழ்பனுவங்களையும் திரட்டி அவர் எழுதிய 15 கட்டுரைகளின் தொகுப்பாக  நூல் வெளிவந்திருக்கின்றது. ஆழமானதும் விசாலமானதுமான அவரது வாசிப்பும், அந்த  எல்லைகளின் விஸ்தீரணமும்  வியக்க வைக்கின்றது. தமிழிலும் ஆங்கிலத்திலுமான அவரது வாசிப்புப் பயணமானது    மிலன் குந்த்ரோவின் ‘மாயமீட்சி’ இல் இருந்து தமிழினி, ஷோபா சக்தி, அகரமுதல்வன் போன்றவர்களின் படைப்பிலக்கியங்கள் ஊடாக பயணித்து ,  கோர்டன் வைஸ் இன் ‘The Cage’ வரை விரிவடைகின்றது. பல்வேறு அமைப்புக்களுடன் சேர்ந்தியங்கும் ஒரு செயற்பாட்டாளராகவும், பல்வேறு இதழ்களிலும் ஆசிரியர் குழுக்களிலும்  , உதவி ஆசிரியராகவும் தொழிற்படும்  இவர் தனது இந்த வாசிப்பனுபவங்களை வெறும் விமர்சன  ரீதியாக மட்டும் அணுகாமல், எமது சமூகத்தின் கடந்த காலப் போக்குகள், நிகழ்வுகள் , தவறுகள் என்பவற்றை ஆய்வுரீதியாக  நோக்குவதுடன்  எதிர்காலத்தில்   ‘இனி என்ன செய்ய வேண்டும்’ என்ற சிந்திப்புடன் கூடிய எதிர்வு கூறல்களுடன் அணுகுகின்றார்,

டி.டி.கோசாம்பி அவர்கள் தனது ‘இயங்கியல் முறையில் சில பயிற்சிக் கட்டுரைகள்’ நூலிற்கு உப தலைப்பிடும் போது, ‘கடுப்பூட்டும் கட்டுரைகள்’ என்ற பெயரினை இட்டார். அதாவது உழைக்கும் மக்களிற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் ஆதரவாக இருக்கும் எனது கட்டுரைகள் முதலாளிகள், பாசிஸ்டுகள், மக்கள் விரோத அறிவு ஜீவிகளுக்கு கடுப்பூட்டும் கட்டுரைகளாக இருக்கும் என்றார். இந்நூலினை மொழிபெயர்த்த தோழர் சிங்கராயர் "இவை மக்கள் விரோத அறிவு ஜீவிகளுக்கு கடுப்பூட்டுபவையாக இருக்கின்ற போதிலும்  எம் போன்றவர்களுக்கு ‘களிப்பூட்டும் கட்டுரைகள்’ ஆக இருக்கின்றன" என்றார். அருண்மொழி வர்மனின் இந்தக் கட்டுரைகளும் யாருக்கு கடுப்பூட்டுகின்றன, யாருக்கு களிப்பூட்டுகின்றன என்று ஆராய்வதே எனது  இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

இந்நூலானது ‘பிரதிகளை முன் வைத்து ஓர் உரையாடல் ‘ என்ற தலைப்பிற்கு ஏற்றபடியே அவரின் வாசிப்பின் அனுபவங்களாக விரிவடைகின்றது. அருண்மொழி வர்மனின் வசிப்பனுபவவும்  எனது வாசிப்பின் ஊடான பயணங்களும்  கொஞ்சம் சமச்சீராக பயணித்திருப்பதை இந்நூலினை வாசிக்கும் போது என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. இதில் அவர் தனது விமர்சனத்தை முன் வைத்த எஸ்.அரசரத்தினம் எழுதிய ‘சாம்பல் பறவைகள்’ என்ற குறுநாவலையும் வெற்றிச் செல்வியின் ‘ஒரு போராளியின் காதலி’  என்ற நாவலையும் தவிர   மற்றைய அனைத்து நூல்களையும் என்னாலும் படிக்க முடிந்திருந்த காரணத்தினால் இக்கட்டுரையினை எழுதும் வேலையில் எனக்கு எந்தவித சிரமமோ மேலதிக பளுவோ இருக்கவில்லை. இந்நூல்கள் குறித்த அவரது பார்வைகளும்  எனது பார்வைகளும் பல இடங்களில் ஒன்றினைகின்றன.  சில இடங்களில் முரண்படுகின்றன.   இதற்கு  நான் வாழ்ந்த காலப்பகுதியும் நான் கண்டடைந்த அனுபவங்களும் அவர் வாழ்ந்த காலப்பகுதியில் இருந்தும் அவர் கண்டடைந்த அனுபவங்களில் இருந்தும் வேறுபாடு உடையவாக இருப்பதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.  தவிரவும் இந்நூல்கள்  குறித்தான அவர் அறியாத பல ‘உள்ளே நடந்த கதைகள்’ இனை  அறியக் கூடிய சந்தர்ப்பங்கள் எனக்கு வாய்த்ததுவும் இன்னுமொரு காரணமாக இருக்கலாம்.

                   -  நூலாசிரியர் அருண்மொழிவர்மன் -

எஸ்.கே.விக்னேஸ்வரன்  முன்னுரையினை எழுதியிருக்கின்றார். அதில் அவர் ‘தேடல் என்பது தான் கொண்டிருக்கும் கருத்துநிலை கேள்விக்குள்ளாக்கப் படும்போது அதை உள்வாங்கவும் ஆராயவும் தயாராக இருந்தால் மட்டுமே விரிவடையக் கூடியது’ என்ற ஒரு சிறப்பான கருத்தினை முன் வைத்திருக்கின்றார். அந்த முன்னுரையின் தலைப்பான  ‘தாயகக் கனவு நோக்கிய ஒரு மாற்றத்திற்கான குரல்’ என்ற வாசகத்தை  பலமுறை படித்தும் புரிந்து  கொள்ள முடியவில்லை.  எழுத்தில் கவித்துவம்  புகும்  போது பலரும் எதிர்ப்படுகின்ற இன்னல் இது என்று நினைக்கின்றேன்.

முதலில்  இந்த நூல் ஆரம்பத்திலேயே எனக்கு ஒரு ஏமாற்றத்தை தந்த நூல் என்று சொல்லிக் கொள்வதில் என்னிடம்  எந்தவிதத் தயக்கமும் இல்லை. அலன் குந்த்ரோவின் ‘மாய மீட்சி’ நூல் பற்றிய குறிப்புடன் ஆரம்பமாகும் இந்நூலும் அவரது தாயகம் குறித்த  அனுபவங்கள் அலன் குந்த்ரோவின் அனுபவங்கள் போல்  விரிவடையும் என்று எதிர்பார்த்திருந்த எனக்கு, அவரது தாயகம் குறித்த அனுபவமானது ஒரு கட்டுரையுடனேயே முடிவடைந்திருந்தது  பலத்த ஏமாற்றத்தினை தந்தது.   அந்த  கட்டுரை கூட நாம் தினசரி செய்தித்தாள்களில் படிக்கின்ற புற உலகம் சார்ந்த சராசரி விடயங்களைத் தொட்டுச் சென்றதேயன்றி அவரது சொந்த அனுபவங்களாக விரிவடையாமல் தேங்கி நின்றது இன்னும் கொஞ்சம் ஏமாற்றத்தை அதிகரித்தது.

இரண்டாவது கட்டுரையாக கோர்டன் வைஸ் எழுதிய ‘The Cage – கூண்டு’ நூல் குறித்த அவரது பார்வையினை முன் வைக்கின்றார். மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றது இந்தக் கட்டுரை. இதில் முக்கியமாக ஈழ அரசியல் வரலாற்றின் பல பகுதிகளையும் விரிவாக ஆராந்து எழுதிய கோர்டன் வைஸ் ஈழ அரசியலில் இந்தியா செலுத்திய ஆதிக்கம், பாதிப்புக்கள் குறித்து கடுமையான மௌனத்தைக் கடைப்பிடிப்பதாக தனது விசனத்தினை தெரிவிக்கின்றார். ‘The Cage’ நூல் குறித்து இதுவரை பலரும் பலவிதமான கருத்துக்களுடன் பல கட்டுரைகளை எழுதியிருக்கின்றனர். ஆயினும் அனைவரும் கோர்டன் வைஸ் தனது முன்னுரையில் குறிப்பிட்ட ஒரு முக்கியமான விடயத்தினை  கூற மறந்து விடுகின்றனர். கோர்டன் வைஸ் தனது முன்னுரையின் இறுதிப் பகுதியில் இப்படியாகக் கூறுகின்றார். “யுத்தத்தின் இறுதிக் காலங்களில் நான் ஐநாவின் செய்தித் தொடர்பாளராகவும் ஆலோசராகவும் பணியாற்றினேன். பன்னாட்டு நிர்வாகப் பணியில் இணையும்போது  நாம் ஓர் உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றோம் எங்கள் பணி  நிமித்தம் எங்களுக்குத் தெரியவரும் தகவல்களை பணியினை விட்டு விலகிய பிறகு கூட நாங்கள் பகிரங்கப் படுத்தக் கூடாது. அந்த உறுதிமொழியினையும் காப்பாற்ற வேண்டும். அதே நேரம் ஆயுதம் ஏந்தாத ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படடதினையும் சொல்ல வேண்டும். இது ஒரு தர்மசங்கடமான பணிதான்.---- “. இந்த மறைக்கப்பட்ட உண்மைகளுடனேயே இந்த நூல் வெளி வந்திருக்கின்றது என்பது எமக்கு புலனாகின்றது. இதனை நாம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஏற்கனவே பல உண்மைகளை வெளிக்கொணர்ந்த இவர் இந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் ஒரு நாள் வெளிவிடும்போது இன்னும் பல அதிர்ச்சிகரமான செய்திகள் வெளிக்கொணரப்படலாம் என்பது இங்கு இந்நூல் குறித்து நான் வைக்கும் ஒரு மேலதிகமான கருத்தாகும். .

அடுத்து ஷோபா சக்தி - தியாகு இடையிலான உரையாடலாக வெளிவந்த ‘கொலை நிலம்’ நூல் குறித்தும் அதன் போதமை குறித்தும்  விபரிக்கின்றார். ஓரிடத்தில் அவர் ஷோபா சக்தியை ஒரு மென்போக்கு இடதுசாரி என்று குறிப்பிடுகின்றார். தனது படைப்புகளிலும் உரைகளிலும் நேர்காணல்களிலும்   அம்பேத்காரியத்தை முன்னிறுத்துவதற்காக ஷோபா சக்தி,  இடதுசாரியத்தின் மீதும் இடது சாரிகளின் மேலும் முன் வைக்கின்ற கடுமையான வசைமாரிகள் நாம் அறிந்தவை. ஆனால் அருண்மொழிவர்மன் ‘ஷோபா சக்தி ஒரு மென்போக்கு இடதுசாரி’ என்ற புதிய கண்டு பிடிப்பினை எங்கிருந்து பெற்றுக்கொண்டார் எனபது கொஞ்சம் வியப்பாகவே இருக்கின்றது.

ஈழப் போராட்டத்தின் முக்கிய வரலாற்று ஆவணமாகப் பலராலும் கருதப்படும் கணேசன் ஐயர் எழுதிய ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்’ நூல் குறித்து தனது   அனுபவங்களின் ஊடான   கருத்தினை வெளிப்படுத்துகின்றார்.  ஆயினும் அவர் முக்கியமாகக் கருதும் இந்நூலினை என்னால் முக்கியமாக கருத முடியவில்லை. அதற்கு அவர் அறியாத இந்நூல் குறித்த தகவல்களை நான்  அறிந்திருப்பதே காரணமாகும்.  அதாவது இந்நூல் எழுதப்படும் காலகட்டத்தில் இங்கு புகலிடத்தில் வாழும் முன்னாள் புலி உறுப்பினர்கள் பலரும் அங்கு தமிழகத்தில் இருந்த கணேசன் ஐயர் மீது,  தமது சகோதர்கள் மூலமாகவும் உறவினர்கள் மூலமாகவும்  செலுத்திய மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் பற்றிய தகவல்களை  என்னால் அறிய முடிந்தது. எனவே இந்நூலானது இத்தகைய கடுமையான மிரட்டல்களுடன் கூடிய தணிக்கைகளுக்குப் பிற்பாடே   வெளிவந்திருகின்றது. அதன்படியே  இந்நூலில் குறிப்பிடப்படுகின்ற வரலாறு குறித்தும் அதன் நம்பகத்தன்மை குறித்தும் எமக்கு நம்பிக்கையில்லை. நாம் அறிந்த இவ்விடயத்தை அருண்மொழிவர்மன் அறியாதது அவரின் தவறல்ல. ஏனெனில் அவர் பயணிக்கும் பாதை வேறு. நான்  பயணிக்கும் பாதை வேறு. நாம்  ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்த ‘உள்ளே நடந்த கதை’ இனை இங்கு மேலதிகமாகத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

புலிகள் அமைப்பில் பெண்களின் நிலைப்பாடு தொடர்பாக தான் வாசித்த நூல்களில் இருந்து மிகவும் நேர்மறையான முடிவுகளை  தர்க்க ரீதியாக முன் வைக்கிறார். ஆயினும் எமது போராட்ட வரலாற்றில் பெண்கள் தொடர்பாகவும் சாதீயம் தொடர்பாகவும் மிகவும் சிக்கல்கள் நிறைந்ததும் முன்னுக்குப் பின் முரண்பாடுகள் நிறைந்ததுமான ஆயிரம் கதையாடல்கள் உண்டு.   இவர் தான் வாசித்த 'பெயரிடப்படாத நட்சத்திரங்கள்' கவிதைத் தொகுப்பில் இருந்தும் Margaret Trawick எழுதிய Enemey Lines warfare நூலில் இருந்தும் பல தரவுகளை எடுத்து புலிகள் அமைப்பில் பெண்கள் இருந்த உன்னத நிலையினை நிரூபிக்கின்றார். ஆயினும் புலிகளுடன் இறுதிவரை பயணித்த பெண் போராளிகளான தமிழினி, தமிழ்க்கவி போன்றோரின் கருத்துக்கள்  இதிலிருந்து சற்று வேறுபட்டவையாக இருக்கின்றன. உண்மையில் இவ்விடயங்கள் வரலாற்றில் அவிழ்க்கப்படாத முடிச்சுக்களாகவே இன்றும் உள்ளன. எனவே இவ்விடயங்களை  அணுகும்போது மற்றைய விடயங்களைப் பார்க்கிலும் அதிகம் உன்னிப்பான கவனம் செலுத்தப்பட வேண்டும். கூடவே  மேலதிகமான ஆதாரபூர்வமான தகவல்களும் திரட்டப் பட வேண்டும்.

அருண்மொழிவர்மனின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த அவரது கடுமையான ஆதரவு நிலைப்பாட்டினை  அவரது இந்த எழுத்துக்கள் ஊடாக  அவதானிக்க முடிக்கின்றது.   கூடவே அவர் விடுதலைப் புலிகள் மீதும் தனது நிபந்தனைகளுடன் கூடிய ஆதரவினை வெளிப்படுத்துகின்றார். ஆயினும் அவர் படைப்பிலக்கியங்களை  அணுகும்போது தனது ஆதரவு நிலையிலிருந்து விலகி உண்மையுடன் கூடிய ஒரு தேடலினை முன் வைக்கின்றார். உண்மையில் இது மிகவும் பாராட்டுக்குரியது. அகரமுதல்வனின் ‘சாகாள்’ சிறுகதை மீது தனது வன்மையான கண்டனத்தை முன் வைக்கின்றார். தமிழ்நதி தனது ‘பார்த்தீனியம்’ நாவலில் விஜிதரனின் படுகொலையில் இருந்து புலிகளுக்கு எதிரான பல நிகழ்வுகளை மறைத்து எழுதியதை அம்பலப் படுத்துகின்றார்.   தமிழ்நதி எழுதிய 'காத்திருப்பு' சிறுகதையில் உள்ள  அபத்தத்தினை தெளிவாகப் புரிய வைக்கின்றார். அத்துடன்  நாம் தமிழர் கட்சி ஆவணம் குறித்து பேசுகையில் அக்கட்சி குறித்து ஈழத் தமிழர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்ற தனது நியாயமான அச்சத்தினை  வெளிப்படுத்துகின்றார்.

புஸ்பராணியின் ‘அகாலம்’ நூல் குறித்த அவரது விமர்சனம் இந்நூலின் ஒரு முக்கியமான பதிவாகும்.  அதில் அவர் புஸ்பராணியின் “ இன்றைக்கு இருக்கும் தமிழ்த் தலைவர்களில் மிகச் சிறந்த வரலாற்று அறிவும் தெளிவான அரசியல் பார்வையும் கொண்டவராக நான் வரதரஜப் பெருமாளையே சொல்வேன். எனினும் அவரது பாத்திரம் ஒரு சிந்தனையாளருக்கு உரியது” என்ற கருத்தினை வன்மையாகச் சாடுகின்றார். வரதராஜப் பெருமாள், இந்திய இராணுவம் ஈழத்தில் நிலை கொண்டிருந்த காலப் பகுதியில்  நிகழ்த்திய கொடூரங்களையும் படுகொலைகளையும் சுட்டுக்காட்டும் இவர், வரதராஜப் பெருமாள் வட-கிழக்கு முதலமைச்சராக இருந்த போது நிகழ்த்திய அட்டூழியங்களையும் அட்டகாசங்களையும் நாம் மறைத்து விட்டு அவரை அணுக முடியாது என்று தனது பலமான கண்டனத்தை முன் வைக்கின்றார்.  அருண்மொழிவர்மன், வரதராஜப் பெருமாள் மீதான ஒரு பலமான கண்டனத்தை முன் வைத்தாலும்  அவரது ‘தாயகக் கனவுகள்’ என்ற இந்நூலானது இங்கு இலண்டனில் ஈஸ்ட் ஹாம் பகுதியில் வரதராஜப் பெருமாளின் ‘இலங்கைப் பொருளாதாரம்’ என்ற நூலுடன் ஒரே மேடையில், ஒரே சமயத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது எனபது ஒரு முரண்நகையான விடயமே. இத்தகைய ஒரு கொடுமையான சூழலிற்குள்தான் நாம் வாழ்கின்றோம் அல்லது வாழ நிர்பந்திக்கப் பட்டிருக்கின்றோம் என்பதினை சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தவித  தயக்கமுமில்லை.
 
மிக அண்மையில் வெளிவந்த நூல்களில் ஒரு முக்கியமான நூலாக இந்த ‘தாயகக் கனவுகள்’ நூலினைக் குறிப்பிடலாம். அலங்காரமற்ற வார்த்தைகள், எளிமையான சொற்பிரயோகங்களுடன் கூடிய எழுத்தில் அவர் மாற்றுக் கருத்துடையோர் மீது  மனம் நோகாமல் வைக்கின்ற இலேசான, நாகரிகமான  தர்க்கங்கள் பாராட்டிற்குரியவை.  இந்தக் கட்டுரைகள் யாவும் ஒரு மென்மையான மொழியில்  எழுதப்பட்டிருப்பினும் நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி இவை பாசிஸ்டுகளுக்கும் மக்கள் விரோத அறிவு ஜீவிகளுக்கும் அரச ஒத்தோடிகளுக்கும் மிகவும் கடுப்பூட்டக் கூடியவை எனபதில் எந்தவித ஐயமுமில்லை.

முடிவாக, யுத்தத்திற்கு பிந்தியதான ஒரு துயரம் நிறைந்த சிக்கல் மிகுந்த காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம். வரலாற்றில் மிகவும் கொடூரமாக ஒடுக்கப்பட்ட இனங்களில் எமது இனமும் ஒன்று.  ஆயினும்  எம்முடனே பயணித்த மற்றைய சக இனங்களினை ஒடுக்குவதிலும் நாம் என்றும் பின் தங்கியிருந்திருக்கவில்லை. அத்துடன் எம்மிடையே அக முரண்பாடுகளாகத் திகழ்கின்ற சாதீய, பெண்ணிய ஒடுக்கு முறைகளிலும் நாம் என்றும் கை தேர்ந்தவ்ர்களாகவே இருந்து வந்திருக்கின்றோம் . எமது போராட்ட வரலாறானது பல்வேறு முரண்களையும் முடிச்சுக்களையும் கொண்டதாக இருந்திருக்கின்றது. எனவே எமது கடந்த கால வரலாறுகளை, செயற்ப்பாடுகளை,  நடவடிக்கைகளை  மீள்பார்வையிடுவதும் அதன் மீதான சரியான மதிப்பீடுகளை மேற்கொள்வதும் இன்று எம்முன் உள்ள முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். அந்த  வகையில் இது போன்ற வரலாற்று ஆவணக்கள் மீதானதும் படைப்பிலக்கியங்கள் மீதானதுமான கறாரான பார்வைகளுடன் கூடிய விமர்சனங்களும்  ஆய்வுகளும்  தொடர்ந்தும் செய்யப்பட வேண்டும்.    அருண்மொழிவர்மன் தொடர்ந்தும் இப்பணியினை சளைக்காது சலிக்காது  மேற்கொள்வார் என எதிர்பார்க்கின்றேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.