- மணற்கேணி பதிப்பகத்தின் வாயிலாகக் கலாநிதி செல்லத்துரை சுதர்சனின் "தாயிரங்கு பாடல்கள்" என்ற  கவிதைத் தொகுதி  2023 சென்னை புத்தகத் திருவிழாவில் வெளிவந்துள்ளது.  அத்தொகுதிக்குப் பேராசிரியர்  நுஃமான்  எழுதிய அறிமுகமிது. -


கலாநிதி செல்லத்துரை சுதர்சன் கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக ஈழத்து இலக்கிய உலகில் தீவிரமாகச் செயற்பட்டுவரும் இளந் தலைமுறையைச் சேர்ந்த ஒரு முக்கியமான ஆளுமையாக அறியப்படுபவர். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில்; சிறப்புப் பட்டம் பெற்று, அங்கேயே சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றிவருகிறார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். தமிழ்நாட்டின் முக்கியமான எழுத்தாளர்கள், விமர்சகர்கள், அறிஞர்களுடன் நெருக்கமான உறவு உடையவர். ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் என்றவகையில் தமிழியல் ஆய்வில் ஆழமாகத் தடம்பதித்துவருபவர். முக்கியமான ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். ஆசிரியர், பதிப்பாசிரியர் என்றவகையில் இதுவரை சுமார் இருபது நூல்கள் வெளியிட்டுள்ளார். இளந் தலைமுறையைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களுள் இவரளவு தீவிரமாகச் செயற்படுபவர்கள் மிகச் சிலர் என்றே சொல்லவேண்டும்.

சுதர்சன் கடந்த சுமார் இருபது ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க கவிஞராகவும் தன்னை நிலைநாட்டிக்கொண்டவர். பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே 2004ல் அவருடைய முதலாவது கவிதைத் தொகுதி மற்றுமொரு மாலை வெளிவந்தது. அதே ஆண்டில் பல்கலைக்கழக மாணவர்களின் கவிதைகளைத் தொகுத்து என் தேசத்தில் நான் என்ற தொகுதியையும் அவர் வெளியிட்டார். நீண்ட கால இடைவெளியின் பின்னர் காலிமுகம் 22 என்ற அவருடைய இரண்டாவது தொகுதி சமீபத்தில் வெளிவந்தது. இப்போது, காலிமுகம் 22 தொகுப்புக் கவிதைகளையும் உள்ளடக்கிய அவரது மூன்றாவது கவிதைத் தொகுதி தாயிரங்கு பாடல்கள் என்ற தலைப்பில் வெளிவருகின்றது.

தற்காலத் தமிழ்க் கவிதை வளர்ச்சிக்கு ஈழம் வழங்கிய ஒரு முக்கியமான கொடை அதன் அரசியல் எதிர்ப்புக் கவிதைகள் எனலாம். முப்பது ஆண்டுகால யுத்தமும் அது ஏற்படுத்திய அவலமும் அதன் விளைவாக இன்றுவரை தொடரும் அரசியல் நெருக்கடிகளும் அதன் அடிப்படையாகும். அதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டுக் கவிஞர்கள் இந்தக் குரூர அனுபவத்துக்கு ஆளாகவில்லை. அதனால் துரதிஷ்டவசமாகத் தமிழ்நாட்டுக் கவிதை இந்த அளவு அரசியல் கூர்மைபெறாது போயிற்று.

1980க்குப் பின்னர் கவிதைக்குள் நுழைந்த ஈழத்துக் கவிஞர்கள் எல்லோருமே ஒருவகையில்  யுத்தத்தின் குழந்தைகள்தான். யுத்தத்தின் குரூர வடுக்களைச் சுமந்தவர்கள், துப்பாக்கி அரக்கர்களால் சூழப்பட்டவர்கள். அடக்குமுறை, கொலை, கடத்தல், காணாமற்போதல், சிறை, சித்திரவதை, கண்ணிவெடி, எறிகணை, குண்டுவீச்சு, புலப்பெயர்வு என்ற நச்சுப் புகையினால் மூச்சுத் திணறியவர்கள். இவர்களுடைய கவிதை இவற்றின் விளைவாக, இவற்றின் அனுபவப் பதிவாக அமைவது ஒன்றும் ஆச்சரியம் அல்ல. வீடு எரிந்துகொண்டிருக்கையில் வானத்தை அண்ணார்ந்து பார்த்து நிலவை ரசிக்க முடியவில்லை இவர்களால். இவர்களுடைய கவிதை வெறும் அரசியல், இதில் கவிதையின் அழகியல் இல்லை என்பவர்கள் நெருப்பின் வெம்மையை உணராதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தொகுப்பில் உள்ள சுதர்சனின் கவிதைகள் எல்லாம் யுத்த நெருப்பின் வெம்மையை, இனமுரண்பாட்டின் கொடுமையை, இடப்பெயர்வின் அவலத்தை, சந்தர்ப்பவாத அரசியலின் இழிவைப் பேசுபவை. அவ்வகையில் ஈழத்து அரசியல் கவிதை மரபில் இக்கவித்தொகை ஒரு புதிய வருகை  எனலாம்.

இத்தொகுப்பில் ஏழு பிரிவுகளில் மொத்தம் 47 கவிதைகள் உள்ளன. பெரும்பாலானவை கடந்த சுமார் பத்து ஆண்டுகளுள் எழுதப்பட்டவை. யுத்தகால அனுபவங்களையும், யுத்தத்துக்குப் பிந்திய போராட்ட கால அனுபவங்களையும் உரிப்பொருளாகக் கொண்டவை. துன்பமும் கோபமும் பின்னிப் பிணைந்த யதார்த்தத்தைப் பேசும் கவிதைகள் இவை.

சிங்கம் தின்ற நிலம் பிரிவில் உள்ள நான்கு கவிதைகளும் ராணுவத்தின் பிடிக்குள் சிக்கிய கிராமத்தைவிட்டு அகதிகளாக இடம்பெயர்ந்த மக்களின் துயரத்தின் பதிவுகளாக உள்ளன. யுத்தம் முடிந்த பின்னரும் சொந்த மண்ணில் கால்வைக்க முடியாது ராணுவம் ‘குறிசுட்டு’ வைத்திருக்கும் அவலம் இன்னும் தொடர்வதை ஒவ்வொரு கவிதையும் பூடகமாகவும் அதேவேளை அழுத்தமாகவும் பேசுகின்றது. தோலகட்டி பிரிவில் உள்ள ஐந்து கவிதைகளும் இவைபோன்று நம்மனதில் அதிர்வுகளை எழுப்புபவை. தோலகட்டி கிராமம் யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி இலங்கை முழுவதும் பிரசித்தமானது. 1928ல் தோமஸ் அடிகள் (1886 – 1964) இங்கு உருவாக்கிய கிறிஸ்தவ ஆசிரமமும், அவர் அங்கு ஆரம்பித்த சுய தொழில்வாய்ப்பு நிலையமும் அதற்குக் காரணம். அவர்களின் உற்பத்தியான தோலகட்டி நெல்லிரசமும் ஏனைய பழ ரசங்களும் இலங்கை முழுவதும் புலம்பெயர் நாடுகளிலும் பிரசித்தி பெற்றவை. யுத்தத்தின்போது தோலகட்டியும் முற்றாக இடம்பெயர்ந்தது. ‘வெளியேறக் கால்களற்ற பொழுதில் தூதுரைக்கச் சம்மனசுகளும் வரவில்லை’, ‘நெல்லிரசம் பெருக்கிய வாயில் குரலடைத்துப் போயிற்று’ என்கிறார் கவிஞர்.

சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கை வரலாற்றில் இவ்வாண்டு காலிமுகத் திடலில் நூறு நாட்களுக்குமேல் தொடர்ந்த மாபெரும் மக்கள் எழுச்சி ஒரு திருப்புமுனை எனல் வேண்டும். முழு நாடும் அதன் பின்னால் திரண்டது. பிரதமர் பதவி துறக்கவும் ஜனாதிபதி நாட்டைவிட்டுச் செல்லவும் நேர்ந்தது. இறுதியில் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளால் போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டாலும் அதன் தாக்கம் இலங்கை அரசியலில் பெருமாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பாக்கலாம். சுதர்சன் இந்த மக்கள் எழுச்சியை ஆர்வத்தோடு எதிர்கொண்டவர்களுள் ஒருவர். காலிமுகம் 22 பிரிவில் உள்ள 13 கவிதைகளும் அந்த அனுபவங்களின் பதிவுகளாக உள்ளன. அதில் ஒரு கவிதையை நான் இங்கு முழுமையாகப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இத்தொகுப்பில் உள்ள எனக்கு மிகப் பிடித்த கவிதைகளுள் இது மிகத் தனித்துவமானது என்பேன். சிறு குடிலின் பசி  கவிதையின் தலைப்பு. போராட்டத்தின் வர்க்க வேரை இறுக்கமான படிமங்களால் வெளிப்படுத்தும் இக்கவிதை அரசியல் கவிதையின் அழகியலுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் அமைகிறது.

கடலருகில் எழும்
எதிர்ப்புச் சிறு குடில்கள்,
அரச மாளிகையை
விழுங்கத் துடிக்கின்றன!

இரும்பாலும்
இறுகிய செங்கல்லாலும்
பெருஞ் சுவராய்க் கட்டிய
மாளிகையை,
மழை கழுவும் துணிக் குடில்கள்
அச்சுறுத்துகின்றன.

மாளிகைச் சுவர்களில்
பீதி பொங்கி வழிகிறது.
பசியின் கரங்கள்
பறித்துண்ணுமோ எனும் அச்சத்தில்
அதன் ஓரங்களில்
உள்ளிருக்கும் இரும்புகள்
துருப்பிடிக்கின்றன.

சிறு குடில் பசியால் உண்டானது!
பசியோ மாளிகையால் உண்டானது!
எனின்,
சிறு குடில் பசியாற
மாளிகையை விழுங்குமன்றோ!

பேதுருவுக்கு எழுதிய திருமுகம் ஒன்றுதான் இத்தொகுப்பில் உள்ள சற்று நீண்ட கவிதை. இலங்கை அரசியலில் இருந்து விலகி சர்வதேச அரசியலைப் பேசும் கவிதை. கியூபா பற்றியது. இடதுசாரிகளுக்கு மட்டுமன்றி, பொதுவாகவே ஜனநாயக நாட்டமுடைய யாருக்கும் கியூபா ஒரு வியப்புக்குரிய பூமிதான். கோலியாத்தை வென்ற தாவீது போல அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எல்லா வியூகங்களையும் முறியடித்துக்கொண்டு மேலெழுந்த மக்களின் தேசம் கியூபா. கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்தில் உலகின் பல நாடுகளுக்குக் கியூபா அளித்த மருத்துவ உதவி உலகை வியப்படையச் செய்தது. அந்த வியப்பில் எழுந்த கவிதைதான் இது. இத்தாலியை, ரோமாபுரியை நோக்கிப் பேசும் கவிதை இது. ஏகாதிபத்தியம் பற்றிய ஒரு விமர்சனமாக நாம் இதை வாசிக்கலாம்.

ஆட்டாகுதி: வேள்வி மறுக்கப்பட்டவனின் பாடல் பிரிவில் உள்ள 5 கவிதைகளும் இதுவரை நாம் பார்த்த ஏனைய கவிதைகளில் இருந்து வேறுபட்டவை. இவை மத மேலாதிக்கத்துக்கு எதிரான, மத நுண் அரசியல்பற்றிப் பேசுபவை. ஆகம மரபுக்குப் புறம்பான, சிறு தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடைய வேள்வி முறை மறுக்கப்பட்டதற்கான எதிர்ப்பை வெளிப்படுத்தும் கவிதைகள் இவை. தற்காலத் தமிழ்க் கவிதை வளர்ச்சிப்போக்கில் வேள்வி மறுப்புக் கவிதைகள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். அவை மதச் சீர்திருத்த, ஜீவகாருண்ய நோக்கில் அமைந்தவை என்றால், சுதர்சனின் இந்தக் கவிதைகள் வேள்வி மறுப்புக்கு எதிரான, சிறு தெய்வ வழிபாட்டு உரிமைக்கான குரலை எழுப்புகின்றன. மதம் முற்றிலும் நம்பிக்கை சார்ந்தது. ஒரு சாராரின் நம்பிக்கையை இன்னொரு சாரார் நிராகரிப்பது கேள்விக்குரியதுதான்.

உதிரிகள் பகுதியில் உள்ள எட்டுக் கவிதைகளும் சமகால ஈழத்து அரசியலின் வெவ்வேறு முகங்களைப் பேசுவன. அதுபோல் மீசை பிடுங்கிகள் பிரிவில் உள்ள மூன்று கவிதைகளும் யாழ்ப்பாணச் சாதியமைப்பில் சாதிமான்களின் மேட்டிமைத்தனத்துக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் தாழ்த்தப்பட்டவனின் குரலை வெளிப்படுத்துகின்றன.

கடைசியாக தாயிரங்கு பாடல்கள் பிரிவில் உள்ள ஏழு பாடல்களும் சுதர்சனின் பரிசோதனை முயற்சி எனலாம். சங்ககால அகத்திணைப் பாடல் வடிவத்துள் தற்கால ஈழத்து அரசியலை உரிப்பொருளாக அமைத்துக் கூறும் முயற்சி இது. கடைசிப் பாடல் மட்டும் புறநானூற்றை அடி ஒற்றியது. இவை வாசகருக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்று நம்புகிறேன்.

சுருக்கமாகச் சொல்வதானால் 1970களின் இறுதிப்பகுதியிலிருந்து ஈழத்தில் வளர்ச்சியடைந்த அரசியல் எதிர்ப்புக் கவிதை மரபில் ஒரு புதிய வரவாக, ஒரு முக்கியமான ஆளுமையாக சுதர்சனை நாம் அடையாளப்படுத்தலாம். பெரும்பாலான அரசியல் கவிதைகளில் காணப்படும் ஒருமுகத் தன்மையை அன்றி ஒரு பன்முகத் தன்மையை அவருடைய கவிதைகளில் காணமுடிகின்றது. வெறும் கோசங்களாக அல்லாமல் அரசியல் கவிதைக்குரிய அழகியலை அவர் பெரிதும் பேண முயன்றிருக்கிறார். பல கவிதைகளைப் புரிந்துகொள்வதற்கு அவற்றை மீண்டும் மீண்டும் படிக்கவேண்டியிருக்கும். அவருடைய அரசியல் பார்வை ஒருபக்கச் சார்பான தேசியம் அல்ல. அநீதிக்கு எதிரான, விமர்சனபூர்வமான பார்வை அவருடைய கவிதைகளில் இழையோடுவது நம் கவனத்துக்குரியது. தமிழ் இலக்கிய உலகு இக்கவிதைத் தொகுப்பை வரவேற்கும் என்று நம்புகிறேன். கவிஞருக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.