எனக்குத் தெரிந்து மாமியாருடனனான தமது அனுபவங்கள் எழுத்தில் வடித்தவர்கள் இருவர். ஒருவர் நடிகை பானுமதி ராமகிருஷ்ணா. அடுத்தவர் இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளர் சந்திரா இரவீந்திரன். தற்போது புலம்பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் அவர் இலங்கையில் இருந்த காலத்திலேயே சந்திரா தியாகராஜா என்னும் பெயரில் எழுதிக்கொண்டிருந்தவர். நீண்ட காலமாக அவர் சந்திரா இரவீந்திரனின் மூத்த அக்காவாக இருக்க வேண்டுமென்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் பின்னர் புகலிடத்தில்தான் இருவருமே ஒருவர் என்பதை அறிந்து கொண்டேன்.

பானுமதி ராமகிருஷ்ணா மிகச்சிறந்த நடிகை, பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர், நர்த்தகி மட்டுமல்லர் தெலுங்கில் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும் கூட. இவர் தனது மாமியாருடனான அனுபவங்களை நகைச்சுவைப் புனைகதைகளாக்கித் தெலுங்கில் எழுதிய கதைகள் 'பானுமதி கதலு'  என்னும் பெயரில் தொகுப்பாக வெளியாகி மிகுந்த வரவேற்பைப்பெற்றது. அத்துடன் ஆந்திர மாநிலத்தின் சாகித்திய விருதினையும் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.  இவை தமிழில் ராணிமுத்து வெளியீடாக எனது பால்ய பருவத்தில் 'மாமியார் கதைகள்' என்னும் பெயரில் ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியானது. கதைகள் 'மாமியாரும் ஆவக்காய் ஊறுகாயும்' போன்ற தலைப்புகளில் இருந்தன. வாசித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தது இன்றும் பசுமையாக நினைவிலுள்ளது. பின்னர் வானதி பதிப்பகத்தின் வெளியீடாக இரு தொகுதிகள் வெளிவந்தன. 'மாமியார் கதைகள்', 'மாமியாரும் புதையலும்' என்னும் தலைப்புகளில் வெளியாகின.

'மாமியாரும் புதையலும்' தொகுப்புக்கான தனது முன்னுரையில் பானுமதி ராமகிருஷ்ணா பின்வருமாறு கூறியிருப்பார்: 'தமிழிலும் , தெலுங்கிலும் இன்று மிகப்பிரபலமாக விளங்கிக்கொண்டிருக்கும் என்னுடைய மாமியார் கதைகளை நான் எழுதத் தூண்டுதலாக இருந்தவர் காலஞ்சென்ற எனது மாமியார் அவர்கள்தான்.....  என் மாமியாரும் நானும் நண்பர்களைப்போலவே பழகுவோம். அவரின் சில செயல்களிலிருந்தும் என்னைச் சுற்றியும் , எங்கள் வீட்டைச் சுற்றியும் நடந்த சிறு சிறு சம்பவங்களும்தான் நான் கற்பனையாக இக்கதைகளை எழுதத்தூண்டுதலாக இருந்தது'

அண்மையில் சந்திரா இரவீந்திரனின் 'மாமி சொன்ன கதைகள்' தொகுப்பு காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளியானதை அறிந்தபோது இத்தொகுப்பும் பானுமதி ராமகிருஷ்ணாவின் 'மாமியார் கதைக'ளைப் போலிருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். தொகுப்பு எனக்குக் கிடைத்தபோது அந்த எண்ணத்துடனேயே நூலைப் பிரித்தேன்.   பானுமதி ராமகிருஷ்ணா தனது மாமியாருடனான அனுபவங்களை வைத்து எழுதிய நகைச்சுவைப் புனைகதைகள் அவரது 'மாமியார் கதைகள்'. ஆனால் சந்திரா இரவீந்திரனின் 'மாமி சொன்ன கதைகள்' நகைச்சுவைப் புனைகதைகளல்ல. மாமியார் சொன்னவற்றிலிருந்து, எழுதிய குறிப்புகளிலிருந்து, அவருடனான  சந்திரா இரவீந்திரனின் சொந்த அனுபவங்களிலிருந்து எழுதப்பட்ட அவருடைய  கணவரின் தாயாரான மனோன்மணி மாமியாரின் வாழ்க்கை அனுபவங்களை விபரிக்கும் அபுனைவு.

         - எழுத்தாளர் சந்திரா இரவீந்திரன் -

இந்நூல் மனோன்மணி மாமியின் வாழ்க்கையை அவரது பால்ய பருவத்திலிருந்து , புகலிடத்தில் மறையும் வரையில் விபரிக்கிறது.  அவரது ஆரம்பக் கல்விப் பருவத்தின்போது அவர் மிகவும் சிறந்த மாணவியாகவிருந்திருக்கின்றார். படிப்பதில் மிகவும் நாட்டமுடையவராக, உடனுக்குடன் வீட்டு வேலைகளைச் செய்யும் மாணவியாக, ஒவ்வொரு நாளும் விருப்பத்துடன் பாடசாலை செல்பவராக இருந்திருக்கின்றார். ஆனால் அவரது படிப்புத் தொடராமல் போனதற்குக் காரணமாக அவரது உறவினர் ஒருவரும், குடும்பச்சூழலும் காரணமாகவிருந்திருக்கின்றன. அவர் மட்டும் அச்சமயம் தனது படிப்பைத் தொடர்ந்திருந்தால் , பின்னர் ஒன்பது குழந்தைகளுடன் , கணவரையிழந்து, தனியாகக் குடும்பப் பாரத்தைச் சுமந்தபோது இருப்பு இலகுவாகவிருந்திருக்கும். இதனை நான் என் சொந்த அனுபவத்திலிருந்து கூறுகின்றேன். என் அம்மாவின் அரசாங்க ஆசிரியத் தொழில்தான் எங்களை எப்பொழுதும் காப்பாற்றி வந்தது. அதுபோல் மனோன்மணி அவர்களும் நிச்சயம் ஆசிரியையாக விளங்கியிருப்பார். அவரது இளமைக்காலக் கனவுகள் சிதைந்தது சிறிது துன்பத்தைத்தந்தாலும், அவர் தனக்குப் பிடித்த ஒருவரைக் காதலித்து, மணம் செய்து, குழந்தைகளைப்பெற்று நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றார். குழந்தைகள் அனைவரும் நல்ல நிலைக்கு வர  வாழ்ந்திருக்கின்றார். தன் மருமகளுடன் தோழியாக, தாயாக விளங்கி இந்நூல் இன்று வெளியாகும் அளவுக்குத் தாக்கத்தினைச் செலுத்தியிருக்கின்றார். இருப்பின் சவால்களையெல்லாம் உள்வாங்கி, வாழ்க்கையில் உயர்ந்திருக்கின்றார். இன்று இந்நூல் மூலம் தமிழ் இலக்கியத்திலும் நிலைத்து நிற்கின்றார்.  இந்த அதிருஷ்டம்  எத்தனை மாமிமாருக்குக் கிட்டும்? இது மகிழ்ச்சியளிப்பது.

மனோன்மணி மாமியின் வாழ்க்கை அனுபவங்களை விபரிக்கும் இந்நூல் பல நாமறியாத விடயங்களை ஆவணப்படுத்தியுள்ளது. அவற்றில் முக்கியமான சில: அரிவரி படிக்கையில் மரப்பெட்டிக்குள் மணலிட்டு , அதிலெழுதிப் படிப்பது அக்கால நடைமுறையாக இருந்திருக்கிறது. முதலாம் வகுப்பிலிருந்துதான் சிலேட்டில் எழுதிப்படிப்பது ஆரம்பிக்கின்றது.  'அம்மா வாத்தியார்' என்றழைக்கப்படும் வாத்தியாரம்மா ஒருவர் 'ஒற்றைத் திருக்கல்' என்றழைக்கப்படும் மாட்டு வண்டியொன்றினைச் சொந்தமாக வைத்திருந்தார். அதனை ஓட்டிச் செல்லுவதற்கும் ஒருவரிருந்தார். அதில்தான் அவர் பாடசாலை சென்று திரும்புவார்.  அவ்விதம் பாடசாலை சென்று திரும்புகையில் வாசலில் பள்ளிக்குச் செல்வதற்காகக் காத்திருக்கும் சிறுமி மனோன்மணியையும் அழைத்துச் செல்வார்.

- மனோன்மணி மாமியார் -

அக்காலத்தில் அரசாங்க அறிவித்தல்களைப் பறையடித்து  ஒருவர் அறிவித்துச் செல்வார். அவரை 'மூப்பன்' என்றழைப்பார்கள். ஒருமுறை யப்பான்காரன் குண்டு போடப் போகிறானென்றும், பங்கர் வெட்டிப் பதுங்குவதற்குத்  தயாராகவிருக்கும்படி அவர் பறையடித்து அறிவித்துச் சென்றதையும், குடும்பத்தின் வறிய சூழல் காரணமாகக் கூலி கொடுத்து பங்கர்களை வெட்ட முடியாத நிலையில், சிறுமி மனோன்மணியை பக்கத்து வீட்டு வசதியான சரசக்கா குடும்பத்தினரின் பங்கரில் வைத்துப் பாதுகாக்கும்படி பெற்றோர் கேட்டதையும், அதற்குச் சரசக்கா குடும்பத்தினர் சம்மதித்ததையும் மனோன்மணி மாமி நினைவு கூர்கின்றார். ஆனால் எதிர்பார்த்தபடி யப்பான்காரன் குண்டு போடவில்லை. தொடர்ந்து வந்த மழைக்காலத்தில் பங்கர்கள் நிறைந்து , நுளம்புத்தொல்லை அதிகரித்து  விட்டதுதான் கண்ட பலன்.

இரண்டாம் உலக யுத்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஆபிரிக்க இராணுவவீரர்களும் வந்து பலாலியில் தங்கியிருந்திருக்கின்றார்கள் என்பதையும் நூல் பதிவு செய்கிறது. இவை தவிர பாடசாலையில் நிகழ்ந்த விழாக்கள்,  மாணவிகளின் விளையாட்டுக்கள், பாடசாலையில் நிலவிய தீண்டாமை வேறுபாடுகள் எனப் பல விடயங்களை நினைவு கூர்வதன் மூலம் மனோன்மணி மாமி ஆவணப்படுத்தியுள்ளார். இவ்விதமான சொந்த வாழ்க்கை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் ஒருவரது வாழ்க்கையுடன், அவ்வாழ்க்கை நிலவிய காலகட்டத்துச் சமூக, அரசியல் சூழலையும் ஆவணப்படுத்தும் தன்மை மிக்கவை.  சந்திரா  இரவீந்திரனின் 'மாமியார் சொன்ன கதைகள்' நூலும் அத்தகைய வரலாற்றுக் குறிப்புகளை உள்ளடக்கிய நூல்தான்.

இந்த நூலின் தலைப்பு 'மாமி சொன்ன கதைகள்' என இருப்பதில் ஒரு பொருள் மயக்கமுண்டு. இந்நூலிலிருப்பவை கதைகள் அல்ல, உண்மையான வாழ்க்கை அனுபவங்கள்.  இன்னுமொரு பொருத்தமான பெயர் வைத்திருக்கலாமென்று தோன்றுகின்றது.  சில தகவல்கள் வரலாற்றுக்குழப்பத்தைத்தருவன. ஓரிடத்தில் போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் மாறி மாறி ஆட்சி செய்ததாக வருகிறது.  மாவிட்டபுரக் கோவில் பற்றிய வரலாற்றுக்  குறிப்பில் நரியைப் பரியாக்கிய கதை அங்கு நடைபெற்றதாக மாமியார் கேள்விப்பட்டதாக வருகிறது. நரியைப் பரியாக்கிய கதை நடந்தது  மாணிக்கவாசகர் வாழ்க்கையிலென்றுதான் படித்திருக்கின்றேன்.  மாமியார் ஒரு வரலாற்றறிஞர் அல்லர். சில தகவல்களை அவர் அவ்விதமே கேட்டு நினைவில்  வைத்திருக்கக் கூடும். எனவே அவற்றைப் பெரிது படுத்தத்தேவையில்லை.

நூலுக்கான தன்னுரையில் சந்திரா இரவீந்திரன் பின்வருமாறு குறிப்பிடுவார்: 'என்னைப் பெற்றெடுக்காத என் தாய் போலிருந்தவர் என் மாமி. ..... மாமி பழகிய காலங்களில் எனக்கு அவவோடு கிடைத்த அனுபவங்களும், அவ எனக்குச் சொன்ன கதைகளும் இவை என்பதற்கும் அப்பால் ,ஒரு காலத்தின் , ஓரினத்தின், ஓரூரின் ,ஒரு சமூகத்தின், ஒரு கலாச்சாரத்தின் வாழ்வு இதற்குள் அடங்கிக் கிடக்கிறதென்றே நம்புகிறேன்.  இந்தக் கதைகளுக்குள் இருப்பது ஒரு பெண்ணின், ஒரு சிறுமியின் , ஒரு மனைவியின் ,ஒரு தாயின் அனுபவத்திலான வெறும் சொற்கள் அல்ல. அவர்களது கனவுகளும், ஆசைகளும், அலைச்சல்களும், தேவைகளும், ஏமாற்றங்களும், துக்கங்களும், சந்தோசங்களும் நிறைந்த , மீளபெற முடியாத ஓருலகம் என்றே நம்புகிறேன். இந்த உலகம் என்னை வியக்க வைத்தது. மெய்சிலிர்க்கவும், துயரப்படவும், ஆற்றாமை கொள்ளவும், கண்ணீர் சிந்தவும் வைத்தது.'  இதைவிட இந்நூலுக்குச் சிறந்ததொரு விமர்சனத்தை எழுத முடியாது.

நூலை மாமியாருக்கே சமர்ப்பணம் செய்திருக்கின்றார் சந்திரா இரவீந்திரன். அது பாராட்டப்பட வேண்டியதொரு விடயம்.

நூல்; மாமியார் சொன்ன கதைகள். ஆசிரியர் - சந்திரா இரவீந்திரன். பதிப்பகம் - காலச்சுவடு. முதற் பதிப்பு - டிசம்பர்  2022

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.