- கவிஞர் இளவாலை விஜயேந்திரனின் கிடைக்கக் கூடிய முழுக் கவிதைகளையும் 'எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?' எனும் தலைப்பில் தொகுத்து இன்று நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வெளியிடுகிறோம். காலச் சுவடும் கூடலும் இணைந்து இந் நூலை வெளியிட்டுள்ளன.  இதற்காக நுஃமான் அவர்கள் எழுதிய முன்னுரையை நன்றியுடன் இங்கு பகிர்கிறேன். விஜயேந்திரனின் கவித்துவத்தை இந்த முன்னுரை பதிவு செய்துள்ளது. -  எழுத்தாளர் நா.சபேசன் -


இளவாலை விஜயேந்திரன் கவிதைகள்  - எம். ஏ. நுஃமான் -

1980களின் தொடக்கத்தில், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில், க.பொ.த. உயர் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் சிலர், ஒரு புதிய காற்றாக இலக்கிய உலகில் பிரவேசித்தார்கள். ‘புதுசு’ என்ற சஞ்சிகை ஒன்றையும் (1980–1987) வெளியிடத் தொடங்கினார்கள். இவர்கள் எல்லோரும் முளைக்கும்போதே, இடதுசாரிச் சார்புடையவர்கள். தோழர் விசுவானந்ததேவனின் தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியால் கவரப்பட்டவர்கள். அவர்களுள் ஒருவர்தான் இளவாலை விஜயேந்திரன்.

மகாஜனாவில் இருந்து ‘புதுசு’மூலம் வெளி உலகுக்கு அறிமுகமான கவிஞர்களுள், விஜயேந்திரனின் சக பயணிகளான பாலசூரியன், சபேசன், ரவி, ஊர்வசி, ஔவை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 1970களின் பிற்பகுதியிலும் 80களிலும், யாழ்ப்பாணத்திலிருந்து கவிதைத் துறைக்குள் வந்தவர்களை, போரின் புதல்வர்கள் என்று நான் சொல்வதுண்டு. இனமுரண்பாடும், விடுதலை இயக்கங்களின் எழுச்சியும், போரும், வன்முறையும் இவர்களைக் கவிதைக்குள் இழுத்துவந்தன. இவர்களுடைய கவிதைகள் பெரும்பாலும் இவற்றுக்கான இலக்கிய எதிர்வினைகளாகவே அமைந்தன. தமிழ்த் தேசியக் கருத்துநிலையும், மார்க்சிய இடதுசாரி இலட்சியங்களும், வெவ்வேறு அளவில் இவர்களது கவிதைகளில் தொனிப்பொருளாகக் கலந்திருக்கக் காணலாம். இவர்கள் யாரும் ஏராளமாகக் கவிதைகள் எழுதிக் குவித்தவர்கள் அல்ல. ஆனால், கணிசமான எண்ணிக்கையில் நல்ல கவிதைகள் எழுதியிருக்கிறார்கள்.

பொதுப்படையான இச்சிறிய அறிமுகத்தோடு, விஜயேந்திரன் கவிதைகளைப் பற்றிப் பார்க்கலாம். கடந்த சுமார் 40 ஆண்டுகளில், விஜயேந்திரன் நூற்றுக்குக் குறைவான கவிதைகள்தான் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவருடைய முதலாவது கவிதைத் தொகுதி நிறமற்றுப் போன கனவுகள், மிகவும் காலம் தாழ்த்தி 1999இல் வெளிவந்தது. 1987 முதல் 1992 வரை அவர் எழுதிய கவிதைகளுள், 53 கவிதைகள் அத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அதில் இடம்பெறாத அவருடைய ஆரம்பகாலக் கவிதைகளும், பிற்காலத்தில் எழுதிய சில கவிதைகளுமாக, 33 கவிதைகளும், சில இசைப் பாடல்களும் சேர்க்கப்பட்ட, விஜயேந்திரன் கவிதைகளின் ஒரு முழுத் தொகுப்பாக, இத்தொகுப்பு இப்போது வெளிவருகின்றது. காலம் தாழ்த்தியேனும், இவற்றைத் தேடித் தொகுத்துக் கரிசனையுடன் வெளியிடும், விஜயேந்திரனின் நண்பர்கள், நமது நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியவர்கள்.

  -   கவிஞர் இளவாலை விஜயேந்திரன்  -

1980இக்குப் பிந்திய ஈழத்துக் கவிதைகள், பெரும்பாலும் அரசியல் கவிதைகள்தான். வன்முறை அரசியலின் எதிர்வினையாக அமைந்த கவிதைகள். யுத்தத்தின் குரூர வடுக்களைச் சுமந்த கவிதைகள். அடக்குமுறை, கொலை, கடத்தல், காணாமற்போதல், சிறை, சித்திரவதை, துப்பாக்கி, கண்ணிவெடி, எறிகணை, குண்டுவீச்சு, புலப்பெயர்வு, அகதி வாழ்க்கை என்பவற்றைப் பேசும் கவிதைகள். விஜயேந்திரனின் பெரும்பாலான கவிதைகள் இவற்றைத்தான் பேசுகின்றன.

நேற்றும் தலை உயர்த்தி
நடந்த தெருக்கள்தான்
இப்போது நெஞ்சிடிக்க
எவனெவனோ
கைகொண்டு கழுத்தை நெரிக்கும் கனவுகள்

இது 1980இல் அவர் எழுதிய ‘சுதந்திர நாட்டின் பிரஜைகள்’ என்ற கவிதையின் சில வரிகள். நெஞ்சை அதிரவைக்கும் வன்முறைக் கனவுகள் அன்று முகிழத் தொடங்கிய யதார்த்தத்தின் படிமமாக வெளிப்படுகின்றது இக்கவிதையில். 1990இல் விஜயேந்திரன் எழுதிய ‘நிறமற்றுப் போன கனவுகள்’, அடுத்த பத்தாண்டு காலம் நாம் அனுபவித்த வன்முறையின், சிந்திய குருதியின் மொத்த அறுவடை எனலாம். இது அன்று தென்னிலங்கையில் அரசுக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் நிலவிய மோதலைப் பேசுகின்றது. எனினும், நாடு முழுவதும் நிலவிய வன்முறையின் கூட்டுப் படிமமாக இதைக் கருதுவதில் பிழையில்லை. ‘நிறமற்றுப் போன கனவுகள்’ என்ற படிமமே பல அர்த்தங்களைக் கொண்டிருப்பதை நாம் உணரலாம். விஜயேந்திரனின் மிகச் சிறந்த கவிதைகளுள் இதுவும் ஒன்று. அதை நான் இங்கு முழுமையாகத் தருகிறேன்.

மாலை
நெடுநேரம் நடந்து திரிந்தலுத்துக்
கட்டிலில் வீழ்கையில்
நடு நிசி

நாசமாய்ப்போன கனவுகள்
புத்தரின் பாதங்களில்
யாரோ
செவ்விரத்தம் பூ வைக்கிறார்கள்

பள்ளி நாட்களில்
எனக்குச் சிநேகமான
அழகிய வஜிராவின் முகத்தில்
கண்ணிர் வடிகிறது குருதியாய்
அவளிடமிருந்து வெள்ளலரியை
யாரோ பறிக்கிறார்கள்
ஓலமிட்டுக் கிளர்ந்தெழவும்
அவளது வாயை மூடுகின்றன
முரட்டுத் துப்பாக்கிகள்

இறந்துபோன மனிதர்கள்
துப்பாகிகளோடு திரிகிறார்கள்

மாவலியில் மூங்கில்
குருதி நீரை முத்தமிட்டு
முகம் சுளிக்கிறது

செத்துப்போன எல்லோரும்
“இயற்கை மரணம்”
எய்தியதாகச்
சான்றிதழில்
ஒப்பமிடுகிறார்கள்

அழுதுகொண்டிருந்த வஜிரா
திடீரெனச் சிரிக்கிறாள்

கனவு அறுபடச்
சற்று முன்பாய்த்
தெளிவாகத் தெரிகிறது
அவளது கையிலும்
துப்பாக்கி

விஜயேந்திரன் துப்பாக்கியின் ஆதரவாளன் அல்ல. இடதுசாரிகள், மார்க்சிய அதரவாளர்கள் என்ற வகையில், துப்பாக்கிபற்றிப் பலருக்கும் இருந்த கனவுகள், துப்பாக்கி உண்மையில் வெடிக்கத் தொடங்கிய பின்னர் நிறமற்றுப்போயின. ‘நானும் எனது துப்பாக்கியும்’ என்ற தலைப்பில், விஜயேந்திரன் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். தன்மையில் சொல்லப்பட்டது எனினும், துப்பாக்கி தூக்கியவரைப் பற்றிய ஒரு ஆழமான கிண்டல்தான் அது.

எனது இருப்பை
அங்கீகரியாதவன்
எதிரியே ஆவான்
எவர்க்கும் அதுவே பொதுவிதி
சரி
ஆகவே சுடலாம்

கோட்பாடுகளில்
குழம்பியிருந்தால்
தூசு படிந்துபோம்
துப்பாக்கி

செத்துப்போனவர்களின் சம்பாசனை இப்படித் தொடங்குகின்றது:

உனது கையில்
இருந்தது துப்பாக்கி
எனது கையிலும்
இருந்தது துப்பாக்கி

நீ சுட்டு
நான் சாக
நான் சுட்டு
நீ சாக
நேர்ந்தவை மரணங்கள்

இந்த மரணங்கள் ஏன் நிகழ்ந்தன? அது யாருக்கும் தெரியாது என்கிறார் கவிஞர்.
உன்னை நான்
சுட்டதற்கும்
என்னை நீ
சுட்டதற்கும்
காரணங்கள்
எமெக்கென்றால் தெரியாது

வன்முறையின் இந்த அபத்தத்தைத் தன் கவிதைகளில் பரவலாகப் பதிவுசெய்திருக்கிறார் கவிஞர். ‘மறந்திடுதல்’ என்ற தலைப்பிலும் இத்தொகுப்பில் ஒரு கவிதை உண்டு. இலக்கற்றுப்போன போராட்டத்தை, மறதிக் குழப்பத்தால் நையாண்டிசெய்வது அதன் நோக்கமாய் இருக்கலாம். கவிதை இப்படித்தான் முடிகிறது:

இன்னும்
எங்களது பெடியள்
துப்பாக்கி தூக்கியது
எதுக்கென்றும் நான் மறந்தேன்

‘சொல்லப்படாத ஒரு செய்தி’ 1985இல் எழுதப்பட்ட கவிதை. புலிகளின் அனுராதபுரப் படுகொலைக்கு எதிரான கவிதை என்று நினைக்கிறேன். 146 அப்பாவிச் சிங்களவர்கள் அன்று படுகொலை செய்யப்பட்டார்கள். இக்கவிதையிலும் துப்பாக்கிக்கு எதிரான கவிஞரின் குரலைக் கேட்கிறோம்.

எந்தக் கங்கையிலே
இந்தக் கைகளைக் கழுவுவது? …
எல்லோரும் தலைகளைக் குனிவோம்
தொலைவில்
நூறு வீடுகளில் அழுகைகளில்
வானை எட்டுகிற ஓலத்தில்
விம்மி வெடிக்கிற கண்ணீர்த்துளிகளில்
எமது துயரத்தைப்
பாதி கலக்கவைப்போம்

அந்தக் கவிதையின் இவ்வாறு முடிகிறது:

வெறியில் திரியும்
ஒவ்வொரு முகத்திலும்
காறி உமிழ்வோம்
மண்ணை மனிதனைவிட
மேலாகிவிட்ட துவக்குகளை
வீசியெறிவோம் கடலுக்குள்

நாங்கள்
பகலுக்காய்க் காத்திருக்கிறோம்

இவ்வாறு வன்முறைச் சூழல்கள் எழுப்பும் மனநெரிசல்களை, உணர்வலைகளை, மனித மீட்சிக்கான ஏக்கத்தை விஜயேந்திரன் கவிதைகளில் பரக்கக் காணலாம். மூடப்படாத மலை முகடுகள், ஆண்ட பரம்பரை, கோடை இரவு, ஒரு கவிதை, இறப்பது எப்படி, இலக்கத்து மரணங்கள், மீண்டும் வாழுதல், மறுபடி எழல், இன்னும் வளராத பெரியவர்களுக்கு, மண் வாசம், மனக்கணக்கும் பிணக்கணக்கும், காணாமற்போன சிநேகிதிக்கு எழுதியது, கனவிலும் தொடர்வது, கேள்விகளைக் கேட்காதே முதலிய இன்னும் பல கவிதைகளை, நான் இங்கு சுட்டிக்காட்டலாம். இவையெல்லாம் யுத்தத்தின் பல பரிமாணங்களை, அதன் குரூரத்தை, அதன் வலியைப் பேசுபவை. அதற்குள் அமுங்கி அழிந்துவிடாது, மனிதம் முகிழ்த்து எழவேண்டும் என்ற வேட்கையை நமக்குள் எழுப்புபவை. அவ்வகையில் ‘மீண்டும் வாழுதல்’ என்ற கவிதை பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். தோழர் விசுவானந்ததேவனின் கொலைபற்றி நினைவுகூருகின்றது அக்கவிதை. “துப்பாக்கிகள் மட்டும் பேசித்திரிந்த எமது மண்ணிலே தோழமையோடு” எழுந்த குரல், கடலில் மூழ்கடிக்கப்பட்ட துயரத்தைப் பேசும் அக்கவிதை,

எனது தேசம்
கண்கள் பிடுங்கப்பட்டுக்
காட்டில் அலைக்கழிக்கப்பட்டாலும்
இன்னமும்
உயிர்த்தெழுதல் பற்றி
நம்பிக்கையோடிருக்கிறது
என்ற நம்பிக்கைக் குரலையும் எழுப்புகின்றது.

‘இனிவரும் முளைகள்’ என்ற கவிதையில் நமது எதிர்காலச் சந்ததியினருக்குக் கவிஞர் சொல்லும் செய்தியுடன் இக்குறிப்பை முடிக்கிறேன்.

மின்னலாய் வெடிக்கிற
துவக்கினை
மிருகமாய் வதைக்கிற படையினை

மண்ணினை மீட்கிற கனவிலே
மற்றவர் கால்களால்
மிதித்ததை
எம்மரும் தோழர்கள்
இரத்தத்தில்
எவரெவர் சுகம்பெற நினைத்ததை
இவையெலாம்
அவரிடம் சொல்லுவோம்
தடைகளை உடைக்கிற வலுவினை
எதனையும் எதிர்க்கிற துணிவினைக்
கொண்டதாய் அவர்களை
மாற்றுவோம்.

உள்ளடக்கத்தில் நேர்மையும், உருவத்தில் எளிமையும் விஜயேந்திரனின் அழகியல் எனலாம். தமிழ்த் தேசியத்தின் சுமையில், அவருடைய நேர்மை அமுங்கிப் போய்விடவில்லை. அநீதிக்கு எதிரான, நீதிக்கான, மனித விடுதலைக்கான, மனித மேன்மைக்கான குரலாக, அவருடைய கவிதைகள் ஒலிக்கின்றன. இதில் சொல் விளையாட்டுக்கு இடம் இல்லை. வார்த்தைகளில் அலங்காரம் இல்லை. இயல்பான, நேரடியான படிமங்களால் அவர் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். அவை நம்முள் ஆழமான தாக்கத்தைச் செலுத்த வல்லவை. இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் எல்லாம், நாம் கடந்துவந்த வலிமிகுந்த காலத்தின் பதிவுகள். சமகால ஈழத்துக் கவிதையில், குறிப்பாக அரசியல் கவிதையில், விஜயேந்திரனின் இடத்தை இத்தொகுப்பு உறுதிப்படுத்துகின்றது என்பதை நான் அழுத்திக் கூறலாம்.