ஈழத்துப் படைப்பாளிகளில் மிக நீண்டகாலமாகவும், தொடர்ச்சியாகவும் இயங்கிக்கொண்டிருப்பவர்கள் அரிது.  மிக அருமையான படைப்பிலக்கியங்களை ஆக்கிய பலர் இள வயதிலேயே மரணித்துள்ளார்கள்.  இன்னும் பலர் மிகச் சில படைப்புகளுடன் தம் எழுத்துகளை மட்டுப்படுத்திக்கொண்டுவிட்டார்கள்.  இந்த நிலையில், நீண்டகாலமாகவும், தொடர்ச்சியாகவும் எழுதிக்கொண்டிருக்கின்ற காத்திரமான படைப்பாளிகளுள் ஒருவர் தேவகாந்தன்.

எங்கள் குடும்பம் அடிஅடியாக தமிழ்ப் புலவர் பரம்பரையில் வந்தது என்று என் தாயார் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்று மின்னம்பலத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தேவகாந்தன் குறிப்பிட்டிருக்கின்றார்.  தனது எழுத்துலகப் பிரவேசம் குறித்த கேள்விக்கு “எனது தொடக்கம் புதுமைப்பித்தன் எழுத்துக்களோடேயே ஆரம்பித்தது என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். கலித்தொகைக் காட்சிகள் போன்ற இலக்கியக் கட்டுரைகள் எழுதிவந்த என்னை இத்தகு நவீன இலக்கிய வாசிப்பும், பத்திரிகைத் துறைப் பிரவேசமுமே எழுத்தாளன் ஆக்கிற்று என்றால் தப்பில்லை” என்று பதிலளிக்கின்றார் தேவகாந்தன்.  தமிழில் எழுதும் ஒருவருக்கு பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயம் என்பது பெரும் வரம்.  அது எழுத்தினை செழுமைப்படுத்துவதுடன் ஆழமானதாகவும் ஆக்கும்.  தேவகாந்தன் சங்க இலக்கியம் பயிலும் நோக்குடன் பாலபண்டிதருக்குப் படித்திருக்கின்றார்.  பின்னர் அப்போது யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தில் இணைந்து சமஸ்கிருதமும் கற்றிருக்கின்றார்.  சென்ற வருடம் அளவில் மகாபாரதம் தொடர்பாக முகநூலில் நடந்த உரையாடல் ஒன்றில் ரஞ்சகுமார் அவர்கள் தேவகாந்தன் குறித்துக் அவரது சமஸ்கிருத பயிற்சியையும் பற்றிக் குறிப்பிட்டிருந்ததுடன், மகாபாரதத்தை விரிவாகப் பேசக்கூடியவர் தேவகாந்தன் என்றும் குறிப்பிட்டிருந்தார். மறுநாள் தேவகாந்தனிடமே அதுபற்றி நேரடியாகவே கேட்டேன், அப்போது அவர் கூறிய தகவல்களூடாக தேவகாந்தனை இன்னும் ஒரு படி நெருக்கமாக அறியமுடிந்தது.

                              -  எழுத்தாளர் தேவகாந்தன் -

தன்னை ஒரு எழுத்தாளன் என்று வரித்துக் கொண்ட தேவகாந்தன், தனக்குரிய ஆதர்சமாக புதுமைப்பித்தனை வரித்துக்கொண்டிருக்கின்றார்.   மட்டுமல்ல, ஒரு எழுத்தாளன் ஆவதற்கான எல்லாவிதத் தயார்படுத்தல்களையும் செய்தும் இருக்கின்றார்.  அதன் ஒரு பகுதியாகவே பழந்தமிழ் இலக்கியம் பயின்றதும், காவிய மரபை அறிந்துகொள்ள சமஸ்கிருதம் பயின்றதுமாக அவர் தேர்ந்திருக்கின்றார்.  காளிதாசனின் மேக சந்தேகம், சாகுந்தலம் போன்றவற்றை அவர் சமஸ்கிருதத்திலேயே வாசித்து இருக்கின்றார்.  அது போலவே அவர் பின்நாட்களில் நவீன இலக்கியக் கோட்பாடுகள் பற்றியும் தொடர்ச்சியாக வாசித்து வந்திருக்கின்றார்.  அதேநேரம் அவருக்கு தமிழகத்து, ஈழத்து இலக்கிய விமர்சன முறைமைகள் அவற்றின் செல்நெறிகள் பற்றியும் தொடர்ச்சியான உசாவல்கள் இருந்திருக்கின்றன.  இவை எல்லாவற்றையும் தனது படைப்பிலக்கியங்கள் ஊடாக தொடர்ச்சியாக வெளிக்காட்டியும் வந்துள்ளார்.

இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார் தேவகாந்தன். ஆயினும் அவற்றில் அரைவாசிக்கு மேற்பட்டவற்றின் பிரதிகள் தற்போது அவரிடம் கூட இல்லை என்று அறிய முடிகின்றது.  அத்துடன் திசைகள், எழுதாத சரித்திரங்கள் என்கிற குறுநாவல் தொகுப்புகளையும் லங்காபுரம், யுத்தத்தின் முதலாம் அதிகாரம், விதி. நிலாச் சமுத்திரம், உயிர்ப் பயணம், கதாகாலம், கனவுச் சிறை ஆகிய நாவல்களையும் வெளியிட்டுள்ளார்.  தாய்வீடு இதழில் அவர் தொடராக எழுதிய கலாபன் கதையின் முதலாம் பாகம் நிறைவுற்று தற்போது இரண்டாம் பாகத்தை ஆரம்பித்துள்ளார்.  நதி என்கிற நாவலும் தாய்வீட்டில் தொடராக வந்து நிறைவுற்றுள்ளது.  அண்மையில் இந்தியாவிற்கு அவர் சென்றிருந்த காலப்பகுதியில் கிடைத்த நேரத்திலே இன்னும் ஒரு நாவலையும் எழுதி முடித்திருப்பதாக தனிப்பட்ட உரையாடல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

தேவகாந்தனின் லங்காபுரமும், கதாகாலமும் முறையே இராமாயணத்தினதும் மகாபாரதத்தினதும் மறுவாசிப்புகள் ஆகும்.  மகாபாரதம் பற்றிய தேடல் உள்ளவர்கள் அது நீண்டகாலமாக கதை சொல்லிகள் ஊடாகவே ஜெயக்கதைகளாக காவப்பட்டுவந்தது என்பதை அறிந்திருப்பர்.  தேவகாந்தனின் கதாகாலம் அதனை உள்வாங்கி கதைசொல்லிகள் ஊடாக மகாபாரதத்தைச் சொல்கின்றது.  தேவகாந்தனின் மீள்வாசிப்பில் கதை சொல்லிகள் கதையை வாழ்வியல் யதார்த்ததுடன் அணுக்கமாக, அதன் கதை மாந்தர்களை எல்லா மனிதர்களைப் போலவே நல்ல, தீய குணங்கள் நிரம்பியவர்களாக சொல்லிச் செல்லுகின்றார். அதைவிட முக்கியமாக, பாரதக் கதை நடப்பதில் முக்கிய பங்கெடுத்த, ஆனால் மற்றைய பிரதிகளில் பெரிதும் பேசப் படாத கதை மாந்தர்களான சத்தியவதி (மச்ச கந்தி), அம்பை (சிகண்டி), காந்தாரி, குந்தி, திரௌபதி, சகாதேவன், சுபத்திரை போன்றவர்களின் உணர்வுகள் பெரிதும் பேசப்படுகின்றன. பாரதக் கதையை கண்ணன் நடத்தினான் என்று கண்ணனை தெய்வமாக்கி இதிகாசங்கள் சொல்ல, பாரதக் கதையை அத்தினாபுரத்துப் பெண்களே நடாத்தினார்கள் என்றும் கண்ணன் தந்திரம் மிகுந்த, அர்ச்சுணனின் நண்பன் மாத்திரமே என்று சொல்லி கதையை கொண்டு செல்கின்றார் தேவகாந்தன்.  அந்த  வகையில் தமிழில் வந்த முக்கியமாக நாவல்களில் ஒன்றாகவே தேவகாந்தனின் கதாகாலத்தைக் கருதுகின்றேன்.  இதுபோலவே லங்காபுரமும்.  எமக்குச் சொல்லித்தரப்பட்ட இராமாயணத்தினைக் கேட்டு மனதில் பதிய வைத்துக்கொண்டு நாம் லங்காபுரத்தை அணுகும்போது அது செவிட்டில் அறைவதுபோல சில விடயங்களை இன்னோர் விதமாகச் சொல்வதுபோலத் தோன்றும்.  சற்றே யோசித்துப் பார்க்கையில் அவ்விதம் தான் நடந்திருக்கலோமோ என்றும் தோன்றும்.

இந்த நீண்ட பீடிகையை நான் சொல்ல முக்கிய காரணம், கனவுச்சிறை பற்றிப் பேசத் தொடங்குமுன்னர், அதற்கான தேவகாந்தனின் தயார்ப்படுத்தலும், கள ஆய்வும் எப்படி இருந்திருக்கும் என்பதைப் பற்றி ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தவே.  இவற்றின் எல்லா வெளிப்பாடுகளையும் கனவுச்சிறையில் காணலாம்.  கனவுச் சிறைநாவலை தேவகாந்தன் நோய்த் தாக்குதல் ஒன்றிற்கு உள்ளாகி கட்டாய ஓய்வு வழங்கப்பட்டிருந்த காலப்பகுதியில் தொடர்ச்சியான வாசிப்புகளாலும் ஊர் நினைவுகளின் அசைபோடல்களாலும் எழுதத் தொடங்கி கையெழுத்துப் பிரதியாக 2000 பக்கம் அளவில் எழுதி 1997ல் நிறைவு செய்கின்றார்.  ஆயினும் பல்வேறு காரணங்களால் அவர் அப்போது தங்கியிருந்த தமிழகத்துப் பதிப்பகங்களால் அது வெளியாவது தடைபெற்றுப் போக, நாவல் எப்படியாகினும் வெளியாகவேண்டும் என்ற நோக்கில் அதனைப் பாகம் பாகமாகவேனும் வெளியிடும் முடிவிற்கு வருகின்றார்.  இவ்வாறாக கனவுச்சிறை பெரும் போராட்டங்களுக்கு இடையில் திருப்படையாட்சி, வினாக்காலம், அக்னி திரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய காலம் என்று ஐந்து பாகங்களாக வெளியாகின்றது.  இந்த ஐந்து பிரதிகளும் தம்மளவில் தனித் தனியாக நாவல்களாகவும் முழுமை அடைந்தனவாக அமைவது இன்னுமோர் சிறப்பு.  இவை 1998 டிசம்பர் முதல் 2001 வரையான காலப்பகுதிகளில் வெளியாகியிருக்கின்றன.  ஆயினும் முழுப்பிரதியும் 1997லேயே முழுமை பெற்றிருக்கின்றது.

ஆயினும் பல்வேறு வாசகர்களால் இந்த ஐந்து பாகங்களையும் பெற்றுக்கொள்வதில் இருக்கின்ற சிரமங்கள் தொடர்ச்சியாகப் பேசப்படுகின்றது.  ஒருமுறை ஏதோ ஒரு நிகழ்வு நிறைவடைந்த பின்னர் என்னையும், தேவகாந்தனையும் அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது க. நவம் அவர்களும் இந்த நடைமுறைப் பிரச்சனை பற்றி விளக்கிக் கூறி கனவுச்சிறை ஒற்றைத் தொகுப்பாக வெளிவரவேண்டியதன் அவசியத்தை தேவகாந்தனிடம் வலியுறுத்திக் கூறிக்கொண்டிருந்தார்.  அதன் முக்கியத்தை சேரனும் தன்னிடம் கூறியதாக க. நவம் அவர்கள் சொன்னதாக நினைவு.

வினாக்காலம் நாவலுக்கு எழுதிய விமர்சனத்தில் யமுனா ராஜேந்திரனும், “கனவுச்சிறை முதலாம் பாகத்துக்கும் இறுதிப் பாகத்துக்குமான பதிப்புக் காலஇடைவெளி நான்கு ஆண்டுகள். இவருடைய நாவலை முழுமையாக வாசிக்கலாம் என்று நான் தேடியபோது ஐந்து பாகங்களையும் ஒன்றாகத் திரட்டுவது என்பது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. தேவகாந்தனின் கனவுச் சிறை பரவலாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படாததற்கு இதுவும் காரணமாக இருக்கும் எனவே நினைக்கிறேன். நாவல் வெளியாகி பதின்மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கனவுச்சிறை நாவலின் ஐந்து பாகங்களையும் சேர்த்து ஒரு முழுமையான பதிப்புக் கொண்டுவர வேண்டியதன் தேவையை இப்போது நான் வலியுறுத்த விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்.  ரஃபேல் அவர்களும் இதற்கான சில முன்னெடுப்புகளைச் செய்ததாக நினைவில் உள்ளது.  இப்படியாக பலரின் கனவும் கைகூடும் நிகழ்வாக கனவுச் சிறை வெளியீடு அமைந்துள்ளது.

கனவுச்சிறை ஈழத்தமிழரின் சமகால அரசியலின் தெறிப்புகளைக் கூறும் மிக முக்கியமான வரலாற்று நாவல் என்பதை எனது வாசிப்புகளின் ஊடாக அழுத்தமாகக் கூற விரும்புகின்றேன்.  இதுவரை ஈழப்போராட்டத்தைச் சித்திகரித்த அனேக நாவல்கள் போராளிகளினதும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களினதும் கோணத்தினாலானதுமாக இருக்க இந்நாவல், போர் தின்ற ஒரு கிராமத்தின் கதையைக் கூறுகின்றது,  கிராமம் என்பது அதன் மக்களின் உயிர்ப்பினாலானது என்பதால், அவர்களின் கதையையும் காவுகின்றது.  இலங்கையில் இருந்த இன முரண்பாடு, இனத் துவேசம், அதன் வெளிப்பாடான இனப்படுகொலை, போராட்டம், போர் என்று விரியும் போதே இவற்றினூடாக அப்போது இருந்த அரசியல்வாதிகளின் கருத்து நிலைகள், அடுத்த தலைமுறையினரின் தாக்கம் செலுத்திய கருத்துநிலைகள், அவற்றின் விளைவாக அவர்கள் எடுத்த அரசியல் நிலைப்பாடுகளும் அவற்றின் வெளிப்பாடுகளும், இவையெல்லாம் அவர்களை எங்கே கொண்டு சேர்த்தன என்றெல்லாம் கூற முற்படுகின்றது கனவுச் சிறை.  அதை வெற்றிகரமாகச் செய்தும் முடிக்கின்றது.

ஒடுக்குமுறை ஒன்றுக்கு எதிராகப் போராடுவது என்பதே எப்போதும் முற்போக்கானது தான்.  நாவலில், நயினாதீவில் இருந்த மக்கள், குறிப்பாக இளைஞர்கள் எவ்விதம் தமிழர்கள் மீதான இன ஒடுக்குமுறைக்கு எதிர்வினையாற்றினார்கள், எவ்விதம் எதிர்கொண்டார்கள் என்பது மூலம் 80கள் முதலான ஆயுதப் போராட்டத்தின் வரலாறு சொல்லப்படுகின்றது.  இன விடுதலை என்ற உயரிய நோக்குடன் போராடப் புறப்பட்டவர்கள் பின் எவ்வாறு திசை மாறிப் போனார்கள், எவ்வாறு நண்பர்களாக இருந்தவர்கள் பின்னர் வெவ்வேறு கருத்து நிலைகளை எடுத்துகொண்டார்கள் இருத்தலுக்கும் இலட்சியத்துக்கும் இடையில் எவ்விதம் மாட்டிக்கொண்டார்கள் என்பவையெல்லாம் முதல் மூன்று பாகங்களில் சொல்லப்படுகின்றன.  நான்காம் பாகம் அகதி வாழ்வை அல்லது அலைந்துழல்வையும்,  அத்துடன் வெளிநாடுகளில் அலைந்துழல் வாழ்வு, அகதிகளாக வெளிநாடு செல்வது, அதன் நடைமுறைச் சிக்கல்கள், அவ்விதம் செல்லும்போது ஏமாற்றப்படுவது என 80 களுக்குப் பின்னரான ஈழத்தமிழர்களின் வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களையும் இந்த நாவல் உள்ளடக்கி இருக்கின்றது.

அனேகம், அவர் எதிர்பார்த்ததுவும் அதுவாகவே இருக்கும் என்று நம்புகின்றேன்.  சொல்ல விழைந்ததை முழுமையான கலை அழகுடன் சொல்லுவதிலும் வெற்றிபெற்றிருக்கின்றார் தேவகாந்தன்.  நேரடியான கதை சொல்லலே பின்பற்றப்பட்டிருந்தாலும், கதை முன்னும் பின்னுமாக அலைந்தே செல்கின்றது.  அதேவிதம் பல்வேறு தத்துவ, அரசியல் உரையாடல்களையும் கவனமாக கலையழகைக் குலைக்காமல் சேர்த்திருக்கின்றார் தேவகாந்தன்.  வாசிப்பின் மீது ஆர்வம் உள்ளவர்கள் அனைவருக்கும் இந்நாவல் நல்லதோர் தேர்வாக அமையும் என்பது நம்பிக்கை.

கனவுச்சிறை
ஆசிரியர் : தேவகாந்தன்
காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள் 1000
முதற்பதிப்பு : டிசம்பர் 2014

ரொரன்றோவில் இடம்பெற்ற கனவுச்சிறை வெளியீட்டு நிகழ்வில் வாசிக்கப்பட்ட அறிமுக உரை

நன்றி: அருண்மொழிவர்மன் பக்கங்கள்