2022இல், மகுடம் வெளியீடாக வெளிவந்திருந்த ‘ஒன்றே வேறே’ என்ற என் சிறுகதைத் தொகுதியின் பிரதிகளை எனக்கு அனுப்பும்போது, கிழக்கு மாகாணச் சாகித்தியப் பரிசை 2019இல் தனதாக்கிக்கொண்டிருந்த ‘பரசுராம பூமியின்’ பிரதியொன்றையும் அனுப்பிவைப்பீர்களா என மைக்கல் கொலின் அவர்களைக் கேட்டிருந்தேன். தொன்மங்களை மீளாய்வுக்குட்படுத்தும் படைப்பாக அது இருந்ததால் அதனை வாசிக்கவேண்டுமென்ற ஆவல் வந்திருந்தது. ஆனால், அந்தத் தொகுப்புப் பற்றிய என் வாசிப்புப் பகிர்வை எழுதவேண்டுமென்ற எண்ணம் காலஓட்டத்தில் கரைந்துபோயிருந்தது. தற்போது, மூன்று வருடங்களின்பின்பு அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வந்திருக்கும் நிலையில்தான் அந்த எண்ணத்தைச் செயலாக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

பாரதம், இராமயணம், விவிலியம் ஆகிய நூல்களின் சில கதாபாத்திரங்களை அல்லது சம்பவங்களை, கேள்விக்குள்ளாக்கும் கவிஞர், எழுத்தாளர், வெளியீட்டாளர் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருக்கும் மைக்கல் கொலின் அவர்களின் ஒன்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ‘வரம்’, ‘ஓர்மம்’, ‘ஞானம்’ ஆகிய மூன்று கதைகளும் என்னைக் கவர்ந்திருந்தன. மைக்கல் கொலின் அவர்களின் கவித்துவத்தைப் புலப்படுத்தும் அற்புதமான மொழியில், ‘வரம்’ என்ற கதை அகலிகைக்குப் புதுப்பரிமாணம் கொடுத்துள்ளது.

அகலிகை பற்றிப் பல கதைகளை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்திரனால் அவள் வன்புணர்வுக்குட்பட்டாள் எனக் கூறும் ‘அகலிகையும் அகல்யாவும்’ என்ற குறுங்காப்பியம், வன்புணர்வுக்குட்பட்டதால்தான் கெளதமர் அவளுக்குச் சாபவிமோசனம் கொடுத்தார் என்கிறது. ஆனால், ‘அகல்யா’ என்ற குறுங்காப்பியமோ, தன்னுடன் புணர்ந்தவன் யாரென்பது அகலிகைக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும், இருப்பினும், அதைப் பற்றி உலகம் என்ன பேசுமோ என்று கெளதமர் கவலைப்பட்டார் என்றும் கூறுகிறது. இந்த இரண்டு கருக்களினதும் அடிப்படையில் ‘சாபவிமோசனம்’, ‘அகலிகை’ என இரண்டு கதைகளை புதுமைப்பித்தன் அவர்கள் எழுதியிருக்கிறார். இந்திரன் தன் தவறை உணர்கிறான், மனத்தூய்மைதான் கற்பென அகலிகைக்குக் கெளதமர் ஆறுதல்சொல்கிறார் என்றவகையில், ‘அகலிகை’ என்ற கதையை அவர் 1934இல் எழுதியிருந்தது பாராட்டுதலுக்குரியது. சாபவிமோசனம் கிடைத்தும், பாவவிமோசனம் கிடைக்காதா என ஏங்குமொரு பரிதாபநிலையை 1943இல் எழுதிய ‘சாபவிமோசனம்,’ என்ற கதையில் அவர் காட்டியிருக்கிறார். அத்துடன், யாரைப் பார்த்தாலும் அகலிகைக்குச் சந்தேகம் வருகிறது என்றும், கெளதமரின் வார்த்தைகளுக்கும் இரட்டை அர்த்தம் இருக்குமாவென யோசிக்கிறாள் என்றும், கெளதமராலும் அவளுடன் முன்போலப் பழகமுடியவில்லை என்றும் தொடரும் அந்தக் கதை முடிவில், சீதையின் தீக்குளிப்புப் பற்றி அறிந்தவள், மீளவும் கல் ஆகிறாள் என நிறைவுகிறது.

ஆனால், மைக்கல் கொலின் அவர்களின் ‘வரம்’ என்ற கதை, அகலிகை மீளவும் கல் ஆக்கப்படுகிறாள், அவளுடன் சேர்ந்து கெளதமரும் கல் ஆகின்றார் என்ற பொருள்பட முடிந்திருக்கிறது. அசல் எது, நகல் எது என அறியாமல் அடைந்த சுகத்துக்காக உணர்ச்சியற்ற ஜடமாகப் போ எனச் சபித்த கெளதமர், மீளவும் உயிர்பெற்றவளைப் பார்த்து, நீ பட்ட துன்பம் போதும், வரமொன்று கேள் என்கிறார். பழைய நினைவுகள் அகலிகையைப் பரவசமாக்குகின்றன. “நாதா, இந்திரன் வேடம்கொண்டு என்னுடன் சுகித்திருக்க வேண்டும்,” என்கிறாள். கெளதமர் இந்திரன் வேடமிட்டிருந்தால், இந்திரனால் பரவசப்பட்ட அகலிகையால் அவருக்கு அதிக சுகத்தை கொடுக்க முடிந்திருக்கும். ஆனால், இந்திரனிடமிருந்து கிடைத்த பரவசத்தை இந்திரன் வேடமிட்டிருக்கும் கெளதமரிடமிருந்து அவள் எப்படிப் பெறமுடியும்? எனவே இங்கு அகலிகை கெளதமரைத் தண்டிப்பதாகத்தான் எனக்குத் தெரிகிறது.

“ஒற்றையடிப் பாதையின் நடுவே ஒரு கல், அது மனதின் சறுக்கல், வாழ்க்கை தந்த வழுக்கல். மாமுனியின் கோபக்கிறுக்கல், அதுவே சாபக் கருங்கல்லானது, என மிகச் சிறிய வசனங்களுடன் ஆரம்பமாகும் அந்தக் கதை எழுதப்பட்டிருக்கும் விதமும், அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொற்களும் அருமையாக உள்ளன. பாறை, கல் என இரு வேறு சொற்களால் ஒரு பொருளைக் குறிப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

பொருத்தமான தலையங்கத்துடனான ‘ஓர்மம்’ என்ற கதையில், ஊர்மிளையின் மனஓட்டங்களாக இருந்திருக்கக்கூடியவற்றை மைக்கல் கொலின் அவர்கள் ஆராய்ந்திருக்கிறார். ஊர்மிளையின் நிலைக்குத் தானும் காரணமென அவள்மேல் பரதனுக்குப் பச்சாதாபமும் வியாகுலமும் ஏற்படுவதாகக் காட்டியிருப்பது சிறப்பு. இலக்கியங்களில் தியாகத்தின் உருவாகப் பார்க்கப்படும் இலக்குமணனின் மனைவி ஊர்மிளையை, உணர்வுகள் கொண்ட தீர்க்கமான ஒரு பெண்ணாக இதில் அவர் வடித்திருக்கிறார். ஆரம்பத்தில், சங்க இலக்கியத்தில் காட்டப்படும் முல்லைத் திணைத் தலைவியின் ஏக்கத்தை ஒத்த ஆற்றாமையில் உழலும் அவள் பின்னர் தர்க்கரீதியாகச் சிந்திக்கின்றாள். இராமனுடன் காட்டுக்குப் போவது பற்றித் தன்னுடைய அபிப்பிராயம் எதையும் கணவர் கேட்கவில்லையே, அது காதலா, நீதியா என மனம்குமுறுகிறாள். கணவர் செய்வதை ஏற்றுக்கொண்டு, காத்திருப்பது தன் கடமை என வாழும் ஒரு சராசரிப் பெண்ணாக இல்லாமல், தன் உரிமைகளை உணர்ந்த ஒரு பெண்ணாக அவள் சிந்திப்பது மனத்தளவில் அவளை அவனிடமிருந்து விலக்கிவிடுகிறதெனக் கதை முடிகிறது. சேர்ந்திருக்கும் உறவுகளுடன் இணைந்தா தீர்மானங்களை மேற்கொள்கிறார்களென, உறவுகளில் இருக்கும் அத்தனைபேரும் தங்களைத் தாங்களே கேட்டுப்பார்க்கக்கூடிய கேள்வி இதுவெனலாம்.

ஞானம் தேடிப் புறப்பட்ட சித்தார்த்தன் தன் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதைச் சொல்கிறது ‘ஞானம்’ என்ற கதை. நடுச்சாமத்தில் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறிய கணவரால் யசோதாவும் அவரது குழந்தையும் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதைச் சொல்லும் சில கவிதைகளும், கதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தக் கதை 12 மாதங்களாக உடலை வருத்திய பின்பும், வாழ்வின் சூட்சுமங்களை அறியமுடியாமல் குழம்பிப்போயிருந்த சித்தார்த்தன், “இவ்வளவுதானா வாழ்க்கை என்பதை இதுதான் வாழ்க்கை என உணரத் தலைப்படுங்கள்,” என்ற குடியானவனின் வார்த்தைகளால் விழிப்புற்று, வீடு திரும்புவதைச் சொல்கிறது.

வேறு சில கதைகள் நாட்டில் நிகழ்ந்த துயரமான சம்பவங்களைப் பற்றியும் அதன் காரணகர்த்தாக்கள் பற்றியும் பூடகங்களாகப் பேசுகின்றன. “நான் தப்பிச் சென்றால் என்னைத் தேடுவதை ஒரு காரணமாக வைத்தே மீண்டும் மீண்டும் என் மக்களையும் எனது கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்களையும் துன்புறுத்துவார்கள். நானாகவே மரணத்தைத் தழுவிக் கொண்டு எனது உடலை இல்லாது செய்தால் அவர்களது பழிவாங்கல் உணர்வுக்கு அது வடிகாலாக அமையாது. எனவே என் உடலை பழிதீர்க்கட்டும்” எனப் புதிய ஏற்பாட்டின் எழுதப்படாத பக்கங்கள்’ என்ற கதையிலும், “ஆக்கியதும் நானே அழித்ததும் நானே என்ற புன்னகையுடன் தனது விஸ்வரூபம் காட்டி நின்ற கண்ணன் மீது எங்கிருந்தோ பறந்து வந்த கல் ஒன்று தாக்கி அவனது நெற்றிப்பொட்டில் இருந்து குருதி வழிந்து கொண்டிருந்தது” என்று ‘குருசேத்திரம்’ என்ற கதையிலும் வருகின்றது.

இனி என்னைக் குழப்பிய விடயங்களைப் பார்ப்போம். ‘குருசேத்திரபுரம்’ என்ற கதையில், “புதிய போர்க்களங்கள் எங்கும் திறக்கப்பட்டு மனித உயிர்கள் தத்தம் விருப்பத்துக்கேற்ப பலிகொள்ளப்பட்டதன் தொடர்ச்சி” என்றொரு வசனம் வருகிறது. யார் தத்தம் விருப்பத்துக்கேற்ப பலிகொள்ளப்பட்டார்கள்? அவரவர் விருப்பத்துக்கேற்ப பலிகொள்ளப்பட்டார்கள் என வந்திருந்தால் அதில் கருத்திருக்குமென நினைக்கிறேன்.

‘புதிய ஏற்பாட்டின் எழுதப்படாத பக்கங்கள்’ என்ற கதையில், “கொடி திராட்சைச் செடியோடு இணைந்திருந்தாலன்றி தானாகக் கனிதர இயலாது,” என்றும், “நானே திராட்சைச் செடி, நீங்களே அதன் கொடிகள்,” என்றும் வருகிறது. கொடி (climber) என்பது தன்னைத் தானே தாங்கிப் பிடித்துக்கொள்ளமுடியாத பலவீனமான தண்டுடைய தாவரங்களையும், செடி (shrub) என்பது சிறிய தாவரங்களையும் குறிக்கும் (உ+ம். ரோஜாச் செடி, பாகல் கொடி) என்பதால் ஜேசு கூறும் அந்த வசனங்கள் எதைச் சொல்கின்றன என எனக்கு விளங்கவில்லை. கொடி பற்றிப் படரும் அமைப்பைக் கொழுகொம்பு என்றுதானே சொல்வோம்.

111 பக்கங்களைக் கொண்டிருக்கும் இந்த நூலில் 61 பக்கங்களை மட்டுமே கதைகள் அலங்கரிக்கின்றன. கவிஞர் அ.ச.பாய்வா, பேராசிரியர் சி.மௌனகுரு, பேராசிரியர் செ.யோகராசா, ஜிப்ரி ஹாஸன் ஆகியோரின் கருத்துரைகள் நூலின் ஆரம்பத்திலும், வாசகர்களான ச.மணிசேகரன், கந்தையா தவராஜா, வாசுகி குணரத்தினம் ஆகியோரின் மனப்பதிவுகள் முடிவிலுமாக 42 பக்கங்கள் அதற்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மைக்கல் கொலின் அவர்களின் என்னுரை ஐந்து பக்கத்திலுள்ளது. வட்டத்துக்குள் நின்று சிந்திக்காமல், வெளியே வந்து சிந்திக்கச்செய்யும் மைக்கல் கொலின் அவர்களின் எழுத்தை ரசிக்கும்படி தூண்டுவதற்கு இவ்வளவு பரிந்துரைப்புத் தேவையா என என்னை இது எண்ணவைத்தது.

அழிப்பைக் காட்டும் அட்டைப்படமே இத்தொகுதியின் அடையாளமாக இருந்தாலும், இராமன் மேல் கொண்ட ஆசையை வெளிப்படுத்தியதற்காக இராவணனின் தங்கை சொர்ணநகை மூக்கறுபட்டு மூளியாக அனுப்பப்பட்டதை விமர்சிப்பது உள்ளடங்கலாக ஆணாதிக்கத்தைச் சாடும், பெண்களின் உணர்வுகளைப் பேசும் சில நல்ல கதைகளும் இந்தத் தொகுதியில் உள்ளன. பெண்ணின் உணர்வுகள் பற்றி ஆணுக்கு என்ன தெரியுமெனச் சொல்பவர்கள் இருந்தாலும், பெண்களின் உணர்வுகளை ஆண் ஒருவர் பெண்களுக்குச் சார்பாக எழுத்தாக்குவது பாராட்டப்பட வேண்டியதென நான் நினைக்கிறேன்.

“வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்

கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” எனப் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்த மகாகவி பாரதியும் ஓர் ஆண்தான் எனவே ஆண்கள் இவ்வகையாகச் சிந்திப்பது தேவையான மாற்றங்கள் சமூகத்தில் நிகழ்வதற்கு உதவிசெய்யுமென நம்புவோம்.

விமர்சனத்தைப் பார்த்து விமர்சகரைப் பற்றிக் கூறலாமென்பர். ஒருவர் அவரின் அறிவு, அனுபவம், வாழ்க்கைப் பெறுமானங்கள் என்பவற்றின் அடிப்படையில்தான் ஒரு நூலை ஆராய்கிறார். எனவே விமர்சனங்கள் எப்போதுமே பல்வகைப்படுகின்றன. எனினும் விமர்சனமென்பது நயவுரையாக, பாராட்டுரையாக மாறிப்போய்விட்ட இந்தக் காலத்தில், மனதில் தோன்றுவதைக் கூறும் விமர்சனங்கள் எதிர்ப்புகளைச் சம்பாதிக்கின்றன என்பதும் தெரிந்ததுதான். உதாரணத்துக்கு, பெயர்பெற்ற எழுத்தாளர் ஒருவரின் நூலுக்கு அவர் கேட்டதற்கமைய விமர்சனம் எழுதி சகோதரமெனப் பழகிய உறவு வேண்டத்தகாததாகப் போன கதையுமுண்டு. அதனால் மனதில் தோன்றுவதை எழுதலாமா என மைக்கல் அவர்களிடம் கேட்டுவிட்டே இதை எழுதியிருக்கிறேன். கருத்துக்களைக் கருத்துக்களாக அவர் ஏற்பார் என்ற நம்பிக்கையுடன், மேலும் பல படைப்புக்களை அவர் தருவார், தரவேண்டுமென அவரை வாழ்த்தி நிறைவுசெய்கிறேன்.

* அனுப்பியவர் -   மைக்கல் கொலின்