நூல்: 'ஒரு பாய்மரப் பறவை' | ஆசிரியர்:   பொ. கருணாகரமூர்த்தி ,ஜேர்மனி  | பதிப்பகம்: காலச்சுவடு, இந்தியா 2024


வாழ்க்கை வாழ்வதற்கே!. ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வை வாழ்ந்து முடிக்கத்தான் வேண்டும். ஆனால் அதை எழுதுவது என்பது அவ்வளவு சுலபமான விடயமல்ல. எழுதுதல் என்பது ஒரு படைப்புத்திறன் மிக்க கலை வடிவம் ஆகும். இது வாழ்க்கையின் அனுபவங்களை ஆழ்ந்து உணர்ந்து, அதனைச் சிறந்த மொழியில் வெளிப்படுத்தி, அதன் மூலம் வாசகர்களையும் பாதிக்கும் ஒரு ஆற்றல் வாய்ந்த செயல். எழுத்தாளர் கருணாகரமூர்த்தி அவர்கள் இந்தக் கலையை வரமாகப் பெற்றவர் என்பது இந்தப் புத்தகத்திலிருந்து புலனாகிறது.

எழுத்தாளர் இந்தக் கதைகளினூடாக வாழ்க்கையின் அனுபவங்களையும், எண்ணங்களையும், உணர்வுகளையும் வார்த்தைகளாக வடித்து, அதனை ஒரு கலை வடிவமாக மாற்றுவதை நான் ஒவ்வொரு கதைகளிலும் காணக்கூடியதாக இருக்கிறது. இவர் தனது கதைகளில் வெறுமனே தகவல்களைப் பதிவு செய்யாமல், சொற்களின் மூலம் ஒருவரின் வாழ்வை வாசகர்களுக்குப் புரியவைத்தும், அந்த அனுபவங்களைச் சிறப்பாகப் பிரதிபலிக்கும் வகையில் கலாச்சாரப் பிறழ்வுகளின் மத்தியிலும் நகர்த்திச் செல்லும் பாங்கு அற்புதம்.

கதைகள் சிறப்படைய நல்ல முறையில் பாத்திரங்கள் அமைய வேண்டும். கதையின் உயிரோட்டம் பாத்திரங்களே

ஆகும். பாத்திரங்கள் மூலம்தான் கதாசிரியர் வாசகனைக் கவருகிறார். இந்தக் கதைகளில் வருகின்ற தனித்தனி மனிதனின் பண்புகளையும், செயல்பாடுகளையும் கதாசிரியர் தனது செம்மையான பாத்திரப் படைப்பு மூலம் வெளிக்கொண்டு வருகிறார். பாத்திரங்கள்தான் கதையை நடத்திச் செல்கின்றன. இவர் தனது ஒவ்வொரு கதையிலும் பாத்திரங்களின் வாழ்க்கையை முழுமையாகவோ, அல்லது அதில் சுவையான ஒரு பகுதியையோ விளக்கமாக எடுத்து உரைக்கும் விதம் தனித்துவமானது.இவரின் முதல் இரு கதைகளையும் வாசிக்கும்போது நான் முற்றிலுமாக ஒரு புனைகதையினை வாசிக்கிறேன் என்ற உணர்விலிருந்து பிரிக்கப்பட்டு, எழுதப்பட்டிருக்கும் ஒரு வரலாற்றைப் படிக்கிறேன் என்ற உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டிருந்தேன்.

- எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தி  ('டிஜிட்டல்'ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG ) -

தமிழர்கள் மேற்கத்தைய நாடுகளுக்கு அகதிகளாகச் சென்று அங்கு வாழ்கையை அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்தக் கால கட்டங்களில் ஏற்கனவே சொந்த நாட்டில் பாதிக்கப்பட்ட இளம் தமிழ் அகதிகளுக்கு ஏற்பட்ட சவால்கள், கலாச்சார மாடுபாடுகளினால் ஏற்பட்ட வாழ்வியல் சிக்கல்கள், தவறான புரிதல்கள், அவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் போன்ற விடயங்கள் பல கதைகளின் கருப் பொருளாக அமைந்துள்ளன.

இறுக்கமானதொரு கலாச்சாரக் கட்டமைப்பில் வளர்ந்த இளையோர் தனியாக வேறொரு சுதந்திரமாக இயங்கக்கூடிய நாட்டில் வாழ முற்படும்போது இளவயதில் ஏற்படக் கூடிய பாலியல் உந்துதல்களால் வரும் பிறழ்வுகளையும், ஏனைய கலாச்சார மக்களைச் சரியாகப் புரிந்து கொள் முடியாமையையும் மேலும் பிற மொழியைக் கற்றல் தனது அடையாளத்தைத் தக்க வைத்தல், தாய் நாட்டு நினைவுகளில் சிக்கித் தவித்தல், உறவுகளைப் பிரிந்து வாழ்வதில் ஏற்படும் மனக் கஷ்டங்கள் போன்ற விடயங்களில் ஏற்படும் பாரிய சவால்கள் மத்தியில் தனித்துத் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொரு தனிமனிதனும் எடுக்கும் பிரயத்தனங்களை இந்த நூலில் காணப்படும் பல கதைகள் சித்தரிக்கின்றன.

எழுத்தாளர் ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார். பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு, மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றில் ஒரு பன்முகத்தன்மை உள்ள ஜெர்மனி, வலுவான பொருளாதாரத்தையும், தொழில்துறை வளர்ச்சியையும் கொண்ட ஒரு வளர்ச்சி அடைந்த நாடாகும். இவரின் பல கதைகளில் அந்த நாட்டு மக்களின் வாழ்வியலுடன் அங்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் எவ்வாறு சமாளித்து வாழ்கிறார்கள் என்பதையும் அந்த வாழ்வில் ஏற்படக்கூடிய உணர்வுச்சிக்கல்களையும் மிகவும் சுவாரசியமாக கதைகளினூடே வாசகர்களுக்கு புரியவைக்கிறார்.

புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் புலம்பெயர் நாடுகளில் மொழியை நன்றாகக் கற்று தொழில் புரிந்து குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்கிறார்கள், சிலர் வதிவிட உரிமையே இல்லாமல் அல்லலுறுகின்றனர், இன்னும்பலர் கலாச்சாரமாற்றத்தில் தம்மைத் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் பிரச்சனைகளை தாமே வலிந்து பெற்று தமது வாழ்வை தாமே சீரழிக்கினாறனர்.

இவரின் கதைகளை வாசிக்கும் போது புலம்பெயர் வாழ்வு என்பதில் எது முக்கியம் என்று ஒரு கேள்வி என்னுள் எழத்தான் செய்தது.

பொறுமையாக இருந்து, தீமையான செயல்களைச் செய்யாமல், தமது தகுதியையும் திறமைகளையும் இழக்காமல், சீராக வைத்துக்கொண்டு, தன்னுடைய பொறுமைப் பண்பால் மற்றவர்களை வென்று, தம்மைத் தக்கவைப்பதுதானா முக்கியம்? இதற்கு மேலும் ஒருவர் முன்னேறினால் அதை சாதனை என்று கூறலாமா? என்று கேள்விகளைக் கேட்கத் தோன்றுகிறது.

பிறமொழிகளைத் தமிழுடன் சேர்த்துக் கலந்து கதைப்பது தமிழர்களின் வழக்கமாகி விட்டது. கதைக்கும்போது விரைவாக ஒவ்வொரு பிறமொழிச் சொல்லையும் தமிழுக்கு மொழிபெயர்த்துப் பேசுவது சிரமமாக இருந்தாலும் கற்கக்கூடய விடயம்தான். எழுத்தில் எழுதும்போதும் அதைக்கடப்பிடிக்கும் விந்தை எனக்குப் புரியாத ஒன்றாகவே உள்ளது. அதிலும் இந்தத் தொகுதியில் ஆங்கிலச் சொற்களும் ஜேர்மன் மொழிச் சொற்களும் தமிழ்மொழியுடன் பல இடங்களில் கலக்கப்பட்டுள்ளமை வாசிப்பதற்குச் சற்றுச் சிரமத்தைத் தருவதாக உள்ளது. இதனை எழுத்தாளர் அடுத்து வரும் படைப்புகளில் சீர் செய்வாரென நம்புகிறேன். மொழி என்பது காலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்தது எனவே சில ஜேர்மன் சொற்களை மிகத்திருத்தமாக தமிழில் மொழிமாற்றம் செய்வது கடினமாக இருப்பினும் அந்த உரையாடலை இயன்றளவு தமிழ் வாசகர்கள் அனைவரும் விளங்கி வாசிக்கக் கூடியதாக மாற்றி எழுதும் யுக்திகளைக் கையாள்வது எழுத்தாளரின் திறனை மேலும் வலுப்பெற வைக்கும் என்பதில் ஐயமில்லை. பிறமொழி வாக்கியங்களை மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் வாக்கியத்தின் பின் அடைப்புக் குறியினுள் எழுதலாம் என்பது எனது தாழ்மையான கருத்து. உதாரணமாக: (( Eat smakelijk) ருசித்துச் சாப்பிடு என்று அவன் தன்மொழியில் கூறிச் சென்றான்)

படைப்பிலக்கியம் என்பது மற்றொன்றைப் பார்த்துப் படைக்கப்படுவதல்ல. மாறாக, ஒரு படைப்பாளியின் மனதில் உதித்த கற்பனையால் உருவாகுவது. இலக்கிய உலகம் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்கிறது. வாசகர்களை ஈர்க்கும் புதிய படைப்புகள் வந்து குவிந்த வண்ணமே இருக்கின்றன. படைப்பிலக்கிய வெற்றி என்பது, படைப்பாளியின் கற்பனைத் திறனையும், வாழ்க்கை பற்றிய புரிதலையும், தேர்ந்தெடுத்த கலைநயத்தையும் வெளிப்படுத்தும் ஒரு இலக்கியப் படைப்பு, வாசகர்களைச் சென்றடைந்து, அவர்களிடையே சிந்தனையைத் தூண்டி, தாக்கம் செலுத்தும் நிலையைக் குறிக்கிறது எனலாம்.

எழுத்தாளர் மனித அனுபவங்கள், கற்பனை, மற்றும் சிந்தனைகளை அழகியலுடன் வடிக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார்.இவரின் கதைகள் வாசகர்களின் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட சிந்தனையை மாற்றக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது அத்துடன் கதைகள் சுவாரசியமாகவும், நுட்பமாகவும், அழகியலுடனும் இருப்பதால் வாசகர்களை ஈர்த்து, கதையோட்டத்துடன் ஒன்றவைக்கிறது. வாசகர் மனதில் உணர்வுத்தொற்றை ஏற்படுத்துகிறது. இதுதான் அவரின் வெற்றி என்று கூறி இவர் மேலும் பல படைப்பு இலக்கியங்களைத் தமிழ் உலகிற்குத் தர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.