
கலை என்பது சிலருக்கு பொழுதுபோக்காகவும் சிலருக்கு உள்ளூறும் உணர்வாகவும் இணைந்து வாழ்வுடன் பிரிக்க முடியாததாக உள்ளது. இவ்வாறான ஒரு உண்மைக் கலைஞராக, வாழ்வியலை ஆழ்ந்து படித்து அதிலிருந்து சிறந்த அனுபவங்களை உளம்கொண்டு நாடகங்களையும் நடிகர்களையும் உருவாக்கியவர் திரு.க. பாலேந்திரா அவர்கள்.
1970 களில் பொறியியல் கற்கை நெறியுடன் மொரட்டுவ பல்கலைக் கழகத்தில் ஆரம்பமான அரங்க வாழ்க்கை , பல தடங்கல்களைக் கடந்ததுடன் தாயகத்திலும் , புலம்பெயர்ந்த நிலத்திலும் வெற்றிகரமாகத் தொடர்ந்தது. நாடகமும் அரங்கும் அவரது உயிரோடும் உணர்வோடும் கலந்தவை என்பதை வாழ்ந்து காட்டியவர் அவர்.
1978 இல் யாழிலும் கொழும்பிலும் செயற்பட்ட அவைக்காற்று கலைக்கழகத்தின் முயற்சிகள், புலம்பெயர்ந்து சென்றபின் இவரால் லண்டன் நகரிலும் தொடரப்பட்டன. நாடகத் தயாரிப்புகளின் இயக்குனராகவும் நடிகராகவும் இன்றுவரை தொடர்ந்து கலைப்பணிகளை முன்னெடுத்து வருகிறார். புலம்பெயர் வாழ்வில் கலைசார்ந்த ஒருக்கிணைப்பை கட்டி எழுப்பியதுடன் இளைய தலைமுறையினின் நாடக ஆர்வத்திற்கும் வழிகோலியுள்ளார்.
உலகத்தரம் வாய்ந்த நாடகங்களைத் தழுவியும், தாயகம் சார்ந்த உணர்வுபூர்வமான நிகழ்வுகளை உள்ளடக்கியும் நாடகப் பிரதியாக்கங்களை அமைத்ததுடன், மேடை மற்றும் நெறியாள்கை செய்பவராகவும் நடிகராகவும் வெற்றி கண்டவர் இவர். சக கலைஞர்களுக்கான முன்னேற்றத்தையும், நாடகத் துறைக்கான நவீன வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு இயங்கியவர்.
தாயகத்தின் வழமையான நாடகபாணியில் இருந்து விலகி நவீனமும் கட்டுடைப்பும் கொண்ட அரங்க வெளிப்பாட்டுத் தன்மையுடன் , பொருத்தமான நடிகர் தெரிவும் இவரது நாடகங்களின் சிறப்பம்சமாக உள்ளது என்பதையும், அரங்கின் ஒளியமைப்பு உணர்வுகளை வெளிக்காட்டும் சிறப்பம்சமாக உள்ளது என்பதையும் விமர்சகர்களின் பதிவுகளால் அறிய முடிகிறது
'நாடகத்தின் கருவுக்கமைய லயத்தை அல்லது ஓட்டத்தை அல்லது டெம்போவை கண்டு பிடிப்பதில் , அதற்கமைய அரங்கத் தன்மைகளை நேர்சீராக அமைத்து விடுவதில் பாலேந்திரா ஒரு உயர்ந்த கலைஞர். நடிகர்களின் மன அதிர்வுகளைக் கொண்டே பார்வையாளர்களின் இதயக் கபாலங்களை நொறுக்கி விடுகிறார்' என்கிறார் பிரத்தியேகக் காட்சி நாடகத்தின் விமர்சனமொன்றினை எழுதிய கலைச்செல்வன் ( P161)
தனது நாடகங்கள் எதிர்காலத்திலும் பலரால் மேடையேற்றம் காண வேண்டும் என்ற நினைவுடன் நாடகப் பிரதிகளைத் தொகுத்து புத்தகங்களாக வெளியிட்டுள்ளார். யுகதர்மம், கண்ணாடி வார்ப்புகள் என இரு நாடகப் பிரதிகள் ஏற்கனவே வெளிவந்திருப்பதுடன் தற்போது பிரத்தியேகக் காட்சி எனும் இந்நூல் வெளிவந்துள்ளது.

இவரது ஐம்பது ஆண்டு கலைப்பயணத்தின், ஒரு அடையாளமாக ஏழுநாடகங்களும் பதிவுகளும் அடங்கிய நூலாக 'பிரத்தியேகக் காட்சி' எனும் இந்நூல் விளக்குகிறது. இது 'எங்கட புத்தகங்கள்' பதிப்பகத்தின் நேர்த்தியான வெளியீடு.
ஒரு நாடகத்தின் பிரதி என்பது அரங்கின் முக்கிய பகுதியாகவும் அரங்க ஆற்றுகையின் போது நடிகர்களாலும், பார்வையாளரின் எதிர்வினை உணர்வுகளாலும் உயிர் பெறுகின்ற ஒன்றாகக் கொள்ளக் கூடியதெனிலும், இந்நூலை வாசிக்கும் ஒருவர் தனது மனக்காட்சியாக இந் நாடகங்களைக் காணும் வண்ணம் அவற்றின் காட்சியமைப்புகள் மிக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளன என்பது பாராட்டுக்குரியது.
பாலேந்திரா அவர்களின் எந்த ஒரு நாடகத்தையும் முழுவதாகப் பார்க்கும் வாய்ப்பு அமையாத என் போன்றவர்களுக்கு, இந்நூல் அக்குறையினை ஓரளவு தீர்க்கும் வல்லமை மிகுந்த உயிர்ப்புத் தன்மையுடன் விளங்குகிறது.
இவரது இல்லறத் துணையாக அமைந்தவர் ஆனந்தராணி. பாலேந்திரா தனது கலை வாழ்வின் குறிக்கோள்களில் இருந்து திசையாறாதிருக்க ஆனந்தராணி பெருந்துணை புரிந்தார் என்றே கூற வேண்டும் . பெண்கள் மேடையேறி நடிக்க விரும்பாத ஒரு காலகட்டத்தில் தற்துணிவுடன் நாடக உலகில் காலடி எடுத்து வைத்தவர் இவர். பாலேந்திராவைக் காதல்மணம் புரிந்து இன்றுவரை தம்பதியராக முன்னோக்கியே நகர்கின்றனர்.
இந்த இல்லற, இலக்கிய இணை தாயகம் வரும் சமயங்களில் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் விசேட நிகழ்வுகளில் பங்கு பற்றுவதுண்டு.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் தமது பிரபல நாடகங்களில் இருந்து சிறுசிறு காட்சிகளை அரங்கேற்றும் நேரங்களில் ரசித்து மகிழ்ந்ததுண்டு. இத்தகைய ரசனை மிகும் பொழுதுகளில் இலக்கியத் தம்பதியாக அவர்களது ஒத்திசைவு உற்சாகம் ஒருவரை ஒருவர் தாங்கி அரவணைத்து செல்லும் பாங்கு என்பவற்றால் மிகவும் கவரப்பட்டுள்ளேன்.
அவ்வாறான ஒரு நாளில் அவரின் நாடகங்கள் சிலவற்றில் இடம்பெறும் பாடல்களை இருவருமாக பாடி அசத்தியிருந்தார்கள்.
"நாம் நடந்தோம் வெகு நேரம்
வந்தடைந்தோம் வெகு தூரம்
தூக்கமின்றி விழித்து வந்தோம்
தூக்கி வந்த சுமைகளோடு
வலிந்த கால்கள் இன்று இங்கே
மெலிந்த கால்கள் என்றும் அங்கே"
உணர்வு பூர்வமான இப் பாடல் போலவே அவர்களது வாழ்வும் பல மைல்கற்களைக் கடந்து பயணித்தது. முன்னே சென்ற கால்கள் வெற்றிகளைக் குவித்தன.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பலவேறு சுவைதரும் இவரது நாடகங்களில் இரண்டு சுயமொழி நாடகங்கள். ஐந்து வேற்று மொழியில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டவை.
'பிரத்தியேகக் காட்சி' எனும் இத் தொகுப்பு கீழ்வரும் அவரது ஏழுநாடகங்களின் வசனநடை , மூலப்பிரதியின் விபரங்கள் , பிரதியாக்கம், காட்சியமைப்பு, நடிகர்கள், மேடையேற்ற விபரங்கள், நாடக விமர்சனங்கள் ஆகிய முக்கிய தகவல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
போகிற வழிக்கு ஒன்று
சம்மந்தம்
காத்திருப்பு
பார்வையாளர்கள்
பிரத்தியேகக் காட்சி
தரிசனம்
பாரததர்மம்
தம்பதி சமேதராக அவர்களது இளமை முதல் இன்றுவரையான படங்கள் ஏனைய நாடகக் காட்சிகள் பங்குபற்றிய கலைஞர்களின் படங்கள் என ரசனைக்குரிய அம்சங்கள் நிறைந்தது.
இவற்றில் சில நாடகங்கள் அயல்மொழியில் இருந்து தழுவி தமிழ் நாடக மேடைகளுக்காக வடிவமைக்கப்பட்டாலும், அவற்றின் கருப்பொருள் தாயக நிலத்தின் பல பிரச்சனைகளை இனங்காட்டுவதாக அமைந்துள்ளது. ஆகவே மொழிபெயர்ப்பு நாடகங்கள் என்ற நிலைதாண்டி தமிழ்மொழியாக்க நாடகங்களாகவே காட்சிப்படுத்தப் படுகின்றன. இவை பிரசார நோக்கில் அன்றி கலைத்துவமாக இங்கு பேசப்படுகின்றன.
தாயகத்தின் போர்க்கால அவலங்களான காரணமின்றிய கைது நடவடிக்கைகள், சித்திர வதைகளுக்கு உள்ளாக்கல், காணாமல் ஆக்கப்படல், மர்மமான கொலைகள், இவற்றை மேற்கொள்ளும் அதிகாரத்தின் பல முகங்கள் எனும் கருப்பொருள்கள் தாங்கியும், காணி உடைமையில் பேராசை , வீண் வாக்குவாதங்கள் திமிர் பேச்சு என்பன சார்ந்தும் , நிலத்திலும் புலத்திலும் தமிழ்ச் சமூகத்தின் நினைவுகள், எதிர்பார்ப்புகள், பாரம்பரிய சம்பிரதாயங்கள் முதலான பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டும் அமைந்துள்ளன . இவற்றில் சில இன்றும் மாறாதிருக்கும் எம்மவர்களின் சுயபிரதாபங்கள் பற்றிய எள்ளலுடன் கூடிய நகைச்சுவை உணர்வைத் தருவன.
'போகிற வழிக்கு ஒன்று'
ஒரு சர்வாதிகார நாட்டில் ஒரு கைதியும் அவரது மனைவியும் மகனும் மாறிமாறி மனவதைக்கும் உடல்வதைக்கும் உள்ளாவதைக் குறிக்கிறது. ஆங்கிலத்தில் ஹரோல்ட் பின்ற்றர் எழுதிய இந்நாடகத்தினை தமிழில் மொழிபெயர்த்தவர் சி. சிவசேகரம் .
நெறியாள்கை - பாலேந்திரா . முதல் மேடையேற்றம் 1994
உடல்வதையை விடக் கொடியது மனவதை என்பது படைப்பின் உள்ளூறும் உணர்வு. கைதியின் மனைவியை தமது போகப்பொருளாக்கி, மகனை மனதால் வதைத்து, அதனை கைது செய்யப்பட்டு இருக்கும் ஒருவனிடம் சிறுகச்சிறுக சொல்லி அவனை நிரந்தரமாக சித்திரவதை செய்யும் குணம் கொண்ட அந்த விசாரணை அதிகாரியின் மேல் பார்வையாளர்களுக்கு பொங்கி வரக் கூடிய கோபமே, நாடகத்தின் வெற்றி எனலாம். அவ்வுணர்வு நாடகப் பிரதியை வாசிக்கும் போதே மனதை உலுக்குகிறது.
மனைவியையும் மகனையும் தொடர்ந்து தமது காவலில் வைத்து உயிருடன் வதைத்துக் கொண்டே , கைதியை நடைப்பிணமாக்கி முதலில் வெளியில் அனுப்பும் போது, எதுவும் செய்ய முடியாமல் வெளியேறும் ஒருவனின் மனநிலையை மிக அற்புதமாக எழுத்தால் காட்சிப்படுத்துகிறது 'போகிற வழிக்கு ஒன்று'.
மற்றவர்களின் கண்களூடாக தெரியும் அவர்களுடைய நலிவடைந்த ஆன்மாவைப் பார்த்து ரசிக்கும் அந்தக் கொடூர மனநிலை கொண்ட சிறை அதிகாரியின் பாத்திரத்தில் நடித்த நடிகர்,
'நீ எத்தனை தரம் ரேப் பண்ணுப்பட்டாய்' என கைதியின் மனைவியிடம் கேட்கும் காட்சி , அதிகார மமதையின் கீழ் , பெண் என்பவள் எப்போதும் இச்சைப் பொருளாகவே பார்க்கப்படும் அவலநிலையைக் கூறுவதாக அமைந்துள்ளது.
இந்நாடகம் மிகுந்த கற்பனை ஆற்றலுடன் பிம்பங்களுடன் இசையுடன் அதன் குரூரத் தன்மையை பயங்கரத்தை வன்முறையை பார்வையாளருக்கு கடத்துவதாக விமர்சகர் யமுனா ராஜேந்திரன் கூறியுள்ளார் (28/5/1994 )
இந்நூலின் மூன்றாவது நாடகமாக காத்திருப்பு .
எழுதியவர் ச. வாசுதேவன்
நெறியாள்கை - க.பாலேந்திரா
முதல் மேடையேற்றம் 13.10. 2001
நாடகத்தின் மூல உணர்வு: காணாமல் ஆக்கப்படும் மகன் பற்றிய ஒரு தாயின் தீராத ஏக்கம்.
இராணுவ சுற்றி வளைப்பு, அகதிமுகாம் வாழ்க்கை , வீடு என அலையும் பெற்றோர் தமது மகன்மாரை பாதுகாப்பிற்காக வேறிடம் அனுப்பி விட்டுத் தவிப்புடன் காத்திருத்தல் உணர்வுபூர்வமாக பிரதியாக்கம் செய்யப்பட்டு உள்ளது. தந்தை ஒருவாறு சமாதானமானாலும் காத்திருக்கும் ஒரு தாய்மனதின் நிலை மிகக் கொடியது.
இருவரில் , ஒரு மகன் காணாமல் போகிறான். இயக்கத்தில் இணைந்தானா இராணுவம் பிடித்ததா கொலை செய்யப் பட்டானா என அல்லாடும் பெற்றோரின் உணர்வு வாசகருக்கும் தொற்றக் கூடியது.
இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட மகன் இனி இல்லை என்ற யதார்த்தத்தை உணரும் தந்தை, அம்பாளாச்சியை நம்பி மகன் இன்னும் இருக்கிறான் என நம்பும் தாய். காத்திருப்பு நீள்கிறது. இன்றும் எம்மிடையே மெளன சாட்சிகளாகப் இவ்வாறு பலர் வாழ்கிறார்கள்.
சில காட்சிகளின் வசனங்கள் மனதில் திகிலோடு உறைகின்றன.
அதில் ஒன்று இரு விசாரணை அதிகாரிகளின் பின்வரும் உரையாடல்....
'காம்பில ஒருத்தரும் இவனைத் தேடேல்லை'
'ஏதும் பிரயோசனம்?'
'இல்லை. இங்கையும் ஆக்கள் கூடுது'
'அப்பிடியெண்டால் இந்த பைலையும் எரிச்சு விடுங்கோ'
இங்கு 'பைல்' என்பது ஒரு கைதி என்பது நெஞ்சில் நெருப்பாகப் பற்றிக் கொள்கிறது.
நான்காவதாக பார்வையாளர்கள் நாடகம். பாதல் சர்க்காரின் 'ஊர்வலம்' என்ற நாடகத்தின் அடிப்படையிலான பிரதியாக்கம். பாலேந்திரா குழுவினரால் ஆக்கப்பட்டு, பாலேந்திராவின் நெறியாள்கையில் 1985 இல் தமிழ் அவைக்காற்று கழகத்தினால் மேடையேற்றம் கண்டது.
பார்வையாளர்கள் என்ற நாடகப் பிரதியை வாசிக்கும் போதே ஒரு குழப்பமான சூழ்நிலை மனதில் தோற்றுகிறது . சபையில் விளக்குகள் இல்லாத நிலையில், கொலையொன்று அங்கு நடந்துள்ளதான குழப்ப நிலையினை உருவாக்கும் நடிகர்கள் , பார்வையாளர்களின் இடையேயிருந்து வெளிப்பட்ட வண்ணம் உரையாடல்கள் அமைந்துள்ளன. சம்பவங்கள் இலங்கையில் அக்காலகட்டத்து தமிழ்மக்களின் மனக்கிலேசங்களை வாழ்வியல் பயங்கரங்களை வெளிப்படுத்துகின்றன.
நாடகம் பற்றி கனடாவைச் சேர்ந்த எழுத்தாளரும் நாடகருமான ப. ஸ்ரீஸ்கந்தன் அணிந்துரையில் இவ்வாறு கூறுகிறார்.
"ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருந்தாலும் உற்றுக் கவனித்தால் அரசு அடக்குமுறை , நாட்டு நிலவரங்கள், அரசியல் விடுதலை, அரசியல் கவலைகள், காணாமல் ஆக்க பட்டோர் கதை , சமூக சிக்கல்கள் என்ற பல்வேறு பிரச்சனைகள் சொல்லப்பட்டிருக்கும். இலகுவாகவும் மறைமுகமாகவும் பல சிக்கலான விடயங்களை ஒரே நேரத்தில் வெளிக்கொணர வல்ல புதிய யுக்தி இது. நெறியாழ்கை செய்தவருக்கு சவாலை கொடுக்கக்கூடிய பிரதி .சக நடிகர்களுடன் சேர்ந்து பாலேந்திரா இப் பிரதியை ஆக்கியிருந்தார்"
இப் பிரதியில் ஒரு வசனம் ...
'இரத்தத்தில் ஒரு வசதி இருககிறது. மண்ணில் கொட்டி கறுப்பாகப் படியும். மழை பெய்ததும் கழுவப்ட்டு விடும். நீரில் கலந்து சமுத்திரத்தை அடையும் .அந்த இரத்தத்தை விரயமாக்கி விடக் கூடாது.உலகப் பொருளாதாரம் உயர்வடைய அதை பாவிக்க வேண்டும்'.
மனதில் நிலைத்து விடும் இந்த வார்த்தைகளின் கோரமுகத்தினை இன்றைய உலகில் நிஜமாக இப்போதும் கூட கண்டு கொண்டிருக்கிறோம் .
இதே போல வங்கமொழி மூலத்தினைக் கொண்ட ரஞ்சித் ரேய் செளத்திரி எழுதிய 'பாரத தர்மம்' எனும் நாடகத்தினை தமிழாக்கம் செய்தவர் ஞாநி. நெறியாள்கை - பாலேந்திரா
பாரத தர்மம் எனும் நாடகமும் இதே ரீதியில் அரசியல் தந்திரோபாயங்களுக்காக அப்பாவி மக்கள், அவர்கள் அறியாமலே ஏமாற்றிப் பலியிடப்படுவதை உணர்த்துகிறது.
தர்மவான்களாகச் சித்தரிக்கப்படும் பலர் நிஜத்தில் அவ்வாறுதானா எனும் அதிர்ச்சியை பார்வையாளர்களுக்கு கடத்துகிறது. எடுத்துக் கொள்ளப்பட்ட இதிகாச சம்பவம் அரக்கு மாளிகை தீயிடப்பட்ட போது அங்கு பலிகொடுக்கப்பட்ட அப்பாவியான வறுமைப்பட்ட ஒரு தாயும் ஐந்து புதல்வர்களும். தமக்காக அவர்களைப் பலியிட்டுத் தப்பியவர்களாக தருமரும் தாய் குந்திதேவியும் மற்ற மகன்களும்.
சர்வதேசத்தின் சதுரங்க ஆட்டத்தில் இலங்கைத் தமிழர்களும் உலகெங்கும் இன்னும் பல அப்பாவி மக்களும், அதிகாரம் படைத்தவர்களின் பகடைக்காய்களாக பலியிடப்படும் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்ற நிலைமையை இன்றும் காண்கிறோம்.
இவற்றிலிருந்து மாறுபட்ட இரு நாடகங்கள்
'பிரத்தியேகக் காட்சி'
'தரிசனம்' ஆகிய இரு நாடகங்கள்.
மூலப்பிரதி வஸ்ஸாவ் ஹாவல் என்ற நாடகாசிரியருடையது.
தமிழில் சி.சிவசேகரம் .
நெறியாள்கை - க.பாலேந்திரா
முதல் மேடையேற்றம் 21/7/1991
வத்ஸ்ஸாவ் ஹவல் ( Vaclav Havel 1936-2011 ) அவர்களின் வரலாறும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. எழுத்தாளரும் அரசியல் வாதியுமான இவர் சிறந்த கவிஞரும் நாடகாசிரியரும் ஆவார். 1989 இல் சோவியத் ஒன்றியத்தின் உடைவுக்குப் பின்னர் செக்கோசிலவாக்கிய நாட்டின் அதிபரானார். சோவியத் ஆக்கிரமிப்புக் காலத்தில் அதிகாரத்துக்கு எதிரான கருத்துக் கொண்டதன் காரணமாக தீவிரமாகக் கண்காணிக்கப் பட்டவர். ஒரு வடிசாலையில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டவர். தனது சுயசரிதையினை ஆவணப்படுத்தி எழுதிய நாடகங்களில் இவையும் அடங்கும்.
ஒன்றன் தொடர்ச்சியானவை போல உருவாக்கப்பட்ட இவ்விரு நாடகங்களிலும் கணேஷ் எனும் கொள்கைவாதி முக்கிய கதாபாத்திரம்.
'ஒடுக்கு முறையின் கீழ் பிழைக்கத் தெரிந்தவர்கட்கும் பணிய மறுப்பவர்களுக்கும் உள்ள முரண்பாட்டின் இரண்டு அம்சங்களூடாக, ஒடுக்கப் படுபவர் பணிய மறுத்தலின் மூலம், ஒடுக்கலின் கருவிகளாகச் செயல்படுகிறவர்களைப் பரிதாபமானவர்களாகக் காட்ட முடிவதைச் சித்தரிப்பதாக' இந்த நாடகங்கள் பற்றி விமர்சகர் பேராசிரியர் சி.சிவசேகரம் கூறுகிறார்.
அதிகாரத்திலும் அந்தஸ்திலும் உயர்பட்டத்தில் இருப்பவர்களாகக் கருதப்படுவோர் , உண்மையில் சுயதேடல் இல்லாத மனவெறுமையினாலும் அதனால் உருவாகிய தாழ்வுச் சிக்கலினாலும் உண்டாகும் மனப்பிறழ்வை, தமது ஆணவமும் பகட்டும் செயற்கைத்தனமும் நிறைந்த உரையாடல்களில் வெளிப்படுத்துவதன் மூலம் தீர்த்துக் கொள்ளும் மனவிகாரத்தை இவ்விரு நாடகங்களிலும் உணர முடியும்.
வடிசாலையில் பீப்பாய் உருட்டும் கணேஷ் கதாபாத்திரம் இதில் முக்கியமானது. அரசாங்கத்துடன் ஒத்துப் போகாத , ஒடுக்கு முறைக்கு பணிய மறுக்கும் தன்னுடைய கொள்கையால், சமூகத்தினால் ஒதுக்கப்பட்டு 'டவுண் அன்ட் அவுட்' நிலைமையில் மிகவும் சிரமப்படுபவர் இவர். இவ்வாறானவர்களை சமுதாயம் என்ன மாதிரி எல்லாம் வழிக்குக் கொண்டு வரப் பாக்கும் என்பதை விளக்குவதான நாடகம். அந்த ஒருவராக பாத்திர உருவாக்கம் செய்யப் பட்டவர் கணேஷ். நாடகம் எழுதுவது அவரது பொழுது போக்கு.
'பிரத்தியேகக் காட்சி' நாடகம் - மற்றவர்கள் மேல் அக்கறை கொண்டவர்களாக தம்மை வெளிக்காட்டி, தமது ஆடம்பரத்தை பெருமையை மற்றவர்களுக்குக் காட்ட நினைக்கும் இந்திரன்-ஸஸி ஜோடியையும் கணேஷையும் பிரதான கதாபாத்திரங்களாகக் கொண்டது. இத்தம்பதி போல நிஜத்தில் நம்மிடையே பலர் வாழ்கிறார்கள்.
நாடகப் பிரதியை வாசித்த போது இந்திரன்-ஸஸி தமது அந்தஸ்து பற்றிய பிரதாபங்களை எப்போது நிறுத்துவார்கள் என்ற உணர்வே ஏற்பட்டது. மற்றவர்களின் படிப்பு தொழில் அந்தஸ்து குழந்தைகள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர்களது இயலாமைகள் பற்றி அக்கறை கொள்வது போல நடித்து, தம்முடன் ஒப்பிட்டு குத்திக் காட்டும் பலரை நம் சமூகத்தில் காணலாம்.
மனம் என்பதே மாளிகை . ஒவ்வொருவருக்கும் வாழ்வில் கொள்கை திருப்தி தன்னிறைவு என்பன வெவ்வேறு பிரமாணங்களைக் கொண்டவை என்பதை புரிந்து கொள்வதற்கு இயலாத இத் தம்பதி மேல் ஈற்றில் பரிதாபமே மேலிடுகிறது.
மற்றுமோர் நாடகம்
'சம்பந்தம்'.
மூலம் : அன்டன் செக்கோவ்
தமிழாக்கம் - ஞானச்செல்வதி சீவரட்னம்
நெறியாள்கை - க.பாலேந்திரா
முதல் மேடையேற்றம் 1/8/1980
'சம்பந்தம்' யாழ் மண்ணுக்கேற்ற நாடகம். யாழ் மக்கள் காணி நிலம் என்பவற்றின் மேல் கொண்டுள்ள அளவுக்கதிகமான மண்ணாசை, உடைமை மனப்பான்மை, அடுத்தவர் காணியை கையகப்படுத்தும் பேராசை சுயநலம் என்ற குணாதிசயங்களைக் காட்டுவதாக அமைந்திருந்திருக்கிறது.
அத்துடன் வடக்கே இன்றும் நிலவிவரும் திருமணமாகாத முதிர்கன்னியரின் ஏக்கம், குடும்பத்தினரின் பொறுப்புக் கூறல், செவ்வாய் குற்றம் போன்ற சாத்திர சம்பிரதாயங்களால் பிற்போடப்படும் அல்லது மறுக்கப்படும் திருமணங்கள் என்பவற்றையும் நகைச்சுவை ததும்ப வெளிக் கொண்டு வருகிறது. மண்ணுக்கே உரிய தனித்துவமான பேச்சுவழக்குடன் வாழ்வை விட காணியுடைமையே பெரிதெனநினைக்கும் மனப்பாங்கினை ரசனையுடன் கூறுகிறது.
நாடகப் பிரதியின் நிறைவு வசனம் முத்தாய்ப்பானது.
"இப்ப எண்டாலும் உண்மையைச் சொல்லுங்கோ. சத்தியமாய் அந்த புல்லுத் தோட்டம் எங்கடைதானே?"
முதல் மேடையேற்றம் கண்டு நாற்பத்தைந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் 'சம்பந்தம்' எனும் இந்நாடகம் 25-04-2026 அன்று லண்டனில் மீண்டும் மேடையேறியதாக அறிய முடிகிறது. இது ஒரு சாதனை என்பதை மறுக்க இயலாது.
வாழ்க்கை அனுபவங்களை நாடகமாக , நாடக அரங்கே வாழ்வின் முக்கிய பகுதியாக ஐம்பது ஆண்டுகள் கடந்தும் தமது பயணத்தைத் தொடரும் பாலேந்திரா - ஆனந்தராணி தம்பதியரின் வாழ்வு என்றும் நலமாகட்டும்
வலிந்த கால்கள் முன்னே செல்லட்டும். இலட்சியமும் இலக்கியமும் இணைந்த தம்பதிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் .
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.