ஒரு கவிதை தனக்குரிய இலக்கணங்களால் மட்டுமே பெறுமதியினைப் பெறுவதில்லை. மொழிச் செழுமை மிகுந்த சொல்லழகு ஓசை நயம் குறியீடு படிமம் எனும் அணிகலன்களை தனதாக்கி சமூகம் அரசியல் வாழ்வியல் என்ற தளங்களின் ஊடாக உண்மைகளைைக் குறிப்பால் உணர்த்தி, எளிமையும் ஆழமும் கொண்டியங்கும் கவிதைகளே இன்று ரசனைக்குரியனவாக விதந்துரைக்கப் படுகின்றன. 

கந்தர்மடம் அ. அஜந்தனின் 'வெந்து தணிந்த காட்டிடை' கவிதைத் தொகுப்பில் அவ்வாறான அதீத நயம் கொண்ட கவிதைகள் பலவுள்ளன. ஒவ்வொரு கவிதைத் தலைப்புமே சில கதைகளையும் களங்களையும் தன்னுள்ளே கொண்டு உயிரோட்டமாக நகர்கிறது.

புறப்பொருளும் அகப்பொருளுமாக  இவர் தொட்டுச் செல்லும் கவிவரிகள் எல்லைகளால் விரிந்தவை . சொல்லழகால் மட்டுமல்ல பொருள் அழகாலும் மனதினில் நிறைந்தவை.

கருகிய கனவுகளின் பின்னே, துளிர்விடும் எதிர்பார்ப்புகள் நிறைந்த வாழ்வினை நோக்கிக்,  கனவு காணும் கவிஞனின் சோகநெஞ்சினை நிதர்சனமாகக் கவிதைகளில் கொண்டு வருகிறார். பொழிவதற்குத் தயாரான நிறை மழைமேகத்தினை ஒத்ததோர் கனதி கவிதைகள் எங்கும் விரவிக் கிடக்கின்றது.

அவசியமான இடங்களில் கிண்டலும் கேலியும் மறைபொருளும் மிகுந்த கவிநடை பெரும் உவப்பிற்குரியது. பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் தனிமனித உரிமைகள் எல்லாம் கேள்விக் குறியானதொரு நாட்டில்,  'சொன்னாலும் குற்றமடா சொல்லவிட்டால் துக்கமடா...' என இயன்றளவில் உண்மைகளை வெளிப்படுத்திய எழுத்து நேர்மை பாராட்டுக்கு உரியது. எனினும் குறிப்பாலுணர்த்திய சில கவிதைகளின் ஆக்ரோஷமே மனதில் நெருப்பாகத் தகித்துக்கொண்டிருக்கிறது. 

'கவிதை என்பது வாழ்க்கை பற்றிய வெற்றுப் பதிவன்று.வாழ்வின் பன்முக நுண்ணிலைகளில் பயணித்து நிகழ்த்தப்படும் விசாரணை என்ற புரிதல் உள்ளவர். சமூக கட்டுமான உருவாக்கத்தையும் தகர்ப்பையும் மொழியின் வழியே ஒழுக விடுபவர். கருத்தியல் தளமும் நயாதீத சங்கமிப்பும் வடிவ நேர்த்தியை தேர்ந்தெடுக்கும் என்ற நம்பிக்கை உடையவர். வெந்து தணிந்த காட்டிடை என்ற இந்த தொகுப்பு பேச்சோசைப் பண்பும், மரபின் அடர்த்தியும், பின்வரும்  நிலைப் பண்பும், எதுகை - மோனைத் தூவலும், பெயரெச்சத் தொடர்களின் விதைப்பும், முரண் சொற் கட்டுமானமும், படிமப் பதியமும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது' என பின் அட்டைக் குறிப்பில் எழுத்தாளர் இ.சு.முரளிதரன் குறிப்பிடும் வரிகள் மனங்கொள்ளத் தக்கவை .

ஈழத்தின் குறிப்பிடத் தக்க எழுத்தாளரும் கவிஞரும் ஓவியருமாகிய அஜந்தன் சிரேஷ்ட திட்ட இணைப்பாளராகப் பன்னாட்டு நிறுவனமொன்றில் பணியாற்றுகின்றார். கணினித் தொழில்நுட்பத்தில் டிப்ளோமா கல்வியைப் பெற்ற இவர், இதழியல் கற்கைநெறியினையும் , திட்ட முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டப்படிப்பினையும் நிறைவு செய்தவர். கவிதை, சிறுகதை, உளவியல்சார் கட்டுரைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.  படைப்பாளர் தனது அகக் கிடக்கைகளை இவ்வாறு கூறுகிறார். 

' மனதில் படிமங்களாய் நிறைந்திருக்கும் விடைகாணாக் கேள்விகளால் எழும் உணர்வுகளை ஒழுங்கு படுத்தி இலக்கிய வடிவில் வெளிப்படுத்துவதில் திருப்தி அடைவதாகவும் ; சுயம் தேடும் அகப்பயணத்தை நிகழ்த்தி அடையாளப்படுத்திக் கொள்வதாகவும் ; வாசகரின் மனக்கண்ணில் ஒரு புலக்காட்சியை ஏற்படுத்த உருவகமொழியின் பயன்பாடு தேவைப்படுவதாகவும்  ; மானுடப் பண்போடு நாம் பிறருக்கு வழங்கக் கூடிய அதிக பட்ச உதவி அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஒத்துணர்வை வழங்குவதுதான் ; அவர்கள் பட்ட வலிகளை நாம் இலக்கியவழியில் உரைப்பதையும் அவ்வகையிலேயே பார்க்கிறேன்' என்கிறார். 

இவரது இந்த உணர்வுகள் கவிதையின் வழியே துல்லியமாக  நிறுவப்பட்டிருப்பதை வாசகர் உணர்ந்து கொள்ளலாம். 

- கந்தர்மடம் அ.அஜந்தன் - 

]மகாகவியின் வரிகளைத் தலைப்பாகக் கொண்ட கவிதைத் தொகுப்பு இது. ' வெந்து தணிந்த காட்டிடை' , தப்பிப் பிழைத்ததோர் மானுட  உயிரின் ஓசையான இக் கவிதைப் பூக்கள், யுத்தத்தின் கொடும் நினைவலைகளை அனுபவரீதியாகப் பேசுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலங்கள், ஜனநாயக மீறல்கள் , அதற்கான எதிர்வினையாக 

ஒடுக்குமுறைகளை எதிர்த்தல் , அநீதியைப் பகிரங்கப்படுத்தல் என்பன பற்றி ஆழமான உணர்வலைகளை இவரது கவிவரிகள் வெளிப்படுத்துகின்றன.

வரலாற்றுச் சான்றுகளையும் தடயங்களையும் மறைத்தல் முதலான உக்கிரமான பிரச்சனைகளைக் கவிதைக்குள் கொண்டு வருவதுடன் அரசியல் வேடதாரிகளை அம்பலப்படுத்துவதும் இவரது படைப்புகளின் உட்பொருளாகின்றது.

நினைவழியாத கடந்த காலத்தின் சோகங்கள் ; காணாமல் ஆக்கப்பட்ட கணவனின் வருகைக்காக வளரும் கருவுடன் காத்திருக்கும் மகளிர்  ; பெண்களின் ஏனைய அகவய புறவய பிரச்சனைகள்; மானுடத்தின் குற்ற உணர்வுகள் மற்றும் நேர்வய சிந்தனைகள்; முதுமையின் அவலங்கள்; மூடநம்பிக்கைகள் ; மத மேலாதிக்கம்; இயற்கையின் மேல் மனிதனின் துஷ்பிரயோகங்கள்; நீர் மேலாண்மை - மரம் வெட்டுதல்; காலச் சுழற்சி - இயற்கையை அழிவிலிருந்து பாதுகாத்தல்; ஆடம்பரமான ஆலயங்களின் அனாவசிய பகட்டினால் தூரம் போன கடவுளர் ; சமூக சீரழிவு ; தற்கொலைகளின் பெருக்கம் ; உளநலம் ; தேர்தல் - அரசியல் களம்; நாடளவிய பல்வேறு பிரச்சனைகள்; இவ்வாறாகப் பல....

எழுதாத பொருளில்லை என எண்ணும் படியாக நிறைந்த விடயக் கனதி வாசிப்போரை பிரமிக்க வைக்கிறது.

இவரது சிறந்த கவிவரிகளைக் கோடிட்டு உதாரணம் கொள்வதென்றால் கிட்டத்தட்ட முழுத் தொகுப்பினையுமே இங்கு பிரதி பண்ணியாக வேண்டும். எங்கிருந்து பிறந்தன இவ்வரிகள் என்ற ஆச்சர்ய வினா மனம் முழுதும். 

சில உதாரணங்கள்....

தலைப்பிற்குரிய கவிதையாக 'வெந்து தணிந்த காட்டிடை ' . 

இத்தனை தசாப்தகால வலிகளின் பின்னும் விடியலைக் காணாத ஒரு சமூகத்தின் ஆதங்கத்தினை வெளிப்படுத்துகிறது.

 ''வெந்து தணிந்த காட்டிடை துளிர்க்க முயலும் ஒரு சமூகம் மண்ணுக்கடியில் வேரறுத்தோடும் துரோகத்தின் சாக்கடை நீரோட்டத்தில் கருகிப் போவதையும், சபிக்கப்பட்ட சருகுகளாய் திசையின்றிச் சுழலும் காற்றில் புலனடக்கிப் புழுதியில் வீழும் புத்திஜீவிகளின் புகார்களுடனும், தீராத தாகத்துடனும் தீய்ந்து போகும் மானுட வாழ்வின் சோகங்களுடனும் முடிவெழுதப்பட்ட முகவுரைகளுடனும் " 

வாழ்வதனை மனதில் அறைந்து கூறுகிறது. 

"விடியாத பொழுதொன்று" கவிதையானது ஏதோ ஒரு அசம்பாவிதத்தை அமானுஷ்ய மொழியில் சொல்கிறது....

'அந்தச் சத்தம்  
அனைத்தும் அடக்கம்.... 
அதிகாலை மழையில் வீதி கழுவப் பட்டிருந்தது....

மறந்து விடப்பட்ட இரு செருப்புகளும் வீதியோரப் புல்நுனியில் சிவப்பாய் சில துளிகளும் ....'

''ஏதோ சம்பவித்துள்ளது'' கவிதையில், 

'போனவாரம் போனவனாம் 
சேருமிடம் அவன் சேரலையாம்'.... 

"விசாரணைகள்"- கவிதையில்....  

'தெருமுனையில் விடிய விடிய விழித்திருந்ததால் 
'அது' நடக்கையில் உறங்கி விட்டதாக உளறுகிறது சிசிடிவி கமரா '....

கடந்து சென்ற காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரினது கணக்கேயில்லாத வலிகளையும், மானுடம் அன்றாட வாழ்வை இத்தகைய கொடும் நிகழ்வுகளோடு இயல்பாகக் கடக்க வேண்டியிருந்த சோகங்களையும் கூறும் வரிகள் இவை.

'உன்காலடி முற்றமண்ணில் மீண்டும் பதியுமோ? 
நீ தரும் முத்தத்தில் தாய்மனம் குளிருமோ? '

என்ற அன்னையரின் ஏக்கத்திற்கு பதிலேதும் இல்லை. மனிதர்கள் மட்டுமே காணாமல் ஆக்கப்படுகின்றனரா?  ஆம் என்கிறது அத்திபாரக் குழிகளின் மனித எச்சங்கள். இல்லை என்கிறது இன்னும் பல உண்டு என்கிறது மற்றுமோர் கவிதை.

'அடி தோண்ட எழுந்தன 
ஆதிக்குடி  வரலாறன்று 
அடிக்கடி தோண்ட மறைந்தன 
மீதிக்குடி வரலாறின்று' 

எனும் வரிகள் "அகழ்வும் அழிவும்"   கவிதைக்கானவை. .

மறைக்கப்படும் வரலாற்று ஆதாரங்கள் பற்றிக் கூறுகிறது. அறிக்கைவாதமும் ஆதிக்கவாதமும் மோதிக் கொள்ளும் இடம் கனதியானது.

இதே ரீதியில்  "மெல்ல நகர்கிறது" கவிதை 

'நினைவேந்தினால் தனிமைப்படுத்தல் ....
காணாமல் போனால் பயங்கரவாதி...
காட்டிக் கொடுத்தால் மந்திரி...
ஆலயத்தில் சமூக இடைவெளி....
ஆளுமிடத்தில் பாரிய இடைவெளி... '

கடந்தகால அரசுகளின் நடவடிக்கைகளை சாடும் வரிகள் இவை. "வேரிழந்த மரமும் முடிவிலாப் பயணமும்" கவிதையானது. இவ்வாறு தன் ஏக்கங்களைக் கூறுகின்றது.

'வீதிகள் எங்கும் வீடிருந்தது
தனக்கென்றொரு நாடிருக்கவில்லை.....
வீழ்ந்த விதைகளுக்கு தாய்மரம் இருந்தது விளைவதற்கு தாய்நிலமிருக்கவில்லை'

ஏன் அவ்வாறு என்ற கேள்விக்கு ஆக்ரோஷம் கொண்டதோர் பதிலாக மற்றுமொரு கவிவரிகள்.

"மூட்டிய தீயும் ஏந்திய வாளும்" என்ற தலைப்பில் .....

'காவிய நாயகர் களமாடிய மண்ணில் காவியர் நாடகம் அரங்கேறுதோ' என ஆரம்பமாகி மதமேலாண்மையினைச் சாடுகின்றது. கவிதையின் நிறைவு வரிகள் காரசாரமானவை. 

"ஏதோ விடிகிறது " கவிதையானது ,

'காய்ந்துதிர்ந்து காற்றில் சிக்குண்டு கடந்து போன காலச்சருகுகளில் 
காணாமல்போன கனவுகளைத் தேடி ஊர்ந்து செல்கின்றது 
மனச்சாரை '...

என்றும் 

"தேம்பல்களின் தேங்கல்கள் " கவிதையும் இதேரீதியில் ,

'அசையாத காற்றிடை வெளிகளில் 
மிதந்தலைகிறது மனச்சருகு'

என்றும் மனம் கவரும் அற்புதமான உருவகங்களால் உயிர் கொள்கிறது.

குடும்ப வாழ்வில் ஆண் மேலாதிக்கத்தை "நானெனும் நீ" கவிதை கூறுகிறது.

'நானாக நான் வாழா வாழ்வில் நீயாக வாழ்ந்து போகிறேன்
என் முகவரி தெரிந்தால் 
என்னை அங்கே விட்டுச்செல்' 

என்ற வரிகளுள் மறைபொருளாகி நிற்கும் ஆண் மேலாதிக்கமும் தன்னைத் தொலைத்த பெண்ணின் வலிகளும் மனதைப் பாலைவனமாக்குகின்றன. 

"அஞ்சாமை அறியாமையெனும் இருள் நீக்கும்" கவிதையானது , உட்பொருள் உண்மைகளை அறியாது மூடநம்பிக்கைகளை பின்பற்றும் மூடர்களுக்கு நல்லதோர் சாட்டையடி.
 
'பல்லிசொல் தடை போடுமென்று மனம் சொல்லுமாம் 
செல்லும் நற்காரியம் செயலிழக்குமென்று மனம்சோருமாம் 

ஒருவாய் நீர் பருக 
தடை விலகுமாம் '........

'செவ்வாயில் வளியுண்டோ
நீருண்டோ நாசா தேடுமாம் 
குறிப்பில் செவ்வாய் குற்றமுண்டோ சாத்திரம் தேடுமாம் 
முதிர் கன்னியர் வாழ்வும் அதில் சருகாகுமாம்'......
மூடநம்பிக்கைகள் பற்றி ரசிக்கத்தக்க கிண்டல் . 

மணியடிக்க ஆளில்லா ஆலயங்களின் ஆடம்பரங்களை தோலுரித்துக் காட்டுகிறது கீழிருக்கும் வரிகள்.

'கோபுரங்கள் வானுயர்ந்தன 
வேலும் அங்கே தங்கமானது 
இரும்புக் கதவுகள் சில்வரானது 
ஆகம விதிகளெல்லாம் ஓரமானது.....
ஒலிபெருக்கி ஓலமிட்டு அழைத்தது ஓடிப்போன கடவுளை...' 

"தவறி வந்த அழைப்பு " , "சின்னப் பட்டியல்" ஆகிய கவிதைகள்  அரசியல் வாதிகளுக்கும் போலி சோஷலிச வாதிகளுக்கும், தேர்தல் வேட்பாளர்களுக்குமான உச்சக்கட்ட கிண்டல். மனதில் சிரிப்பு பொங்க ரசிக்க வேண்டிய கவிதைகளின் இடைவரிகள் சில இங்கே, 

'தோழரே வணக்கமென்றது மறுமுனை
வணக்கம் வைத்தேன் குழப்பத்தோடு.... 

கைகூப்பி நின்றோரு படமெடும்.
உதட்டில் புன்னகை வர விடும்...
வாக்குறுதிகளை மனப்பாடம் செய்யும்
முடிந்தால் ஒரு கொப்பியில் எழுதி வையும் 
சொன்னதை நாம் மறந்து விடுவோம்
கேட்ட மக்கள் மறக்க மாட்டார்கள்.... 

ஆளில்லாத் தெருவாகினும் வாகனத்திலேறி
அங்குமிங்கும் வலம்வாரும் 
அப்பப்போ சமூகநலக் கருத்தை
முகநூல் பக்கங்களில் பதிவிடும் 
தப்பேதும் நாட்டில் நடந்து விட்டால் 
வன்மையாகக் கண்டித்து அறிக்கை விடும்.....

ஆசனமொன்றே உயிர் மூச்செனக் கொள்ளும்
கொள்கை துறந்தேனும் ஆசனம் வெல்வீர் 

மூச்சு முட்டச் சொன்னது மறுமுனை
மூச்சுத் திணற முழித்து நின்றது நான் 
நான் தோழர் பரம்பரை அல்ல 
சோழர் பரம்பரையென்றேன் 

மன்னிக்கவும் தவறி வந்த அழைப்பிது
ஆனாலும் தவறாமல் போடுங்கள் ஓட்டை
எமக்கென்று மறைந்தது மறுமுனை"

"சின்னப் பட்டியல்" பெயரிலேயே தேர்தல் கட்சிகளின் சின்னங்களையும் அதிகரித்த  எண்ணிக்கையையும் நையாண்டி செய்கிறது. (சின்னத்தின் பறவைகளை நான் குறிப்பிடவில்லை)

ஒரு முன் பள்ளிப் பிள்ளையின் பார்வையில் ஆரம்பிக்கும் கவிதையிது.

'ஒரு  . . . .  போட்டுட்டு பக்கத்தில
ஏழென்று இலக்கம் போட்டு
அதையும் பிழையென்று வெட்டிக் காட்டி
பெரிசா எல்லோ ஒட்டினம்...... 

அடிபிள்ளை நிறுத்து
அது . . . . இல்லை சின்னமென்று
சொன்னாப் புரியுமோ? 

போனமுறை கண்ணாடி போடாமல்
. . . . என எண்ணி . .  வுக்கு போட்ட…….
லட்சுமிக் கிழவி பட்டியலைப் பார்த்ததும்
பட்டென்று விழுந்தது தலைசுற்றி '

"சமூகமெனும் மாயவலை" கவிதையானது ,

'கரைந்து போன காலத்திண்மத்தில் கரையேறத் துடிக்கிறது மனது' என ஆரம்பித்து , 'சமூக அவலங்களால் புரையேறித் துடிக்கும் புதிரான மனது' என நிறைவு பெறுகிறது. இதன் இடைவரிகளாக…….  'முடிந்து போன நூலுக்கு முகவுரை எழுதுகிறது பிற்போக்குவாதக் கூட்டம்' என்கிறார் கவிஞர். புரியாத புதிராக நாம் வாழும் சமூகம் பற்றிய கவிஞரின் ஆதங்கம் இது.

இதே ரீதியாக , புரிந்ததும்  புரியாததுமாக  உணர்வின் அலைகளை உக்கிரமாகத் தோற்றுவிக்கும் இக் கவிதைத் தொகுப்பினின்றும் கரையேறவோ வெளியேறவோ முடியாது சிக்கித் தவிக்கிறது மனது. எனினும் கடந்து போக முடியாத ஒரு கவிதைத் தொகுப்பிற்கு சிறு ரசனைக் குறிப்பினை எழுதியாவது திருப்தி கொள்கிறது , கவிதைகளின் நிஜ ஆழத்தினை முற்றுமுழுதாக  அறிய இயலாத  என் மனது. வாழ்த்துகள் அஜந்தன். 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.